பாண்டி நாட்டுக் கோவில்கள் பாலூர் கண்ணப்ப முதலியார்

11. திருப்பூவணம்

இது பாண்டிய நாட்டுப் பாடல் பெற்ற தலங்களுள் பதினோராவது ஆகும். இதனைப் புஷ்பவனம் என்றும் காசிக்கு நிகரான தலம் என்றும் கூறுவர். இத் தலத்தில் பொன்னனையாள் என்னும் பரதநாட்டியம் செய்யும் மாது, மிகுந்த பக்தியுடையவளாய்த் திகழ்ந்தாள். அவள் சிவபெருமான் அருளால் சோமாஸ்கந்த மூர்த்தம் செய்து அதன் அழகைக் கண்டு கன்னத்தைக் கிள்ளி முத்தம் இட்டுக்கொண்டனள் என்ற குறிப்பை இத்தலத்துச் சோமாஸ்கந்தர் வடிவத்தின் கன்னத்தில் அமைந்துள்ள நகக் குறியால் உணரலாம். இதனால் இத்தலத்து இறைவர் அழகியபிரான் என்றும் கூறப்படுகின்றனர். இத்தலத்தை அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவரும் பாடி யுள்ளனர். அப்பர் பாடிய பதிகம் ஒன்றும்,சம்பந்தர் பாடிய பதிகம் இரண்டும், சுந்தரர் பாடிய பதிகம் ஒன்றும் ஆக நான்கு தேவாரப் பதிகங்கள் உண்டு. திருக்கருவூர்த் தேவர் பாடிய திருவிசைப்பா ஒன்றும் உண்டு. ஆனிமாதம் பிரம்மோற்சவம் நடைபெறும்.

இத்தலத்து இறைவர் பூவணநாதர். தேவியார் மின்னம்மை,விருட்சம் பலா, தீர்த்தம் வைகை. இது கோவிலுக்கு எதிரே ஓடுகிறது.

இத்தலம் மதுரைக்குக் கிழக்கே 11 கல் தொலைவில் உள்ளது. திருப்பூவண நிலையத்துக்குக் கிழக்கே அரை மைல் தொலைவில் உள்ளது.

முதல் திருமுறை பதிகம் 54

பண் – தக்கேசி

1. அறையார் புனலும் மாமலரும் ஆடரவார் சடைமேல் குறையார் மதியம் சூடி மாதோர் கூறுடை யானிடமாம் (கும் முறையார் முடிசேர தென்னர்சேரர் சோழர்கள்தாம் வணங் திறையார் ஒளிசேர் செம்மை ஓங்கும்தென் திருப்பூவணமே

(அ.சொ.) அறை – ஓசை, ஆர் – பொருந்திய, புனலும் – நீரும், மா – சிறந்து, ஆம் – ஆகும், அரவு+ஆர், அரவு – பாம்பு – குறையார் மதியம் – பிறைச் சந்திரன், மாது – உமாதேவி. கூறு – பாகம், தென்னர் – பாண்டியர், திறையார் – கப்பங்கட்டும் அரசருடைய, ஒளி – புகழ்கள்.

2. திண்ணார் புரிசை மாடம்ஓங்கும் இதன் திரும்பூவணத்துப் பெண்ணார் மேனி எம்மிறையைப் பேரியல் இன்தமிழால்நண்ணார் உட்கக் காழிமல்கு ஞான சம்பந்தன் சொன்னபண்ணார் பாடல்பத்தும் வல்லார் பயில்வது வானிடையே.

(அ.சொ.) புரிசை – மதில், மாடம் – மாளிகை, நண்ணார் – பகைவர், (புறச்சமயத்தவர்) உட்க – நடுங்க, மல்கு – பொருந்திய, பயில்வது – வாழ்வது, வானிடை – தேவலோகத்தில்.

திருப்பூவணம் முடியுடை வேந்தராலும் வணங்கும் சிறப்புடையது என்பதை முதற்பாடல் அறிவித்து நிற்கிறது. மேலும், இது செம்மை மிகும் பதியும் ஆகும். இப்பதி அழகும் செல்வமும் உடையது. பெரியோர்கள் வாழும் பதியுமாகும். மேலும், நெல்லும் கரும்பாலைகளும் நிறைந்த பதி. வைகை நீர் பரந்து பாயும் வளமுடையது. வைகை மணியையும் பொன்னையும் கொழிக்கும்பதியாகும். உலகத்தவர் பலர் கூடிப் புகழும் தன்மையது. தேரோடும் திருவீதியுடையது. மாடம் ஓங்கும் பதியும் ஆகும். குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த பதி. முன்றில்களில் தென்றல் உலவும் பதி. சதிபதிகள் தம்முள் ஒத்துப் புணர்ச்சி இன்பம் துய்த்து வாழ்வர். பாடல்களை இசை தவறாது இசைத்துக் கொண்டிருப்பர். செம்மையான தாமரை தேனைச் சிந்தும். இங்குள்ள மாளிகைகள் மலைபோல் வெற்றிக்கு உறைவிடமாய்க் காணப்படும். மதில்கள் மாளிகைகளின் உயர்ச்சியைப் பாராட்டி அவற்றிற்குப் பரிசுகளும் தருமாம். மதில்களும் வன்மை மிக்கு இருக்கும். இவையே இப்பதிகம் நமக்கு அறிவிப்பனவாகும். ஈற்றுப் பாடலால் இப்பதிகத்தைப் பாடுபவர் வானுலகில் வாழ்வர் என்பதை அறிகிறோம்.

மூன்றாம் திருமுறை பதிகம் 19

பண் – காந்தாரப் பஞ்சமம்

1. மாதமர் மேனிய னாகி வண்டொடு
போதமர் பொழிலணி பூவ ணத்துறை
வேதனை விரவலா அரணம் மூன்றெய்த
நாதனை அடிதொழ நன்மை ஆகுமே

(அ.சொ.) மேனியன் – உடம்பினை யுடையவன். போது – மலர் – சோலை, உறை – வாழும், விரவலர் – பகைவர், அரணம் – கோட்டை, செய்த – அழித்த.

2. புண்ணியா தொழுதெழு பூவணத்துறை
அண்ணலை அடிதொழு தந்தண் காழியுள்
நண்ணிய அருமறை ஞான சம்பந்தன்
பண்ணிய தமிழ்சொலப் பறையும் பாவமே.

(அ.சொ.) உறை – வாழும், அண்ணல்-பெருமையில் சிறந்த சிவபெருமான், அம் – அழகு, நண்ணிய – பொருந்திய, பறையும் – நீங்கும்.

இப்பதிகம் திருப்பூவணத்து இறைவர் திருவடிகளைத் தொழ நன்மை உண்டாகும் என்பதை அறிவுறுத்துகிறது. இதிலும், திருப்பூவணத்து இயற்கை அழகு கூறப்படுகிறது. இங்குள்ள சோலைகளில் வண்டுகள் மலர்களில் ஒலித்துக் கொண்டிருக்கும் என்பது பேசப்படுகிறது. திருப்பூவணம் ‘துயர் நீங்கவேண்டும், நோயும் வினையும் ஒழிய வேண்டும்’ என்னும் எண்ண முடையவர்களால் வணங்கப்படுவதை உணரலாம். இதனால் இத்தலத்தைத் தொழுபவர் நோயும் துயரும் தீரும் என்பது புலனாகின்றது. இத்தலத்துச் சோலையில் குருந்தம், மாதவி. கொங்கம். மல்லிகை, புன்னை, முதலிய மலர்ச் செடிகள் மிகுதியாகும்.

திருஞானசம்பந்தர் இறைவனை மலர்மாலை புனைந்து போற்றுவதையே இன்பம் என்கின்றனர். நம் கடமையும் இதுவாகும் என்று அறிவுறுத்துகின்றனர். திருப்பூவணம் புண்ணியர்களால் தொழப்படுவது என்பது திருஞானசம் பந்தர் கருத்து. இப்பதிகம் பாடப் பாவம் ஒழியும் என்ப தையும் உணர்க. இப்பதிகத்தில் “அடிதொழ நன்மையாகும்.” “அடிதொழப் பிழை இல்லை,” “கழல் தொழ அல்லல் இல்லை.” அடியவர்க்கு இல்லை பாவம்” “மலர் புனைந்து ஏத்தல் இன்பம்,” அடிதொழுதேத்தல் இன்பம் என்பன என்றும் மறவாது நம் மனத்தில் கொள்ள வேண்டிய தொடர்களாம்.

ஆறாம் திருமுறை பதிகம் 13

திருத்தாண்டகம்

1. வடியேறு திரிசூலம் தோன்றும் தோன்றும் வளர்சடைமேல் இளமதியம் தோன்றும் தோன்றும்கடியேறுகமழ் கொன்றைக் கண்ணி தோன்றும் காதில்வெண் குழைதோடு கலந்து தோன்றும் இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும் எழில்திகளும் திருமுடியும் இலங்கித் தோன்றும் பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும் பொழில்திகழும் பூவணத்துஎம் புனித ஓர்க்கே

(அ.சொ.) வடி – கூர்மை, ஏறு – ஏறிய, கடி – வாசனை கண்ணி – மாலை, குழை – ஆண்கள் காதணி, தோடு – பெண்கள் காதணி, இறைவர் – அம்மை அப்பர் வடிவுடன் திகழ்தலால் இவ்வாறு கூறினர். இடிஏறுகளிற்றுரிவை – இடிபோல முழங்கும் யானையின் தோல், எழில் – அழகு, இலங்கி – விளங்கி திரு – அழகிய, பொடி – விபூதி, பொலிந்து – விளங்கி பொழில் – சோலை, புனிதன் – தூய்மையான இறைவன்.

2. ஆரொருவர் உள்குவார் உள்ளத் துள்ளே அவ்வுருவாய் நிற்கின்ற அருளும் தோன்றும் வாருருவப் பூண்முலை நல்மங்கை தன்னை மகிழ்ந்தொருபால் வைத்துகந்த வடிவம் தோன்றும் நீருருவக் கடலிலங்கை அரக்கர் கோனை நெறுநெறென ஆடர்த்திட்ட நிலையும் தோன்றும் போருருவக் கூற்றுதைத்த பொற்புத் தோன்றும் பொழில் திகழும் பூவனத்துஎம் புனிதனுர்க்கே

(அ.சொ.) உள்குவார் – நினைப்பவர். வார் – கச்சு உகந்த – மகிழ்ந்த, அடர்த்திட்ட – அழித்த, கூற்று – இயமனது தூதன், பொற்பு – அழகு.

இப் பதிகத்தில் முருகப்பெருமான் இணைத்துப் பேசப்பட்டிருக்கின்றார். மேலும் இதில் “மணியார்’; வைகைத் திருக்கோட்டில் நின்றதோர் திறமும் தோன் றும்” என்ற குறிப்பும் உண்டு. இது வந்தி என்னும் வாணிச்சியின் பொருட்டு வைகை நீர் வெள்ளத்தைத் தடுக்க வந்த இறைவர் கூலி ஆளாக நின்ற திருக்கோலக் குறிப்பை அறிவிப்பதாகும். சண்டீச நாயனார்க்கு முடிமாலை அணிந்ததையும் இத்தாண்டகப் பதிகம் அறிவிக்கின்றது. இறைவர் யார் யார் எவ்விதத் தோற்றத்தோடு நினைக் கின்றனரோ அவர் அவர்கட்கு அவ்விதத் தோற்றத் தோடு சென்று அருள்புரியும் நிலையும் இதில் அழகுறப் பாடப்பட்டுள்ளது.

ஏழாம் திருமுறை பதிகம் 11

பண் – இந்தளம்

1. திருவுடை யார்திரு மாலய னாலும்
உருவுடை யார்உமை யாளையோர் பாகம்
பரிவுடை யார்அடை வார்வினை தீர்க்கும்
புரிவுடை யார்உறை பூவணம் ஈதோ

(அ.சொ.) திரு – அழகு, அயன் – பிரமன்,பரிவு – அன்பாக. புரிவு – விருப்பம்.

2. சீரின் மிகப்பொலி யும்திருப் பூவணம்
ஆர விருப்பிட மாஉறை வானை
ஊரன் உரைத்தசொல் மாலைகள் பத்திவை
பாரி லுரைப்பவர் பாவம் அறுப்பரே

(அ.சொ.) பொலியும் – விளங்கும். ஆர் – பொருந்த. ஊரன் – திருநாவலூரனாகிய சுந்தரர், பாரில் – பூமியில்.

திருப்பூவணநாதர் தம்மை எண்ணியும் இருந்தும், கிடந்தும் நடந்தும், அண்ணலே என்று கூறியும் அடைந்தவர் எவராயினும் அவர்கள் வினையைப் போக்குவர். இத்தலத்து இறைவி திருப்பெயர் மின்னனையாள் எனப் பதிகம் கூறுவதைக் காணலாம். இறைவர் தம்மை மனம் உருக நினைப்பவர் மனத்தில் உறைபவர் என்பதும் கூறப்பட்டுள்ளது. திருப்பூவணம் சீருடையது என்பதும் இதனால் அறியலாம். இப்பதிகத்தைப் பாடுபவர் பாவம் அறுப்பர் என்றும் அறிக.

திருவிசைப்பா

திருவருள் புரிந்தாள்ஈண்டு கொண்டிங்கன் சிறியனுக் கினியது காட்டிப் பெரிதருள் புரிந்தானந்த மேதருநின் பெருமையில் பெரியதொன் றுளதே மருதர சிருங்கோங்கின் மரஞ்சாடி வரைவளம் கவர்ந்திழி வையைப் பொருதிரை மருங்கோங்கா வணவீதிப் பூவணம் கோயில் கொண்டாயே

(அ. சொ.) ஆளாண்டு – ஆளாக ஆட்கொண்டு, உளதோ – இருக்கிறதா? மருது, அரசு, கோங்கு – இவை மரப் பெயர்கள். சாடி – முறித்து, வரைவளம் – மலைபடு பொருள் களின் வளங்களை, இழி – பாயும்,பொரு – கரையை மோதும், திரை – அலை, மருங்கு – பக்கத்தே, ஆவணம் – கடை

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !