அன்னக்கிளி
வல்லிக்கண்ணன்

14. திகைக்க வைத்த உண்மைகள்

    திருமாறனின் திடீர் வருகையும், முத்துமாலை பற்றிய அவரது கோரிக்கையும், எச்சரிக்கையும், அமுதவல்லியின் உள்ளத்தில் குழப்பம் ஏற்படுத்தியிருந்தன. சுடு சட்டியில் விழுந்த உப்புக்கல் போல் சட படவென்று பொரிந்து தள்ளிவிட்டு அவர் அங்கிருந்து அகன்ற பிறகு வெகு நேரம் வரை அலங்காரி கவலை உருக்கொண்டவளாய் ஊஞ்சலில் சாய்ந்து கிடந்தாள்.

    திடீரென்று அந்த முத்துமாலை மற்றவர்கள் எண்ணத்தில் இடம்பெற்று உறுத்தத் தொடங்கியிருப்பது வியப்புக் குரியதுதான். இரவிலே எயில் ஊர் ஆந்தை அம்மாலைக்காகப் போராடினான். இப்பொழுது திருமாறன் வந்து மிரட்டிவிட்டுப் போகிறார். ஆகவே, முத்துமாலைக்கு ஏதோ தேவை ஏற்பட்டிருக்கவேண்டும்’ என்று அவள் எண்ணினாள்.

    அந்த முத்துமாலையை அவள் அடைவதற்கு எவ்வளவு பாடுபட வேண்டியிருந்தது. எவ்வளவுதூரம் துணியவேண் டிருந்தது. அம் மாலைமீது அவளுக்கு ஏற்பட்ட ஆசையினால் அவள் பாபங்கள் பலவும் செய்யத் துணிந்தாளே! ஆசை மிகுதியோடு அடையப்பெற்ற முத்தாரத்தை அவள் அகம் குளிர அணிந்துகொள்வதற்கு அஞ்சினாள். ஓரிரு தடவைகள் வெளிப்படையாக அணிந்து மினுக்கியபோது பிறர் இயல்பாகவும் ஆச்சரியத்துடனும் அவளை நோக்கினார்கள். அவர்கள் தன்னைக் குற்றம் சாட்டும் பார்வை எறிவதாகவே அவள் மனம் குறுகுறுத்தது. முத்தாரம் தன்னுடைய உடைமையாகி விட்டதனால் திருப்தி கொண்டு அமுதவல்லி அதைத் தன் பெட்டிக்குள்ளேயே வைத்து விட்டாள்.

    இப்பொழுது ஆந்தையும், திருமாறனும் அவளுடைய ஆவலைத் தூண்டிவிட்டதால், அமுதவல்லி அந்த முத்து மாலையை எடுத்துத் தனது அழகிய கழுத்தில் அரைந்து கண்ணாடி முன் நின்று கண்டுகளிக்க வேண்டும் என்று ஆசைகொண்டாள்.

    வசீகரம் பொருந்திய ஆடை அணிந்து, நன்றாகச் சிங்காரித்துக்கொண்டு, முத்து மாலையை எடுத்தாள். அதைக் கையில் பிடித்து அப்படியும் இப்படியும் அசைத் தும், தூக்கிப் பற்றியும் தூரத்தில் வைத்தும், கண்ணருகில் கொண்டுவந்தும் அழகு பார்த்தாள். புதிதாகக் கிடைத்த ஒரு பொம்மையை வைத்து அழகு பார்த்துக் குதூகலிக்கும் சிறு பிள்ளை மாதிரியே அவளும் நடந்துகொண்டாள்.

    அவள் அதைக் கழுத்தில் அணிந்துகொள்ளப் போகின்ற தருணத்திலே, “அம்மா, அம்மா!” என்று பதற் றத்தோடு அழைத்துக்கொண்டு அன்னக்கிளி அங்கு வந்தாள். அமுதவல்லியின் கையிலிருந்த முத்துமாலையைக் கண்டு திகைத்து நின்றாள்.

    ‘அழகாக இருக்கிறது அம்மா. ஆந்தை இதைத்தான் கேட்டானா?’ என்று அவள் விசாரிக்கவும், தலைவியின் முகம் மலர்ச்சியைத் துறந்து கடுகடுப்பு ஏற்றது.

    அவ்வேளையில் அன்னக்கிளி அங்கே அப்படிப் புகுந்ததை அவள் விரும்பவில்லை. அன்னம் ஆர்வத்தோடு முத்துமாலையைப் பற்றி வினவியது அவளுக்குப் பிடிக்க வில்லை.

    ‘இப்போது எங்கே தீப்பற்றி எரிகிறது? ஏன் இப்படிக் கூவிக்கொண்டு ஓடிவந்தாய்?’ என்று அவள் வெடுவெடுத்தாள்

    முத்தாரம் பற்றிய வியப்பை ஒடுக்கிவிட்டு அன்னக் கிளி பரபரப்புடன் பேசலானாள்: ‘அம்மா! அந்த மரங்களுக்கூடே புகுந்து, ஒரு மரத்தடியில் சிறு மூட்டையைக் கொண்டுபோய் வைப்பது யார் என்று தெரிந்துவிட்டது. உடனே நீங்கள் கீழே வந்தால் அவளைக் கையும் களவுமாகப் பிடித்துவிடலாம்…

    ‘அவளா?’ என்று திகைப்புடன் கேட்டாள் அமுதம்.

    ‘ஆம் அம்மா. நம் இல்லத்தில் ரொம்ப காலமாக வேலை பார்த்து வருகிற கிழவி பொன்னம்மாதான்!

    ‘என்ன பொன்னம்மாவா?’ என்று பதறினாள் பெரியவள்.

    இப்பொழுது மூட்டையை எடுத்துக்கொண்டு அவள் அங்கே போயிருக்கிறாள்.

    அன்னத்தின் பேச்சைக் கேட்டபடியே, சாளரத்தின் வழியாக எட்டிப் பார்த்தாள் அமுதவல்லி. மரத்தடியில் சிறு மூட்டையை வைத்துவிட்டு நிமிர்ந்த உருவம் அவள் பார்வையில் பட்டது. உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற பரபரப்பு அவளைப் பற்றிக்கொண்டது. கையிலிருந்த மாலையைக் கண்ணாடி அருகே வைத்துவிட்டு அவள் அவசரம் அவசரமாகக் கீழே சென்றாள்.

    அன்னக்கிளி அறையின் பக்கம் திரும்பிப் பார்த்தாள். முத்துமாலை அவள் கவனத்தைக் கவர்ந்தது. ஒரு நெடு மூச்செறிந்து அதைக் கவனித்துவிட்டு அவளும் தலைவியைப் பின்தொடர்ந்தாள்.

    சிறிய மூட்டையை உரிய இடத்தில் வைத்துவிட்டுத் திரும்பிய, முக்காடிட்ட உருவத்தை அமுதவல்லி எதிர் கொண்டு நிறுத்திப், போர்வையைப் பற்றி இழுத்தாள். கிழவி பொன்னம்மாதான் அது.

    தலைவியைக் கண்டு நடுநடுங்கிப் போனாள் கிழவி. தான் இவ்வாறு தலைவியினால் கண்டுபிடிக்கப்படலாம் என்று அக்கிழவி எண்ணியவளே அல்ல. அமுதவல்லியின் திடீர்த் தோற்றமும் செய்கையும் அவளுக்கு அதிர்ச்சி தந்தன.

    ‘இதென்ன நாடகம்?’ என்று கடுகடுப்பாக வினவினாள் அமுதவல்லி.

    அன்னக்கிளியும் இன்னும் பலரும் இதற்குள் அங்கு வந்து சூழ்ந்துவிட்டனர்.

    ‘இங்கிருந்து என்ன எடுத்துச் சென்றாய்? ஏன் மறைந்து ஒளிந்து பதுக்கி வைத்தாய்? அங்கு வந்து அதை எடுத்துச் செல்வது யார்?” என்று கேள்விக் கணைகளை வீசினாள் தலைவி.

    ‘நான் பெரிய குற்றம் எதுவும் செய்யவில்லை அம்மா’ என்று அழுது புலம்பினாள் கிழவி.

    ‘பெரிய குற்றமோ, சிறிய குற்றமோ -அதை நான் அல்லவா முடிவுகட்ட வேண்டும்?’ என்று மொழிந்தாள் அமுதம்.

    அழுது கெஞ்சி நேரம் போக்கிய கிழவி, உண்மையை சொல்லாமல் தீராது என்ற நெருக்கடி எழுந்ததும், மனம் இல்லாமலே ஒப்புக்கொண்டாள்.

    ‘நான் முடியவே முடியாது என்று அடம் பிடித்தேன். இப்படிச் செய்யக்கூடாது, அது தப்பு என்று எவ்வளவோ எடுத்துச் சொன்னேன். பாவிமகன் கேட்டானா?…”

    “கதை அளக்காமல், ஒப்பாரி வைக்காமல், உள்ளதைச் சீக்கிரம் சொல்லு?” என்று அமுதவல்லி அடிக்கடி கட்டளையிடவேண்டியது அவசியமாயிற்று.

    கிழவியின் மகன்தான் தோப்பில் பதுங்கியிருந்தான். அவனுக்கு வேளை தவறாது உணவு எடுத்துச் சென்று, மரத்தடியில் வைத்துவிட்டுத் திரும்புவதைக் கிழவி வழக்கமாகக் கொண்டாள். சில நாட்களாகத்தான் இது நடைபெறுகிறது – கிழவியின் பேச்சிலிருந்து அமுதவல்லியும் மற்றவர்களும் புரிந்துகொள்ள முடிந்தது இது

    “அவன் ஏன் இப்படித் திருட்டுத்தனம் பயிலவேண்டும்?” என்று தலைவி கேட்டாள்.

    கிழவி வாய் திறவாது நிற்கவும் அவளைக் காவலாட்களிடம் ஒப்படைத்து, கழுமரத்தில் கட்டிவைத்துப் புளிய மிலாறு கொண்டு அறை கொடுக்கும்படி கட்டளையிடப் போவதாகத் தலைவி பயமுறுத்தினாள். பொன்னம்மாள் உடனே அவள் காலில் விழுந்து ஊளையிடுவதுபோல் அழுகைக் குரல் எழுப்பினாள்.

    ‘பின்னே என்ன? நன்றிகெட்ட முறையில் செயல் புரிகிறவளை எப்படி மன்னிப்பது? உள்ளதைச் சொன்னால் உன்னைச் சும்மா விட்டுவிடுவேன்’ என்றாள் அமுதம்.

    கிழவி நடுங்கியவாறே எழுந்து நின்று அவளைக் கை யெடுத்துக் கும்பிட்டாள். ‘அம்மா! என்னை மன்னித்து விடுங்கள். என் மகன் என்ற பாசம் என்னை ஆட்டி வைக்கிறது. அவன் பசியால் வாடி வதங்கக் கூடாதே என்ற தாய்மை உணர்ச்சியால்தான் நான் அவனுக்கு அடிக்கடி உணவு கொண்டு கொடுக்கிறேன்; அவனை இங்கிருந்து ஓடிப் போகும்படியும் நான் அடிக்கடி சொல்லி வருகிறேன். வீண் கதையெல்லாம் ஏன்? அவன் என்ன குற்றம் செய்துவிட்டு இப்படித் தலை மறைவாக வசிக்கிறான்?’

    கிழவி கண்களைத் துடைத்துக்கொண்டாள். விம்மினாள். ‘அவன் இதுவரை குற்றம் எதுவும் செய்யவில்லை அம்மா’ என்று முனங்கினாள்.

    ‘பின்னே?’ அமுதவல்லிக்குச் சினம் மூண்டெழிந்தது என்பதை வெடித்து உருண்ட அந்த ஒற்றைச் சொல்லே எடுத்துக் காட்டியது.

    கிழவி மீது அவள் முகத்தைப் பரிதாபமாக நோக்கினாள். குழி விழுந்த கண்களில், ஒளி இழந்து கொண்டிருக்கும் சுடர்கள்போல், ஒடுங்கிக் கிடந்த விழிகள் அங்கு நின்றோர் அனைவரையும் தொட்டன; பின் அன்னக்கிளி படிந்தன. அவளை விட்டுப் பார்வையை எடுக்காமலே கிழவி சொன்னாள் ‘எல்லாம் இந்தப் பெண்ணாலேதான்! என்று.

    ‘எல்லோரும் திகைத்தனர். அன்னம் திடுக்கிட்டாள். இதென்ன அதிசயம்?’ என்று கேட்பவள்போல் அமுதவல்லி அவளை ஏறெடுத்துப் பார்த்தாள்.

    ‘அவனுக்கு அன்னக்கிளி பேரில் ஆசை; கொள்ளை ஆசை,தன்னைக் கல்யாணம் செய்துகொள்ளும்படி அவன் அவளிடம் ஒரு தடவை கேட்டான். இவள் மறுத்ததோடு அவனை அவமதித்து விரட்டினாள். அது முதல் அவன் இவளை எப்படியும் அடைந்து இவளுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும்’ என்று உறுதி பூண்டிருக்கிறான்.

    நேற்று இரவில் தோப்பில் மரத்தின் பின்னால் பதுங்கி நின்று மெதுமெதுவாக வீடு நோக்கி வந்தவன் உன் மக னாகத்தான் இருக்கவேண்டும். கதவின் பின்னால் இருளில் ஒண்டிக்கிடந்து ஆந்தையிடமிருந்து தப்பி ஓடிவந்த அன்னத்தைத் தூக்கிச் சென்றவனும் அவனாகத்தான் இருக்கவேண்டும்…

    ‘இருக்கலாம் அம்மா. அது எனக்குத் தெரியாது…’

    “இது பற்றி நீ ஏன் முன்பே என்னிடம் அறிவிக்க வில்லை?” என்று சீற்றம் காட்டினாள் தலைவி.

    ‘என் மகன் தண்டனைக்கு ஆளாகக் கூடாதே என்ற கவலைதான் அம்மா?’ என்று தீனக் குரலில் தெரிவித்தாள் தாய்.

    அமுதவல்லி அவளை எச்சரித்து வைத்தாள். அவளைக் கண்காணிக்கும்படி தகுந்த நபர்களை ஏற்பாடு செய்தாள். இருட்டும் வேளையில் அவளுக்குப் பதிலாக வேறு ஆள் மூடி முக்காடு இட்டுக்கொண்டு மூட்டையோடு செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டாள். அதற்கு முன்னரே மூன்று காவலாட்கள் பிறர் சந்தேகிக்காத வகையில் சென்று தக்க இடங்களில் பதுங்கி நிற்கவேண்டும்; அவன் மூட்டையை எடுக்க வரும்பொழுது அவனைப் பிடித்துக் கொள்ள வேண்டும்; அவனுடைய கைகளையும் கால்களை யும் கட்டி அவனைத் தூக்கி வந்து தனக்கு முன் நிறுத்த வேண்டும் என்று திட்டம் செய்தாள்.

    இவற்றைக் கவனித்து முடித்ததும் அமுதவல்லி அவசரம் அவசரமாகத் தனது அறைக்குச் சென்றாள். அவள் பார்வை கண்ணாடியருகே சென்று மோதியது.

    அவள் உள்ளத்தில் ஒரு பதைப்பு உண்டாயிற்று. ‘ஆங்!’ என்று கத்திய அமுதம் தன் கைகளால் கழுத்தைத் தடவிக் கொண்டாள்.

    இல்லைதான்; நாலுவடம் முத்தாரத்தைக் காணவில்லைதான்!

    இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

    மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

    சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

    இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *