
அமைதி
பாரதிதாசன்
மூன்று
ஏழெட்டுக் குடிசைகளில், கடைசியில் உள்ள ஒரு பொத்தற் குடிசையின் பின்புறமாக மண்ணாங்கட்டி நின்று, பொத்தற் குடிசையின் உள்ளே பார்க்கிறான். இரக்கம் கொள்ளுகிறான். தன் வீட்டுச் சாவியையும் தான் எழுதிய தாளையும் குடிசையின் உள்ளே போட்டுச் சிறிது தொலைவில் சென்று ஓர் மரத்தடியில் நிற்கிறான். பொத்தற் குடிசையைப் பார்த்தபடி!
பொத்தற் குடிசையின் உள்ளே இருந்து ஒருவன் தன் கையில் சாவியுடனும், மண்ணாங்கட்டி எறிந்த ஏட்டுடனும் வெளிவருகிறான். அவன் மற்றும் ஒரு முறை ஏட்டைப் படிக்கிறான். அவன் கண்கள் வியப்பில் ஆழ்கின்றன. அவன் மகிழ்ச்சியால் விரைவாக மண்ணாங் கட்டியின் வீட்டைத் திறக்கிறான். சுற்றிலும் பார்க்கிறான். மீண்டும் கதவைப் பூட்டிக் கொண்டு தன் பொத்தற் குடிசையை அடைகிறான். உடனே அவனும் மற்றொருத்தியும் பொத்தற் குடிசையிலிருந்து தட்டு முட்டுக்களுடன் மண்ணாங்கட்டியின் வீட்டை அடைகிறார்கள். இவற்றை மண்ணாங்கட்டி கண்டு உள்ளம் பூரித்துச் செல்கிறான் ஊரின் புறத்தே.
