
அன்னக்கிளி
வல்லிக்கண்ணன்
15. மெல்லியல் வல்லியின் கல்நெஞ்சம்
‘அன்னம்…ஏய் அன்னக்கிளி!’
அமுதவல்லியின் குரல் வீடெங்கும் அதிர்ந்தது. அதில் கோபம் கனன்று கொண்டிருந்தது.
அன்னக்கிளி எதிரொலி தருவதற்குள்ளே அது பலமுறை அதட்டும் தொனியாய், அலைபாய்ந்தது.
‘பிராட்டியாருக்கு என்னவோ ஆத்திரம்’ என்று பணி மகளிர் முனகிக்கொண்டனர். அன்னக்கிளி பாய்ச்சல் கடையில் படிகளைத் தாவி, தலைவியின் முன்வந்து நின்றாள்.
“என்ன அம்மா, என்ன வேண்டும்?” என்று கேட்பதற்காக அவள் வாய் திறந்தாள்.
அதற்குள் சுடுகின்ற சரமாகத் தெறித்தது அமுதத்தின் பேச்சு. ‘ஏய் அன்னம், எங்கே அந்த முத்தாரம்?’ என்று சீறினாள் பெரியவள். அன்னக்கிளிதான் அதை ஆசையோடு எடுத்து மறைத்து வைத்திருக்கிறாள் என்று தலைவி கருதி, அவளைக் குற்றம் சாட்டுகிற தோரணையில் ஒலித்தது அது.
அன்னக்கிளி உண்மையாகவே பதறிவிட்டாள். முகம் கலவரத்தைக்காட்ட அவள் ‘எனக்குத் தெரியாதே அம்மா!’ என்றாள்.
“கள்ளி! என்னிடமே உன் வேலைகளைக் காட்டத் துணிந்துவிட்டாய். அப்படித்தானே?” என்று கேட்டபடி
அமுதம் அன்னத்தைப் பார்த்த பார்வையில் குளுமை இல்லை.ஆற்றல் இருக்குமானால் எதிரே நிற்பவளை எரித்து நிறு ஆக்கிவிடக்கூடிய அளவு குமைந்த உள்ளத்தின் கொதிப்பு அவள் விழிகளில் சுவாலையிட்டது.
நீதானடி இந்த அறைக்குள் கடைசியாக வந்தாய்? தோப்பில் நிகழும் அதிசயத்தை என்னிடம் கூறுவதற்கு வந்த நீ என் கையிலிருந்த முத்து மாலையை ஆசையோடு கவனிக்கவில்லை? அதைப்பற்றி என்னவோ கேட்டாயேடீ? நான் அதைக் கண்ணாடியின் முன் வைத்துவிட்டு வெளி யேறியதும் நீதானே இங்கிருந்தாய்? சிறிது நேரம் சென்ற பின்தானே நீ கீழே வந்தாய்?…’
உருண்டு புரளும் இடிகளைப்போல் சொற்களை உருட்டினாள் தலைவி.அச்சம் மீதுறப்பெற்று, செயல் திறம் இழந்து, வெலவெலத்து நிற்கும் சிறு பெண்போல, அன்னக்கிளி கைகளைப் பிசைந்துகொண்டு நின்றாள். அவளது அழகிய விழிகள் நீர்க்குளம் ஆயின.
‘நீலிக்குக் கண்ணீர் நிமையிலே என்பது சரியாகத் தான் இருக்கிறது. முத்து மாலையை என்னிடம் கொடுத்து விடு அன்னம். உனக்கு வேண்டுமானால் வேறொரு முத் தாரம் தருகிறேன்” என்றாள் அமுதவல்லி.
‘என்னிடம் முத்துமாலை இருந்தால் அல்லவா அதை நான் தரமுடியும்? நான் மாலையைப் பார்த்ததும் உங்களிடம் அது பற்றிக் கேள்வி கேட்டதும் உண்மை. உங்கள் பின்னாலேயே நானும் வந்து விட்டேன். மாலையைப் பற்றி நான் எதுவும் அறியேன்’ என்று உருக்கமான குரலில் அன்னம் கூறினாள்.
அதை அமைதியாகச் செவி மடுக்கச் சித்தம் கொள்ளாத தலைவி சீறிப்பாய்ந்தாள்.’என்னைப் பொய்சொல்லி என்று பழிக்கிறாய் இல்லையாடி? நீ எடுக்கவில்லை என்றால் வேறு யார் அதை எடுத்திருப்பார்கள்? இந்த அறைக்குள் நுழைவதற்கு வேறு எவருக்குத் துணிச்சல் உண்டு இந்த வீட்டிலே?
“நான் எடுக்கவில்லை அம்மா…”
“பின்னே அது மாயமாக மறைந்தா போய்விட்டது? அல்லது சிறகு முளைத்துப் பறந்து விட்டதோ?”
‘எனக்குத் தெரியாதம்மா!’
அமுதவல்லியின் ஆத்திரம் அவளது அறிவுக்குத் திரையிட்டது. அவள் தனது பெருந் தன்மையைத் துறந்தாள். அன்னக்கிளியின் அருகில் சென்று “என்னடி பதிலுக்குப் பதில் பேசிக்கொண்டு? அவ்வளவு ஆணவமா உனக்கு?” என்று அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள். தொடர்ந்து வந்த பேச்சு பெரியவளின் சின்னத்தனத்தை அம்பலப்படுத்துவதாக அமைந்தது.
“சில நாட்களாகவே உன் போக்கில் எனக்கு நம்பிக்கை இல்லை. திருமாறன் கூறியதுகூட உண்மையாக இருக்குமோ என்னவோ! அவருக்கு நான் உன்மூலம் அனுப்பிய கடிதத்தை நீயே ஆந்தையிடம் காட்டியிருக்கலாம்…”
அன்னக்கிளி திடுக்கிட்டாள். ‘அம்மா! வீண் பழி சுமத்தாதீர்கள்’ என்று இதயத்தைத் தொடக்கூடிய உணர்ச்சிகரமான குரலில் அலறினாள்.
ஆயினும் அமுதவல்லியின் உள்ளம் கல்லாகத்தான் இருந்தது. அன்னக்கிளியின் இதயத்தைக் குத்திப் புண்ணாக்க வேண்டும். அந்த அபலைப் பெண்ணை அழ அழ வேதனைப்படுத்தி மகிழ்வடைய வேண்டும் என்று பெரியவள் ஆசை கொண்டதாகவே தோன்றியது. அவளது மனத்தின் இருண்ட ஆழத்திலே அத்தகைய வெறி நினைப்பு வெகு நாட்களாகவே உறங்கிக் கிடந்திருக்கவேண்டும். பொறாமை தான் அதன் அடிப்படையாகும்.
அவள் சொன்னாள்: ‘ஆந்தையின் நட்பைப் பெறுவ தற்காக நீ அவ்விதம் செய்திருக்கலாம். இங்கிருந்து அவதி யுறுவதைவிட அவனோடு சேர்ந்து கடற் பிரயாணம் செய்து அயல் நாடுகளில் சுற்றித் திரியலாம் என்று நீ ஆசைப் பட்டிருக்கலாம். யார் கண்டது?”
‘ஐயோ ஐயோ!’ என்று புலம்பினாள் அன்னம். இது அநியாயமான பொய் என்பதை உங்கள் நெஞ்சே சொல்லும். வீணாக என்னைத் தண்டிக்காதீர்கள் அம்மா’ என்று கெஞ்சினாள்.
‘உனக்கென்ன! நீ அழகு ராணி. உன்னைக் கண்டதுமே எல்லோரும் கிறக்கம் கொண்டுவிடுகிறார்கள். உன் மனசைக் கவர்ந்த எவனுக்காவது அந்த முத்து மாலையைக் கொடுக்க நீ ஆசைப்பட்டிருக்கலாம்…’
‘பொய்! பொய்!’ என்று கத்தினாள் அன்னக்கிளி.
‘இன்று பொழுது போவதற்குள் அந்த முத்துமாலை என் கைக்கு வந்து சேரவேண்டும். அதுவரை நீ என் முகத்தில் விழிக்காதே, போ!’ என்று எரிந்து விழுந்த தலைவியின் பார்வையினின்றும் வேகமாக அகன்றாள் அந்தப் பேதை.
அமுதவல்லி படுக்கையில் சாய்ந்தாள். அவள் உள்ளத்தில் உணர்ச்சியின் குழப்பம். “அந்த மாலை எங்கே போயிருக்கும்? அன்னம் எடுக்கவில்லை என்றால் வேறு யார் எடுத்திருக்கக்கூடும்?’ என்று அவள் மனம் அசை போட்டது.
அவளுக்குப் பிரியமான பூனைக்குட்டி ஒன்று வெளியேயிருந்து ஓடிவந்தது. விளையாட்டாக அது கண்ணாம் முன்னே தாவியது. கண்ணாடி இருந்த உயரமான இடத் லிருந்து கீழே குதித்தது.
அதன் இயக்கங்களை நோக்கியவாறு சாய்ந்திருந்த அமுதவல்லியின் உள்ளத்திலும் அசைவுகள் நெளிந்தன. ‘ஒரு வேளை இந்தப் பூனை அப்பொழுதும் வந்து.இப்படிக் குதித்து விளையாடியிருக்குமோ? முத்துமாலையைக் கீழே தள்ளி இழுத்து எந்த மூலையிலாவது போட்டிருக்குமோ?’ இப்படி எண்ணம் எழவும் அவள் அவசரமாகத் துள்ளி எழுந்தாள்.கீழே குனிந்து ஆராய்ந்தாள். அவள் ஏமாறவில்லை.
அந்த முத்துமாலை, வெளிச்சம் அதிகம் இல்லாத ஒரு இடத்தில், சுருண்டு கிடந்தது. அமுதவல்லி ஆனந்தத் தோடு அதை எடுத்துக்கொண்டாள். கண்களில் ஒற்றினாள். முத்தமிட்டாள். கழுத்தில் அணியாமலே மறைத்து வைத்தாள்.
‘ஐயோ பாவம்! அன்னத்தை வெடுவெடு கோபித்துக் கொண்டேனே. அவள் அழுது உருகிப் போவாளே!’ என்று அவளது உள்ளம் கசிந்தது.
‘சரிசரி. அவள் ஒன்றும் வெல்லக்கட்டி இல்லையே, உருகிப் பாகாய் இளகிவிடுவாள் என்பதற்கு!அழட்டும் அழட்டும். அழுவதும் நல்லதுதான்!” என்று அவள் மனத்தின் ஒரு பகுதி பேசியது.
அமுதவல்லி சீக்கிரமே அன்னத்தை அழைத்திருப்பாள். அதற்குள் அவள் கவனத்தை ஈர்க்கும் வேறு நிகழ்ச்சிகள் குறுக்கிட்டுவிட்டன.
வெளியே பரபரப்பும் கூச்சலும் எழுந்ததை உணர்ந்தாள் அமுதம். தொடர்ந்து, ஓர் ஆள் அவள் முன் வந்து நின்றான் நடந்ததை அறிவிக்க.
தோப்பில் பதுங்கியிருந்தவன் பிடிபட்டான். அமுத வல்லி ஏற்பாடு செய்த ஆட்கள் அவன் வரட்டும் என்று காத்திராமல், திறமையாகவும் தந்திரமாகவும் செயலாற்றி அவனைப் பிடித்துவிட்டார்கள்.
அமுதவல்லி அந்த ஆட்களைப் பாராட்டினாள். அவனைக் காண்பதற்காகக் கீழே வந்தாள். அவளைச் சேர்ந்தோர் அனைவரும் அங்கு கும்பலாய் மொய்த்து நின்றனர்.
பிடிப்பட்டவன் ஒரு பித்துக்குளிபோல – அரைவாசி அறிவு வளர்ச்சிபெற்ற மிருகம்போல – விகாரமான மனிதக் குரங்குபோல விசித்திரத் தோற்றம் உடையவனாகக் காணப் பட்டான். வெகு நேரம் வரை அவன் வாய் திறக்காமல் நின்றான். சிலர் அறை கொடுக்கவும், வேதனை தாளாமல் அலறிக்கொண்டு, உண்மையைக் கக்கினான்.
வேலைக்காரியின் மகனான அவனுக்கு அன்னக்கிளி மீது மோகம் ஏற்பட்டது. அவளை எப்படியும் அடைந்து விடலாம் என்ற நம்பிக்கையோடு அவன் தோப்பில் பதுங்கித் திரிந்தான். அவ் வீட்டின் அருகிலேயே வசிக்க அவன் ஆசைப்பட்டதற்கு வேறொரு முக்கிய காரணமும் உண்டு. தனது ஆசைக் கிளியை அடிக்கடி கண்டுகளிக்க வாய்ப்புக்கள் ஏற்படும் அன்றோ?
அவன் கூற்றைக் கேட்டுப் பலரும் நகைத்தனர். அவனுக்காக அனுதாபப்பட்டனர் சிலர். உரிமையுடைய பணி மகளிர் சிலர் அன்னத்தைக் கேலிசெய்ய ஆசைப் பட்டனர். அவர்களது கழுத்து அப்படி இப்படி வளைந்தும், முகம் அங்கும் இங்கும் திரும்பியும், கண்கள் எங்கும் புரண்டும் பயன் இல்லாமல் போய்விட்டது. அன்னக்கிளி அங்கு காணப்படவில்லை. வெட்கம் அவளை வீட்டினுள் ஒரு மூலையில் முடக்கிப் போட்டிருக்கும் என்று எண்ணி, வரட்டும் வரட்டும்! எப்படியும் அவள் நம்மிடையே வந்து தானே ஆகவேண்டும்!” என்று உற்சாகமாக உரையாடிக் களித்தனர்.
அந்த அப்பாவியின் தலையை மொட்டையடித்து, கரும் புள்ளி செம்புள்ளி குத்தி, அவனைக் கழுதைமேல் ஏற்றி ஊரைச் சுற்றி வரச்செய்து, பிறகு நகரத்துக்கு வெளியே துரத்தும்படி கட்டளையிட்டாள் அமுதவல்லி.
அவன் தாய் எவ்வளவோ கெஞ்சினாள். அவனும் அழுது கெஞ்சிக் கும்பிட்டான். அலங்காரியின் மனம் மாறுவதற்கு மறுத்துவிட்டது.



