
அன்னக்கிளி
வல்லிக்கண்ணன்
9. அனல் ஊற்றான பூம்புனல்!
கயவரின் உள்ளம்போல் கறுத்திருந்த இரவு நேரம் முழுவதும் கண்ணுறங்காது எவனுக்காகக் காத்திருந்தாளோ, வந்து விட்டான் என்று ஆசையோடு எதிர்பார்த்துக் கன்னெஞ்ச ஆந்தையின் குறுக்கீட்டால் ஏமாற்றம் அடைந்த பின்னரும் எவன் வருகையை விரும்பினாளோ. அந்தத் திருமாறன் வந்துவிட்டான் என்ற சொல் செவியில் புகுந்ததுமே, அமுதவல்லி புத்துயிர் பெற்றவள் போலானாள்.
அவள் உள்ளம் உவகையின் பெருக்கால் நனைந்தது. முகம் சிரிப்பால் மலர்ந்தது. எரிச்சலும் ஆத்திரமும் மறைந்தன. உணர்ச்சிக் கிளுகிளுப்பு பிறந்தது, குதித்துச் சுழன்றாடிக் கும்மி கொட்டிக் குதூகலிக்கலாம் போலிருந்தது அவளுக்கு. அதை அவன் கட்டுப்படுத்திக் கொண் டாள். அதற்கு அவளது அந்தஸ்தின் நினைவு தடையாக அமையவில்லை. அவர் என்ன நினைக்கமாட்டார்? எனும் எண்ணமே அவளை நிதானமாக நிற்க வைத்தது.
அவர் வந்ததும் முகம் கொடுத்து முறுவலித்துப் பேசாது முதுகு காட்டி நின்று பிணங்கிட வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது அவளுக்கு. அவரிடம் சண்டை பிடித்துச் சீற்றப் பேச்சு வீசவேண்டும் எனக் கருதினாள் ஒருகணம். வா என்று அழைத்தபோது வராமல் இப்போது வந்ததேனோ? வந்த வழியே போமய்யா!’ என்று வரவேற்புரை கூறலாம் என நினைத்தாள். தானாகவே சிரித்தாள். உணர்ச்சிப் பரவசத்தால் அவள் பித்திபோல் நடந்துகொண்டாள்.
திருமாதன் இயல்பான மிடுக்குடன் புகுந்தபோது அமுதவல்லி முகம் திரிந்து நோக்கவுமில்லை; எரிழை விழிக்கவுமில்லை. மகிழ்வுடன் உபசரித்து, உற்சாகமாக உரை பாடவே முன்வந்தாள்.
‘பிராட்டியாருக்கு என்மேல் கோபம் அதிகம் இருக்கும், அப்படித்தானே?’ என்று திருமாறன் இளநகையோடு வினவவும், ‘இவர் மீது கோபம் கொள்வது எங்ஙனம்? என்றே தோன்றியது’ அவளுக்கு. அத்தகைய வசீகரம் அவன் முகத்தில் கொலுவீற்றிருந்தது.
‘இரவு முழுவதும் விழித்து, எதிர்பார்த்துக் காத்திருந்தவளுக்கு ஏமாற்றமே கிட்டியதென்றால் வருத்தமும், கோபமும் வராமலா இருக்கும்?’ என்று அவள் கேட்டாள். குரலிலே சிடுசிடுப்பு காட்டவேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு இருந்தது. எனினும் அவள் பேச்சில் குழைவு தான் இழைக்தோடியது.
விளக்கம் கோரி விடுக்கப்பட்ட வினாவாக அதை ஏற்றுக்கொள்ளாமல் – எதிர்பார்த்துக் காத்திருந்தவளுக்கு ஏமாற்றம் அளிக்க நேர்ந்ததற்கு ஏதேனும் காரணம் சொல்லவேண்டிய பொறுப்பு தமக்கு உண்டு எனக் கருதாமல் திருமாறன் கவலையற்ற சிரிப்பு சிரித்து வைத்தான்.
‘இரவில் உங்கள் வண்டி இந்தப் பக்கம் வந்து நின்ற தாமே?’ என்று கேட்டாள் அழகி.
‘என் வண்டியா? இங்கு ஏன் வரப்போகிறது?’ என அவன் அலட்சியமாகக் கூறினான்.
‘உங்கள் வண்டியேதான் என்று அன்னம் சொன்னாளே?’
அவளுக்கு என்ன தெரியும்? மேலும், இரவு நேரத்தில், தூக்கக் கலக்கத்தோடு எதையாவது பார்த்திருப்பாள்!’ என்று கேலியாகக் குறிப்பிட்டான் அவன்.
அமுதவல்லி இரவு நடந்த நிகழ்ச்சிகளை அவனுக்குச் சொல்லவும், இருட்டில் உலகம் தூங்குகிறது என்றுதான் எல்லோரும் எண்ணுகிறார்கள். ஆனால், இருட்டில்தான் எவ்வளவோ செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. வேடிக்கையான நிலைதான்’ என்றான் அவன்.
‘உங்களுக்கு ஆந்தையைப்பற்றி என்ன தெரியும்?’ என்று திடீரென்று அவள் கேட்டாள்.
சிறுபிள்ளைத்தனமான கேள்வி என எண்ணியவன் போல் அவன் முகத்தில் வியப்பு காட்டி ‘இருட்டை விரும்புகிற பிராணிகளில் அதுவும் ஒன்று. பிறர் தூக்கத்தைக் கெடுக்கும் வகையில் அலறும். விழித்திருப்போரின் அமைதியைக் கெடுக்கும்’ என்றான்.
‘ஆந்தை எனும் பறவையைப் பற்றி நான் கேட்க வில்லை. எயில் ஊர் ஆந்தை என்கிற ஆள்…’
‘ஓகோகோ! அப்படி ஒரு ஆள் இருக்கிறானா? எனக் குத் தெரியாதே!’ என்று கனைப்புப் பேச்சும் கலந்து சிதறினான் மாறன்.
‘இதையும் நம்ப வேண்டுமோ?’ என ஐயுறுவாள் போல், அமுதவல்லியின் பார்வை அவன் முகத்தில் பதிந்தது ஒரு கணம்.
வைரத்தை வெட்டும் வைரம்போல், அவளது கூரிய கோக்கைக் கூசச்செய்யும் பார்வை அவன் விழிகளிலிருந்து தேறித்துக்கொண்டிருந்தது. அதை எதிர்த்து நிற்கும் திராணி அற்று, அமுதவல்லி தன் விழிகளைத் தாழ்த்திக் கொண்டாள்.
‘ஆந்தையைப்பற்றி நீ அறிந்துகொள்ள வேண்டிய அவசியம் என்ன வந்தது?’ என்று திருமாறன் கேட்டான்.
‘நீங்கள் இரவில் இங்கு வரமாட்டீர்கள் என்று அவன் உறுதியாகச் சொன்னானே?’ என்றாள் அமுதம்.
‘வருவது அறிந்து கூறும் கலையில் தேர்ந்தவனாக இருப்பான் அவன்!
அப்படியொன்றுமில்லை. உங்களை நான் எதிர்பார்த்திருப்பேன் என்று தெரிந்துகொண்டு, நான் உங்களுக்கு எழுதிய கடிதம் பற்றி அறிந்துகொண்டு, உங்கள் எண்ணத்தையும் புரிந்துகொண்டு, கள்ள நினைப்போடு குள்ள நரிபோல் திட்டமிட்டுச் செயல் புரிந்திருக்கிறான் அவன்.
‘அவனைப்பற்றி உனக்கு அதிகம் தெரியும் என்றே தோன்றுகிறது. பின் வீணாக என்னை ஏன் குறுக்கு விசாரணை செய்யவேண்டுமோ?’ என்ற மாறனின் பேச்சுக்கு பொருள் பொதிந்த சிரிப்பே முத்தாய்ப்பு வைத்தது.
அவன் பேசிய தோரணையும் சிரித்த விதமும் அமுத வல்லிக்குக் கசப்பே தந்தன. ‘உங்களுக்கு நான் அனுப்பிய கடிதம் பற்றி அவன் எவ்வாறு அறிய முடிந்தது?’ என்று அவள் வினவினாள்.
‘அவனிடம் கேட்கப்பட வேண்டிய கேள்வி அல்லவா இது!’- மீண்டும் அதே அலட்சியம்! குத்தும் பார்வை? குறும்புச் சிரிப்பு! பெருமூச்செறிந்தாள் ஒய்யாரி.
‘உனது பணிப்பெண்ணா யாரது? அன்னமா கிளியா? அவள் அந்த ஆந்தைக்கு விவரம் தந்திருக்கலாம்!’ என்றான் பெரியவன்.
‘இருக்க முடியாது. அன்னக்கிளி ஆந்தையிடம் ஏன் தொடர்பு கொள்ளப்போகிறாள்?’
‘யாரையும் நம்பக்கூடாது, அமுதவல்லி! யாரையுமே நம்பக்கூடாது’ என்ற மாறன், தனக்குரிய தனிச் சிரிப்பை உதிர்த்து வைத்தான்.
இரவில் நடந்ததை விளக்கமாக எடுத்துரைத்தாள் அமுதம்.
‘உனது இல்லம் திடீரென்று அற்புத நிகழ்ச்சிகள் நடைபெறும் அவைக்களம் ஆகிவிட்டது போலும்! பள பளா!’ என்று உற்சாகத்தோடு கூறிக் கைகளைத் தேய்த்துக் கொண்டான் அவன். ‘அப்புறம் ஆந்தை என்ன ஆனான்?’ என்றான்.
எனக்கென்ன தெரியும்?தோப்பில் யாரோ பதுங்கி யிருப்பதாகத் தெரிகிறது. அது ஆந்தைதானே என்னவோ! இன்று இரவில் அச்சம்தரும் நிகழ்ச்சி எதுவேனும் நிகழாமல் இருக்க வேண்டுமே என்று என் மனம் அடித்துக்கொள்கிறது..
அவள் கவலை அவளுடையது என ஒதுக்கிவிடுகிறவன் போல் இருமாறன் கையை வீசினான். நான் ஏன் வந்திருக்கிறேன் என அறிந்துகொள்ளும் ஆவல் உனக்கு இல்லை போலும்! என்றான்.
இரவில் நீங்கள் வரவில்லை என்றதும் நான் எவ்வளவு கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன் தெரியுமா? உங்கள் வண்டி வெளியே நின்றது என்று கேள்விப்பட்டதும், அதிலிருந்து நீங்கள் வரவில்லையே என்று உணர்ந்ததும் ஆந்தை உங்களைத் தாக்கி அப்புறப்படுத்திவிட்டு அவனே இங்கு வந்திருப்பானோ என்று அஞ்சினேன்
‘மறைந்து நின்று என்னைத் தாக்குவதற்கு எவன் துனியான் இந்தப் பாண்டி நாட்டிலே?’ என்று பெருமையோடு அறிவித்தான் திருமாறன். “அமுதா” என்று அன்பு கணியும் குரலில் அழைத்தான்.
இன்பத்தேன் பாய்ந்தது அமுதவல்லியின் காதுகளில்! உள்ளத்திலே ஆனந்தம் ஊற்றெடுத்தது. ‘இன்னுமொரு தடவை அப்படி அழைக்க மாட்டாரா?’ எனும் ஏக்கம் விழுந்தது. ஆசை துளும்பும் விழிகளோடு, குறுநகை இதழ்களை அழகு செய்ய, முகம் முழுமதி என ஒளிர, அவள் ஒயிலாக அசைந்து அவனை நெருங்கினாள்.
‘அமுதா! நீ ஏன் அந்த முத்துமாலையை அணிவதே விலை’ என்று கேட்டான் அவன்.
குளிர் பூம்புனல் ஓடை என்று நம்பிக்கையோடு கால் வைத்தால் அது கொதிக்கும் நீர் என்ற உண்மையை சூடாக உணர்த்தினால் எப்படி இருக்குமோ அவ்வாறு பதறினாள் அமுதவல்லி. இருப்பினும் தனது திகைப்பையும் தடுமாற்றத்தையும் வெளியே காட்டாது மறைக்க முயன்றவளாய், ‘எந்த முத்துமாலை?’ என்று விசாரித்தாள்.
‘நீயும் குழந்தை அல்ல புரியாதது போல் பசப்புவதற்கு. நானும் ஏமாளி அல்ல உனக்கு எதுவும் தெரியாது’ என்று
எண்ணிவிட என்றான் மாறன்,
உணர்ச்சிகளைப் பிரதிபலிக்காத குரலில்.
“பின்னே திடீரென்று முத்துமாலை என்று குறியீட்டால்…?”
மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த நாலுசரம் முத்து மாலையைத்தான் கேட்கிறேன் என்பது அமுதவல்லிப் பிராட்டியாருக்குப் புரியாமலா போய்விட்டது?
‘அது மன்னர் குடும்பத்தில் இருக்கும்! என்னைக் கேட்டால்?’
ஆசையோடு அருகே வர முயன்று, பின் வெறுப்போடு விலகி நின்ற ஆணவக்காரியை அளவிட முயல்வது போல் பார்வையை ஓட்டிய திருமாறன் அனல் மூச்சு உயிர்த்தான்.
அமுதவல்லி! நீ வாழ விரும்புகிறவள். ஆடம்பரமாக, நன்கு அனுபவித்து, ஒய்யாரமாக வாழ ஆசைப்படுகிறவள். உன் ஆசைகளுக்குக் குந்தகமோ, இன்ப வாழ்வுக்கு ஒரு முடிவோ ஏற்படுவதை நீ விரும்பமாட்டாய். இதை நான் அறிவேன். உன் உல்லாச வாழ்வு தொடர்ந்து நீடிக்க வேண்டுமானால், அந்த முத்துமாலை உன்னிடம் இருக்கக் கூடாது. எனக்கு நீ அதைத் தந்துவிடு என்று நான் கேட்கவில்லை. உரிய விலையைப் பெற்றுக்கொண்டு விற்று விடு என்றுதான் சொல்கிறேன். நாளை மீண்டும் வருவேன்.உன் மறுமொழியோ, விளக்க உரையோ எனக்குத் தேவையில்லை. சடைய வர்ம பாண்டியன் மனைவியாரின் கழுத்தை அணி செய்த முத்தாரம் தான் எனக்கு வேண்டும். இவ்வளவே நான் சொல்வேன்!”
எச்சரிக்கும் தோரணையில் பேசிவிட்டுத் திருமாறன் அங்கிருந்து நகன்றான். அவளைத் திரும்பிப் பார்க்கும் எண்ணமோ ஆசையோ அவனுக்கு எழவேயில்லை.



