அன்னக்கிளி
வல்லிக்கண்ணன்

5. கலகலச் சிரிப்பொலி


    எட்டிப் பிடித்துக் குதறிக் கிழிக்க நீண்ட கோரக் கரத்தின் நகங்களிடையே சிக்காமல் தப்பி ஓடும் சிட்டுக் குருவி போல் பாய்ந்து நழுவிய அன்னக்கிளி எண்ணியிருக்க முடியாது, பூனையின் பிடிக்குத் தப்பி வந்து நாயின் பிடியிலே அகப்பட்டுக்கொள்ள நேரிடும் என்று.

    ஆனால் அதுதான் நிகழ்ந்தது.

    வெறிப்பிடித்த எயில் ஊர் ஆந்தையிடம் அகப்பட்டுக் கொள்ள விரும்பாது பாய்ந்து ஓடிப் படிக் கட்டுகளில் இறங்கினாள் அவள். கால் தவறிக் கீழே விழுந்து விடுவதும் சாத்தியமே என்று அஞ்சித் தயங்கவும் நேரமில்லை அவளுக்கு. ஆந்தை தொடர்கிறானோ என்று திரும்பிப் பார்க்கவும் மனமில்லை. கண் மூக்கு தெரியாமல் ஓடுவது என்பார்களே அப்படி விழுந்தடித்து ஓடிய பாவையின் கீழாடை விளிம்பு இசைகேடாக ஒரு காலில் சிக்கித் தடை செய்யவே அவள் ஒரு படியில் நிலைகுலைந்தாள். தடுக்கி விழுந்தாள்.

    தலைக்குப்புற விழுந்து மண்டையில் அடிபட்டிருக்க வேண்டியதுதான். ஆனால்,

    இருளோடு உள்ளே புகுந்த ஆந்தையை வழிமறிக்க முயன்று போராட நேர்ந்ததால் அன்னக்கிளி முதலிலேயே திறந்த கதவை அடைக்கவுமில்லை; தாளிடவுமில்லை. அவள் கோபத்தோடு, கொதிப்போடு ஆந்தையைத் தாக்க வேண்டும் எனும் வேகத்தோடு வாள் எடுத்து மேலே செல்வதில் முழுக் கவனத்தையும் செலுத்தி நின்றதால், திறந்த கதவு திறந்தே கிடந்தது. தோப்பின் பக்கமிருந்து ஓர் உருவம் மெதுவாக நகர்ந்து வந்து சுவரோரமாக ஒண்டி ஒதுங்கி முன்னேறி, திறந்த வாயிலின் வழியாகத் தாராளமாய் உட்புகுந்தது. உயரே நடக்கும் குழப்பத்தை உணர்ந்து தனக்குரிய வேளை வரும் என்று பெரிய கதவின் பின் செறிந்திருந்த கனத்த இருளில் மறைந்து நின்றது. இப்போது அதற்கும் ஒரு வேலை வந்தது!

    வேரற்ற மரம்போல் நிலைகுலைந்து விழுந்து கொண்டிருந்த அன்னக்கிளியை, வேகமாக முன்வந்து பாதுகாப்பாக ஏந்திக் கொண்டன இரண்டு கைகள்.

    தரையில் விழப் போகிறோம் என்று பதறிய யுவதி எவருடைய அணைப்பிலோ சிக்கிக்கொண்டதை உணர்ந் தாள். உண்மையான பயத்தால் அலறினாள்.

    கீழே விழாமல் அவளைத் தாங்கிக்கொண்டவன், தனது மார்போடு அன்னத்தைச் சேர்த்து பிடித்தபடி வெளியே ஓடினான். அவள் பயம் அதிகரிக்கவே அன்னம் இருளின் ஆழத்தைக் குத்தி ஊடுருவும் கூறிய கீச்சுக் குரலில் மீண்டும் கத்தினாள்.

    இருட்டில் பதுங்கியிருந்த இருள் மனத்தினன் அவள் வாயை முரட்டுத்தனமாக பொத்தினான். அவள் அவனுக்கு ஒரு சுமையாகத் தோன்றவில்லை என்பதை அவன் அலட்சியமாக அவளைப் பிடித்தபடி வேகமாக வெளியேறியது நிரூபித்தது. வெளியுலகை மூடி மறைத்திருந்த தேய்பிறையின் அசட்டு நிலவொளியில் அவன் அவள் முகத்தைப் பார்க்க முடிந்தது. ‘ஆகா,கிளிதானா? என்று உற்சாகத்தோடு முணுமுணுத்த அவன் அவளை மேலும் அதிக ஆர்வத்தோடு மார்பில் அணைத்துக்கொண்டு நடந்தான்.


    அன்னக்கிளி கைகளால் அவனை அறைந்தும் கால்களை உதைத்தும் அவனுக்குச் சங்கடம் விளைவித்தாள். மாடியில் திமுதிமுவென்ற ஓசை கேட்டது. யாரோ வருகிறார்கள் என்று எண்ணினான் அவன். சிறிது தொலைவில் காவற்காரர்களின் கூவல் எழுந்தது. அவன் தோப்பினுள் மறைந்து விடலாமா என்று தயங்கினான் ஒரு கணம். அப்பொழுது அவன் பார்வையில் அழகான வண்டி தென்பட்டது.

    மங்கிய நிலவொளியிலும் மிடுக்காகவும் வனப்போடும் தோற்றம் காட்டிய இரண்டு கரு நிறக் குதிரைகள் பூட்டிய அழகிய வண்டி அங்கு எப்பொழுது வந்தது, ஏன் நிற்கிறது. எவருடையது, யாருக்காகக் காத்திருக்கிறது என்ப தெதுவும் அவன் மனதில் உறுத்தவில்லை.

    தனக்கு அருமையான வாய்ப்பு என்றே கருதினான் அவன்.

    இறுக்கி மூடப் பெறாமலே அடைபட்டிருந்த கதவைத் திறந்தான் அவன். உள்ளே யாருமில்லை என்று உணர்ந்ததும், உவகையோடு தன் கையிலிருந்த அழகு மூட்டையை அவன் வண்டியினுள் விடுத்தான். கதவை இழுத்துச் சாத்திவிட்டு, வண்டியோட்டுவோனுக்கு உரிய இடத்தில் தாவி ஏறி அமர்ந்து, குதிரைகளை முடுக்கினான். கடகட வெனும் ஒளி எழுப்பிச் சக்கரங்கள் உருளலாயின.

    அதைக் கேட்டதும் தான் மாடியிலிருந்த எயில் ஊர் ஆந்தை அவசர அவசரமாகக் கீழே இறங்குவதற்குத் திரும்பினான். அப்பொழுதுதான் அமுதவல்லி வீசி எறிந்த விளக்கு அவன் கணுக் காலில் மோதி அவனது இயக்கத்துக்கு ஊறு செய்தது.

    குதிரைகள் ஓடும் சத்தம் எழவும், ஆந்தை கால் வேதனையையும் பொருட்படுத்தாமல் நகர முயன்றான். அமுதம் அவனைத் தாக்கலானாள். என்ன இருந்தாலும் அவள் மெல்லியல் வல்லிதானே! முரட்டுக் கரடி போன்ற மனிதனின் வெண்கலத் தலையை அவள் ஒரு கைவிளக்கு கொண்டு உடைத்துவிட முடியுமா என்ன? அவனும் எத்தனை நேரம் தான் அவள் செயலை வெறும் விளையாட்டு என்று பொறுத்திருப்பான்?

    பிடரியை சிலிர்த்துக்கொண்டு எழும் சிங்கம்போல் எழுந்தான் எயில் ஊர் ஆந்தை. ‘ஓகோ, சுண்டெலிகூட என் பலத்தைச் சோதிக்கத் துணிந்ததோ?” என உறுமிக் கொண்டு தன் வலக் கரத்தை நேராக வீசி உதறினான்.

    ‘அம்மா!’ என்று வேதனையோடு கத்தினாள் அமுதம். அந்த முரட்டுக் கை பட்ட இடம் – அவளது கண்ணாடிக் கன்னம் ஆகும். மலர் போன்ற மென்தன்மை பெற்றிருந்த கன்னம் சிவந்தது; வீங்கியது.

    இதோ, இதையும் என்னையும் மறக்காதே!’ என்று மற்றுமொரு அறை கொடுத்தான் தடியன்.

    கொடி போன்ற அம் மட மங்கை துடிதுடித்தாள்.

    படுக்கையில் விழுந்து அழு. விடிவதற்குள் எல்லாம் சரியாகிவிடும். நான் ஒழிந்தேன் என்று எண்ணாதே. மறுபடியும் வருவேன். ‘முத்தாரம் என்னிடம் வந்து சேருகிற வரை, பேய்போல் இந்த வீட்டையே நான் சுற்றித் திரிவேன்’ என்று எச்சரித்து விட்டு நகர்ந்தான் அவன்.

    உடல் வலி, மன வேதனை, ஏமாற்றம் முதலிய பல குழப்பங்களாலும் உளம் நொந்த அமுதவல்லி படுக்கையில் விழுந்து அழுது கிடந்தாள்.

    எயில் ஊர் ஆந்தை தனக்கு இயல்பான வேகத்தோடு நடக்க முடியாமல், மெதுவாகப் படிக்கட்டுகளைக் கடந்து நிலவொளி படிந்த இடத்தை அடைந்தபோது, வண்டி சிறிது தொலைவு சென்றுவிட்டதைக் கண்டான். அது அவன் கொண்டு வந்திருந்த வண்டிதான். அவன் எந்த அழகியை எடுத்துச் செல்ல ஆசைப்பட்டானோ, அவளையே தாங்கிச் செல்கிறது அது. ஆனால் திருட்டுத் தனமாகப் பதுங்கி நின்ற எவனோ அன்றோ அதை ஓட்டிச் செல்கிறான்!

    ஆந்தையின் வலுமிக்க கை, வெண்கலச் சிலையின் மண்டை போன்ற தலையைத் தடவிக்கொண்டது. இனி என்ன செய்வது? கண் முன்னாலேயே தனது உடைமையும், தான் ஆசைவைத்த அழகுப் பொருளும் பறிக்கப் பட்டுத் தன்னை விட்டு விலகிப் போவதைப் பார்த்தபடி நிற்க வேண்டிய செயலற்ற தன்மை தனக்கும் வந்துவிட் டதே என்று குமைந்தான் அவன். கொதித்தது உள்ளம்.

    ‘இதற்கெல்லாம் காரணம் இந்த அமுதவல்லிதான், அவளுக்கு நான் சரியான பாடம் கற்றுக்கொடுப்பேன்’ என்று கருவிக் கொண்டான் அக் கொடியவன்.

    வண்டியை இழுத்துச் செல்லும் குதிரைகளின் குளம் பொலி தவிர, வேறு குளம்போசை கனத்துக் கேட்டது. சந்தேகமில்லை. வேறு யாரோ குதிரை மீது வருகிறார்கள். ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் வருகிறார்கள். ஆகவே, அங்கு நிற்பது தவறு என்றுகருதி ஆந்தை தோப்பினுள் புகுந்தான்.

    அமுதவல்லியின் மாளிகை போன்ற பெரிய இல்லத்தைச் சேர்ந்த தோப்பு விசாலமானது. காடுபோல் மரங்களும், செடி கொடிகளும் மண்டி நிற்கும் இடம் அது. பலரக மரங்களும் செறிந்த பகுதியினுள் புகுந்து சென்றால் சவுக்கு மரங்களும், ஒங்கி வளர்ந்த மூங்கில்களும் அடர்ந்து பின்ற பகுதி உண்டு. அதனுள் எத்தனைபேர் பதுங்கியிருந்தாலும் வெளி உலகுக்குத் தெரியாது. யார் எவரைக் கொலை செய்து மூங்கில் புதருக்குள் வீசி எறிந்தாலும் தெரியாது.

    எயில் ஊர் ஆந்தை தற்காப்புக்காக அங்கே சென்று கொண்டிருந்த வேளையில், அவனால் பறிகொடுக்கப்பட்ட குதிரைவண்டி தீவிரமாக முன்னேற முடியாமல் திணறியது. வண்டியினுள் விடப்பட்ட அன்னக்கிளி சும்மா கிடப்பாளா என்ன?

    அவள் கைகளால் வண்டியின் பக்கங்களைத் தட்டினாள். கால்களால் தீம்தீம் என்று மிதித்து ஓசைப்படுத்தினாள். ‘ஐயோ கொலை! கொல்கிறானே?’ என்று அலறினாள்.

    இது ஆபத்து என உணர்ந்த அந்நியன், வண்டி ஓட் டும் பீடத்திலிருந்து உள்ளே திரும்பிப் பார்த்து, ‘ஏய் அன்னம்; ஏன் இப்படிக் கத்துகிறாய்? வாயை மூடிக்கொண்டு கிடக்கிறாயா? இல்லை, உன் கழுத்தை நெரித்துக் கொல்லட்டுமா?” என்று கர்ஜித்தான்.

    ‘ஏன் என்னை இப்படித் தூக்கிச் செல்கிறாய்? என்னை எங்கள் வீட்டில் கொண்டுபோய் விடு!’ என்றாள் அன்னக் கிளி.

    அவன் அவளுக்கு விளக்கம் கூற விரும்பாதவனாய், வண்டியை விரட்ட முயன்றான். அவளோ மீண்டும் கூச்சலிட்டு ஓசைப்படுத்தலானாள்.

    அந்தச் சமயத்தில்தான் இரண்டு குதிரை வீரர்கள் அங்கு வந்தார்கள். என்ன இது? என்று அதட்டினான் ஒரு வீரன்.

    வண்டியோட்டி வாய் திறவாது வண்டியைச் செலுத்த முற்படவும், ஒரு வீரன் வண்டிக்கு முன்னே தனது குதிரையைச் செலுத்தி வழிமறித்தான். ‘திருமலை அவனை நன்றாகக் கவனி!’ என்றான். அவன் திருமலைக்கொழுந்துவின் நண்பன் மருது பாண்டியனே ஆவான்.

    திருமலை, வண்டியோட்டியின் முதுகில் தனது கைப் பிரம்பினால் இரண்டு அடிகள் கொடுத்தான். அவன் பிரம்பு உற்சாகத்தோடு துள்ளித் துள்ளி விளையாடத் தொடங்கவும். அந்நியன் ‘ஐயோ…அம்மா…அப்பா’ என்று துடிதுடித்தான்.

    ‘அதுவே தக்க தருணம்’ என அறிந்த அன்னக்கிளி, வண்டியின் கதவைச் சிறிதே திறந்துகொண்டு, தலையை வெளியே நீட்டி எட்டிப் பார்த்தாள். தன்னைக் காப்பாற்ற வந்த குதிரை வீரனைக் கண்டதும், ‘ஆ!’ என்று உவகை மேலீட்டால் கூவினாள்.

    அதனால் கவனம் கலையப் பெற்ற திருமலைக்கொழுந்து அவள் பக்கம் தலை திருப்பியதும் ‘ஓகோ!’ என்று மகிழ்வுடன் கூறி, உற்சாகத்தால் உதடுகளைக் குவித்துச் சீட்டி அடித்தான்.

    பால் நிலவில் வெண்மையாய் பளிச்சிட்டது சந்திர வட்ட முகம். அங்கே கருவண்டுகள் போன்ற இருவிழிகள் குறுகுறுத்தன. செவ்வாம்பல் நிற இதழ்களில் சிறுகதை முகிழ்த்திருந்தது. அந்த முகத்தை, அவ்விழிகளை, புன்னகைக்கும் அந்த உதடுகளை அவன் எப்படி மறக்க முடியும்? கொற்கைப்பட்டினத்தின் வீதிவழியே, அந்தி நேரத்தில் குதிரை மீது உலா வந்தபோது, பலகணியின் பின்னே பவுர்ணமி நிலவுபோல் தோன்றி அவன் உள்ளத்தில் நிலைபெற்று விட்டது அல்லவா அந்த முகம்! கண் வழிப் புகுந்து, உள்ளத்தில் நிறைந்து, பின் நீங்காது இடர் செய்து கொண்டிருக்கும் அமுதமும் நஞ்சும் போன்ற பார்வையைச் சிந்தும் சுடர் விழிகள் அல்லவா அவை! அவற்றை அவன் எவ்விதம் மறத்தல் கூடும்?

    “நீயா” என்றான் அவன்.

    அன்னக்கிளி ஆனந்தத்தின் உருவமாகி வண்டியிலிருந்து வெளியே குதித்தாள்.

    மருது பாண்டியன் கலகலவெனச் சிரித்தான். அவன் ஏன் சிரிக்கிறான் என்று அறிய மற்றிருவரும் அத்திசை நேரக்கினர்.

    திருமலையின் கவனம் வேறுபக்கம் திரும்பிவிட்டதை உணர்ந்த வண்டியோட்டி ‘தப்பினோம் பிழைத்தோம்’ என்று பதறியடித்துக் கீழே குதித்து ஓடலானான். அவன் முதுகில் தனது நீண்ட வாளின் பின்புறப் பிடியினால் ஒரு அறை வைத்து வழியனுப்பினான் மருது. வீரன்போல் வந்த வீணன் முதுகைக் கைகளால் தடவ முயன்று, உடம்பை நெளித்துக்கொண்டு ஓடியது வேடிக்கைக் காட்சியாக அமைந்தது.

    அதைக்கண்டு திருமலையும் சிரித்தான். அன்னக்கிளியின் கிண்கிணி நகையொலியும் அத்துடன் இணைந்து புரண்டது.

    இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

    மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

    சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

    இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *