அமைதி
பாரதிதாசன்

பதினைந்து

இரவு பத்து மணியாகிறது பெரிய பண்ணையார் வீட்டு மணிப் பொறியில்! நகரத்தினின்று 100 குதிரைகள் பெரிய பண்ணையாரின் வீட்டை நோக்கி வருகின்றன. குதிரைகளினின்று இறங்கிய அரசினர் பெரிய பண்ணையாரை சூழ்ந்து கொள்ளுகிறார்கள். அவர் இரு காவலர்பால் ஒப்படைக்கப்படுகிறார். மற்றும் காவலர் பலரும், ஏழை மக்களின் வீட்டுக்கிருவர் விழுக்காடு சூழ்ந்துகொள்ளுகிறார்கள். ஒவ்வொரு குடும்பத்தின் தந்தை தாய் பிள்ளைகளும் ஒன்று சேர்த்துச் சங்கிலியால் பிணிக்கப்படுகிறார்கள். ஏழை மக்களின் குடும்பங்கள் அனைத்தும் பிணிக்கப்படுகின்றன. மண்ணாங்கட்டி கண்ணீர் விடுகிறான். ஒரு புறமாக ஓடுகிறான். வேறு புறமாக ஓடிவருகிறான்.

இதே நேரத்தில், மண்டையுடைந்த குறவனை இருவர் அவன் கைகளைக் கட்டியபடி பிடித்து வருகிறார்கள். ஊரில் காவலர் நிறைந்திருப்பதை அவர்கள் பார்க்கிறார்கள். ஆயினும் அவர்கள் அக்குறவனை ஊரில் அருகிலிருந்த மாந்தோப்பில் ஒரு மரத்தில் கட்டிவிட்டுச் சிறிது தொலைவில் உட்காருகிறார்கள். சிறிது நேரத்தில் அவர்கள் உறங்கத் தொடங்குகிறார்கள். இதைக்கண்ட மண்ணாங் கட்டியின் முகம் துன்பக் கடலில் மூழ்குகிறது. அவன் தன் இடையில் இருந்த இறகு தாள் எடுத்து ஏதோ எழுதுகிறான். எழுதிய தாளோடு தான் எடுத்த சுழல் துப்பாக்கியையும் சேர்த்துக் கட்டுகிறான். பெரிய பண்ணையாரைச் சூழ்ந்திருந்த காவல் தலைவரின் எதிரில் விழும்படி அதைத் தொலைவிலிருந்து விட்டெறிகிறான்.

காவல் தலைவர் அதை ஆவலாய் எடுத்துப் பிரித்துப் பார்க்கிறார். சிறிது நேரத்தில் தலைவரும் ஏறக்குறைய இருபது காவலரும் குதிரை ஏறி ஏரிக்கரைக்கு அப்புறமுள்ள சிற்றூர் நோக்கிப் புறப்படுகிறார்கள்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *