
அன்னக்கிளி
வல்லிக்கண்ணன்
12. இருளில் பதுங்கும் உருவம்
அழகி அமுதவல்லி ஆத்திரம் மூட்டப்பெற்ற காளி தேவிபோல் காட்சி அளித்தாள். அவள் கண்கள் நெருப்புப் பந்துகள் போல் ஜொலித்தன. கொல்லன் உலை மூச்சு விடுவதுபோல் அனல் மூச்சு அவள் நாசியிலிருந்து வந்து கொண்டிருந்தது.
‘நம்மை ஏமாற்றத் துணிந்த திருமாறன் வீடு தேடி வந்து அவமதிக்கவும் செய்தானே! முத்தாரம் அல்லவா வேண்டுமாம் இவனுக்கு, யாருக்குத்தான் அது வேண்டாம்? ஆந்தை என்கிற தடியன் கூடத்தான் அதற்கு ஆசைப்படுகிறான். திடீரென்று இவர்களுக்கெல்லாம் எனது முத்து மாலை மீதுதானா ஆசை விழவேண்டும்?’ அவள் உளம் குமைந்தாள்.
அவளுக்கு அன்னக்கிளி மீது வீணாகக் கோபம் ஏற்பட்டது. ‘ஆந்தையிடம் அவளே அக்கடிதத்தைக் காட்டியிருப்பாள் என்று மாறன் சொல்லுவதும் உண்மையாக இருக்குமோ?’ என்று ஒரு சிறு சந்தேகம் அவள் மனசில் ஊசலிட்டது.
இருக்கமுடியாது. அப்படி இருக்கவே இருக்காது. மாறன் அவள்மேல் வீண்பழி சுமத்துகிறான். அன்னம் ஆந்தைக்கு வேண்டியவளாக இருந்தால், அவனோடு ஏன் சண்டையிடப் போகிறாள்? அவனிடமிருந்து அவள் ஏன் தப்பி ஓடவேண்டும்?’ என்று அமுதமே சமாதானமும் கூறிக்கொண்டாள்.
எங்கே அவள். அன்னக்கிளி இன்னும் வரவில்லையே? போயிருப்பாள்?’ என்றும் எண்ணினாள் திருமாறனின் போக்கை நினைக்க நினைக்க அவளுக்கு உள்ளம் பற்றி எறிவதுபோலிருந்தது. ‘அவன் வருவான். மீண்டும் வருவானே. அவனிடமிருந்து தப்புவது எப்படி? என்று தவித்தாள். அன்பு காட்டி, குடிப்பதற்கு ஏதாவது கொடுப்பதுபோல் நஞ்சு கலந்து கொடுத்து விடலாமா என்றுகூட அவள் மனம் திட்டமிட்டது.
முத்துமாலை அவளிடம் சுலபமாகவா சிக்கியது? பிறர் கொடுத்துப் பெற்றதா அது? அவளாகத் துணிந்து அடைந்தது அல்லவா? ஆந்தை மிரட்டினானே, அது உயர்வு நவிற்சி அல்லதான்.
சடையவர்ம பாண்டியனின் அரசமாதேவியின் சங்குக் கழுத்தை அழகுபடுத்திய நல்ல முத்துமாலை நாலு வட ஆரம் அவனது தங்கை அமுதவல்லியின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. அதைத் தருவதற்கு அரசி ஒப்பவில்லை. அதுபோல் செய்து கொடுப்பதாக அண்ணன் வாக்களித்தான். அந்த முத்தாரத்தில் சேர்க்கப்பட்ட முத்துக்களைப்போன்ற ஒரே அளவும் உயர்வும் அழகும் பொருந்திய சிறப்பான முத்துக்கள் கிடைப்பது சிரமம் என்று தோன்றியது. அரசமாதேவி கருவுற்றிருந்தாள். ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். சடையவர்மனுக்குப் பிறகு தன்னுடைய மகன் ஆட்சிப் பொறுப்பை ஏற்க முடியும் என்று ஆசைப் பயிர் வளர்த்து வந்த அமுதவல்லி வயிறெரிந்தாள். பொறாமை கொண்டாள். ஒரு நாள் பால் குடிக்கும் போது சிறு குழந்தையின் நாசியில் அது சென்று, புரைக்கேறி, மூச்சுத் திணறி குழந்தை செத்துவிட்டதாகச் செய்தி பரவியது. குழந்தையைச் சாகடித்த ‘பெருமை’ அமுதவல்லிக்கே உரியது என்கிற ரகசியம் ஒரு சிலருக்கே தெரிய வந்தது. சில தினங்களிலேயே அரசமா தேவியும் மனம் உளைந்து, சன்னி கண்டு செத்துப்போனாள். அவ்வாறு அவளுக்கு மரணபாக்கியம் கிட்டும்படி செய்தவள் அமுதமேயாவாள் என்று சிலர் ஐயுற்றார்கள். அதை நிலை நிறுத்துவதற்கு ஆதாரங்கள் கிடைக்கவில்லை. அரசமா தேவியின் கழுத்திலிருந்த முத்தாரம் அமுதவல்லியிடம் சேர்ந்தது. குழந்தையையும் மனைவியையும் பறிகொடுத்த துக்கத்தினால் பித்துற்றுச் செயல் திறம் இழந்து காணப்பட்ட சடையவர்மன் பிற எதிலும் கவனம் செலுத்தவில்லை.அவன் வெகு காலம் வாழ்ந்திருக்கவுமில்லை. அவனுடைய மரணம் அமுதவல்லியின் மகனை அரசு கட்டிலில் அமர்த்தி விடவுமில்லை. காரணம் – சடையவர்மன் இறப்பதற்குச் சில மாதங்களுக்கு முந்தியே, அமுதவல்லியின் மகன் கொடிய நோய்வாய்ப்பட்டு இறந்துபோனான். இயற்கை அளித்த தண்டனை போலும் அது!
இதை எண்ணியபோது அமுதவல்லியின் நெஞ்சு வெடித்துவிடும்போல் துயர் மூச்சு பொங்கி எழுந்தது. அழ வேண்டும் எனும் உணர்ச்சி கூட ஏற்பட்டது. அவள் பார்வை தோப்பின் பக்கமுள்ள சாளரத்தின் வழியாக வெளியே படர்ந்து நிலை குலைத்தி நின்றது.
தோப்பில், வெயிலும் நிழலும் கோலமிட்டிருந்த இருண்ட பகுதியில், வெள்ளைவெளேர் என்று அசைவது தான் என்ன? முக்காடிட்டு, உடலையும் நன்கு போர்த்துக் கொண்டு நடமாடுகிற உருவம் யாருடையதாக இருக்கக் கூடும்? முன்பு அவள் பார்த்தபோது நிகழ்ந்தது போலவே, இப்பொழுதும் அது நடந்து வந்து, ஓர் இடத்தில் நிற்கிறது. வானுற ஓங்கி நெடிதுயர்ந்து வளர்ந்த பெரிய மரத்தின் கீழ், மறைவான ஒரு இடத்தில் குனிந்து சிறு மூட்டை ஒன்றை எடுத்து, போர்வைக்குள் பதுக்கிக்கொண்டு, அது முன்போலவே அடர்ந்த தோப்புக்குள் ஓடி மறைகிறதே. இதன் பொருள் என்ன? அந்த உருவம் எடுத்துச் செல்லும் மூட்டையில் என்னதான் இருக்கும்? அதை யார் அங்கே எதற்காக கொண்டுவந்து வைக்கிறார்கள்?
மௌனமாக ஒரு நாடகத்தை – குறித்த ஒரு திட்டத்திற்கு ஏற்ப இயங்கும் பாவைக் கூத்தின் ஒரு காட்சியை- மீண்டும் காண நேர்ந்த அமுதவல்லி எதையும் விளங்கிக் கொள்ள முடியாதவளாய், அத் திசையையே வெறித்து நோக்கிக்கொண்டிருந்தாள். அக் காட்சியின் புதுமையால், அது தந்த அதிர்ச்சியால், திகைப்பினால், அவள் தனது கவலைகளையும் குழப்பங்களையும் அந்தக் கணத்துக்கு மறந்து விட்டாள்.
அதனால்,அன்னக்கிளி அங்கு வந்ததையும் சாளரத்தினூடே நோக்கியதையும், தலைவி உணர்ச்சிக் குழப்பத்தோடு பார்த்த திசையில் வெறுமையே இருப்பதைக் கண்டு திகைத்ததையும் அமுதவல்லி அறிந்தாளில்லை.
‘அங்கே என்ன அம்மா பார்க்கிறீர்கள்? ஏன் இப்படிக் குழப்பமுற்று நிற்கிறீர்கள்?’ என்று அன்னக்கிளி கேள்வி கேட்கவும், அவள் திடுக்கிட்டாள். அங்கு மரங்களினூடே யாரோ பதுங்கிப் பதுங்கி மறைந்தது போலிருந்தது. காலையிலும் பார்த்தேன். இப்பொழுதும் அந்த உருவம் தோன்றி மறைந்தது…’ என்றாள்.
“பேயாக இருக்குமோ?” என்று முணுமுணுத்தாள் பேதை அன்னம்.
அந் நேரத்திய மன நிலையிலும் அமுதவல்லிக்குச் சிரிப்பு வந்தது. வேதனைச் சிரிப்பு உகுத்தாள். ‘பேயாவது பூதமாவது! மனிதர்களே பேயர்களாக மாறி வருகிற காலத்தில், பேய் என்று தனியாக ஒன்று திரியவா போகிறது” என்றாள்.
‘இல்லை.குறிப்பிட்ட வேளைக்கு வருவது, வந்தது போல் மறைவது’ என்றால் ….
‘அன்னம், இதை முற்றும் ஆராயத்தான் வேண்டும். அது சரி, உனக்கு ஏன் இவ்வளவு நாழிகை?’
‘நான் போன வேளையில் திருமாறன் வீட்டில் இல்லை யம்மா – எவ்வளவு நேரமானாலும் காத்திருந்து கடிதத்தை அவர் கையில் தரவேண்டும் என்று நீங்கள் கட்டளை யிட்டிருந்ததால்..’ என அன்னம் விளக்கமாகக் கூறத் தொடங்கவும் பெரியவள் பொறுமையிழந்து போதும் போதும்!” என்று சிடுசிடுத்தாள்.
சட்டென்று, அன்னம் எதிர்பாராத சமயத்தில் அவள் எதிர் பார்க்க முடியாத கேள்வியைத் தூக்கி எறிந்தாள் அமுதம். ‘ஏய் அன்னம்,என் கடிதத்தை நீ ஆந்தையிடம் வேறு காட்டினாயா?’
அன்னம் பதறிவிட்டாள். ‘நான் ஏன் அம்மா ஆந்தை யிடம் காட்டப் போகிறேன்? அந்த ஆந்தை திருமாறன் வீட்டிலேயே குடியிருக்கிறது என்பதை நான் இன்றுதான் அறியமுடிந்தது….. இப்பொழுது அமுதவல்லி திகைப்படைந்தாள். இது என்ன கதை?’ என்றாள்.
‘பொய் இல்லை அம்மா. நானாகவே சொல்லத் தொடங்கினேன். நீங்கள் கட்டளையிட்டதனால்தான் பேச்சை நிறுத்தினேன்’ என்ற முன்னுரையோடு ஆரம்பித்து, அவள் அறிந்ததை – அனுபவித்ததை – எடுத்துச் சொன்னாள்.
ஓகோ! ஆந்தை, மாறனின் கையாள்தான் என்று சொல்லு. அவன் முயற்சி பலிக்காமல் போனதால்தான், திருமாறனே இங்கு வந்திருக்கிறார். இல்லையெனில் அந்த மகாப் பெரியவர் நம் வீடு தேடி வரவாபோகிறார்? என்று கசப்புடன் மொழிந்தாள் அமுதம்.
பொழுது ஊர்ந்து சென்றது. மாலை தேய்ந்து அந்திக் கருக்கலும் ஆயிற்று.
அமுதவல்லியும் அன்னக்கிளியம் பலகணிகளின் பின் மறைந்து தோப்பின் பக்கமே பார்வை பதித்து நின்றனர்.
நேரம் மிக மெதுவாய் ஊர்ந்ததாகத் தோன்றியது. இருள், உலகைக் கவியும் கருந்திரை என இறங்கிக் கொண்டிருந்தது. பொருள்களும் மரங்களும் கட்டிடங் களும் அதனதன் தனித் தன்மையை இழந்து மொத்தக் கருமையாய் மாறிவிடவில்லை இன்னும்.
‘அதோ! அதோ’ என்றாள் அமுதவல்லி. அவள் சுட்டிய திக்கிலே, தோப்பில் மரங்களினூடே, ஒரு பெரிய மரத்தின் கீழே- குள்ளமாய்ப் பருமனாய், ஆடி அசையும் நடையுடைய ஓர் உருவம் சிறு மூட்டை ஒன்றை வைத்து விட்டு கின்றது. பிறகு திருப்பிப் பாராமலே அமுதவல்லி யின் வீட்டை நோக்கி வந்தது.
உடனேயே வேறோர் உருவம்- ‘இதுதான் நான் காலை யிலும், நண்பகளிலும் பார்த்தது’ என்று தலைவி சொன்னாள் – சிறிது உயரமாய், ஒல்லியாய்த் தோன்றியது. வெள்ளை ஆடையால் மூடி முக்காடிட்டுக்கொண்டு வந்தது; மூட்டையை எடுத்து மறைத்தபடி தோப்பினுள் சென்று மறைந்து விட்டது.
‘பயமாக இருக்கிறது அம்மா!’ என்றாள் அன்னம்.
‘என்னடி பயம்? இரண்டும் மனித உருவங்கள்தான். இவர்கள் யார் என்று நாளைக்கே நான் கண்டுபிடிக்காமல் விட்டுவிடுவேனா என்ன?’ என்று உறுதி தொனிக்கும் குரலில் சொன்னாள் அமுதவல்லி.



