அன்னக்கிளி
வல்லிக்கண்ணன்

8. அன்னத்துக்கு வந்த இன்னல்

    திருமாறனைக் கண்டு விவரம் தெரிந்து வா என்று அமுதவல்லி கட்டளையிட்டதும் அன்னக்கிளி மறுத்துரைத்ததற்குக் காரணம் இருந்தது. அதை அவன் தலைவியிடம் அறிவிக்கத் தயங்கியதற்கும் காரணம் இல்லாமலில்லை.

    உற்சாகமின்றித் தலைவியின் கட்டளையை நிறைவேற்றச் சென்று கொண்டிருந்த அன்னக்கிளி அதைப்பற்றி நினைத்த படியே தான் நடந்தாள்,

    முந்திய தினம் அவன் தலைவியின் கடிதத்தைத் திருமாறனிடம் சேர்ப்பிக்கச் சென்றபோது வெகு நேரம் வரை காத்து நிற்க நேர்ந்தது. அவரிடம் தனிமையில் அதைத் தர வேண்டும் என்று தலைவி உத்தரவிட்டிருந்தாளே! திருமாறன் இதர அலுவல்களை யெல்லாம் கவனித்து முடித்துவிட்டு அவள் பக்கம் கண்களைத் திருப்பினார். உடனே அக் கண்களில் பிறந்த தனி ஒளி அன்னத்தைக் கூசி நாணுறச் செய்தது.

    திருமாறன் பெரிய மனிதர்; செல்வர்; நாட்டில் உள்ள பெரியவர்களும் செல்வர்களும் போற்றும் நிலையில் இருப்பவர் என்றெல்லாம் கேள்விப்பட்டிருந்தாள் அன்னம். அவரிடம் அவளுங்கு ஒரு ரகமான பயமும் மதிப்பும் ஏற்பட்டிருந்தன. அவர் அவளை அவ்விதம் நோக்கியது அவள் மனசுக்கு வேதனை அளித்தது. அவள் தலையைத் தாழ்த்தியபடி கை நீட்டிக் கடிதத்தைக் கொடுத்தாள்.

    அளவுக்கு அதிகமான வெட்கம் அழகான பெண்ணுக்குக்கூட அழகாக இருப்பதில்லை; உள்ள அழகையும் அது கெடுத்துவிடுகிறது’ என்று சொல்லி அவர் குறும்புச்சிரிப்பு சிரித்தார்.

    அவர் பேச்சும் சிரிப்பும் அவள் காதைக் குத்தி உள்ளத்தில் தைத்தன. அவள் உடலில் சிறு நடுக்கம் பரவியது.

    ‘நான் வந்து நேரமாயிற்று. அம்மா மறுமொழிக்காகக் காத்திருப்பார்கள். உங்கள் கடிதம் ஏதாவது இருந்தால் …’ என்று முணமுணத்தாள் அன்னம்.

    “உன் குரல் இனிமையாக இருக்கிறது. தெளிவாகப் பேசினால் என்ன குறைந்துவிடுமாம்? உன் பேர் என்னவோ?” என்றார் அவர்.

    பேரைச் சொல்வதா, கூடாதா என்று தயங்கினாள் அவள். உரிய பதிலைக் கூறாதிருந்தால் அது மரியாதைக் குறைவாகத் தோன்றலாம் எனக் கருதித் தன் பெயரைச் சொன்னாள்.

    “இதைச் சொல்ல நீ ஏன் பயப்பட வேண்டும்?” என்று கேட்டபடி திருமாறன் அவள் நீட்டிய கையையே பற்றி அவளை அருகாமையில் இழுத்தார்.

    அவள் திடுக்கிட்டுப் பதறி ‘ஐயோ! ஐயோ!’ என்று கூவி விட்டாள்.

    ‘கடிதத்தைப் பிடித்துக்கொண்டு, அழகான கையை விட்டுவிட்ட பெரிய மனிதர் சிரிப்பெனும் பெயரில் கனைப்பொலி எழுப்பினார். நீ என்ன இவ்வளவு பயந்தாங் கொள்ளியாக இருக்கிறாய்? சிறுபிள்ளை மாதிரி அஞ்சி நடுங்குகிறாயே!’ என்றார்.

    ‘அன்னக்கிளி, காற்றில் அலைபட்ட சிறு தளிர்போல் நடுங்கிக் கொண்டிருந்தாள்.நான் போகவேண்டும்…நான் போகிறேன்…’ என்று முனகினாள்.

    ‘போகாமல் என்னோடு இருந்துவிடு கண்ணே என்றா நான் சொல்கிறேன்? சிறிது நேரம் பேசிவிட்டுத்தான் போயேன்?’ என்று திருமாறன் சொன்ன விதமும், அவர் பார்த்த தினுசும் அன்னக்கிளிக்குப் பிடிக்கவில்லை; பதை பதைப்பையும் உண்டாக்கின.

    அவள் திரும்பி ஓடுவதற்கு வழிபார்த்தாள். அவருடைய பதிலை எடுத்துச் செல்லாமல் சும்மா போனால் தலைவி கோபிப்பாளே என்ற பயம் வேறு.

    திருமாறன் அவளை விழுங்கி விடுவதுபோல் பார்த்துக் கொண்டிருந்தார். ‘நான் எவ்வளவோ மலர்களைக் கண்டு களித்திருக்கிறேன். உன்னைப்போன்ற மிக இனிய மலரை நான் இதுவரை கண்டதில்லை’ என்று உளறத் தொடங்கினார்.

    அன்னக்கிளியின் நல்ல காலம் ஏதோ முக்கிய அலுவலின் மீது இரண்டு பேர் வந்து அவரைக்காண அனுமதி கோருகிறார்கள் என்ற தகவலோடு பணியாள் வந்து நின்றான். ‘இதோ வருகிறேன்’ என்று வேலைக்காரனை அனுப்பிவிட்டு அவர் அன்னத்தை நோக்கி முறுவல் பூத்தார்.

    ‘அன்னம்! நீ என் பசி தீர்க்கும் அன்னமாக மாறுவாயோ என்னவோ’ என்று வேடிக்கையாகப் பேசுவது போல் குறிப்பிட்டு, தனது கருத்தைப் பார்வையால் வெளியிட்டார் அவர்.

    “அம்மாவிடம் என்ன சொல்ல வேண்டும்?” என்று அவசரப்பட்டாள் அன்னம்.

    ‘வருவதாகச் சொல் கிளியே’ என்றார் திருமாறன். வந்தால் இந்தக் கிளியையும் பார்க்கலாம் அல்லவா? என்று மென்குரலில் சொல்லி மெதுவாக அவள் கன்னத்தில் விரலால் தட்டிவிட்டு வெளியேறினார்.

    நிம்மதியாய் மூச்சு உயிர்க்க அன்னக்கிளி வீடு நோக்கில் திரும்புவதில் ஆர்வம் காட்டினாள். ஒரு அபாயத்திலிருந்து இப்போதைக்குத் தப்பிவிட்டோம் என்ற உணர்வு அவள் உள்ளத்தில் துளும்பியது.

    திருமாறன் இப்படிப்பட்டவர் என்று எனக்குத் தெரியாதே என்று அவள் மனம் பேசிற்று. அவர் கௌரவ மிக்கவர்; நல்லவர் என்றே அவள் எண்ணியிருந்தாள். அவருக்கு ஏறக்குறைய நாற்பது வயதிருக்கும். ஆயினும் வயதை எடுத்துக்காட்டாத கட்டுடலும் வனப்புத் தோற்றமும் பெற்றிருந்தார். அவரைக் கண்டு மோகிப்பவர்கள் இருக்கலரம். ஆனால் அன்னக்கிளி அவரை வெறுத்தாள்.

    மறுபடியும் அவர் முன்போய்த் தனியாக நிற்கவேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டதே என்று வருத்தப்பட்டாள் அவள். தனது வாழ்க்கையில் எதிர்பாராத சுழல்கள் சுழியிடத் துவங்கிவிட்டதை அவளால் எண்ணாதிருக்க இயலவில்லை.திருமாறன் அவளிடம் விளையாடத் துணிந்த அதே நாளையில்தான் அவள் குதிரைமீது வந்த சுந்தர குமாரனைக் காண நேர்ந்தது. அன்று இரவில்தான் எயில் ஊர் ஆந்தையோடு அவள் போராட வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது! அவனிடமிருந்து தப்பி ஓடியபோது அவள் எதிர்பார்த்திராத வகையில் ஒருவன் அவளைத் தூக்கிச் செல்ல முயன்றான். காலம் உதவிபுரிந்து குதிரை வீரனைக் கொண்டுவந்து சேர்த்தது…

    திருமலையின் நினைவு அன்னக்கிளியின் உள்ளத்தில் இனிமை கூட்டியது. அவனது வீரத் திருவுருவமும், அழகு முகமும், அருள் ஒழுகும் விழிகளும் அவள் கண்முன் தோன்றித் தோன்றி அவளுக்கு உவகையூட்டின. அவன் நினைப்பில் லயித்தபடி நடந்த அன்னத்துக்கு அளவிலா மகிழ்ச்சிதரும் வகையில் எதிரே குதிரை மீது திருமலையே வந்து கொண்டிருந்தான்.

    அவன் அவ்வேளையில் வந்தது — அதுவும் அருகே தோழன் இன்றித் தனியாக வந்தது – அவளுடைய ஆனந்தத்தை அதிகப்படுத்தியது. அவள் அகமும், முகமும் மலர, படபடக்கும் விழிகளை அவன் மீது பதித்து, சற்றே விலகி நின்றாள்.

    திருமலையும் அவளைக் கண்டதால் எழுந்த மகிழ்ச்சியோடு குதிரையை விட்டுக் கீழே குதித்து அருகடைந்தான். “உன்னை இவ்வேளையில் இந்த இடத்தில் காண முடியும் என்று நான் எண்ணவே இல்லை அன்னம்!” என்றான்.

    ‘நானும் உங்களை எதிர்பார்க்கவில்லை’ என்று கூறி, அவள் ஆசையோடு அவன் முகத்தையே பார்த்து நின்றாள். அவன் விசாரிக்கவும், அவள் கடமை மேல் செல்வது பற்றி எடுத்துரைத்தாள். தன் உள்ளத்தை உறுத்திய இதர விஷயங்களை அவள் வெளியிடவேயில்லை.

    அவளுக்கு அவனோடு என்ன பேசுவது என்றே புரிய வில்லை. அவனுக்கும் அவளிடம் பேச்சு கொடுத்துப் பேச்சு பெறவேண்டும் என்று தோன்றவில்லை. இருவரும் விழியோடு விழி சேர்த்து, முறுவல் கூட்டி நிற்பதிலேயே எவ்வளவோ விஷயங்களை உணர முடிந்தது. ஆகவே, அவர்களிடையே பேச்சுக்குப் பொருள் இல்லை எனும் நிலை நீடித்தது.

    திடீரென்று இருவரும் சிரித்தார்கள்.

    ‘இப்பொழுது ஏன் சிரித்தாய், அன்னம்?’ என்று கேட்டான் திருமலை.

    “நீங்கள் ஏன் சிரித்தீர்களாம்?” என்றாள் அவள்.

    ‘இப்படி நாம் தெருவில் பேசாமல் நின்றுகொண்டிருந்தால் என்ன அர்த்தம்? அதை நினைத்துத்தான் சிரித்தேன்’ என்று அவன் கூறினான்.

    ‘நானும் அதற்காகத்தான் சிரித்தேன். நம் இருவர் மனசும் ஒன்றுபோல் இருக்கிறதே!’ என்றாள் அன்னக்கிளி.

    “எனக்கு நேரம் ஆகிவிட்டது. போனவள் இன்னும் வரவில்லையே என்று அமுதவல்லிப் பிராட்டியார் இப் பொழுது கூட எரிச்சலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்’ என்று கூறியபடி அவள் நடக்கலானாள். திரும்பித் திரும்பிப் பார்த்தவாறே நடந்து சென்றாள் அவள்.

    அவள் மறையும்வரை அவள் பக்கமே கண் எறிந்து நின்ற திருமலைக்கொழுந்து, பிறகு குதிரை மீதேறிக் கொண்டு தனது வழியே செல்லலானான்.

    ‘அவனைத் தேடிவந்த மருது பாண்டியன் நீ எங்கே ஊரு சுற்றப் போய்விட்டாய்? நாம் வந்த பணியை நீ முற்றிலும் மறந்துவிட்டாய் போலும்!’ என்று கடிந்து கொண்டான்.

    ‘நான் ஒன்றும் மறக்கவில்லை’ என்றான் திருமலை.

    நினைவில் கொண்டிருந்தால் அல்லவா மறக்க முடியும் என்கிறாயாக்கும்? அதுவும் சரிதான். உன் நினைவுதான் கருவண்டுகள் போன்ற கண்களை உடைய ஒருத்திமீது லயித்துக் கிடக்கிறதே’ என்று நண்பன் கெண்டை பண்ணினான்.

    திருமலை மென்னகையை இதழ்களில் விளையாட விட்டானே தவிர, வேறு பேச்சு எதுவும் பேசவில்லை. அவன் அருகில் வந்து மருது பாண்டியன் மென்குரலில் முண முணத்தான். அவன் சொன்ன செய்தி முக்கியமானது என்பதைத் திருமலையின் பரபரப்பு விளம்பரப்படுத்தியது; இருவரும் ஒத்துப் பேசுக்கொண்டு கிளம்பியதுபோல, குதிரைகளை முடுக்கினார்கள். பொங்கி எழுந்த புழுதிப் படலம் அவர்களுக்குத் திரையிட்டது.

    மருது வந்ததையும், இரண்டு பேரும் வேகமாகச் சென்றதையும் நின்று கவனிக்காதவளாய் அன்னக்கிளி திருமாறன் இல்லம் நோக்கிச் சென்றாள்.

    ‘அங்கே அவர் இல்லை’ என்ற செய்தி கிடைத்தது அவளுக்கு. வேறு விவரம் எதுவும் கிட்டவில்லை. விரைவில் வந்துவிடுவார் என்று கேள்வியுற்றதால், அவர் வருகிற வரை காத்திருப்பதே நல்லது என்று அவள் தீர்மானித்தாள். ஒரே இடத்தில் தங்கியிருக்கப் பிடிக்காமல் அவள் அவ்வீட்டைச் சுற்றி வருவதில் உற்சாகம் கொண்டாள்.

    அப்படி அவள் வருகிறபோது குதிரைகளும் வண்டிகளும் நிற்கும் இடத்தை அடைந்துவிட்டாள். ‘திருமாறன் குதிரைகள்மீது அதிக ஆசை உடையவர் போலும்! எத்தனை குதிரைகள் வைத்திருக்கிறார்! எவ்வளவு அழகான குதிரைகள்! வண்டிகளில்தான் எத்தனை ரகம்!” என்று அவள் மனம் வியப்புற்றது.

    வண்டிகளை ஒவ்வொன்றாக ஆராய்ந்து வந்த அவள் பார்வை ஒரு வண்டியின் மீது நிலைபெற்றது. ‘இதுதான் இரவில் வந்தது’ என்று அவள் உறுதியாக அறியமுடிந்தது. இது வழியில் நிறுத்தப்பட்டு பிறகு காணாமல் போய்விட்ட தென்று காலையில் எண்ணினோமே, இங்கே எப்படி வந்தது? யாரும் இதை மீண்டும் இங்கேயே கொண்டு வந்து விட்டிருப்பார்களோ தெரியவில்லையே என்ற திகைப்பு அவளுக்கு ஏற்பட்டது.

    அவள் அங்குமிங்கும் பார்த்தபடி அடியெடுத்து வைத்தாள். ஓர் அறையின் கதவு திறந்து கிடந்தது. உள்ளிருந்து கலகலவெனும் ஓசை வந்துகொண்டிருந்தது. இயல்பான உணர்வு தூண்டவும் அங்கே என்ன நடக்கிறது என்று அறியும் அவாவோடு அவள் உள்ளே எட்டிப் பார்த்தாள். அவளால் அவளுடைய கண்களையே நம்ப முடியவில்லை.

    அங்கு முத்துக்கள் குவியல் குவியலாகக் கிடந்தன. பலதரப்பட்ட முத்துக்கள் தரவாரியாகப் பிரித்து ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தன. வேறு பல மணிகளும் மதிப்புயர்ந்த கல் நகைகளும் இறைந்து கிடந்தன. ஆள் யாரும் அவள் பார்வையில் படவில்லை. அந்த அறைக்கும் உள் அறையாக வேறு இடம் இருக்குமோ என்று அன்னம் உள்ளே கொஞ்சம் நகர்ந்து எட்டிப்பார்த்தாள்.

    ‘ஆகா, ஓடிச்சென்ற கிளி தானாக வந்து கூண்டில் சிக்கிக்கொண்டது. பளா பளா!?’ என்று ஒரு முரட்டுக் குரல் காதில் விழுந்தது. அவள் பதற்றத்துடன் திரும்பி நோக்கினாள்.

    அவள் வருவதற்கு வழி அமைத்துத் தந்த வாசல் இப்போது இறுக மூடிக் காணப்பட்டது. வெளியே நின்று கனத்த குரலெழுப்பி யாரோ சிரிப்பதும் செவிட்டில் அறைந்ததுபோல் கேட்டது. அந்தச் சிரிப்பு, அந்தப் பேச்சொலி, அவை யாருடையவை என உணர்ந்த அன்னம் விலவிலத்துப்போனாள்.

    இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

    மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

    சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

    இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *