அன்னக்கிளி
வல்லிக்கண்ணன்

6. ஆ! அந்த வண்டி?

    “புதுமலர் போன்ற அழகிய பெண்ணே உன் பெயரை நான் தெரிந்து கொள்ளலாமோ?” என்று கேட்டான் திருமலைக்கொழுந்து.

    மகிழ்வும் நாணமும் அழகு முகத்தில் குழப்பம் தீட்ட அவள் ‘அன்னக்கிளி’ என முணுமுணுத்துத் தலையைத் தாழ்த்திக் கொண்டாள்.

    அன்னக்கிளி பறந்து செல்ல விரும்பவில்லை என்று புரிந்தது. ‘கிளியைக் கூண்டில் அடைத்துச் செல்லத் துணிந்தவன் யாரோ?’ என்று அவன் விசாரித்தான்.

    இன்று இரவு எவ்வளவோ விபத்துக்களும் விபரீதங்களும் நிகழ்ந்து விட்டன என்றாள் அன்னம். என்ன என்று அறியும் ஆவலை வீரர்கள் இருவரும் காட்டிக்கொண்டதால் அவள் நடந்ததை எல்லாம் ஒருவாறு சொல்லித் தீர்த்தாள்.

    கயலெனப் புரண்டு கொண்டிருந்த அவள் விழிகள் அங்கு நின்ற வண்டிமீது மோதின. அதன் புறத்தே தீட்டப் பட்டிருந்த சின்னம் அவள் பார்வையை அடிக்கடி ஈர்த்தது அவள் குனிந்து அதைக் கவனித்தாள். வண்டிக்குள் ஏறும் பளபளப்பான படியமைப்பையும் உற்று நோக்கினாள். ,இந்த வண்டி!’ எனும் வியப்புச் சொல் அவள் வாயிலிருந்து உதிர்ந்தது.

    ‘இந்த வண்டிக்கு என்ன?’ என்று திருமலை வினவினான்.

    ‘இது திருமாறனின் சொந்த வண்டி. இது பிராட்டி வீட்டின் அருகே எப்படி வந்தது? அவர்தான் வரவே இல்லையே’ என்று அன்னம் தன் மனக்குழப்பத்தை வாய் விட்டே சொன்னாள்.

    ‘திருமாறனா? எந்தத் திருமாறன்?’ என்று மருது கேட்டான்.

    இந் நகரின் செல்வர்களில் ஒருவர். செல்வாக்கு மிகுந்தவர். முத்து வாணிபத்தையே தன் கைக்குள் வைத்துக் கொண்டிருப்பதாகப் பெருமை பேசும் திருமாறன் தானே? என்று மருது பாண்டியன் விசாரித்தான்.

    ‘நான் மனம் வைத்தால் அரசு கட்டிலில்கூட அமர முடியும்!’ என்று கர்வத்தோடு பேசி வருகிற திருமாறன் தானே? என்றான் திருமலை.

    ‘சூழ்ச்சிக்கும், வஞ்சனைக்கும், சிறுமதிக்கும் உறைவிட மாக விளங்கும் திருமாறன் தானா நீ குறிப்பிடுவது?’ என்று படபடத்தான் மருது.

    ‘இது எனக்குத் தெரியாது. இந்த வண்டி இந்நகரத் தலை மக்களில் ஒருவரான திருமாறனுடையது. அவர் மாளிகை இருக்குமிடம்…’ என்று விளக்கமாகத் தெரிவித்தாள் அன்னம்.

    அது கிடக்கட்டும். முதலில் நீ களைப்பாறவேண்டும். நாங்கள் உன்னை உன் இல்லத்தில் கொண்டு சேர்க்கிறோம். உன் அன்னை பயந்து கொண்டிருப்பாள்…’ என்று திருமலை சொல்லவும் அவள் நெடுமூச்சு உயிர்த்தாள்.

    எனக்குத் தாயும் இல்லை, தந்தையுமில்லை. அமுத வல்லிதான் என்னை ஆதரித்து வருகிறாள். அவள் எனக்குச் சிற்றன்னை உறவு வேண்டும். மிக நெருங்கிய உறவும் அல்ல. அவளுக்கு என்னிடம் அதிக அன்பு இருப்பதாகவும் சொல்ல முடியாது. பார்க்கிறவர்களில் பெரும்பாலோர் அவளைத் தலைவி என்றும் என்னைப் பணிப்பெண் என்றும் எண்ணுவது வழக்கம்…’

    ‘முரடன் எவனோ வீட்டினுள் புகுந்துவிட்டான் என்றாயே; அவன் என்னென்ன செய்திருக்கிறான் என்று கவனிப்போம். நாங்களும் உன்னோடு வருகிறோம்’ என் றான் திருமலை.

    ‘எயிலூர் ஆந்தை இன்னுமா அவ்வீட்டில் இருப்பான்’.

    ‘யார், ஆந்தையா? அவனா அங்கு வந்தவன்?’ என்று கேட்டான் மருது. அவன் குரலில் தனியானதொரு பதற்றமும் ஆர்வமும் துடித்தன.

    ‘ஆமாம். காட்டுக் கரடிபோல் வளர்ந்த தடியன்… அவனேதான். அவன் அங்கேயே இருக்கிறானா பார்ப்போம்’ என்ற திருமலை, பூஞ்செண்டை எடுப்பது போல் அன்னக்கிளியைத் தூக்கித் தன் குதிரைமீது அமர்த்திக்கொண்டு கிளம்பினான்.

    மருது கீழே இறங்கி வண்டியை ஓர் ஓரமாக இழுத்து வீட்டுக் குதிரைகளை அவிழ்த்து அதில் கட்டிப்போட்டான். பிறகு தன் குதிரைமீது ஏறிக்கொண்டு திருமலையைத் தொடர்ந்தான்.

    குதிரை வண்டி அமுதவல்லியின் மாளிகையிலிருந்து வெகுதூரம் சென்றிருக்கவில்லை. எனவே அவர்கள் சீக்கிரம் வீட்டருகே வந்துவிட்டார்கள்.

    இப்பொழுது நிலவு வெகு பிரகாசமாக இருந்தது. விடிவின் நேரம் நெருங்கிவிட்டபோதிலும், விடிவதற்கு இன்னும் அதிகப் பொழுது இருக்கும்போலும் என்ற மயக்கத்தை உண்டாக்கும் விதத்தில் வெள்ளிய நிலவு பூச்சொரிந்து குளிர் இளம் பொழுதில், மகிழ்வு துளும்பும் உள்ளத்தோடு, தனது உள்ளம் கவர்ந்த அன்பனோடு சேர்ந்து ஒரே குதிரைமீது அமர்ந்து வீடு நோக்கி வருவது மிக இனிய அனுபவமாகவே பட்டது அந்த இளம் பெண்ணுக்கு. அவள் அவன் மார்புமீது சாய்ந்து கொண்டாள். அன்போடும் ஆதரவோடும் அவன் கை அவளைச் சேர்த்துப் பிடித்துக் கொண்டது. இருவருக்கும் அது சுகமான புதிய அனுபவம்தான்.

    ஆனால், அந்த இனிய காட்சியைக் கண்டு கலங்கின இரு கண்கள்; கொதித்தது ஒரு உள்ளம்; எரிந்தது ஒரு வயிறு. அனல் மூச்சு வீசியது நாசி. அவை அழகி அமுத வல்லிக்குச் சொந்தம்.

    எயில் ஊர் ஆந்தையினால் அறையப்பட்டு, வேதனை யோடு படுக்கையில் விழுந்த அமுதவல்லி சிறிது நேரம் கண்ணீர் வடித்தபடி கிடந்தாள்.

    ஆயினும், மூலையில் முடங்கி அழுதுகொண்டே பொழுதுபோக்கும் இனத்தைச் சேர்ந்த பெண் அல்ல அவள்.

    ‘இனி என்ன செய்யவேண்டும்? திருமாறனை வழிக்குக் கொண்டுவருவது எப்படி? இந்த ஆந்தையை மடக்குவது எவ்வாறு?’ என்றெல்லாம் அவள் மனம் திட்டம் தீட்டுவதில் ஈடுபட்டது. ‘திருமாறனுக்கு நான் கடிதம் அனுப்பியது ஆந்தைக்கு எப்படித் தெரிந்தது? மாறனுக்காக என் வீட்டுக் கதவு திறந்திருக்கு மென்பதை இவன் அறிய முடிந்தது எவ்வாறு?’ என்றும் அவள் மனம் ஐயமுற்றது.

    “ஆந்தை அன்னக்கிளியை புகழ்ந்து பாராட்டினானே! அவள் மீது ஆசை இருப்பதாகக் காட்டிக் கொண்டானே! அவள் அவனை முன்பே சந்தித்திருப்பாளோ? திருமாறனை காணப்போகும் வழியில் அவன் அவளைக் கண்டு பேசிச் செய்தி அறிந்திருக்கவும் முடியுமல்லவா?” சந்தேகம் கொண்ட உள்ளம் இப்படிக் கொடி படர விட்டது.

    அமுதவல்லி ஊஞ்சலில் அமர்ந்தும், எழுந்து நடந்தும், சாளரம் தோறும் நின்று நின்றும் சிந்தனைக்கு வேலை கொடுத்துக் கொண்டிருந்தாள். வெளி உலகின் மோகனக் கொலு அவள் பார்வைப் புலனையும் தொட்டதால், ஓரிடத்தில் அவள் அதிக நேரம் நின்றாள்.

    “அன்னம் அலறினாளே? என்ன ஆனாளோ தெரிய வில்லையே?” என்று அவள் எண்ணத் தொடங்கியபோது தான், குதிரைகள் வந்த காட்சி அவளது பார்வையை இழுத்தது. மெது நடையில் உலா வருவதுபோல் குதிரைகள் வருவதும், ஒரு குதிரைமீது அன்னக்கிளியும் வனப்புள்ள இளைஞன் ஒருவனும் வீற்றிருந்த நேர்த்தியும் எந்தப் பெண்ணுக்குத்தான் பொறாமையை உண்டாக்காது? அமுதவல்லிக்கும் பொறாமை பிறந்தது.

    குதிரைகள் அவள் வீட்டின் முன் வந்து நின்றன. இளைஞர்கள் குதித்து இறங்கிய மிடுக்கும், திருமலை அன்னத்தை இறக்கிய அழகும், அவள் அவனை விட்டுப் பிரிய மனமில்லாதவளாய் அவனோடு சேர்ந்து நின்றதும், அவன் அவள் முகத்தைப் பார்த்து முறுவல் பூக்க, அன்னம் தாமரை மலர் போன்ற தன் எழில் முகம் உயர்த்தி மகிழ்வு காட்டியதும் நிலவொளியில் அற்புத ஓவியங்களாகத் தோன்றின. ஆயினும் அவற்றை ரசிக்கும் மனநிலை அமுதவல்லிக்கு இல்லையே.

    மூவரும் மாடிக்கு வந்தனர். அவர்கள் வருவதற்கு முன்னரே அமுதவல்லி வேகமாக நகர்ந்து ஊஞ்சலில் படுத்துக்கொண்டாள். அவ் வேளையில் கூட வருகின்ற இளைஞரின் பார்வையையும் மனதையும் கவரக்கூடிய வசீகர நிலையில் சரிந்து கிடக்க அவள் சிரத்தை எடுத்துக் கொண்டாள்.

    அவளுடைய தன்மைகளை ஒருவாறு அறிந்திருந்த அன்னக்கிளி முதலில் தன்னைப்பற்றிய பேச்சை எடுக்க வில்லை. பரிவுடனும் கவலையோடும் தலைவி பற்றியே வினவினாள்; ஆந்தை எப்படி ஒழிந்துபோனான் என்று விசாரித்தாள்.

    ‘சனியன் எப்படியோ தொலைந்தது’ என்று அலுப்புடன் மொழிந்தாள் அலங்காரி.

    தனக்கு நேர்ந்த ஆபத்தையும் நல்ல சமயத்தில் அவ் வீரர்கள் வந்து காப்பாற்றியதையும் அன்னம் அவளுக்குச் சொன்னாள். ‘ஒரு முக்கியமான சேதி அம்மா. இரவில் நம் வீட்டருகே ஒரு வண்டி நின்றிருக்கிறது. குதிரைகள் பூட்டப்பட்ட நிலையிலேயே நின்ற அந்த வண்டி திருமாறனுடையது…’ என்றாள்.

    ‘என்ன?’ என்று அடக்கமுடியா ஆர்வத்தோடு கேட்டபடி எழுந்து உட்கார்ந்தாள் அமுதம். திருமாறனின் சொந்த வண்டியா? அப்படியானால்…’

    ‘அதுதான் எனக்கும் விளங்கவில்லை அம்மா. ஒரு வேளை அவர் வந்திருப்பாரோ?’ என்று அன்னக்கிளி இழுத்தாள்.

    ‘வந்திருந்து, ஆந்தை அவரைத் தாக்கிக் கொன்று விட்டு அவனே இங்கு வந்திருப்பானோ? அவள் சந்தேகம் வளர்ந்தது.

    விடிவின் வெள்ளொளி எங்கும் பரவிவிட்டது. உயிர்ப்பின் கானம் விண்ணை நிறைத்தது. உயிரின் அசைவுகள் மண்ணகத்துக்கு விழிப்பும் இளமையும் தந்தன.

    அமுதவல்லி ஓர் ஆளை அழைத்தாள்.

    இவர்கள் காட்டும் இடம் சேர்ந்து அங்கு நிற்கும் குதிரை வண்டியை ஓட்டி வந்து நம் வீட்டில் நிறுத்து போ என்று அவள் கட்டளையிட்டாள்.

    வீரர்கள் விடைபெற்றுச் சென்றார்கள்.அப்பொழுது கூடத் திருமலையின் கண்ணொளி அன்னத்தின் முக மலரில் செம்மையும் மலர்ச்சியும் சேர்த்ததை அமுதவல்லி கவனிக்கத் தவறவில்லை.

    திருமலையும் மருதுபாண்டியனும் வேலையாளுடன் சென்றனர். வண்டி நிற்க வேண்டிய இடம் சேர்ந்ததும் வீரர்கள் இருவரும் திகைத்தனர். ‘ஆ! அந்த வண்டி எங்கே! என்று திடுக்கிட்டான் மருது, அங்கே வண்டி எதுவும் இல்லாததால்!

    இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

    மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

    சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

    இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *