
அன்னக்கிளி
வல்லிக்கண்ணன்
11. சிங்கத்தை ஏமாற்றிய சிறுநரி
திருமலைக்கொழுந்தும் மருது பாண்டியனும் திருமாறன் வருகைக்காக வெகுநேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. கம்பீரமான வெண் புரவிகள் பூட்டிய அழகான வண்டி வேகமாக வருவதைக் கண்டதுமே ‘திருமாறன் வந்து விட்டார்’ என்று உணர்ந்தார்கள் அவர்கள்.
அமுதவல்லியிடம் பேசியதால், உள்ளக் கனிவும் ஆனந்தமும் பெறுவதற்கு மாறாக, எரிச்சலும் ஏமாற்றமுமே கொண்டிருந்த திருமாறனின் முகம் கடுகடுவென்று காணப் பட்டது. ‘நாம் வாய்திறந்து கேட்க வேண்டியதுதான்; அவள் முத்துமாலையை எடுத்து தங்கத் தட்டிலே வைத்து முக மலர்ச்சியுடன் நம் பக்கம் நீட்டுவாள்’ என்று மனப் பால் குடித்திருந்தார் அவர். ‘அமுதவல்லி நம்மிடம் ஆசை வைத்திருப்பதாகத் தெரிகிறது. இதைக்கூடவா செய்ய மாட்டாள் அவள்?’ என்றது அவர் மனம்.
அவரிடம் ஆசை கொண்டிருந்த அழகி அமுதவல்லியின் அழைப்பை ஏற்று, அவள் இல்லம் சேர்ந்து, அவளை மகிழ்வித்து, அவளது கருத்தறிந்து பேச்சோடு பேச்சாக அந்த முத்தாரம் பற்றிய கோரிக்கையை அவர் விடுத்திருந்தால், அலங்காரி அதை அவருக்குக் கொடுத்திருந்தாலும் கொடுத்திருக்கக்கூடும். அவரோ அவளை அலட்சியப்படுத்துவதுபோல் நடந்துகொண்டார்.
அமுதவல்லியைப்பற்றி அவர் நன்கு அறிந்திருந்தார். வாழ்க்கையைச் சொர்க்க போகமாக மாற்ற முயலுகின்ற சாசவல்லி சைகை காட்டிவிட்டால், நாம் போயாக வேண்டுமா என்ன? அப்படிச் செய்வது தனது தன்மானத்துக்கு இழுக்கு ஆகும் என்று அவர் எண்ணினார்.
மேலும் திருமாறனுக்கு அமுதவல்லியிடம் அன்போ அனுதாபமோ கிடையாது. எளிதில் கிட்டக்கூடிய ஒரு பொருளிடம் அவ்வளவாக லயிப்பு ஏற்படாமல் போவதும் இயல்பே யன்றோ? எட்டாத பொருளை எப்படியும் அடைந்தே ஆகவேண்டும் என்ற ஆசை அடக்க முடியாததாக வளருவதும் இயற்கைதானே?
அமுதவல்லி அழகியே யானாலும், அனுபவமும் வயதும் அதிகம் பெற்றவள்.வனப்பும் வசீகரமும் நிறைந்த எழில் மலரே ஆயினும், பலமுறை நுகரப் பெற்றுக் கறை பட்ட மணமும் சுவையும் கொண்ட இன்கனியே ஆனாலும், பலரால் எச்சிற்படுத்தப்பட்ட கனிதானே?
திருமாறனின் மனம் அன்னக்கிளியைச் சுற்றி வந்தது. அவளிடம் வெறியூட்டும் காந்தக் கவர்ச்சி இல்லைதான். அவளது கருநீலக் கண்கள் காமத்தைக் கவிதைப் பார்வையாய் வெளிப்படுத்தவில்லைதான். ஆயினும், அன்னம் வாடாத நண்மலர். தொடப்படாத புத்தம் புதிய பூ. இளமையின் நிறைகுடம். பெண்ணின் நல்வடிவம். அறியாமை அவள் அழகை அதிகப்படுத்திக் கொண்டிருந்தது. தாவாத மான்குட்டி; மோவாத நல்லரும்பு; புரையாத மணி விளக்கு; குலையாத முத்தாரம் என்பதெல்லாம் அவளுக்கே ஏற்கும். புதுமையையும் இளமையையும் அவாவுவது மனித உள்ளத்தின் தன்மை இல்லையா?
மாறன் அன்னக்கிளியை விரும்பினார். தாம் விருப்பம் வைத்துவிட்டால் போதும்; எதுவும் இலகுவில் தமக்குக் கிட்டிவிடும் என்று நம்பிக் கொண்டிருந்தவர் அவர். அவருக்கு – அவருடைய நம்பிக்கைக்கு – முதல் சூடாக விழுந்தது அன்னத்தின் மறுப்பும் போக்கும். இரண்டாவது சூடுதான் அமுதவல்லி முத்தாரத்தை அவரிடம் அளிக்க மறுத்த செய்கை.
தோல்வியால் – அன்னத்தின் மறுப்பினால் – கனன்று கொண்டிருந்த மாறன் அன்றே அமுதத்தின் அழைப்பை ஏற்று அவள் வீடு செல்ல எண்ணினாரில்லை. அத்துடன் அவரிடம் முக்கியமான அலுவல்கள் பற்றிப் பேசுவதற்காக இரண்டு பேர் வந்திருந்தார்கள். அவர்களுடைய வருகை தானே வேடன் கைப்பட்ட மாடப் புறவெனத் திண்டாடிய அன்னக்கிளி அவரிடமிருந்து தப்பி ஓடுவதற்குத் துணை புரிந்தது!
வந்தவர்களில் ஒருவன்தான் எயில் ஊர் ஆந்தை என்பான். மற்றவர் திரைகடலோடித் திரவியம் தேடும் ஒரு வணிகர். முத்து வாணிபத்தில் பெயர் பெற்றிருந்தவர். திருமாறனிடம் நல்ல நல்ல முத்துக்களும் முத்தாலான அழகுப் பொருள்களும் உண்டு என அறிந்து ஆந்தையின் துணையோடு வந்தார்.
‘இம்முறை நான் யவனம், ரோமாபுரி முதலிய இடங் களுக்கெல்லாம் செல்வேன். ரோம் நாட்டு அரசிக்கு அழகிய முத்தாரம் ஒன்று வேண்டும் என்னும் செய்தி கிட்டியிருக்கிறது’ என்றார் அவர். அவ் வணிகர் விரும்பிய ஆரம் திருமாறனிடம் இல்லை.
மாரன் வந்தவர்களோடு பேசிக் கொண்டிருந்தபோது அவருடைய விரல்கள் அன்னம் கொடுத்திருந்த கடிதத்தோடு விளையாடின. பேச்சுச் சுவையில் அது நழுவிக் கீழே விழுந்து விட்டது.எயில் ஊர் ஆந்தையின் அருகில் தான் அது விழுந்தது. ஆந்தை குனிந்து அதை எடுத்தான். எடுக்கின்றபோதே ‘அமுதவல்லி’ என்ற பெயர் அவன் கண்ணையும் நெஞ்சையும் உறுத்தியதால் கடிதத்தின் உள்ளடக்கத்தையும் படித்துவிட்டான். ஓகோ! என்று சிலிர்த்தெழுந்தது அவன் உள்ளம். அங்கு அமுதவல்லி பற்றிய நினைவுகள் மோதிச் சுழியிட்டன. அமுதவல்லியிடம் முத்தாரம் இருப்பதும் அவன் எண்ணத்தில் எழுந்தது; எனினும் அதை அவன் வெளியே சொல்ல வில்லை. அவனுடைய நரி மூளை சுயநலத் திட்டங்கள் தீட்டுவதில் முனைந்து விட்டது.
தேவையான அணிமணிகளைப் பெற்றுச் செல்வதற்காக மறு நாள் வருவதாய் உறுதி கூறி, முன்பணமும் கொடுத்துவிட்டு வணிகர் கிளம்பினார். அவரை அவரது இருப்பிடத்தில் விட்டுவிட்டு வருமாறு ஒரு வண்டியோட்டிக்குக் கட்டளையிட்டார் மாறன்.
முத்து வியாபாரியை அவரது விடுதியில் விட்டு வண்டி திரும்புகிறபோது, ஆந்தையின் இரும்புக் கரம் வண்டியோட்டியைப் பேச்சற்றவனாக மாற்றியது. எதுவும் அறியாதவனாய்க் குதிரைகளைச் செலுத்திக் கொண்டிருந்தவனின் குரல்வளையை ஆந்தையின் கரங்கள் பற்றி அழுத்தின. ஈரத் துணியைப் பிடித்து உலுக்கி உதறி வீசுவது போல, அவன் உயிரைப் பிழிந்துவிட்டு வெற்றுடலை ஓர் ஒதுக்கிடத்தில் விட்டெறிந்தான். எயில் ஊர் ஆந்தைக்குப் பிறர் உயிர் பறித்தல் என்பது ஓர் சிறுகதையாம்! அதன் பின்னரே ஆந்தை அமுதவல்லியின் வீடு சேர்ந்தான். மறைந்து காத்திருந்து, திருமாறன் வரமாட்டார் என்று புரிந்துகொண்ட பிறகே அவன் துணிந்து செயலாற்றினான். அவனுடைய செயல்களுக்கு அவன் தான் பொறுப்பு. திருமாறன் எதுவும் அறியார்.
இரை வஞ்சிக்கப்பட்ட புலி தனது குகை நாடிக் கடுஞ் சினத்தோடு திரும்புவது போல், திருமாறன் தமது இல்லம் புகுவதைக் கண்ட திருமலையும் மருதுவும் ‘ஐயாவுக்கு உள்ளம் சரியாக இல்லை போலும்! அடுத்தது காட்டும் பளிங்காகும் முகம் கடுகடுப்பை அல்லவா காட்டுகிறது?’ என்று பேசிக்கொண்டார்கள்.
‘அவர் மனநிலை எப்படி இருந்தால் நமக்கு என்ன?’ என்றான் திருமலை.
இருவரையும் பார்த்ததும் திருமாறன், திடீரென்று வந்து நிற்கும் நீங்கள் இரண்டுபேரும் யாரோ? எங்கிருந்து வருகிறீர்கள்?’ என்று கேட்டான்.
‘நான் திருமலைக்கொழுந்து. இவன் என் நண்பன் மருதுபாண்டியன். இருவரும் மதுரை மன்னரிடமிருந்து வருகிறோம்’ என்று திருமலை அறிவித்ததும், திருமாறன் உள்ளத்தில் சிறிது குழப்பம் ஏற்பட்டது. எனினும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், அவர்களின் வருகையால் மகிழ்வு கொண்டவர் போல் முகமலர்ச்சியோடு உபசரித்தார். மதுரையைப் பற்றியும், மன்னர் குறித்தும், அவர் களுடைய பயணம் பற்றியும் விசாரித்தார்.
தகுந்த பதில்களை உரைத்தான் திருமலை.அவர்கள் வந்த காரணம் என்ன என்று அவர் வினா தொடுக்கும் வழி காணாது போகவே, அவனாக முக்கிய விஷயத்துக்கு வந்தான்.
‘கொற்கைப் பட்டினத்திலிருந்து ஆட்சி புரிந்து வந்த சடையவர்ம பாண்டியன் இறைவனடி சேர்ந்ததும், கொற்கையை ஆளுவதற்கு அரச பரம்பரையினர் எவரும் இல்லாது போனதால், மதுரைப் பாண்டியனே அதன் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டதை நீங்கள் மறந்திருக்க முடியாது. கொற்கையைத் தலைநகராகக் கொண்டும், பிறகு திருநெல்வேலியைத் தலைநகராக ஏற்றும் பாண்டிய மன்னர்கள் தனித் தனியாக ஆளத் தொடங்கியதால், பாண்டியப் பேரரசு சீர்குலைந்து சிதைந்து விட்டது என்பதையும் நாட்டில் உள்ள நல்லோர்கள் அறிவர்.பாண்டியரின் பண்டைய புகழையும் கீர்த்தியையும் மீண்டும் நிலை நாட்டுவதற்காக நமது மன்னர் முயன்று வருவதும் உங்களுக்குத் தெரியும். இருந்தும் நீங்கள் பெரிய மரத்தின் கீழ் மண் அடியிலேயே இருந்து மரத்துக்கே ஊறு விளைவிக்கும் வேர்க் கறையான் போலப் பாண்டி நாட்டுக்குக் கேடுகள் செய்து வருகிறீர் கள். மன்னருக்கு அவ்வப்போது செலுத்துவதாக உறு கூறியவாறு நீங்கள் இறைப்பணம் கட்டவுமில்லை. மன்னருக்கு எதிராகச் சதிகள் செய்து, கொள்ளையும் கொலையும் வளர்க்கத் திட்டமிட்ட, கயவன் எயிலூர் ஆந்தையை உங்கள் பாதுகாப்பில் வைத்திருப்பதும் நீங்கள் இழைக்கின்ற பெருங்குற்றமாகும்…
‘நிறுத்து!’ என்று கூவினார் திருமாறன். (சுடுசட்டியில் விழுந்த நண்டு மாதிரிப் பொரிந்து கொண்டிருக்கிறாயே. பதறாதே தம்பி! எயிலூர் ஆந்தை பற்றி வீணாகக் கதைத்து என்னை அவமதித்ததற்கு, நீ மன்னிப்புக் கேட்டாக வேண்டும். இல்லையேல் நான் உன்னைச் சும்மா விடமாட்டேன்’ என்று உறுமினார்.
‘ஆந்தை உமது கையாள்; உமக்காக உம்முடைய காரியங்களை கவனிக்கிறவன் என்பதை நாங்கள் இப்பொழுதே காட்ட முடியும். முத்துக் குவியல்களும், மதிப்பு மிகுந்த அணிகளும் நிறைந்துள்ள அறையில் தன்னந் தனியாக விடப்படுகிற ஆள் உமது நம்பிக்கையைப் பெறாதவனாகவா இருப்பான்?’ என்று திருமலை கேட்கவும் என்ன? வீணாக உளறாதே. கனவு கண்டாயா?’ என்று கத்திக் கொண்டு எழுந்தார் திருமாறன்.
“எங்களோடு வாருங்கள். உண்மையை உங்கள் கண்ணாலேயே பார்க்கலாம்” என்று திருமலையும் மருதுவும் நடந்தனர். திருமாறனும் அவர்களைத் தொடர்ந்தார்.
திருமலைக்கொழுந்து, சிறிது நேரத்திற்கு முன்புதான் பூட்டி வந்த அறையைத் திறந்தான். மூன்று பேரும் முன் அறையைக் கடந்து உள் அறைப் பூட்டையும் திறந்து உள்ளே எட்டிப் பார்த்தனர். திருமலையும் அவன் நண்பனும் திகைப்படைந்து, ‘ஆங்!’ என்று ஒலி எழுப்பினர்.
திருமாறன் கடகடவெனப் பெருஞ் சிரிப்புச் சிரித்தார். நல்லதோர் வேடிக்கையைக் கண்டு உவகையுற்றுச் சிரிப்பவர் போல் சிரித்தார். ‘எங்கே தம்பி நீ சொன்ன ஆள்? ஈயாகி, எறும்பாகிக்,கொசுவாகி, காற்றாகிப் போனானோ?” என்று கெண்டை பண்ணினார். உற்சாகமாகக் கைகளைத் தேய்த்துக்கொண்டு நின்ற அவரது கண்கள் குறுகி அறை முழுவதும் பார்வையில் துழாவின.
அந்த அறையில் எயில்ஊர் ஆர்தை காணப்படவில்லை.
‘அவன் எப்படி மாயமாய் மறைந்து போனான்?’ என்று திகைத்தனர் திருமலையும் மருதுவும். என்ன செய்வது, அல்லது என்ன சொல்வது என்று புரியாதவர்களாய் ஒருவர் முகத்தை ஒருவர் நோக்கி நின்றார்கள்.
அறையைக் கூர்ந்து நோக்கிய திருமாறனின் விழிகள், திறக்கப்பட்டு வெறுமையாய்க் கிடந்த ஒரு பெட்டியில் மோதியதும் அதிர்ச்சியால் அகன்றன. ‘ஆங்?’ என்று வியப்பாலும் ஆங்காரத்தாலும் ஒலி எழுப்பினார் அவர்.
‘மதிப்பு மிகுந்த பொன் முடியும், வைர வாளும் போய் விட்டன. இந்தப் பெட்டியில்தான் அவை இருந்தன. போங்கள்! ஆந்தையைப் பிடியுங்கள், கள்ள வழி மூலம் அவன் தப்பி ஓடியிருக்கிறான். எப்படியும் அவனைப் பிடித்தாக வேண்டும். துறைமுகத்துக்கும் ஆட்களை அனுப்புகிறேன்’ என்று படபடவெனச் சொற்களை உதிர்த்துவிட்டு வெறிகொண்டவர்போல் வேகமாக விரைந்தார் திருமாறன்.



