பாண்டி நாட்டுக் கோவில்கள் பாலூர் கண்ணப்ப முதலியார்

8. திருவிராமேச்சுரம்

இத்தலம் பாண்டிய நாட்டுப் பாடல் பெற்ற தலங்களில் எட்டாவது. இத்தலத்தைத் திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் பாடியுள்ளனர். இத் தலத்திற்குரிய பதிகம் மூன்று. இரண்டு திருஞானசம்பந்தரால் பாடப் பெற்றவை. ஒன்று திருநாவுக்கரசரால் பாடப்பட்டது.

இராமன் இராவண சம்ஹாரம் செய்தான். அதனால் அவனுக்குத் தோஷம் ஏற்பட்டது. அத் தோஷத்தைப் போக்கிக்கொள்ள இத்தலத்தில் இலிங்கஸ்தாபனம் செய்து இறைவனைப் பூசித்து அத்தோஷம் நீங்கப்பெற்றான். இந்தச் செய்திகளைத் தேவாரப் பதிகங்கள் நமக்குத் தெற்றத் தெளிய விளக்குகின்றன.

இலிங்கஸ்தாபனத்தின் பொருட்டு இலிங்கம் கொணர அனுமன் காசிக்குச் சென்றான். அவன் இலிங்கம் கொணரத் தாமதம் ஆயிற்று. ஆகவே,சீதை மணலையே இலிங்கமாகக் குவித்துச் செய்ய, அதனையே இராமன் பூசித்தான். இதுவே இராமலிங்கம். பின்னர் அனுமான் கொணர்ந்த இலிங்கம் இவ்விலிங்கத்திற்கு வடபக்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இது காசி விஸ்வநாதர் எனப்படும்.

இங்கு இலக்குமியை மணந்த சேதுமாதவர் சந்நிதியும் கண்டு தரிசித்ததற்குரியது. இத்தலம் சேது என்றும் கூறப்படும். இராமன் இலங்கைச்குச் செல்ல இங்கு அணை (சேது) கட்டிய காரணத்தால் இது சேது என்று கூறப்படுகிறது.

இத்தலம் தீர்த்த மகிமையுடையது. கோவிலுக்குள்ளேயே 14 தீர்த்தங்கள் இருக்கின்றன. இத்தலத்துக் கோயில் மிக மிகப் பெரியது. பெரிய பெரிய பிரகாரங்களை யுடையது. மேற்குக் கோபுரத்திற்கு அருகில் பாதாள ஸ்வாமி கோவில் ஒன்று உண்டு. மிகப் பழமையான கோவில். இராமேஸ்வரத்தில் உள்ள இறைவரும் இறைவி யாரும் கிழக்கு நோக்கி இருந்து காட்சி அளிக்கின்றனர். இங்குள்ள சேதுமாதவரையும், கணேசமூர்த்தியையும் உற்றுக் கவனித்தால், அவை மணற்கல்லால் செய்யப்பட்டவை என்பது புலனாகும். அச்சிலைகள் உதிர்ந்து கொண்டு வருவதையும் காணலாம். சொக்கட்டான் மண்டபம் பார்க்கத்தக்து. இந்த மண்டபம் எங்கும் எவ்விடத்தும் காணக்கூடாத அதி அற்புதமான மண்டபம். இம்மண்டபத்தில் இறைவர் அமர்ந்து அன்பர்கட்குக் காட்சி அளிக் கும் காலம், கண்டுகளித்தற்குரிய காலமாகும்.

மண்டபங்களிலும், பிரகாரங்களிலும் இராமநாதபுர சேதுபதிகளின் உருவங்களைக் காணலாம். மேற்குக் கோபுரம் மட்டும் முழுமையும் கட்டப்பட்டுக் காட்சி அளிக்கிறது. ஏனைய கோபுரங்கள் முற்றுப்பெறும் பேறு பெறவில்லை. இராமநாதஸ்வாமி கர்ப்பக் கிரஹத்தில் பல கல்வெட்டுக்கள் உள.

இத்தலத்தில் மாசி மாதம் பிரம் மோற்சவமும், ஆடி மாதம் அம்மன் உற்சவமும் நடை பெறும். அம்மன் தபசும் அம்மன் திருக்கல்யாணமும் கண்டு இன்புறுதற்குரியவை. தினமும் நடக்கும் அர்த்தசாமப் பள்ளியறைக் காட்சி கண்டு களித்தற்குரியது.

இத்தலத்து இறைவர் இராமநாதர், இராமநாதேஸ்வரர் என்றும், இறைவியார் பர்வதவர்த்தனி, மலைவளர் காதலி என்றும் கூறப்படுவர். இங்கு சிறப்புடை தீர்த்தங்கள் அக்கினி தீர்த்தம், இராம தீர்த்தம், இலட்சுமண தீர்த்தம். தனுஷ்கோடி முதலியன.

இத்தலம் இராமேஸ்வர ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ளது. சுமார் ஒரு மைல் தொலைவில் உள்ளது. இங்கு பல சத்திரங்கள் உண்டு. தங்குதற்கு எல்லா வசதிகளும் உண்டு. இத் தொண்டில் இங்குள்ள பிராமணர்கள் அதிகம் ஈடுபட்டு யாத்திரை காரணமாக வரும் அன்பர்கட்குப் பல விதத்திலும் பெரிதும் உதவி செய்கின்றனர்.

இக்கோயிலுக்கு இரண்டு கல் தொலைவில் கந்த மாதனகிரி என்ற மணல் மேடு இருக்கிறது. இங்கு ஒரு சிவாலயம் உண்டு. மணல் மேட்டில் இரண்டு பாதங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன. இவற்றை இராமர் பாதம் என்பர். இராமேஸ்வரத்திலிருந்து தெற்கே படகின் மூலம் 18 கல் சென்றால், தனுஷ்கோடியை அடையலாம். இராமேஸ்வர ரயில் நிலையத்திலிருந்து தனுஷ்கோடி நிலையத்தையும் அடையலாம். நிலையத்திலிருந்து ஸ்னான கட்டம் சிறிது தொலைவில் இருக்கிறது. மணலில் நடக்க வேண்டும். இராமன் தன் தனு(வில்) முனையால் கீறித் தீர்த்தம் உண்டாக்கினமையால் தனுஷ்கோடி என்ற பெயர் பெற்றதாகக் கூறுவர்.

மூன்றாம் திருமுறை பதிகம் 10

பண் காந்தார பஞ்சமம்

1. அலைவளர் தண்மதியோ டயலேயடக் கியுமை
முலைவளர் பாகமுயங் கவல்லமுதல வன்முனி
இலைவளர் தாழைகள்விம் முகானல்இரா மேச்சரம்
தலைவளர் கோல நல்மா லையன்தான்இருந் தாட்சியே.

(அ.சொ.) அலை – அலைகளையுடைய கங்கையை, தண் மதி – குளிர்ந்த சந்திரன், முயங்க – தழுவ, விம்மு – மிகுதியாக நிறைந்துள்ள, கானல் – கடற்கரைச் சோலை, கோலம் – அழகு.

2. தேவியை வவ்வியதென் இலங்கைத்தச மாமுகன்
பூவிய லும்முடிபொன் றுவித்தபழி போயற
ஏவிய லும்சிலைஅண் ணல்செய்தஇரா மேச்சரம்
மேவிய சிந்தையினர் கள்தம்மேல்வினை வீடுமே.

(அ.சொ.) தேவி – சீதை, தசமாமுகன் – பத்துத் தலை களையுடைய இராவணன், இயலும் – பொருந்தும், பொன் றுவித்த – அழித்திட்ட, ஏ – அம்பு, சிலை – வில், அண்ணல் – இராமன், (பெருமையில் சிறந்தவன்) மேவிய – பொருந்திய, வினை – தீவினை, வீடுமே – அழியுமே.

3. பகலவன் மீதியங்க மைக்காத் தோன்பதி யோன் தனை இகலழி வித்தவ னேத்துகோ யில்இரா மேச்சரம் புகலியுள் ஞானசம் பந்தன்சொன் னதமிழ் புந்தியால் அகலிடம் எங்கும்நின் றேத்தவல் லார்க்கில்லை அல்லலே.

(அ.சொ.) பகலவன் – சூரியன், மீது – தன் நகரின் மேலே, இயங்காமை – சஞ்சரிக்காமல் படி, காத்தோன் – தடுத் தவனாகிய இராவணன், இகல் – வலி, அழிவித்தவன் – அழியச் செய்த இராமன், ஏத்து – போற்றும், புகலியுள் – சீர்காழி யுள், புந்தியால் – அறிவினால், அல்லல் – துன்பம்.

இப்பதிகத்தால் இராமேச்சுரம் இராமனால் பூசிக்கப் பட்டது என்பதும், அவ்வாறு பூசிக்கப்பட்டதன் நோக்கம் இராவணனைக் கொன்றதனால் ஏற்பட்ட பழியினைப் போக்கிக் கொள்வதற்காகும் என்பதும், முக்கியமாக அறியப்படுகின்றன. இராமேஸ்வரம் கடற்கரையோரத்தில் உள்ள தலம் என்பதற்கேற்பத் தாழைகள் வளர்ந்துள்ள கடற்கரைச் சோலைகளையுடையது. புலால் நாற்றமும் வீசப் பெறுவது. இந்த இடத்தை இறைவர் ஆட்சியாகக் கொண்டுள்ளார். இத்தலம் இராமன் பூசிப்பதற்கு முன்பு இல்லாமல் இராமன் பூசித்த பிறகே ஏற்பட்டது என்பது. அண்ணல் (இராமன்) செய்த ‘இராமேச்சரம்’ என்னும் அடியால் விளங்குகிறது. இராமேச்சரம் பாவம் போக்கும் தலங்களில் மிக முக்கியமானது. அத்தலத்தை அடைந்த நல் மன முடையவர் பாவம் நீங்கும் என்பதை இப்பதிகம் அறிவித்து நிற்கிறது. இறைவன் ஈண்டு அன்பர்கட்கு அருள் செய்யும் பொருட்டு ஞானமும், நன்பொருளும் ஆகி நிற்கின்றான். இவ்வாறு நிற்பது நம் நன்மைக்கே ஆகும். இத்தலத்துப் பெருமானது திருப்பெயரைப் போற்றினாலே நோய் நீங்கும். இறைவன் தனக்குவமை இல்லாதவன் என்பது வள்ளுவர் போன்றார் கருத்து. அதனை அவரே “தனக்குவமை இல் லாதான்” என்றே குறிப்பிடுகிறார். அக்கருத்தே இங்கு ‘இணையிலி என்றும் இருந்த கோயில்’ என்று கூறப் பட்டுள்ளது. இணியிலி மட்டும் அல்லன். தன் செயலுக்குப் பிறர் துணையும் வேண்டாதவன். ஆதலின் துணையிலியும் ஆவன். ‘இவன் பாதம் போற்றத் துயர் நீங்கும்.’ இராமன் இறைவனை வழிபடும்போது, ‘வினை மூடிட இனி அருள் நல்கிடு’ என்று வேண்டினான். இறைவன் தான் ஒருவனாக இருந்தாலும், பலவாக இருக்கும் பொருள்களும் அவன் வடிவங்களே என்னும் குறிப்பும் இங்கு உண்டு. இறுதியில் ஞானசம்பந்தர் மக்களை நோக்கி உமக்கு அருள் ஆக வேண்டுமானால் “செல்வனை ஏத்தி வாழ்மின்” என்று உபதேசம் செய்கின்றார். மேலும், தம் திருக்கடைக் காப்பில், இத்திருப்பதிகத்தைத் தம் அறிவால் எங்குப் போற்றினாலும், அவர்கட்குத் துன்பம் இல்லை என்றும் அறிவிக்கின்றார். இதனால் இராமேஸ்வரம் போகாமலே இவ்விராமேஸ்வரப் பதிகத்தை ஓதினாலே போதுமானது. அதுவே துன்பம் போக்கும் என்பது தெரிகிறது.

இப்பதிகத்தால் இராமனைப் பற்றிய அரிய சில குறிப்புக்களை உணரலாம். அவை இராமன் பெருமையில் சிறந்தவன், சிறந்த வில்லாளி, குற்றமற்ற புகழுடையவன், கடல் அடைத்து இலங்கைக்குச் செல்ல வழி கண்டவன் என்பன.

இராவணனைப் பற்றி இப்பதிகத்தால் நாம் அறிவன். சீதையை மாயையால் காட்டில் வவ்வியவன், காமவேட்கையே காரணமாக வவ்வியவன், சனி, புதன், சூரியன், சுக்கிரன், சந்திரன் முதலான கிரகங்கட்குக் கோபம் வரும் படி நடந்து மகிழ்ந்தவன், (ஏனைய கிரகங்களையும் கூட்டிக் கொள்ளவும்) சூரியன் தன் நகர்மீது செல்லாதவாறு அவனுக்கு உத்தரவிட்டவன் என்பன.

“ஏத்தும் மாந்தர் பிணி பேருமே.” “பாதம் ஏத்தத் துயர் நீங்குமே” “செல்வனை ஏத்திவாழ்மின் அருளாகவே” “ஏத்த வல்லார்க்கு இல்லை அல்லலே” என்பன அருந் தொடர்கள்

மூன்றாம் திருமுறை பதிகம் 100

பண் – பழம் பஞ்சுரம்

திரிதரு மாமணி நாகம் ஆடத் திளைத்தொரு தீயழல்வாய் நரிகதிக் கஎரி ஏந்தி ஆடும் நலமேதெ ரிருந்துணர்வார்
எரிகதிர் முத்தம் இலங்கு கானல் இராமேச் சரமேய
விரிகதிர் வெண்பிறை மல்கு சென்னி விமலர் செயும்செயலே.

(அ.சொ.) மா – சிறந்த, மணி – இரத்தினம் இருக்கப் பெற்ற, திளைத்து – மகிழ்ந்து, கதிக்க – நடக்க, தீயழல்வாய் சுடலையில், எரி – மழுவாயுதம், ஏரி – தீபோல, கதிர் ஒளிவிடும் இலங்கு – விளங்கு. கானல் – கடற்கரைச் சோலை, மல்கு- நிறையும், விமலர் – மலரகிதரான இறைவர்.

தேவியை வவ்விய மென்இலங் கைஅரை யன் தன் திறல்வாட்டி
ஏவியல் வெஞ்சிலை அண்ணல் நண்ணும் இராமேச் சரத்தாரை
தாவியல் ஞான சம்பந் தன்நல்லமொழி யால்ந வின்றேத்தும் பாவில் மாலை வல்லார் அவர்தம்வினை ஆயின பற்றறுமே.

(அ.சொ.) தேவியை – சீதையை, வவ்விய – கவர்ந்த, அரையன் – அரசனான இராவணன், திறல் – வன்மை. ஏ – அம்பு. இயல் – பொருந்திய, வெஞ்சிலை – கொடிய வில், அண்ணல் – பெருமை மிக்க இராமன். நண்ணும் – சேரும். நா – நாவன்மை, நவின்று – சொல்லி, ஏத்தும் – போற்றும். பா- பாடல்களால், இயல் – அமைந்த, மாலை- பாமாலை, பற்று – பந்தம்.

இப்பதிகத்தால் அறியப்படுவன கீழ்வருவன: இராமேச்சரம் கடற்கரைத் தலம். ஆதலின், கடலில் சங்கும் சிப்பியும் மிகுதி. அவைகள் முத்துக்களைக் கரையில் ஈன்று செல்ல, அம் முத்துக்கள் ஒளி வீசிக்கொண்டிருக்கும். கடற்கரைச் சோலைகளும் உண்டு. அலைகள் கரையில் வந்து மோதிப் பின் செல்லும் அழகைக் காணலாம். தாழைகள் தம் இலைகளை மலர்த்தி விளங்கும். பக்கங்களில் சோலைகளும் உண்டு. அங்கு மலர்கள் மலர்ந்து மணம் வீசிக் கொண்டு, வண்டுகள் பாடுதலை நுகரும்போதும், கேட்கும் போதும் இன்பம் தோன்றும். வண்டுகள் பாடல் யாழ் இசை போல இருக்கும். இணைந்த மலர்களில் அன்னங்களும் அமர்ந்து காட்சி அளிக்கும்.

ஈண்டுள இறைவியார் திருப்பெயர் மலைவளர் காதலி என்பதை இப்பதிக மூன்றாம் பாடல் நன்கு அறிவித்து நிற்கிறது. இதுவே வடமொழியாளர்களால் பர்வத வர்த்தனி என்று தம் மொழியில் பெயர்த்து எழுதிக் கொள்ளப் பட்டதாகும். இறைவர் கரந்தை மலரையும் சூடுவர்.

இராமேச்சரம் குற்றமற்றவர் வணங்கிப் போற்றி வாழ்த்தும் இடம் என்றும், நல்லோர்கள் எக்காலத்தும் போற்றி வணங்கும் தலம் என்றும், அம்பு எய்தலில் வன்மைமிக்க இராமன் புகழ்ந்து போற்றி வணங்கும் இடம் என்றும் இப்பதிகத்தால் அறியலாம்.

இப்பதிக ஈற்றுப்பாடலால் ஞானசம்பந்தர் நாவன்மை மிக்கவர் என்பதும், அவர் நல்ல மொழிகளால் இப்பதிகத் தைப் பாடிப் போற்றி இருப்பதால், இப்பாமாலை பாடவல்லவர் வினைப்பந்தம் நீங்கும் என்பதும் கூறப்படுகின்றன. அருந்தொடர்கள்

ஏதமிலர் தொழுதேத்தி வாழ்த்தும் இராமேச்சரம்

என்றும் நல்லோர்கள் பரவி ஏத்தும் இராமேச்சரம்

ஏவலனார் (இராமன்) புகழ்ந்தேத்தி வாழ்த்தும் இரா [மேச்சரம்

நான்காம் திருமுறை பதிகம் 61

திருநேரிசை

1. பாசமும் கழிக்க கில்லா அரக்கரைப் படுத்துத் தக்க
வாசமிக் கலர்கள் கொண்டு மதியினால் மால்செய் கோயில் நேசமிக் கன்பி னாலே நிணைமின் நீர் நின்று நாளும்
தேசமிக் கான்இருந்த திருரா மேச் சுரமே

(அ.சொ.) பாசமும் – பாவபந்தங்களையும், அரக்கரை – இராவணன் முதலிய ராட்சதர்களை, படுத்து- அழித்து. மதியினால் – அறிவினால். தேசம் – ஒளி, மால்- திருமாலின் அவதாரமான இராமன்,

2. குன்று போல்தோ ளுடைய குணமி லாஅரக் கர்தமைக் கொன்று போர்ஆ ழியம்மால் வேட்கைத யால்செய்த கோயில் நன்று போல்நெஞ் சமேநீ நன்மை யையறிதி ஆயில்
சென்று நீதொழு துய்கண் டாய்திரு இராமேச் சுரமே

(அ.சொ.) ஆழி – சக்கரம், உய் – பிழைத்துக்கொள். இப்பதிகமும் இராமேச்சரம் இராமனால் தோற்றுவிக் கப்பட்டது என்பதை அறிவித்து நிற்கிறது.தான் செய்த பாவம் யாரை வழி பட்டால் போகும் என்பதை அறிந்து இராமன் இத்தலத்தைக் கண்டு இறைவரைத் தாபித்துப் பூசித்ததால் ‘மதியினால் மால் செய் கோயில்’ என்று இத் தலம் சிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்பதிகம் மக்களுக்கும், தம் நெஞ்சுக்கும் நல் அறிவு புகட்டும் முறையில் பாடப்பட்டுள்ளது. “நேசமிக்கு அன்பினால் நீங்கள் நினையுங்கள்” என்று மக்களை நோக்கியும், “மனமே இரா மேச்சுரத்தையே சரணாகப் பற்றி ஈசனிடத்தே போற்றுதல் செய்க; நீ ஆன்மையை உணர்ந்தால் இத்தலத்தை அடைந்து தொழுது பிழைக்க: இறைவரைச் சேர்க; இரா மேச்சுரம் சேர்க. இத்தலத்தைத் தேடி வாழ்ந்தால் உனக்கு நன்னெறி கூடும்” என்றும் கூறி நெஞ்சிற்கு அறிவுறுத்தினர்.

இராமேச்சரத்தை வேண்டிக் கொள்ளும் குணம் மிக்கு ஆர்வத்தால் கூடுபவர் நல்ல குறிப்புடையவர் என்பது அப்பர் கருத்தாகும். இத்தலத்தைத் தம் கண்களால் கண்டு வணங்குபவர்களுக்கு நோய், வினை முதலியன நாளுக்கு நாள் குறைந்து போகும். மேலும், யார் தலையினால் வணங்குகின்றார்களோ, அவர்கள் தவத்தில் ஆழ்வர் என்பதும், தலைவனாம் சிவபெருமான் இடத்தே வணங்கும் பேறு பெறுவர் என்பதும் இராமேச்சர வணக்கத்தால் ஏற்படும் பேறாக அப்பர் பெருமான் குறிப்பிடுகிறார்.

பெரும் பாலும் அப்பர்பெருமான் தம் ஈற்றுப்பாடலில். அப்பதிகத்தை ஓதுவதால் ஏற்படும் பயன் இன்னது என்பதைக் குறிக்கும் வழக்கம் இல்லாதவர். ஆனால், இவ்விடத்தில் இப்பதிக ஈற்றுப்பாடலில் யார் இப்பத்துப் பாடல்களை உரைக்கின்றனரோ அவர்கள் அன்பினால் இறைவர் மனத்தால் நினைக்கும் பேறுபெறுவர் என்று குறிப்பிடுகின்றார்.

இதில் வரும் அருந்தொடர்: “திரைகள் (அலைகள்) முத்தால் வணங்கும் திரு இராமேச்சுரம்” என்பது.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !