தொலைவிலுணர்தல் மறைமலையடிகள்

6. மூச்சுவிடும் முறை

விரைய மூச்சுவிடும் உயிர்கள் நீண்டநாள் உயிர் வாழாமையும், மெல்ல நேரஞ்சென்று மூச்சுவிடும் உயிர்கள் நீண்டகாலம் உயிர்வாழ்தலும் உயிர்நூல் வல்லாரால் நன்காராய்ந்து சொல்லப்பட் டிருக்கின்றன. ஒரு நிமிடத்திற்குப் பன்னிரண்டுமுறை மூச்சுவிடும் மக்கள் சிறிதேறக் குறைய நூறாண்டு உயிரோடிருப்பார்கள். ஒரு நிமிடத்திற்குப் பதினாறு முறை மூச்சுவிடுங் குதிரையோ இருபத்தைந்து ஆண்டிற்குமேல் உயிரோடிருப்பதில்லை யென்று கணக்கிட்டிருக்கின்றார்கள். இங்ஙனமானால், ஒரு நிமிடத்திற்கு முப்பத்தாறு முறை மூச்சுவிடும் புறாவும் எவ்வளவு விரைவில் இறந்துபடும் என்பது புலனாகின்றதன்றோ? இனி, ஒரு நிமிடத்திற்கு மூன்றே முறை மூச்சுவிடும் யாமை நெடுங்காலம் உயிரோடிருக்கின்றதென உயிர் நூலார் ஆராய்ந் தறிந்திருக்கின்றார்கள்; ஓர் யாமை நூற்றுப்பத்து ஆண்டு உயிரோடிருந்ததை அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றார்கள். இதுவேயுமின்றி, இது நெடுங்காலம் மூச்சை அடக்கிக் கொண்டு பட்டினி கிடக்க வல்லதென்றும், மிகவும் அமைதியான இயற்கை யுடைய தென்றும் அறியப்பெறுகின்றோம். இஃது ஐப்பசித்திங்கள் இறுதியில் நிலத்தின்கீழே உறங்கப்போய்த், திரும்பவுஞ் சித்திரைத் திங்கள் முதலில் நிலத்தின்மேல் வரும் வழக்கம் உடையது. ஆகவே, ஓராண்டில் ஐந்து திங்கள் உணவும் உயிர்ப்பும் இன்றி இஃது உறங்கிக் கிடக்கின்றது. மழைக் காலத்தில் வெளியே எங்கும் உலவுவதில்லை. பால் உள்ள செடிகளின் இலைகளையே விருப்பத்தோடுந் தின்பது. இங்ஙனம் இது தவமுயற்சியிற் றலைநிற்குந் துறவோர் ஒழுக்கத்தை ஒத்ததா யிருத்தல் கண்டன்றோ தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனார்,

ஒருமையுள் யாமையோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து

என்று அருளிச் செய்தனர்! இவ்வுண்மையை உணர்ந்து பார்க்குங்கால் மூச்சை அடுத்தடுத்து ஓடவிடாமற் றடை செய்வதனால் உணவு குறைந்து உயிர்வாழ்க்கை நீளுவதோடு அறிவாற்றலும் அளவின்றிப் பெருகும் என்பதும் விளங்கா நிற்கும். இஃது எங்ஙனமெனிற் காட்டுதும்; நாம் மூச்சை உள்ளிழுக்கும் போது உயிர்க்காற்று அகத்தே செல்கின்றது; நாம் அதனை வெளிவிடும்போது நச்சுக் காற்றுப் புறத்தே கழிகின்றது. உட்செல்லும் உயிர்வளி நெருப்பினை எரியச்செய்வதாதலால், அஃதுட் செல்லுந்தோறுந் தீனிப்பையிலும் அதன் கீழும் உள்ள நுண்ணிய தீயை மிகுந்து எரியச்செய்யும். புறத்தேயுள்ள தீ மிகுந்தெரியுந்தோறும் அதற்கு விறகும் நெய்யும் இடுவது போல, அகத்தேயுள்ள தீ முறுகி எரியும்போதும் அதற்கு வலிய உணவும் நீரும் இடைவிடாது இடுதலால் அவற்றை உடம்பிற் கலப்பித்தற்கு ஒழிவின்றி இயங்கும் அகக் கருவிகள் விரைவிற் பழுதுப்பட்டுப்போக மூப்பும் இறப்பும் விரைந்து வருகின்றன. எளிதிற் செரியாத ஊனைத் தின்னும் புலி ஓநாய் முதலான உயிர்கள் தாம் உண்ட ஊனைச் செரிப்பித்துக்கொள்ளல் வேண்டி இரையெடுத்த பின் விரைந்து விரைந்து உலவுதலைப் பலர் பார்த்திருக்கலாம். அவ்வாறவை உலவுதலால், உயிர்க்காற்றை அடுத்தடுத்து உள்ளிழுக்க, உட்செல்லும் அவ் உயிர்வளி தீயைமிகுத்து அவ் ஊனை எரித்துச் செரிக்கச் செய்கின்றது. இதனால் அக் கருவிகள் விரைந்து தேய்தலின் புலி கரடி ஓநாய் முதலான ஊன் தின்னிகள் நீண்டநாள் உயிர் வாழாமல் இறக்கின்றன. சைவ உணாப்பொருள்களைக் குறைய உண்கின்றவர்கட்கு அவை எளிதிற் செரிப்பன வாய் இருத்தலால், அவர் உயிர்வளியை மிகுதியாய் உள்ளிழுக்க வேண்டுவதில்லை. அதனால் அவர்தம் உடம்பின் அகக்கருவிகள் விரைந்து இயங்காமல் மெதுவாக நடத்தலால் அவை பழுது படாமலிருந்து உடம்பை நெடுங் காலஞ் செவ்வையான நிலைமையில் வைக்கும். ஆனதுபற்றியே சைவவுணாப் பொருள்களுள்ளும் எளிதிற் செரிப்பனவற்றை வேண்டும் அளவறிந்து மெல்லச் சுவைத்து உண்ண வேண்டிய திருக்கின்றது. இவ்வாறு உணவுக்கும் அவ்வுணவைச் செரிப் பித்தற்கு உள்ளிழுக்கும் உயிர்வளிக்கும் நெருங்கிய இயைபு இருத்தலால், நல்ல உணவைக் குறைத்து உண்ணும் முகத்தால் மூச்சின் ஓட்டத்தை மெல்ல நடைபெறச் செய்தல் வேண்டும். இங்ஙனம் ஓர் ஒழுங்கு செய்துகொண்டபின், மூச்சினோட் டத்தைப் பின்னும் பின்னுங் குறைத்துக் கொண்டே வருதல் வேண்டும். ஒரு நிமிடத்திற்குப் பன்னிரண்டு முறை மூச்சு விடுதலைச் சுருக்கிப் பத்துமுறை எட்டுமுறை ஆறுமுறை நான்கு இரண்டு ஒன்றென்று ஒடுக்கிக் கொண்டுவந்து கடைசியாக மூச்சின்றியே நெடுநேரம் இருக்கப் பழகுதல்வேண்டும். இங்ஙனம் பழகாவிட்டால், இப் பழக்கத்தில் நிரம்பத் தேர்ச்சிபெற்று ஒரு நிமிடத்திற்கு மூன்று முறையே மூச்சுவிடும் யாமையைக் காட்டிலும் மிகவுந் தாழ்ந்த நிலைமையில் உள்ள மக்கள் தம்மை மேலாக நினைந்து இறுமாந்திருத்தல் எவ்வளவு பேதைமையாய் முடியும்! ஆதலால் தொலைவான இடங்களில் நிகழும் நிகழ்ச்சிகளை அறியவிழையும் உயர்ந்த நோக்கம் வாய்ந்த மக்கள் மூச்சை வரவரச் சுருக்கும் பழக்கத்திற் கருத்தொருமித்து நிற்கக் கடவராக.

இனி, ஒரு நிகழ்ச்சியைத் தொலைவிலிருந்து உணர்வோரும், அதனை அவர்க்குத் தொலைவிலிருந்து உணர்த்துவோரும் மூச்சுவிடும் இம் முறையைத் தமக்குள் இசைவு படுத்திக் கொள்ளல் வேண்டும். ஒருவர் ஒரு நிமிடத்திற்குப் பத்துமுறை மூச்சுவிட்டால் மற்றவரும் ஒரு நிமிடத்திற்குப் பத்துமுறையே மூச்சுவிடுதல் வேண்டும்; அதனிற் குறைதலும் மிகுதலும் ஆகா. இருவர்க்கும் மூச்சின் ஓட்டம் ஒத்துநின்றால் ஒருவர் நினைப்பது மற்றவர் உள்ளத்திலும் உடனே தோன்றும்; அஃதொத்து நில்லாவிட்டால் ஒருவரது நினைவு மற்றொருவர்க்குத் தோன்றாது. ஆகையால், தொலைவிலிருந்து ஒருவர் நினைவை ஒருவர் அறியவிரும்பும் இருவரும் இம் மூச்சின் ஓட்டத்தைத் தமக்குள் ஒரேவகையாய் நடைபெறச் செய்து கொள்வதொடு, மேலெடுத்துக் கூறிய பழக்கங்களிலுங் கடைப்பிடியாக நிற்றல்வேண்டும்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

எங்களது இணைப்பைப் பயன்படுத்தி அமேசானில் பொருட்கள் வாங்கி ஆதரவு அளியுங்கள்!