
பாண்டி நாட்டுக் கோவில்கள் பாலூர் கண்ணப்ப முதலியார்
7. திருப்புனவாயில்
பாண்டிய நாட்டுப் பாடல் பெற்ற தலங்களுள் ஏழாவது தலம் இது. இதனைத் திருஞானசம்பந்தரும் சுந்தர மூர்த்தி சுவாமிகளும் பாடியுள்ளனர். ஆக இதற்குரிய பதிகம் இரண்டு என்க. இது வேதங்களால் பூசிக்கப் பெற்ற தலமாகும். இத்தலத்தில் பாண்டிய நாட்டுப் பாடல் பெற்ற தலங்களின் பதினான்கு மூர்த்திகளையும் ஒரு சேரக் கண்டு தரிசிக்கலாம். இத்தலத்து மூல இலிங்கம் மிகப் பெரியது; கோயிலும் பெரியது: நந்தியும் பெரியது. இத்திருமேனியின் இலிங்க வடிவிற்கு மூன்று முழப் பரிவட்டமும், ஆவுடையாளுக்கு முப்பது முழப் பரிவட்டமும் தேவை. இதனால் இந்தத் தலத்தில் மூன்று முழமும் ஒரு சுற்று, முப்பது முழமும் ஒரு சுற்று என்னும் ஒரு பழமொழியும் வழங்கப்பட்டு வருகிறது. இத் தலத்தின் பொந்துகளில் ஆந்தைகள் எப்போதும் குடியாக வாழ்ந்து கொண்டிருக்கும். இதனை உற்றுக் கவனித்த சுந்தரர் “பொந்தில் ஆந்தைகள் பட்ட புனவாயில்” என்றும் பாடியுள்ளார். இது மிகப் பழம் பெருந் தலம் என்பது சுந்தரர் தம் திருவாக்கால் இதனைப் ‘பழம்பதி’ என்றும், ‘விருத்தபுரி’ என்றும் குறிப்பிடுவதால் அறிந்து கொள்ளலாம். இத்தலத்து ஊருக்குச் தெற்கே பாம்பாறு (சர்ப்பநதி) ஓடுகிறது. சர்ப்பநதி என வடமொழியாளர் பாம் பாறு என்பதனை மொழி பெயர்த்துக் கொண்டனர் என்பர்.
இத்தலத்து இறைவர் பழம்பதி நாதேஸ்வரர், விருத்த புரீஸ்வரர் எனப்படுவர். தேவியார் பரங்கருணை நாயகியம்மையார் ஆவர். இத்தலத்து விருட்சங்கள் புன்னை, மகிழம். அங்குள்ள தீர்த்தங்கள் இலட்சுமி தீர்த்தம், பிரம்ம தீர்த்தம். இவை கோயிலுக்கு எதிரில் உள்ளன.
இத்தலம் அறந்தாங்கி ரயில் நிலையத்திலிருந்து 21 கல் தொலைவில் இருக்கிறது. திருவாடானைத் தலத்திலிருந்து சென்றால் வடக்கே 12 கல் தொலைவில் இதனை அடையலாம்.
குறிப்பு : அறந்தாங்கி ரயில் நிலையத்திலிருந்து ஏழு கல் கற்சாலை வழியைக் கடந்தால் மாணிக்கவாசகர் கட்டியருளிய திருப்பெருந்துறை என்னும் தலத்தைத் தரிசிக்கலாம். மிகப் பெரிய தலம். சிற்ப ஓவிய வேலைப்பாடுகள் நிறைந்த தலம். திருவாவடுதுறைக் குருமகா சந்நிதானத்தின் திருக்கண் பார்வையால் சிறப்புடன் நித்திய நைமித்தியங்கள் ஒழுங்காக நடைபெற்று வரும் தலம். இன்றும் 21 வது குருமகா சந்நிதானமாக விளங்கும் ஸ்ரீலஸ்ரீ சுப்பிர மணிய தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் இத்தலத்தை வாரம் தவறாமல் வியாழக்கிழமை தோறும் சென்று தரிசித்து வருகின்றனர். இங்கு மாணிக்கவாசகர் சுவாமிகட்கு இறைவர் தங்கியிருந்து உபதேசம் செய்த குருந்த மரத்தையும் கண்டு தரிசிக்கலாம். பராசர், பிருகு முதலியோர் பூசித்த இடம். சுவாமி ஆத்மநாதர்; தேவியார் உமா தேவியார்; தீர்த்தம் சிவகங்கை.
தேவியார் யோகம் புரிகின்றார் என்ற காரணத்தால் நேரே கண்டு தரிசிக்கும் வாய்ப்புக் கிடைக்கப் பெறாமல் ஒரு துவாரத்தின் வழியே தான் தரிசிக்க வேண்டும். இத் தலத்தில் நடக்கும் பிரம்மோற்சவச் சிறப்பு மாணிக்க வாசகருக்கேயாகும். நீர் வளம், நில வளம் சிறந்த தலம், மிகப் பெரிய தலம். இங்கு செல்லப் பஸ் வசதியுண்டு. இங்கு இருந்து திருப்புவனவாயில் 14 கல் தொலைவாகும்.
மூன்றாம் திருமுறை பதிகம் 111
பண் – காந்தார பஞ்சமம்
1. மின்னியல் செஞ்சடை வெண்பிறை யன்விரி நூலினன்
பன்னிய நான்மறை பாடி ஆ டிப்பல வூர்கள்போய்
அன்ன மன்ன நடையாளொடும்அம ரும்இடம்
புன்னைநன் மாமலர் பொன்னுதிர்க் கும்புன வாயிலே
(அ.சொ.) இயல் – தன்மையுடைய, பன்னிய – வாயால் பன்முறை சொல்லப்பட்டு வந்த, பொன் – மகரந்தப் பொடிகள். நான்மறை – நான்கு வேதங்கள், அன்னம் அன்ன நடையாள் – உமாதேவி.
2. பொற்றொடி யாள்உமை பங்கன் மேவும்புன வாயில்
கற்றவர் தாம்தொழு தேத்த நின்றகடற் காழியான்
நற்றமிழ் ஞானசம் பந்தன் சொன்னதமிழ் நன்மையால் அற்றமில் பாடல்பத் தேத்த வல்லார்அருள் சேர்வரே
(அ.சொ.) பொன் தொடி – பொன் வளையல், ஏத்த போற்ற, காழியான் – சீர்காழிக் குரியவரான திருஞானசம் பந்தர், அற்றம் – குற்றம்.
இப்பதிகத்தால் நாம் அறிவன இத்தலத்தில் புன்னை மரங்கள் விசேடம். அம் மரங்கள் நன்கு செழித்து மலர்களைப் பெற்று மகரந்தப் பொடிகளைச் சிந்தும் தோற்றம். பொன்னை உதிர்ப்பது போல இருக்கும். இங்குள்ள குளங்கள் தாமரை மலர்களைத் தம்மகத்தே கொண்டு திகழ்ந்தன. இத்தலத்திற்கு அருகு கடல் இருத்தலின், தாழையும் புலி நகக்கொன்றையும் தழைத்திருக்கும் கடற்கரைச் சோலைகளும் இங்கு உண்டு. இத்தலத்தைத் தரிசித்தால் செல்வம் பெருகும். இக் குறிப்பினை, இப் பதிகத்தில் ‘சீருறு செல்வம் மல்க இருந்த சிவலோகன்’ என்னும் அடி அறிவிக்கின்றது. செல்வம் பெருகுவதுடன் இத்தலத்து இறைவன் திருவடி தொழுபவர்க்கு இடரும் இல்லை என்பதைக் “கழல் ஏத்துவார்கட்கு இடர் இல்லையே” என்னும் அடி அறிவிக்கின்றது. இத்தலத்தில் ஆடலும் பாடலும் அனவரதமும் இருந்துவரும். இத்தலம் பழம் புகழையும் அழகையும் கொண்டது. தென்றல் காற்றின் இன்பத்தை இங்கு துய்க்கலாம். “தென்றல் ஆர்ந்த புனவாயில்’ என்னும் தொடரைக் காண்க.
இத்தலம் கடற்கரையைச் சார்ந்திருப்பதால் சங்கும் சிப்பியும் கொண்டு கடல் அலை கரையில் எறிந்துகொண்டிருக்கும். இத்தலம் நலம் மிக்கது. சோலைகளும் இத் தலத்தில் உண்டு. அச்சோலை மலர்களை மலர்த்திக் குளிர்ந்து காணப்படும். இத்தலத்தைப் போற்றுபவர் வேதனை குறைந்து இனி வரக்கடவதாகிய வினையும் நீங்கப்பெறுவர். “வேதனை நாள் தொறும் ஏத்துவார் மேல் வினை வீடுமே” என்ற அடியினைக் காண்க.
திருஞானசம்பந்தர் காலத்தில் சமண மதப்பிரசாரம் மிகுதியாக இருந்தது. அதனால் பலர் சைவசமயம் விட்டுச் சமண சமயம் புகுந்தனர். அத்தகையவர்கட்கு நல்லறிவு கொளுத்தச் சம்பந்தர், “மக்களே! சமணர் சாதி உரைப்பன கொண்டு அயர்ந்து தளர்வு எய்தன்மின்” என்று கூறி யருளினர்.
இறுதிப் பாட்டில் இப்பதிகப் பாடல்கள் குற்றம் அற்றவை என்பதும், இப்பாடல்களைப் போற்ற வல்லவர்கட்கு அருள் சேரும் என்பதும், திருஞானசம்பந்தர் கற்றவர்களால் புகழ்ந்து போற்றப்படுவர் என்பதும், தம்மைத் தமிழ் உணர்ந்த ஞானசம்பந்தர் என்று கூறிக்கொள்வதில் திருஞான சம்பந்தருக்கு இருக்கும் ஆர்வமும் தெரியவரு கின்றன. ‘நற்றமிழ்” என்ற அடைமொழியாலும், ‘நன்மையால்’ என்ற பின் மொழியாலும் கூறப்பெற்றுள்ள கருத்தை நோக்குக.
ஏழாம் திருமுறை பதிகம் 50
பண் – பழம் பஞ்சுரம்
1. சித்த நீநினை என்னொடு சூளரும் வைகலும்
மத்த யானையின் ஈர்உரி போர்த்தம ணாளனூர்
பத்தர் தாம்பலர் பாடிநின் றாடும் பழம்பதி
பொத்தில் ஆந்தை கள்பாட் டறாப்புன வாயிலே
(அ.சொ.) சித்த – மனமே, சூள் – பொய்யாக மேற் கொண்ட உறுதிமொழிகள், வைகலும் – தினமும், மத்தம் செருக்கு, உரி – தோல், பொத்து – மரப் பொந்து, அறா – நீங்காத.
2. பொடியாடு மேனியன் பொன்புனம் சூழ்புனவாயில் அடியார் அடியன் நாவல ஊரன் உரைத்தன
மடியாது கற்றிவை ஏத்தவல் லார்வினை மாய்ந்துபோய்க் குடியாகப் பாடிநின் றாடவல் லார்க்கில்லை குற்றமே
(அ.சொ.) பொடி – திருநீறு, ஆடு – பூசப்பட்டுள்ள, பொன் – அழகிய, புனம் – கொல்லைகள், நாவல் ஊரன் – திரு நாவலூரன் என்னும் சுந்தரர், மடியாது – சோம்பல் அடை யாது. வினை – தீவினைகள்.
இப்பதிகத்தால் திருப்புவனவாயிலைப் பற்றிய அரிய குறிப்புக்கள் தெரிய வருகின்றன. இது பழம் பதியாகும். இப்பதியில் பத்தர்கள் பாடி ஆடிப் பரமனைப் போற்றுவர். இது விளைவயல் மிகுந்த இடம் ஆதலின், இவ் விளை வயலை உழுது பயிரிட்டு வாழ்பவர் வானவர் என்றே சுந்தரரால் சிறப்பிக்கப்பட்டுள்ளனர். வேடுவர்களும் இங்கு மிகுதி. அவர்கள் நல்ல வீரமும் உடையவர். வியாபாரிகள் கூட்டம் கூட்டமாகச் செல்லும் இடம். அவர்கள் செல்லும் கூட்டம் சாத்து என்று கூறப்படும். இவர்களும் வேடர்களும் ஒரு வர்க்கொருவர் போர் இட்டுக் கொள்ளுதலும் உண்டு. அச் சண்டையினையும் இங்கு காணலாம். இத்தலம் அடிக்கடி அன்பர்கள் வந்து தரிசித்துச் செல்லுதற் குரியதாகவும் இருக்கிறது.
இதனை “அன்பராய்ப் புக்கார் போற்று ஒழியாப் புனவாயில்” என்ற அடி அறிவிக்கின்றது. இப் புனவாயிலைச் சுற்றிக் கற்குன்றுகளும்,புதல்களும், பரந்த கடுமையான வெற்றிடங்களும் காணப்படும். இப்போதும் இத்தலத்தை அடையும் போது பார்க்கலாம். கடற்கரைச் சோலை பொலிவழிந்து காணப்படும்.இங்குள்ள வேடர்கள் மான் வேட்டை ஆடுவர். அப்போது மான் கூட்டம் அவ் வேடுவர்கட்குப் பயந்து ஒளிந்து கொள்ளும் தோற்றம் இரக்கந் தருவதாகும். இத்தலத்தில் கள்ளி மரமும் உண்டு. இதன் கிளைகள் நீண்டிருக்கும். இக்கிளைகளில் ஆண் புறா ஏறிக்கொண்டு தன்னைப் பிரிந்திருந்த பெண் புறாவைக் கூவி அழைக்கும் இன்குரலையும் கேட்டு மகிழலாம். இப் பதியினை உலகப்பாசம் அற்றவர் பாடி நின்று, களிப்பால் ஆடியும் போற்றுவர். காலை மாலை ஆகிய இரண்டு வேளைகளில் வந்து அன்பர் வணங்குவர். அக்கம் பக்கத்தில் கிராம தேவதையை வணங்குபவர் உடுக்கை கொட்டும் முழக்கம் முழங்குவதையும் கேட்கலாம்.
திருப்புனவாயிலில் வெயில் மிகுதி. அங்குள்ள கள்ளி மரம் உலர்ந்து, புற்கள் எல்லாம் தீர்ந்து இருக்கும் காலத்தில் மான் கூட்டங்கள் கடற்கரையிலாகிலும் சென்று தங்கிக் காலம் கழிப்போம் என்று அக்கடற்கரைச் சோலையில் சென்று புகுந்து கொள்ளும். இரவுக் காலங்களில் பன்றிகள் பூமியைத் தம் கூர்மையான கொம்புகளால் தோண்டி எடுக்க, பாதாள லோகத்தில் உள்ள பாம்பின் மணிகள் நெருப்பைப் போல ஒளி விட்டுக் கொண்டிருக்கும். கற்களுக்கு இடையே முளைத்த புதர்களில் உள்ள புற்றில் காட்டுக்கோழிகள் ஏறி நின்று “கூகூ” என்று கத்திக் கொண்டிருக்கும். மரப்பொந்துகளில் ஆந்தைகள் கத்திக் கொண்டிருக்கும்.
இவ்வாறான காட்சிகளைச் சுந்தரர் இத்தலத்துக்குச் சென்றபோது கண்டு களித்தார். ஆதலின், அவை அனைத்தையும் இப்பதிகத்தில் இணைத்துப் பாடிவிட்டனர்.
இப்பதிகத்தில் சுந்தரர் தம் மனத்துச்கு அறிவுறுத்தும் செய்திகள் பலவாகும். மனத்தை நோக்கி, “மனமே நீ திருப்புனவாயிலை நினை. அப்படி நினைத்தால் பொய்யாக மேற்கொண்ட உறுதிமொழிகள் எல்லாம் அற்றுவிடும். நீ தைரியமாக இரு. திருப்புனவாயிலை மறவாறே; வருத்தம் இன்றி நீ நினைப்பாயாக; வல்வினை எல்லாம் ஒழிந்துபோகத் திருப்புனவாயிலை நினை. வேறு எதுவும் உனக்கு வேண்டா” என்று உபதேசம் செய்கின்றார்.
இப்பதிகத்தில் “பொற்குன்றம் சேர்ந்ததோர் காக்கை பொன்னாம்” என்னும் அருமையான கருத்துடைய தொடர் அமைந்துள்ளது. இப்பதிகத்தை யார் படித்து இறைவனை ஏத்துகின்றார்களோ அவர்களின் வினைகள் ஒழிந்து குற்றமும் இல்லாமல் போகும் என்னும் கருத்தும், சுந்தரர் தம்மை “அடியார் அடியன்” என்று குதூகலத்துடன் கூறிக்கொள்ளும் கருத்தும் ஈற்றுப் பாடலில் உள்ளன



