பாண்டி நாட்டுக் கோவில்கள் பாலூர் கண்ணப்ப முதலியார்

பாண்டி நாட்டுக் கோவில்கள்

தமிழ் நாடு பலவகைகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. அப்படிப் பகுக்கப்பட்ட வகைகளுள் பாண்டிய நாடு என்பதும் ஒன்று. இப்பாண்டிய நாட்டில் இறைவன் உறைவிடங்களாக உள்ள கோவில்கள் பலவாக இருந் தாலும், அவற்றுள் நால்வர்களால் பாடப்பட்ட பெருமை சான்ற தலங்கள் பதினான்காகும். அவையே மதுரை (இது திருவாலவாய் என்றும் கூறப்படும்.) திருவாப்பனூர், திருப் பரங்குன்றம், திருவேடகம், திருக்கொடுங்குன்றம், திருப்புத்தூர், திருப்புனவாயில், திருவிராமேச்சுரம்,திருவாடானை, திருக்கானப் பேர். (இதனைக் காளையார் கோவில் என்பர்) திருப்பூவனம், திருச்சுழியல், திருக்குற்றாலம், திருநெல்வேலி என்பன.

மதுரை (திருவாலவாய்) குலசேகரபாண்டியன் இதனைத் திருநகரமாகக் கண்டனன். அதன் பின் சிவபெருமான் தன் சடையில் உள்ள பிறையிலிருந்து சிறிது மதுவை (தேனை) தெளித்தார். அதனால் இது மதுரை என்ற பெயரைப்பெற்றது. வருணன் ஒரு முறை மதுரையை அழிக்க எண்ணம் கொண்டான். அதற்காக ஏழுமேகங்களையும் அனுப்பி அடா மழை பெய்யக் கட்டளை இட்டான். அது போது சோமசுந்தரப் பெருமான் மதுரையின் நான்கு எல்லைகளுக்கும் நான்கு மேகங்களை ஏவ, அவை கூடமாகக் கவிந்து மதுரை அழியாதபடி காப்பாற்றின. அதனால் நான்மாடக் கூடல் என்ற பெயரைப் பெற்றது. மதுரையின் எல்லை எது வரையுள்ளது என்பதைப் பாண்டியன் அறிய சிவபெருமான் தம் உடம்பில் உள்ள பாம்பின் மூலம் செய்ததால், மதுரை திருவாலவாய் என்ற பெயரைப்பெற்றது. இத் தலத்து விருட்சம் கடம்பமரம் ஆதலின், கடம்பவனம் என்னும் பெயரை யுடையது. சிவபெருமான் மீனாட்சி யம்மையாருடன் இருந்து அன்பர்கட்குக் காட்சி கொடுப் பதனால் பூலோககயிலாயம், சிவராஜதானி என்ற திருப்பெயர்களையும் பெற்றது. தமிழ்ச் சங்கம் இருந்த இடம் இதுவே. இத்தலத்தில்தான் சிவபெருமான் அறுபத்து நான்கு திருவிளையாடல்களைச் செய்தார். மூர்த்திநாயனார் பிறந்து பின்பு விபூதி, உருத்திராட்சம், சடை முடிகளைக் கொண்டு அரசாட்சி செய்த இடம்.

தெடுமாற நாயனார், இவரது மனைவியார் மங்கையர்க்கரசியார், மந்திரி குலச்சிறைநாயனார் வாழ்ந்த இடம். வினாயகர் முருகன், இந்திரன், வருணன், இராமலட்சுமணர் பூசித்துத் தாம் தாம் விரும்பியதைப் பெற்ற தலம். இத்துணைப் பெருமை வாய்ந்த இத்தலம் மதுரை மீனாட்சி கோவில் என்ற பெயரால் சிறப்புற்று விளங்குகிறது. தருமபுர ஆதீன முதற்பெருங் குருமூர்த்தியாகிய குருஞானசம்பந்த சுவாமிகள் சொக்கலிங்கப் பெருமானைப் பெற்ற கோயில். இக்கோயில் மூன்று பிராகாரங்களை யுடையது. ஒன்பது கோபுரங்களைக் கொண்டது. இங்கு ஆயிரக்கால் மண்டபம் அரியநாத முதலியாரால் கட்டப்பட்டது. அவரது உருவம் இம் மண்டபத்தின் முன்பாகம் உள்ள ஒரு தூணில் செதுக் கப்பட்டுள்ளது. மற்றொரு தூணில் உள்ள யாளியின் வாயில் குண்டு சுழன்று கொண்டிருக்கிறது. கோயிலுக்குக் கிழக்கில் வெளியில் வசந்த மண்டபம் உள்ளது. இது புதுமண்டபம் என்றும் கூறப்படும். இங்கு நாயக்க மன்னர் களின் உருவச் சிலைகளைக் காணலாம். மற்றும் பல உருவங் களையும் காணலாம்.

மதுரைக் கோயிலின் மதிலுக்குத் தனிப் பெருமை யுண்டு. அதனால்தான் “மதுரை மதில் அழகு’ என்னும் பழமொழியும் வழங்குவதாயிற்று. வெளிப் பிராகாரத்தில் உள்ள ஒரு பெரிய கல் தூணில் பல சிறிய தூண்கள் அடங்கியிருக்கின்றன. இத்தூணைத் தட்டினால் ஏழ் இசை ஒலிகள் கேட்கும்.

கோயிலுக்குள் பார்க்கக் கூடியவை :

மீனாட்சியம்மன் சந்நிதிக்கு வடக்கே உள்ள ஒரு பழைய கோயில் நந்தீஸ்வரர் கோயில், இது சுவாமி சந்நிதியில் திருவாயிலின் பக்கத்தில் வடக்கு முகமாக இருக்கிறது.

பொற்றாமரைக்குளம் கோயிலுக்குள் உள்ளது. இக்குளத்தைச் சுற்றியுள்ள மண்டபங்களில் இத் தலத்தில் சோமசுந்தரப் பெருமான் நடத்திய அறுபத்துநான்கு திருவிளையாடல்கள் சித்திரத்தில் எழுதப்பட்டிருப்பதைக் காணலாம். இக்குளத்தில் பொற்றாமரை இல்லை என்றா லும், இப்போது, காசிமடத்துத் தலைவராம் திருப்பனந்தாள் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி அருள்நந்தித் தம்பிரான் சுவாமிகள் செய்தமைத்த பொற்றாமரை ஒன்று மிதந்து கொண்டிருப்பதைக் கண்கூடாகக் காணலாம்.

அர்த்த மண்டபம், மகா மண்டபம், மணி மண்டபம். அறுகால் பீடம் முதலியவற்றைக் காணலாம். இவைகளே அன்றி அஷ்டசித்தி மண்டபம், மீனாட்சி நாயக்கர் மண்டபம், கல்யாண மண்டபம், வீரவசும்புரான மண்டபம். ஆடிவீதி, நிறுதி வீதி மண்டபம், சம்பந்தர் மண்டபம், அறுபத்து மூவர் மண்டபம் முதலியனவும் உண்டு.

இந்த ஆலயத்துள் ஐந்து சபைகளையும் காணலாம். அவையே கனகசபை, ரசிதசபை, இரத்தினசபை, தாம்ர சபை, இந்திரசபை. ரசிதசபையாகிய வெள்ளியம்பலத்தில் உள்ள நடராஜர் மற்றைய நடராஜ உருவங்களைப் போல் இடக்காலைத் தூக்கி நடனம் பண்ணாமல் வலக்காலைத் தூக்கி நடனம் புரியும் பாவனையில் காட்சியளிக்கிறார். இது ஒரு பாண்டியன் பொருட்டுக் கால்மாறி ஆடிய குறிப்பினைக் காட்டுவதாகும்.

கிளிக்கூண்டு மண்டபம்: இதில் பஞ்சவர்ணக் கிளிகள் வைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள கருங்கல் தூண்களில் பஞ்சபாண்டவர் உருவங்களைக் காணலாம்.

முக்குறுணி விநாயகர்: இவர் மிகப் பெரிய உருவுடன் திகழ்கிறார். இவருக்கு ஒவ்வோர் ஆண்டும், விநாயகர் சதுர்த்தியன்று முக்குறுணி அளவு அரிசியினால் ஒரே கொழுக்கட்டை செய்து நிவேதனம் செய்யப்படுகிறது. பதினாறு கால் மண்டபத்தில் உள்ள வீரபத்ரமூர்த்தி, காளி, பத்திர காளி உருவங்கள் பார்க்கத்தக்கவை. சுவாமி சந்நிதியின் வாயிலில் எத்தலத்திலும் காணப்படாத காயத்ரி, சாவித்திரி மந்திரங்களின் சிலைகள் உள்ளன.

எல்லாம் வல்ல சித்தர் கோயில், சங்கப் புலவர்களை வைத்திருக்கும் மண்டபம், சாட்சி சொன்ன வன்னிமரம், கிணறு, லிங்கம் முதலியனவும் பார்க்கவேண்டியவைகள். மீனாட்சியம்மன் கோயிலுக்குக் கீழ்க்கோபுரத்தருகே யுள்ள மதுரை வீரன் கோயிலையும் பார்த்தல் வேண்டும்.

மதுரைத் தலத்து இறைவர் சொக்கலிங்கமூர்த்தி. சோமசுந்தரர், அடியார்க்கு நல்லான் முதலிய பெயர்களால் குறிப்பிடப்படுவார். மதிஅழகர் என்னும் தமிழ்ப் பெயரே சோமசுந்தரர் என்று மொழி பெயர்க்கப்பட்டது.

இறைவியார் திருப்பெயர்கள்: அபிஷேகவல்லி, தமிழ் அறியும் பெருமாட்டி, அங்கயற்கண்ணி என்பன. அங்கயற் கண்ணி என்பதே மீனாட்சி என்று மொழி பெயர்க்கப் பட்டது. தேவாரத்தில் அங்கயற்கண்ணி என்றே உள்ளது. விநாயகர், சித்திவிநாயகர், தலவிநாயகர். இத்தலத்துக்கு உரிய தலவிருட்சம் கடம்பு; தீர்த்தம், பொற்றாமரைக்குளம்; எழுகடல், வைகை, வைகையாறு. மதுரையை அழகு செய்யும் இடங்களில் வைகையாறும் ஒன்று. இத் தலத்திற்குரிய தேவாரப் பதிகங்கள் பதினொன்று ; திருவாசகப் பாடல்களும் உண்டு.

திருஞானசம்பந்தர் இத் தலத்தைப் பாடிய பதிகம் முதல் திருமுறையில் ஒன்று. இரண்டாம் திருமுறையில் மூன்று, மூன்றாம் திருமுறையில் ஆறு. திருநாவுக்கரசர் இத் தலத்தைப் பற்றிப் பாடிய பதிகம் ஆறாம் திருமுறையில் ஒன்று. சுந்தரர் இத்தலத்தைப் பற்றிய பாடிய பாடல் அகப்பட்டிலது.

மதுரை மா நகரில் பார்க்கவேண்டிய இடங்கள்: திருமலை நாயக்கன் மகால், மாரியம்மன் தெப்பக்குளம், இக்குளத் திற்கு எதிரே உள்ள கருமுத்து, தியாகராய செட்டியார் பார்வையில் நடைபெறும் கலைக்கல்லூரி, ஸ்டேஷன் எதிரில் உள்ள மங்கம்மாள் சத்திரம், கூடல் அழகர் பெருமாள் கோயில் முதலியன. போக்கு வரவுக்கு வேண்டிய வண்டி வசதிகள் பலவுண்டு.

மதுரையம்பதியில் நடைபெறும் பல திருவிழாக்கள் வாயினும் அவற்றுள் கண்டுகளிக்க வேண்டிய திருவிழாக்கள் சில உண்டு. அவையே சித்திரை மாதம் நடைபெறும் சைத்ரோற்சவம். இதில் மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் விசேடமானது. தைமாதம் நடைபெறும் தெப்போற் சவம். இது மாரியம்மன் தெப்பக்குளம் என்னும் வண்டியூர்த் தெப்பக்குளத்தில் நடைபெறும். ஆவணி மாதம் நடை பெறும் ஆவணி மூல உற்சவம். இதில் பிட்டுக்கு மண்சுமந்த உற்சவம் சிறப்புடையது. மார்கழி மாதம் நடைபெறும் படி அளக்கும் உற்சவமும் சிறப்புடையது.

மதுரையம்பதி ஆலயம் மதுரை ஸ்டேஷனுக்குக் கிழக்கே கல்சாலையில் முக்கால் மைலில் உள்ள து.

மதுரை யிலிருந்து பஸ் மூலம், கல்லழகர் கோவிலையும் சென்று தரிசிக் கலாம். இது வைஷ்ணவ தலமாய் இப்போது இருந்தாலும், முருகன் தலமும் ஆகும். பழமுதிர்சோலை என்றும் இது கூறப்படும்.

மதுரையிலிருந்து பஸ் மூலம் மாணிக்கவாசகர் பிறந்த திருத்தலமாகிய திருவாதவூரையும் கண்டு தரிசிக்கலாம். அங்கு வாதபுரீஸ்வரர் கோவிலும், வாதவூரார் கோவிலும் உண்டு. ஏரிக்கரையில் புருஷ மிருக சிலையையும் காணலாம்

தேவாரம்

முதல் திருமுறை 94-வது பதிகம்

பண் குறிஞ்சி

1. நீல மாமிடற் றால வாயினான்
பால தாயினார் ஞாலம் ஆள்வரே

(அ.சொ.) மாமிடறு – பெரிய கழுத்து. ஆலவாயினான் – திருவாலவாயாகிய மதுரையில் உள்ள சோமசுந்தரப் பெருமான், பாலதாயினார் – இறைவன் பக்கம் சேர்ந்தவர், ஞாலம் – உலகு.

2. அடிகள் ஆலவாய்ப் படிகொள் சம்பந்தர்
முடிவில் இன்தமிழ் செடிகள் நீக்குமே.

(அ.சொ.) அடிகள் – இறைவன், படி – நல்ல, முறைமை செடிகள் – நாம் செய்த வினைகளை.

இப் பதிகம் பதினோரு பாடல்களை உடையது. இதன் மூலம் திருஞானசம்பந்தர் நமக்குப் பல உபதேசங்களையும், உறுதிமொழிகளையும் கூறி அருளுகிறார்.

மக்களே! நீங்கள் இயமவாதனை அழிய வேண்டுமானால் மதுரைச் சொக்கேசனது குண விசேடங்களையே சொல்லுங்கள். அவனது திருவடிகளைச் சிந்தனை செய்யுங்கள் அவனை வாயாரப்பாடி, மனமாரத் தேடி வாழுங்கள் என்பனவற்றை,

சீலமே சொலீர் காலன் வீடவே
பந்தியார் கழல் சிந்தை செய்ம்மினே
பாடியே மனம் நாடி வாழ்மினே

என்ற தொடர்களால் கூறியருளினர். இவை உபதேச மொழிகள். “யார் மதுரைப் பெருமானார் பக்கம் சார்கின்றனரோ, அவர்கள் உலகையாளும் அரசப் பதவி பெறுவர். மனத்தில் எண்ணித் தொழுதால் இன்பம் பெறுவது உறுதி. இறைவன் கழலிணைகளை நம்பி வாழ்பவர்களுடைய துன்பம் அழியும். சுந்தரேசப் பெருமான் புகழ்களைக் கூறும் மன முடையவர்கள் இரக்கமான மனத்தினைப் பெறுவர். இஃது உண்மை” என்பன உறுதிமொழிகள். இவற்றை “ஆலவாயி லான் பாலதாயினார் ஞாலம் ஆள்வர்” “எண்ணியே தொழத் திண்ணம் இன்பமே” “கழல் நம்பி வாழ்பவர் துன்பம் வீடுமே” “உரைக்கும் உள்ளத்தார்க்கு இரக்கம் உண்மையே” என்ற திருவாக்குகளால் காணலாம்.

இப் பதிகத்தின் ஈற்றுச் செய்யுள் இப்பதிகத் தினைப் படிப்பதால் அடையும் பயன் கூறுகிறது. படிப்பதால் இப் பிறப்பில் ஏற்படும் துன்பங்கள் ஒழியும் என்பதே பயன். இங்ஙனம் கூறும்போது திருஞானசம்பந்தர் தம் திருப்பதிகத்தின் முடிவில் இதைத் ‘தமிழ்ப்பதிகம்’ என்று கூறியிருத்தல் நோக்குதற்குரியது! இங்ஙனம் கூறும் முகமாக, ‘ஏனைய மொழிகள் போல் தமிழ் மொழி அழியும் தன்மைத் தன்று; அழியாத கன்னித் தமிழ்; இனிமை தரும் தமிழ்’ என்று தம் உள்ளக் கிடக்கையினை உணர்த்தியதை உன்னி உன்னிக் களிப்போமாக.

இரண்டாம் திருமுறை

66-வது பதிகம் திருநீற்றுப் பதிகம்

பண் காந்தாரம்

1. மந்திரம் ஆவது நீறு வானவர் மேலது நீறு சுந்தரம் ஆவது நீறு துதிக்கப் படுவது நீறு தந்திரம் ஆவது நீறு சமயத்தில் உள்ளது நீறு செந்துவர் வாய்உமை பங்கன்திரு வாலவா யான் திரு நீறே

(அ.சொ.) நீறு-விபூதி, வானவர்-தேவர். சுந்தரம்- அழகு. தந்திரம் – சிவாகமம், சமயத்தில் – ஆபத்தான காலத்தில் சைவிசமயமே அன்றி எல்லாச் சமயங்களிலும், செந்துவர் – செம்மையான பவழம், பங்கன் – தன் உமையை வைத்திருப்பவர்.

2. முத்தி தருவது நீறு முனிவர் அணிவது நீறு
சத்தியம் ஆவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு திருவாலவா யான்திரு நீறே.

(அ.சொ.) முத்தி – மோட்சம், தக்கோர் – பெரியோர்கள். பரவ – வாழ்த்த, சித்தி – நினைத்தவற்றை.

3. ஆற்றல் அடல்விடை ஏறும் ஆலவா யான்திரு நீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன்
தேற்றித் தென்னன் உடல்உற்ற தீப்பிணி ஆயினை தீரச் சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே.

(அ.சொ.) ஆற்றல் வல்லமை, அடல் – கொலை, விடை – எருது, போற்றி – துதித்து, புகலி – சீர்காழி பூசுரன் – மண்ணுலகத் தேவன், (அந்தணன்) தென்னன் – பாண்டியன், தீப்பிணி – சுரநோய், சாற்றிய – கூறிய. திரு ஞானசம்பந்தர் மதுரையில் திருமடத்தில் தம் பரிவாரங்களுடன் தங்கி இருந்தார் இதனை அறிந்த சமணர் இவரைக் கொன்றுவிட மடத்திற்குத் தீ வைத்தனர். இதனை அறிந்த திருஞானசம்பந்தர் அத் தீ பாண்டிய மன்னனைப் பற்றுமாறு பதிகம் பாடினர். அவ்வாறே அது பாண்டியனைப் பற்ற அதனால் துன்புற்ற பாண்டியன் திருஞானசம்பந்தரை வரவழைத்து அந்த நோயைத் தீர்க்க வேண்டினான். அதுபோது திருஞானசம்பந்தர் திருநீற்றைத் தடவி நோயைப் போக்கினார். அவ்வமயம் பாடப்பட்ட பதிகமே இது. இப்பதிகம் சுரநோய் போக்கவே பாடப் பட்டது என்பது இப்பதிகத்தின் இறுதிப் பாடலால் நன்கு தெரிகிறது.

அதாவது, “தென்னன் உடல் உற்ற தீப்பிணி ஆயினதீரச் சாற்றிய பாடல்கள்” என்பது. ஆகவே இது ஆளுடைய பிள்ளையார் சரித்திரத்திற்கு அரண் செய்யும் அகச்சான்றுப் பதிகங்களுள் ஒன்றாகும்.

இத்திருநீற்றுப் பதிகத்தால் திருநீற்று மேன்மைகள் பல தெரிகின்றன. இத் திருநீறு மந்திரமாகவும் தந்திரமாகவும், உள்ளது என்பதும் தேவர்களும், முனிவர்களும், புண்ணியர்களும், இராவணனும், பூசிப் பொலிவுறுகின்றனர் என்பதும், எல்லாச் சமயங்களிலும், வேதத்திலும். திருநீற்றுச் சிறப்பே பேசப்படுகிறது என்பதும் நன்கு எடுத்துக் கூறப்பட்டுள்ளன. சிறப்பாகச் சைவசமயத்திற்கே இத்திருநீறு உரிமைப் பொருளாயினும், இதன் சிறப்புணர்ந்த பிறநாட்டவரும் சமயத்தவரும், இதனைப் போற்றுகின்றனர் என்பதைத் திருஞானசம்பந்தர் “சமயத் தில் உள்ளது நீறு” என்றும் “தக்கோர் புகழ்வது நீறு” என்றும் தேசம் புகழ்வது நீறு என்றும் “புண்ணியர் பூசும் வெண்ணீறு” “எண் திசைப்பட்ட பொருளார் ஏத்தும் தகையது நீறு” என்றும் சுட்டிக்காட்டினர். இஃது உண்மைக் கருத்துக்கள் என்பதை நம்மாழ்வார் திருவாய் மலர்ந்த திருவாய் மொழிகளாகிய,

கரிய மேனிமிசை வெளிய நீறுசிறிதே இடும் பெரிய கோலத்தடங் கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை உரிய சொல்லால் இசைமாலைகள் ஏத்திஉள்ளப் பெற்றோற்கு அரிய துண்டோ எனக்கு இன்றுதொட்டும் இனி என்றுமே

இவளைப் பெறும்பரிசு இவ்வணங்காகுதல் அன்று அந்தோ குவளைத்தடம் எண்ணும் கோவைச் செவ்வாயும் பயந்தனள் வௌக்களிறு அட்டபிரான் திருநாமத்தால் தவளப்பொடி கொண்டு நீர் இட்டிடுமின் தணியுமே.

இவற்றைக் கொண்டும் நிறுவிக் காட்டலாம்.

இத் திருநீற்றுப் பதிகத்தால் திருநீற்றுச் சிறப்பினைத் தொகுத்துக் கூறினால், மந்திரமாவதும், வானவர் திருமேனியில் உள்ளதும், அழகாவதும், போற்றப்படுவதும், ஆகமமாக இருப்பதும், எந்தச் சமயத்திலும், எல்லாச் சமயத்திலும் இருப்பதும், வேதத்தில் சிறப்பிக்கப்படுவதும், துன்பத்தை ஒழிப்பதும்,ஞானத்தைத் தருவதும், அறியாமையாகிய சிறுமையை ஒழிப்பதும், வாயாரப் பேசப்படுவதும், சத்தியப் பொருளாய் இருப்பதும், மோட்சத்தைத் தருவதும், முனிவர்கள் அணிவதும், சத்தியமாவதும், பெரியோர்கள் புகழ்வதும், பத்தி தருவதும், வாழ்த்தற் குரியதும், எண்வகைச் சித்திகளைத் தருவதும் பார்க்க இன்பமாய் இருப்பதும், அழகைத் தருவதும், போற்றி அணிபவர்க்குப் பெருமை கொடுப்பதும், அகால மரணத்தை ஒழிப்பதும், அறிவைத் தருவதும். உயர்வைத் தருவதும், உடம்பில் பூசுதற்கு இன்பமாய் இருப்பதும், புண்ணியமாவது, பேசப் பேச இனிமை தருவதும் தவசிகளின் ஆசையை ஒழிப்பதும், பேரின்பத்தின் முடிந்த பொருளாய் இருப்பதும், உலகம் எல்லாம் புகழ்வதும், செல்வமாய்த் துலங்குவதும், துன்பம் ஒழிப்பதும், சிவலோக இன்பம் தருவதும், அணிவதற்குப் பொருத்தமாய் இருப்பதும், புண்ணியர்கள் பூசிக்கொள்வதும், திரிபுரங்களைச் சுட்டதும், இம்மை மறுமைக்குப் பயனாய் இருப்பதும், பயிற்சிக்கு உரியதாய் உள்ளதும் பாக்கியமாவதும், சோம்பலைக் கெடுப்பதும், தூய்மையாக்குவதும், இராவணன் அணிவதும், எப்போதும் சிந்தனைக்குரிய பொருளாய் இருப்பதும், பராசக்தி சொரூபமாக இருப்பதும், பாவத்தை ஒழிப்பதும், மெய்ப்பொருளாய் இருப்பதும், தேவர்கள் உடம்பில் திகழ்வதும், உடல் நோய் தீர்க்க வல்லதும், இன்பம் தருவதும், சமண சாக்கியர்கள் கண்டபோது அவர்களைத் திகைக்கும்படி செய்வதும், எண்ண எண்ண இனிமை தருவதும், எட்டுத்திசைகளிலும் உள்ளார்களும் போற்றும் தன்மையதும் ஆகிய திருநீறாகும் என்பதாம்.

இத்திருநீற்றுப் பதிகத்தில் நாம் என்றும் நினைவில் கொள்ள வேண்டிய அடிகள் “சமயத்தில் உள்ளது நீறு,” “உண்மையில் உள்ளது நீறு, பேணி அணிபவர்க்கெல் லாம் பெருமை கொடுப்பது நீறு,” “ஆசைகெடுப்பது நீறு” “மேல் உறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு,” “உடம்பு இடர்தீர்க்கும் இன்பதம் தருவது நீறு.” “எண்டிசைப்பொருளார் ஏத்தும் தகையது நீறு ” என்பன

இத்திருநீற்றுப் பதிகத்தால் திருவாலவாய்ச் சிறப்பை நன்கு உணரலாம். திருவாலவாய் நல்ல நெல் வயல்களை யுடையது என்பதும், அவ்வயல்கள் குளிர்ந்த நீர் வளத்தினைப் பெற்றது என்பதும், அழகுமிக்க மாளிகைகளை யுடையதும் போன்ற சிறப்புக்களை உணரலாம்.

இப்பதிகத்தின் ஈற்றுப்பாடல் இப்பதிகத்தை ஓதுபவர் நல்லவர் ஆவர் என்பதையும், திருஞானசம்பந்தர் அந்தணர் மரபினர் என்பதையும் அறிவித்து நிற்கின்றது. பூசுரர் ஞானசம்பந்தன் என்னும் தொடரை நோக்குக.

மூன்றாம் திருமுறை பதிகம் 51

பண் கௌசிகம்

1. செய்ய னேதிரு ஆலவாய் மேவிய
ஐய னே அஞ்சல் என்றருள் செய்எனைப்
பொய்ய ராம்அம ணர்கொளு வுஞ்சுடர்
பைய வேசென்று பாண்டியற் காகவே.

(அ.சொ.) செய்யனே – செம்மையான நிறமுடையவனே, அஞ்சல் – பயப்படாதே, அமணர் – சமணர், கொளுவும் – கொளுத்திய, பையவே – மெல்லவே, பாண்டியற்கு – கூன் பாண்டியனுக்கு.

2. தஞ்சம் என்றுன் சரண்புகுந் தேனையும்
அஞ்சல் என்றருள் ஆலவாய் அண்ணலே
வஞ்சம் செய்தஅ மணர்கொளு வும்சுடர்
பஞ்சவன் தென்னன் பாண்டியற் காகவே.

(அ.சொ.) தஞ்சம் – அடைக்கலம், சரண் – திருவடி பஞ்சவன், தென்னன் – பாண்டியனைக் குறிக்கும் சொற்கள்.

3. எண்தி சைக்கெழில் ஆலவாய் மேவிய
அண்டனே அஞ்சல் என்றருள் செய்எனைக்
குண்ட ராம்அம ணர்கொளு வும்சுடர் பண்டிமன்
தென்னன் பாண்டியற் காகவே.

(அ.சொ.) எண்திசை – எட்டுத்திசைகள், அண்டனே – எல்லா உலகங்களுமாய் உள்ளவனே, குண்டர் – உடற் பருமன் உடையவர், பண்டி – பாண்டியநாடு, பாண்டிய நாடு என்பதன் சிதைவு பண்டி என்பது, மன் – அரசன் ‘ஐயனே அஞ்சல் என்று அருள் செய்’ என்று பாடல்தோறும் பாடி வேண்டினர். இக்கருத்தை ஒரு பாட்டில் ‘தஞ்சம் என்று உன் சரண் புகுந்தேன்’ என்று குறிப்பிட்டிருப்பதையும் காணலாம்.

இத்திருப்பதிகத்தின் மூலம், சமணர்கள் சத்தியவான் கள் அல்லர், பொய்யர் ஏமாற்றுபவர் (எத்தர்) இறுமாப்புடையவர் (எக்கர்) துட்டர், கணக்கற்றவர், வஞ்சம் செய்பவர், போற்றுதல் செய்யாதவர், அருளாகிய தூய்மை இல்லாதவர், (சமணர்கள் சீவகாருண்யம் உடையவர் என்று தம்மைக் கூறிக் கொள்பவர் அக் கொள்கையுடையவர் என்பது உண்மையானால் சம்பந்தர் திருமடத்திற்குத் தீ வையார், அன்றோ? ஆகவே அவர்கள் அருள் தூ இலா அமணர்’ என்று சம்பந்தர் சாற்றி அருளியதில் தவறு இல்லை என்க) உடற்பருத்தவர் என்பன போன்ற குறிப்புக்கள் அறியவருகின்றன.

திருஞானசம்பந்தர் இதே சமயத்தில் பாண்டியன் இயல்புகளையும் இதன் மூலம் நமக்கு அறிவிக்கின்றனர். அவன் சைனத் துறவிகளிடத்தும். அச்சமயத்தினிடத்தும் பற்றுடையவன் என்பன அறிய வருபவை.

4. அப்பன் ஆலவாய் ஆதி அருளினால்
வெப்பம் தென்னன் மேல்உறை மேதினிக்
கொப்ப ஞானசம் பந்தன்உரை பத்தும்
செப்ப வல்லவர் தீதிலாச் செல்வரே.

(அ.சொ.) மேதினிக்கு – உலகிற்கு. செப்ப – சொல்ல. இத் தேவாரப்பதிகம், திருஞானசம்பந்தர் மதுரைத் திருமடத்தில் எழுந்தருளி இருந்தபோது இவரை அழித்து விடச் சமணர்கள் அம்மடத்திற்குத் தீ வைத்தனர். அதனை அறிந்த சம்பந்தர் மதுரை மன்னனை அச்சுடர் பற்றுக என்று கருதி இப்பதிகத்தைப் பாடினர். இக்கருத்துடன் இப்பதிகம் பாடப்பட்டது என்பதும், சமணர்கள் தம் மடத் திற்குத் தீ வைத்தது உண்மை என்பதும் இப்பதிகப் பாடல்களில் காணப்படும்.

“அமணர் கொளுவும் சுடர்,பையவே சென்று பாண்டி யற்காகவே.” என்பன போன்ற தொடர்களைக் காண்க. இப்பதிக ஈற்றுப்பாடலிலும் காண்க. வெப்பம் தென்னன் மேல் உற என்று குறிப்பிட்டிருத்தலும் ஊன்றி நோக்கற்குரியது.

திருஞானசம்பந்தர் சுந்தரேசப் பெருமானையே தஞ்சம் என்று கொண்டிருந்ததனால், மங்கையர்க்கரசியார் குலச் சிறையாருடன் திருஞானசம்பந்தர் புறப்பட்டு இத்தலத்தை வணங்கியபோது இப்பதிகம் பாடப் பட்டது.

இப்பதிகத்தில் ஒருவர்க்கொருவர் பகையுடையவர்களும் இறைவனை அடைந்தால் பகை ஒழிந்து ஒருமனப் பட்டு வாழ்வர் என்பது, ‘திங்களும் பாம்பும் திகழ்சடை’ என்ற அடிகளில் இருந்து தெரியவருகிறது. இப்பதி இறைவர்க்கு இனிதாக உள்ளது போலும். இதனை, ‘இனிதுறை கோயில் பரங்குன்று’ என்ற குறிப்பால் அறியலாம்.

இப்பதிகத்தில் குறிப்பிடப்பட்ட திருப்பரங்குன்றம் கோங்கு, மாதவி, மல்லிகை முதலான மலர்களைக் கொண்ட சாலையுடையது. வண்டுகள் ஒலிக்கும் சோலைகளையுடையது.

நன்னகராவும் உள்ளது. மேலும் ஆண் மயிலும் பெண் மயிலும் ஒன்றோடொன்று தழுவி இன்பமாக நடமாடும் சோலைகளையும், வண்டின் பாடலும் நீங்காத இடமாகவும் அமைந்தது.

மாறன் பத்தி வைத்தவன், வித்தியா மண்டபம் வைத்து, அறிஞர்களோடு அளவளாவுபவன், தமிழ் மொழியிடத்து அன்பு வாய்ந்தவன், குற்றம் இல்லாதவன் என்றும் கூறி அருளினர். இவனும் தீ வைக்க உடன்பட்டிருந்தான் என்பதைச் ‘சுடர் பாவினான் தென்னன்’ என்ற தொடராலும் வெளிப்படுத்தினர்.

இப்பதிகத்தின் மூலம் திருஞானசம்பந்தர் இப் பாண்டியனிடத்து இரக்கம் கொண்டமையும் விளங்குகிறது. இல்லையானால்,”அமணர் கொளுத்திய தீ பையவே (மெல்லவே) சென்று பாண்டியற்காகவே” என்று கூற மாட்டார் அல்லவா? மேலும் பாண்டியன் மனைவியாரான மங்கையர்க்கரசியார் பால் வைத்த அன்பும் இவ்வாறு கூறக் காரணமாயிற்று.

மதுரை இறைவர் திருப்பெயர் சொக்கன் என்பது இப்பதிப்பகத்தால் தெரிகிறது, இதுவே சுந்தரேசன் என்று மொழி பெயர்க்கப்பட்டது. தமிழ்மொழிபண் பொருந்தியது என்பதை ‘பண்ணியல் தமிழ்’ என்ற தொடர் உணர்த்தி நிற்கின்றது. ஆகவே, இசைக்குப் பொருத்தமான மொழி தமிழ் என்பதையும் உணர்வோமாக.

இப்பதிகத்தின் ஈற்றுப் பாடல், இப்பதிகத்தில் காணப்படும் பத்துப் பாடல்களையும் சொல்ல வல்லவர் குற்றமற்ற செல்வத்தை யுடையவராவர் என்று அறிவிக்கின்றது. மேலும், அமண கொளுவிய சுடர் பாண்டியனைப் பற்றச் செய்யலாமோ என்று உலகம் கேட்காத வண்ணம் உலகம் ஒப்புக்கொள்ளும் வகையில் இக் கருத்துடன் இது கூறப் பட்டது என்பதை உணர்த்தவே திருஞானசம்பந்தர் “மேதினிக்கு ஒப்ப உரைபத்தும்” என்று கூறினார். நாட்டின் நன்மை தீமைகட்கு மன்னன் அன்றோ காரணன்?

திருஞானசம்பந்தர் வரலாற்று உண்மைக்கு அரண் செய்யும் பதிகங்களில் இதுவும் ஒன்று.

மூன்றாம் திருமுறை பதிகம் 52

பண் கெளசிகம்

1. வீடலால வாயிலாய் விழுமியார்கள் நின்கழல் பாடலால வாயிலாய் பரவநின்ற பண்பனே காடலால வாயிலாய் கவாலிநீன் கடிம்மதில் கூடலால வாயிலாய் குலாயதென்ன கொள்கையே.

(அ.சொ.) வீடு + அலால் – மோட்சம் தவிர்த்து, அவாய் – ஆசை. விழுமியோர்கள் – மெய்ஞ்ஞானிகள், கழல் – திருவடி, ஆல – கொண்டாட, பரவ – போற்ற, காடு – சுடுகாடு. கவாலி – மதிலின் பெயர். கடிகாவல். கூடல் – நான்மாடக் கூடல், (மதுரை) ஆலவாயில் – மதுரை, குலாயது-குலா வியது.

2. பட்டிசைந்த அல்குலாள் பாவையாள் ஓர்பாகமா
ஒட்டிசைந்த தன்றியும் உச்சியாள் ஒருத்தியாக்
கொட்டிசைந்த ஆடலாய் கூடலால வாயிலாய்
எட்டிசைந்த மூர்த்தியாய் இருந்தவாறி தென்னயே.

(அ.சொ.) இசைந்த – பொருந்திய, பாவையாள் – பார்வதி தேவியார், ஒட்டி – பொருந்தி, ஒருத்தி – கங்காதேவி. கொட்டு – மேள தாளங்கள், எட்டிசைந்தமூர்த்தி – மண், நீர், தீ, காற்று, ஆகாயம், சந்திரன், சூரியன், ஆன்மா ஆகிய எட்டு வடிவாகப் பொருந்திய மூர்த்தி.

3. குற்றம் நீ குணங்கள் நீ கூடல்ஆய வாயிலாய்
சுற்றம்நீ பிரானும்நீ தொடர்ந்திலங்கு சோதி நீ
கற்றநூல் கருத்து நீ அருத்தம் இன்பம் என்றிசை
முற்றும் நீ புகழ்ந்துமுன் உரைப்பதென் முகம்மனே.

(அ.சொ.) பிரான் – தலைவன். இலங்கு – விளங்கும் அருத்தம் – பொருள். முகம்மன் – உபசாரமே.

4. கோலமாய நீள்மதில் கூடல்ஆல வர்யிலாய்
பாலனாய தொண்டுசெய்து பண்டும் இன்றும் உன்னையே நீலமாய கண்டனே நின்னை அன்றி நித்தலும்
சீலமாய சிந்தையில் தேர்வதில்லை தேவரே

(அ.சொ.) கோலம் – அழகு.பண்டும் – முன்னும், சீலம் – ஒழுக்கம்.

5. போயநீர் வளம்கொளும் பொருபுனல் புகலியான்
பாயகேள்வி ஞானசம் பந்தன் நல்ல பண்பினால்
யசொல்லின் மாலைகொண் டாலவாய் அண்ணலைத்
தீயதீர எண்ணுவார்கள் சிந்தையாய தேவரே.

(அ.சொ.) போய – வயலுக்குப் பாய்ச்சிக் கொண்டது போக, பொரு – கரைமோதும், புனல் – நீர், புகலியான் – புகலி என்ற ஊரினன். புகலி என்பது சீர்காழிக்குரிய பெயர்களில் ஒன்று.

இப்பதிகம் இறைவன் முன் மனம் கசிந்து ஓதுதற்கு உகந்தது. இப்பதிகத்தின் இரண்டாவது பாடல் இறைவனை நோக்கி, இறைவ! பாகமோர் பெண்ணை வைத்தும், தலையில் ஒருத்தியையும் வைத்திருப்பதன் கருத்து என்னையோ என்று வினவுவது இன்பச்சுவை தருவதாகும். திருஞான சம்பந்தர் தமது பாலப்பருவத்திலேயே பாடும் பணியை மேற்கொண்டவர் என்பதற்கு அவருடைய திருவாக்குகளே சாட்சியாக உள்ளன. அவற்றுள் ஒன்றான இப்பதிகத்தில் “பாலனாய தொண்டு செய்து” என்று குறிப்பிட்டிருப் பதையும் உணர்வோமாக.

மதுரையம்பதி மதில் காவலையுடையதாய் அழகுடைய தாய் நீண்டதாய் இருந்தது என்பதும் அறிய வருகிறது. இறைவன் எல்லாமாயும் இருப்பவன், என்பதை மூன்றாம் பாடலாகிய குற்றம் நீ குணங்கள் நீ என்று தொடங்கும் செய்யுளும், எட்டிசைந்தமூர்த்தி என்னும் தொடரும் விளக்கி நிற்கின்றன. திருஞானசம்பந்தர் மதுரைப் பரமேட்டியின் திருநடனத்தை நினைப்பதையே எப்போதும் தம், நியமமாகக் கொண்டவர் என்பதை “நின்று இயங்கி ஆடவே நினைப்பது என் நியமமே” என் கூறியதோடு நில்லாமல் நம்போல்வாரும் அந் நியமத்தில் ஈடுபடவேண்டும் என்பதையும், “நிறை இலங்கு நெஞ்சில் நினைப்பதே நியமமே” என்றும் உபதேசித்தும் அருளினார். இறைவர் எல்லாமாய் இருப்பதோடு இன்றி, நால்திசைக்கும் மூர்த்தியும் ஆவர் என்றும் கூறி உலக முழுமைக்கும் இவரே முழுமுதற் கடவுள் என்பதையும் விளக்குவார் போல “நால் திசைக்கும் மூர்த்தியாகி நின்றதென்ன நன்மையே” என்று வியப்புடன் வினாவுவார் ஆயினர்.

இவ்வாறு இறைவர் எல்லாத் திசைக்கும் உரியவராய் இருந்தும் சமணர்களும், பௌத்தர்களும் அவரைப் போற்றியும் அவர் திருவடிகளைப் புகழ்ந்து புண்ணியம் உற்றிலரே என்ற இரக்கத்தினராய், “தேற்றம் இல் வினைத்தொழில் தேரரும் சமணரும், போற்றிசைத்து நின்கழல், புகழ்ந்து புண்ணியங் கொளார்” என்றும் கூறுவாராயினர். இந்தவாறான உண்மை அறிவு (தேற்றம்) அவர்கட்டு இல்லாமல் வேறு வேறு தொழில்களைச் செய்கின்றனர் என்பதை விளக்கவே “தேற்றம் இல் வினைத் தொழில் தேரரும் சமணரும்” என்றனர்.

இப்பதிகத்தின் ஈற்றுப் பாடலால் சம்பந்தர் பிறந்த ஊர்புகலியாகிய சீர்காழி என்பதும் சிறந்த கேள்வி ஞானம் வாய்க்கப் பெற்றவர் என்பதும், திருப்புகலி நல்ல நீர்வளனும் உடையது என்பதும், மக்கள் தம் தீமை தீர எண்ணினால் இப்பதிகம்பாட அது நீங்கப்பெற்று நற்சிந்தை வாய்க்கப் பெற்ற தேவரும் ஆவர் என்பதும் அறியக் கிடக்கின்றன.

மூன்றாம் திருமுறை பதிகம் 107

நாலடி மேல்வைப்பு

1. வேத வேள்வியை நிந்தனை செய்துழல் ஆதம் இல்லி அமணொடு தேரரை வாதில் வென்றழிக் கத்திரு உள்ளமே பாதி மாதுடன் ஆய பரமனே ஞாலம் நின்புக ழேமிக வேண்டும்தென் ஆல வாயில் உறையும்எம் ஆதியே

(அ.சொ.) வேள்வி – யாகம்,ஆதம் – அன்பு, அமண் – சமணர், தேரர் – பௌத்தர், ஞாலம் – உலகம், உறையும் – வாழும்.

2. கூடல் ஆலவாய்க் கோனை விடைகொண்டு
ஆடல் மேனி அமணரை வாட்டிட
மரடக் காழிச்சம் பந்தன் மதித்தஇப்
பாடல் வல்லவர் பாக்கிய வான்களே

(அ.சொ.) கூடல் – என்பது ஊர்ப் பெயர். ஆலவாய் என்பது – கோயில் பெயர், கோன் – தலைவன், விடை – உத்தரவு, ஆடல்மேனி – உடல் பருத்திருக்கும் காரணத்தால் ஆடும் உடம்பு, மாடம் – மாளிகை, காழி – சீர்காழி.

மதுரையம்பதி சமணசமயம் பரவிச் சைவ சமயம் குன்றிக் காணப்பட்டது. அதுசமயம் சைவசமயத்தை நிலைநிறுத்த திருஞானசம்பந்தர் மதுரையம்பதிக்கு வரவேற்கப்பட்டார். அவர் சமணர்களுடன் வாதம் செய்து சைவ சமயத்தை நிலை நிறுத்த வேண்டிய பொறுப்பு வந்து சேரவே, சுந்தரேசப் பெருமானிடம் தம் கருத்து முற்றுப் பெறவேண்டி இப்பதிகத்தினைப் பாடியருளினர்.

சமணர்களோடு வாதம் செய்ய எண்ணிலர் திருஞான சம்பந்தர் என்பது இப் பதிகத்தில் காணப்படும் பாடல் களில் அக்காரணத்தைக் குறிப்பிடுவதினின்றும் உணரலாம்.

உதாரணமாக, “முருட்டு அமண் குண்டரை ஒட்டி வாது செயத் திருவுள்ளமே” என்பதை எடுத்துக் காட்டலாம். சமணர்களை மட்டும் வாதில் வெல்ல எண்ணாமல் பெளத்த சமயத்தவரையும் வாதிட்டு வெல்ல எண்ணம் இருந்தது என்பதை “அமெணொடு தேரரை வாதில் வென்றழிக்கத் திருவுள்ளமே” “கார் அமண் தேரரை, எய்திவாது செய்யத் திருவுள்ளமே” என்ற தொடர்கள் விளக்கி நிற்கின்றன.

வாதம் செய்வதற்குக் காரணம் வேண்டும் அல்லவா? அக்காரணங்களையும் இப்பதிகம் விளக்கி நிற்கிறது. சமணர்களும் பௌத்தர்களும் வேதவிதிப்படி அந்தணர்களால் செய்யப்படும் யாகங்களை நிந்தனை செய்து வந்தனர். சும்மாவும் இராமல் யாகம் செய்பவரைக் கோபம் (விளி) மூட்டும் மனமும் கொண்டனர். யாகம் செய்வது வீண் என்றும் கூறிவந்தனர். இவையே அவர்களோடு வாதம் செய்யத் திருஞானசம்பந்தர் உளம் கொள ஏதுவாயின. மேலும், இறைவர் புகழையே உலகம் விரும்பி இருந்தது என்பதும் கருதவருகிறது. இதனை “ஞாலம் நின்புகழே வேண்டும்” என்னும் அடி அறிவிக்கிறது. சமணர்களுக்குச் சைவசமயத்தவரிடம் இருந்த வெறுப்பு அளவு கடந்ததாகும். சைவர்கள் காற்றுக் கூடத் தம் மீது படாதபடி அவ்வளவு வெறுப்புடன் இருந்தனர். இதனை இப்பதிகம் எட்டாவது பாடல் “நீற்று மேனியர் மேல் உற்ற, காற்றுக் கொள்ளவும் நில்லா அமணர்” அறிவித்து நிற்கிறது.

இப்பதிகத்தின் மூலம் சமணர்கள் இயல்புகள் எடுத்துக் காட்டப்படுகின்றன. அவை அவர்கள் அன்பு (ஆதம்) இல்லாதவர்கள், வஞ்சகம் (கைதவம்) உடையவர்கள், கருநிறமுடையவர்கள். வேத வழக்கம் இல்லாதவர்கள், அவர்கள் தலைமயிரை மழிக்காமல் பிடுங்கி எடுக்கும் இயல்பினர். பாயை ஆடையாக அணிந்தவர். முரட்டுக் குணம் வாய்ந்தவர், நீலநிறம் வாய்ந்த பருத்த வடிவினர் என்பன.

திருஞானசம்பந்தர் மீது சில பழிகளை ஏற்றிக் கூறத் தொடங்குவர். அப்பழிகளுள் ஒன்று அவர் சமணர்களைக் கழுவேற்றிக் கொன்றனர் என்பது. அவ்வாறு அவர்களைக் கழுவேற்றிக் கொன்ற குறிப்பு இப்பதிகத்தில் காணப் பட்டிலது. அவர்களை வாதில் வெல்லவே இவர் முனைந்து நின்றார் என்பதுதான் காணப்படுகிறது. இதனை “அமெணொடு தேரரை வாதில் வென்றழிக்க” (வென்றழிக்க என்பது வெல்ல என்ற பொருளில் தான் உள்ளது. ஈண்டு வென் றழிக்க என்பதை ஒரு சொல்லாகக் கொள்ள வேண்டும்) “அமண் தேரரை எய்தி வாது செய்” முறிய வாது செய்” “செறுத்து வாது செய்” ”அருகர் திறங்களைச் சிந்த வாது செய” (திறங்களை என்பதைச் சிரங்களை என்று கருதினர் போலும்!) “ஒட்டி வாது செய, திறம் கழல வாது செய்” “தேற்றி வாது செய்தென்ற (சிதறிப் போகும்படி) வாது செய்” என்ற தொடர்களில் காணலாம். திருஞான சம்பந்தருக்குச் சமணர்களைத் தெளிவடையச் செய்ய வேண்டும் என்பது கருத்து ஆதலின், “அமணரைத்தேற்றி வாது செய” என்றும் கூறி அருளினர். அவர்கட்கு இறைவன் சீலம் உணர்த்த வேண்டும் என்பதும் இவரது திருவுள்ளக் குறிப்பு என்பது “நீலமேனி அமணர் திறத்து நின்சீலம் வாது செயத் திருவுள்ளமே” என்பதனால் பெறப்படுகிறது.

திருஞானசம்பந்தர் தாமாக ஒன்றையும் செய்ய எண்ணாமல் எல்லாவற்றிற்கும் இறைவர் திருவுள்ளச் சம்மதத்தையே நாடி நின்றார் என்பது இவர் வாது செய்யப் புறப்படும் முன் இறைவர் உத்தரவு வேண்டியதினின்றும் உணரலாம். இதனை இப்பதிக ஈற்றுப் பாடலில் திருஞான சம்பந்தர் தெளிவுற “கூடல் ஆலவாய்க் கோனை விடை கொண்டு, ஆடல் மேனி அமணரை வாட்டிட” என்று குறிப்பிட்டுள்ளார். இப்பதிகம் பாடுபவர் பாக்கியவாளர் என்றும் அறிவிக்கின்றார். திருஞானசம்பந்தர் வாழ்க்கை வரலாற்றுக்கு அகச்சான்றாய் நின்று துணைசெய்யும் பதிகங் களுள் இதுவும் ஒன்றாகும்.

இப்பதிகம் திருஇயமகம் என்ற திருப்பெயருடன் திகழ்கிறது. திருஇயமகம் என்பது மடக்கு என்னும் தமிழ்ப் பெயரால் இலக்கணத்தில் பேசப்படும். ஒரு சொல்லோ தொடரோ அப்படியே செய்யுளில் மடங்கிவர அமைவதே மடக்கு எனப்படும். இப்பதிகம் முழுமையும் இம்மடக்கு அமையப் பாடப்பட்டுள்ளது. இங்கு எடுத்துக் காட்டப் பட்டுள்ள இருபாடல்களிலும் இம்மடக்கு அமைந்திருப்பதைக் காணலாம். இருக்கையே என்பது இருமுறை மடங்கி இருப்பதைக் காண்க. இவ்வாறே பங்கனே, பூதனே என்ற சொற்கள் மடங்கி இருப்பதைக் காண்க. களத்தனே என்ற சொல் மட்டும் ஈற்றில் பிரித்துப் பொருள்படும் முறையில் ஆளப்பட்டுள்ளது. அண்டர்கள் அத்தனே என்று பிரித்துப் பொருள் காணவேண்டும்.

இவ்வாறே ஈற்றுப் பாடலிலும், விரகனே சம்பந்தன் என்ற சொற்கள் பிரிக்க வேண்டியின்றி இயற்கையில் அமைந்திருப்பதைக் காணலாம். ஆனால், மூன்றாம் அடியில் உள்ள வாயிலுளத்தனே என்பது முன்னர் வாயிலுள் அத்தனே என்றும், வாயில் உளத்தனே என்றும், நான் காம் அடியிலுள்ள பத்தும் என்னும் சொல். முன்னர் பத்தும் என்றே நின்று பின்னர் பற்றுமே என்று பொருள்படும் நிலையில் அமைந்துள்ளது.

மூன்றாம் திருமுறை பதிகம் 113

திருஇயமகம்

1. ஆல நீழல் உகந்த திருக்கையே ஆனபரடல் உகந்த திருக்கையே.
பால னேர்மொழி யாள் ஒரு பங்கனே பாதம் ஓதலர் சோபுர பங்கனே கோல நீறணி மேதகு பூதனே கோதி லார்மனம் மேவிய பூதனே ஆல நஞ்ச முதுண்ட களத்தனே ஆல வாயுறை அண்டர் களத்தனே.

2. ஈன ஞானிகள் தம்மொடு விரகனே
ஏறு பல்பொருள் முத்தமிழ் விரகனே
ஆன காழியுள் ஞானசம் பந்தனே
ஆல வாயினின் மேயசம் பந்தனே
ஆன வானவர் வாயிலு எத்தனே
அன்பர் ஆனவர் வாயிலு ளத்தனே
நானு ரைத்தன செந்தமிழ் பத்துமே
வல்ல வர்க்கிவை நற்றமிழ் பத்துமே.

1. (அ.சொ.) ஆலம் – கல்லால விருட்சம், உகந்தது இருக்கையே – உபதேசம் செய்வதற்கு உரிய இருப்பிடமாக இருக்க விரும்பியது. உகந்தது – விரும்பியது, இருக்கை – ரிக்வேதத்தை, சோ – மதில், புரம் – முப்புரங்களை, பங்கனே – அழித்தவனே. கோலம் – அழகு, மேதரு – மேன்மை பொருந் திய, பூதனே – தூய்மை ஆனவனே.

கோது – குற்றம், பூதனே – மண், நீர், தீ, காற்று, ஆகாய மாகிய ஐம்பூத வடிவாயுள்ளவனே, ஆலநஞ்சு -ஆலகால விஷம், அமுதுண்ட – அமுதம் போல உண்ட களத்தனே – கழுத்தை யுடையவனே, உறை – வாழும்,அண்டர்கள் – தேவர்கள். அத்தனே – தலைவனே.

2.விரகன் – தந்திரமாய் உள்ளவன், முத்தமிழ் – இயல் இசை நாடகத் தமிழ், விரகன் – வல்லவன், காழி – சீர்காழி. சம்பந்தனே -தொடர்புடையவனே, வானவர் – தேவர், உளத்தனே – மனத்தில் இருப்பவனே. பத்து – பற்று, அன்பாய் இருப்பது.

இப்பதிகம் ஞானசம்பந்தரது பேரறிவுப் புலமையை உணர்த்தும் பல பதிகங்களுள் ஒன்றாகும். இப்பதிகத்தில் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டவை. இறைவர் தம் திருவடிகளைப் புகழ்ந்து ஓதாதவர்களை அழிப்பர் என்பதும், தம் மனம் நினைவார் பாரம் அறுப்பார் என்பதும், குற்றமற்றவர் மனத்தில் பொருந்தியவர் என்பதும், தம்மாட்டு அன்பு இல்லாதவர்களை இழிவாகக் கருதுவர் என்பதும். பாண்டியன் மனைவியான மங்கையர்க்கரசியார்க்கும் தொண்டர்களுக்கும் அணியாய் இருப்பவர் என்பதும், திருநீலகண்ட யாழ்ப்பாணர்க்கு அருள் செய்தவர் என்பதும், அன்பால் நினைப்பவருக்கு அருளும் மெய்யர் என்பதும். இறைவர் முத்தமிழ் விரகர் என்பதும் அன்பர் உள்ளத்திலும் வானவர் வாயிலும் எப்போதும் இருப்பவர் என்பதும் தெரியவருகின்றன. “நின் அடித் தொழுநாளும் இருப்பனே” என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுவதிலிருந்து அவர் இறைவரை மறவாது போற்றி மாண்பு புலனாகின்றது.

மூன்றாம் திருமுறை பதிகம் 119

பண் – புறநீர்மை

1. மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை
வரிவளைக்கை மானி
பங்கயச் செல்வி பாண்டிமா தேவி
பணிசெய்து நாள்தொறும் பரவப்
பொங்கழல் உருவன் பூத நாயகன்
நால்வகைப் பொருள்கள் அருளி
அங்கையற் கண்ணி தன்னொடும் அமர்ந்த
ஆலவாய் ஆவதும் இதுவே.

2. வெற்றவே அடியார் அடிமிசை வீழும்
விருப்பினன் வெள்ளை நீறு அணியும்
கொற்றவன் தனக்கு மந்திரி ஆய
குலச்சிறை குலாவி நின்றேத்தும்
ஒற்றைவெள் விடையன் உம்பரார் தலைவன்
உலகினில் இயற்கையை ஒழிந்திட்
டற்றவர்க் கற்றசிவன் உறைகின்ற
ஆலவா யாவதும் இதுவே.

3. பன்னலம் புணரும் பாண்டிமா தேவி
குலச்சிறை எனும் இவர் பணியும்
அன்னலம் பெறுசீர் ஆலவாய் ஈசன்
திருவடி ஆங்கவைப் போற்றிக்
கன்னலம் பெரிய காழியுள்
ஞானசம்பந்தன் செந்தமிழ் இசை கொண்டு
இன்னலம் பாடவல்லவர் இமையோர்
ஏத்தவீற் றிருப்பவர் இனிதே.

1. (அ.சொ.) மங்கையர்க்கரசி – கூன்பாண்டியன் மனைவியார், வளவர்கோன் – சோழமன்னன், பாவை – பதுமை போன்ற பெண், பங்கயச்செல்வி – தாமரைமலரிலுள்ள இலக்குமி போன்றவள், பரவி – போற்றி, பூதநாயகன் உயிர்கட்குத் தலைவன், நால்வகைப் பொருள்கள் மக்கள் பெறவேண்டிய அறம்,பொருள், இன்பம், வீடு ஆகிய உறுதிப்பொருள்கள், அங்கயற் கண்ணி – அழகிய கயல் போன்ற கண்களையுடையவள். கயற்கணி என்பதுவே மீனாட்சி என மொழி பெயர்த்துக் கொள்ளப்பட்டது.

2. (அ.சொ.) வெற்றவே -வெறுமனே, அதாவது சிறிதும் யோசனையே செய்யாமல், அடிமிசை – பாதங்களில் நீறு – விபூதி, கொற்றவன் – மன்னனாகிய கூன்பாண்டியன், குலச்சிறை – கூன்பாண்டியன் மந்திரியார், குலாவி – மகிழ்ந்து ஏத்தும் – போற்றும். விடை – இரஷபம். உம்பரார் – தேவர். அற்றவர் – எல்லாப்பற்றையும் விட்டவர்.

3. (அ.சொ.) புணரும்-சேரும், கன்னல் – கரும்பு, காழி – சீர்காழி. இமையோர் – தேவர், ஏத்த-போற்ற.

திருஞானசம்பந்தர் தம் பரிவாரங்களுடன் மதுரை யம்பதி வருகின்ற காலத்துத் தம்முன் மதுரை ஆலவாய்ப் பெருமான் ஆலயந் தோன்றக் கண்டு, இவ்வாலயம் மங்கையர்க் கரசியாராலும், குலச்சிறையாராலும் வழிபடப்படும் தலமன்றோ என்று எண்ணிப் பாடப்பட்ட பதிகம் இது.

இப்பதிகத்தால் மங்கையர்க்கரசியார் குலச்சிறை நாயனார் இயல்புகள் நன்கு சிறப்பித்துப் பேசப்பட்டுள்ளன மங்கையர்க்கரசியார் சோழமன்னன் திருமகளார். இளமை மாறாத மானி என்னும் திருப்பெயரினர். அழகில் இலக்குமி போன்றவர். கூன்பாண்டியனுக்கு மனைவியாராக வாழ்க்கைப்பட்டவர். திருநீற்றை வளர்க்கும் குணமுடையார். பக்தி மிகுந்தவர் மற்றும் பல குணமும், வாய்க்கப் பெற்றவர். பண்ணிசை போன்ற மொழியினர். மார்பம் முத்துமாலை சந்தனக்குழம்பு விளங்க இருந்தவர். பவழம் போன்ற வாயும், சேல்மீன் போன்ற கண்ணும் பந்தாடுங் காலத்து அதனை அணைக்கும் திருக்கரமும், நல்ல அணிகலன்களை அணிந்தவர், அழகிய நெற்றியும் வாய்ந்தவர் என்பன போன்ற குறிப்புக்கள் இப்பதிகத்தால் அறியவருகின்றன.

குலச்சிறையார் அடியார்களைக் கண்டதும் உடனே அவர்கள் திருவடிகளில் விழும் விருப்பமுடையவர். கூன் பாண்டியனுக்கு மந்திரியார். சிவனடியாராக வருபவர் தனித்தேனும், கூட்டமாகவேனும் வரக்கண்டதும், அவர்களைப் பணியும் பணிவுடையவர். அடியவராக இருப்பவர் நலமுடை யவராயினும் சரி, இல்லாதவராயினும் சரி, குலமேம்பாடு உடையவராகவோ, இல்லாதவராகவோ, இருப்பினும் சரி அவர்களையே தம் தவப்பேறாகக் கருதி வணங்குபவர். பஞ்சாட்சர மந்திரங்களை ஓதியும் நல்லவராயும் நல் இயல்புரிமை யுடையவராயும், கோவணம் திருநீறு, கண்டிகையோடுகூடிய தோற்ற முடையவராயுமுள்ளாரைக் கண்டதும் கீழே விழுந்து வணங்கி எழும் சிறப்புடையவர். தொண்டர்கள் வாழ்திசைகள் தோறும் வணங்கும் குணமுடையவர்.

கண்டபோது இன்புறுவர் என்பனபோன்ற குறிப்புக்கள் அறியப்படுகின்றன. திருஞானசம்பந்தர் தீர்க்கதரிசி ஆதலின், கூன்பாண்டியன் தம்மைக்கண்ட பிறகு திருநீறு பூசிக் கொள்ளும் பேறு பெறப்போகின்றமையால், “வெள்ளை நீறணியும் கொற்றவன்” என்று கூறியருளினர். மங்கை யர்க்கரசியார் சிற் சில வேளைகளில் பந்தாடிப் பொழுது போக்கும் இயல்பும் பெற்றிருந்தனர் என்பது, “பந்தணை விரலாள்” என்ற தொடரால் விளக்கியும், இறைவர் ஸ்படிக நிறத்தினர்; தேவியர் மரகத வடிவினர்; இவ்விருவர்களும் இணைந்து வீற்றிருக்கும் நிலையினை,”சுத்தமார்பளிங்கின் பெருமலையுடனே சுடர் மரகதம் அடுத்தால் போல் அத்தனார் உமையொடு இன்புறுகின்ற” என்று கூறியருளினர்.

இறுதிப்பாட்டில் இப்பதிகம் பாடும் பேறுபெறுவர் தேவர்கள் போற்ற இனிது வீற்றிருப்பர் என்று பட்டுள்ளது.

மூன்றாம் திருமுறை பதிகம் 47

பண் கெளசிகம்

1. காட்டு மாஅ துரித்துரி போர்த்துடன்
நாட்டம் மூன்றுடை யாய்உரை செய்வன்நான்
வேட்டு வேள்விசெய் யாஅமண் கையரை
ஓட்டி வாது செயத்திரு உள்ளமே.

(அ.சொ.) காட்டுமா – யானை உருவுடன் வந்த சுய முகாசூரன், உரி – தோல், நாட்டம் – காணி, வேட்டு – விரும்பி. வேள்வி – யாகம், கையர் – வஞ்சகர்

2. செந்தெ னுமுர லும்திரு வாலவாய்
மைந்த னே என்று வல்அமண் ஆசறச்
சந்தம் ஆர்தமிழ் கேட்டமெய்ஞ் ஞானசம்
பந்தன் சொற்பகரும்பழி நீங்கவே.

(அ.சொ.) செந்து என – செந்து என்னும் பண்ணைப் போல, முரலும் – (வண்டுகள்) ரீங்காரம் செய்யும்,மைந் தனே – வல்லமையுடைய சிவனே,ஆசு – குற்றம், சந்தம் – அழகு, ஆர் -பொருந்திய.

இப்பதிகம் சமணர்களுடன் வாதம் செய்ய வேண்டி இருத்தலின், அதன் பொருட்டு இறைவர் உத்தரவு தேவை இருந்த காரணத்தால் திருஞானசம்பந்தர் பாட நேர்ந்ததாகும். இந்தக் கருத்து இப்பதிகப் பாடல்களில் “அமண் கையரை ஒட்டி வாதுசெயத் திருவுள்ளமே” “வாதில் வெள் அழிக்கத் திருவுள்ளமே” என்பன போன்ற தொடர்கள் இருப்பனவற்றால் உணரலாம். இப்பதிகப் பாடல்களில் ”அழிக்க” என்று வருகின்ற இடங்களில் வாதில் வெல்ல என்பது பொருளே அன்றி வேறன்று. இப்பொருளில் திருஞானசம்பந்தர் கூறிற்றிலர் எனில், “பைய வாது செய” என்று புகரார் அல்லரோ? “சீறி வாது செய” என்ற தொடரும் இப்பதிகத்தில் வருகின்றதே எனில், அமணர்கள் தம் சீற்றத்தைக் காட்டினால் அதன்பின் அவர்கட்கேற்பச் சினம் கொண்டு வாதிக்க எண்ணம் என்பதற்காகவே இந்தவாறு விண்ணப்பித்து விடைகேட்கின்றனர். இதுவே கருத்து என்பதை உய்த்து உணர வைப்பதற்காகவே “சால(பொருந்த) வாது செய்” என்றும் பாடி யருளினர்.

சமணர்கள் மதுரையம்பதியில் இருக்கையாகக் கொண்டு நாட்டையும் நாட்டு மன்னனையும் தம் கீழ்ப்படுத்திச் சைவசமயம் தழைக்க ஒட்டாமல் செய்த காரணத்தால் அவர்களை நாட்டில் இராமல் ஓடி விடும்படியும் தாம் இருக்கின்ற இடம் தெரியாமல் மறைந்தேனும் வாழும் படி செய்யவேண்டும் என்பதற்காகவும் வாதம் செய்ய எண்ணினார் என்பதை “ஓட்டி வாது செய” என்றும் “காக்க (மறைந்திருக்க) வாது செய” என்ற தொடர்களில் குறிப்பிட்டனர். அவர்கள் தவம் செய்வது தவறு என்று அறிந்து கலங்க வேண்டும் என்பதே இவர் ‘செண்டடித்து உழற’ என்பதால் உணரலாம்.

சமணர்கள் கல்வியில் மிகுந்தவர். ஆனால், அக்கல்விக் கேற்ப நடவாமல் இருந்தமையின் அவர்கள் தீய ஒழுக்கம் மேற்கொண்டனர். ஆகவே, அவ்வொழுக்கம் அவர்கள் பால் இல்லாமல் இருக்கத் திருவுள்ளம் கொண்டே “கற்பு (ஒழுக்கம்) அழிக்க” என்று கூறி அருளினர். ஈண்டு கற்பு அவர் தம் தீய ஒழுக்கமாம். தம் ஒழுக்கம் கெட்டு அமணர் ஒழுகினர் என்பதை இப்பதிகத்திலேயே, “கழிக் கரைப் படுமீன் கவர்வார் அமண்” என்ற அடியே அறிவித்து நிற்கின்றது. மேலும், அவர்கள் தவவேடம் பூண்டும் அத்தவத்திற்கு ஏற்ப ஒழுகாதவராயும் இருந்தனர் என்பதை “பொய்த்த வேடத்தராம் அமண சித்தர்” என்று இவர்கள் கூறப்பட்டிருக்கின்றனர். மேலும் தம் பணியிலும் தவறியவர் என்பது “பணிபொய்த்த” என்ற தொடரும் சான்றாய் நின் று சாற்றும் இப்பதிகத்தால் சமணர்கள் யாகம் செய்யாதவர்கள் என்பதும், சமணர்கள் பேய் எண்ணம் படைத்தவர் என்பதும், வேதம் அறியாதவர் என்பதும் இலையிலோ கலத்திலோ வைத்து உணவு கொள்ளாமல், கையில் பிறர் பிசைந்து வைக்க உண்ணும் குணத்தினர் என்பதும். வஞ்சகர் என்பதும் நல்ல உடல் பருமனுடையவர் என்பதும், அப்பருமனால் வீறு (சிறப்பு) குறைந்து காணப்படு பவர் என்பதும், அவர்கள் தோற்றம் வேடர்கள் போல இருந்தது என்பதும் பாவர் என்பதும் வீணர் என்பதும் மேலை வீடு (மோட்சம்) உணராதவர் என்பதும், பிறரை அழிப்பவர் (தம் திருமடத்தில் தீ வைத்த காரணத்தால் இவ்வாறு கூறப்பட்டனர் போலும்) என்பதும், சித்தில் வல்லவர் என்பதும் மழுங்கா முடியினர் என்பதும் அறிய வருகின்றன.

சாக்கியர்கள் (பௌத்தர்கள்) பெரிதும் செம்மையான திருமேனியுடையவர்கள். மழுங்க முடி களைந்து மழமழ என்று தோற்றமளிப்பவராய் இருந்தனர். ஆகவே அவர் கள் பார்வைக்கும் பெண்கள் போல் முகப்பொலிவுடன் காணப்பட்டனர். இதனால்தான் ”பெண் அகத்து எழில் சாக்கியர்” என்று திருஞானசம்பந்தரால் குறிப்பிடப் பட்டனர்.

மேலே கூறப்பட்ட குணமுடையவர்களுடன் தாம் வாது செய்வது முறையா அன்றா என்பதை இறைவரே நன்கு சிந்தித்துத் தமக்கு உத்தரவு கொடுக்க வேண்டும் என்பதற்காகவே “நீதியாக நினைந்து அருள் செய்தியே” என்று திரு ஞானசம்பந்தர் இறைவரை வேண்டுவராயினர்.

திருவாலவாய் ஆலயம் அமைந்த கூடலம்பதி, நல்ல நாற்றுகளையுடைய வயல்களையும் சோலைகளையும் நெருங்கப்பெற்று மலர் மிகுதியினால் தேனும் நிரம்பப் பெற்றுத் திகழ்ந்தது. ஒலிக்கும் பூ நீர் வளம் சூழ்ந்தது. வண்டுகள் இசைபோல் முழங்கும். இத்தகைய வளப்பம் உடையது கூடலம்பதி என்பதும் இப்பதிகத்தால் அறிய வருகின்றன.

திருஞானசம்பந்தர் சிவஞானம் கைவரப் பெற்றவர். அவர் பெற்ற ஞானம் மெய்ஞ்ஞானம். அவரும் தமிழ் மொழியினை நன்கு உணர்ந்தவர். என்றாலும், அறிஞர் கூறுவனவற்றையும் கேட்ட மெய்ஞ்ஞானம் வாய்க்கப் பெற்றிருந்தார். இக் கருத்துக்களை எல்லாம் “சந்தமார் தமிழ் கேட்ட மெய்ஞ்ஞான சம்பந்தன்” என்று தாமே குறிப்பிடுவதால் அறியலாம். தமிழ் மொழியைக் குறிப்பிடும்போது அம்மொழியின் இசைச் சிறப்பை உணர்த்தச் ”சந்தமார் தமிழ்” என்றனர். இப்பதிகத்தை ஓதினால் பழி நீங்கும் என்பதும் இப்பதிக இறுதிப் பாடல் அறிவிக் கின்றது.

மூன்றாம் திருமுறை பதிகம் 47

மானின் நேர்விழி மாத ராய்வழு திக்கு மாபெரும் தேவிகேள் பானல் வாய்ஒரு பாலன் ஈங்கிவன் என்று நீபரி வெய்திடேல் ஆனை மாமலை ஆதிஆய இடங்க ளில்பல அல்லல்சேர்
ஈனர் கட்கெளி யேன்அ லேன்திரு வால வாய் அரன் நிற்கவே.

(அ.சொ.) நேர் – ஒப்பான வழுதிக்கு – கூன்பாண்டியனுக்கு, மாபெருந்தேவி – சிறந்த பெரிய மனையாட்டியே பானல் – செங்குவளை மலர். பரிவு – இரக்கம். ஆனைமாமலை – ஆனைமலை. இது மதுரையில் உள்ளது, அல்லல் – துன்பம், ஈனர் – இழிந்தவர்களான சமணர்.

எக்க ராம்அமண் கைய ருக்கெளி யேன்அ லேன்திரு வாலவாய் சொக்கன் என்னுள் இருக்கவேதுளங்கும்முடித் தென்னன் முன் தக்க சீர்புகலிக்கு மன்தமிழ் நாதன் ஞானசம் பந்தன்வாய் [இவை
ஒக்க வேஉரை செய்த பத்தும் உரைப்ப வர்க்கிடர் இல்லையே.

(அ.சொ.) எக்கர் – இறுமாப்புடையவர். கையர் – வஞ்சகர், சொக்கன் – சுந்தரேசப் பெருமான், துளங்கும் – விளங்கும், தென்னன் – கூண்பான்டியர். புகலிக்குமன் – சீர்காழித் தலைவர், இடர் – துன்பம்.

திருஞானசம்பந்தர் கூன்பாண்டியன் உற்ற சுர நோயைத் தீர்க்கும் பொருட்டுப் பாண்டியன் சபைக்கு அழைக்கப்பட்டனர். அச்சபையில் சமணர்களும் கூடி இருந்தனர். அவர்கள் உடற்கட்டு வாய்ந்தவர்களாய் இருக்க ஞானசம்பந்தர் பால்யத் தோற்றத்தோடு இருப்பதைக் கண்டு இவருக்குச் சமணர்களால் என்ன தீங்குவிளையுமோ என்ற ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்த மங்கையர்க் கரசியாருடைய உள்ளத்தை அறிந்த திருஞானசம்பந்தர் இப்பதிகத்தைப் பாடத் தொடங்கினர்.

மங்கையர்க்கரசியார் மருண்டு மருண்டு பார்த்திருந்த காரணத்தால்தான் “மானினேர் விழி மாதராய்” என்று விளித்துப் பாடினர். தாம் சிறுவர் ஆயிற்றே சமணர் என்ன செய்து விடுவரோ என்று எண்ணிக் கொண்டிருந்தார் மங்கையர்க்கரசியார் என்பதையும் உணர்ந்து, ‘பானல் வாய் ஒரு பாலன் ஈங்கு இவன் என்று நீ பரிவு எய்திடேல்’ என்றும் குறிப்பிட்டுப் பாடினர். இவ்வடி திருஞானசம்பந்தர் சிறு பிள்ளை என்பதற்கு ஓர் அகச்சான்றாகும். அவர் வரலாற்றிற்கு ஆணித்தரமான அகச்சான்றும் ஆகும். இப்பதிகம் பாண்டியன் சபையில் அவன்முன் பாடப்பட்டது என்பதும் இப்பதிக ஈற்றுப் பாடல் “தென் னன்முன் இவை ஞானசம்பந்தன் வாய் ஒக்கவே உரை செய்த” என்று கூறி அறிவிக்கின்றது.

திருஞானசம்பந்தர்க்குச் சுந்தரேசப் பெருமான் திருவருள் முற்றிலும் இருந்தமையால், தாம் சமணர்கட்குச் சிறிதும் சளைத்தவர் அல்லர் என்பதைப் பாடல் தோறும் “எளியேன் அலேன் திருஆலவாய் அரன் நிற்கவே” என்று கூறுவதால் தெரிகிறது.

இப்பதிகத்தால் சமணர்கள் மதுரை ஆனைமலை முதலான இடங்களில் துன்பம் அடைந்துள்ளனர் என்பதும் ஆரியர் மொழியின் பயனும் செந்தமிழ் மொழியின் பயனும் அறியாதவர்கள் என்பதும்,அறத்தைக் காட்டிச் செல்வம் கவர்பவர் என்பதும்,மயிற்பீலி, பாய் இவற்றை இடுக்கிக் கொண்டும் தள்ளாடிக் கொண்டும் பிறர் பின் செல்பவர் என்பதும், தலைமயிரைப் பறிப்பவர் என்பதும் போன்ற குறிப்புக்கள் தெரியவருகின்றன.

சமணர்கள் சந்து சேனன், இந்து சேனன். தரும சேனன், கந்து சேனன், கனக சேனன், கனக நந்தி, புட்ப நந்தி, பவண நந்தி, குமண நந்தி,மா நந்தி, சுகன நந்தி. குகை நந்தி, திவண நந்தி, அநக நந்தி முதலான பெயருடன் விளங்கி இருந்தனர்.

சமணர்கள் அக்காலத்தில் வைதீக சமயங்கட்குப் பல விதத்தில் இடையூறாக இருந்தனர் போலும்! அதனைத் திருஞானசம்பந்தர் அவர்களைப் பற்றிக் குறிப்பிடும் சொற்களாகிய ஈனர்கள்; மாசு (அழுக்கு சேர்) ஆகதர், அந்தகர், கையார், கோட்டைகள், (குறும்பர்கள் எக்கர்இறுமாப்புடை யவர்கள்) என்பனவற்றால் அறியலாம்.

சமணர்கள் கருநிறம் படைத்து உருவப் பெருமன் உடையவராய் இருந்தமையால் அவரது நடை யானை நடப்பது போல இருந்தது என்பதை “மாகதக்கரி போல் திரிந்து” என்று கூறப்பட்டனர். உடல் முழுதும் மயிர் அடர்ந்து இருந்தமையால் மந்தி போல் திரிந்தும் என்றும் கூறப்பட்டனர். திருஞானசம்பந்தர் சமணர்களைக் குறும் புக்காரர் என்று கூறினாலும், தாமும் குறும்புடையவர் என்பன அவருடைய வாக்கே சாட்சி கூறும். “அந்தணம் அருகந்தணம், அது புத்தணம், அது சித்தணம்” என்ற அடியினைக் காண்க. இன்னும் பலப்பல சமணர்களைப் பற்றிய குறிப்புகளை இப்பதிகம் அறிவித்து நிற்கிறது. இவர்கள் கிளிவிருத்தம் என்னும் நூலையும் பாடியிருப்ப தாக இப்பதிகத்தால் விளங்குகிறது. ஈற்றுப் பாடலால் இப்பதிகம் பாடுபவர்கட்குத் துன்பம் வராது என்ற உறுதி யும் புலனாகிறது.

நான்காம் திருமுறை பதிகம் 61

திருநேரிசை

1. வேதியா வேத கீதா விண்ணவர் அண்ணு என்றென்றோதியே மலர்கள் தூவி ஒருங்குநின் கழல்கள் காணப் பாதியோர் பெண்ணை வைத்தாய் படர்சடை மதியம் சூடும் ஆதியே ஆலவாயில் அப்பனே அருள்செய் யாயே.

(அ.சொ.) வேதியா – எல்லாம் அறிந்தவனே, விண்ணவர் – தேவர்,ஒருங்கு – அடக்கமாக இருந்து. மதியம் – சந்திரனை

2. நம்ப னே நான் முகத்தாய் நாதனே ஞான மூர்த்தி
என்பொனே ஈசா என்றென் றேத்திநான் ஏசற்றென்றும் பன்பினே திரிந்து நாயேன் பேர்த்தினிப் பிறவா வண்ணம் அன்பனே ஆல வாயில் அப்பனே அருள்செய் யாயே.

(அ.சொ.) ஏத்தி – போற்றி,ஏசற்று – ஆசைப்பட்டு.

இப்பதிகத்தில் அப்பர் பெருமான் தமக்கு அருள்புரி மாறு வேண்டிக்கொள்கிறார். இவருக்கு மீண்டும் பிறவி வருதல் கூடாது என்பது அவாவாகும். இதனை “இனிப் பிறவாவண்ணம் அருள் செய்” என்ற வேண்டுகோளால் அறியலாம். இறைவன் தான் மருந்தாய் இருந்து வல்வினைகளைத் தீர்க்கும் இயல்பினன் என்றும் இப்பதிகத்தால் உணரலாம். அப்பர் பேரறிவு படைத்திருந்தும், தமக்கு இயல்பாக அமைந்த கற்றறிந்து அடங்கலாகிய அருங் குணத்திற்கு ஏற்ப, சாலஞானம், கற்றறிவில்லாத நாயேன் என்றும் கூறிக் கொள்வதைக் காண்க. திருநாவுக்கரசர் சின்னாள் சமண சமயம் சார்ந்திருந்தபோது, இறைவர் எண்ணமின்றி இருந்தமையால், அக்காலத்தை எண்ணி, “பண்டு உனை நினையமாட்டேன்” என்றும் குறிப்பிடுகிறார். இறைவன் திருவடியே புகலிடம் என்பதை “எஞ்சல் இல் புகல் இது” என்றும் அருள் செய்கிறார்; அப்பருக்குத் தொண்டின் மேல் இருக்கும் விருப்பத்தை “வழுவிலாது உன்னை வாழ்த்தி வழிபடும் தொண்டன்” என்றும் நறு மலர் நீரும் கொண்டு நாள்தொறும் ஏத்தி வாழ்த்திச் செறிவன சித்தம் வைத்துத் திருவடிசேரும் வண்ணம், என்றும் கூறிய அடிகளால் அறியலாம்.

சிலந்திப் பூச்சி இறைவர் திருமேனிக்கு மேல் கூடுகட்டி வாழ்கையில் அக்கூடு தம்மீது வெய்யில் படாதிருக்கக் கட்டப்பட்டதாக இறைவர் எண்ணி அதன் மாட்டு அருள்காட்டி அதனை அடுத்த பிறவியில் அரசனாகத் திருவருள் புரிந்தார் என்பதை, “நலந்திகழ் வாயில் நூலாய் சருகிலைப் பந்தர் செய்த சிலந்தியை அரசு அது ஆள அருளினாய்” என்று குறிப்பிட்டனர். இம்மன்னனே கோச் செங்கட் சோழனாவான். இராவணனுக்கு அருள்செய்தது ஈற்றுப் பாடலில் குறிப்பிட்டது.

ஆறாம் திருமுறை பதிகம் 19

திருத்தாண்டகம்

1. முளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி
முதிரும்சடை முடிமேல் முகிழ்வெண் திங்கள்
வளைத்தானை வல்லசுரர் புரங்கள் மூன்றும்
வார்சிலையா வாசுகி மரணு கோத்துத்
துளைத்தானைச் சுடுகரத்தால் துவள நீறாத்
தூழுத்த வெண்முறுவல் உமையோ டாடித்
திளைத்தானைத் தென்கூடல் திருவால வாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

(அ.சொ.) முகிழ் – அரும்பும், திங்கள் – சந்திரன், புரங்கள் – கோட்டைகள், வரை – மேருமலையை, சிலையா – வில்லாகக்கொண்டு, வாசுகி – வாசுகி என்னும் பாம்பை, மா – பெரிய. நாணா – கயிறாக, சுடுகரத்தால் – சுடும் அம்பால், துவள – வருந்த நீறா – சாம்பராகப் போகும்படி, தூ- சுத்தமான, முறுவல் – பற்கள், உமை – பார்வதிதேவி.

2. வாயானை மனத்தானை மனத்துள் நின்ற
கருத்தானைக் கருத்தறிந்து முடிப்பான் தன்னைத்
தூயானைத் தூவெள்ளை ஏற்றான் தன்னைத்
சுடர்த்திங்கள் சடையானைத் தொடர்ந்து நின்றுஎன்
தாயானைத் தவமாய தன்மை யானைத்
தலையாய தேவாதி தேவர்க்கு என்றும்
சேயானைத் தென்கூடல் திருவால வாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

(அ.சொ.) தூயானை – பரிசுத்தனை, தூ – தூய்மையான, ஏற்றான் – இரடபத்தை யுடையவன், திங்கள் – சந்திரன், சேயானை – அப்பாற்பட்டவனை.

இப்பதிகத்தில் மதுரைத் திருவாலவாய்ப் பெருமான் முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளாய் இருப்பவன் என்பதை ஆணித்தரமாக “முளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி” என்ற சீரிய கருத்து அறிவிக்கப்படுகிறது. இறைவர் முப்புரங்களை எரிக்க மேருமலையை வில்லாகவும், வாசுகியாகிய பாம்பை வில்லின் நாணாகவும் கொண்டார்.

இடி இடித்தற்கும் இறைவனே காரணன் என்பதை இப்பதிகம், “கால் திரளாய் மேகத்தின் உள்ளே நின்று கடுங்குரலாய் இடிப்பானை” என்று கூறுகிறது; இறைவன் அடியவர்க்கு எளியவனாயும் பிறர்க்கு அரியவனாயும் இருப்பவன் என்பது “பிறர்க்கு என்றும் அரியான்” என்னும் தொடர் விளக்குகிறது. இறைவர் திருப்பாற்கடலுள் எழுந்த விடத்தை உண்டிலர் எனில் தேவர்கள் அமுதம் பெற இயலாது. ஆகவே அவர்கட்கு அமுதம் ஈந்த கருணை இறைவர்பால் இருந்தமையின், “அமரர்களுக்கு அமுது ஈந்தானை” என்ற அருளிப் பாட்டை அறிவித்தனர். அப்பர் இதனை நன்கு விளக்கி, “விண்ணோர் நடுங்கக் கண்டு விரி கடலின் நஞ்சு உண்டு அமுதம் ஈந்த தேவனை” என்றும் அறிவித்துள்ளார். இறைவன் திருவடிப் பற்றைத் தவிர்த்து வேறு பற்று அற்றவர் அடியார் என்பது “மற்று ஒருபற்று இல்லா அடியார்” என்னும் அடியால் புலனாகின்றது. இறைவன் அன்பர்களின் கருத்தறிந்து அக்கருத்தை முற்றுப்பெற வைப்பவன் என்ற அவனது கருணைத்திறத்தையும் அப்பர் போற்றினர்; இவன் கருணையின் திறத்தை மேலும் வற்புறுத்த “எல்லார்க்கும் அருள் செய்வானை” என்ற தொடராலும் குறிப்பிட்டனர். அப்பருக்கும் அரனார்க்கும் இருந்த நட்புரிமை “அடியேனுக்கு அன்பன் தன்னை” என்று அப்பரே குறிப்பிடுவதால் அறியலாம்.

இப்பதிகத்தில் திருப்பழனத்தலமும் குறிக்கப்பட்டுள்ளது. அத்தலம், அலங்காரம் நிலவும் சோலைகளையுடையது என்றும் சுட்டப்பட்டுள்ளது. இறைவன் கங்கையை மறைத்து உமையோடு திளைக்கிறார் என்பதை நகைச்சுவை அமைய, “கங்கையாளைக் கரந்து உமையோடு உடனாகி இருந்தான் தன்னை” என்று கூறி விளக்குகிறார். இறைவியின் வடிவம் எழுத துண்ணா வடிவம் என்பது”

“படி எழுதலாகாத மங்கை” என்பதால் விளங்குகிறது; துறந் தார்க்குத்தூ நெறியாய் இருப்பவன் இறைவனே” என்பதையும் ஈண்டே அறியலாம்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !