தொலைவிலுணர்தல் மறைமலையடிகள்

7. தொலைவில் உணர்வோர் உணர்த்துவோர்

இனித், தொலைவிலுணர்தல் என்னும் இவ்வரும் புலமைத் திறத்தைப் பெறுதற்கு வேண்டுபவர் தொடக்கத்தில் தாமே இதனைத் தனியாயிருந்து பழகுதல் ஆகாது; பெரும்பான்மையுந் தம்மோடு ஒத்த இயல்பும் ஒத்த விருப்பமும் உடையார் ஒருவரைத் தெரிந்தெடுத்து அவரொடு சேர்ந்திருந்து பழகல் வேண்டும். இவ்வாறு சேர்ந்து பழகும் இருவரில் ஒருவர் தாந் தொலைவிலிருந்து மற்றவர் நினைத்து விடுக்கும் ஒரு நினைவை ஏற்று அறிதல் வேண்டும்; இங்ஙனம் ஒருநினைவை வரவேற்று அறிபவர் உணர்வோர் என்று சொல்லப்படுவர்; மற்றொருவர் தாமுந் தொலைவிலிருந்து ஒருபொருளில் உள்ளத்தைப் பதிய நிறுத்தித் தமது நினைவை உணர்வோர்பாற் செல்லும்படி விடுத்தல் வேண்டும்; இங்ஙனந் தாம் நினைக்கும் நினைவை உணர்வோர்க்கு அனுப்புகின்றவர் உணர்த்துவோர் என்று பெயர் பெறுவர். உணர்வோரா யிருந்து பழகுபவர் அங்ஙனஞ் சிலகாலம் பழகித் தேர்ச்சி பெற்றபின் அந்நிலையை மாற்றிப் பின்னர் உணர்த்துவோராயிருந்து பழகலாம். உணர்வோர் எப்போதும் உணர்த்துவோராயுமே யிருந்து பழகல் வேண்டு மென்னுங் கடப்பாடு இல்லை. உணருநிலையிலும் உணர்த்து நிலையிலும் மாறி மாறிப் பமிலுதலே நலமுடைத்தாம். ஒருவர் மற்றொருவர் நினைவை அறியவுந், தமது நினைவைப் பிறர்க்கு அறிவிக்கவும் வேண்டிய நிலையில் இவ்வுலக வாழ்க்கை நடைபெற்று வருதலால், தாம் உணர்வதொடு பிறர்க்கு உணர்த்தவுங் கற்றலே பலவகையாலும் பயனுடைத்தாம். ஆனதனால், இருவகை நிலையிலும் உறைத்துப் பழகுக.

இவ் வருங்கலைப் புலமையை அடைதற்குப் புகும் போது, இதன்பயிற்சியாற் பொருள் திரட்ட வேண்டுமென்னும் எண்ணம் ஒருசிறிதுங் கொள்ளற்க. அழியாச் செல்வமாகிய இப் பெறற்கரும் பேற்றை அழியுஞ் செல்வத்தின் பொருட்டுப் பயன்படுத்தத் துணிந்தால் அதனாற் பல அல்லல்கள் விளையும். இவ்விழிந்த வேட்கையோடு அதனைப் பயிலும்போது அஃது எளிதிற் கைவராது. அன்றி அது வரினும், பொருள் தொகுத்தலின் கண்ணே வேட்கை சென்று பலவகைச் சூதுகளையும் ஏமாற்றங்களையுஞ் செய்யத் துணிந்தால், இவ்வரும் பெருங் கலைப்புலமை வெறும் பொய்யே யென்று பலரும் இகழ்தற்கு இடஞ்செய்யும். ஆனது பற்றி, இக்கலைப் புலமையை அதன் அரும்பெரும் பேற்றின் பொருட்டே உளம் விழைந்து பயின்று தேர்ச்சிபெறல் வேண்டும். இதிற்றேர்ச்சி பெற்று உண்மைக்குப் பாடுபட்டு வருபவர்களின்றன்மை நாளேற நாளேற எல்லார்க்குந் தானாகவே தெரிய வருமாதலால், அவ்வருமை தெரிந்தவர்கள் அவர்க்கு வேண்டிய அளவு பொருளுதவி செய்வர். உண்மைக்கு உழைத்துவந்தால் எல்லாம் வல்ல ஐயன் அதற்கு உற்றவர்களைக்கொண்டு கட்டாயம் உதவிபுரிவா னென்பது திண்ணம். ஆதலாற், பொருளை எதிர்பாராமலே இவ்வரிய கலைப் புலமையை விருப்பத்தொடு பயின்றுவருக உணர்வோர் உணர்த்துவோராகிய இருவரும் இங்ஙனம் பொருளை அவாவாது பழகிவருவராயின், அவர் தமது பழக்கத்தின் உறைப்புக்குத் தக்கபடி கண்டாரெல்லாம் வியக்கத்தக்க முக்காலவுணர்ச்சி யினை அடைந்து பல நலங்களைப் பெறுவர்.

இனி, உணர்வோர் உணர்த்துவோரான இருவரும் உண்மையன்பிற் பிணிக்கப்பட்டவராய் இருந்து இவ்வருங்கலைப் புலமையிற் பயில்குவராயின் இதிற் றேர்ச்சி பெறுவது அவ் விருவர்க்கும் மிக எளிதில் முடியுமென்பதும் உணர்ந்து கொள்ளல் வேண்டும். இதற்குச் சான்றாக, உயர்ந்த காதல் அன்பிற் கட்டுண்ட காதலரின் உயிர் வாழ்க்கையை எடுத்துக் காட்டலாம். காதலனுங் காதலியும் உடம்பால் இருவர்போற் றோன்றினும் உயிரால் ஒருவரேயாய் வாழ்க்கை செலுத்துஞ் சிறப்பினை உன்னித்துக் காண்பேமாயின், அவரில் ஒருவர் நினைக்கும் நினைவினையே மற்றவரும் நினைத்தலும், ஒருவர் ஒன்று சொல்ல நாவெடுக்கும் போதே மற்றவரும் அதனையே சொல்லுதலும் ஒவ்வொரு நேரமும் நம் எதிரே நடைபெறுதலை உணர்ந்து களிக்கலாம். எனவே, இருவர் நினைவை ஒன்றுபடுத்துதற்கு அவர்க்குள் நிகழும் உயர்ந்த அன்பே ஒருபெருங்கருவியா யிருக்கின்றது. அன்பில்லாத இருவர் எத்துணை தான் இக்கலைப் புலமையிற் பழகினாலும் அவர் இதிற் றேர்ச்சிபெறுதல் அரிதேயாகும். அன்புடைய இருவர்க்கு இக் கலைப் புலமை இயற்கையாகவே எளிதில் வாய்ப்பதாய்க் காணப்படுமானால், அவர் பின்னும் இதனைக் கருத்தொரு மித்துப் பழகித் தேர்ச்சிபெற நினைந்து முயல்வராயின் அஃது அவர்க்கு எவ்வளவு விரைவிற் கிட்டுமென்பதனை நாம் சொல்லுதலும் வேண்டுமோ! அவ்வாறாயின், இக்கலைப் புலமையைப் பெறுதற்கு அன்பு ஒன்றுமே போதாதோ, இதனின் வேறாக மேற்சொல்லிய முறைகள் எல்லாங் கைப்பற்றுதல் வேண்டுமோவெனின், அன்பின் முதிர்ச்சியால் இருவர் நினைவு ஒன்றுபட்டுநின்றாலும், இக் கலைப்புலமையை முற்றும் பெறுதல் இயலாது; அன்பொடு கூட அறிவும் உடையராய் மிகமுயன்று மேற்சொல்லிய முறைகளையுந் தவறாமற் பின்பற்றி வந்தால் மட்டுமே இதில் எவரும் வியக்கும்படி தேர்ச்சி யடையலாம். இஃது எது போலவெனிற் காட்டுவாம். ஒரு வயல் நிலம் மிகுந்த நீரொடுகூடி மென்பதப்பட்டு நின்றவளவானே பயிரை விளைத்துத் தராது; அதன்கண் நல்ல விதைகளையிட்டுக் களைபிடுங்கிப் பயிரைப் பாதுகாத்து வந்தால் மட்டுமே பயனடையலாம்; அதுபோல, இருவர் உள்ளமும் அன்பினால் நனைக்கப்பட்டு மென்பதமாய் நின்றாலும், அதுதானே இக்கலைப் புலமையை முற்றும் பயவாது; கூட அறிவென்னும் வித்தை இட்டு இழிக்கத்தக்க பேரவா செற்றம் கலக்கம் முதலியவற்றைக் களைந்து ஓயா முயற்சியால் அப் பழக்கத்தைப் பாதுகாத்து வந்தால் மட்டுமே இப்புலமை பிழைபடாமற் பயன்றரும். இருவர் உள்ளமும் அன்பால் ஒருங்கு இயைந்து நிற்றல் இக் கலைப்புலமையைப் பெறுதற்கு ஒரு சிறந்த கருவியாகு மென்றுமட்டும் உணர்ந்து கொள்ளல் வேண்டும். அதுநிற்க.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

எங்களது இணைப்பைப் பயன்படுத்தி அமேசானில் பொருட்கள் வாங்கி ஆதரவு அளியுங்கள்!