
அமைதி
பாரதிதாசன்
பதின்மூன்று
மறுநாள் ஏரியில் மக்கள் வேலை செய்வதையும், வேலை செய்வோருக்குச் சோறு ஆக்கப்படுவதையும் பார்த்துக் கொண்டு அன்றிரவு பின்புறமாக மாடியில் ஒரு பூனைக் குட்டியுடன் வீட்டின் மாடியில் ஏறுகிறான்.
பெரிய பண்ணையார் சாப்பாட்டு மேசையின் எதிரில் வந்து உட்காருகிறார். அவர் எதிரில் ஒரு பூனைக்குட்டி, உலவுகிறது! அதன் கழுத்தில் ஒரு கடிதம் தொங்குகிறது. பூனைக்குட்டியைப் பிடித்து அந்தக் கடிதத்தைப் படிக்கிறார். அவர் முகம் எரிகிறது. என்னமோ நினைக்கிறார். கடிதத்தை மேசைமேல் வைத்துவிட்டு, அலமாரியைத் திறந்து சாராயச் சீசாவை எடுத்து, அதைத் திறந்து சாராயத்தை யெல்லாம் நீர் விழும் தூம்பில் ஊற்றிவிட்டு அதில் நிறையத் தண்ணீர் ஊற்றி எதிரில் வைத்துக் கொள்ளுகிறார். கறிகள் சோறு வருகின்றன. மனைவி வருகிறாள். சாராயம் என்று எண்ணி, தண்ணீரை ஊற்றி ஊற்றிக் கொடுக்கிறாள் கணவனுக்கு! அவன் உண்டு மயங்கியவன் போல் மேலுக்குக் காட்டுகிறான். மனைவி கணவனைத் தூக்கிக் கட்டிலில் போட்டு உடை உடுத்து முகம் திருத்தி, கரும்பட்டால் முக்காடிட்டு மாடிவிட்டு இறங்குகிறாள். இறங்குகையில் மேசையின் கீழே விழுந்து கிடக்கும் கடிதத்தையும் எடுத்துக் கொண்டு போகிறாள். அவள் வண்டியில் ஏறுகிறாள். வண்டி போகிறது. பெரிய பண்ணையார் ஒரு கருப்புக் குதிரையில் ஏறி வண்டியின் பின்னோடு செல்லுகிறார்.
அவள் சின்ன பண்ணையாரின் கோடை விடுதியை அடைகிறாள். சின்ன பண்ணை எதிர்கொண்டழைத்துப் போகிறார். இதைப் பெரிய பண்ணையார் தொலைவிலிருந்து பார்த்துத் திரும்புகிறார். ஒளிந்து நின்று பார்த்திருக்கும் மண்ணாங்கட்டியும் மகிழ்ச்சியுடன் திரும்புகிறான்.
ஏரியின் மேற்கிலிருந்து ஒரு படை வந்து கொண்டிருக்கிறது. அப்படை சின்ன பண்ணயைார் வீட்டை அடைகிறது. குதிரைகள் ஒருபுறம் கட்டப்படுகின்றன. பலர் இறங்குகிறார்கள்! மண்ணெண் ணெய் சின்ன பண்ணை வீட்டின் மேல் மழையாய்ப் பொழிகிறது! வீடு சிறிது நேரத்தில் தழலின் இடையே காட்சி யளிக்கிறது. வந்த அயலூரார் குதிரை ஏறிப் பறந்து செல்லுகிறார்கள். செல்லுபவர் ஒருவரின் சுழல் துப்பாக்கி கீழே விழுகிறது. மண்ணாங்கட்டி அதை எடுத்துக்கொண்டு ஒருபுறம் மகிழ்ந்தோடி, ஏழை மக்கள் வீடு தோறும் புகுந்து புகுந்து வெளிவருகின்றான்.
பொழுது விடிகிறது. சின்ன பண்ணையை அடுத்துள்ள ஏழை மக்கள் அனைவருக்கும் வேலை கிடைக்கிறது. நெல், கேழ்வரகு முதலிய மணிகளை அவர்கள் வேறிடங்கட்கு மாற்றுகிறார்கள். எரிவதை சிலர் அவித்துக் கொண்டிருக்கிறார்கள். குறைக் கொள்ளிகளை ஒருபுறம் சேர்க்கிறார்கள். அழகிய தட்டு முட்டுக்களை அணுவாக்குகிறார்கள்.
சிலர் முறையாக நெல் முதலியவற்றை, ஏழை மக்களின் வீடு தோறும் நிரப்புகிறார்கள் கேட்பாரின்மையால்.
சின்ன பண்ணையாரும், அவர் மனைவியாரும் நேற்றிரவு சின்ன பண்ணையிடம் வந்த அழகு மங்கையும் (பெரிய பண்ணையார் மனைவி) ஒரே வண்டியில் ஏறிக்கொண்டு நகர் நோக்கிப் பயணப்படுகிறார்கள். மூவரும் ஏறிய வண்டியானது பெரிய பண்ணையார் வீட்டுத்தெருவில் போகிறது. பெரிய பண்ணையார் அவர்களைப் பார்த்து வயிற்றைப் பிசைகிறார். அவர் கண்கள் தீயைக் கக்குகின்றன. மண்ணாங்கட்டி மகிழ்ச்சியுடன் மறுபுறம் செல்லுகிறான்.
எரிந்துபோன பகுதிபோக எரியாதன அனைத்திலும் உள்ள பல பொருள்கள் ஏழை மக்கட்குக் கிடைக்கின்றன. அவர்கட்கு நிறையச் சோறு சமைக்கப்படுகிறது. காய்கறிகள் ஆக்கப்படுகின்றன. மண்ணாங்கட்டி அங்கு ஒருபுறமிருந்த நெய்க்குடத்தை, அடுப்பில் இருந்த இரும்புச் சட்டியில் தலைகீழ் ஊற்றி அதில் உளுத்த வடை தட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறான்.
