
அன்னக்கிளி
வல்லிக்கண்ணன்
16. இன்பக் கிளியானாள் அன்னக்கிளி
அன்னக்கிளி வெட்கம் மிகுதியால் அறையினுள் ஒடுங்கிக் கிடப்பாள் என்று மற்றவர்கள் எண்ணிக் கொண்டிருந்த வேளையில், அவள் கடலை நோக்கிச் செல்லும் தனி வழிகளைத் தேர்த்து வேகமாகச் சென்றாள். எரிந்து புகையும் கெஞ்சும் அழுது அழுது சிவந்த கண்களும், சோகம் சூழ்ந்த முகமுமாய் அவள் சென்றுகொண்டிருந்தாள். அவளுக்கு எல்லோர் மீதும் வெறுப்பு ஏற்பட்டிருந்தது. தன் பேரில் அநியாயமாகக் குற்றம் சாட்டுகிற அமுதவல்லி மீது அவளுக்கு வெறுப்பும் ஆங்காரமும் எழுந்தன. எனினும், அபலையான அவளது கோபம் ஏலாத்தனத்தின் விளைவாகத் தானே இருக்க முடியும்! அமுதவல்லியை அவள் என்ன செய்ய இயலும்?
இத்தகைய மோசமான நிலையிலே அவள் வாழ நேர்ந்த தற்காக அவள் வாழ்வை வெறுத்தாள்; தன்னையே வெறுத்தாள். ‘உயர் நிலையில் இருக்கிறோம் என்பதற்காக, இவள் நம்மை நம்பி வாழ வேண்டிய பெண்தானே என்பதற்காக அமுதவல்லி என்ன பழி வேண்டுமானாலும் சுமத்த முடிகிறது. அதைக் காரணமாக்கி அவள் என்ன தண்டனை வேண்டுமாயினும் தர முடியுமே! என்னை அவள் வீட்டை விட்டுத் துரத்துவாள். ஆந்தையும் வெறியனும், அவனைப் போன்றவர்களும் சுற்றித் திரிகிற இந்த உலகத்திலே நான் எப்படிப் பிழைக்க முடியும்…?’
அன்னம் அனல் மூச்சு உயிர்த்தாள். அவன் இந்த உலகத்தையே வெறுத்தாள், ஆகவே அவள் கடலை நோக்கி நடந்துகொண்டிருந்தாள் – அமைதியின்றிப் புரளுகின்ற மாக் கடலின் மடியிலே அடைக்கலம் புகலாம் என்று. அவளை அறிந்தவர்கள் எதிர்ப்பட முடியாத பாதையைத் தேர்ந்து நடந்தாள் அவள்.
அதுவரை அன்னக்கிளியை வாழ்க்கைத் தீயில் புடம் போட்டுக் கருக்கிக்கொண்டிருந்த காலம், அவளது எதிர் காலத்தைப் பொன்மயமானதாய்த் தகதகக்கும்படி மாற்றி விடத் திட்டமிட்டிருந்தது என்பதை அவள் எவ்வாறு அறிவாள்? அன்றொரு நாள் மாலையிலே குதிரைமீது வந்த இளைஞனின் கண்ணோடு கண்கள் உறவாட ஏற்பட்ட வாய்ப்புதான் அவளது வளமான வாழ்வுக்கான பொன் உதயம் என்பதை அவளோ, அமுதவல்லியோ கணக்கிட வில்லைதான்.
ஆனால், சந்தர்ப்பம் அன்னக்கிளிக்கு கற்றுணையாய் நின்று அருள்புரிந்து வந்தது. இப்பொழுதும் அதுவே உதவி செய்தது.
துறைமுகத்தை அடுத்த திருப்பத்தில் அன்னக்கிளி வேகமாய்த் திரும்ப முயன்றபோது, அவளை மிதித்து மோதுவதுபோல் ஒரு குதிரை குறுக்கிட்டது. யாரது? சாகவேண்டும் என்றே வீட்டிலிருந்து கிளம்பினாயா?” என்று அதட்டிய குரல், நேரவிருந்த விபத்து தந்த அதிர்ச்சி யோடு மற்றோர் அதிர்ச்சியாக அவளை உலுக்கியது. அவள் முகம் முக்காடிட்டிருந்த துணிக்கு நடுவிலிருந்து வெளிறிய பகல் வேளைச் சந்திரன் போல் நிமிர்ந்து நோக்கியது.
“ஆ, அன்னம்!நீயா?” என்றான் திருமலைக் கொழுந்து. மிகுந்த திறமையோடு அவன் குதிரையை இழுத்துப் பிடித்து நிறுத்தியிருந்தான். இல்லையேல் குதிரையின் இரும்பனைய கால்கள் அந்த அபலைப் பெண்ணைக் கீழே தள்ளிப் புழுதியில் உருட்டி எடுத்து உருக்குலைந்த சிலையாக மாற்றியிருக்கும்
‘என்ன அன்னம் இப்படியும் வரலாமா?” என்று கேட்டவாறு திருமலை குதிரையினின்று குதித்து அவளருகே வந்து நின்றான். பயத்தால் வெளிறியிருந்த அவள் முகத்தில் நாணம் சிவப்பேற்றியது. அவன் விரல்கள் அன்போடு அவள் மோவாயைப் பற்றவும், அவள் இதழ்களில் சிறு சிரிப்பு நெளிந்தது. கண்கள் ஒளி ஏற்று மின்னின.
நான் திடுக்கிட்டது விபத்து நேர்ந்திருக்குமே என்பதனால் மட்டுமல்ல. என் எண்ணத்தை உணர்ந்து சரியாகச் சொன்னது யாரோ என்ற திகைப்புத்தான் என்னை உலுக்கியது. உண்மை அதுதான். சாகவேண்டும் என்று தான் நான் கிளம்பினேன். கடலின் பயங்கர அலைகள் என்னை உருட்டிக் குலுக்கிச் சாகடிப்பதைவிட, உங்களுடைய குதிரையின் கால்கள் எனக்குச் சாவு தருவதை நான் பெரும் பாக்கியம் என்றே கருதுவேன்…
உணர்ச்சி அவள் பேச்சுக்குத் தடை விதித்தது. துயரம் அவள் தொண்டைக்குழியில் திரண்டு, அவளைப் பேசவிடாமல் தடுக்கவும் அவளது அழகிய கண்கள் கொதிக்கும் நீரைக் கொட்டும் அருவிகளாக மாறின. அவள் அவன் மார்பில் முகம் புதைத்துக்கொண்டு விம்மி விம்மி அழுதாள்.
எதையும் விளங்கிக்கொள்ள இயலாதவனாய் திருமலைக் கொழுந்து திகைப்புடன் நின்றான். அவனது ஒரு கரம் அவள் மெல்லுடலை ஆதரவோடு அணைத்து அவளுக்குப் பலம் தந்தது. ஒரு கரம் அன்போடு அவள் தலையை வருடியது. ‘அன்பே! அன்னம்! அழாதே. உனக்கு நான் துணையாவேன். கவலைப்படாதே. நீ ஏன் சாகவேண்டும்? வாழ வேண்டியவள் நீ. நீ நன்றாக, சுகமாக வாழத்தான் போகிறாய்? உன்னை நான் வாழ வைப்பேன்’ என்று ஆறுதல் கூறினான்.
அவள் முகம் புத்தொளி பெற்றது. அவள் உள்ளத்தில் நிறைந்த புதிய உற்சாகமும் நம்பிக்கையும் தந்த புத்தழகோடு அவள் முகம் நிமிர்ந்து பார்த்தாள். அவளது இதழ்கள் முழு நகை காட்டின.
‘இப்பொழுது என் அன்னக்கிளி எவ்வளவு அழகாக இருக்கிறாள்.ஆகா!’ என்று மகிழ்வோடு அவள் கன்னத்தை விரல்களால் வருடிய திருமலை அங்கு உதடுகளால் அன்பு முத்திரை பதித்தான்.
அவளிடம் நடந்த நிகழ்ச்சிபற்றி ஒருவாறு கேட்டறிந்து கொண்ட திருமலை சிரித்தான். ‘அமுதவல்லி வீண் பழி சுமத்தினாள் என்பதற்காக ஓடி ஒளிந்துவிட்டால், உன் மீது ஏற்பட்ட களங்கம் மறைந்துவிடுமா கண்ணே? நீதான் குற்றம் செய்திருக்கிறாய், அதுதான் தப்பி ஓடிவிட்டாய் என்று அவள் சாதிப்பதற்கு வசதியாகுமே’ என்றான்.
‘முக்கிய அலுவல் ஒன்று இருக்கிறது. அதை இதற்குள் மருதுபாண்டியன் முடித்திருப்பான். அவனைச் சந்திப்பதற்காகத்தான் நான் வேகமாய்ச் சென்று கொண்டிருந்தேன்’ என்று கூறிய திருமலை அவளை முதலில் குதிரை மீது அமர்த்திவிட்டு, அவனும் ஏறுவதற்குச் சித்தமானான்.
அதற்குள்ளாக மருதுபாண்டியனும் இன்னும் பலரும் அந்த இடத்திற்கே வந்துவிட்டார்கள். “கடமையை மறந்து காதலில் இறங்கிவிட்டாயே?” என்று கேட்பதுபோல், குறும்புத்தனம் ஒளிரும் பார்வையும் சிரிப்புமாக மருது தன் நண்பனை நோக்கினான்.
‘இதோ, இந்த அன்னம் சின்ன வயசிலேயே சாவைத் தழுவக் கிளம்பிவிட்டாள். கடல், ஆந்தை போன்ற கயவர்களின் முடிவிடமாக இருக்கவேண்டுமே தவிர, இவளைப் போன்றவர்களின் புகலிடமாக அமையலாமா? நல்ல வேளையாக நான் குறுக்கிட்டேன். இவள் பிழைத்தாள்!’ என்று திருமலை சொன்னான்.
நண்பன் சிரித்தான். ‘நீ என்று இவள் முகத்தில் கண் பதித்து மதிமயங்கி நின்றாயோ, அத் தருணம் முதலே அவள் வாழ்வில் பொன்மயமான புதுமை உதயமாகி விட்டது!” என்றான். பிறகு தெரிவித்தான்.
திருமாறனின் ஆட்கள் மரக்கலத்திலும் இருந்திருக்கிறார்கள். எயில் ஊர் ஆந்தையைக் கண்காணித்து, வேளை வரட்டும் என்று காத்திருந்தனர்போலும். ஆந்தை கடலில் குதித்து விட்டதும் அவன் கலத்தில் வைத்திருந்த பொருள்களை அவர்கள் கைப்பற்றிக்கொண்டனர். அவர்களுக்கு முக்கியமான சிறு பெட்டியும் கிடைத்துவிட்டது. கலத்தின் தலைவனுக்கும் மாறனின் ஆட்களுக்கும் தகராறு பட்டது. நான் பாண்டிய மன்னனின் முத்திரைக் கணை யாழியையும் கட்டளை ஓலையையும் காட்டியதும் எல்லோரும் அடங்கி ஒடுங்கினர். வைர வாளும் பொன் முடியும் இருந்த பெட்டியை நான் கைப்பற்றிக்கொண்டேன். கலகம் செய்ய ஆசைப்பட்டவர்களை அடக்குவதற்கு, நாம் முன்னதாகவே ஏற்பாடு செய்திருந்த வீரர்கள் உதவியா யிருந்தனர். சம்பந்தப்பட்ட அனைவரையும் சிறைபிடித்து, உன் வருகைக்காகக் காத்திருப்பதைவிட, இளைய மன்னரை எதிர்கொண்டு வரவேற்கலாமே என்று கிளம்பினேன். இளைய அரசர் தமக்கு ஒரு அரசியைத் தேடிக்கொண்டு விட்டதால், நான் இருவருக்கும் சேர்த்து வாழ்த்தும் வணக்கமும் அறிவிக்கிறேன்!’
மருதுபாண்டியனின் நீண்ட பேச்சு மற்றவர்களுக்கு வியப்பளித்தது. திருமலைக்கொழுந்து மதுரையிலிருந்து செங்கோலோச்சும் பாண்டியனின் இளவல் என்பதை அவர்கள் அப்போதுதான் அறிய முடிந்தது. எல்லோரும் பணிவுடன் வணங்கி வாழ்த்துக் கூறினார்கள்.
அன்னக்கிளிக்கு ஏற்பட்ட ஆச்சரியத்திற்கும் ஆனதத்துக்கும் ஓர் அளவே கிடையாது.
அவள் பெருமையோடும் பெருமகிழ்ச்சியோடும் திருமலையின் முகத்தை நோக்கிப் புன்முறுவல் பூத்தாள். அவனும் சிறுநகை காட்டி அன்போடு நோக்கினான்.
‘அரசுக்கும் நாட்டுக்கும் துரோகம் இழைத்து வந்த திருமாறனைச் சிறை எடுக்கவேண்டும்.
‘அவன் வீடு நோக்கிச் செல்வோம்’ என்றான் திருமலை.
“அவன் தப்பி ஓடிவிடாமல் இருப்பதற்காக வீட்டைச் சுற்றிலும் காவல் காக்கும்படி நமது வீரர்களை ஏவி யிருக்கிறேன்” என்று மருது அறிவித்தான்.
‘நன்றே செய்தாய் நண்பா’ என்று திருமலை பாராட்டுரை வழங்கி முடித்தபோது, ஒரு ஆள் ஓடிவந்து சேதி சொன்னான்.
‘அவரது ஆள் ஒருவன் மூலம் முன்னதாகவே எல்லா விவரங்களையும் திருமாறன் தெரிந்து கொண்டார். உயிரோடு சிறைப்பட்டு அவமானப்படுவதைக் காட்டிலும் இறந்துவிடுவதே மேல் என்று அவர் தீர்மானித்துவிட்டார். மோதிரத்தில் உள்ள வைரக் கல்லைத் தூள் செய்து விழுங்கி விட்டதாகத் தெரிகிறது. மிகுந்த வேதனையோடு உயிர் துறந்தார் அவர்’ என்று அவன் கூறினான்.
‘மருது, எப்படியும் தப்பிவிட முடியும் என்று காட்டி விட்டான் திருமாறன்.அவன் ஒழிந்தது நல்லதே!’ என்றான் திருமலை.
எல்லோரையும் அவரவர் கடமைகளைக் கவனிக்க அனுப்பிவிட்டு திருமலைக்கொழுந்து அன்னக்கிளியோடு அமுதவல்லியின் இல்லம் சேர்ந்தான். மருதுபாண்டியனும் அவனைத் தொடர்ந்தான்.
திருமலைக்கொழுந்துதான் மதுரைப் பாண்டியனின் இளவல் என்பதும், இதர விவரங்களும் அமுதவல்லிக்கு எட்டியிருந்தன. அவள் உற்சாகத்துடன் அவர்களை வரவேற்கக் காத்திருந்தாள். அவளே முந்திக்கொண்டாள்.
அன்னம், நீ என்னிடம் சொல்லாமல் எங்கே போய் விட்டாய்? உன்னை எங்கெல்லாம் தேடினோம் தெரியுமா? உனக்கு எனது வாழ்த்தாகவும் திருமணத்திற்காக என் அன்பளிப்பாகவும் முத்து மாலையை உன் கழுத்தில் என் கைகளாலேயே பூட்டிவிட விரும்புகிறேன். மாலை என் அறையில் படுக்கைக்குக் கீழே விழுந்து கிடந்தது. நமது பூனைதான் அதைத் தேடிக்கொடுத்தது. என்று கூறி, அமுதவல்லி கைகொட்டி கலகலத்தாள்.
அன்னக்கிளியின் உள்ளத்தில் இப்போது துயரத்தின் சிறு அணு கூட இல்லை. அவளே இன்பத்தின்,மகிழ்ச்சியின், அழகின் பூரண உருவமாகி விட்டதுபோல் விளங்கினாள்.
அவள் அழகை அள்ளிப்பருகுவதில் அலுப்பு காணவே யில்லை திருமலையின் விழிகள்!
★ ★ ★



