
பாண்டி நாட்டுக் கோவில்கள் பாலூர் கண்ணப்ப முதலியார்
2. திருவாப்பனூர்
இது பாண்டிய நாட்டுப் பாடல் பெற்ற தலங்களுள் இரண்டாவது. இக்காலத்தில் இது திரு ஆப்புடையார் கோயில் எனக் கூறப்படுகிறது. இத்தலத்துப் பெருமான் சோழாந்தகன் என்னும் பாண்டியன் மீது வைத்த அன்பின் காரணத்தால் ஆப்பில் தோன்றிக் காட்சி அளித்தனர். இதனால் இறைவர் திருவாப்புடையார் எனப்பட்டார். ஈண்டு நடராஜர் சிவகாமி அம்மையார் திருவுருவங்கள் செம்பினாலும், கல்லாலும் செய்து அமைக்கப்பட்டிருப்பது கண்டு இன்புறுதற்குரியவை ஆகும்.
ஈண்டுள ஈசர் ஆப்பனூர்க் காரணர் என்றும் ஆப்பனூ ரீசுரர் என்றும், திருவாப்புடையார் என்றும், இறைவியார் அம்பிகை அம்மையார், குரவங்கமழ் குழல் அம்மையார் என்றும் கூறப்படுவர். ஈண்டு உள்ள தீர்த்தம் இடப தீர்த்தமாகும்.
1. இத்தலம் மதுரை ரயில்வே ஸ்டேஷனுக்கு வட கிழக்கே ஒரு மைல் தொலைவில் வைகை ஆற்றுக்கு வட கரையில் அமைந்துள்ளது. இத்தலத்திற்குத் திருஞான சம்பந்தர் பாடிய பதிகம் ஒன்றே உளது.
முதல் திருமுறை பதிகம் 88
பெண் – குறிஞ்சி
1. முற்றும் சடைமுடிமேல் முதிரா இளம்பிறையன்
ஒற்றைப் படஅரவம் அதுகொண் டரைக்கணிந்தான்
செற்றமில் சீரானைத் திருவாப்பன் ஊரானைப்
பற்றும் மனமுடையார் வளைபற் றறுப்பாரே.
(அ.சொ.) அரைக்கு – இடுப்பில், செற்றம் – கோபம் வினை – தீவினைகளை
2. அந்தண புனல்வைகை அணிஆப்பன் ஊர்மோ
சந்த மலர்க்கொன்றை சடைமேல் உடையானை
நந்தி அடிபரவும் நல்ஞான சம்பந்தன்
சந்தம் இவைவல்லார். தடுமாற் றறுப்பாரே.
அந்தண்புனல் – அழகும் குளிர்மையும் உடைய நீர், அணி – அழகு, சந்தமலர் – அழகிய மலர், நந்தி – சிவபெருமான், பரவம் – போற்றும், சந்தம் – சந்தத்தோடு கூடிய இப்பதிகம்.
இப்பதிகம், யார் திருவாப்பனூர் பெருமானை வணங்கு கின்றார்களோ பாடுகின்றார்களோ அவர்கள் தம்மைப் பற்றும் வினையை அறுப்பார் என்பதை அழகுறத் தெரிவிக்கின்றது. “பற்றும் மனம் உடையார் வினைபற்றறுப் பாரே” “பணியும் மனம் உடையார் வினைபற்றறுப்பாரே ”பகரும் மனம் உடையார் வினைப்பற்றறுப்பாரே” ”பாடும் மனம் உடையார் வினைபற்றறுப்பாரே” “பயிலும் மனம் உடையார் வினைபற்றறுப்பாரே” “பருக்கும் (பருகும்) மனம் உடையார் வினைபற்றறுப்பாரே” “பண்ணின் இசை பகர்வார் வினைபற்றறுப்பாரே” “பைய நினைந்தெழுவார் வினைபற்றறுப்பாரே” என்று வினைப்பற்றை அறுக்க ஆளுடைய பிள்ளையார் அறிவுறுத்திய வழிகளை அறிந்து பயனுறுவோமாக.
இப்பதிகத்தில் இறைவன் அகரமுதலான எழுத்துக் களாக உள்ளான் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. இது “அகரமுதல எழுத்தெல்லாம்” என்னும் குறட் கருத்துக் கேற்பப் பாடப்பட்டதாகும்.
திருவாப்பனூர் வைகைக் கரையில் உள்ளது என்பதை ஈற்றுப்பாடல் தெற்றத் தெளிய “அந்தண் புனல் வைகை அணி ஆப்பனூர்” என்று கூறி அறிவிக்கின்றது. திருவாப் பனூர் அழகிய தலமாதலின் ”அணி ஆப்பனூர்” என்று சிறப்பிக்கப்பட்டது. இப்பதிகத்தைப் பாடுபவர், தடுமாறும் நிலையைப் போக்கிக் கொள்வர் என்பதும் கூறப்பட் டுள்ளது.



