
தொலைவிலுணர்தல் மறைமலையடிகள்
8. முதற் பழக்கம்
உணர்வோரும் உணர்த்துவோருமான இருவருந் தொலைவான இடங்களிலிருந்து ஒருவரது நினைவை மற்றவர் தெரியத் துவங்குமுன், முதற்முதற் கிட்டஇருந்து அதனை அறிதற்குப் பழகல்வேண்டும். இருவரும் ஓர் அறையில் அல்லது ஒரு வீட்டி லிருந்துகொண்டே பழகலாம். உணர்த்துவோர் கண்ணைத் திறந்துகொண்டு நிமிர்ந்த நிலையில் ஒன்றின்மேல் அமர்ந்து ஒரு பொருளை உறுத்து நினைக்கவேண்டும்; அந்நினைவை ஏற்கு நிலைமை யிலிருந்து உணர்வோர் ஒரு சாய்மானக் குறிச்சியிற் சாய்ந்த படியாய் அவரெதிரே அருகில் இருந்து கண்ணை மூடிக் கொண்டு தமது உள்ளத்தில் எந்த நினைவு வலிவாய் வந்து தோன்றுகின்ற தென்பதனைப் பார்த்தல் வேண்டும். இவ்வாறிருவரும் பழகுகையில் உணர்த்துவோர் தம் மெதிரே யிருக்கும் உணர்வோரது வலதுகையைத் தமது இடதுகையிலும், அவரது இடதுகையைத் தமது வலது கையிலும் பிடித்துக் கொள்ளுதல் நன்று. அல்லது உணர்த்துவோர் தமது வலது உள்ளங்கையை உணர்வோரின் நெற்றிமேல் வைத்திருக்க லாம். அது கூடாவிட்டால் ஒருமுழ நீளமுள்ள ஒருகோலை அல்லது ஒரு கம்பியை இருவரும் பற்றிக்கொண்டும் இதனைப் பழகலாம். இங்ஙனம் ஒருவரை யொருவர் தொட்டுக் கொண்டாவது, அல்லது இருவரையுந் தொடர்புபடுத்தும் ஒரு நீண்ட பொருளைப் பற்றிக்கொண்டாவது அவர்கள் பழக வேண்டுவது ஏன் என்றால், மூளையின் அசைவால் நரம்பின் வழியே வெளிப்படும் நினைவுகளானவை தொட்டுக் கொண்டிருக்கும் மற்றவர் கைவழியே ஏறி மூளையிற் சென்று தங்கி அவர்க்கும் அந் நினைவுகளை எழுப்புவிக்கும். அவ்வாறு தொட்டுக் கொண்டிராவிட்டால் அந்நினைவுகள் இடைவெளியிற் சிதறிப்போம். ஓரிடத்திலிருந்து செலுத்தப்படும் ஒரு செய்தி இடையேயுள்ள கம்பியின்வழியே விரைந்து சென்று வேறோர் இடத்திற் புலப்பட்டுத் தோன்றுவதுபோல, ஓரிடத்திற் பிறக்கும் ஒரு நினைவும் அவரொடு பிணைக்கப்பட்டிருக்கும் மற்றவர் கைவழியே சென்று ஏறும். இருவர்க்கும் இடையே இவ்வாறு தொடர்பு செய்து கொண்டு இக் கல்வியைப் பழகப் பழகச் சிலநாட்களில் இடையே தொடர்பு படுத்துங் கருவி இல்லாமலே ஒருவர் நினைவை மற்றொருவர்க்கு ஏற்றுவதும், ஒருவர் நினைவை மற்றொருவர் ஏற்பதும் மிக எளிதிலே நிறைவேறும். துவக்கத்தில் இங்ஙனம் இருவருந் தொடர்புபட்டு நின்று இதனைப் பழகுதலே இயற்கை முறையாமென்பது மக்களினுந் தாழ்ந்த சிற்றுயிர்களிடத்துங் கண்டறியலாம். கண்ணுங் காதும் இல்லாத எறும்புகள் விரைந்து ஓடும் போது எதிரே வரும் எறும்புகளுடன் சிறிதுநேரந் தலையொடு தலை முட்டிநின்று பிறகு ஒதுங்கிப் போவதைப் பாருங்கள்! இவை ஏன் இங்ஙனம் ஒன்றையொன்று முட்டிச் செல்கின்றன என்று சிறிது ஆராய்ந்து பார்த்தால், இவை தாம் நினைத்ததனை மற்றையவற்றிற்குந் தெரிவித்தற் பொருட்டேயா மென்பதைக் கண்டுகொள்ளலாம். இரண்டு எறும்புகள் ஒன்றையொன்று முட்டி நிற்குங்கால் ஒன்றன் நினைவு மற்றொன்றிற்கு எளிதிற் புலனாகின்றது. இங்ஙனமே பண்டை நாட்களிற் பேசத் தெரியாத நிலையிலிருந்த பழைய மக்கள் தமக்குள் ஒருவர் நினைவைப் பிறர்க்கு அறிவிக்கவேண்டினால் இருவரும் எதிர் எதிரே நெற்றியொடு நெற்றி சேர்த்துச் சிறிதுநேரம் நின்று அதனை அறிவித்துக் கொள்வர்களென்று பழைய நாள் மக்கள் வரலாற்றை ஆராய்ந்து நூலெழுதுவோர் கூறுகின்றார்கள். தங் கருத்தைப் புலப்படுத்துதற்குச் சொற்கள் அறியாதிருந்த முன்நாளில் மக்கள் தமது நினைவைப் பிறர்க்கு நினைவின் அளவானே உணர்த்தும் ஆற்றல் உடைய ராயிருந்தனர்; ஆனால், அச் சிறந்த ஆற்றல் அவர்கள்பேசத் தெரிந்துகொண்ட உடனே மழுங்கிப் போயினது; மழுங்கினாலும் அது முற்றும் இல்லாமற் போகவில்லை. நெற்றியோடு நெற்றியை வைத்தாயினும், நெற்றி மேற் கையை வைத்தாயினும், அன்றிக் கையொடு கை பிணைந்தாயினும் ஒருவர் நினைவைப் பிறரொருவர்க்கு அறிவிக்கத் தொடர்ந்து பழகினால் மழுங்கிக் கிடக்கும் இவ்வாற்றல் மக்களிடத்துத் திரும்பவும் விளங்கித் தோன்றுமென்பது திண்ணம்.



