
பாண்டி நாட்டுக் கோவில்கள் பாலூர் கண்ணப்ப முதலியார்
9. திருவாடானை
இது பாண்டிய நாட்டுப் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்பதாவதாகும். இதனைத் திருஞானசம்பந்தர் ஒருவரே பாடியுள்ளார். ஆகவே, இதற்குப் பதிகம் ஒன்றே. இதனை அஜகஜபுரம் என்று வடமொழியாளர் கூறிக்கொள்வர்.(அஜம் – ஆடு, கஜம் – யானை) ஒரு சமயம் பிருகு முனிவர் துர்வாசரைக் காணச் சென்றார். சென்றவர் அவருக்கு வணக்கம் செலுத்திலர். அதனால் கோபங் கொண்ட துர்வாசகர், பிருகு முனிவரை ஆட்டுத் தலையும், யானை யுடலும் பெறுமாறு சபிக்க, அவ்வுருவுடன் இத்தலத்தை அடைந்து இறைவரைப் பூசித்து அச்சாபம் நீங்கப் பெற் றார். இதுவே இத்தலம் இப் பெயர் பெற்றதற்குக் காரணம். சூரியன் நீல ரத்னத்தைச் சிவலிங்கமாகப் பிரதிஷ்டை செய்து பூசித்தான். இதன் காரணமாக இவ்விலிங்க மூர்த்திக்கு ஆதிரத்னேஸ்வரர் என்ற பெயரும் உண்டு. கோயில் பெரியது.
இத்தலத்து விருட்சம் வில்வம், தீர்த்தம் சூரிய தீர்த்தம். இது திருக்கோயிலுக்கு வடகிழக்கில் உள்ளது. இறைவர் ஆடானை நாதர், அஜகஜேஸ்வரர். ஆதிரத்னேஸ்வரர் என்றும், இறைவியார் அம்பாயிரவல்லி, சினேகவல்லி என்றும் பெயர் பெறுவர்.
இத்தலத்தை அடையப் பல வழிகள் உண்டு. தேவ கோட்டை ரயில் நிலையத்திலிருந்து 23 கல் தொலைவிலும், காரைக்குடி ரயில் நிலையத்திலிருந்து 38 கல் தொலைவிலும், பரமக்குடி ரயில் நிலையத்திலிருந்து 32 கல் தொலைவிலும், இராமநாதபுரத்திலிருந்து 32 கல் தொலைவிலும், அரந்தாங்கியிலிருந்து 30 கல் தொலைவிலும், காளையார் கோவிலிலிருந்து கிழக்கே 21 கல் தொலைவிலும், திருப்புனவாயிலி லிருந்து தெற்கே மட்சாலையில் 12 கல் தொலைவிலும் உள்ளது. இவ் வழிகள் எல்லாம் பஸ் வசதிகளைப்பெற்றவை.
இரண்டாம் திருமுறை பதிகம் 112
பண் – நட்டராகம்
1. மாதொர் கூறுகந் தேற தேறிய ஆதி யான்உறை ஆடானை போதி னுல்புனைந் தேத்து வார்தமை வாதி யாவினை மாயு மே
(அ.சொ.) மாது – உமாதேவி,கூறு – பாகம்,உகந்து – விரும்பி, எறு – இரஷபம், உறை – வாழ் இடம், போது – மலர், புனைந்து – மாலையாகக் கட்டி, ஏத்துவார் – போற்றுவார்.
2. வீடி னுாமலி வேங்க டத்துநின்
றாட் லானுறை ஆடா னை
நாடி ஞானசம் பந்தன் செந்தமிழ்
பாட நோய்பிணி பாறு மே
(அ.சொ.) வீடினார் – இறந்தவர், மலி – மிகுந்த, வேங் கடம் – சுடலை. வேம் + கடம் – வேகும் + காடு. பிணி – நோய், நோய் – துன்பம் செய்யும், பாறுமே – நீங்குமே.
இப்பதிகத்தால் “யார் திருவாடானை என்னும் தலத்தை மலர்கொண்டு போற்றுகின்றார்களோ, அவர்களைத் தீவினைகள் துன்புறுத்தாது அவை நீங்கும். துன்பந்தரும் நோய் ஒழியும். துன்பம் நீங்கும்; முன்செய்த பாவங்கள் நீங்கும்” என்பன போன்ற கருத்துக்கள் பொருந்தியுள்ளன. இப்பதிகம் வழிபடும் முறையில் மலர்கொண்டு வழிபடுதலே சிறந்தது என்பதையும், அம்மலர்களும் நன்கு மலர்ந்த மலர்களாகவும், நல்ல அழகும் நிறமும் கொண்டனவாகவும் தேன் நிறைந்தனவாகவும், நல்லனவாகவும், சிறந்தனவாகவும், மணமுள்ளனவாகவும், தூய்மை (சுத்தம்) உடையனவாகவும் இருக்க வேண்டும் என்பதையும் நமக்கு நன்கு அறிவிக்கின்றது.
திருவாடானை நீர்வளமும் உடையது. அதனால் தான் ‘தண்புனல் சூடானை’ என்று சிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்தலம் தேவர்களாலும், அந்தணர்களாலும் பூசிக்கப்படுவது. இப்பதிகத்தைப் பாட நோயும் நீங்கும்.
சிறப்புத் தொடர்கள்:
“ஏத்துவார்தமை வாதியாவினை”
”மலர் தூவிக் கைதொழ வீடும் நுங்கள் வினைகள்”
”நாள்தொறும் வலங்கொள்வார் வினைமாயும்”
“கைதொழத் தீயவல்வினை தீருமே.’



