
பாண்டி நாட்டுக் கோவில்கள் பாலூர் கண்ணப்ப முதலியார்
6. திருப்பத்தூர்
பாண்டிய நாட்டுப் பாடல் பெற்ற தலங்களுள் இஃது ஆறாவது. இவ்வூரில் உள்ள தேவாலயம் திருத்தளி எனவும் ஸ்ரீ தளி எனவும் கூறப்பெறும். இதனை அப்பர் தம் திருத்தாண்டகத்தில் பாடல்தோறும் திருப்பத்தூரில் “திருத்தளியான்” என்று சுட்டிக்கொண்டு வருவதால் அறியலாம்.
இத்தலத்தில் அம்மையப்பரை வழிபடுவதோடு, இரு விருவர்க்கும் இடையில் உள்ள பைரவர் சந்நிதியையும் கண்டு தரிசிக்கலாம். இவ்வைரவர் இங்கு சிறப்பு மிகுதியும் பெற்றவர். ஆனந்தக் கூத்தப்பெருமான், சிவகாமி அம்மையார் திருவுருவங்கள் கற்சிலையால் ஆனவை. பார்க்கப் பார்க்கப் பரவசம் ஊட்டுபவை. இங்கு விஷ்ணுவுக்கும் தனிக்கோயில் உண்டு.
இத்தலத்து இறைவரை உமாதேவியாரும், இலக்கு மியும் பூசித்துப் பேறு பெற்றனர். இறைவர் புத்தூர் ஈசர் ஸ்ரீதளிநாதர், இறைவியார் சிவகாமி அம்மையார்; தீர்த்தம் ஸ்ரீதளித் தீர்த்தம், சிவகெங்கை, கருடதீர்த்தம்; தல விருட்சம் கொன்றை.
இத்தலத்தைத் திருஞானசம்பந்தரும் அப்பரும் பாடியுள்ளனர். இத்தலம் இராமநாதபுரம் சிவகங்கையிலிருந்து 22 கல் தொலைவில் உள்ளது.
முதல் திருமுறை பதிகம் 26
பண் தக்கராகம்
1. வெங்கள் விம்மு வெறியார் பொழில்சேலை
திங்க ளோடு திளைக்கும் திருப்புத்தூர்க்
கங்கை தங்கும் முடியார் அவர்போலும்
எங்கள் உச்சி உறையும் இறையாரே
(அ.சொ.) வெங்கள் – விரும்பத்தக்கதேன், விம்மு – நிறையும், வெறி – வாசனை, ஆர் – பொருந்திய, பொழில் – சோலை திங்கள் – சந்திரன், திளைக்கும் – விளங்கும்,உறையும் – வாழும்.
2. மருவி எங்கும் வளரும் மடமஞ்ஞை
தெருவு தோறும் திளைக்கும் திருப்புத்தூர்ப்
பெருகி வாழும் பெருமான் அவன் போலும்
பிரமன் மாலும் அறியாப் பெரியோனே
(அ. சொ.) மருவி – கலந்து. மயில்கள். மடமஞ்ஞை – இளைய மயில்கள்.
3. நல்ல கேள்வி ஞான சம்பந்தன்
செல்வர் சேடர் உறையும் திருப்புத்தூர்ச்
சொல்லல் பாடல் வல்லார் தமக்கென்றும்
அல்லல் தீரும் அவலம் அடையாவே
(அ.சொ.) சேடர் – பெருமையுடைய பெருமானார். உறையும் – வாழும், அல்லல் – துன்பம், அவலம் – வறுமை.
திருப்பத்தூரும் சோலைகளையுடையது. அச்சோலைகள் தேனும், மணமும் நிறைந்தவை. அச்சோலை சந்திரன் திளைக்கும் தன்மையது. இங்கு வண்டுகள் நிறைந்து ஒலித்துக் கொண்டும் பாடிக்கொண்டும் இருக்கும். இவ் வண்டுகள் மலர்ந்த மலர்களில் உள்ள தேனைப் பருகித் திளைத்துக் கொண்டிருக்கும்.
இத் திருப்பத்தூர்ப்பதி புகழுடையது. அழகும் உடையது. திசைகள் எங்கும் விளங்கும் சோலைகளையும் உடையது. இங்கு நீர்வளம் மிகுதி. இங்குள்ள தெளிந்த நீரில் வெண்ணிற மலர்கள், மணமுடைய மலர்கள் நிறைந்து இருக்கும். நெய்தல், ஆம்பல், கழுநீர் முதலான மலர்கள் மலர்ந்து காணப்படும். நிலவளத்திற்கும் குறைவில்லை. “செய்கள் மல்கு திருப்பத்தூர்” என்றே சிறப்பிக்கப்பட்ட பெருமை நிறைந்தது. இத்தலத்தின் சோலை மீது படரும் மேகங்கள் அச்சோலை மலர்களின் மணம் படிந்து மண முடையனவாகத் திகழ்ந்து கொண்டிருக்கும். இளைய மயில்கள் தெருவுதோறும் திரிந்து கொண்டிருக்கும் என்பன இத்தேவாரப் பதிகத்தால் திருப்புத்தூரைப் பற்றி நாம் அறிந்துகொள்வன.
“எங்கள் உச்சி உறையும் இறையார்,””பிரமன்மாலும் அறியாப் பெரியோன்”, “அல்லல் தீரும் அவலம் அடையா என்பன இப்பதிகத்தில் காணப்படும் அரும்பொருள் தொடர்கள் இத்தலத்துக் கோயில் நாளும் நாளும் சிறப்புறும் கோயில் ஆதலின், இதனை “ஓங்கு கோயில்” என்றனர். இங்குள்ள இறைவர் செல்வரும் சேடரும் ஆவர். இத்தலத்துப் பதிகத்தைப் பாடவல்லவர் அல்லலும், வறுமையும் நீங்கப் பெறுவர் என்பது நல்ல கேள்வி ஞானமுடைய ஞானசம்பந்தர் துணிபாகும்.
ஆறாம் திருமுறை பதிகம் 76
திருத்தாண்டகம்
1. புரிந்தமரர் தொழுதேத்தும் புகழ்தக் கோன்காண்
போர்விடையின் பாகன்காண் புவனம் ஏழும்
விரிந்துபல உயிராகி விளங்கி னான்காண்
விரைக்கொன்றைக் கண்ணியன்காண் வேதம் நான்கும் தெரிந்துமுதல் படைத்தோனைச் சிரம்கொண் டோன்காண்
தீர்த்தன்காண் திருமால்ஒர் பங்கத் தான்காண்
திருந்துவயல் புடைதழுவும் திருப்புத் தூரில்
திருத்தளியான் காண் அவன்என் சிந்தை யானே
(அ.சொ.) புரிந்து – விரும்பி, அமரர் – தேவர், ஏத்தும் – போற்றும், விடை – இடபம், புவனம் – உலகம், புவனம் ஏழ் – பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், சனலோகம், தபோ லோகம், மகரலோகம், சத்தியலோகம் என்பன. விரை – வாசனை, கண்ணியன் – மாலையுடையவன், படைத்தோன் – பிரமன், தீர்த்தன் – மகாபரிசுத்தன்,புடை – பக்கம், திருத் தளி – திருப்புத்தூர்த் திருக்கோயில் திருப்பெயர்.
2. மின்காட்டும் கொடிமருங்குல் உமையாட் கென்றும்
விருப்பவன்காண் பொருப்புவலிச் சிலக்கை யான்காண்
தன்பாட்டுப் புலவனுய்ச் சங்கம் ஏறி
நற்கனகக் கிழிதருமிக் கருளி ணான்காண்
பொன்காட்டக் கடிக்கொன்றை மருங்கே தின்ற
புனக்காந்தள் கைகாட்டக் கண்டு வண்டு
தென்காட்டும் செழும்புறவில் திருப்புத் தூரில்
திருத்தளியான் காண்அவன்என் சிந்தை யானே
(அ.சொ.) மருங்குல் -இடை,பொருப்பு – மலை,சிலை – வில், கனகக்கிழி – பொன்முடிப்பு. தருமி – தருமி என்னும் அந்தணச் சிறுவன்.கடி – வாசனை, மருங்கே – பக்கத்தே புனம் – மலையைச் சார்ந்த கொல்லைகள், தென் – இசை, புறவு – காடு.
திருப்புத்தூர் வளங்கள் அழகாக அப்பர் பெருமானால் இத்தாண்டகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இத்தலம் முழுதும் நல்ல திருத்தமான வயல்களைப் பெற்றது. இவ்வூரில் உள்ள வீதிகள் நீண்டு, தேர் சென்று மீளும் பெருமை மிக்கன. “தேராரும் நெடுவீதி” என்று கூறப்பட்டுள்ளது. கொன்றை மலர்கள் நன்கு மலர்ந்து பொன் போலப் பூத்திருந்தன. மலராகிய பொன்னைக் கைநீட்டி வாங்கிக் கொள்வது போலக் காந்தள் மலர்கள் கைகள் போல மலர்ந்து இருந்தன. நல்ல காட்டு வளம் பெற்று வண்டுகள் இசை செய்த வண்ணம் இருந்த இவ்வூரில், நல்ல வளமான எருமைகள் அழகுடன் மடுக்களில் படிந்து இன்புறும்; அழகு பொருந்திய சோலைகள் பக்கங்களில் மிக்குக் காணப் படும். எருதுகளின் உழைப்பை மிகுதியும் கொண்ட வயல்களையுடையது இவ்வூர். அழகிய மாடங்கள் உண்டு. தென்றல் காற்று வீசும் இப்பதி சிறப்புப் பொருந்தியது.
இறைவன் சலந்தராசூரனைக் கொல்லக் கைக்கொண்ட படை சக்கரமாகும். இதனையே திருமால் இறைவனை வழிபட்டுப் பெற்றுக்கொண்டனர்.
இத்திருப்பதிகத்தில் திருமறைக்காடு, திருவேகம்பம், பெரும்பற்ற புலியூர், ஆரூர்,கழுக்குன்றம் ஆகிய தலங்களும், இணைத்துப் பாடப்பட்டுள்ளன. திருமறைக் காடு (வேதாரண்யம் என வடமொழியாளரால் மொழி பெயர்த்துக் கொள்ளப்பட்டது) முத்துக்களைச் சங்குகள் வந்து ஈனும் கடற்கரைச் சோலையை வேலியாகச் சூழப் பெற்றது என்றும், ஏகம்பம் (காஞ்சிபுரம்) அழகுடையது என்றும், பூங்கச்சி என்றும் கரும்பும் புன்னையும் நெருங்கிய சோலையுடையது திருவாரூர் என்றும், அருவி விளங்கும் திருக்கழுக்குன்றம் என்றும் மேலே குறிப்பிடப்பட்ட தலங்கள் சிறப்பிக்கப்பட்டுள்ளன.
மதுரையில் அரசாண்ட மன்னர்களில் ஒருவன் வங்கிய சூளாமணிப் பாண்டியன். அவன் தன் மனைவியின் கூந்தலில் உண்டாள மணத்தை நுகர்ந்தான். அது செயற்கையா இயற்கையா என்பதை அறிவிக்கும் புலவர் பெறுமாறு பொற்கிழி ஒன்றைச் சங்க மண்டபத்தில் கட்டிவைத்தான். அதனைப் பெறப் பலரும் முயன்றனர்.
அந்தச் சமயம் தருமி என்பவன் வறுமையால் வாடிக் கொண்டிருந்தான். அவன் வறுமையைத் தீர்க்க மதுரைச் சொக்கலிங்கப் பெருமான் “கொங்கு தேர் வாழ்க்கை” என்று தொடங்கும் ஒரு கவியைப் பாடித் தந்து பாண்டியனிடம் கொடுத்துப் பொற்கிழியைப் பெறுமாறு கட்டளை இட்டார். (இக்கவியினைக் குறுந்தொகை என்னும் சங்க நூலில் காண்க) அப்பாட்டைக் கண்ட பாண்டியன் அதன் பொருள் மூலம் தன் மனைவியின் கூந்தல் மணம், இயற்கை என்று அறிந்து, பண முடிப்பைப் பெற்றுப் போகுமாறு தருமிக்கு உத்தரவு கொடுத்தான். அதனைப் பெறத் தருமி சென்ற போது, சங்கப் புலவர்களுள் தலைவரான நக்கீரர் பாட்டில் பொருள் குற்றம் இருப்பதாகக் கூறித் தருமி யைப் பொற்கிழி பெறா வண்ணம் தடுத்துவிட்டார். இந்தச் செய்தியைத் தருமி சோமசுந்தரரிடம் விண்ணப்பித்துக் கொண்டபோது, இறைவர் புலவர் வேடம் பூண்டு நக்கீர ருடன் வாதம் புரியப் புறப்பட்டார். இந்த நிகழ்ச்சியினையே அப்பர் பெருமானார் “நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கம் ஏறி நற்கனகக்கிழி தருமிக்கு அருளினோன்” என்று சிறப்பித்துப் பாடியருளினார்.



