

தொலைவிலுணர்தல் மறைமலையடிகள்
முதற்பதிப்பின் முகவுரை
இற்றைக்கு இருபத்துநான்கு ஆண்டுகளுக்குமுன் அதாவது விரோதி கிருது ஆண்டு (1911) சித்திரைத் திங்களில் யாம் எழுதத் துவங்கிய தொலைவிலுணர்தல் என்னும் இவ்வுரை நூல், எமது ஞானசாகரம் என்னும் அறிவுக்கடலின் ஆறாந்திருமலரிலும் எட்டாந்திருமலரிலும் ஒன்பதாந் திருமலரிலும் 96 பக்கங்கள் வரையில் வெளிவந்து, பத்து, பதினொன்று, பன்னிரண்டு, பதின்மூன்று, பதினான்கு, பதினைந்தாந் திருமலர்களில் தொடர்ந் தெழுதப்படாமல் நின்றுபோய். மீண்டும் 16-ஆந் திருமலரில் ஆங்கிரச ஆவணி புரட்டாசிக்குரிய ஏழு எட்டு இதழ்களில் தொடர்புகொண்டு வெளிவரத் துவங்கி, இப்போது அதன் பதினேழாந் திருமலரின் எட்டு ஒன்பதாம் இதழ்களில் எல்லாம் வல்ல இறைவன் றிருவருளால் இனிது முடிவு பெறலாயிற்று.
இங்ஙனம் இந்நூல் இடையிடையே எழுதப்படாமல் நின்று போயது ஏனெனின்; யோகநித்திரை, மனிதவசியம், மக்கள் நூறாண்டு உயிர்வாழ்தல் எப்படி?, மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் என்னும் பேராராய்ச்சிப் பெரும்பயன் நூல்களும் வேறுசில சிறு நூல்களும் இடையிடையே எழுதி வெளியிட வேண்டுவது இன்றியமையாததாக நேர்ந்தமையானும், அந்நூற் பொருள்களின் உண்மைகளை உள்ளவாறு ஆராய்ந்து எழுதுதற்குத் தமிழ் ஆங்கிலம் வடமொழி என்னும் இந்நூற் பொருளின் உண்மைகளையும் உண்மை நிகழ்ச்சிகளால் விளக்குதற்கு இன்னும் பல நூல்களைப் பயில வேண்டுவது முதன்மையா யிருந்தமையானும், மேற்கிளந்த நூல்கள் முடியுந்தனையும் இந்நூலை இடையே பல ஆண்டுகள் நிறுத்தி வைக்க இருபத்துநான்கு ஆண்டுகளுக்குப் பிறகாவது இது முற்றுப்பெறும்படி அருள்புரிந்த எம்பிரான் றிருவடிகளுக்கு அடியேங்களின் புல்லிய வணக்கங்கள் உரிய வாகுக!
தொலைவிலுணர்தல் என்பது ஐம்புலன்களுக்கும் எட்டாத் தொலைவிலுள்ள பொருள்கள் உயிர்கள் பொருணிகழ்ச்சிகள் உயிர் நிகழ்ச்சிகளை மக்களாகிய நாம் நமதுள்ளத்தால் உணரப் பெறுதலே யாகும். ஐம்புலன்களின் வாயிலாகவன்றி எதனையும் உணர மாட்டாத எளிய நிலையில் நிற்கும் நாம், அவ்வைம்புலன்களுக்கும் எட்டாத இடத்திலுங் காலத்திலும் உள்ள பொருள்களையும் உயிர்களையும் அவற்றின் நிகழ்ச்சிகளையும் ஒரோ வொருகாற் கனவிலும் நம் அகக்கண்ணெதிரே சடுதியிற்கண்டு, அங்ஙனங் கண்டபடியே பின்னர்ப் புறக்கண்ணெதிரேயும் அவை தோன்றக் கண்டால் அப்போது நாம் எவ்வளவு இறும்பூதெய்துகின்றோம்! கனவிலோ நனவிலோ நாம் நம் அகக்கண்ணாற்கண்டு நினைவுற்ற ஓரிடத்தே அங்ஙனங் கண்டபடியே சிறிதும் பிசகாது நமது புறக்கண்ணேதிரேயுங் காணநேருங்கால் அப்போது நாம் எவ்வளவு வியப்புறுகின்றோம்! இன்னும் நமக்கு இனியராயினார் ஒருவரைப்பற்றி நாம் ஆழ்ந்து நினைந்து கொண்டிருக்கையில், அவர் நமக்கெதிரே வந்தாலும், அல்லாதவரிடமிருந்து எதிர் பாராமலே ஒரு கடிதம் வந்தாலும் அப்போதும் நாம் எவ்வளவு வியப்பினை அடைகின்றோம்! இவ்வாறு ஐம்புலன்களுக்கும் அப்பாற்பட்ட நிகழ்ச்சிகள் ஒருகாலன்றிப் பல காலும் ஆங்காங்கு நிகழ்தலை நம்மனோர் தம்மாட்டும் பிறர் மாட்டும் அடுத்தடுத்து அறிந்துவைத்தும், அவற்றைப் பற்றி ஆராயாதும், அவ் வாராய்ச்சியாற் பெறும் பெரும்பயனைப் பெறாதும் வாளா நாட்கழித்து மாய்ந்துபோதல் எத்துணை இரங்கத்தக்க தொன்றா இருக்கின்றது!
இவ்வுடம்பும் இவ்வுடம்பிலமைந்த ஐம்புலங்களும் நமக்கு அறிவை வளர்த்தற்கும் இன்பத்தைப் பெருக்குதற்கும் இன்றியமையாதவைகளாய் இருந்தாலும், இவையிற்றின் உதவி யில்லாமலே பொருள்களையும் உயிர்களையும் அவற்றின் நிகழ்ச்சிகளையும் நேரே யறிந்து கொள்ளுதற்குரிய அறிவும் ஆற்றலும் உடையவர்களாய் இருக்கின்றோம் என்பது மேல் நிகழ்ச்சிகளால் விளங்க வில்லையா? இத் துணைச் சிறந்த அறிவாற்றல் நமக்கு இயற்கையாகவே யிருந்தும், ஏதோ ஓர் இருள் நம்மறிவைக் கவிந்து கொண்டிருத்தலினாலன்றோ, இவ்வுடம்பும் இதிலமைந்த ஐம்புலன்களும் அவ்விருளைப் போக்கி நமதறிவை விளங்கச் செய்தற்கு இன்றியமையாக் கருவிகளாக இறைவனால் நமக்கு வகுத்துக்கொடுக்கப் பட்டிருக்கின்றன? கட்பார்வை மங்கிய கண் கண்ணாடியின் உதவியால் தனது பார்வை விளங்கப் பெறுதல் போலவும், புகையிற் பொதிந்த நெருப்புக் காற்றினுதவியால் அப்புகை நீங்கிச் சுடர்ந்தெரிதல் போலவும், பாசி மூடிய நீர் செம்படவர் வலையால் அரிப்புண்ட பின் தெளிந்து விளங்குதல் போலவும். மழைமுகிலால் மறைவுண்ட மதியம் மழை பொழிந்தபின் நீலவானில் நிலவொளி விரித்துச் சாலத் துலங்குதல்போலவும், நம தறிவை மறைத்த இருளும் விலகவிலக அவ்வறிவுஞ் சொலற்கருந் துலக்கமுடையதாகி, ஐம்புல உதவி வேண்டாமலே அண்மையிலுஞ் சேய்மையிலும் முற்கால இக்காலப் பிற்காலங்களிலும் எவற்றையும் எவற்றின் நிகழ்ச்சிகளையும் நேரே காணவல்லதாகிய அறிவுக் காட்சியை நாம் பெறுங்கால், அதற்கு முன் நாம் அறியாமையால் அடைந்த நோயுங் கவலையும் வறுமையும் அவற்றால் வரும் அளவிலாத் துன்பங்களும் நம்மைவிட் டொருங்கே நீங்கிப்போக, நாம் எல்லையற்ற அறிவும் இன்பமும் நிரம்பப் பெற்று, எல்லாம் வல்ல ஆண்டவனது அருட்பேரொளியில் அழிவின்றி நிலை யுதலுறுவோம்.
ஆகவே, அத்துணைச் சிறந்த அறிவுக் காட்சி நமக்கு இயற்கையே உண்டென்பதனையும், அவ்வறிவுக் காட்சியால் நம் மக்களிற் சிலர் பலர் ஐம்புலன்களுக்கும் எட்டாத அரிய பல நிகழ்ச்சிகளை நேரே காண்டலையும், உண்மையாக நிகழ்ந்த நிகழ்ச்சிகளைக் கொண்டு நன்கு விளக்கி, அவ்வாற்றால் மக்கட் பிறவியினை அரிதிற் பெற்றாரெல்லாரும் ஓவாத தமது தவமுயற்சியால், அவ்வறிவுக் காட்சியினை இன்னும் வரம்பின்றிப் பெருகச் செய்து, அதனால் அறியாமையும், அறியாமையினை அடிப்படையாகக் கொண்டு வரும் அல்லல்களும் ஒழிந்து இம்மை மறுமைக்குரிய எல்லா நலன்களையும் எய்தல் வேண்டும் என்னும் நோக்கம் பற்றியே தொலைவிலுணர்தல் என்னும் இந்நூலை இயற்றலாயினேம்.
இந்நூலின்கண் எடுத்துக் காட்டப்பட்டிருக்கும் மெய்ந் நிகழ்ச்சிகளிற் பெரும்பாலன மேனாட்டாசிரியர் ஆராய்ந்து உண்மையென உறுதி செய்தவைகளாகும். இத்தமிழ் நாட்டிலும் ஆங்காங்குத் தொலை விலுணர்தலாகிய நிகழ்ச்சிகள் நாடோறும் நிகழ்கின்றனவாயினும், அவை தம்மை நடுநின்று ஆராய்ந்து பல மெய்ச் சான்றுகளால் உறுதிப்படுத்துவாரும் உறுதிப்படுத்தி நூல் எழுதுவாரும், யாமறிந்தவரையில், எவருமில்லை. அதனால் இத்தமிழ்நாட்டில் நிகழுந் தொலைவிலுணர் நிகழ்ச்சிகளை மிகுதியாய் எடுத்துக் காட்டுதல் எம்மால் இயலாதாயிற்று. எந்நாட்டி லிருப்பினும், எம் மக்கள் குழுவைச் சேர்ந்தவராயிருப் பினும், உண்மைகாணும் வேட்கையும் முயற்சியும் உடைய சான்றோர் ஆராய்ந்து கண்ட மெய்ம்மைகளை எடுத்துக் காட்டுதலே மக்களுக்கு மெய்யறிவைத் தருமாகலின், யாம் எடுத்துக் காட்டிய மேனாட்டாசிரியர் தம் மெய்யுரைகள் நம்தமிழ் நாட்டவர்க்கு மெய்யறிவைப் பயந்து அவர்க்குப் பெருநலன்களை விளைக்கு மென்னும் நம்பிக்கை யுடையேம்.
இருபத்துநான்கு ஆண்டுகளுக்குமுன் யாம் இந்நூலை எழுதத்துவங்கிய காலத்தில், வடசொற் கலப்பால் நம் செந்தமிழ் மொழிக்குண்டாந் தீதினை உன்னியாதிருந்தேம். அதனால், இந்நூற்படிகள் சிலவற்றில் முதல் ஐம்பத்தொரு பக்கங்கள் வரையிற் சிற்சில வடசொற்கள் கலந்துவிட்டன. இந்நூலின் இரண்டாம் பதிப்பில் அவ்வடசொற்கள் களைந்தொழிக்கப் படும். இதுகாறும் எமது நூற்றொண்டுக்குத் துணைபுரிந்துவரும் இறைவன்றி ருவருள் மேலும் அதற்குத் துணைபுரிவதாக!
மறைமலையடிகள்
பல்லாவரம்
பொதுநிலைக்கழக நிலையம்,
திருவள்ளுவர் ஆண்டு,



