அன்னக்கிளி
வல்லிக்கண்ணன்

13. எயில் ஊர் ஆந்தை

    வண்ணப் புறாவாம் அன்னக்கிளி இனிமேல் தன்னிட மிருந்து தப்ப முடியாது என்று எண்ணிய எயில் ஊர் ஆந்தையே எதிர்பாராத வகையில் அறைக்குள் அடைபட நேர்ந்ததும், முதலில் அவன் ஆத்திரம் கொண்டான். திருமலைக் கொழுந்து திடீரென்று அங்கு முளைத்தது எப்படி என்று அவனால் விளங்கிக்கொள்ளவே இயலவில்லை. அதைப் புரிந்துகொள்ளும் நிலையிலும் அவன் இல்லை.

    ஆந்தைக்குத் திருமலையிடம் அச்சம் இருந்தது. அவனைத் திடுமெனக் கண்டதும் ஆந்தை குழப்பமுற்ற தற்குக் காரணம் உண்டு.

    எயில் ஊர் ஆந்தை கொற்கைப் பட்டினத்துக்கு வருவதற்கு முன்னர் மதுரையில் பாண்டியர் அரசரவையில் பணி புரிந்து வந்தான். அங்கே பயங்கரமான குற்றம் ஒன்றைச் செய்துவிட்டு, தப்பி ஓடி ஒளிந்தான். ஆந்தையை எங்கு கண்டாலும் பிடித்துப் பாண்டியன் முன்கொண்டு நிறுத்த வேண்டும்; அவன் அவ்விதம் பிடிபடாது போயின் அவனைக் கொன்றுவிடவேண்டும் என்ற கட்டளை இருந்தது.

    ஆந்தை மிகவும் திறமையாகக் காடுகளிலும் மலைக் குகைகளிலும் – வேறு எங்கெங்கெல்லாமோ – பதுங்கி வாழ்ந்து வந்தான். கொற்கையில் அவனது குற்றம் பற்றிய செய்தி எட்டவில்லை என்று தெரிந்து கொண்டதும், அவன் அங்கு தலைநிமிர்ந்து நடந்தான். அரச குடும்பத் தினருக்கு அவனுடைய உதவி தேவையாகத்தான் இருந்தது. அமுதவல்லி அவனுடைய திறமையையும் உழைப்பையும் அவ்வப்போது பயன்படுத்தி வந்தாள்.

    சடையவர்ம பாண்டியனது தேவியின் முத்துமாலையை அடைவதற்கு அமுதவல்லி செய்த சூழ்ச்சியில் ஆந்தைக் கும் முக்கிய பங்கு உண்டு. அவன் அமுதவல்லியை மிரட்டி, அடிக்கடி பணம் பெற்றுச் சுகமாக வாழலாம் என்று ஆசைப்பட்டுக் கொண்டிருந்தபோது, மதுரையிலிருந்து வந்த வீரன் ஒருவன் அவனை இனம் கண்டு விட்டான். அவ் வீரன் தனது உறைவிடத்தைப் பாண்டியனின் ஆட்களுக்கு அறிவித்து, தன்னை வேட்டையாடும்படி தூண்டி விடக்கூடும் எனும் அச்சம் ஆந்தைக்கு ஏற்பட்டது.

    தனது திட்டத்தில் தனக்கு உடந்தையாக இருந்த ஆந்தை சிறிது காலம் எங்கேனும் தலை மறைவாக இருந்தால் நல்லது என்றே அமுதவல்லியும் கருதினாள். ஆகவே, அவன் ஒரு கப்பவில் யாத்திரை போவதாகக் கூறியதும் அவள் அவனுக்குப் பொருள் உதவி செய்தாள். உடனடியாக அவள் அவனை மறந்தும் விட்டாள். உல்லாசத்தையும் இனிமைகளையும் பற்றி மட்டுமே எண்ணியும் கனவு கண்டும் பொழுதுபோக்க அவாவுறுகின்ற சிங்காரியின் உள்ளத்திலே கசப்பான நினைவுகளுக்கு இடம் ஏது?

    ஆந்தை இடைக்காலத்தில், கடலோடிகளோடு ஒரு கடலோடியாக வாழ்ந்தான். அந்தக் கஷ்டமான பிழைப்பில் அவனுக்கு அலுப்பு ஏற்பட்டது. முத்து வியாபாரி கொற்கை செல்வதாகச் சொன்னதும், அவனுக்கு உதவி புரிவதாகக் கூறிக்கொண்டு ஆந்தையும் அவனோடு வந்து சேர்ந்தான்.

    அவன் கடல் மீதே பல மாதங்களைக் கழிக்க நேரிட்ட தாலும், அவன் பணிபுரிந்த மரக்கலம் தொலை தூரங்களில் சஞ்சரித்துக் கொண்டிருந்ததனாலும், சடையவர்ம பாண்டி யன் இறந்துவிட்டதை ஆந்தை அறிந்தானில்லை. அமுத வல்லியின் முத்துமாலை நினைவில் பளிச்சிட்டதும்தான் அவளுடைய சதிச் செயலை மன்னனிடம் அறிவித்துப் பொன்னும் பொருளும் பெறலாம்; அமுதவல்லியை மிரட்டி அவளிடமிருந்தும் பொருள் பறிக்கலாம் என்று அவனது நரித்தன மூளை ஆசை விதைத்தது.

    அமுதவல்லியை இரவிலே கண்டு மிரட்டியபோது அவள் அஞ்சி நடுங்காததன் உண்மைக் காரணத்தை ஆந்தை மறுநாள்தான் புரிந்து கொள்ள முடிந்தது. சடைய வர்மன் உயிருடன் இல்லை; அவளைக் கண்டிக்கவோ தண்டிக்கவோ அங்கு எவருமில்லை என்பதை அவன் தெரிந்து கொண்டான். எனவே அவளிடமிருந்து முத்தாரத்தைக் களவாட வேண்டும்; அது தவிர வேறு வழியில்லை என்று தீர்மானித்திருந்தான் அவன்.

    இரவு வேளையில் மீண்டும் அமுதவல்லி வீட்டுக்குச் செல்லவேண்டும் என்று முடிவு செய்த ஆந்தை திருமாறனைக் கண்டு பேச வந்தான். அமுதவல்லியிடம் சடைய வர்மனது தேவியாரின் முத்துமாலை இருக்கிறது என்ற உண்மையை அவன் கூறாமலே அறிந்திருந்தார் திருமாறன். அவளைச் சந்திக்கும் எண்ணத்தோடு அவர் கிளம்பிய தருணத்திலேதான் ஆந்தை அவரிடம் வந்து சேர்ந்தான். முத்து வியாபாரம் பற்றி முக்கிய விஷயங்கள் பேச வேண்டும் என்றான்.

    எயில் ஊர் ஆந்தையைத் திருமாறன் ஓர் சிறிது அறிவார். ‘காத்திரு, நான் அவசரமாக அமுதவல்லிப் பிராட்டி இல்லம் செல்ல வேண்டியிருக்கிறது. திரும்பி வந்ததும் பேசுவோம்’ என்று சொல்லிச் சென்றார் அவர்.

    காத்திருந்த ஆந்தை திருமாறனின் பெரிய வீட்டின் அறை தோறும் எட்டிப் பார்த்துப் பொழுது போக்க முன் வந்தபோதுதான் முத்துக்கள் குவித்து வைக்கப்பட்டிருந்த அறையைக் கண்டான். அழகியைக் காணச் சென்ற பெரியவர் விரைவில் வீடு திரும்ப மாட்டார் என்று அவன் மனம் அறிவித்தது. ஆசை தூண்டியது. அவன் எப்படியோ சில சாவிகளைத் தேடிப்பிடித்து அந்த அறைகளைத் திறந்து உட்புகுந்தான். அவனுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிப் பெருக்கில் அவனாகவே வாய்விட்டு ஏதோ சொல்லியிருக்க வேண்டும். அந்த ஒலிதான் சும்மா சுற்றி வந்த அன்னக் கிளியை அவ்வறையின் பக்கம் கவர்ந்திழுத்தது.

    வெளியே காலடி ஓசை கேட்கவே, ஆந்தை கதவின் பின் பதுங்கிக் கொண்டான். அன்னக்கிளி முதல் அறைக்குள் யாரையும் காணாமல் இரண்டாவது அறைக்குள் அடி எடுத்து வைத்த சமயம், அவன் குபீரென்று வெளியே வந்து, கதவை இழுத்துப் பூட்டினான். தனது வெற்றியில் களிப்புற்று, தன்னையும் சூழ்நிலையையும் மறந்து நின்ற போதுதான் ஆந்தைக்கு அதிர்ச்சி தரும் வகையில் திருமலையும் மருதுவும் அங்கே வந்து சேர்ந்தார்கள். அவனே சிறைப்படவும் நேர்ந்தது.

    அறைக்குள் சிக்கிய ஆந்தை வாளா இருந்துவிட வில்லை. எப்படி இருக்க முடியும் அவனால்? பெரியவர்களின் பெரிய வீடுகளில் மர்ம அறைகளும் இரகசிய வழிகளும் இருக்கும் என்பது அவனுக்குத் தெரிந்த விஷயம் தான். முத்துக்களையும் விலை உயர்ந்த பொருள்களையும் வைத்திருந்த அந்த அறை பாதுகாப்பு மிக்கதாய்த்தான் இருக்கும் என்றும் அவன் ஊகித்தான். முந்திய நாள் ஆந்தையும் முத்து வணிகனும் வந்திருந்ததனால், மீண்டும் வியாபாரி வருவதாக வாக்களித்திருந்ததால், முத்துக்களையும் இதர மணிகளையும் தரம் பிரிப்பதில் திருமாறன் இரவின் பெரும் பொழுதைச் செலவிட்டிருக்க வேண்டும்; அயர்ந்த தூக்கம் கண்ணிமைகளை அழுத்தத் தொடங்கவும் அவர் எல்லாவற்றையும் அப்படி அப்படியே விட்டுச் சென்றிருக்க வேண்டும் என்று அவன் மனம் கூறியது. உண்மையும் அதுவே.

    ‘எது எப்படி இருந்தால் என்ன? காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள வேண்டும்’ என்று அவனுடைய உள்ளுணர்வு உந்தியது. தற்காப்பு உணர்வு அவன் ஆற்றலுக்கு விழிப்பும் வேகமும் தந்தது. கள்ள வழி அவன் முன்னே திறந்து கொண்டது. போகிற போக்கில். அவன் அங்கு ஒரு பெட்டியிலிருந்த பொன் முடியையும் சிறிய வைர வாளையும் கண்டான். ‘எரிகிற வீட்டில் பிடுங்கியது ஆதாயம் என்று கருதி உயிருக்காக ஓடும் சமயத்தில் அகப்பட்டதைச் சுருட்டிச் செல்வதே அறிவுடைமை எனச் செயலாற்றினான் ஆந்தை.

    திருமலையின் பேச்சை விளையாட்டாக மதித்துவிட நினைத்த திருமாறன்,மதிப்பு மிக்க பொருள்கள் அடங்கிய பெட்டியைக் காணமுடியாமல் போனதும் ஓலமிட்டார். இருவரையும் ஓடிச் சென்று ஆந்தையைத் தேடச் சொன்னார். ஆட்களை ஏவினார். அவரும், குட்டியை இழந்து விட்ட பூனை மாதிரி, அலறியவாறே அங்குமிங்கும் அலைக் தார்.

    திருமாறனும் மருதுபாண்டியனும் பருந்துப் பார்வை எறிந்து ஆராய்ந்தனர். சுரங்க வழி எங்கு கொண்டுபோய் விடுகிறது என்று கண்டு, அங்கிருந்து தேடத் துவங்கினர்.

    ஆந்தை தப்பிச் செல்வதிலும் பதுங்கிக் கிடப்பதிலும் தேர்ந்தவன் என்பது அவ்விருவருக்கும் நன்கு தெரியும்.

    ‘எயில் எனும் ஊரிலிருந்து வந்த ஆந்தை என்ற பெயருடைய அவன், பெரிய பெரிய கோட்டைச் சுவர்கள் மீதும் ஊர்ந்து செல்லும் ஆந்தைதான். இல்லையேல் மதுரையில் இருந்து மறைந்தவன் இவ்வளவு காலமும் எவர் கண்ணிலும் படாமல் வாழ்ந்திருக்க முடியுமா?’ என்று திருமலைக் கொழுந்து குறிப்பிட்டான்.

    முக்கிய இடங்களில் எல்லாம் தேடிய பிறகு இருவரும் துறைமுகத்தை அடைந்தனர். அங்கிருந்து புறப்படத் தயாராக இருந்த மரக்கலம் ஒன்றில் ஆந்தை போன்ற உருவத்தான் திடீரென்று எதன் பின்னோ மறைந்ததாக மருதுபாண்டியன் சொல்லவும், இருவரும் ஒரு படகில் ஏறி அம்மரக்கலத்தின் அருகே செல்வதில் ஆர்வம் காட்டினர். இதற்குள் திருமாறனின் ஆட்கள் கலத்தின் மீது ஏறியிருந்தார்கள்.

    அப்பொழுதுதான் பிறர் எதிர்பார்க்க முடியாத செயல் நிகழ்ந்தது. ஆந்தை கலத்திலிருந்து கடலில் குதித்து வேகமாக நீந்தலானான். கரையை நோக்கி நீந்தாமல், எதிர்ப்புறமே சென்றான். பிறர் கண்ணெட்டும் தூரத்திலிருந்து அகன்று விட்டதும், அலையோடு நீந்திக் கரையில் வேறு எங்காவது ஏறிவிடலாம் என்ற நம்பிக்கையோடுதான் அவன் அவ்விதம் சென்றான்.

    அவன் குதித்ததையும் கடல்மீது நீந்தித் தப்பி ஓட முயல்வதையும் கண்ட திருமலை தங்கள் படகை அவனை நோக்கிச் செலுத்தும்படி கட்டளையிட்டான்; எப்படியும் ஆந்தையைப் பிடித்து விடலாம் என்ற உற்சாகம் அவனுக் கும் அவனைச் சேர்ந்தவர்களுக்கும் ஏற்பட்டது.

    விம்மி விம்மி மேலுயர்ந்து பெரிதாகிப் பின் தாழ்ந்து, மீண்டும் பொங்கிப் பாய்ந்து, நுரைப் பூக்களை உலுக்கிப் பதுங்கித் தணிந்து, திமிர்கொண்டு எழுந்து, வெறி கொண்ட புரவிகள்போல் சாடும் அலைகளால் ஏற்றுண்டு. தள்ளுண்டு அவற்றோடு போராடி முன்னேறிக் கொண்டிருந்தான் எயில் ஊர் ஆந்தை.

    ஒரு இடத்தில் வெள்ளிய அம்பு போல் ஒன்று பளிரிட்டது. வாலடித்தது. வளைந்து துள்ளியது.

    ‘ஏய் சுறா!… சுறா மீன்!’ என்று பலரின் கூவல்கள் எழுந்து ஒன்றாகிக் குழப்பின.

    சுறா மீன் வேகமாக வந்தது.

    ஆந்தை வேகமாகக் கைகளை வீசிவீசி நீந்திக் கொண்டிருந்தான்

    சுறா அவனை வட்டமிட்டது.

    அவன் கைகளையும் கால்களையும் உதைத்துக்கொண்டு அலையோடு எழுந்தான் தாழ்ந்தான்.

    அவனிடமிருந்து ஒரு அலறல் பிறந்தது.

    சுறா அவன் தொடையைக் கவ்வியது.

    கால்களில் ஒன்றை அழுத்தமாய்க் கவ்விப் பிடித்து அவனை உள்ளே உள்ளே இழுத்துச் சென்றது.

    அங்கு ரத்தம் மிதந்து நீருடன் கலந்தது. அப்புறம் அங்கே ஆந்தை தென்படவேயில்லை. அலைகள் மட்டுமே கொந்தளித்துப் புரண்டு கொண்டிருந்தன.

    திருமலை நெடுமூச்சுயிர்த்தான். அவனது படகு கரை நோக்கித் திரும்பியது.

    இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

    மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

    சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

    இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *