அன்னக்கிளி
வல்லிக்கண்ணன்

7. கவனத்தைக் கவர்ந்தவை


    அமுதவல்லிக்குப் பொழுது நன்றாக விடியவில்லை; இரவு நேரம் தந்த ஏமாற்றமும் மனக் குழப்பமும் வேதனைகளும் அவள் உள்ளத்தையும் உணர்வையும் வெகுவாகப் பாதித்துள்ளன என்பதை அன்னக்கிளிதான் முதலில் உணர நேர்ந்தது.

    வீட்டின் முன்னே வந்து நின்ற வண்டி இளமாறனுடையது என அறிய நேர்ந்ததும் அமுதவல்லி அடைந்த பரபரப்பு, அவ் வண்டி எப்படியோ மறைந்து போய் விட்டது என்று தெரிந்து கொண்டதும் இனம் புரிந்து கொள்ள முடியாத மனக் குழப்பமாக மாறியது.

    தூக்கம் பிடிக்காமல் போனதால் எழுந்த கண் எரிச்சலோடு மன எரிச்சலும் சேர்ந்தது. ‘ஏய் அன்னம்!’ என்று கடுகடுப்பாக அவள் கூவிய தோரணையே ‘அம்மாளுக்கு மனசு சரியாயில்லை’ என்று பணிப்பெண்கள் பலருக்கும் ஒலி பரப்பியது.

    அன்னக்கிளி அடக்கமாக வந்து அவள் முன் நின்றாள். எங்கோ பார்வையைப் பதிய விட்டிருந்த தலைவி, சிறிது நேரத்துக்குப் பிறகே, அன்னம் அங்கு வந்து நிற்பதை உணர்ந்தவள்போல் காட்டிக்கொண்டாள். ‘ஆமாம்; அது திருமாறன் வண்டி என்று உனக்கு எப்படித் தெரியும்?’ என்று கேட்டாள்.

    அந்த உண்மையை அவள் அறிய முடிந்ததை அன்னம் அறிவித்தாள்.

    அதை முதலிலேயே பெரியவளுக்கு அவள் அறிவித்திருந்த போதிலும், ‘நான் தான் அதை அப்பொழுதே சொல்லிவிட்டேனே! என்று சிடு சிடுக்கும் உரிமை அவளுக்குக் கிடையாதே!’ “அந்த வண்டி எப்பொழுது வந்திருக்கும்? வண்டி வந்ததோ நின்றதோ நம் காதில் விழவே இல்லையே?” என ஐயுற்றாள் தலைவி.

    ‘நாம் ஆந்தையுடன் போராடிக்கொண்டிருக்கையில் வண்டி வந்திருக்கலாம்’ என்று அன்னம் மொழிந்தாள்.

    அவ்வாறானால் ஆந்தை அவரைக் கொல்லவில்லை என்கிறாய்?’

    ‘யாரும் யாரையும் கொன்றதாக நான் கூறவில்லையே?’ என்று பதற்றமாகக் குறிப்பிட்டாள் அன்னம்.

    ‘நீ சொன்னதாக நான் சொன்னேனா? ஆந்தை அவரைக் கொன்றுவிட்டு இங்கு வந்திருப்பானோ என்ற சந்தேகம் எனக்கு…’

    ‘கீழே பதுங்கி நின்றவனோ, அல்லது வேறு எவரோ அவரைக் கொன்றிருக்கலாம், திருமாறன் இரவில் இங்கே வந்திருந்தால்…’ என்று அன்னக்கிளி இழுத்தாள்.

    ‘ஏன் அவர் வந்திருக்கமாட்டார்? பின் அவர் வண்டி ஏன் இங்கு வந்து நின்றது?’ என அமுதம் படபடத்தாள்.

    ஆந்தைகூடச் சொல்லவில்லையா. அவர் இப்போது வேறு எங்காவது இருக்கலாம் என்று! ஆந்தையே அந்த வண்டியில் வந்திருக்கலாமே. திருமாறனிடமிருந்தே தகவல் அறிந்துகொண்டு.

    அவள் மேலும் பேசியிருப்பாள். ஆனால், அமுதவல்லி வெடுக்கெனக் கத்தினாள், ‘சீ, வாயை மூடும்’ என்று. அவரைச் சந்தேகிக்க உனக்கு என்ன தகுதி இருக்கிறது? அவர் ஏன் ஆந்தையோடு நட்பு கொள்ளவேண்டும்? நான் அவரை வருமாறு அழைத்திருக்கும்போது, அவர் எதற்காக ஆந்தையை அனுப்பவேண்டும்?’ என்று கடுகடுப்பாகக் கூறினாள்.

    அன்னக்கிளி வாய் திறவாது நிற்பதே சாலச் சிறந்தது என மதித்து, சிலையாகிவிட்டாள்!

    அது சரி. ‘குதிரைமீது வந்தது யார்?’ என்று, அன்னம் எதிர்பாராதவேளையில் அவள் எதிர்பார்த்திராத கேள்வியை வீசினாள் தலைவி.

    எனக்குத் தெரியாது அம்மா, யாரோ வழிப்போக்கராக இருக்கும். ‘தெய்வம்போல் வந்து காப்பாற்றினார்’ என்று அன்னக்கிளி சொன்னாள். அதை அவள் கூறும் போதே அவள் முகம் நன்றிப் பெருக்கினாலும், உளம் கனிந்த மகிழ்ச்சியாலும் மலர்ச்சிபெற்றது. அவள் கண்களில் சுடரொலி சேர்ந்தது.

    அவள் முகத்தை உற்று நோக்கியபடி இருந்த அமுத வல்லியின் உள்ளத்தில் சிறு கொதிப்பு ஏற்பட்டது. தெரியாது என்று ஏன் பொய் சொல்கிறாய்? தெரியாத அந்நிய னோடுதான் ஆனந்தமாக உட்கார்ந்து உலா வருவதில் இன்பம் கண்டாயாக்கும்?’என்று குத்தலாகச் சொன்னாள் அவள்.

    ‘உண்மைதான், அம்மா. நேற்று மாலையில் நமது வீதி வழியே அந்த இரண்டு பேரும் குதிரைகளில் போனார்கள். அப்பொழுது தற்செயலாக நான் அவர்களைப் பார்க்க நேரிட்டது. இரண்டாவது தடவையாக நான் அவ்விருவரையும் கண்டது எனக்கு ஏற்பட்ட விபத்தின் போதுதான். அவர்கள் இருவரும் தக்க தருணத்தில் வந்து உதவி புரிந்திரா விட்டால், என் கதி என்ன ஆகியிருக்குமோ?’ என்று கூறினாள் அன்னக்கிளி.

    அவள் பொய் சொல்லவில்லை என்பதை நன்கு உணர முடிந்தது தலைவியால். ஆகவே அவள் எரிச்சலோடு, ‘சரிசரி, போய் உன் வேலைகளைக் கவனி. அப்புறம் உன்னைக் கூப்பிடுகிறேன்’ என்று சொல்லி அன்னத்தை அனுப்பிவைத்தாள்.

    யோசனையில் ஆழ்ந்துவிட முயன்ற அமுதவல்லி அவளை அறியாமலே தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டாள். அது பணிப்பெண்களுக்கு நல்லதாயிற்று. இல்லையெனில் அவர்களை ஓட ஓட விரட்டி, தன் எரிச்சலையும் ஆத்திரத்தையும் அவர்களிடம் தீர்த்துக்கொள்ள முயலுவாள் தலைவி.

    அவள் எவ்வளவு நேரம் தூங்கியிருப்பாளோ, அமுத வல்லிக்கே அது தெரியாது. துர்க்கனவிலிருந்து விழித் தெழுந்தவள்போல் அவள் பதறி எழுந்தாள். “அன்னம்?” என்று அலறினாள்.

    அன்னக்கிளி ஓடிவந்து நின்றதும் ‘அன்னம் இப்பொழுது நீ திருமாறன் இல்லம் சென்றாக வேண்டும்’ என்றாள் தலைவி.

    அன்னம் தயக்கத்தோடு மிரள மிரள விழித்தாள். தலைவியின் பேச்சைத் தட்டிப் பேசும் பழக்கம் இல்லாதவள் அவள். அமுதம் இடுகின்ற ஆணைகளை ஏற்று, அவள் விருப்பம்போல் செயல் புரியும் பண்பு பெற்றவள். இப்போது பெரியவளின் கட்டளைக்கு மறுப்புக் காட்ட வேண்டியிருக்கிறதே என்ற தயக்கமும். அவள் எப்படிச் சீறிப்பாய்வாளோ என்னும் அச்சமும் அன்னத்துக்கு எழுந்தன. இருப்பினும் துணிந்து ‘அம்மா…’ என்று வாய் திறந்தாள்.

    அமுதம் அவள் போக்கிலேயே பேசிக் கொண்டிருந்தாள்: ‘வருகிறேன் என்று சொன்ன திருமாறன் ஏன் வரவில்லை என்பதை நான் அறிந்தாக வேண்டும். அவர் வந்து வழியில் ஏதேனும் இடைஞ்சல்கள் ஏற்பட்டதனால் வீடு திரும்பி விட்டார்’ என்று அறிந்தாலாவது எனக்கு ஒரு மன அமைதி ஏற்படும். அவர் வண்டி என்ன ஆயிற்று என்றும் தெரிய முடிந்தால் அறிந்துவா.

    ‘அம்மா என்னை மன்னியுங்கள். திருமாறனைக் கண்டு பேச வேறு யாரையாவது அனுப்புங்கள் அம்மா…’

    அன்னக்கிளி பணிவுடன்தான் மொழிந்தாள்.ஆயினும் அமுதத்தின் உள்ளத்திலே அது சினமெனும் தீயைப் படரவிட்டது என்பதைத் தலைவியின் முகக் கடுப்பு பளிச் இட்டுக் காட்டியது.

    அவளது எரிதழற் பார்வை பேதைப் பெண்ணைச் சுடுவது போலிருந்தது.

    ‘உனக்கு என்ன கேடு? என்னை மறுத்துப் பேச உனக்கு என்ன அகந்தை?’ என்று சீறினாள் தலைவி.

    ‘உண்மையை அறிந்தால் உங்களுக்கு மனவேதனை ஏற்படலாம், அல்லது ஆத்திரம் உண்டாகலாம்…

    ‘உனது வெறும் பேச்சை எல்லாம் கேட்க நான் விரும்பவில்லை. உண்மையாம்! மகர உண்மையை இவள் தான் கண்டுபிடித்துவிட்டாள்! திருமாறனுக்கு இங்கு வரச் சம்மதம் இல்லை என்று சொல்வாய். அப்படித்தானே?” என்று படபடத்தாள் அமுதம். நீ இப்பொழுதே புறப்பட வேண்டும். இந்தக் கடிதத்தை அவரிடம் கொடு. மறு மொழி பெறும் வரை நீ அங்கேயே காத்திருக்கவேண்டும்’ என்றாள்.

    அன்னக்கிளி மேலெழுந்த நெடுமூச்சைத் தலைவி அறியாமல் அமுக்கிவிடப் பெரிதும் முயன்றாள். கடிதத்தைப் பெற்றுக்கொண்டு நடந்தாள். அவள் நடையிலே துடிப்பு இல்லை. முகத்திலே உவகை இல்லை. தயங்கித் தயங்கி நடந்து செல்லும் அன்னத்தையே கவனித்துக் கொண்டிருந்த அமுதம், ‘இவளுக்குத் திடீரென்று ஏன் இந்தக் கிறுக்கு?’ என்று முனகிக்கொண்டாள்.

    அன்னக்கிளி சென்ற பின்னர் சிறிது நேரம் அமுத வல்லி படுக்கையிலேயே சோம்பிக் கிடந்தாள். பிறகு எழுந்து அப்படியும் இப்படியும் நடக்கலானாள். அவள் பார்வை குறிப்பற்று வெளியுலகின் காட்சிகள் மீது புரண்டு திரிந்தது.

    அப்பொழுது வெயில் நன்றாகக் காய்ந்து கொண்டிருந்தது. உறைப்பாகவே விழுந்தது அது. காற்றின் அசைவு சிறிதுகூட இல்லாத அவ் வேளையில் நண்பகலை எட்டிக் கொண்டிருந்த பொழுதில், வெயிலின் சூடு தாங்காமல் தாவர இனமும் உயிர் வர்க்கங்களும் கிறங்கிக் கிடக்கின்றனவோ என்று தோன்றும் விதத்தில் அமைதி நிலவியது. தோட்டம் நிழலும் வெயிலும் செறிந்து ஒருவிதக் கவர்ச்சியோடு விளங்கியது.

    அமுதவல்லியின் கண்கள் சட்டென்று ஏதோ ஒன்றின் அசைவினால் ஒரு மரத்தின் பக்கம் ஈர்க்கப்பட்டன. நன்கு போர்த்தியிருந்த ஓர் உருவம் அந்த மரத்தடியில் குனிந்து எதையோ எடுத்துக்கொண்டு வேகமாக, மரங்களடர்ந்த பகுதிக்குள் சென்றதை அவள் கண்டாள், அது யாராக இருக்கும்.அவன் அவ்வாறு பதுங்கிப் பதுங்கிச் செல்லக் காரணம் என்ன? அவன் என்ன எடுத்துச் சென்றிருப்பான்? அப்படி யார் அவனுக்கு எதை மறைத்துக் கொடுத் திருக்க முடியும்?- அவள் மனம் பலப்பல கேள்விகளை எழுப்பியது.

    பணியாளை ஏவி என்ன விஷயம் என்று அறியச் செய்யலாம் என்ற எண்ணம் அவளுக்கு உண்டாயிற்று. ஆளை அழைப்பதற்காக அவள் திரும்பியபோது ஒரு வேலைக்காரி வந்து வணங்கி நின்றாள். ‘என்ன?’ என்று தலைவி நோக்கினால் விசாரிக்கவும். ‘திருமாறன் வந்திருக்கிறார் அம்மா!’ என்று அறிவித்தாள் அவள்.

    அமுதவல்லி மிகுந்த பரபரப்பு அடைந்தாள். அதனால் அவள் இதர விஷயங்களை மறந்து “அவரை இங்கே வரச்சொல்!” என்று உத்தரவிட்டாள். கண்ணாடி முன் நின்று தனது முகத்தையும் ஆடைகளையும் சரி செய்வதில் அக்கறை காட்டினாள் அவள்.

    இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

    மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

    சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

    இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *