
அன்னக்கிளி
வல்லிக்கண்ணன்
10. கிளியும் ஆந்தையும்
பெருங் கூண்டில் அடைபட்ட சிறு பறவைபோல் தத்தளித்த அன்னக்கிளி அஞ்சினாள்; வெய்துயிர்த்தாள்; வெலவெலத்தாள்.
கண் எட்டும் திக்கெல்லாம் குவிந்து கிடந்த முத்துக்களும் மணிகளும் இப்போது அவளைக் கவரவில்லை. கவர்ச்சிக்கும் பண்டத்தைக் காட்டி ஏமாற்றி எலியைப் பொறியினுள் அகப்படச் செய்வதுபோல், யாரோ தன்னையும் வஞ்சித்து விட்டார்களே என்று பதைப்புற்றாள் பாவை.
ஆனால் பிறர் செய்த வஞ்சகத் திட்டமா இது? இல்லையே. அவள்தானே இயல்பான அவாவோடு-என்ன என்று அறிந்துகொள்ளும் ஆசையோடு- எட்டிப்பார்த்தாள்.
சிரிப்பொலி கேட்டதே; எவரையும் காணோமே என்று அறைக்குள் புகுந்து ஆராயத் துணிந்ததும் அவள். பேதமை அன்றே?
இதற்கெல்லாம் மூலகாரணம் அமுதவல்லிதான் என்று அவள் தலைவியைக் கசந்தாள்.’நான்தான் இங்கே வரமாட்டேன் என்று சொன்னேனே? அவள் தானே மிரட்டி என்னை அனுப்பிவைத்தாள். இப்பொழுது அவளா இடர்ப்படுகிறாள்?’ என்று குமைந்து குமுறினாள்.
செல்வாக்கும் சீரும் சிறப்பும் பெற்ற பெரியவரான திருமாறன்தான் சிறுமைப் புத்தியோடு நடந்துகொள்கிறாரோ என அயிர்த்தாள் பேதை. ஆனால் சிரித்ததே ஒரு குரல்; அது அவருடையது அல்லவே? என்னவோ பேசியதும் அவர் இல்லை என்று தெரிந்ததே? எனினும், செவியில் புகுந்த ஒலி முன்பு கேட்டுப் பழகிய குரல் போலவும் இருந்ததே…
அன்னக்கிளி அங்குமிங்கும் அலைந்தாள். தப்பி ஓட வழி எதுவும் இல்லையென்று நிச்சயமாகத் தெரிந்தது. ‘நான் வழியோடு போயிருந்திருக்க வேண்டும். இந்த அறைக்குள் வந்திருக்கக் கூடாது’ என்று நினைத்தாள். திருமாறன் இல்லை என்று அறிந்ததும் வீட்டிற்கே திரும்பிச் சென்றிருப்பின் நன்றாக இருந்திருக்குமே!’ என ஆசைப்பட்டாள். என்ன நினைத்து என்ன பயன்? கூண்டுக் கிளியாக மாறி ஆயிற்று… இனி …
கதவு கிரீச்சிடும் ஓசை அவள் கவனத்தைக் கவர்ந்தது ஒரு கண் விளிம்பினூடு மினுமினுத்தது. எவருடைய கண் அது?
சில பற்கள் பளிச்சிட்டன. யார் சிரிப்பது இவ்விதம்?
அன்னக்கிளியின் உள்ளம் பதைபதைத்தது. உடலின் நடுக்கம் அதிகமாயிற்று. என்ன நேரப்போகிறதோ என்ற அச்சம் அவளைப் பிடித்து உலுக்கியது. சிறிது சிறிதாகத் திறக்கப்பட்ட கதவின் பக்கம் பதிந்துவிட்ட விழிகளைத் திருப்ப முடியாமல் செயலிழந்து நின்றாள் அந்த இளம் பெண்.
பேயெனச் சிரித்தபடி பெண் முன்னே வந்து நின்றான். பேருருவ ஆந்தை! ‘இவனா? இவன் சிரித்த சிரிப்புதான் அது. இவன் குரலேதான்! இவனா இங்கு இருந்தான்? இவன் இங்கு எப்படி வந்தான்? ஏன் வந்தான்?’ என்று பதறி நடுங்கினாள் அன்னம்.
முத்துக்களைக் கொள்ளையிட வந்திருப்பானோ என்ற ஐயம் எழுந்தது. ‘முட்டாள்தனமான நினைப்பு!திருமாறன் வீட்டில் யார் கொள்ளையிட முடியும்?’ என்ற எண்ணம் முன் நினைப்பைக் கொன்றது. ‘இவன் மாறனின் கையாள் என நான் எண்ணினேன். அது சரியாகத்தான் இருக்கும்’ என்று மனம் பேசியது.
‘இவன்தான் இரவில் மாறனின் வண்டியில் வந்தானோ என்னவோ! அமுதவல்லியை விட்டு அகன்ற பிறகு, வண்டியைக்காணாது தேடியிருப்பான். தெருவில் தள்ளி நின்ற அதைக் கண்டு, மீண்டும் மாறன் வீட்டில் கொண்டுவந்து சேர்த்திருப்பான். இதுதான் நிகழ்ந்திருக்கும்’ என்று அவள் கருதினாள்.
‘அவளையே பார்த்தபடி வாசல் நடையிலே பெருஞ்சிலை யென நின்றான் எயில் ஊர் ஆந்தை, அவள் வாய் திறவாது குழம்பித் தவிப்பதைக் கண்டு களித்தான். அன்னக்கிளி! என்ன சொல்கிறாய் இப்போது?’ என்று கூறிக் கனைத்தான்
‘அவள் என்ன சொல்லப் போகிறாள்! பேசாமல்தான் நின்றாள். இரவிலே சூரத்தனங்கள் எல்லாம் செய்தாயே. இப்பொழுது அந்த வீரம் எங்கே?’ என்று உறுமினான் அவன்.
எந்நேரமும் கூரிய நகங்கள் நிறைந்த பாதத்தை நீட்டித் தன்னை அகப்படப் பற்றி, குருதி எழக் குத்திக் குதறத் தயாராக நிற்கும் கடுவன் பூனையின் பார்வையால் கட்டுண்டு, தன் வசமிழந்து – செயல் திறமற்று – மயங்கிக் கிடக்கும் சிறு பறவைபோல்தான், அன்னக்கிளியும் நின்றாள் அக்கொடியவன் முன்னிலே.
காலமும் நகராது நிற்பது போலவே தோன்றிற்று.
கனியைக் கொய்திடக் கை நீட்டினேன். முட்கள் குத்தின. சுள்ளிகள் கீச்சின. இது வேண்டாம் என்று விலக எண்ணினேன். கனி தானாகவே என் கையில் வந்து விழுந்தது? ஆகா இதல்லவா நல்வாய்ப்பு!என்று அவன் மகிழ்வுப் பெருக்குடன் பேசினான்.
அவள் என்ன செய்வது, இக் கயவனிடமிருந்து எப்படித் தப்புவது என்று விளங்காதவளாய்த் தவித்து நின்றாள்.
“என்ன, கிளி வாயைத் திறக்கவே மாட்டேன் என்கிறதே? அப்புறம் எனக்குப் பொழுது போவது எப்படி?” என்று கேலியாகச் சொன்னான் அவன்.
‘நான் திருமாறனைக் காண வந்தேன். அவரைக் கண்டு பேசவேண்டும்’ என்று மென் குரலில் மொழிந்தாள் அன்னம்.
‘ஆகா,கிளியின் பவளவாய் சொற்களைச் சிந்திவிட்டது அம்மா?’ என்று கெக்கலித்தான் ஆந்தை. ‘அவரிடம் பேச முடியாது, கண்ணே. என்னோடு பேசிக்கொண்டிருக்கலாம்…’
‘எங்கள் தலைவி அமுதவல்லி பிராட்டியார்…’ என்று அவள் பேச்செடுத்ததைத் தொடரவிடாது முடித்தான் அவன்.
‘சொல்லவேண்டியதை – சொல்ல ஆசைப்பட்டதை – திருமாறனிடமே நேரில் சொல்லிக்கொள்வார்கள். அந்தக் கவலை தோழி அன்னக்கிளிக்கு வேண்டாம்!’
“பிராட்டியாரின் கடிதத்தை அவரிடம் கொடுத்தால் தானே, திருமாறன் அவளைக் கண்டு பேசச் செல்வார்? அந்தக் கவலை உனக்கு வேண்டாம் என்று தான் சொல்கிறேனே. இதற்குள் உன் தலைவி திருமாறனிடம் சொல்ல வேண்டியதைச் சொல்லியிருப்பாள். இருவரும் அருகருகே அமர்ந்து ஆனந்தமாகக் கதை பேசிக்கொண்டிருந்தாலும் இருக்கக்கூடும்…’
அன்னக்கிளியின் முகத்தில் படர்ந்த வியப்பு உணர்ச்சியைக் கண்டு சிரித்தான் ஆந்தை. ‘ஆமாம், அன்னம். திருமாறன் இப்பொழுது அமுதவல்லியின் இல்லத்தில் தான் இருக்கிறார்…” என்றான்.
அவ்வாறானால் என்னைப் போகவிடு! என நகர முயன்றாள் அன்னம்.
“உனக்கு என்ன வேலை இப்போது அங்கே? திருமாறனோடு உரையாடிப் பொழுதைப் பொன்னாக்க முயன்று கொண்டிருக்கும் அமுதவல்லி உன்னைத் தேடப்போவ தில்லை. நீ ஏன் பறக்கிறாய்?” என்றான் அவன்.
அன்னம், உண்மையைச் சொல்கிறேன். எனக்கு உன்மீது வெகு நாட்களாகவே ஆசை. நான் உன்னைத் திருமணம் செய்து என் துணைவி ஆக்கிக்கொள்ளவே துடிக்கிறேன்…
‘எனக்கு மனம் இல்லாதபோது நீ ஏன் என்னை வற்புறுத்துகிறாயோ, எனக்குப் புரியவில்லையே!’ என்று அழாத குறையாகப் புலம்பினாள் அன்னக்கிளி.
‘உனக்கு என்மீது ஆசை இல்லை என்பதை நான் அறிவேன், அன்னம். ஆனாலும், என் ஆசையைத் தூண்டி விட்ட இன்பக் கிளியே, நான் உன் உள்ளத்திலும் ஆசையை வளர்த்துவிட முடியும். இந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது.நாம் இரண்டு பேரும் பாண்டி நாட்டில் தான் இருந்தாக வேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை. கட்டற்றவர்களாக எங்கும் சுற்றித் திரியலாம்.’
எனக்குச் சம்மதமில்லை. என்னை விட்டுவிடு என்று அலறினாள் அன்னம்.
“இம்முறை என்னிடமிருந்து எளிதில் தப்பி ஓட முடி யும் என்று மனப்பால் குடிக்காதே, பெண்ணே?” எனச் சொல்லி, வெறிச் சிரிப்பை ஒலி பரப்பினான் ஆந்தை.
அப்பொழுது ஆந்தையின் அகன்ற முதுகில் பலமான அறை ஒன்று விழுந்தது. அவன் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான்.
வாளின் பின்புறத்தால் முதுகில் ஓங்கி அறைந்துவிட்டு மற்றுமொரு அடி கொடுக்கச் சித்தமாக நின்ற திருமலைக் கொழுந்து அவன் பார்வையில் படவும், எயில் ஊர் ஆந்தை ன் முகம் பேயைக் கண்டு பயந்தவனின் முகம் போல் ஆயிற்று.
அவன் அறைக்குள் நழுவினான். கதவைச் சாத்தித் தாளிடும் முன்னரே திருமலையும் அவன் பின்னாலேயே புகுந்துவிட்டான்.
மீண்டும் என்னைக் காக்க வந்த தெய்வமே! என்று வணங்கி வாழ்த்தியது அன்னக்கிளியின் உள்ளம். அவள் கண்கள் மகிழ்வையும் நன்றியையும் காட்டின.
ஆந்தை அவளைக் கவனிக்காமலே உள் அறையினுள் பிரவேசித்தான்.
“அன்னம், நீ போய்விடு… வீட்டிற்கே போ!” என்று வழிகாட்டினான் திருமலை.
விடுதலை பெற்ற பறவைபோல் வெளிச்சம் நோக்கிப் பாய்ந்தாள் அன்னக்கிளி, வெளியே நின்ற மருதுபாண்டியனைக் கண்டதும், ‘இவரும் உடன் இருக்கையில் அவருக்குத் தீங்கு வரவே வராது’ என்று மனம் தேறினாள். உற்சாகத்தோடு தன் வழியே சென்றாள்.
அறையினுள் புகுந்த எயில் ஊர் ஆந்தை, திருமலையை முந்திக்கொண்டான். வேகமாகக் கதவை அடைத்துத் தாளிட்டான்.
ஆந்தை, நீ உள்ளேயே கிட. இனி நீ தப்பப்போவதில்லை என்ற திருமலைக்கொழுந்து, அங்கே கிடந்த பூட்டை எடுத்து வெளியே பூட்டி, சாவியைத் தன்வசமே வைத்துக் கொண்டான். வெளியே வந்து, வெளிப்புறப் பெரிய கதவையும் பூட்டினான்.
‘ஆந்தை சிறைக்குள் ஒடுங்கிக் கிடக்கட்டும். நாம் திருமாறனாரைக் கண்டு, அறிய வேண்டியன பற்றி அறிந்து கொள்வோம்,வா,மருது!’ என்று நடந்தான்.



