
அன்னக்கிளி
வல்லிக்கண்ணன்
3. நள்ளிரவில் ஒரு ஆந்தை!
தேய்பிறை நிலவின் மங்கிய வெள்ளொளி போர்வை போல் மூடிக்கிடந்த சூழ்நிலையில், இரவின் அச்சமும் ஆதிக்கமுமே தலைதூக்கி நின்ற வேளையில், உள்ளத்தைக் குத்தி உதிரத்தை உறையச்செய்வது போன்ற அலறல் எழுந்ததும், மாடியில் நின்ற அமுதவல்லி திடுக்கிட்டாள் அவள் என்ன, யாராக இருப்பினும் திடுக்குறாமல் இருக்க இயலாதே அந்நேரத்தில், கிரீச்சிட்ட அந்த ஒலியைக் கேட்டு!
இவ் வேளையில் கதவைத் தட்டியது யாராக இருக்கும்? திருமாறனாகவே இருக்கலாமோ? … தோட்டத்திலே மரங்களின் மறைப்பிலே பதுங்கி வந்தவன் யாவன்? அவனே கதவைத் தட்டியிருக்கலாமோ! அவ்வாறாயின் அலறல் எழுந்தது ஏனோ? அஞ்சி நடுங்கிக் கூச்சலிட்டது பெண் குரல் போல் அல்லவோ ஒலித்தது? அன்னக்கிளிக்குத் தீங்கு எதுவும் ஏற்பட்டிருக்குமோ…?
அழகி அமுதவல்லியின் நெஞ்சு திக் திக்கென்றடித்தது. தலையணையின் கீழ் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சிறிய குத்தீட்டியை முன்னெச்சரிக்கையோடு கையில் பற்றிக்கொண்டு, அவள் விளக்கைச் சிறிது தூண்டி விட்டாள். கையெட்டும் தூரத்திலிருந்த சிறு விளக்கில் ஒளி ஏற்றிக்கொண்டு படி இறங்கிக் கீழே செல்லலாமா; அது அறிவுடைமையாகுமா என்று தயங்கினாள் ஒரு கனம்.
அவளுடைய ஆலோசனைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், அவளுக்கு வீண்வேலை வைக்கத் திருவுளம் கொள்ளாதவர் போலவும் நடந்துகொண்டனர். கீழே கதவைத் தட்டியவர் என்பதை மேலேறி வந்த காலடி ஓசை தடதட வென்று எடுத்தோதியது.
‘நீ போகக்கூடாது. நீ மேலே போகக்கூடாது. வெளியே போ!’ என்று அன்னக்கிளி கத்துவதும் அலட்சியமாக ஒருவன் சிரித்ததும் செவிட்டில் அறைவது போல் வந்து தாக்கின; அமுதவல்லி மீண்டும் திடுக்குற்றாள்.
அன்பனே வருகின்றான் போலும் என்று காலடி ஓசை கேட்டுச் சற்றே களிக்கை கொண்ட அமுதவல்லி இப்போது கலக்கமுற்றாள். வருவது யார்? வருவது யாரே யாயினும் தனக்கு நன்மை பயக்க முடியாதவனாகவே இருத்தல்வேண்டும். இல்லையெனில் அன்னக்கிளி அவனைக் கண்டு அஞ்சி அலறுவானேன்? இப்பொழுது அவனை மேலே ஏறவொட்டாமல் தடுக்கவும் துணிவானேன்?
அன்னக்கிளி துணிச்சலோடு போராடியிருக்க வேண்டும்; படியேறி அலங்காரியின் அறைக்குள் புக முயல்கிற வனைத்தடுத்து நிறுத்துவதற்காக அவள் அவனது கையைப் பற்றியோ காலைப் பிடித்து இழுத்தோ இடைஞ்சல் செய்திருக்கவேண்டும்; அவன் அவளை மெல்லியல் வல்லி என்றும் பாராது முரட்டுத்தனமாகத் தள்ளியிருக்க வேண்டும் என்றும் படிக்கட்டு ஓசைகள் கதை கூறின.
‘ஊரே கண்ணுறங்கும் இந் நள்ளிரவு வேளையில் எந்தக்கயவன் வந்து இங்கு இப்படிச் சமரிடுவது? அன்னம் ஏன் கதவைத் திறந்தாள்? மற்ற பணிப் பெண்கள் என்ன சவ உறக்கமா உறங்கிக் கிடக்கிறார்கள்?’ என்று இயல்பான சீற்றம் வெடித்தது அவள் உள்ளத்தில். அவள் எண்ணத்தின் தவற்றை உடனடியாகவே ஒருமனம் சுட்டிக் காட்டியது. ‘நீதானே இளமாறனை எதிர்நோக்கியதால், எவர் வரினும் தாள் திறந்து, வருவோரை யார் எனக் கேளாது உயரே அனுப்பு என்று அன்னத்துக்குக் கட்டளையிட்டாய்? பணிப் பெண்களை ஓசைகள் எட்டாத் தனி இடத்தில் ஒடுங்கிக் கிடக்க ஏற்பாடு செய்தது நீ தானே..
தனது பேதமையை எண்ணிப் பெருமூச்சு உயிர்த்தாள் அமுதவல்லி. அவளது மனச் சுமையை அதிகப்படுத்தும் தன்மையிலே கண்முன் உயர்ந்து நின்றது ஒரு உருவம். ஒற்றை விளக்கின் மங்கலான ஒளியிலே திடுமென வந்து நின்ற தோற்றம் பிரமையோ பேயுருவோ அல்ல என்று திடப்படுத்திக்கொள்வதற்கு அவளுக்கு மிக்க நெஞ்சுரம் தேவைப்படத்தான் செய்தது.
காட்டிலிருந்து தப்பி வந்த கரடியோ என மலைக்கச் செய்யும் தோற்றம். குருபமான முகமும், குழிக்குள் இடுங்கிய கண்களில் மனசின் கடுமையைப் பிரதிபலிக்கும் ஒரு மினுமினுப்பும், எதிரே நிற்பவரைத் துன்புறுத்துவதில் தான் பெறும் இன்பத்தைக் காட்டும் முகபாவமும் பெற்று நின்றது ஒரு மனிதனே. அகன்ற தோள்களும், பரந்த மார்பும், கல்போன்ற சதைத் திரட்சிகளைப்பெற்ற கைகளும் கால்களும் அவனை வலியன் என்று கூறின; வனப்புள்ளவன் என்று காட்டவில்லை. அவன் உரத்த குரலில் சிரித்தான். ஐந்தாறு வெண்கலப் பாத்திரங்களை உருட்டி விட்டாற்போலே ஒலி கலகலத்துப் புரண்டது. அவன் பற்கள் விகாரமாய்ப் பளிச்சிட்டன.
‘பிராட்டியார் என்னை இவ்வேளையில் இங்கு எதிர் பார்த்திருக்கவில்லை அல்லவா?’ என்று கேட்டான் அவன். அந்த உருவத்துக்கு ஏற்ற குரலாகத்தான் அமைந்திருந்தது அது.
விழியில் கனல் எழ உறுத்து நோக்க முயன்றாள் அமுதவல்லி. எனினும், உள்ளத்தின் பதை பதைப்பு ஒடுங்கவில்லை. ‘போ வெளியே! இங்கு உனக்கு என்ன வேலை?’ என்று சீறினாள் அவள். அது உணர்ச்சி மிகை யால் கிரீச்சிடும் குரலாய் நீண்டது.
அவன் அலட்சியமாகச் சிரித்தான். ‘வேலை இருப்பதனால் தான் நான் இங்கே வரவேண்டியது அவசியமாயிற்று, அமுதம். நீ என்னைக்கண்டு பேசவே மறுத்து வந்தாய். எப்படியும் உன்னைக் கண்டே தீருவது என்று உறுதி கொண்டேன். இன்றிரவில் நீ ஆசையோடு விழித்திருப்பாய்; வழியும் எளிதில் திறந்துகொள்ளும் என்பதும் எனக்குத் தெரிந்தது. நீ ஆவலோடு எதிர் நோக்கும் திருமாறன் வரமாட்டான் என்பதும் எனக்குத் தெரியும்…”
அமுதவல்லியின் அச்சம் உண்மையிலேயே பன் மடங்காயிற்று ‘இதெல்லாம் உனக்கு எப்படித்தெரிந்தது?’ என்று அவள் பதறினாள்.
‘எப்படியோ தெரிந்தது!’ என்று தன் இருகைகளையும் உவகையோடு தேய்த்துக்கொண்டு தடித்த விகாரமான உதடுகளை மேலும் விகாரமாக நெளித்துச் சுளித்து, முகத்தைக் கோரமாக்கி நின்றான் அவன்.
‘திருமாறனை வழியில் தாக்கி…….’ என்று அமுதவல்லி கேட்கவும், அவன் கடகட வென்று சிரித்தான்.
அமுதவல்லிப் பிராட்டியாருக்குத் திருமாறனையும் புரிந்து கொள்ளத் தெரியாது. இந்த எயில் ஊர் ஆந்தையையும் நன்றாகத் தெரியாது. அவ்வளவுதான்.
‘திருமாறன் ஏதேனும் சூழ்ச்சி செய்து கொண்டிருப்பான், அல்லது ஆழ்துயில் பயின்று கொண்டிருப்பான்…’
‘எயில் ஊர் ஆந்தை பெயருக்கேற்ப இராக்காடு சுற்றி அலைத்து இங்கு வந்து முழிப்பதோடு கூச்சலிட்டுக் கொண்டும் நிற்கிறது. அப்படித்தானே? உனக்கு ஆந்தையெனும் பெயர் சரியானதே’ என்றாள் அமுதவல்லி. தனது பயத்தைச் சிறிதளவு மறைப்பதற்காகவே அவள் வீரத்தனப் பேச்சுப் பேச முயன்றாள்.
ஆந்தை தனது தனிரகச் சிரிப்பைச் சிதறினான் மீண்டும்.
வெளியே போய்க் கூச்சலிடு… நான் உறங்க வேண்டும் என்றாள் அவள். அமுதத்தின் கைகள் குத்தீட்டியை விளையாட்டாக உருட்டிக் கொண்டிருப்பது போல் உருள விடும் அலுவலில் ஈடுபட்டிருந்தன. அவள் கள்ள நோக்கு அவ்வப்போது அவன் மீது பாய்ந்தது.
அவன் அவள் கருத்தை உணராமலில்லை.ஆயினும் உணரும் திறனற்றவன் போலவே நின்றான் ஆந்தை. அவன் ஏன் பிறருக்கு அஞ்சவேண்டும்? அதிலும் காற்றில் ஆடிடும் கொடிபோல் நிற்கும் ஓர் அபலைப் பெண்ணுக்கா அவன் பயப்படப் போகிறான்?
‘பிராட்டியார் சுகமாகத் தூங்கலாம். அமுதவல்லியின் உறக்கத்தைக் கெடுக்க வேண்டும் என்ற நோக்கம் எனக்கு கடுகளவேனும் கிடையாது…’
மரியாதையோடு பேசுவது போல் தொனித்தாலும் அவன் பேச்சில் கிண்டல் தான் மிகுந்திருந்தது. அதனால் அவள் முகம் கடுகடுப்புற்றது. ‘முதலில் நீ இங்கிருந்து வெளியே போ!’ என்று மறுபடியும் உத்தரவிட்டாள்.
ஆந்தையின் சிரிப்பு அவனது புதரென அடர்ந்த அரிவாள் மீசைக்குள் புகுந்து விளையாடுவது போல் தோற்றம் காட்டியது. எனக்கும் வேறு பணிகள் உள்ளன
‘அம்மையே! நீ அன்புடன் எனக்குச் சேரவேண்டியதை என்னிடம் தந்துவிட்டால் நான் ஏன் இங்கு நிற்கப் போகிறேன்?’ என்றான் அவன்.
“உனக்குச் சேரவேண்டியதா?” அமுதவல்லியின் கேள்வியிலும், பார்வையிலும் வியப்பு தொத்தி நின்றது.
‘நீ மறந்துவிடுவாய் என்று எனக்குத் தெரியும். நினைவுறுத்தி அதைப் பெற்றுச் செல்வதற்காகவே நான் இங்கு வந்திருக்கிறேன். இன்னும் இரண்டொரு நாட்களில் கொற்கைத் துறைமுகத்திலிருந்து கிளம்பும் மரக்கலத்தில் இடம் பிடித்துக்கொண்டு செல்வேன். திரைகடலோடும் ஆசை எனக்கும் வந்துவிட்டது. சாவகம், புட்பகம் அல்லது யவனம் என்று எங்காவது போய்விடுவேன்…’
நல்ல முடிவுதான். திரைகடலோடித் திரவியம் தேடுவதற்கு முன் பயிற்சியாக இங்கு அகப்பட்டதைச் சுருட்டிச் செல்லும் எண்ணத்தோடு வந்தாயாக்கும்? என்று கேட்டாள் அலங்காரி.
‘அகப்பட்டது எதுவும் எனக்கு வேண்டாம். நல்ல முத்துக்களாலான நாலு வடம் முத்தாரம் எனக்குச் சேர வேண்டியது. அது என் கைக்கு வந்தாக வேண்டும்!”
அமுதம் திடுக்கிட்டாள் ‘முத்தாரமா? கனவு கண்டு உளறுகிறாயா ஆந்தை?’ என்றாள்.
ஆந்தையின் விழிகள் அவளை உறுத்து நோக்கின. ‘எயில் ஊர் ஆந்தை உளறுவதில்லை. விளையாட விரும்பு வதுமில்லை. அமுதவல்லிப் பிராட்டியின் அண்ணன் சடையவர்ம பாண்டியனின் அரசமாதேவி கருவுற்று இருந்த போது அவர்கள் திருக்கழுத்தை அணி செய்த முத்து மாலையை நீ மறந்துவிட முடியுமா? அது உன் கண்ணையும் கருத்தையும் கவர்ந்ததும் அதை அடைய நீ திட்டம் தீட்டியதும் வெளியுலகம் அறியாதுதான். ஆனால் ஆந்தை அறிவான்.
‘நீ என்னவோ கதை அளக்கிறாய்…’ என்று இழுத்தாள் அமுதவல்லி. ஆயினும் அவள் குரலிலே மிடுக்கு இல்லை. பார்வையிலும் ஒளிக்கனலில்லை.
ஆந்தையின் சிரிப்புத்தான் மீண்டும் எடுப்பாக ஒலித்தது. ‘ஆந்தையை ஏமாற்ற எண்ணுகிறவர்கள் தலை தூக்க முடியாது. ஆமாம். மன்னனிடம் சில உண்மைகளை நான் சொல்ல நேரிடும் அம்மணி! அரசமாதேவி பெற்றெடுத்த திருமகன் தானாகச் சாகவில்லை; கொலையுண்டான் என்பதையும் தேவியாரே குளிர்ச்சன்னியால் மரணம் எய்தவில்லை; தன்னலக்காரரின் நஞ்சினால்தான் மடிந்தார் என்பதையும் சடையவர்மன் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும்.
ஆந்தை பயங்கரமான ஒற்றைச் சிரிப்பை உதிர்த்து, வேகமாகத் துள்ளி துள்ளிக் குதித்தான். அமுதவல்லியின் கையிலிருந்து சுழன்று பாய்ந்து வந்த குத்தீட்டி தனக்குரிய குறியை இழந்துவிட்டு, சுவரில் மோதித் தரைமீது டக் கென்று விழுந்தது.
ஆந்தையை இவ்வளவு எளிதில் தீர்த்துக்கட்டிவிட முடியுமா என்று கனைத்தான் அவன்.
அமுதவல்லி தன்மீது பதித்திருந்த பார்வையை அப்பால் ஓட்டியதையும் அதில் புது ஒளி சுடரிட்டதையும் அந்த மங்கிய ஒளியிலேகூட ஆந்தையின் கூரிய கண்கள் கண்டு கொண்டன. அவன் திரும்பிப் பார்த்தான். வாசல் நடையில் கண்ட காட்சி அவனுக்கு வேடிக்கை நிகழ்ச்சியாகத் தோன்றியது போலும். அவனது கடூரமான முகத்தில் சிரிப்பின் கோடுகள் பிதுங்கி நெளிந்தன.



