பாண்டி நாட்டுக் கோவில்கள் பாலூர் கண்ணப்ப முதலியார்

13. திருக்குற்றாலம்

இது பாண்டிய நாட்டுப் பாடல்பெற்ற தலங்களுள் பதின்மூன்றாவதாகும். இதனைத் திருஞானசம்பந்தரும் மாணிக்கவாசகரும் பாடியுள்ளார்.

திருஞானசம்பந்தர் பாடினதாக இரண்டு பதிகங்கள் உண்டு. அவற்றுள் ஒன்று திருக்குற்றாலம் பற்றியும், மற்றொன்று குறும்பலா என்பது பற்றியும் ஆகும். குற்றாலம் என்பது ஒருவகை ஆலமரம். இதுவே இத்தலத்து விருட்சம். குறும்பலா என்பது கோவில் பெயர். இதுவும் குறும்பலா என்ற தலவிருட்சம் காரணமாக ஏற்பட்ட பெயர். ஊர்ச் சிறப்பையும், கோவில் சிறப்பையும் தனித்தனியாகப் பாடிக் காட்டவே இரண்டு பதிகங்களைப் பாடினர் போலும்!

இத்தலம் நடராஜப்பெருமானுக்குரிய ஐந்து சபைகளில் ஒன்றான சித்திர சபை இருக்கும் இடமாகும்.

இத்தலம் ஒரு காலத்தில் விஷ்ணு தலமாக இருந்தது. இவரைத் தரிசிக்க அகஸ்தியர் இங்கு வந்துற்றார். அகஸ்தியர் திருநீறு பூசிய திருமேனியராய் இருக்கக்கண்ட திருமால் கோவில் பட்டாசாரிகள் முனிவரை உள்ளே செல்லாதவாறு தடுத்தனர். பிறகு அகஸ்தியர் வைணவ பாகவத வேடம் பூண்டுவர, அவர்கள் அவரை வரவேற்றுக் கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர். அகஸ்தியருக்கு உள் இருப்பவர் திருமால் என்பது தெரியும். வைணவ பட்டாசாரியர்களை அடக்க, மூலஸ்தானத்தில் திருமால் திருவுருவின் உச்சியில் உள்ளங்கையை வைத்து அழுத்திக் “குறுகு குறுகு” என்று கூறத் திருமால் குறுகிவிட அங்குச் சிவலிங்கம் தோற்றம் அளித்தது. அதனைக் கண்டு தரிசித்து வெளியே வந்தனர். திருமால், சிவலிங்கமாகி இருப்பதைக் கண்டு வெட்கித் தாம் செய்த குறும்புக்காக வைணவர்கள் வருந்தினார்கள். அன்று முதல் இத்தலம் சிவதலமாயிற்று.

இத்தலத்திற்குத் திரிகூடம் என்ற பெயரும் உண்டு. குற்றாலமலை மூன்று சிகரங்களைச் சிறப்பாகப் பெற்றமையே இதற்குக் காரணம். இங்கு மூன்று அருவிகள் சிறப்பாகப் பேசப்படுகின்றன. ஒன்று தேனருவி என்பது. இது 100 அடி உயரத்திலிருந்து விழுகிறது. இரண்டாவது அருவி செண்பகதேவி என்ற இடத்திலிருந்து 30 அடி உயரத்திலிருந்து விழுகிறது. இங்கு ஒரு காளி கோவிலும் உண்டு. மூன்றாவது குற்றால அருவி என்பது. இது 200 அடி உயரத்திலிருந்து விழுகிறது. பொங்குமா கடல் என்ற ஒரு துறையும் ஈண்டு உண்டு. இந்த இடங்களுக்குச் செல்வதானால் மிகவும் விழிப்புடன் செல்லவேண்டும். சந்நிதிக்குப் பின்புறம் ஒழுகுவது முதல் அருவி. இதற்குமேல் இருப்பதே பொங்குமா கடல். அங்கிருந்து இரண்டு கல் தொலைவில் குறுகிய செங்குத்தான பாதையில் இருப்பதே செண்பக அருவி. இப்பாதை வழியே மாவும், பலாவும் பாக்கும், ஏலமும், கிறாம்பும் வளர்ந்து கண்ணுக்கு இயற்கை இன்பத்தைக் கொடுக்கும். இவ்வருவிக்கு மேலே இரண்டு மைல் சென்றால் தேனருவியைக் காணலாம்.

குற்றால நாதர் தலத்துக்குத் தென் மேற்கில் 11 கல் தொலைவில் ஐந்தருவிகள் உள்ளன. இங்கு நல்ல முறையில் குளித்து இன்புறலாம். இத்தலம் சுகவாசஸ்தலங்களில் ஒன்று. நீர் வீழ்ச்சியின் அழகை முற்றிலும் காணவேண்டுமானால், ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி மாதங்களில்தான் காணமுடியும். இந்தக் காலங்களில் பலர் இங்கு சென்று தங்கி இன்பம் அடைவர். இத்தலம் புஷ்பகந்தா, கவுன் சனர் முதலியோர் பூசித்த தலம் ஆகும்.

இத்தலத்துக் கோயில் சங்கு வடிவாக அமைந்துள்ளது.

வடக்குப் பார்த்த சந்நிதி. ஒரு பெரிய கோபுரம் கட்டத் தொடங்கி முடிவுறாத நிலையில் இருக்கிறது. அம்மன் சந்நிதியும், இறைவன் சந்நிதியும் ஒன்றன் பக்கத் தில் ஒன்றாக அமைந்துள்ளன. இங்கு கண்டு தரிசிக்கக் கூடியவை; செண்பகதேவி, சித்திரசபை, குற்றாலநங்கை, கூத்தர் கோவில், மாடசாமி, சம்பந்தர் சிலை உருவங்கள்.

இறைவர் குறும்பலா நாதர். இறைவியார் குழல்வாய் மொழியம்மை. தீர்த்தம் சித்திரநதி. இத்தலத்து இறைவர் முன்னர் திருமால் உருவில் இருந்தமையின் இதுபோதும் இருவருக்குத் துளசி சாத்தலும் உண்டு.

இத்தலத்தைத் தென்காசி ரயில் நிலையத்திலிருந்து 3 மைல் மேற்கே சென்று அடையலாம். பஸ் வசதியும், வண்டி வசதியும் உண்டு.

முதல் திருமுறை பதிகம் 99

பண் – குறிஞ்சி

1. வம்பா குன்றம் நீடுயர்சாரல் வளர்வேங்கை
கொம்பார் சோலைக் கோலவண்டி யாழ்செய் குற்றாலம் அம்பால் நெய்யோ டாடல் அமர்ந்தான் அலர் கொன்றை நம்பான் மேய நன்னகர் போலும் நமரங்காள்

(அ.சொ.) வம்பு – மணம்,ஆர் – பொருந்திய, வேங்கை – வேங்கைமரம், கொம்பு – கிளைகள். கோலம் – அழகிய, யாழ் வீணை போன்ற ஓசை. அம் – அழகிய, ஆடல் – முழுக்கு, நம் பான் – நம் சிவபெருமான்.

2. மாடவீதி வருபுனல் காழி யார்மன்னன்
கோடல் ஈன்று கெழுமுனை கூம்பும் குற்றாலம்
நாட வல்ல நற்றமிழ் ஞான சம்பந்தன்
பாடல் பத்தும் பாடநம் பாவம் பறையுமே

(அ.சொ.) மாடம் – பெரிய பெரிய கட்டடங்கள் புனல் – நீர் வளம், காழி – சீர்காழி, ஆர் – பொருந்திய, கோடல் – காந்தள் மலர், முனை அரும்பு, கூம்பும் – குவியும், பறையும் – நீங்கும்.

இக் குற்றாலப் பதிகம் இயற்கைக் காட்சியினை இனிதின் எடுத்து இயம்புவதாகும். மேலும், இது உலகமக்களை நோக்கி இத்தலத்தைப் பற்றி அறிவிக்கும் முறையில் அமைந்ததும் ஆகும்.

முன்னர் இயற்கைக் காட்சி எவ்வாறு எடுத்து இயம்பப் பெற்றுள்ளது என்பதைக் காண்போமாக. குற்றால் மலையில் ஏலம், கிறாம்பு முதலான மணமுடைய மரங்கள் வளர்ந்திருத்தலின் நறும் மணமுடையதாகும். சாரல்கள் நீண்டு உயர்ந்து காணப்படும். வேங்கை மரங்கள் நாளும் நாளும் வளர்ந்து கிளைகள் பெருத்துக் காணப்படும். சோலைகளில் வண்டுகள் யாழ்போல இனிது இசைத்துக் கொண்டிருக்கும். செண்பகம் வேங்கை மரத்தில் படிந்து இருக்கும். முல்லை மலர்கள் அரும்புகளை ஈனும். வாழைக் கனிகளும் பலாக்கனிகளும் மாங்கனிகளும் மிகுந்து தொங்கிக் கொண்டிருக்கும். பெண் குரங்குகள் தம் மடியில் குட்டிகளைத் தழுவிக்கொண்டு, வாழைப் பழங்களைத் தின்று கொண்டிருக்கும்.

மலைப் பக்கங்களில் தினைப்புனங்கள் நிறைந்து, அவற்றில் தினைப் பயிர் நன்கு முற்றி இருக்கும். நிலையில் கிளிகள் வந்து உண்ணும்போது, தினைப்புனம் காக்கும் இளம் பெண்கள், மலையில் கிடைக்கும் நாகமணிகளை வாரிக்கொண்டு வந்து அவற்றைத் தினைக்கதிர் உண்ண வந்த கிள்ளைகள் மீது எறிந்து ஓட்டிக்கொண்டிருப்பர். மயில்கள் ஆணும் பெண்ணுமாக ஆடிக்கொண்டிருக்கும். நீல நிற நெய்தல் மலர்கள் சுனைகளில் மலர்ந்து காணப்படும். மலையினின்று வீழும் அருவிகள் மலர்களையும், பொன்னையும் சிறிது சிறிதாகச் சிந்திக் கொண்டிருக்கும் குராமலர், பாம்பின் பற்களைப் போல் அவ்வளவு கூர்கையான அரும்புகளை ஈன்று மணம் வீசிக்கொண்டிருக்கும். வண்டுகள் தம் தம் பெடை வண்டுகளுடன் கூடி, குருந்த மரத்தில் ஏறிச் செவ்வழி என்னும் பண்ணினைப் பாடிக்கொண்டிருக்கும். காந்தள் மலர்கள். வளமான அரும்புகளை ஈன்று, கை குவித்துக் குற்றால நாதரை வணங்குவது போலக் குவித்து காணப்படும்.

திருஞானசம்பந்தர் இப்பதிகப் பாடல்தோறும் இத் தலத்தை நன்னகர் என்று குறிப்பிடுவதால் இதன் பெருமை மேலும் புலனாகிறது. இங்குள்ள தொண்டர்கள் திருநீறு பூசிய திருமேனியராய்ச் செல்வர். இங்கு கொடிகள் கட்டப்பட்டுத் திருவிழாக்களும் சிறந்து விளங்கும்.

சமணர்கள் நின்றுகொண்டு உண்பவர் என்பதும் பௌத்தர்கள் அமர்ந்து உண்பவர் என்பதும் இப்பதிகத் தால் அறியும் குறிப்புக்கள். திருஞானசம்பந்தர் தம்மை “நற்றமிழ் வல்ல” என்று கூறிக்கொள்வதைக் காண்க. இப்பதிகப் பாடல்களைப் பாடப் பாவம் ஒழியும் என்பதையும் உணர்க.

இரண்டாம் திருமுறை பதிகம் 71

பண் – காந்தாரம்

திருந்த மதிசூடித் தெள்நீர் சடைக்கரந்து தேவி பாகம் பொருந்திப் பொருந்தாத வேடத்தால் காடுறைதல் புரிந்த செல்வர்
இருந்த இடம்வினைவில் ஏலம் கமழ்சோலை இனவண்டி யாழ்செய்
இருந்த மணநாறும் குன்றிடம் சூழ்தண்டசாரல் குறும்பலாலே

(அ.சொ.) மதி – சந்திரன், தெள்நீர் – கங்கையாறு. கரந்து – மறைத்து, உறைதல் – வாழ்தல், புரிந்த – விரும்பிய, குருந்தம் – குருந்தமர மலர், நாறும் – மணக்கும்.

கொம்பார் பூஞ்சோலைக் குறும்பலா மேவிய கொல்லேற் றண்ணல்
நம்பான் அடிபரவு நான்மறை யான்ஞான சம்பந்தன் சொன்ன இன்பாய பாடலிவை பத்தும் வல்லார் விரும்பிக் கேட்பார் தம்பால தீவினைகள் போயகலும் நல்வினைகள் தளரா அன்றே.

(அ.சொ.) கொம்பு – கிளைகள். ஆர் – பொருந்திய, கொல் லேற்றண்ணல் – கொல்லும் இயல்புடைய எருதை வாகனமாகக் கொண்ட இறைவராம். நம்பான் – சிவபெருமான், பரவும் – போற்றும், தம்பால் – தம்மிடம் அமைந்த.

திருக்குறும்பலாத் தலத்தின் இயற்கை வளம் வெகு அழகாக இப்பதிகத்தில் சித்திரிக்கப்பட்டுள்ளது. இத்தலத்தில் ஏலம், மணம் வீசும் சோலைகளும் குருந்த மலர் மணம் வீசும் குன்றுகளும், குளிர்ந்த மலைச்சாரலும் உண்டு.

வண்டுகள் யாழ் போல ஒலித்துக் கொண்டிருக்கும். பெண் குரங்குகள் ஒரு கிளையிலிருந்து மறு கிளைக்குத் தாவிக்கொண்டு இருக்கும்; வேர்ப்பலாவைக் கிண்டி உண்டு கொண்டிருக்கும். ஆண் குரங்குகள் பலவிதப் பழங்களை உண்டு துள்ளிக்கொண்டிருக்கும் வெண்காந்தள் மலர்களின் மணம் வீசிக்கொண்டிருக்கும். பெண் வண்டுகள் மலர்களை மலர்த்தி அவற்றின் மகரந்தப் பொடிகளை உதிரும்படி செய்யும். நீல மலராகிய குவளை மலர்ந்து அதன்மீது வண்டுகள் ஒலிக்க மயில்கள் ஆடிக் கொண்டிருக்கும். இங்கு வாழை மரங்களும் மாமரங்களும் மிகுதி. இவற்றின் கனிகள் தேனைச் சிந்திக் கொண்டிருக்கும். மூங்கில்கள் அடர்ந்து காணப்படும். மலையினின்று பொசியும் நீர், பொன்னைக் கொழித்துக்கொண்டு கீழ்நோக்கிப் பாயும். வண்டு ஒலியைக் கேட்டுக் குயில்களும் அவ்விசை யைப் பயிற்சி செய்யும். பன்றிகள் இங்கும் அங்கும் திரிந்து கொண்டிருக்கும்.

இங்குள்ள இசை அரங்குகளில் மத்தள ஓசை ஒலித்தவண்ணம் இருக்கும். அருவிகள் மணிகளைக் கொழித்து, வயிரங்களைத் தன்னகத்தே கொண்டு நீர்மிக்குக் காணப்படும். குங்கும மலரும், மல்லிகையும், சண்பகமும் இருகரைகளிலும் மலர்ந்திருக்கக் குரவமலர் நகை செய்வது போல் மலர்ந்து விளங்கக் குன்றுகள் சூழ்ந்திருக்கும். மூங்கிலின் உச்சியில் குரங்குகள் அமர்ந்து அதனை வளையு மாறு செய்து கூத்தாடிக் குதிக்க. அவற்றைக் கண்டு வேடு வர்கள் ‘குய்’ என விளித்துக் கையைக் கொட்டுவர்.

இவ்வாறு இயற்கை வளம் நிறைந்தது குறும்பலா என்று கூறியதோடு நில்லாமல், இங்குள்ள யானைகள் வேங்கை மலர்களைத் தம் தலையில் தாங்கிக்கொண்டு சென்று குறும்பலா இறைவரை வணங்கும் என்று குறிப்பிட்டது போற்றற்குரியதாகும்.

இறுதிப் பாடலால் இப்பதிகத்தைப் பாடியவர்கட்கும் கேட்டவர்கட்கும் தீவினைகள் நீங்கும் என்பதும், நல்வினைகள் தளரமாட்டா என்பதும் அறியப்படுகின்றன. இறைவர் அம்மையார் முலையை உண்ணாதவராயினும், அவள் முலைப்பாகம் காதலித்த மூர்த்தி என்று பதிகத்துக் கூறியதன் கருத்து உபசார வழக்குப் பற்றி என்க. உண்ணாமுலையாள் அல்லளோ தேவி?

எட்டாம் திருமுறை

திருவாசகம்

உற்றாரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்
கற்றாரை யான்வேண்டேன் கற்றனவும் இனிஅமையும் குற்றாலத் தமர்ந்துறையும் கூத்தாஉன் குரைகழற்கே கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே

(அ.சொ.) குரை – ஒலிக்கும், கற்ற – கறையுடைய பசு. (கன்று + ஆ)

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !