பாண்டி நாட்டுக் கோவில்கள் பாலூர் கண்ணப்ப முதலியார்

3. திருப்பரங்குன்றம்

இது பண்டைய நாட்டுப் பாடல்பெற்ற தலங்களுள் மூன்றாவது. முருகன் இறைவனை வழிபட்ட தலம். இத்தலம் முருகப் பெருமானுக்குரிய ஆறுபடை வீடுகளுள் ஒன்றாகவும் விளங்கும் பெருமை வாய்ந்தது. இதனை நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப்படை மூலம் அறியலாம். இத்தலத்திற்குத் திருஞானசம்பந்தரும், சுந்தரரும் பாடிய பதிகங்கள் இரண்டு உண்டு. முருகப் பெருமான் தெய்வயானையை மணந்த இடம் இதுவே. அதுபோது இறைவரும் இறைவியாரும் அவர்க்குக் காட்சிதந்த தலம். சுந்தரர் தம் காலத்தில் இருந்த மூவேந்தர்களாகிய சேர சோழ பாண்டிய மன்னர்களுடன் சென்று தரிசித்துத் தொண்டு செய்த க்ஷேத்திரம். இதனை “முடியாமல் உலகாண்ட மூவேந்தர் முன்னே மொழிந்த ஆம் ஓர் நான்கும் ஓர் ஒன்றும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இத்தலம் மலையில் குடையப்பட்டிருக்கிறது. இத் தலத்தின் மலைக் குகையில் தான் நக்கீரர் பூதத்தால் அடைக்கப்பட்டனர் என்றும்,அதுபோது திருமுருகாற்றுப் படை யினைப்பாடி முருகன் திருவருளால் அக் குகையினின்றும் வெளிவந்தார் என்றும் கூறப்படுதலும் உண்டு. மலையை வலம் வரலாம். மலைமேல் ஒரு சிறு குளம் உளது. அதனைக் காசித்தீர்த்தம் என்பர். அதில் பல நிறமுடைய மீன்கள் உள்ளன. மலை மீது ஒரு சிறு மசூதியும் உண்டு. கீழ்க் கோயிலில் உள்ள தீர்த்தம் சரவணப்பொய்கை எனப்படும். இறைவர் திருப்பெயர் பரங்கிரிநாதர். இறைவியார் திருப் பெயர் ஆவுடைய நாயகி.

இக் கோயிலின் முன் மண்டபத்தில் உள்ள தெய்வ யானையின் திருமணக்கோலப் பொலிவு கண்டு இன்புறத் தக்கது. பரங்கிரி மலைக்குத் தெற்கில் உமையாண்டாள் கோயில் என்னும் பெயரில் ஓர் ஆலயம் உண்டு.

திருப்பரங்குன்றம் மதுரைக்குத் தென் மேற்கில் நான்கு கல் தொலைவில் உள்ளது. பஸ் வசதியுண்டு. ரயில்வே ஸ்டேஷனும் உண்டு. அங்கிருந்து கிழக்கே கால் மைல் தொலைவு நடந்தால், இத்தலத்தை அடையலாம்.

முதல் திருமுறை பதிகம் 100

பண் குறிஞ்சி

1. நீடலர் சோதி வெண்பிறையோடு நிரைகொன்றை
சூடலன் அந்திச் சுடர்எரி ஏந்திச் சுடுகானில்
ஆடலன் அம்சொல் அணிஇழை யானை ஒருபாகம்
பாடலன் மேய நன்னகர் போலும் பரங்குன்றே.

(அ.சொ.) நிரை- வரிசையாக : ஒழுங்காக, சூடலன் – சூடிக்கொண்டிருப்பவன்; ஆடலன் – ஆடுபவன், அம், அணி அழகிய, இழையாள் – ஆபரணம் அணிந்த பார்வதி: பாடலன் பாடுபவன்.

2. மைத்தகு மேனி வாளரக் கன்தன் மகுடங்கள்
பத்தினை திண்தோள் இருபதும் செற்றான் பரங்குன்றைச் சித்தம் தோன்றிச் செய்கழல் உன்னிச் சிவன்என்று
நித்தலும் ஏத்தத் தொல்வினை நம்மேல் நில்லாவே.

(அ.சொ.) மைத்தகுமேனி வாள் அரக்கன் – கருமை யான உடம்பினைப் பெற்ற இராவணன். அரக்கன் – ராட்சதன், மகுடங்கள் – முடிகள். செற்றான் – அழுத்தியவன். கழல் – திருவடி, உன்னி – எண்ணி. ஏத்த – போற்ற, தொல் – பழைய, வினை – துன்பம் தருகின்ற.

3. தடமலி பொய்கைச் சண்பைமன் ஞான சம்பந்தன்
படமலி நாகம் அரைக்கசைத் தான்தன் பரங்குன்றைத்
தொடைமலி பாடல் பத்தும் வல்லார்தம் துயர்போக்கி
விடம்மலி கண்டன் அருள்பெறும் தன்மை மிக்கோரே.

(அ.சொ.) தடம்மலி – பரப்பு மிகுந்த, சண்பைமன் – சீர்காழித்தலைவர், தொடை – எதுகைத் தொடை மோனைத் தொடை முதலிய யாப்புக்குரிய தொடைகள், மலி – நிறைந்த. கண்டன் – கழுத்தையுடையவனே.

இப் பரங்குன்றை யார் எண்ணித் தொழுகின்றார் களோ அவர்கட்கு நோய் அணுகாது. சிவன் என்று தினமும் கூறுபவர்க்குத் தொல்வினை இல்லை’ என்ற குறிப்புக்களை “உன்னிய சிந்தை உடையவர்க்கு இல்லை உறு நோயே” “சிவன் என்று நித்தலும் ஏத்தத் தொல்வினை நம்மேல் நில்லாவே” “தொண்டால் ஏத்தத் தொல்வினை நம்மேல் நில்லாவே” என்ற அடிகளில் காணலாம்.

இப்பதிக ஈற்றுப் பாடலால் திருஞான சம்பந்தர் சீர் காழியில் தலைசிறந்து விளங்கியவர் என்பதும் அப்பதி குளங்கள் நிறைந்தது என்பதும், இப்பதிகம் யாப்புக்குரிய தொடைகள் பல அமைந்தது என்பதும், இப்பதிகப் பாடல் களைப் பாடுபவர் துன்பம் தீர்ந்து திருநீலகண்ட மூர்த்தியின் திருவருள் பெறும் தன்மை மிக்கவர் ஆவர் என்பதும் அறியக்கிடக்கின்றன.

ஏழாம் திருமுறை பதிகம் 2

பண் இந்தளம்

1. கோத்திட்டையும் கோவலும் கோயில் கொண்டீர்
உமைக் கொண்டுழல் கின்றதோர் கொல்லைச்சில்லச் சேத்திட்டுக்குத்தித் தெருவே திரியும்
சில்பூதமும் நீரும் திசைதி சையன
சோத்திட்டு விண்ணோர் பலரும் தொழநும்
அரைக்கோ வணத்தொ டொருதோல் பூடை சூழ்ந்து ஆர்த்திட்ட தும்பாம் புகைக்கொண் டதும்பாம்
படிகேன்உமக் காட்செய அஞ்சுதுமே.

(அ.சொ.) கோத்திட்டை என்பது திருப்பரங்குன் றத்தலமாக இருக்கலாம். என்று ஊகிக்கப்படுகிறது. கோவல் -திருக்கோவலூர், கொல்லை – முல்லை நிலம். இல் சிறிய, ஐ – அழகிய, சே – இரஷபம், திட்டு – மண்மேடு, சோத் திட்டு – தோத்திரம் செய்து, விண்ணோர் – தேவர், புடை – பக்கம். ஆர்த்திட்டது -கட்டியிருப்பது. அடிகேள் – இறைவரே.

2. அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதும்என்
றமரர் பெருமானை ஆரூரன் அஞ்சி
முடியால் உலகாண்ட மூவேந்தர் முன்னே
மொழிந்தாறும் ஓர்நான்கும் ஓர்ஒன்றினையும்
படியா இவைகற்று வல்ல அடியார்
பரங்குன்றம் மேய பரமன் அடிக்கே
குடியாகி வானேர்க்கும் ஓர்கோவும் ஆகிக்
குலவேந்த ராய்விண் முழுதாள் பவரே.

(அ.சொ.) அமரர், வானோர் – தேவர், மூவேந்தர் – சேர, சோழ, பாண்டியர்,ஆறும். ஓர் நான்கும், ஓர் ஒன் றும் – பதினொரு பாடல்கள், படியா – படித்து, கோ – தலைவர். குலவேந்தர் – சிறந்த மன்னர், விண் – தேவலோகம்.

இப்பதிகம் சுந்தரரால் திருப்பரங்குன்றத்தின் மீது பாடப்பட்டது என்பதற்கு ஏற்ற குறிப்புப் பாடல்தோறும் இல்லை என்றாலும் இப்பதிக ஈற்றுப் பாடலில், “பரங் குன்றம் மேய பரமன்” என்று குறிப்புக் காணப்படுதல் கொண்டு, இது திருப்பரங்குன்றத்தில் பாடப்பட்டது என்பதை அறிந்துகொள்ளலாம். இத்துடன் இப்பதிகத்தின் தொடக்கப்பாடல் கோத்திட்டையும் என்று தொடங்கப் பெறுதலினால், கோத்திட்டை என்பது திருப்பரங் குன்றத்திற்குரிய பெயர்களுள் ஒன்றாக இருக்கக் கூடும் என்பதும் ஊகிக்கப்படுகிறது. ஈற்றுப் பாடலால் இப்பதிகமானது மூவேந்தர் முன் இவ்வாலயத்தில் பாடப் பட்டதாகும் என்பதும் வலியுறுத்தப்படுகிறது. அப்போது உடன் இருந்த சேரமன்னர் சேரமான் பெருமாள் நாயனார் ஆவர். ஆனால், சோழர் யாவர், பாண்டியர் யாவர் என்பதனை அறிந்து கொள்ளுதற்கு இல்லை; மேலும் இவ் வீற்றுப் பாடலால் இப்பதிகத்தில் அடங்கிய பதினொரு பாடல்களையும் படித்துக் கற்று வல்லவர் அடியவர்களாவர் என்பதும், திருப்பரங்குன்றப் பரமன் திருவடிக்கே குடியாகும் பேறுபெறுவர் என்பதும், தேவர்கட்குத் தலைவர் ஆவர் என்பதும், சிறந்த மன்னராகும் பேறுபெற்றுத் தேவலோகம் முழுமையையும் ஆளும் வாய்ப்பினையும் பெறுவர் என்பதும் அறியக் கிடக்கின்றன.

சுந்தரர் இறையவர்க்கு நெருங்கிய தோழர் ஆவர். அத்தோழமை உரிமை இருப்பதனால் இறைவரோடு தோழமைப் பேச்சில் “இறைவ! உனக்கு அடிமை செய்ய அஞ்சு கின்றோம், அஞ்சுதற்குரிய குறிகள் உம்மிடம் உள்ளன.” என்று ஏளனம் செய்வது போலப் பாடப்பட்டிருக்கும் கருத்தை உன்னி உன்னி நாம் இன்பம் அடையவேண்டியவ ராவோம். இப்பாடலில் நகைச்சுவைக் குரிய குறிப்புக்கள் நிரம்பி இருக்கின்றன.

அஞ்சுதற்குரியனவாகச் சுந்தரர் இப்பதிகத்தில் குறிப் பிடுவன, “மேடுகளைக் குத்தித் தெருவே திரியும் எருது உம் பால் உள்ளன. பூதகணம் உம்பால் உண்டு. நீரும் தோலைக் கட்டிக்கொண்டுள்ளீர், பாம்பினைக் கையிலும், கண்டத்திலும், தோளிலும் கட்டியுள்ளீர். விஷம் உண்டுள்ளீர். புலால் நாற்றம் வீசும் வெண்டலை உம்மிடம் உண்டு, பூத பைசாசங்கள் உம்மைச் சூழ்ந்துள்ளன; எந்த நேரமும் உம் மனையாளுடன் இணைந்து அவளை விட்டுப்பிரியாது இருக்கின்றீர். உம் பாம்புக்குப் படம் ஐந்து உண்டு. சுடுகாட்டில் நடமாடும் இயல்பினீர்” என்பன போன்றவைகள்.

தோழமை காரணமாகப் பேசும் உரிமை சுந்தரர் பெற்றிருந்தார் என்பதை “பிண்டம் சுமந்து உம்மொடும் கூடமாட்டோம்” “பஞ்சுண்ட அல்குல் பணை மென் முலையாளொடு நீரும் ஒன்றாய் இருத்தல் ஒழியீர்” “எல்லாம் அறிவீர் இதுவே அறியீர் என்று இரங்குவேன்” கண்ணும் மூன்று உடையீர்,” கண்ணே இருந்தால் அங்கத்து உறுநோய்களைந்து ஆளகில்லீர்” “உம் செய்கை எல்லாம் ஆரொடும்கூடா; அடிகேள் இது ஏன்?” என்பன போன்ற அடிகளால் காணலாம்.

இறைவர் எல்லாமாய் இருப்பவர் என்ற உண்மையினை ”பாரொடு விண்ணும் பகலும் ஆகிப் பனிமால் வரையாகிப் பரவையாகி, நீரொடு தீயும் நெடுங்காற்றும் ஆகி நெடு வெள்ளிடையாகி நிலனும் ஆகி” என்ற அடிகளில் காண்க.

இத் திருப்பதிகத்தில் திருக்கோவலூர், கடம்பூர்க்கரக் கோயில், திருவொற்றியூர், அண்ணாமலை, ஆரூர் முதலிய திருத்தலங்கள் இணைத்துப் பாடப்பட்டுள்ளன. திரு வொற்றியூரில் படம்பக்கம் என்னும் பறை கொட்டப் படுதல் சிறப்புப் பற்றிப் படம்பக்கம் கொட்டும் திருஒற்றியூர் என்று அடைகொடுத்துப் பாடப்பட்டுள்ளது. இதனால் இறைவன் படம்பக்க நாதர் என்ற திருப்பெயரையும் தாங்கியுள்ளார்.

இப்பதிகத்தால் சுந்தரர் ஏதோ உடல் நோயால் சிறிது துன்புற்றிருந்ததாகவும், அது தீரும் பொருட்டு இறைவரை வேண்டி வந்ததாகவும் தமக்குச் சோறும் கூறையும் தேவையாக இருந்தன என்பதும் போன்ற குறிப்புக்கள் காணக் கிடக்கின்றன. அருளே திருமேனியாக உடைய உமையம்மையை உடன் வைத்திருந்தும் உதவி புரித்திலீரே என்று இடித்து உரைப்பார் போல, “அதுவே அன்றியும் வேப்புரையும் தோளான் உமை நங்கை ஓர் பங்கு உடையீர் உடுகூறையும் சோறும் தந்து ஆளகில்லீர்; (ஆனால்) ஆள் ஆளியவே கற்றீர்” என்று அடிகளில் சுட்டிக்காட்டி இறைவருடன் சுந்தரர் ஏச்சு மொழி இசைக்கின்ற அழகையும் இப்பதிகத்தில் நன்கு காணலாம்.

இப்பதிகத்தைப் பன்முறை படிக்கப் படிக்கத்தான் இதனை அடங்கிய இலக்கியச் சுவையும் இன்பச் சுவையும் இனிதின் நுகர ஏதுவாகும். “பெரியாரோடு நட்பு இனிது” என்னும் தொடர் என்றும் நம் மனத்தில் இருத்தற்குரிய தாகும். பெரியாரைத் துணைக்கோடல், என்றும் திருக் குறட்பாக்கள் பத்தின் பொருளும் இதில் அடங்கி இருக்கிறது.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !