
அன்னக்கிளி
வல்லிக்கண்ணன்
2. ஜோடி தேடிய மாடப்புறா
இரவு. கொற்கையின் சிறப்புக்களை இருள் மூடி மறைத்துவிட முயன்றும், முழு வெற்றிபெற முடியாமல் இடந்தது.
வீதிகளின் மூலைக்கு மூலை தெரு விளக்குகள் எரிந்துக் கொண்டிருந்தன. அவை தங்களைச் சுற்றிலும் சிறிது ஒளி பரப்பினும், சூழ்நிலை இருட்டை அதிகப்படுத்திக் காட்டியது.
நேரம் அதிகமாகி வீதிகளில் ஜன நடமாட்டம் குறைந்தது. ஒளி கக்கும் பந்தங்களை ஏந்திய காவலாட்கள் மாத்திரம் அவ்வப்போது அங்குமிங்கும் திரிந்துகொண் டிருந்தனர்.
பல வீடுகளில் அமைதியும் இருளும் கவிந்து விட்ட போதிலும், சில பெரிய மாளிகைகளிளும் நிலையங்களிலும் ஒளி மிகையும் உவமைக் கூச்சலும் கோலாகல நடம் பயின்றன. இன்பத்தை விலைக்கு விற்பவர்களும் விலை கொடுத்துப் பெறக் காத்திருந்தவர்களும் எழுப்பிய கேளிக்கைக் கூச்சல்கள் சில பவனங்களிலே செல்வபோகத்தில் நீந்தி களிக்கும் சீமான்களும் சீமாட்டிகளும் சிதறிய உல்லாசக் கூவல்கள் சில இல்லங்களிலே. அங்கெல்லாம், விண்ணகத்தின் நட்சத்திரங்களோடு போட்டியிடுவன போல், அலங்கார விளக்குகள் எரிந்து கொண்டுதான் இருந்தன.
அம் மாளிகையிலும் விளக்குகள் கதிரொளி கக்கி மிளிரத் தவறவில்லை. சர விளக்குகளும் குத்து விளக்குகளும் வெள்ளியில் உருவாகி நெய்யில் மிதந்த திரிகள் மூலம், பொன் சுடர் தாங்கிக் குளுமையான ஒளியைப் பரப்பிக்கொண்டு எழிலுற்று விளங்கின.
மாடியின் விசாலமான அறையிலும் ஒளி நிறைந்து நின்றது. ஆனால், கண்களைக் கூசவைக்கும் அளவுக்கு அதிகமில்லை. குளுமை நிலவிய சூழல் அது. மணம் மிகுந்த கூடமும்கூட.
அழகுப் பெண்கள் உருவில் நின்றன சில விளக்குகள். நீந்தும் வெள்ளி மீன்கள்போல் தொங்கின சில. பறக்கும் அன்னம் போல அமைக்கப்பட்டு மஞ்சத்தின் அருகில் தொங்கிய விளக்கு மட்டும் தங்கத்தால் உருவாகித் தக தகத்தது.
அறையின் நடுவில் ஒரு பீடத்தில் மலர்ந்த தாமரை வடிவில் ஒரு பொற்பாத்திரம் இருந்தது. பொதிகை மலைச் சந்தனத்தில் பொடி செய்யப்பட்ட தூள் குவிக்கப்பெற்றிருந் தது அதில் அனல் இடப்பட்டிருந்ததால், அதிலிருந்து நறுமணம் புகையாய்க் கிளம்பி அறை முழுவதும் நிலைத்து நின்றது.
தொங்கிய அன்ன ஊஞ்சலில் ஒயிலாகச் சாய்ந்திருந்தாள் ஓர் அழகி. சுடரொளி வீசும் கூர் விழிகள் இப்போது மூடியும் மூடாமலும் சொக்கி நின்றன. அந்த முகத்தில் அழகை அதிகப்படுத்தும் ஒப்பனை சிரத்தையோடு செய்யப்பட்டிருந்ததாக விளக்கொளி வெளிச்ச மிட்டுக் காட்டியது.
பொற்சரிகை இட்ட வெண்துகில் மூடி மறைத்தது அவள் உடல் அழகை. எனினும், விம்மி நின்றும் சரிந்து படிந்தும் பெண்மைக்கு வசீகரமும் வனப்பும் தந்த அங்கங் கள் அவளது மேனி வளப்பத்தை, போர்த்த துகிலின் துணையோடு, எடுப்பாகக் காட்டிக்கொண்டு தானிருந்தன.
நீண்டு அலை பாய்ந்து நெளி நெளியாய்ப் புரண்ட கருங்கூந்தலை அவள் அள்ளிச் சொருகி முடிக்கவுமில்லை பாம்புபோல் சடையாக முறுக்கிக் கட்டித் துவளவிடவுமில்லை. நீராடிவிட்டு உலரப்போட்டது போல் நீளத் தொங்க விட்டிருந்தாள். குழற்கற்றைகளில் சில கழுத்தின் இரு புறத்திலும் பிரிந்து, தோளுக்கு அணியாய்ப் புரண்டு கிடந்தன, பெரும் பகுதி பின்புறம் பரந்து படர்ந்திருந்தது.
அடுக்கிய தலையணைகள் மீது உடலின் மேல்பகுதியைச் சாய்த்து, ஊன்றிய ஒரு கையின் மீது தலையைத் தாழ்த்தி, கால்களை ஒய்யாரமாக மடித்து ஒடுக்கி, ஓய்ந்திருக்கும் மோகினி எனக் கொலுவிருந்தாள் அவள். சேலையின் ஒரு பகுதி அழகுத் தோரணம்போல் தொங்கியது. ஊஞ்சலின் அசைவுக்கு ஏற்ப, அது ஆடி அசைந்தது அவள் தோற்றத்தின் அழகையும் இனிமையையும் அதிகப்படுத்திக் காட்டியது.
அவளுக்கு வயது இருபத்தெட்டு ஆகிறது என்றாலும் அவளுக்குப் பதினெட்டு வயதுதான் என்று சொன்னால், யாரும் மறுக்க முடியாது. இளமை துளும்பும் கட்டழகுக் குமரியாகத்தான் காட்சி அளித்தாள்.
அவள் காதுகளில் தொங்கிய அணிகளும் கழுத்தை அலங்கரித்த நன்முத்து மாலையும் கைகளில் புரண்ட ஆபரணங்களும் அவளது செல்வ நிலையை மட்டுமின்றி ரசனை உள்ளத்தையும் உணர்த்துவனவாய்த் திகழ்ந்தன. தந்தத்திலே தமிழகத்துச் சிற்பி மலையாளத்துத் ஆக்கிய கொல்லிப்பாவை என மின்னினாள் அவள், கண் வீச்சினால் ஆடவர் நெஞ்சில் காம நஞ்சை விதைக்கும் சக்தி பெற்றிருந்த அக் கோமளவல்லியின் பெயர் அமுதவல்லியாம்! தனது ஆசைக்கு உரியவர்களிடம் சிரித்துச் சிரித்துப் பேசி, அளப்பரிய இன்பம் அளிக்கும் தன்மை பெற்றிருந்த அச் சிற்றிடைச் சிங்காரி கிடைத்தற்கரிய அமுதம்தான் என எண்ணிப் பெருமூச்சு விடும் (மன்மதர் கள் எத்தனையோபேர் உண்டு அந்த வட்டாரத்திலே.
அமுதவல்லியிடம் அழகு இருந்தது; அறிவு இருந்தது; செல்வம் இருந்தது; அந்தஸ்து இருந்தது. வாழ்க்கையை, அது தரக்கூடிய சுகபோகங்களை எல்லாம் அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை அவளிடம் அதிகமாகவே இருந்தது. அதனால் அவள் புகழ் எங்கும் பரவியிருந்தது.
அமுதவல்லி வஞ்சக எண்ணத்தோடு வலைவீசிச் செல்பவர்களைக் கவர்ந்து இன்பமும் பணமும் பறிக்கத் திட்டமிடும் வஞ்சியல்ல. சகல பேர்களுடனும் சரசமாடும் சாகசக்காரியல்ல, ஒருவனுக்கே தன்னையும் தன் வாழ்வையும் தந்துவிடும் பண்பு பெற்ற உத்தமியும் அல்ல.
சிதைந்து சீரழிந்து கொண்டிருந்த பாண்டிய மன்னர் குலத்தில், பெரும்புகழ் எல்லாம் சரித்திரப்பெருமை என்று தேய்ந்துவிடச் சிறுகிச் சின்னபின்னப்பட்டு வந்த பாண்டிய நாட்டைத் துண்டு துண்டாகக் குறுக்கி ஆண்டு வந்த குறுநில மன்னர்கள் வகையைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் பிறந்தவள் அவள். ஆகவே, அவளும் ஓர் அரசிளங் குமரிதான்.
பாண்டியர் ஆட்சி பலமிழந்து கொண்டிருந்தது. ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வீரத்தை, வலிமையை, வளத்தைப் போற்றி வளர்ப்பதற்குப் பதிலாகக் கேளிக்கை களையும் உல்லாசப் பொழுது போக்குகளையும் வளர்ப்பதில் ஆர்வங்காட்டி வந்தார்கள்.
அமுதவல்லியிடமும் அந்தக்குணங்கள் படிந்திருந்தன. தனது உள்ளம் கவரும் வனப்பும் வலிமையும் பெற்ற ஆணழகரை அவ்வப்போது தன் அந்தப்புறத்தில் அனுமதிக்க அவள் கூசியதில்லை. அவள் கடைக் கண்ணின் இன்னருள் பெற்றவர்களில் ஒருசிலரே அவளின் நீடித்த அன்பைப் பெற முடிந்தது. அடிக்கடி காதலரை மாற்றிக் கொள்ளும் புதுமை மோகம் பெற்றவள் அவள்.
அன்று இரவில் அமுதவல்லி ஆசையோடு எதிர்பார்த்திருந்தாள் அழகன் ஒருவனை. அவள் கண்வீசி நாட்கள் அநேகம் ஓடிவிட்டன. ஆயினும் அவன் அவளது எல்லையை விட்டு விலகி விலகியே சென்று கொண்டிருந்தான். அது தான் அவளுக்கு மிகுந்த வருத்தம் அளித்தது. அதனையே அவன் அவன்மீது கொண்ட ஆசையும் அதிகரித்தது. ‘அவரை எப்படியும் வெற்றி கொள்வேன்’ என்று உறுதி பூண்டிருந்தாள் அந்த அழகி.
அப்பொழுது இரவில் நாழிகை அதிகமாகியிராது. எனினும் நகர் ஏதோ மாயமந்திரத்தில் கட்டுண்டதுபோல் ஓய்ந்து ஒடுங்கிவிட்டது.
ஊஞ்சலில் அசைந்து கொண்டிருந்த அழகி மெல்லக் குரல் எழுப்பினாள் ‘அன்னக்கிளி’! என்று.
‘அம்மா’ என்று பதில் அளித்தபடி வந்து நின்றாள் ஒரு யுவதி. அவள் தோற்றமும் உடையும் அலங்காரிக்கு முற்றிலும் நேர்மாறானவள் இவள் என்பதைப் பளிச்செனக் காட்டின.
அன்னக்கிளி அப்பொழுதே பூத்த புதுமலர் போல் புனிதத் தோற்றம் பெற்றிருந்தாள். அவள் பார்வையிலோ உடையிலோ பிறரை மயக்கடிக்கும் கவர்ச்சி இல்லை. எளிமையும் இனிமையும் காணப்பட்டன. அவள் அழகியின் உறவினளாகவோ, ஆதரவில் வளரும் எளிய பெண்ணாகவோ இருக்கலாம் என்பதை அவளது பணிவும், ஒடுக்கமும் விளம்பரப்படுத்தின. இயற்கை எழிலும், இளமைச் சிறப்பும் அவளுக்கு நல்ல அணிகளாக அமைந்திருந்தன. அவள் முகம் ஒளிவீசும் எழிற் பூ; அவள் விழிகள் குறு குறுக்கும் கருவண்டுகள்; அவள் நெற்றி புது நிலவின் வில் தோற்றம்; அவள் உதடுகள் சாறு நிறைந்த கனிச் சுளைகள்; அவள் கன்னங்கள் கண்ணாடி; அவள் பேசினால் கவிதை ஒலிக்கும்; சிரித்தால் அருவியின் கலகலப்பு கேட்கும். திட்டங்களிடும் சூது மதியோ, கள்ளம் பயிலும் உள்ளமோ பெற்றிராதவள் அவள். அதை அவள் விழிகள் கூறும்; குழந்தைச் சிரிப்புக் குமிழியிடும் இதழ்கள் சொல்லும்.
தென்றலென ஓசையின்றி வந்த அன்னக்கிளி பெரியவளின் பேச்சை எதிர்நோக்கி நின்றாள்.
‘அந்தக் கடிதத்தை அவரிடம்தானே கொடுத்தாய் அன்னக்கிளி?’ என்று அமுதவல்லி கேட்டாள்.
‘ஊங்’ என்று தலையசைத்தாள் அன்னம்.
அப்போது இளமாறன்கூட யார் யார் இருந்தார்கள்?
‘ஒருவருமில்லை அம்மா. அவர் தனியாகத்தான் இருந்தார். அவர் தனியாக இருக்கும் வேளை பார்த்து, அவர் கையிலேயே அதைக் கொடுக்கவேண்டும் என்று நீங்கள் சொல்லி அனுப்பியபடியே செய்தேன் அம்மா’ என்று இளையவள் தெரிவித்தாள்.
‘அவர் ஒன்றுமே சொல்லவில்லையாக்கும்??
‘இல்லை,அம்மா. அவர் ஏதாவது சொல்லுவார் என்று எதிர்பார்த்து நான் நின்றுகொண்டிருந்தேன். ஏன் நிற்கிறாய்? நீ போகலாமே என்று அவர் என்னை அனுப்பி விட்டார்.
இதே பதிலை அன்னக்கிளி பெரியவளிடம் இதற்கு முன்பே இரண்டு, மூன்று முறை சொல்லிவிட்டாள். ஆயினும் அலுத்துக்கொள்ளாமல், சிடுசிடுக்காமல், முகம் சிணுங்காமல் சொன்னதையே சொல்லவேண்டிய அவசியம் அவளுக்கு ஏற்படுவது புதிய நிகழ்ச்சி அல்ல பொறுமையின் அணி அவள். மேலும் அவ்விதம் பணிந்து செயல் புரிய வேண்டிய நிலையில் இருந்தாள் அவள்.
ஒரு பக்கமாகச் சாய்ந்து கிடந்த அமுதவல்லி தனது ஒப்பார இருக்கையை மாற்றிக்கொண்டு திரும்பி மல்லாந்து சரித்தாள். அவள் கண்கள் மாடி முகட்டில் பதிந்துவிட்டன. மீண்ட பெருமூச்சு உயிர்த்தாள் அவள்.
அன்னக்கிளி அங்கு நின்றதையே அவள் மறந்து விட்டாள் என்று தோன்றியது. ஆனால் அவள் பண்பை அறிந்திருந்த அன்னம் அங்கிருந்து நகரவில்லை. பதுமை எனக் காத்து நின்றாள்.
சில கணங்கள் ஊர்ந்தன.
அமுதவல்லி வாய் திறந்தாள். ‘சரி விளக்குகளை எல்லாம் அணைத்துவிடு. இந்தப் பொன் விளக்கு மட்டும் எரியட்டும். மற்றவற்றை நிறுத்திவிடலாம்’ என்றாள்.
அன்னக்கிளி சிங்காரியின் விருப்பத்தை நிறைவேற்றினாள். அழகு மயிலென அசைந்தும் துவளும் கொடி எனக் குனிந்தும் விளக்குகள் தோறும் சென்று ஒளிக்கதிர் அறுவடை செய்தாள். சுடர்கள் இருளின் வயிற்றிலே ஒடுங் கவும். முன்பு அறையில் நிலவிய வெளிச்சம் குறைந்து மெலிந்து, ஒற்றை விளக்கின் திரியில் குடிபுகுந்தது.
‘நீ போய்ப் படுத்துக்கொள்ளலாம். எந்தச் சமயம் யார்வந்து கதவைத் தட்டினாலும் யார், ஏன் என்று கேளாது திறந்து இங்கே வரவிடு. இந்த இரவுக்கு மட்டுமே இக் கட்டளை’ என மொழிந்தாள் அழகி.
அன்னக்கிளியின் முகத்தில் புன்னகை சிறு நிலவாய் ரேகையிட்டது. கோடிட்ட சுவடு தெரியாமல் மறைந்தும் விட்டது. “ஆகட்டும் அம்மா!” என்று சொல்லி அங்கிருந்து அகன்றாள் அவள்.
அமுதவல்லி உறக்கம் கொள்ளாமல் புரண்டு கொண்டிருந்தாள். “அவர் வருவாரா, வராமலே இருந்து விடுவாரா?” என்ற எண்ணத்தை வைத்துத் தறி அடித்தது அவள் மனம். ‘அவருக்கு ஏன் இவ்வளவு கல்நெஞ்சு? நான் கெஞ்சிக் கெஞ்சி அழைத்தும் அவர் புறக்கணிப்பது போல் நடந்துகொள்கிறாரே, ஏன்?’ என்று அலுத்துக் கொண்டது.
நேரம் ஓடியது.
அழகி ஆவலுடன் எதிர்நோக்கிய இளமாறன் வருவதாகத் தோன்றவில்லை. அவளுக்கு ஏக்கமும், துக்கமும், ஆத்திரமும் பொங்கி வந்தன. ஊஞ்சலிலிருந்து இறங்கி அங்குமிங்கும் நடந்தாள். சாரளத்தின் ஓரம் நின்று, ஆள் அரவமற்ற வீதிகளை வெறித்து நோக்கினாள். அனல் மூச்சு உயிர்த்தாள்.
“இளமாறன் என்னை ஏமாற்றத் துணிந்தான்போலும்! இது ஆபத்தான விளையாட்டு என்பதை அவன் உணர வில்லை போலும்! கோபம் கொண்டுவிட்டால் அமுதவல்லி விஷக் கன்னியாக மாறுவாள் என்பதை அவன் அறியான் போலும்!” என்று குமுறினாள் அவள்,
அவளுக்குத் தூக்கம் வரவேயில்லை. ஊஞ்சல் அருகில் எரிந்து கொண்டிருந்த ஒற்றை விளக்கையும் அவள் அணைக்கவில்லை.
‘இன்று தங்களை அவசியம் எதிர்பார்த்துக் காத்திருப்பேன். கண் உறங்கேன். விழி திறந்து வழி நோக்கிக் காத்திருக்கும் எனக்குத் துணையாக ஒரு விளக்கும் ஒளி சிமிட்டி நிற்கும்!’ என்று அவள் எழுதியிருந்தாள். அன்னக் கிளி எடுத்துச் சென்ற சேதியின் சுருக்கம் இதுதான்.
‘இளமாறன் வரமாட்டான்’ என்று சொன்னது ஒரு அவன் வரமாட்டானா?’ என ஏங்கிய உள்ளம், ‘வந்தாலும் வந்துவிடுவான்’ என்று தூண்டி அவள் தூக்கத்தையும் அமைதியையும் கெடுத்தது.
அமைதியற்ற மென்காற்றுபோல் அறையினுள் அப்படியும் இப்படியும் திரிந்தாள் அமுதவல்லி, ஒரு சாளரத்தின் அருகே நின்று அந்தப் பக்கத்திலிருந்த தோட்டத்தைக் கவனித்தாள்.
அப்பொழுது தேய்பிறை நிலவு உதயமாகிச் சிறிது நேரமாகியிருந்தது. அதன் மங்கல் ஒளி எங்கும் சோக மயமான வெளிச்சம் பூசியிருந்தது. தோட்டத்தின் மரங்களும், பூச்செடிகளும், கொடிகளும் விந்தைத் தோற்றங்கள் காட்டிக் கொண்டிருந்தன. அவற்றிடையே எழுந்த ஓர் அசைவு அழகியின் கவனத்தை ஈர்த்தது.
பதுங்கிப் பதுங்கி முன்னே வருவதும், பாய்ந்து பின்னோடுவதும், தயங்குவதுமாகப் பொழுது போக்கும் அது யாராக இருக்கக்கூடும்?
‘ஒரு வேளை இளமாறனாக இருக்குமோ?’ என்று பதை பதைத்தது அவள் மனம். ‘இராது. அவன் நேரே வாசலுக்கு அல்லவா வருவான்!’ என்று அதுவே அடித்துத் திருத்தியது.
அவளுக்கு ஒருவித அச்சம் ஏற்படத்தான் செய்தது. யாரோ ஓடி வருவதுபோல் ஓசை எழுந்ததாக அவள் எண்ணினாள். ‘அன்னக்கிளியைத் துணைக்கு அழைக்கலாமா?’ என்று நினைத்தாள்.
அதே வேளையில் கீழே கதவு தட்டப்படும் ஓசையும் தாள் திறக்கப்பட்ட ஒலியும் எழுந்தன. அழகியின் இதயம் ‘திக் திக்’ என்று அடித்துக்கொண்டது. அது இன்பத் துடிப்பா? பயத்தின் பதைபதைப்பா? அவளுக்கே தெரியாது. அவள் ஆவலுடன் விளக்கைத் தூண்டிவிட நகர்ந்தாள்
அவளை அப்படியே சிலையாக்கி விடுவது போன்ற உள்ளத்தை உலுக்கி, உதிரத்தை உறைய வைத்து. உடலைக் குளிர வைக்கும் ஒரு பயங்கர ஒலி வேதனையில் எழுந்த அலறல் அவள் காதில் வந்து விழுந்தது. செயல்திறம் இழந்து, வாய் பிளந்து நின்றுவிட்டாள் அலங்காரி.



