
அமைதி
பாரதிதாசன்
பதினாறு
நள்ளிருளில் மண்ணாங்கட்டி, தோப்பில் கட்டப்பட்டிருக்கும் குறவனைச் சுற்றிச் சுற்றி வருகிறான். குறவனைக் கட்டியவர்கள் உறங்குமிடத்தை நெருங்குகிறான். அவர்கள் நிலையை உற்றுப் பார்க்கிறான். விரைந்து வந்து கட்டப்பட்டிருக்கும் குறவனை அவிழ்க்கிறான். குறவன் விரைவாக ஓடி மறைகிறான். உறங்கிய வர்கள் திடுக்கிட்டு விழிக்கிறார்கள். மாமரத்தை விரைவில் அடைகி றார்கள். மண்ணாங்கட்டியைப் பிடிக்கிறார்கள். கட்டி விடுகிறார்கள். மண்ணாங்கட்டி தாக்கப்படுகிறான்.
இரண்டு தடிகள் மாறிமாறி மண்ணாங்கட்டி மேல் பாய்கின்றன. அடிகள் நின்றபோதெல்லாம் அவன் விழிகள் ஏழை மக்களின் வீட்டை நோக்குகின்றன. அடிபடும்போதெல்லாம் அவனால் தலை தூக்க முடியாவிடினும் அவன் நெஞ்சம் சங்கிலியால் பிணிக்கப்பட்ட ஏழை மக்களின் நிலை என்ன என்று பார்க்கிறது. அடித்தவர்கள் சற்று தொலைவில் சென்று உட்காருகிறார்கள். இருள் நிறம் கட்டுக் குலைகிறது. கருநிற வானில் வெண்ணிறம் மிதக்கத் தொடங்குகிறது. சங்கிலியால் பிணிக்கப்பட்டுத் தத்தம் குடிசைக்கு நேரில் நிற்கும் ஏழை மக்களின் விழிகள் கோழியை மூடி வைத்துள்ள கூடையைப் பார்க்கின்றன. மீண்டும் அவ்விழிகள் தம் கைகள் விலங்கிடப் பட்டிருப்பதைப் பார்த்து நீர் சொரிகின்றன.
கிழக்கில் இளங்கதிர் தலை நீட்டுகின்றது. மண்ணாங் கட்டிக்குக் காவல் இருப்போர் கிழக்கே பார்க்கிறார்கள். அதே நேரத்தில் ஏரிக்குப் புறத்திலுள்ள சிற்றூருக்குச் சென்ற காவல் தலைவன். ஊரில் நுழைகிறான்.
மண்ணாங்கட்டியை நோக்கி விரைவாகக் கையில் தடியுடன் வருகிறார்கள் முன்னே அடித்தவர்கள்; மற்றும் வேலையைத் தொடங்குகிறார்கள். மண்ணாங்கட்டி விலங்கிடப்பட்ட மக்கள் பால் செலுத்திய ஆவல் முகம் திடுக்கென அதிர்கிறது. மண்ணாங்
கட்டியின் உடலில் ஓங்கியடிக்கும் தடிகள், உடலிலேயே பதிகின்றன. அவன் தலையில் செந்நீர் அருவி இழிகின்றது. மண்ணாங்கட்டி ஆவலோடு ஏழை மக்களின் நிலையைப் பார்க்கிறான். அவன் ‘கழுத்து’, தலையைச் சுமக்க மறுத்துவிடுகிறது. தொங்குகின்ற தலையிலிருக்கும் விழிகள் ஏழை மக்களின் வீட்டை நோக்குகின்றன. மற்றோர் அடி. மண்ணாங்கட்டியின் தலை விழுகிறது.
வீடுதோறும் சங்கிலியாற் பிணித்து நிறுத்தப்பட்டிருந்த ஏழை மக்கட்கு மீட்சி கிடைக்கின்றது. காவலர்கள் அவர்களின் விலங்கு களை அகற்றுகின்றார்கள். விடுபட்ட ஏழை மக்கள் ஒன்று கூடுகின் றார்கள். அவர்கள் கண்கள் யாரையோ தேடுகின்றன. கூட்டம் அங்குமிங்கும் போகின்றது. தோப்பை நோக்கி ஆவலாக அவர்கள் ஓடி வருகிறார்கள். காலைக் கதிர் வெளிச்சம் காட்டுகின்றது.
தோள்மேல் விழுந்து கிடந்து, செங்குருதி ஒழுக விழிகள், விடுபட்ட மக்களை நோக்குகின்றன. மண்ணாங்கட்டியின் இதழ் விலகுகிறது. முத்துப்பற்கள் திகழ்கின்றன. வாய்க்கடையிற் சிரிப்பு மின்னுகிறது. கண்ணில் பெருமகிழ்ச்சி மலர்கிறது. அவன் தலை நிமிர்ந்தது! ஆயினும் பழையபடி வீழ்ந்தது. மக்கள் ஓடி மொய்த்துக் கட்டவிழ்த்தார்கள். அடித்தவர்கள் கண்களில் அச்சமும், வியப்பும் தோன்றுகின்றன. அவர்கள் கையுதறுகிறார்கள். மண்ணாங்கட்டியின் தலை மற்றொரு முறை நிமிருமா! இல்லை! அவன் நீண்ட அமைதியில் நிலைத்துவிட்டான்.
ஏழை மக்கள் அள்ளியணைத்த மண்ணாங்கட்டி பத்தரை மாற்றுப் பொன்னாங்கட்டி!
★ ★ ★
