
பாண்டி நாட்டுக் கோவில்கள் பாலூர் கண்ணப்ப முதலியார்
10. திருக்கானப்பேர்
இத்தலம் பாண்டிய நாட்டுப் பாடல் பெற்ற தலங்களுள் பத்தாவது. இதனைத் திருஞானசம்பந்தரும், சுந்தரரும் பாடியுள்ளார். ஆகவே இதற்குப் பதிகம் இரண்டு. இத்தலத்தைக் காளையார் கோவில் என்று கூறுவர். இதற்குக் காரணம் சுந்தரர் சேரமான் பெருமாள் நாயனாருடன் திருச்சுழியலில் சுவாமி தரிசனம் செய்து, அங்குத் தங்கி இருந்தார். அன்று இரவு திருக்கானப்பேர் இறைவர் காளை வடிவுடன் கையில் பொற் செண்டும், முடியில் சுழியமும் கொண்டு சுந்தரர் கனவில், “யாம் இருப்பது கானப்பேர்” என்று கூற, மறுநாள் காலையே இத்தலத்தை நோக்கிப் புறப்பட்டு, “கண்டு தொழப் பெறுவது என்று கொலோ அடியேன் கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே” என்று பாடிப்பரவினார். இத்தலத்திற்குக் காளிபுரம் என்ற பெயரும் உண்டு.
இத்தலம் பெரியது. கோபுரமும் பெரியது. இத்தலத்தில் மூன்று சந்நிதிகள் உள்ளன. முதலாவது, சோமேசர், சௌந்தர நாயகி சந்நிதி; இரண்டாவது காளிசர், சொர்ண வல்லி சந்நிதி; மூன்றாவது சுந்தரேசர், மீனாட்சி சந்நிதி. பெரிய கோபுரம் சோமேசர் சந்நிதிக்கு நேரே இருக்கிறது. இத்தலத்துத் தெப்பல் உற்சவம் சிறப்பானது.
இத்தலத்தில் காட்டானையாகச் சாபம் ஏற்ற ஐரா வதம் என்னும் யானை பூசித்துச் சாபம் நீங்கியது. இதனைத் திருஞானசம்பந்தர் இத்தலத்து முதற்பாடலிலேயே பாடி யுள்ளார்.கௌண்டில்ய ரிஷியும் பூசித்துப் பேறுபெற்றுள்ளார்.
இத்தலத்துத் தீர்த்தம் யானை மடு, புட்பல தீர்த்தம் முதலியன. இறைவர் சோமேஸ்வரர், ஸ்ரீகாளீஸ்வரர், ஸ்ரீசுந்தரேஸ்வரர், காளையப்பர், காளையீஸ்வரர் என்றும் தேவியார் சுவர்ணவல்லி, மீனாட்சி, சௌந்தரநாயகி என்றும் கூறப்படுவர்.
இத்தலத்தை நாட்டரசன் கோட்டை ரயில் நிலையத்திலிருந்து 6 கல் சென்றேனும்,திருவாடானைக்கு மேற்கே 21 கல் சென்றேனும், தேவகோட்டைக்குத் தென்மேற்கே 15 கல் சென்றேனும், மதுரைக்குக் கிழக்கே சிவகெங்கை வழியே 30 கல் கடந்தேனும், மானாமதுரை ரயில் நிலையத்தி லிருந்து 11 கல் சென்றேனும் அடையலாம். எல்லாவழிகளிலும் பஸ் வசதி உண்டு.
மூன்றாம் திருமுறை பதிகம் 26
பண் – கொல்லி
1.பிடியெலாம் பின்செலப் பெருங்கைமா மலர்தழீஇ விடியலே தடமூழ்கி விதியினால் வழிபடும் கடியுலாம் பூம்பொழில் கானப்பேர் அண்ணல்நீர் அடியலால் அடைசரண் உடையரோ அடியரே
(அ.சொ.) பிடி – பெண் யானைகள். கைமா – யானை (ஈண்டு ஐராவதம் என்னும் தெய்வலோக யானை) தடம் – குளம், கடி – வாசனை. பொழில் – சோலை. அண்ணல் – தலைவனே!
2. காட்டகத் தாடலான் கருதிய கானப்பேர்
கோட்டகத் திளைவரால் குதிகொளும் காழியான்
நாட்டகத் தோங்குசீர் ஞானசம் பந்தன் பாட்டகத்
திவைவலார்க் கில்லையாம் பாவமே.
(அ.சொ.) காட்டகத்து – சுடலையில், கோட்டகம் – கரை, ஆழமான நீர்நிலை, காழியான் – சீர்காழிப் பதித் தலைவரான திருஞானசம்பந்தர், நாட்டகத்தில் – நாட்டில், சம்பந்தன் – திருஞானசம்பந்தர் பாடியுள்ள.
இப்பதிகத்தால் கானப்பேர் ஊரைப் பற்றிப் பலவற்றை அறியலாம். முதலாவது இஃது ஐராவதம் என்னும் யானையால் பூசிக்கப்பெற்றது என்பதை இப்பதிக முதற் பாடலாலும் ஏழாவது பாடலாலும் அறியலாம்.
இத்தலத்து இயற்கை அழகுகள் இனிதின் எடுத்துப் பேசப்பட்டுள்ளன. இங்குள்ள சோலைகள் மலர் நிறைந்து மணம் உடையனவாய் இருந்தன. இங்குள வண்டுகள் குளங்களில் சிலபோது தங்கிப் பிறகு செங்குவளை மலர் களை அடைந்து பண் பாடும். மான் கூட்டங்களும், குரங்குக் கூட்டங்களும் நிறைந்த காடுகள் நிறைந்து, தேனும் மிக்கு, மணம் கமழும் இடம் கானப்பேர் ஆகும்.யானைகள் கொழுங் கொடிகளைக் கறித்துச் செல்லும் இடமும் ஆகும். ஆண் யானை முன் செல்லப் பெண் யானைகள் பின் சென்று வழிப்பட்டன என்னும் செய்தி இப்பதிகத்தில் குறிப்பிடப் பட்டிருப்பதை நோக்கின், அஃறிணைப் பொருள்களுள்ளும் ஆண் இனத்திற்கு முதற்பெருமை உண்டு என்பதை அறி தற்கே யாகும் என்பதை உணரலாம். “அவன் அவள் அது” என்று தானே நமது சாத்திரமும் கூறுகிறது.
திருஞானசம்பந்தர் இத்தலத்துப் பதிகத்தின் மூலம், அடியவர்கட்குக் கானப்பேர் உறையும் இறைவன் காரணமே அரண் என்பதையும் விண்ணிடைச் செல்லும் விருப்புடை யார் இத்தலத்தை அடைதல் வேண்டும் என்பதையும் இத்தலத்தை அடைந்தவர்க் கல்லால் குற்றம் நீங்காது என்பதையும், இத்தலத்தைத் தொழுபவர் தீதற்றவர் ஆவர் என்பதையும்,உடம்பில் உள்ள பெருநோய் நீங்க வேண்டில் மலர் கொண்டு இத்தலத்தை வழிபடச் செல்லுதலே நலந் தருவதாகும் என்பதையும், இத்தலத்தைத் தலை யினால் தினமும் வணங்குபவர் தினமும் உயர்ந்தோங்கும் நன்மையைப் பெறுவர் என்பதையும், இவ்வாறு வணங்குபவரே தவமுடையவர்கள் என்பதையும், நம் கருமம் இத் தலத்து இறைவரைக் கைதொழுதலே என்பதையும், இப் பதிகத்தைப் பாடுவார்க்குப் பாவம் இல்லை என்பதையும் குறிப்பிட்டுப் பாடியுள்ளார்.
இறுதிப் பாட்டால் சீர்காழி நீர்வளமுடைய பதி யாதலின், இளையவரால் மீன்கள் கரைகளில் துள்ளிக் கொண்டிருக்கும் என்பதும், திருஞானசம்பந்தர் நாட்டில் ஓங்கிய சீருடையர் என்பதும் முதலானவை தெரிய வரு கின்றன.
அருந்தொடர்கள்:
“ஞானமா மலர்கொடு நணுகுதல் நன்மையே”
“தலையினால் வணங்குவார் தவமுடையார்களே.”
ஏழாம் திருமுறை பதிகம் 84
பண் – புறநீர்மை
1. தொண்டரடித் தொழலும், சோதிஇளம் பிறையும்
சூதன மென்முலையாள் பாகமும்ஆகி வரும்
புண்டரிகப் பரிசாம் மேனியும்வா னவர்கள்
பூசலிடக் கடல்நஞ் சுண்டகருத் தமரும்
கொண்ட எனத்திகழும் கண்டமும்எண் தோளும்
கோல நறுஞ்சடைமேல் வண்ணமும்கண் குளிரக்
கண்டு தொழப்பெறுவ தென்று கொலோ அடியேன்
கார்வயல் சூழ்கானப் பேருறைக ளையையே
(அ.சொ.) சூது – சொக்கட்டான் காய், இது மாதர் முலைக்கு உவமைப் பொருள். அன – போன்ற, புண்டரிகம் – தாமரை, பரிசு – தன்மை, இறைவர் திருமேனி செம்மை நிற மாதலின், செந்தாமரை ஈண்டு அத்திருமேனிக்கு உவமை யாயிற்று. வானவர்கள் – தேவர்கள், பூசல் – ஆரவாரம். கொண்டல் – மேகம், கோலம் – அழகிய. கார் – கார்நெல் வளரும்.
2. நாறுடை மாடெனவே நன்மைதரும் பரனை
நற்பதம் என்றுணர்வார் சொற்பதமார் சிவனைத்
தேனிடை இன்னமுதை மற்றதனில் தெளிவைத்
தேவர்கள் நாயகனைப் பூவுயர்சென் னியனை
வானிடை மாநடன்என் றெய்வதென் றுகொலோ
மாருத மும்மனலும் மண்டலமும் ஆய
கானிடை மாநடன்என் றெய்துரிதென் றுகொலோ
கார்வயல் சூழ்கானப் பேருறைகா ளையையே
(அ.சொ.) மாடு – பொன், மா – பெரிய, மதி – சந்திரனை, மாசு – குற்றம், மாருதம் – காற்று.
இறைவர் சுந்தரர் கனவில் வந்து கூறிச் சென்ற பின் “இறைவரை எப்பொழுது கண்டு தொழுவேன்” என்று அவர் கருதிப் பாடலைப் பாடியுள்ளார். சுந்தரர் இறைவரை மலர் கொண்டு வழிபட்டு அல்லல் தீரவே விரும்பி இருந்தார். இத்தலத்தில் இவருக்குத் திருத்தில்லை நடனக்காட்சி காணவேண்டும் என்னும் விருப்பமும் ஏற்படுகிறது. இறைவர் மூவர் உருவமும் தம் உருவராகக் கொண்டு மூல முதற் கருவாகவும் உள்ளார். இறைவர் இறத்தற்குக் காரணமான நஞ்சை யுண்டும் இறவாதிருந்தார் என்னும் கருத்தைக் கூறி இறைவரது முழுமுதல் தன்மை ஈண்டுக் குறிப்பிடப் பட்டிருப்பதை யுணரவும்.
சுந்தரர் பொருட்டு இறைவர் தூது சென்றதும், இறைவர் இவரைத் தோழாராகக் கொண்டதும் இப்பதிகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. “தூதனை என்தனை ஆள் தோழனை” என்னும் தொடரைக் காண்க. இதன் மூலம் சுந்தரர் வாழ்க்கை வரலாற்றுக் குரிய அகச் சான்றையும் காண்க. திருஞானசம்பந்தரைப் போன்று பதிகம் பாடும் பத்தர் பெறும் பேற்றைச் சுந்தரர் கூறும் வழக்கம் உண்டு. அந்த முறையில் இப்பதிகத்தைப் பாடுவார் பத்தராய் நல்ல குணத்தராய் எத்திக்கும் நிறைந்த புகழுடையராய் மண்டலத் தலைவர்களாய் வாழ்வது உறுதி என்று கூறுகிறார் சுந்தரர். இப்பதிகம் இறைவர் தோற்றங்களைப் பலவாக எடுத்து இயம்புகிறது. இறைவர் தன்மைகளும் எடுத்துப் பேசப் படுகின்றன.
அருந்தொடர்கள்:
“மூவர் உருத்தனதாம் மூலமுதல்,”
“மெய்யே பற்றும் அவர்க்கு அழுது.”
“தொண்டர் தமக்கு எளியசோதி,”
“பத்தர் மனத்து இறையும் பற்று விடாதவனை,”
“ஒண்சீர் உறை தண் தமிழ்.”



