
பாண்டி நாட்டுக் கோவில்கள் பாலூர் கண்ணப்ப முதலியார்
4. திருவேடகம்
பாண்டிய நாட்டுத் தலங்களில் இது நான்காவது. திருஞானசம்பந்தர் சமணர்களோடு செய்த வாதங்களில் புனல்வாதமும் ஒன்று. இந்த வாதத்தின்போது, சம்பந்தர் ”வாழ்க அந்தணர்” என்னும் பதிகம் பாடி அதனை ஏட்டில் எழுதி வைகையில் இட்டனர். இவ்வாறே சமணர்கள் தம் சமயப் பெருமையினை எழுதி வைகையில் இட்டனர். சமணர் இட்ட ஏடு ஆற்றுநீர் செல்லும் வழியே சென்று இருக்கும் இடம் தெரியாமல் மறைந்தது. ஆனால், சம்பந்தர் இட்ட ஏடு வைகை யாற்றினை நீர் ஓட்டத்திற்கு எதிராகச் சென்று வைகைக் கரையில் தங்கிவிட்டது. இவ்வேடு தங்கிய இடமே ஏடகம் எனப்படும். திரு என்னும் அடைமொழி கொடுக்கப்பட்டுத் திருவேடகம் என்று அழைக்கப்படுவதாயிற்று. இவ்விடத்தில் ஏடு சென்று தங்கியது என்பது உண்மை என்பதை உணர இத்தலத்தைப் பற்றித் திருஞானசம்பந்தர் தாம் பாடிய பதிகத்தின் ஈற்றுப்பாடலில் ‘ஏடு சென்றணைதரும் ஏடகத் தொருவனை’ என்று குறிப் பிட்டிருப்பதன் மூலம் காணலாம்.
இத்தலத்து இறைவர் ஏடகநாதர். இறைவியார் உமாதேவியார். தீர்த்தம் வைகை நதியே. இத்தலத்திற்கு உரிய பதிகம் ஒன்றே. அது திருஞானசம்பந்தரால் பாடப் பட்டது. இத்தலம் மதுரையினின்று சென்னை நோக்கிச் செல்லும் இருப்புப்பாதை மார்க்கத்தில் உள்ள சோழவந்தான் என்னும் இரயில்வே ஸ்டேஷனுக்குத் தென் மேற்கே இரண்டரை கல் தொலைவில் வைகை யாற்றங் கரையில் இருக்கிறது.
மதுரை டவுனிலிருந்து பஸ்மூலம் சென்று இத் தலத்தை அடையலாம்.
மூன்றாம் திருமுறை பதிகம் 32
பண் – கொல்லி
1. வன்னியும் மத்தமும் மதிபொதி சடையினன்
பொன்னியல் திருவடி புதுமலர் அவைகொடு
மன்னிய மறையவர் வழிபட அடியவர்
இன்னிசை பாடலார் ஏடகத் தொருவனே.
(அ.சொ.) வன்னி – ஒருவகை மலர், மத்தம் – ஊமத் தம்பூ, மதி – சந்திரன், பொதி – நிறைந்த, இயல் – தன்மை, மன்னிய – நிலைபெற்ற, மறையவர் – வேதம் உணர்ந்தவர்.
2. பொய்கையின் பொழிலுறு புதுமலர்த் தென்றலார் வைகையின் வடகரை மருவிய ஏடகத்
தையனை அடிபணிந்து அரற்றுமின் அடர்தரும்
வெய்யவன் பிணிகெட் வீடெனி தாகுமே.
(அ.சொ.) பொழில் – சோலை, உ று – பொருந்திய மருவிய – பொருந்திய. அரற்றுமின் – அன்பினால் கதறுங்கள். அடர்தரும் – நெருங்கும். வெய்ய – மிகக்கொடிய, வன்பிணி – வன்மைமிக்க நோய், வீடு – மோட்சம், எளிது – அடைதல் சுலபம்.
இப்பதிகம் மக்களுக்கு நல்ல உபதேசம் செய்யும் முறையில் அமைந்த குறிப்புக்களைக் கொண்டுள்ளது. உலக மக்களை நோக்கி, “மக்களே அன்பினால் கதறுங்கள். அப்படிக் கதறினால் இடிபடும் வினைகள் போவதோடு, என்றுமே இல்லாமல் போகும். கொடியதும், நம்மை வந்து அணுகுவதும், வன்மை மிக்கதும் ஆன நோய் கெட்டு மோட்சமும் எளிதாக வந்து கூடும் என்றும், கண்டு கை தொழுதால் கவலை நோய் நீங்கும் என்றும் ஏடகம் சேர்வதே நமக்குப் பெருஞ் செல்வம்” என்றும் இப்பதிகத்தில் குறிப்பிடப்பட்டதைக் காண்க.
”அரற்றுமின் அன்பினால், இடிபடும் வினைகள் போய் இல்லையாகுமே” “கண்டு கை தொழுதலும் சுவலை நோய் கழலுமே” “சீலமார் ஏடகம் சேர்தலாம் செல்வமே” “வெய்யவன் பிணி கெட வீடு எளிதாகுமே” என்ற அருந் தொடர்கள் நம் நினைவில் இருத்தற்குரியன.
திருவேடகம் இன்னிசைப் பாடல் நிறைந்த தலம். மறையவர் வழிபடும் தலம். இங்குள்ள மாளிகைகள் உயரமானவை. கொடிகள் கட்டப்பட்டு இவற்றின் உச்சி உயர்ந் திருந்தமையால் சந்திரனும் வந்து தங்கும் அளவுக்கு இருந்தன. இத்தலத்தில் குருக்கத்தி, சந்தனமரம், சண்பகம் முதலான மரங்கள், மிகுதியாக உண்டு. ஒழுக்கம் நிறைந்தவர் வாழும் தலமாகும். பொய்கைகளும் சோலைகளும் நிறைந்த புதுமலர்களைப் பெற்றுத் தென்றல் காற்று உலவப்பெற்று வைகையாற்றங் கரையின் வடக்கில் அமைந்த பதியாகும். வைகையாறு பொன், மணி, சந்தனம், அகில், யானைத் தந்தம் முதலான பொருள்களை அடித்துக் கொண்டு கரையை மோதும் அலைகளையுடையது என்பன போன்ற குறிப்புக்கள் இப்பதிகத்தால் புலனாகின்றன.
சமணர்கள் கையில் கமண்டலம் உடையவர்கள். தம் வயிற்றை வளர்ப்பதில் பெருநோக்கம் உடையவர். பணியாதவர் என்றும், பௌத்தர்கள் குணமில்லாதவர்கள் என்றும் இப்பதிகத்தால் அறிகிறோம்.
இப்பதிகத்தில் உள்ள பாடல்கள் பத்தையும் பாட வல்லவர்களுக்குப் பாவம் இல்லை. இப்பதிகம் திருஞான சம்பந்தரது வாழ்க்கை வரலாற்று உண்மைக்கு அகச்சான்றாய் நின்று துணைபுரியும் பதிகமாகும்.
திருஞானசம்பந்தர் புனல் வாதம் செய்தபோது, ஏடு சென்று தங்கிய குறிப்பினை “ஏடு சென்றணை தரும் ஏடகம்” என்று இப்பதிகத் திருக்கடைக் காப்புக் குறிப் பிடுகின்றதன்றோ?
ஒன்பதாவது பாடலில் “பண்டியைப் பெருக்கிடும் பளகர்கள்” என்று கூறியதைப் படிக்க நமக்கு நகைச்சுவை தோன்றுகிறது. பண்டி – வயிறு, பளகர் – மூடர்



