பாண்டி நாட்டுக் கோவில்கள் பாலூர் கண்ணப்ப முதலியார்

5. திருக்கொடுங்குன்றம்

இத்தலம் சிவபெருமானுக்குரிய தலமாதலோடு முருகப்பெருமானுக்கும் உரிய தலமுமாகும். இது பிரான்மலை என்றும் பிரான்மலைச் சீமை என்றும் கூறப்படும். இத்தலம் மலையடிவாரத்தில் உள்ளது.

இத்தலத்தை மகோதர மகரிஷியும் நாகராஜனும் வழிபட்டுத் திருவருள் பெற்றனர். மலைமீது சென்றால் வைரவர் சந்நிதியைக் கண்டு தரிசிக்கலாம். சுவாமி சந்நிதியில் உள்ள திருக்கல்யாணக் கோலக்காட்சி கண்டு களித்தற்குரியதாகும். இத்தலத்தில் கார்த்திகைத் தீபதரிசனம் விசேடமானது.

இத்தலத்தில் தேவ சபாமண்டபம், சுந்தர பாண்டியன் மண்டபம், ஆறுகால் மண்டபம், லட்சுமிமண்டபம், விசுவ நாதர் கோயில், சுப்பிரமணியர் கோயில் முதலியன கரணத் தக்கவை. கிராமத்தில் சொக்கநாதர் கோயில் இருக்கிறது.

இத்தலத்து இறைவர் கொடுங்குன்றீசர் என்றும், இறைவியார் குயிலமுத நாயகி என்றும், கூறப்படுவர். தேவாரத்தில் இவ்வம்மையார் தேனிற்பொலி மொழியாள் என்று குறிப்பிடப்படுகின்றார்.

இத்தலம் இராமநாதபுரம் ஜில்லா சிவகங்கைக்கு 22 மைல் தூரத்தில் உள்ள திருப்பத்தூரை அடைந்து அங்கிருந்து வடமேற்கு 15 மைலில் உள்ளது. திருப்பத்தூர் அறந்தாங்கி ஸ்டேஷனிலிருந்து 27 மைலில் உள்ளது. இத் தலத்திற்குத் திருஞானசம்பந்தர் பாடிய பதிகம் ஒன்றே உளது.

முதல் திருமுறை 14-வது பதிகம்

பண் நட்டபாடை

1. வானில்பொலி வெய்தும் மழைமேகம்கிழித் தோடிக் கூனல்பிறை சேரும்குளிர் சாரல்கொடுங் குன்றம் ஆனில்பொலி ஐந்தும்அமர்ந் தாடிஉலக மேத்தத் தேனில்பொலி மொழியாளொடும் மேயான்திரு நகரே.

(அ.சொ.) பொலிவு – விளக்கம், எய்தும் – அடையும். ஆனில் – பசுவில், ஐந்தும் – பால், தயிர், நெய், கோமயம் கோசலம், ஆடி – திளைத்து, ஏத்த – போற்ற, தேனில் பொலி மொழியாள் – இத் தலத்துத் தேவியார் திருப்பெயர்களுள் ஒன்று.

2. கூனல்பிறை சடைமேல்மிக உடையான் கொடுங்குன்றைக் கானல்கழு மலமாநகர் தலைவன்நல கவுணி
ஞானத்துயர் சம்பந்தன் நலம்கொள்தமிழ் வல்லார்
ஊனத்தரெடு துயர்தீர்ந்துல கேத்தும்எழி லாரே

(அ.சொ.) கானல் – கடற்கரைச் சோலை, கழுமலம் – சீர்காழிக்குரிய பெயர்களில் ஒன்று, கவுணி – கவுணிய கோத்திரம், ஊனம் – குற்றம். ஏத்தும் – போற்றும், எழிலோர் – அழகர் ஆவார்.

இத்தலத்துப் பதிகம் கொடுங்குன்றின் இயற்கை வளத்தை இனிதின் எடுத்து இயம்புகிறது. கொடுங் குன்றம், மேகத்தைக் கிழித்து ஓடும் பிறைச் சந்திரன் தவழும் இடம். குளிர்ந்த சாரலையுடையது. மயில் தன் பெடையோடு தழுவி இன்புறும் சாரலையுடையது. குயில் இன் இசை பாடும் குளிர்ந்த சாரலையுடையது. இம்மலையில் பாயும் நீர் மணி, பொன், மணமுள்ள மலர்களைக் கரைகளில் கொழித்துக்கொண்டு வரும் தன்மையது. சாரங்களில் யானையும் சிங்கமும் இறங்கு காட்சியும் காணக்கூடிய தாகும். அருவிகள் மணியும் பொன்னும் அடித்து இறங்கி வரும் தன்மையது. மேகம் இடிக்கும் இடி ஓசை கேட்டு, கோட்டான்கள் பயந்து மலையினின்றும் இறங்கிச் செல்லும். இவ்வாறே யானைக் கூட்டங்களும் இடியின் குரல் ஓசை கேட்டு மலர்ச் சோலைகளில் நெருங்கும். கடம்பு, மாதவி முல்லை, குரவம் முதலான மலர்கள் மலர்ந்து எல்லாம் ஒன்று சேர்ந்து மணம் வீசும் சோலைகள் சூழ்ந்த குளிர்ந்த இடமாகும்.

இம் மலைச்சாரலில் திரியும் யானைக் கூட்டங்கள். இங்கு வளர்ந்துள்ள மூங்கில்களை முறித்து எடுத்துக்கொண்டு சுனைகளில் சென்று படியும். இங்கு சிங்கங்கள் கர்ச்சனை செய்ய அதைக் கேட்டதும் வெளிவர அஞ்சி மலைக்குகை களிலேயே தங்கி இருக்கும். சிற்சில சமயங்களில் சிங்கம் யானை இருக்கும் மலைக்குகைக்கு அருகில் வருதலும் உண்டு. அதுபோது யானை மிகவும் பயந்து தான் இருக்கும். மலைக் குகையினைக் குத்தி வழிகண்டு அப்பாற் செல்ல முயன்றும் வழிகாணாது அக்குகையிலேயே தங்கி இருக்கும். “நாகத்தோடு இளவெண் பிறைசூடி”, “அரவத்தோடு இளவெண் பிறை விரவும்” என்று கூறிப் பகையுடையவர்களும் பரமனை அடைந்தபோது பகையின்றி ஒன்றி வாழ்வர் என்று விளக்கப்பட்டது. இறைவன் “அம்மான் என உள்கித் தொழுவார்கட்கு அருள்செய்யும் பெம்மான்” என்பதை அறிக. கொடுங்குன்றம் பழநகர் என்ற பெயருடையது என்பதையும் இப்பதிகத்தால் அறியலாம். பழய நகரே என்ற தொடரைக் காண்க.

திருஞானசம்பந்தர் கௌணிய கோத்திரத்தைச் சார்ந்தவர் என்பதும் ஞானத்தில் உயர்ந்தவர் என்பதும் ஈற்றுப் பாடலால் அறியலாம். இப்பதிகம் நலங்கொள் தமிழ் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நலம்கொள் என்ற அடைமொழிகளை நினைவு கொள்க. இது நலங்கொள் தமிழ் என்பதனால்தான் இதனை ஓதவல்லவர் ஊனமும் துயரும் நீங்கப்பெற்று உலகம் போற்றும் எழிலும் பெறுவர் என்க.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !