
தொலைவிலுணர்தல் மறைமலையடிகள்
2. நுண்ணிய வெளிகள்
இங்ஙனந் தொலைவிலுள்ள ஒருவர் நினைவானது மற்றொருவர் உள்ளத்தில் எழுவதற்கு ஏது என்னை? வேறு வேறு இடங்களில் உள்ள இருவரையும் ஒன்று படுத்தி இணைக்க நடுவே எவ்வகைப் பொருளும் இல்லாதிருக்கவும், அவ்விருவர்க்கும் ஒரே நினைவு தோன்றுவதெப்படி என்று பலருந் தம்முள் ஐயுற்று மருள்வர். உள் பொருள்களைப் பகுத்தறியும் நுண்ணுணர்வுங் கல்வியும் இல்லாதவர்கள் மட்டுமே இங்ஙனம் மருள்வர்; இத்தன்மையோர்க்குக் கண்ணாற் காண்பதுங் காதாற் கேட்பதும் மட்டுமே மெய்; ஏனையவெல்லாம் பொய். கல்வியும் நுண்ணுணர்வும் உடையாரோ, வெளிப் பார்வைக்கு உடம்பினுள் வாழும் உயிர்கள் தனித்திருப்பது போற்றோற்றினுந், தம்மைச் சுற்றிலும் அவை பலவகையான நுண்ணிய பொருள் களாற் சூழப்பட்டிருத்தலைத் தெள்ளிதில் அறிந்துகொள்வர். நுண்பொருள் நோக்கி என்னுங் கண்ணாடியின் உதவியால் நாம் உயிர்க்கும் மூச்சிலும் அருந்துந் தண்ணீரிலும் இயங்கும் இடைவெளியிலும் எண்ணிறந்த உயிர்கள் மிக நுண்ணிய சிற்றுடம்புகளில் உலவுதலை அறிவுடையோர் உணர்ந்து வருகின்றார்கள். நம்முடைய கண்களுள் வந்து நுழைந்து கண்ணொளியை விளக்குங் கதிரவன் முதலிய பொருள்களின் ஒளியும், புறப்பொருள்களிற் பிறந்து காதினுள் வந்து நுழையும் ஓசையும் எவ்வாறு வருகின்றன என்பதனைக் கூர்ந்து ஆராய்ந்து பார்த்த இயற்கைப் பொருணூற் புலவர்கள், அவை அங்ஙனம் பரந்து உலாவி வருவதற்கு எங்கும் நிறைந்த மிக நுண்ணிய இடைவெளி ஒன்று உண்டென்று கண்டறிந்தார்கள். ஒளியானது ஒர் இமைப்பொழுதில் ஓர் இலக்கத்து எண்பத் தாறாயிரம் மைல் இடத்தைக் கடந்து செல்கின்ற தென்பதைச் சிவஞானபோத ஆராய்ச்சியில் இனிது விளக்கினாம். கண்ணிமைகொட்டும் முன் இவ்வளவு தொலைவிடஞ் செல்கின்ற ஒளியானது, சிலவான்மீன் மண்டிலங்களில் இருந்து இங்கு வருதற்கு ஐம்பது ஆண்டுகளுக்குமேற் செல்கின்றது. இப்படியானால் அவ்வான்மீன் மண்டிலங்கள் இந் நிலவுலகத்திற்கு எவ்வளவு தொலைவில் இருக்கவேண்டு மென்பதைச் சிறிது நினைந்து பாருங்கள்! இத்தனை தொலைவிலுள்ள வான் உலகங்களுக்கும் இந் நிலவுலகத்திற்கும் இடையிலே நிறைந்து நின்று இவற்றையெல்லாம் இணைப்பதற்கு இடைவெளி ஒன்று இல்லாவிட்டால் அவ்வான்மண்டிலங்களில் உள்ள ஒளியானது இங்கே எவ்வாறு வரக்கூடும்? இன்னுங் காதுக்கு எட்டுந் தொலைவிலேயிருந்து ஒருவர் பாடும்போது அப்பாட்டின் ஓசையானது நமது செவியில் வந்து படுவதைப் பாருங்கள்; தொலைவிலிருந்து பாடும் அவருக்கும் இப்பாலிருந்து அதனைக் கேட்கும் நமக்கும் இடையிலே வான்வெளி ஒன்று இல்லா விட்டால் அவ்வோசை நஞ்செவிக்கு எவ்வாறு எட்டும்? ஆகவே, ஓசையும் ஒளியும் உலவுதற்கு இடமாய் எங்கும் நிறைந்துள்ள வான்வெளி ஒன்றுண்டென்பது நன்கு பெறப் படுகின்றதன்றோ?
இனி, இவ்விடைவெளியில் நுண்ணணுக்கள் நிறைந்துள்ளன. இவ்வெளியின்கண் எங்கேனும் ஓரிடத்தில் ஒளியாவது ஓசையாவது தோன்றினால் அது தோன்றியவிடத்திலேயுள்ள நுண் ணணுக்கள் அதனால் அசைவு பெற்றுத் தம் பக்கத்தேயுள்ள நுண்ணணுக்களை அசைக்கும்; அந் நுண்ணணுக்கள் தம்மோ டிணைந்து நிற்கும் அணுக்களை அசைக்கும்; இங்ஙனம் ஒன்று மற்றொன்றை அசைக்கக் கடைசியாக நங் கண்ணிலுஞ் செவியிலும் நிறைந்த நுண்ணணுக்கள் அசைந்து நமக்கு ஒளியினையும் ஓசையினையும் புலப்படச் செய்கின்றன. இவ் வியல்பை ஓர் எடுத்துக்காட்டால் விளக்குவாம்; அகன்ற ஓர் ஏரியில் நிறைந்த நீரின் நடுவே ஒரு கல்லை விட்டெறிந்த வழி, அக்கல் விழுந்த இடத்திலுள்ள நீரின் அணுக்கள் அசைந்து தம் பக்கத்தேயுள்ள நீரின் அணுக்களை அசைக்க, அவை தம் பக்கத்தேயுள்ள அணுக்களை அசைக்க, இவ்வாறு அந்நீரின் அணுக்கள் எல்லாம் நாற்புறமும் அலைஅலையாய் அசையக், கரைவரையில் அவ்வியக்கம் வந்து திரும்புவதைப் பாருங்கள்! இங்ஙனமே வான்வெளியிலும் ஒளியும் ஓசையும் இயங்குகின்றனவென்பது அறியற்பாற்று.
இனி, நம் ஐம்புலன்களாலும் அறியப்படும் புறப்பொருள்களுள் ஒளியும் ஓசையும் நாற்றமுமே மிக நுட்பமான பொருள்களாகும்; நுட்பமான பொருள்கள் உலவுதற்கு நுண்ணிய வெளியும், பரும்படியான பொருள்கள் உலவுதற்குப் பருப்பொருளான நிலமும் வேண்டப்படுகின்றன. ஒளியும் ஓசையும் மிக நுண்ணிய இடைவெளியில் உலவும்; நாற்றங் காற்றில் உலவும். அற்றேல், மின்னுட்பத்தால் உந்தப்படும் ஓசையானது பருப்பொருளான துத்தநாகக் கம்பி வழியே செல்வது என்னையெனின்; அக்கம்பியிலும் நுண்ணிய வான்வெளியே நிறைந்திருத்தலின், அங்கும் அஃது அவ் வெளியிலேதான் செல்கின்றதென உணர்க. அவ்வாறாயின் வான்வெளியிற் செல்லும் அவ்வோசையைக் கம்பிவழியே செலவிடுத்தல் ஏன் என்றால், வறிதே வான்வெளியில் அவ்வோசையைச் செல்லவிட்டால் அவ்வெளி எங்கும் அது சிதறிப்போகுமாதலால், அஃது அங்ஙனஞ் சிதறாமைப் பொருட்டுக் கம்பி அவ் விடைவெளியில் ஒரு சிறு பகுதியைத் தன்னுள் வைத்து அவ்வோசை ஒரு வழியே செல்ல உதவி புரிகின்றது. அது போக, அமெரிக்காவிலுள்ள நுண்ணறிவாளர் இப்போது கம்பியில்லாமலும் வெறும் வான்வெளியிற் செய்தி விடுக்கக் கற்றிருக்கின்றார்களாகலின், ஓசையானது நுண்ணிய வான்வெளியிலேதான் எங்குஞ் செல்வதென்பது மறுக்கலாகாத உண்மையேயாம் என்க. இனி ஒளியும் இவ்வாறே இடை வெளியில் உலவும் உண்மையும் அறியற்பாற்று.
இனி, நாற்றமோ ஓசை ஒளி இரண்டினுஞ் சிறிது பரும்படியான பொருளாகையால், அது தனக்கேற்ற காற்றிலே உலவுதல் செய்கின்றது. காற்றானது வான் வெளியைவிடப் பரும்படியான பொருளாகையால், அது தன்னிடத்தில் நாற்றமானது நடைபெறுதற்கு இடந்தருவதா யிருக்கின்றதென்க.
இனி, இவை யொழியக் கல் மண் மரம் நீர் முதலிய பொருள்கள் எல்லாம் நிலத்திலே மட்டும் இயங்கவல்லன. அவ்வாறாயிற், புறவு பருந்து முதலான பறவைகளின் பருவுடம்புகள் காற்றிலே இயங்குதல் என்னையென்றால், அவ்வுடம்புகள் எக்காலத்தும் இயல்பாகவே காற்றில் இயங்குவன அல்ல; இறக்கைகளின் உதவியாற் காற்றை அலைத்துச் செயற்கையாக அக் காற்றில் இயங்குகின்றன. ஆகையாற், பருப்பொருள்கள் பருப்பொருள்களிலேயே இயங்கும் என்னும் முறை பிறழமாட்டாதென்க. இனி, இந் நிலவுலகமானது உருண்டை வடிவினதாய் இடைவெளியிற் சுழல்கின்ற தென்னுங்கால், இது கதிரவ னுலகத்தானும் அம்புலி யுலகத்தானும் முன்னும் பின்னும் இழுக்கப்பட்டு அங்ஙனஞ் சுழல்கின்றதே யன்றி அது தன்னியற்கை யாகவே அவ்வெளியிற் சுழல்கின்றதில்லையென்க.
இவ்வாறு கல் மண் முதலான பருப்பொருள்கள் நிலம் என்னும் பருப்பொருளிலும், நாற்றம் ஓசை ஒளிமுதலான நுண்பொருள்கள் காற்று வெளி முதலான நுண்பொருள்களிலும் இயங்குதல் போலவே, ஓசை ஒளியினும் மிக நுண்ணியவான நம்முடைய நினைவுகள் இயங்குதற்கு வான்வெளியினும் நுண்ணிதான ஒரு நினைவு வெளி இருக்க வேண்டுமென்பது நன்கு பெறப்படும்.



