
தொலைவிலுணர்தல் மறைமலையடிகள்
4. மனவுணர்வை நுட்பமாக்கல்
நம்முடைய பொறி உணர்வுகளில் நமது உடம்பின் உணர்ச்சியே மிகவும் பரும்படியானது; வாயின் உணர்ச்சியோ உடம்பினுஞ் சிறிது நுட்பமானது; மூக்கின் உணர்ச்சியோ வாயினும் நுட்பமானது; செவியின் உணர்ச்சியோ கண்ணினும் நுட்பமானது. ஆகையால், இவற்றைப் பழக்கத் துவங்கும்போது முதலில் உடம்பிலிருந்து தொடங்கல் வேண்டும். மண், நீர், நெருப்பு, காற்று என்னும் பொருள்கள் தன்மேற் படும்போது, உடம்பினிடத்தே உணர்வு காணப்படுகின்றது. இம் மண் முதலிய நான்கு பொருள்களிலும் மண் மிகவும் பரும்படியானது, நீர் அதனினுஞ் சிறிது நுண்ணியது, நெருப்பு அதனினும் நுண்ணியது, காற்று அதனினும் நுண்ணியது. இப்பொருள்கள் மேலே படும்போது உண்டாகும் உணர்வானது வெவ்வேறு உடம்புகளில் வெவ்வேறு வகையாய் ஏறியுங் குறைந்துந் தோன்றும். எருமை மாட்டின்மேல் ஒரு பெருந் தடிகொண்டு தாக்கினாலும் அஃது அதனை ஒருபொருட்டாய் எண்ணாது. ஆனால், அப்பெருந்தடி ஒரு மெல்லிய மானின் உடம்பின்மேல் பட்டால் அஃது அதனைத் தாங்கமாட்டாமல் இறந்துபோம். ஆகவே, எருமை உடம்பின் உணர்விலும் மானுடம்பின் உணர்வானது மிகவும் நுண்ணிதென்பது பெறப்படா நிற்கும். இங்ஙனமே மக்கள் உடம்புகளிலும் உணர்வு பல்வேறு தன்மைப்பட்டுத் தோன்றுகின்றது. மட்ட அறிவு உடையவன் உடம்பு மிகவும் முரடுபட்டுக் காணப்படுகின்றது; கூரிய அறிவுள்ளவன் உடம்போ முல்லைப்பூப்போல் மிகவும் மென்மை வாய்ந்து விளங்குகின்றது. முரண்ட உடம்புள்ள மட்டி பரற் கற்கள் மேல் நடந்தாலும் அவன் அடிகள் நோகா; அவன் உடம்பு குளிருக்கு நடுங்காது, வெயிலுக்குத் தளராது, அவன் கைகள் இரும்பே; மெல்லிய உடம்பு வாய்ந்த அறிஞனோ பூமேல் நடப்பினும் அவன் அடிகள் நோம். அவன் உடம்பு குளிரைப் பொறாது, வெயிலைத் தாங்காது; அவன் கைகளும் மற்ற உறுப்புகளும் அனிச்ச மலரினும் மெல்லியனவே. உயிர்களுக்கு அறிவு மிகுதிப் பட மிகுதிப்பட அவைகளிருக்கும் உடம்புகளும் வரவர மென்றன்மை உடையனவாகும்; அறிவு கடைசியில் மிக நுண்ணிதாய் வளர்ந்து முற்றிய பிறகு உடம்பானது காற்றினும் நொய்தாய் இந் நிலவுலகில் இயங்காமல் விசும்பில் இயங்கவல்லதாகும். இதனாலன்றோ அறிவின் மிக்க சித்தர்களும் முனிவர்களும் தேவர்களும் நிலத்தில் இயங்காமல் வான்வெளியில் உலவுகின்றனர்? ஆகவே, உடம்பின் உணர்வானது மிக நுட்பம் உடையதாம்படி செய்துகொள்வது மனத்தை ஒருவழிப்படுத்துதற்கும், அறிவை மிகுதிப்படுத்துதற்கும் உதவியான பழக்கமாகும்.
இனி, உடம்பினுஞ் சிறிது நுண்ணிய இயல்பு வாய்ந்த வாயுணர்வும் ஒருவனது அறிவின் ஏற்றக்குறைச்சலுக்கேற்பப் பல திறப்பட்டுத் தோன்றுகின்றது. மட்ட அறிவுள்ளவன் தான் உண்ணும் பண்டத்தின் சுவையையும் நேர்த்தியையும் பாராமல் தன்பசி அடங்கு மட்டுங் கஞ்சியோ கூழோ கிடைத்ததை நிரம்ப உண்ணுகின்றான். நுண்ணறிவு மிக்கவனோ தான் உண்பது சிறிதாயிருந்தாலும் அது சுவை மிக்கதாய் நறுவிதாகச் சமைக்கப்பட்டதாய் இருந்தால் மட்டுமே மனம் உவந்து உண்கின்றான். சிலர் காரம் மிக்கவற்றைக் கண்ணீர் ஒழுகவொழுக அருந்துகின்றனர்; வேறு சிலர் புளிப்புக் காடியாய் இருப்பதனைப் பார்ப்பவர் வாயுங் கூச விழுங்குகின்றனர். இவையெல்லாம் நுண்ணறிவுடையார்க்குச் சிறிதும் பொருந்தாதனவாம்; அறுசுவைப் பண்டங்களையும் அளவாக ஒவ்வொன்றனையும் நன்கு சுவைத்துப் பார்த்து இன்புற்றுச் சிறிதே அருந்தி ஒழுகுவதே அவர் தமக்கு இயற்கையாம்; தித்திப்பு; துவர்ப்பு, கைப்புச் சுவையுள்ள பொருள்களை விரும்புதல்போல, அவர் புளிப்பு, கார்ப்பு, உவர்ப்புச் சுவைகளை விரும்பமாட்டார். அறிவிற் குறைந்தவர்களுக்கே புளிப்பு, கார்ப்பு, உவர்ப்புச் சுவைகள் மிகவும் வேண்டப் படுவனவாகும். ஒருவர் உண்ணும் உணவுப் பொருள்களின் அளவையும் இயற்கையையும் ஆராய்ந்து பார்த்து அவர்கள் அறிவும் இயல்பும் இப்படியிருக்கு மென்று செவ்வையாக அறிந்து கொள்ளலாம்.
பாருங்கள்! சிலர் பிற வுயிர்களின் உடம்பைச் சிதைத்துக் கொண்டுவந்த இறைச்சியை எவ்வளவு விருப்பத்தோடு உண்கின்றார்கள்! கொலைத்தொழிலாற் பிறவுயிர்கள் படுந் துன்பத்தைச் சிறிதாயினும் ஆழ்ந்தறியும் அறிவு இருந்தால் அவர்கள் அப்படிச் செய்வார்களா? ஆகையால், இறைச்சி யுண்பவர்கள் சிறிதும் அறிவில்லாதவர்கள் என்பது பெறப்படுகின்றதன்றோ? பிற வுயிர்களைக் கொன்று அவற்றின் ஊனை உண்டு பிழைக்கும் புலி, அரிமா முதலான வல்விலங்கின் கொடுமையையும் அறிவின்மையையும், புற்பூண்டு தழை வைக்கோலைத் தின்று பிழைக்கும் யானை, குதிரை, மாடு முதலிய மெல்விலங்குகளின் அமைதியையும் அறிவுடைமையையுஞ் சிறிது கருதிப் பாருங்கள்! சுவை தெரிந்து உண்ணப் படும் மெல்லிய இனிய காய்கறி உணவுகளால் உயிர்களுக்கு அறிவு மிகுதிப்படுமாகலின், வாயுணர்வினை இம்முறையால் அறிந்து நுண்ணிதாக்கவே அதனால் மனவுணர்வும் நுண்ணிதாகி மனவெளியிற் பொருந்தி முக்கால நிகழ்ச்சிகளையும் அறியவல்லதாகும்.
இனி, மூக்குணர்வும் பரும்படியாக நடைபெறவிடாமல் அதனை நுட்பப்படுத்தல் வேண்டும். இப்போது நிலஉலகில் உள்ள மக்களிற் பெரும்பாலார்க்கு இவ்வுணர்ச்சி மிகவும் மழுங்கிக் கிடக்கின்றது. மக்களினுந் தாழ்ந்த சிற்றுயிர்கள் மாட்டுக் காணப்படும் இவ்வுணர்வின் சுருசுருப்புக்கூட மக்களிடத்தில்லாமை பெரிதும் வருந்தத் தக்கதொன்றாம்! நாயானது தன் தலைவன் சென்ற வழியை மோப்பத்தால் அறிந்து அவனிடஞ் செல்கின்றது; கள்வர் திருடர் நெடுந்தொலைவில் வரும்போது அவரது வருகையை மோப்பத்தால் அறிந்து குரைக்கிறது. கண் இல்லாத எறும்புகள் மிகவுங் கருத்தாய்த் தொலைவில் வைக்கப்பட்ட நெய்க்குடுவையை மோப்பத்தால் தெரிந்துகொண்டு அதனிடஞ்சென்று அதனை மொய்த்துக் கொள்கின்றன. இங்ஙனந் தொலைவில் நிகழும் நிகழ்ச்சிகளையும் வெறு மோப்பத்தால் அறியும் ஏழையும் உயிர்களின் அறிவுகூட மக்களிடங் காணப்படாதிருக்க, இவ்வேழை மக்கள் தம்மை உயர்வாகக் கருதி இறுமாந்திருத்தல் என்ன தீவினை! தமக்குப் பின்னும் முன்னும் பக்கத்தும் வரும் இடர்களையே அறிய வலியற்றவர்களாய் இருக்கின்றார்கள்! தம்மைச் சுற்றிலும் மிகவுந் தீநாற்றஞ் சூழ்ந்து கொண்டு தம் உயிரின் வலிவை உரிஞ்சிக் கொண்டிருக்கவும், அதனை உணராமல் மூக்குணர்வு மழுங்கிக்கிடக்கும் இவர்கள் நிலைமை மிகவும் இரங்கற்பாலது! எனவே, மூக்குணர்வினை நுட்பப்படுத்திச் சுற்றிலும் நிகழும் நிகழ்ச்சிகளை நாற்றத்தின் வாயிலாக உணர்ந்துவரின், அதனால் மனவெளி நுட்பமாகி மனவெளியைப் பொருந்தி நெடுந் தொலைவில் உள்ளவற்றையும் எளிதிலே அறியும்.
இனிக், கண்ணுணர்வினையும் பருப்பொருட் காட்சியினின்றும் மேல் எழச்செய்து நுண்பொருட் காட்சியிற் பழக்கிவரல்வேண்டும். பருப் பொருள்களான கல், மண் முதலியவற்றைக் காணுமிடத்தும், அவற்றில் மிகச் சிறிய பொருள்களை உற்றுப்பார்க்கப் பழகுக. முதலில் அழகிய சிறு கூழாங் கல்லைச் சிலநாள் உற்றுப்பார்த்தும், அதன் பிற் சிறிய மண்துகள் பொற்பொடி முதலியவற்றிற் பார்வை வைத்தும், அதன்பின் தாமரையிலைமேல் நீர்த்துளியை விட்டு அதனை நோக்கியும், அதன் பின் விளக்கின் கொழுந்தைக் கருத்தூன்றிப் பார்த்தும் இங்ஙனம் முதன் மூன்று உள்பொருள்களை நோக்கும் முகத்தாய் கண்ணுணர்வினை நுட்பப்படுத்தி வரல்வேண்டும். எல்லார்க்குங் கண்ணானது மிகச் சிறந்த உறுப்பாகையால், அதனைச் சடுதியிலே நுட்பப்படுத்த முயன்றால் பன்னாளும் பருப்பொருளிலேயே பழகிய அதனுணர்வு, திடீரென நுண்பொருட் காட்சியிற்றிரும்புதலால் மழுக்கம் அடைந்து கெட்டுப்போனாலும் போகும். ஆதலால், இதனை நுண்பொருட் காட்சியிற் பழக்குவது படிப்படியாக நிகழும்படி மிகவுங் கருத்தாக மெல்லெனச் செய்துவரல் வேண்டும். ஆனதுபற்றியே, துவக்கதிற் கல், மண் முதலான நிலத்துப் பொருள்களிலும், அதன்பின் நீர்த்துளி நெய்த்துளி முதலான நீரியற் பொருள் களிலும், அதன்பின் விளக்கொளியாகிய தீப்பொருளிலும் பழக்கி வரும்படி கூறினாம். இங்ஙனம் முதன்மூன்று பொருள்களிற் பழகி வந்தபின், கட்புலனுக்குத் தென்படாத இடைவெளியை உற்று நோக்கத் துவங்குக. புறப்பொருள்களில் இடை வெளியை உற்றுநோக்குதல் ஒன்றே கண்ணுணர் வினையும் அதன் வாயிலாக மனவுணர்வினையும் நுட்பப்படுத்துதற் குரிய மிகச் சிறந்த பழக்கமாகும் என்று உணர்மின்கள்! இவ்வாறு கண்ணுணர்வினை நுட்பப் படுத்திய பிறகு நெடுந்தொலை விலுள்ள பருப்பொருள்களை உற்று நோக்கவும், அதன்பின் தொலைவிலுள்ள நுண்பொருள்களை உற்றுநோக்கவும் பழகி வருக. இதிற் பழக்கம் முதிர்ந்தபின், நிலாக் காலத்து இரவில் நுண்ணிய பொருள்களை நோக்கப் பழகிவரல் வேண்டும் அதுவுங் கைவந்தபின் நிலவில்லாத இருட்காலத் திரவில் முதலிற் பருப்பொருள்களையும் அதன்பிற் சிறுபொருள் களையும், அதன்பின் மிகச்சிறிய பொருள்களையும், அதன்பின் நுண் பொருள்களையும் உற்றுநோக்கிப் பழகி வருக. இங்ஙன மெல்லாம் பழகிக் கண்ணுணர்வு நுட்பமாய் வலுப்பட்ட பின்னர், அக் கண்ணுணர்வு தொலைவிலும் அருகாமையிலும் உள்ள எவ்வகைப்பட்ட பொருள்களையுங் காண வல்லதாகும். ஏனைமக்களின் கண்ணுணர்வுக்குப் புலனாகாதனவும் இங்ஙனம் பழகினவர் கண்ணுணர்வுக்கு எளிதிற் புலனாம். இது கைவந்தவுடனே பார்வை செல்லாமற் நடுநின்று மறைக்குஞ் சுவர் மலை, காடு நாடு முதலியவற்றிற்கு அப்பாலுள்ள பொருள் களையுந் தாம் காண்பதாகத் தமது கட்பார்வையினை ஒரு முகமாக வைத்து எண்ணிவரப் பழகுக. இப் பழக்கம் முதிர்ந்தபின் அது கைவரப் பெற்றவர் ஒரு தேயத்தில் ஓரிடத்திலிருந்தே எத்தேயத்தும் எவ்விடத்தும் நிகழும் நிகழ்ச்சிகளை யெல்லாங் கண்டுணர வல்லராவர்.
இனிச், செவியுணர்வினை நுட்பப்படுத்தப் பழகுதல் கண்ணைப் பழக்குதலினும் எளிதாவதாம். கண்ணுணர்வு மிக நுண்ணிய பொருள்களைக் காணும்படி பழக்குங்கால் படிப்படியே செல்லாவிட்டால், கண்ணுறுப்புத் தன்நிலை குலைந்து கெடும். மற்றுச் செவியோ நுண் ஒலிகளைக் கேட்கும்படி பழக்கப்படுவதிற் சிறிதுங் கெடாது. ஆகையால், அருகே தோன்றும் நுண்ணொலிகளையுந் தொலைவே தோன்றும் நுட்ப ஓசைகளையுங் கருத்தூன்றிக் கேட்டலில் அச்சமின்றி யாரும் பழகலாம். ஏனையோர் செவிகளுக்குப் புலனாகாத மிக நுண்ணிய ஒலிகளையுந் தாங் கேட்பதாக எண்ணி ஒரு தொடர்பாகப் பழகிவரவே சில காலத்துள் எல்லாம், அருகிற் சில சிற்றுயிர்கள் இடும் ஒலிகளுந் தொலைவிற் றோன்றுஞ் சிற்றொலி பேரோசைகளுந் தெளிவாக வந்து செவிப் புலனிற்றோன்றும். இவ்வரிய பேறு கைவரப் பெற்றமை யினாலன்றோ தவவொழுக்கத்தில் மேம்பட்ட புலவர் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ள தம் மாணாக்கர்களைக் குறித்துச் சிலவற்றைச் சொல்ல அச் சொற்களை நெடுந்தொலைவிலிருந்த அவர்கள் கேட்டு அவ்வாறே ஒழுகுதலும், ஒரு பெரிய இடரிலே அகப்பட்டுத் தத்தளிக்கும் ஒருவர் கூவியழுத சொற்களை நெடுந் தொலைவிலிருந்த முனிவர்கள் கேட்டு விரைந்து வந்து அவரை அவ்விடரினின்று மீட்டலும் நிகழா நிற்கின்றன. இங்ஙனஞ் செவியுணர்வு நுட்பப்படுத்தப்பட்ட வுடனே புறத்தே செயற்பாலனவாம் நுண்ணிய பழக்கங்கள் முற்றுப்பெற்றன வென்று அறிதல் வேண்டும்.
இதுகாறுங் கூறிய பொறியுணர்வுகளைப் பழக்கும் முறைகள் இவற்றிற் பழகி அறியாதார்க்குப் பழக அரியனபோற் காணப்படுமாயினும், மிகவும் பருப்பொறியாகிய மெய்யினை நுண்ணிய ஊற்றுணர்விற் பழக்கத் துவங்குவார்க்கு அதனைத் துவங்கும்போதே அஃது எளிதாயும் மகிழ்ச்சி தருவதாயுங் காணப்படும். இன்னும், ஒரு பொறியுணர்வினை நுண்ணிதாக்கவே ஏனைப் பொறியுணர்வுகளுந் தாமாகவே நுண்ணிய நிலையினை அடையத் துவங்குமாகலின், ஒரு பொறியுணர்வினை நுண்ணிய நிலையிற் பழக்கியபின் ஏனைப் பொறியுணர்வுகளையும் அந்நிலையிற் கொண்டுபோய்விடுவது மிக எளிதிலே கைகூடற் பாலதொன்றாய் முடியுமென்று உணர்க. அஃது எதனாலென்றால், ஐம்பொறிகளும் வேறு வேறியற்கை யுடையனவாயிருப்பினும், அவ்வைம்பொறிகளினுஞ் சேர்ந்து நின்று அறியும் மனவுணர்வு ஒருகாற் பதப்படத் துவங்கியபின், ஏனைப் பொறிகளின் வழியேயும் அது பின்னும் பின்னும் பதமெய்துதல் எளிதிலே கைகூடி வருதனாலென்றுணர்க. இனி, ஐம்பொறி யுணர்வுகளொடு கூடிய மனவுணர்வினை ஒருகாலத்து ஓரிடத்து வைத்தே நுட்பப் படுத்தி அவ்வாற்றால் எல்லாவுணர்வுகளையும் ஒருங்கே நுட்பமாக்கும் அரசியற் றவமுறை, மெய்க் குரவனை எதிர்ப்பட்டு அவனறிவுக்கும் அறிவுமொழி பெறும் நல்வினை வாய்ந்த மிக முறுகிய மனநிலை யுடைய மாணாக்கருக்கன்றி ஏனையோர்க்கு வாயாதாகலின், யாம் ஈண்டு எடுத்துக் கூறிய முறைகளே எத்திறத்தவரும் படிப்படியே பழகித் தம்முணர்வுகளை நுட்பப்படுத்திப் பயன் பெறுதற்கு ஏற்பனவாமென்று கடைப்பிடிக்க, இங்ஙனம் மெய், வாய், கண், மூக்குச், செவி என்னும் ஐம்பொறிகளின் வழியே புறத்துச்செல்லும் மனவுணர்வினை நுட்பம் ஆக்கியபின், அகத்தே செல்லுங்காலும் அது மேலு மேலும் நுட்பமாகும் படி அதனைப் பழக்கி வருதல் வேண்டும். அகத்தே மனவுணர்வு நடைபெறுங்காலத்து அஃது அமைதியுற்று நுணுகாமல், வருத்தங், கவலை, அச்சஞ், சினம், பொறாமை, அவா முதலான பல தீய தன்மைகளால் தாக்கப்பட்டு, நிலைகலங்கி வலிவுகுன்றிப் போகின்றது. இவ்விழிந்த தன்மைகளின் இயல்பையும் இவற்றின் சேர்க்கையால் ஆவியின் வலிவு குறைந்து போதலையும் யோகநித்திரையைப் பற்றிப் பேசிய எமது நூலில் மிக விரித்து விளக்கியிருக்கின்றேன்; அவற்றை அணுகவிடாமல் உள்ளத்தை ஒருநிலைப் படுத்தும் வகை யினையும் அங்கே காட்டியிருக்கின்றேம். அம் முறைகளை நன்றாக நினைவில் இருத்தி அவற்றின்படி நடந்துவரின் மிக எளிதிலே உள்ளமானது ஒருநிலைப்படும். இன்னும் மனிதவசியம் என்னும் எனது நூலிலும் நினைவை ஒரு வழி நிறுத்தல் என்னுந் தலைப்பின் கீழ்ச் சொல்லிய முறைகளும் பெரிதும் நினைவு கூர்ந்து பழகற் பாலனவாம்.
இனி, இவ்விடத்தும் இதற்குரிய முறைகள் சிலவற்றை எடுத்துக் கூறுவாம்; இழிந்த தன்மைகளுள் எதுவும் வந்து நுழைய வொட்டாமல், எந்நேரமும் நமது உள்ளத்தை நல்நினைவிற்கு இடமாம்படி செய்தல் வேண்டும் தெளிந்தோடும் ஒர் யாற்றுநீரானது, சாக்கடை நீரின் சேர்க்கையால் அழுக்குற்று அருவருக்கத் தக்கதாய் விடுதலும், மலைப் பாறைகளிலிருந்து முத்து முறியென ஓடிவரும் இனிய நீரின் கலப்பால் மிகத் தெளிந்து விளங்குதலும் போலத், தீய நினைவுகளின் சேர்க்கையால் தெளிவான உள்ளமும் அழுக்குப்பட்டுக் கலங்கலாதலும், நல்நினைவுகளின் கூட்டுறவால் அது மேலுமேலுந் தூய்மை எய்தி விளங்குதலும் நேர்கின்றன. முடைநாற்றம் வீசுந் தீய பொருளொடு கூடிக் கலங்கல் அடைந்த நீர் தன்னை அடுத்துள்ள பொருள்களையுந் தன்கண்ணே காட்டமாட்டாது; அதுபோலத் தீய நினைவின் வழிப்பட்டுக் கலங்கல் எய்திய உள்ளத்திற்கும் அருகே நிகழும் எண்ணங்களுந் தோன்றாது மறையும். அதுவேயுமன்றி அது நினைவுவலிமையினையும் வரவர இழந்துவிடும். அங்ஙனமின்றி, நன்னினைவொடு பொருந்தி நின்ற உள்ளமோ தெளிவுபெற்று நிற்றலால், அதன்கண் அடுத்து நிகழும் எண்ணங்கள் மட்டுமேயன்றி மிகவுந் தொலைவிற் றோன்றும் எண்ணங்களும் விரைவிலே வந்து தோன்றாநிற்கும்; முற்காலத்தும் இக் காலத்தும் இனிவருங் காலத்தும் நிகழும் நிகழ்ச்சிகள் அத்தனையுந் தெளிவுள்ளம் உள்ளவனுக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெற்றென விளங்கா நிற்கும். ஆகையால், இத்துணைச் சிறந்த முக்கால வுணர்ச்சியாகிய அரும்பெரும் பேற்றை அடைய விரும்பும் நல்வினையுடையார் ஒவ்வொரு வருந் தமது மனத்தைத் தெளிவுபட வைத்தலாகிய அரும்பெரு முயற்சியை அடுத்தடுத்துச் செய்துவரல் வேண்டும்.
இனி, நன்னினைவின்வழியே உள்ளத்தை வைத்துப் பழக்கும் முறைதான் யாதோவெனின்; அதனையும் ஒரு சிறிது இங்கே விளக்கிக் காட்டுவாம். இன்பந் தராத நினைவுகளைப் பற்றிநிற்கும்படி மனத்தை ஏவினால் அதற்கு அஃது எளிதிலே மடங்கி நில்லாமல் வருத்தத்தை விளைவிப்பதோடு, இத்தன்மையவான பழக்கங்களில் அவனுக்கு வெறுப்பினையும் பின்னர்த் தோற்றுவிக்கும். ஆகவே, அதனை அங்ஙனம் பழக்குவதற்கு முயலல் ஆகாது. இயல்பாகவே அஃது எந்த நன்னினைவை மகிழ்வொடு பற்றி நிற்குமோ அதனை அறிந்து அதன்கண்ணே அதனைப் படிவித்தல் வேண்டும். அங்ஙனம் அஃது இயல்பாகப் பற்றி நிற்கும் நினைவுகள் தாம் யாவையோவெனின், அவை அதற்கு ஆரா மகிழ்ச்சியினையும் பெருங்களிப்பினையுந் தோற்று விப்பனவேயாம் என்க. மகிழ்வினையும் உள்ளக் கிளர்ச்சியினையும் ஒவ்வொருவர்க்கு ஒவ்வொரு வகையாற் பிறப்பிக்கும் நன்னினைவுகள் பற்பல இருப்பினும், அவை எல்லாவற்றுள்ளும் அழகு, அறிவு, அன்பு என்னும் மூன்று தன்மைகளைப் பற்றிய நன்னினைவுகளே எல்லார்க்கும் எவ்விடத்தும் எக்காலத்தும் பெருங் களிப்பினைத் தருவனவாமென்பது அனைவரானும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையேயாம். அழகு முதிரச் சலவைக்கல்லில் திருத்திய ஒர் அரிய வடிவத்தையேனும், இயற்கை நிறங்கள் முகிழ்த்துத் தோன்ற ஓவியக்காரன் முனைப்பாகத் தீட்டிய ஓர் இனிய ஓவியத்தின் உருவத்தையேனும், அழகு கனிந்தொழுக உலவுஞ் சிறுவர் சிறுமியரையேனுங் கண்டு களிப்படையாதார் உளரோ? அமைந்து நிரம்பின கல்வியுடையோன் தோண்டுந்தோறுஞ் சுரக்குஞ் தெண்சுவைத் தண்ணீரைப்போல் நூற்பொருளை எடுத்து உரைக்குந்தோறும் விரிந்து விரிந்து புலப்படாநின்ற அறிவின் அருமை பெருமைகளைக் கண்டு வியந்து மகிழாதாருண்டோ? எல்லா உயிர்களிடத்துங் கரைகடந்த இரக்கம் உடையோனாய் அவற்றின் துயர்கண்டு பொறாமல் தன்னை வருத்தியேனும் அப்பிறவுயிரின் துன்பந் துடைத்து, அருளொழுக்கமே தன் உயிரொழுக்கமாய் மேற்கொண்டு, இங்ஙனம் எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் எழப் பெற்றமையானே இளகிய மென்னெஞ்சொடு எல்லாம்வல்ல இறை வனிடத்தே என்பெலாம் நெக்கு நெக்குருகி ஒன்று பட்டு நிற்கும் பெரியோன் அன்பிற்றிறத்தைக் கண்டு பிறிது பட்டு அன்புடையராகாரும் உண்டோ? சொல்லுமின்! எனவே அழகு, அறிவு, அன்பு என்னும்மூன்றினையும் பற்றி நினைக்குமிடத்தெல்லாம் மக்களெல்லார்க்கும் இயற்கையாகவே மகிழ்ச்சி எழ, அவர் உள்ளமும் எளிதிலே அந்நினைவின் வழிப்பட்டு நிற்றலால் இம்முறையால் உள்ளத்தைத் தெளிவுபெறச் செய்தலே எளிதான முறையாமென்பது இனிது பெறப்படும்.
இனி, அழகு அறிவு அன்பு என்னும் மூன்றும் பண்புகளே யன்றிப் பண்புகளையுடைய பொருள்கள் அல்ல. பண்புகளை எவ்வளவுதான் நினைப்பினும் அவை மக்கள் உள்ளத்திற்குப் புலப்படமாட்டா. பண்புகளை நினைக்கப் புகுந்தால், அப் பண்புகள் தோன்றாமல் அப் பண்புகளையுடைய பொருளே நினைவில் வந்து தோன்றும். முல்லைப் பூவின் மணத்தை நினைக்கப்புகுந்தால் அந்த மணம் மட்டும் நினைவுக்கு வராமல் தன்னையுடைய பூவொடு கூடியே அது நினைவில் எழும். வாழைக்கனியின் சுவையை நினைக்கப்புகுந்தால் அச்சுவை மட்டுந் தனித்து நினைவில் எழாமல் அது தன்னையுடைய அக்கனியொடு கூடியே நினைவிற் றோன்றா நிற்கும். மேலும், முல்லைப்பூவின் மணமும் வாழைக் கனியின் சுவையும் அப்பொருள்களைத் துய்த்துப் பார்ப்பவர்க்கே யல்லாமல் மற்றையர்க்குச் சிறிதும் விளங்க மாட்டா; ஏனென்றால் அந்த மணமும் அந்தச் சுவையும் முல்லை வாழை என்னும் அப்பொருள்களின் வழியாகவன்றி வேறு தனித்து நின்று துய்க்கப்படுதல் எங்கும் இல்லை. இதுபோலவே, அழகு என்னும் பண்பை நினைக்கப்புகுந்தால், அப் பண்பு தனித்து நில்லாத தொன்றாகையால் அதனையுடைய ஏதேனுமொரு பொருளையே நினைக்க வேண்டிவரும்; அறிவு என்னும் பண்பை நினைக்கப் புகுந்தால் அதுவுந் தனித்து நில்லாத பண்பேயாகலின் அதனையுடைய அறிஞன் ஒருவனையே நினைக்கவேண்டி வரும்; இங்ஙனமே அன்பு என்னும் பண்புந் தனியே நினைக்கப்படுவ தல்லாமையால் அதனை நினைக்குமிடத்தெல்லாம் அன்புள்ள ஒருவனையே நினைக்க வேண்டி வரும் என்க. அதுவேயுமன்றிப், பண்பு பண்பையுடைய பொருளும் எவ்வாற்றானும் பிரிவுபடாமல் ஒன்றுபட்டே நிற்கும் இயல்புவாய்ந்தனவாம்; பண்பு அழிந்தால் அதனோடு ஒன்றாயுள்ள பண்பியும் அழியும், பண்பியழிந்தால் அதனின் வேறல்லாத பண்பும் அழியும். ஆகவே, பண்பிப் பொருளினும் பண்பே நுண்ணியதாகலின் அப் பண்பை மட்டுமே நினைவிற்குக் கொண்டுவர முயல்வே மென்றுங், கடவுளை முகங்கைகால் முதலான உறுப்புகளுடைய ஓர் உருவப் பண்பிப் பொருளாக வைத்து வணங்கக் கடவேம் அல்லமென்றும் உரைப்பார் உரை ஒரு சிறிதும் பொருந்தமாட்டாதென் றுணர்க. பண்புகளை நினைக்கப் புகுவார் எல்லார்க்கும் அப் பண்புகளின் வேறல்லாத பொருள் உடனே நினைவிலெழப் பெறுதல் மாறா இயற்கையாக இருத்தலின், மிக நுண்ணிய பண்பு நிலையில் வைத்துக் கடவுளை வழிபடுவே மென்பார்க்கும் அப் பண்புகள் திரண்ட பிழம்பான கடவுளின் றிருவுருவம் அவருள்ளத்தில் தோன்றாமற் போதல் இல்லை யென்க. பண்பென்றும் பண்பியென்றும் வேறு பகுத்துணர்தற் கியலாமற் பிரிவின்றி நிற்கும் ஒரு பொருளிற் பண்பை மட்டும் நினைக்கப் புகுவேம் என்றும், பண்பியை மட்டும் நினைக்கப் புகுவேமென்றுந் தமக்குத் தோன்றிய வாறெல்லாம் பொருளினி யற்கைக்கு மாறாகப் பேசுவோர் உண்மை தெரியமாட்டாத மடவோரே யாவர். அங்ஙனமன்று, பண்பு பண்பியினின்று பிரியாதாயினும், நினைவின்கண் அதனைப் பிரித்து நினைக்க மாட்டுவே மெனின்; எப்பொருள் எத்தன்மையதாயிருக்கின்றது, அப் பொருளை அத்தன்மைபட நினைதலே மெய்ந்நினைவு அல்லது சத்தியபாவனை யென்று சொல்லப்படும்; இவ்வா றன்றி ஒரு பொருளை அப்பொருளின் கண் நிகழாத நிகழ்ச்சி பற்றி நினைப்பது பொய்ந் நினைவு அல்லது அசத்தியபாவனை யென்று சொல்லப்படும். இனி, மெய்ந் நினைவு உண்மையான மெய்ப்பயன்களைத் தருவது போலப், பொய்ந் நினைவு மெய்ப் பயன்களைத் தராது பொய் படுமாகலின், கடவுளை வெறும் பண்பளவாகக் கொண்டு வழிபடுவே மென்பார்க்கு, அவரது வழிபாடு கடவுளியல்பொடு மாறுபட்ட பொய்வழிபாடாய்ப் போதலின், அவர் அப்பொய் வழிபாட்டால் இம்மை மறுமைப் பயன்களில் ஒரு தினைத்தனையும் பெறாரென்பதே முடிபு. ஆகவே, இவ்வியல்பினரான பொய்யறிவினர் இறுமாந்து உரைக்கும் பொய்யுரை ஈண்டுக் கருதற்பால தன்றென விடுக்க, எனவே, அழகு அறிவு அன்பு என்னும் பண்புகளை நினைக்கப் புகுந்தால் அப் பண்புகளையுடைய பொருள்கள் தாமே நினைவிற் றோன்றும் என்று உணர்க.
இனி, அழகு என்பது பெரும்பாலுங் கண்ணறிவைப் பற்றி நிற்கும் ஓர் இனிய தன்மையாகும்; இஃது ஏதேனும் ஒரு பொருளைப் பற்றி நிற்பதன்றித் தனித்து நில்லா தாகையால், இதனை நினைவுக்குக் கொண்டுவருமிடத்தும் இது பற்றி நிற்கும் பொருள்களையே நினைத்துப் பார்க்கப் பழகிவரல் வேண்டும். வான் அளாவித்தோன்றும் மலைகளை யேனும், எல்லையின்றி விரிந்து கிடக்குங் கடலையேனும், மடமான் தொகுதிகள் அச்சமின்றி யுலவுங் காடுகளையேனும், இன்னும் இவைபோன்ற நிலத் தோற்றங்களையேனும் நினைவிற் கொண்டுவந்து பயிலல் வேண்டும். இங்ஙனஞ் சில நாட்கள் பழகிய பிறகு திருத்தமாகச் செய்யப்பட்ட கல்வடிவுகளையும், அருமையாக வரையப்பட்ட ஓவியங்களையும் அகக் கண் எதிரே கொண்டுவந்து நோக்குக. அதன் பின்னர் அழகின் மிக்க ஆடவர் மகளிர் என்னும் இருதிறத்தாரில் எவரையேனும் அடிக்கடி நினைவிற் கொண்டுவருக. உயிரில்லாத ஏனைத் தோற்றங்களை அகக்கண்ணிற் பார்க்கும் பழக்கத்தினும், உயிரொடு கூடிய உருவங்களை நினைக்கும் பழக்கமே சிறந்ததாகும்; இனிஉயிரொடு கூடிய உருவங்களுள்ளும், அறிவில் மிக்கவற்றின் உருவங்களை நினைத்தலே மிகச் சிறந்ததாகும்; இனி அறிவின் மிக்க உயிர் வடிவங்களினும் அவ்வறிவோடு அன்பும் மிக்க உயிர் வடிவங்களை நினைவிற்கொண்டு வருதலே அதனினும் மிகச் சிறந்த பழக்கமாகும். அழகு அறிவு அன்பு என்னும் மூன்றொடு தெய்வத் தன்மையும் வாய்ந்த உயிர் வடிவை உணர்ந்து இன்புறுவது அதனினும் மிகச் சிறந்த பழக்கமாகும். திருஞானசம்பந்தப் பிள்ளையார் திருவுருவம், அழகு அறிவு அன்பு என்னும் மூன்று தன்மைகளொடு குழந்தைப் பொழுதே எல்லா அறிவும் முதன்மையும் நிரம்பின தெய்வத் தன்மையும் பொருந்தப்பெற்ற விழுப்பம் உடையதாகலின், அவ்வருமைத் திருவுருவை இடையறாது நினைவிற் கொண்டுவந்து பழகும் நற்பெரும் பழக்கம் மனவுணர்வை நுட்பமாக்குதற்கு மிக இயைந்த தொன்றாமென்பது கடைப்பிடிக்க.
இனி, எல்லையற்ற அழகும், எல்லையற்ற அறிவும், எல்லையற்ற இன்பமும் உடைய உயிர்ப்பொருள் கடவுளை யன்றி வேறொன்றும் இல்லையென்பது திண்ணமாகலானுங், குற்றம் என்பது அணுத்துணையும் இல்லாத அறிவுடைய உயிர் கடவுள் ஒன்றே என்னும் உண்மை எல்லார்க்கும் ஒப்ப முடிந்த தொன்றாகலானுந், தமதுணர்வை மிகவும் நுண்ணிதாக்க வேண்டும் என்னுங் கருத்துடையார் எல்லாருங் கடவுளின் திருவருளுருவை எந்நேரமும் ஒழிவின்றி நினைவுகூர்ந்து வரல்வேண்டும். இங்ஙனம் நினைக்குங் காலும் அவ்வருளுருவை எல்லா அழகும் எல்லா அறிவும் எல்லா இன்பமும் நிறைந்து ஒளிதுளும்புந் திருந்திய வடிவினதாக நினைந்து, அந் நினை வின்கட் பெரிதும் இன்புறுதற்குப் பழகுக. இப் பழக்கங் கைவந்து உயிரின் நினைவு அதிற்றோய்ந்து அவ்வண்ணமாயபின் எக்காலத்து நிகழ்ச்சிகளையும் எவ்வுலகத்து நிகழ்ச்சிகளையும் அஃது எளிதிலே ஒருங்குணர வல்லதாகும். இவ்வருளுருவ வழிபாட்டில் தலை நின்றவர் யாவரே யாயினும் அவர் அழகு அறிவு அன்பு என்னும் அவ்வருமைத் தன்மைகள் நிறையப் பெற்றவராய்த் துலங்குவர். பண்பும் பண்பையுடைய பொருளுந் தம்முட் சிறிதும் பிரிதல் இல்லாத தற்கிழமைப் பொருத்த முடையன வென்றும், அவற்றுள் ஒன்றை நினைக்கவே மற்றொன்றுந் தானாகவே நினைவில் எழுமென்றும் முன்னரே நன்கு விளக்கிக் காட்டின மாகலின், அவ் வருளுருவத்தைப் பற்றிய நினைவானது தன்னுட் பொதிந்த அவ்வருமை இயல்புகளைத் தானே தோற்றுவிக்கு மென்பது மறுக்க ஏலாத உண்மை நிகழ்ச்சியேயாகும். இக் காலத்து உளநூற் புலவர்கள் ஆராய்ந் துரைக்கும் முடிபுகளும் பொருளை நினைக்கும் நினைவு அப்பொருட் பண்புகளையும் உடனே தோற்றுவிக்குமென நாட்டுகின்றன. அறிஞரான ஜிபோட்டோ என்னுந் துரைமகனார் தொலைவிலுணரும் நிகழ்ச்சிகளைப் பற்றித் தாம் ஆராய்ந்த பலவற்றுள் ஒன்றைப்பற்றிப் பின்வருமாறு கூறுகின்றார்:-
பி. என்னும் பெருமாட்டியார் தமக்குள்ள தலைநோயைப் பற்றி என்னிடம் முறையிட்டார். யான் எனது கையை அவ் வம்மையாரின் நெற்றிமேல் வைத்தேன், சில நேரங் களிலெல்லாம் அவர் ஓர் இழைந்த அறிதுயில் வரப்பெற்றார்; அவ்வுறக்கத்தை மிகுதிப்படுத்தாமலே யான் அவரிடத்தில் அமைதியையும் நலத்தையும் பற்றிய உணர்வை எழுப்ப முயன்றேன்; அதற்கு, முதலில் என்னிடத்தே அவ்வுணர்வை எழுப்புவித்துக் கொள்ள வேண்டிக், காற்றுந் தண்ணீரும் பகல் வெளிச்சமும் நிரம்பி விளக்குங் கடற் காட்சியினை என் நினைவிற் கொண்டுவந்தேன். அங்ஙனம் யான் என்னுள் உணரத் துவங்கிய வுடனே, அம் மாதரார் ‘யான் இப்போது சிறிது நலமாயிருப்பதாக உணர்கின்றேன்; காற்று எவ்வளவு குளிர்ச்சியா யிருக்கின்றது! என்று கூறினார். அதன்பிறகு யான் பூல்வார்டு செயிண்டு மிக்கல் என்னும் இடத்திற் சிறிது துளிக்கும் மழையில் நடப்பதாக என்னுள் எண்ணப் புகுந்தேன்; அவ்வாறு எண்ணவே, விரைந்து செல்லும் மக்களையுங் குடைகளையும் என்னுட் காண்பே னாயினேன். உடனே அந்த அம்மையார் ஈது என்ன புதுமையா யிருக்கின்றது! யான் பூல்வார்டு செயிண்டு மிக்கல் என்பதன் கோடியில் இருப்பதாக எனக்கு ஒரு தோற்றமுண்டாகின்றது. மழை பெய்கிறது; மக்கள் மிகுதியாயிருக்கிறார்கள்; கூட்டமாய் விரைந்து செல்லுகிறார்கள். அவர்களெல்லாருந் தெருவின் மேற் செல்லு கிறார்கள்; யானும் அவர்களொடு செல்லுகிறேன். காற்று மிகவுங் குளிர்ச்சியாயிருக்கிறது. அஃது எனக்கு இனிய இளைப்பாறும் உணர்வைத் தருகின்றது; என்றார். இச் சொற்களைக் கூறிய பிறகு அவர் தங் கண்களைத் திறந்தார்; தம் மனத்திற் பதிந்த அவற்றைப் பற்றிப் பின்னும் உறுதியுரை மொழிந்தார். இங்ஙனமே இத் துரைமகனார் தம்மால் உறங்கச் செய்விக்கப்பட்ட பலரிடத்துத் தாம்நினைந்த நினைவுகள் நினைந்த அளவில் தோன்றும்படி செய்து ஆராய்ந்து பார்த்த ஆராய்ச்சிகள் பல; இத்துரை மகனாரைப் போலவே இன்னும் பலரும் இவ்வாறே ஆராய்ந்து பார்த்து வருகின்றார்கள். இவ்வாராய்ச்சியில், அமைதியுங் குளிர்ந்த காற்றின் உலவுதலும் வாய்ந்த கடற்காட்சியாகிய ஒரு பொருளின் றோற்றத்தை நினைந்த அளவானே, அப் பொருட்டன்மைகளான அமைதியுங் குளிர்ச்சியும் அறிதுயிலில் அமர்ந்திருந்த அம் மாதரார்பாற்றோன்றிய உண்மை நிகழ்ச்சி பெரிதும் உற்றறியற் பாலதாம். எனவே, பொருளை நினைக்கும் நினைவு அப்பொருட் டன்மைகளையுந் தானே தோற்றுவிக்குமென்று யாம் முன்னே கூறியவுரை மறுக்கலாகாத மெய்யுரையே யாமென்பது புலப்படுகின்ற தன்றோ? உயர்ந்த பொருட்டன்மைகளைத் தம்மிடத்து வருவித்து அவற்றைத் தம் வழிப்படுத்திக் கொள்ள அவாவும் நன்மக்கள் எல்லாரும், அப் பொருள்களை ஓவாது நினைவுகூர்ந்து வருதல் இன்றியமையாத பழக்கமாகும். இதனை விடுத்து நினைக்க வராத பண்புகளை மட்டுமே நினைக்கக் கடவேமென்று மயக்கவுரை கூறி அம் மயக்கவுரையாற் பிறரை ஏமாற்றி ஒழுகுவார் சொற்களை நம்பிப் பொருள் நினைவை விட்டு இம்மை மறுமைப் பயன்களை இழக்கும் பொய்ந் நெறியிற் செல்லா வண்ணந் தம்மைப் பாதுகாக்க வேண்டுவது ஒவ்வொருவர்க்கும் இன்றியமையாத கடமையாம்.
இதுகாறும், விழித்திருக்கும்போது மனவுணர்வை நுட்பமாக்குதற்கு இசைந்த பழக்கங்களையே விளக்கிக் காட்டினாம் இனித், துயிலும் போதும் அதனை நுட்பமாக்குதற்குரிய வழிவகைகளைப்பற்றிப் பேசப் போகின்றாம். பெரும்பாலும் பாதி நாள் நமக்குத் தூக்கத்திலே கழிந்து போகின்றது. தூக்கத்திற் சென்றவுடனே உயிர்களெல்லாம் அறிவிழந்து உயிரற்ற கற்போற் கிடக்கின்றன. தூக்கத்திலே, இன்னதென்று சொல்லுதற்குக் கூடாத ஒரு பேரிருள் நமதறிவை வந்து சூழ்ந்து கொள்ளுதலை மட்டும் வழக்கத்தில் அறிந்திருக்கின்றோம். இத்தகைய தூக்கமானது ஒவ்வொரு நாளின் இராப்பொழுதிலும் நமதறிவை வந்து விழுங்க, அதனால், விழுங்கப்பட்டு அதன் வயிற்றகத்தே செயலின்றிக் கிடக்கும் நாம். அங்கே உடனிருந்து உதவுங் கடவுளின் திருவருளால் திரும்பத் திரும்ப எழுப்பப் பட்டு விழித்துக்கொள்கின்றோம். இங்ஙனம் நாடோறும் இப் பேரிருளிற் போய்த் தங்கியிருந்து வருதலினாலேதான், பகற் காலத்தில் நாம் மிக முயன்று தேடிய நம் அறிவிற்பெரும்பாகத்தை நாள் ஏற நாள் ஏற இழந்து வருகின்றோம். பகலிற்றேடிய அரிய அறிவுப் பொருட்டிரளை இரவிற் றூக்கமாகிய எல்லையற்ற இருளிலே கொண்டு போய்ச் சொரிந்து, பின்னர் அப் பொருள் முழுதுஞ் சொரிந்தவிடந் தெரியாமையால் முழுதுமெடுக்க ஏலாமற், சிறிது சிறிதே கைக்கொண்டு வருகின்றோம். விழித்திருக்கையிற் றுலக்கப்படுகின்ற நமதுயிரின் அறிவு மறுபடியும் தூங்குகையில் அப்பேரிருட் சாயலால் மங்கிப் போகின்றது. இதனாலேதான் மக்களுயிர்க்கு மறதித்தன்மை மிகுந்து காணப்படுகின்றது. ஊசி நுனையை உடம்பினுள்ளே அழுந்தச் செருகினாலும் அதனை அறியமாட்டாத அத்துணை அறியாமையொடு மெய்ம்மறந்து தூங்குகின்றவனுக்கு, விழித் திருந்தாலும் அறிவு கூர்மையுற்று விளங்காது, அவ்விடத்தே மறதித் தன்மை மிக வேரூன்றி நிற்கும் இவ்வாறு இயற்கையிலேயே அறிவிழத்தற்கு ஏதுவான அறியாமைத் துயில் எல்லா வுயிர்களிடத்தும் நிறைந்திருப்பினும், அதனை நீக்கிக்கொள்ளும் நன்முயற்சி மக்களுயிர்கள் மாட்டு மட்டுமே காணப்படுகின்றது; அங்ஙனம் மிக அரிதிற் காணப்படும் அந் நன்முயற்சியினையுங், கட்குடித்துஞ் சாராயம் மாந்தியுங் கஞ்சா அவின் தின்றும் எந்நேரமும் ஒழிவின்றிப் போக்கித், தமதறிவை மீளா இருளில் முழுகுவிக்கும் மாந்தரின் தீய புன்செயல் நிரம்பவும் அருவருக்கற் பாலதாகும். அந்தோ! இவர் தமது புல்லறிவு கொண்டு தம்மைக் கடைப்பட்ட விலங்குகளினுங் கடைப்பட்டவராக ஆக்கிக்கொள்வது கண்டு எவர்தாம் அவர் தன்மைக்கு இரங்காமற் போவர்? இயற்கையிலேயே உயிரது அறிவின் வலியை உரிஞ்சும் வல்லிருள் உயிர்களின் உள்ளத்தே அமைந்திருக்கத், திருவருளுதவியாற் சிற்சில பொழுதுகளேனும் விளங்காநின்ற சிறிய அறிவை அது தானும் விளங்கவொட்டாது கள்ளானுங் கஞ்சாவானும் மயங்கச்செய்யும் மாந்தர் ஏதுக்குத்தான் இம் மக்களுடம்பிற் பிறந்தனரோ அறிகிலம். அருட்களஞ்சியமாகிய ஆண்டவன் செயலால் விழித்திருக்கும் போது விரிந்து விளங்கும் இச்சிறிய அறிவின் உதவியைக் கள்சாராயங் கஞ்சா அவின் முதலான மயக்கப் பொருள்களாற் பாழாக்கிவிடாது, அதனைப் பண்படுத்தி அவ்வழியே சென்று தூக்கத்திலுள்ள அறியாமை வல்லிருளைத் தொலைக்க வகை தேடுதல் மக்கட்பிறவி யெடுத்தார் செய்தற்குரிய பயன்படு செய்கையாம்.
அவ்வாறாயின், தூக்கத்திலும் அறிவு நிகழும்படி செய்யவே, உயிர்களுக்கு இளைப்பாறுதல் இல்லையாய் ஒழியும்; அஃதொழியவே, உடம்பு நிலைகுலைந்து நோய்மிகும். ஆகையால், இஃது உயிர்களுக்கு அறிவு மிகுத்தற்குரிய வழியாதல் யாங்ஙனம் எனிற்; கூறுதும். தூக்கம் என்பது உயிர்கள் இளைப்பாறுதற்கு அமைந்த நிலையேயல்லாமல், அவைகள் அறிவிழந்து கிடத்தற்காக வந்ததன்று. அறிவிழந்து கிடப்பதனாலேதான் உயிர்களுக்கு இளைப்பாறுதல் கூடுமென நினைப்பது பெரும் பிழை. அறிவிழந்த நிலையே இளைப்பாறுதல் ஆகுமென்று உரைப்பின் அறிவே இல்லாத கல் மண் முதலியன எப்பொழுதும் இளைப்பாறுகின்றன வென்றும் அவற்றின் நிலை உயிர்களின் நிலையைவிட மிகச் சிறந்த தாகுமென்றும் அன்றோ கூறுதல் வேண்டும்? அங்ஙனங் கூறுதல் பொருந்தாமையின், அறிவிழப்புக்கும் இளைப்பாறு தலுக்குஞ் சிறிதும் இயைபில்லை யென்பது தெள்ளிதிற் பெறப்படும்.
அவ்வாறாயின், இளைப்பாறுதல் இன்னதென்பதும், தூக்கம் இன்னதென்பதும், ஒருசிறிது விளக்கிக்காட்டுக வெனிற்; காட்டுகின்றாம். நாள் முழுதுஞ் செலவு செய்யப்பெற்ற அறிவு விழைவு செயல்களின் முயற்சியால் உடம்பிலுள்ள ஆவி வலிமை கழிந்து போகின்றது; கழிந்துபோன அதனைத் திரும்பவும் உடம்பில் உண்டாக்கிக் கொள்வதற்குச் சும்மாயிருப்பதாகிய நிலையே இளைப்பாறுதல் என்று சொல்லப்படும். நாம் நம்முடைய முயற்சிகளைக் கழிந்து போக விடாமற் சிலநாழிகை நேரமேனும் வறிதே இருப்பமாயின், நம்முயிரிலும் உடம்பிலுங் கலந்து நின்று உதவிவரும் இறைவ னருளாற்றலானது நமக்கு வேண்டும். ஆவி வலிமையினை உடனே அவற்றில் நிரப்பிவிடும். நீர் வருங்காலும் வடிகாலும் உடைய ஓர் ஏரியானது ஓயாமல் வடிகாலின் வழியே தண்ணீரை ஒழுகவிட்டுக் கொண்டிருக்கு மாயின், அதன்கண் நீர் நிறைந்திராதென்னும் உண்மை எவரும் அறிந்ததேயாம்! நிலத்திற்கு வேண்டுமளவு நீரைப் போகவிட்டு வடிகாலை அடைத்துவைத்தால் அது வருங்காலின் வழியே மிகுந்த நீரைப்பெற்று நிறைந்திருந்து, பின்னரும் வேண்டும்போது விளை புலங்களுக்கு நீரைக் கொடுத்துப் பயன்படும். அதுபோலவே, நாம் இடையிடையே இளைப்பாறுவதனால், முன்னே செலவு செய்யப்பட்ட ஆவிவலியானது திரும்பத் திரும்ப நம்முள் நிறைக்கப்பட்டுப் பின்னும் பின்னும் நாம் வேண்டிய முயற்சிகளைச் செய்தற்கு நம்மை வலிவுடையவராக்கி வரும்.
அங்ஙனம் இளைப்பாறுதல் இன்றி ஓயாமல் முயல்வதிலேயே ஆவியைச் செலவழித்து வந்தால் முதுமைப் பொழுதாகிய வேனிற்காலம் வரும் முன்னமே ஆவிவலிமை முழுதும் வறண்டு உயிரை உடம்பினின்றும் அகலச் செய்யும். ஆனது பற்றியே, இரவில் இளைப்பாற்று தற்பொருட்டு உயிர்களுக்குத் தூக்கம் வருகின்றது. இனித், தூக்கமோ அறியாமையில் நடைபெறுகின்றதல்லாமல், அறிவொடு சிறிதும் நடைபெறக் காணோம். அங்ஙனமாயின், இளைப்பாறுதல் என்பது அறியாமையிற்றான் நிகழவேண்டுவதுபோலும் எனின், அது பொருந்தாது. தொழில் செய்து அலுத்துப்போனவர்கள் அறிவோடிருந்து இளைப்பாறுதலையும் நாம் பார்த்திருக்கின்றோமே. இன்பமான கதையைப் பிறர் ஒருவர் எடுத்துச்சொல்ல அதனைக் கேட்டு மகிழ்ந்து கொண்டே, வேலை செய்ததனால் உண்டான இளைப்புத் தீர்ந்து தொழிலாளிகள் மனக் கிளர்ச்சியோடுஞ் செல்வதை நாம் எப்போதும் பார்க்கலாமே. இன்பத்திலே நம தறிவு உறைத்து நிற்கையில் நமக்கு எவ்வகையான அலுப்புந் தோன்றாமையை நாமும் நமது பழக்கத்திற் பலகாலுங் கண்டிருக்கலாம். மக்களின் அறிவு உடம்பிலுள்ள உறுப்புகளின் வழியாகப் பலதுறையில் மாறி மாறி ஓடுவதனாலேதான் அயர்ச்சியும் இளைப்பும் வந்து மூடுகின்றன. எந்நேரமும் ஓயாமற் கல்வி பயின்று வருபவர்களுக்கு அயர்ந்த தூக்கம் வருவதில்லை, உடம்பின் உழைப்பு மிகுதியாயுள்ளவர்களுக்கே தம்மை மறந்த தூக்கம் வருகின்றது. ஆகையால், தம்மை மறந்து தூங்கும்படியான அவ்வளவுக்கு உடம்பை உழைப்பில் விடுவது அத்தன்மையாக விரும்பத் தக்கதன்று. தன்னை மறந்து தூங்குவதுதான் உடம்பின் நலத்தைப் பாதுகாப்பதற்கு வழியென்றும், ஆகவே அதனை வருவித்தற்குக் கடுமையான உழைப்புக் கட்டாயமாக வேண்டற்பாலதேயா மென்றும் பெரும்பாலார் பிழைபடக் கருதுகின்றனர். இந்த மக்கட்பிறவி எடுத்தது கடுமையாக உழைத்தற்கும் பின்னர் அதனால் அறிவின்றித் தூங்குதற்குந்தாமா? தூக்கம் மிகுதியா யில்லாதவர்களுக்கு உடம்பின் நலங் குறையும் என்றால், நன்றாய் உழைக்கும் மாடுகளுங் குதிரைகளுந் தம்மை மறந்து உறங்காமை என்னை? அங்ஙனம் உறங்காமலிருந்தும் அவை நல்ல நிலைமையோடு இருப்பதென்னை? எல்லாரும் அயர்ந்து உறங்கும் நள்ளிரவில் அவற்றின் கிட்டச் சென்றால், அவை உணர்விழந்து தூங்காமல் உணர்வோடிருத்தலைக் காண்கின்றோமே; தம்மை மறந்து தூங்குவதுபோற் காணப்படும் நாய் பூனை முதலான உயிர்களின் அருகே ஒருவர் அரவமின்றி எவ்வளவு மெதுவாய்ச் சென்றாலும் அவை உடனே எழுந்து ஓடுதலையுங் காண்கின்றோமே. நெடுநாள் உயிரோடிருந்த முதியவர்கள் தாம் உணர்வு கெட்டு உறங்கியதில்லை யென்றும், எவ்வளவு நேரந் தூங்கினாலும் நல்லுணர்வோடு கூடியேதாம் இருந்தனரென்றுந் தம் வரலாற்று நூல்களிற் கூறவுங் கேட்டிருக்கின்றோம். அப்படிப் பட்ட அம் முதியோர்களெல்லாம் நல்ல நிலைமையோடு ஒரு நூற்றாண்டுவரையில் உயிரோடிருந்தார்களென்பதும் மறுக்கப்படாத உண்மையாம். இவ்வாற்றால், நன்கு இளைப்பாறுதற்பொருட்டு அறிவிழந்த தூக்கம் வேண்டப்படுவதில்லையெனவும், உணர்வோடிருந்து தூங்குவதால் உடம்பின் நலம் பழுதுபட மாட்டாதெனவும் இனிது தெளியப் பெறுகின்றோம். மற்று, உணர்வோடிருந்து துயிலுவதால் அறியாமை நீங்கி அறிவொளி பெருகிப் பேரின்பம் மிகுந்து உயிரையும் உடம்பையும் வலுப்படுத்திப் பல்லூழிகாலம் உயிரோடிருக்கச் செய்யுமென்னும் உண்மை செவ்வையாகப் புலப்படுகின்றது.
அங்ஙனமாயின் உணர்வோடிருந்து துயின்று நன்றாக இளைப்பாறுதற்கு வழி யாது என்றால், அவ்வழியின் பாகுபாடுகளை முறையாக எடுத்துக் கூறுவாம். பகற் காலத்தில் மிகுதியாக உழைக்கின்றவர்களுக்கே இராக்காலத்தில் தம்மை மறந்த தூக்கம் வருதலால், உடம்பை மிகுந்த உழைப்பின்கண் வருத்துதல் ஆகாது. அவ்வாறாயின் உழைப்பாளிகளாய் இருக்கும் மக்களுக்கு இவ்வுயர்ந்த பழக்கங்கள் கைகூடுமாறு யாங்ஙனமெனின், அவர்களும் இவற்றைச் செய்யவிரும்பி உயர்ந்த அறிவு நிலையை நோக்குவார்களாயின் நாம் இங்கே சொல்லியவாறு உடம்பின் உழைப்பைக் குறைத்துக்கொள்ள வேண்டுவது அவர்களுக்கும் இன்றியமையாததே யாகும்; அவர்களுக்கு அவ்விருப்பமும் உயர்ந்த நோக்கமும் எளிதிலே வரமாட்டா. அவர்கள் மிகவுந் கீழேயுள்ளதாகிய பிறவிப் படியில் நிற்கின்றார்களாதலால், மேல்நிலையில் உள்ள அறிவுக் களஞ்சியத்தைப் பெறுதற்குமுன் அவர்கள் இன்னும் பல பிறவிப்படிகளைத் தாண்டிவரல் வேண்டும்.
அப்படியாயின், அவர்கள் தாமிருக்கும் நிலையிலேயே பதப்படும்படி செய்தற்கு இசைந்த முறைகள் இல்லையோ வென்றால், உண்டு; அவர்களது நிலைக்கு ஏற்பச் சில நல்லொழுக்க முறைளையும் இரக்கத்தையுங் கற்பித்து வந்தால் அவர்கள் சிறிது சிறிதாக மேலேறுவர் என்பது திண்ணம்; இம் முறைகளையுங் கூடக் கற்பியாமல் அவர்களைப் பராமுகஞ் செய்து விடுவோமாயின், அவர்கள் குடிகொலை முதலான மிகவுந் தீய செயல்களிற் பழகி மக்கட்பிறவியினுந் தாழ்ந்த பிறவிகளிற் கீழ் இறங்கிப் போகுவர்.
இனி, அவர் பின்பற்றத்தக்க முறைகள் அல்லாமையால் அவரைப்பற்றி இங்கே பேசுதலை விடுத்துப், பிறவிப் படிகளில் மேலேறிப் பதமுடையராய் வந்திருப்பார் பெரிதுங் கைக்கொள்ளற்பாலனவாகிய உயர்ந்த பழக்கங் களைப்பற்றிப் பேசப்புகுவாம். உடம்பை மிகுந்த உழைப்பின்கண் விட்டால் ஆவியின் வலிவு வீணே கழிந்து போதலுடன், அறிவைப் பண்படுத்தும் முயற்சியும் இல்லாது போகும். அதனால் அறியாமையும் நீங்காமல் உயிரைப் பற்றிபடியே கிடக்கும்; இந்த நிலையில் உள்ளவர்களுக்கு இராப்பொழுது வந்தவுடனே அறிவு மயங்கிப் பிணம்போற் கிடக்குந் தூக்கம் வந்து கூடிவிடும். ஆகவே, பிறவிப் படிகளில் எத்தனையோ ஊழிக் காலங்களாக ஏறிச் சிறிது மேல்நிலைக்கு வந்தவர்கள் நிரம்பவுங் குறிப்பாகக் கருதற்பாலது இது; பாழும் வயிறு வளர்த்தலையே பெரிதாக எண்ணி, இந்த நிலவுலகத்து வாழ்வையே நிலையாகக் கருதி, அளவுக்கு மேற்பட்ட பொருளைத் தொகுத்து வைத்தலிலேயே அவா மிகுதியாகக் கொண்டு காலைமுதல் நள்ளிரவுவரையில் ஓயாது பலதுறைகளிலும் முயன்று அல்லற் படுவதை ஒழித்து விடுதல் வேண்டும். இத்தகைய அல்லல்வாழ்க்கையால் அளவு கடந்த கவலையுந் துன்பமும் வந்து ஆவியின் வலிவை உரிஞ்சி விடுகின்றன. ஆதலால், வேண்டுமளவுக்குப் பொருள் தேடும் முயற்சியைக் கூடுமானவரையுஞ் சிறுகச் செய்து, மற்றுப் பெரும்பான்மை முயற்சியை அறிவைப் பண்படுத்தித் துலக்குவதிலேயே செலுத்துதல் வேண்டும்; அறிவால் மிக்க சான்றோர்கள் வரைந்த நூல்களை இடைவிடாது கற்றுவரல் வேண்டும். எதனைச் செய்தாலும் அதனை அறிவோடிருந்து செய்தல் வேண்டும். அச்சங் கவலை பொறாமை முதலான இழிந்த தன்மைகள் வந்து, உள்ளத்தைக் கலங்கச் செய்யாதபடி அதனைத் தெளிவாக வைத்துக் கொள்ளல் வேண்டும். இவ்விழிந்த தன்மைகளாற் பற்றப்பட்டவர்களின் உடம்பு ஆவி வலிவினை மிகுதியும் இழந்து விடுதலால், அதனால் அவர்கட்கு அலுப்பு நிரம்பவும் உண்டாகி அவர்களை அறிவில்லாத கடுந் தூக்கத்தில் அழுத்திவிடும். இத்தன்மையவான இழிந்த தன்மைகளுக்கு இடங்கொடாமல் முன்சொல்லியவாறு பழகிவரவே, இரவில் அறிவில்லாக் கடுந்தூக்கம் வருவது சிறிது சிறிதாகக் குறையும். இனிய உறக்கத்திலுங் கூட உணர்வு மிகுதியாகக் குறையாமற் சுற்றிலும் நடப்பவற்றைத் தெரிந்து கொள்ள வல்லதாகும்; அது நிற்க.
அங்ஙனம் உணர்வோடு உறங்குவது அறிவைத் தெளிவு படுத்துதற்கு இசைந்ததேயாயினும், அதனால் நன்கு இளைப்பாறுதலும் நலமுறுதலும் உண்டாகுமாறு யாங்ஙனமெனின், அதனையுஞ் சிறிது விளக்குவாம் தன்னை மறந்த தூக்கத்தில் இளைப்பாறுதல் மிகுதியாய் உண்டாவதற்கு ஏது என்னென்றால், அப்போது மக்கள் அறிவு உடம்பின் புறத்தேயுள்ள ஐம்பொறிகளிற் கலந்து நின்று புறப்பொருள்களைச் சிறிதும் அறியாமல் வேறாய் நிற்றலால் அந்நிலையில் ஆவியின் வலிவு மிகவுந் கழிவு படாமல் உடம்பில் நிறைந்து நிற்கின்றது; அங்ஙனம் நிறைந்து நிற்பது தான் இனிய இளைப்பாறுதலை உண்டாக்குதற்கு ஏதுவாகின்றது. இதனை ஆராய்ந்து பார்க்க விரும்பினால், அயர்ந்துறங்கும் ஒரு சிறு குழந்தையின் பக்கத்தே சென்று அதன் கைகால்களை மெல்லென நாம் எடுத்துப் பார்த்தல் வேண்டும்; அதன் கையை எடுத்து மேலே தூக்கும்போதும் அக் குழந்தையின் அறிவுமுயற்சி அதிற் சிறிதுந் தோயாமலிருக்கின்றது; அக் கையை மெல்லென நாம் விட்டுவிடும்போதும் அம் முயற்சி அதிற் சிறிதுமில்லாமல் அதுதானே துவண்டு விழுகின்றது. விழித்திருக்கும்போது ஒருவர் மற்றொருவரது கையை உயரத் தூக்கிச் சடுதியில் அதனை விட்டுவிட்டால், குழந்தையின் கையைப்போல் அவரது கை அங்ஙனந் துவண்டு விழாமல் உயரத்திலேயே நிற்பதைக் காணலாம். தூங்குங் குழந்தையின் கையையே அல்லாமல் நன்றாய் அயர்ந்துறங்கும் எவரது கையை அங்ஙனந் தூக்கிக் கீழே விட்டாலும் அது துவண்டு தானே கீழ் விழுதலைப் பார்க்கலாம். ஆனால், விழித்திருக்குங் குழந்தையின் கையையும் அங்ஙனமே அதற்குத் தெரியாமல் உயரஎடுத்துச் சடுதியில் விட்டுப்பாருங்கள். அது தூங்குங் குழந்தையின் கையைப் போலவே துவண்டு கீழ்விழும்; ஆனால் விழித்திருக்கும் பெரிய ஆட்கள் கையை அங்ஙனமே மேலே தூக்கிக் கீழே விட்டால் அது துவண்டு கீழ்விழாமல் மேலேயே நிற்கும். இங்ஙனங் குழந்தைகளின் கைமட்டும் விழிப்பிலும் உறக்கத்திலுந் துவண்டு கீழ் விழ, ஆண்டிற் பெரியவர்கள் கையோ அயர்ந்த உறக்கத்தி லன்றி விழிப்பு நிலையிற் றுவண்டு விழாமல் இருப்பதன் வகை என்னென்றால்; குழந்தைகளின் நினைவு எப்போதும் ஓரிடத்தி லேயே ஒரு பொருளிலேயே முனைத்து நிற்கின்றது; அதனால் அதன் நினைவு ஏதேனும் ஒன்றைப் பற்றி நிற்கும் படி செய்துவிட்டு, அதன் கைகால்களை நம் விருப்பப்படி எவ்வாறு அசைத்தாலும் அவை அவ்வாறெல்லாந் துவண்டு அசையும். ஆனால், ஆண்டிற் பெரியவர் நினைவோ ஒன்றையும் ஓரிடத்திற் பற்றிநில்லாமற் பலவகையாய் மாறி மாறி ஓடுதலால், அவரது நினைவை ஒருவழியிற் றிருப்பிவைத்து அவர்தங் கைகால்களை நாம் அசைக்குமிடத்து, அஃது அவ்வொரு நிலையில் நில்லாமல் அவ்வுறுப்புகளிலும் வந்து நிறைதலினால் அவை நாம் விரும்பியபடியெல்லாம் அசையாமல் தந் நிலையிலேயே நிற்கின்றன. மேலுங், குழந்தைகளுக்கு ஒரு நொடிப் பொழுதில் உறக்கம் வந்து கூடுதலையும், பெரியவர்களுக்கு அங்ஙனம் எளிதில் துயில்வராமையையும் ஆராய்ந்து பாருங்கள். குழந்தைகள் ஒரேநினைவாயிருத்தலால் அவ்வாறு சடுதியில் உறக்கம் வருகின்றதென்றும், ஆண்டில் பெரியவர்கள் பலகோடி நினைவுகளில் உழலுதலால் நினைத்தபடி துயில்கூடாமல் வருந்துகின்றனரென்றும் அறிதல் வேண்டும். இன்னுங் குழந்தைகள் நிலத்தே தவறிவிழுந்தால் பெரிய காயம்பட்டு வருந்தாதிருத்தலையும். பெரிய ஆட்கள் அங்ஙனம் விழுந்தாற் பெருங்காயப்பட்டு நெடுநாள் வருந்துதலையும் ஒப்பிட்டுப் பார்க்குங் காற், சிறுபிள்ளைகளின் உடம்பு எப்போதுந் துவண்ட நிலையிலும் பெரியவர்களின் உடம்பு பெரும்பாலும் எப்போதும் விறைத்த நிலையிலும் இருக்கும் உண்மை புலப்படா நிற்கும். உடம்பு துவண்டிருத்தற்கு ஏதுவாவது நினைவின் ஒருமையேயாம் என்றும், அது முறைப்பாயிருத்தற்கு ஏதுவாவது நினைவு சிதறுதலே யாமென்றும் உணர்ந்து கொள்க. ஆகவே, நினைவை ஒருவழிப்படுத்தி அஃது உடம்பின் புறத்துறுப்புகளிற் கலந்து நில்லாமல் வேறுமுகமாய் நிற்கும்படி செய்து உடம்பைத் துவண்ட நிலையில் வைத்துக்கொண்டால் மிகவும் நன்றாய் இளைப்பாறுதல் கைகூடும். மக்களினுந் தாழ்ந்த விலங்கினங்கள் தமதுடம்பை இங்ஙனம் மிகவுந் துவண்ட நிலையில் வைத்துக் கொள்வதனாலேதான், அவைகள் தம்மை மறந்த உறக்கங் கொள்ளாமலிருந்தும், மக்களினும் மிகுந்த இளைப்பாறுதலைப் பெற்று வலிவுடையனவா யிருக்கின்றன. ஆதலால், உணர்வோடு உறங்குவது மிகுந்த இளைப்பாறு தலையும் நலத்தையும் விளைவிக்குமென உணர்ந்துகொள்ளல் வேண்டுமென்க.



