
தொலைவிலுணர்தல் மறைமலையடிகள்
10. பொருள்களை உணர்தல்
இனி, மேற்குறித்தவாறு சிலகாலம் பழகியபின், இடங்களை அறியும் ஆற்றல் எளிதிலே உண்டாகும். அதன்பின், இடங்களில் உள்ள பொருள்களை நினைத்து உணர்த்தவும் உணரவும் பழகத் துவங்குக. இப்பழக்கத்தின் முதலில் உருவத்தாற் பெரிய பொருள்களை நினைத்தல்வேண்டும். ஏனென்றால், மனமானது எந்நேரமுங் கண்ணின் வாயிலாகப் புறத்தே யுள்ள நிலம் மலை கடல் மரம் வீடு மாடு குதிரை யாடு மக்கள் முதலான பெரும் பொருள்களின் உருவத்தையே அறிந்து வருதலால், அப்பொருள் களில் ஒன்றனிடத்தே அஃது உறைத்து நிற்றல் வருத்தமில்லாத செயலாம். ஆகையால், தாம் இருந்து பயிலும் வீட்டின்கண் உள்ள தட்டுமுட்டுகளில் மேசை நாற்காலி பெட்டி கடாரம் முதலியவற்றில் ஒன்றை அஃது இருக்கும் இடத்தொடு நினைந்து, அந்நினைவு உணர்வோர் உள்ளத்திற் சென்று பதியுமாறு உணர்த்துவோர் உன்னிப்பாய் ஏவுதல் வேண்டும். உடனே உணர்வோர் உள்ளத்தில் அந்நினைவு புலப்படுமாகலின், அவர் அப்பொருளிருக்கும் பக்கமாய்ப் போகத் துவங்குவர், அவ்வாறு அவர் செய்கையில் உணர்த்துவோர் மிகவும் உறைப்பாய் முதலில் அப் பொருளிருக்கும் இடத்தின் முகமாய்த் தங்கண்ணையுங் கருத்தையுஞ் செலுத்திப் பின்னர் அப்பொருளின் வடிவத்தில் தமது உள்ளத்தை முனைக்க நிறுத்தக் கடவராக. இவ்வாறு செய்தால், உணர்வோர் அந்நினைவைத் தெளிவாக உணர்ந்து அவ்விடத்திற் சென்று அப்பொருளைத் தொட்டுக் காட்டுவர். முதலில் இடத்தையும் பிறகு அதன்கண் உள்ள பொருளையும் நினைக்க வேண்டுமென்றது என்னை? பொருளைமட்டும் நினைந்தாற் போதாதோ? எனின்; உலகத்தில் உள்ள எவ்வகைப்பட்ட பொருளும் ஏதேனும் ஓரிடத்திலிருப்பதன்றி, அதனை விட்டு வேறு தனியே இருக்கமாட்டாது. எந்தப் பொருளை எடுத்தாலும் அஃது எங்கேயிருப்பது? என்றும், எந்த ஆளைப் பார்த்தாலும் அவர் எவ்விடத்தில் இருப்பவர்? என்றும் எல்லாரும் வினாவக் காண்கின்றோம். ஆதலால் ஒரு பொருளை அஃதிருக்கும் இடத்தொடு சேர்த்து நினைவதே இப் பழக்கத்தில் தோச்சிபெற வேண்டுவார்க்கு முதன் முதற்செயற்பாலதாகும். ஆகவே, முதலில் இடத்தையும் அதன்பின் அதிலிருக்கும் பொருளையும் நினைவிற் கொண்டு வருக.
இவ்வாறு முதலில் இடங்களையும், பின்னர் அவற்றிலுள்ள பெரும் பொருள்களையும் உணர்த்தவும் உணரவும். பழகித் தேர்ச்சிபெற்றபின், அவ்வவ் விடங்களில் உள்ள சிறு சிறு பொருள்களை உணர்த்தவும் உணரவும் முயல்க. ஒரு செப்புக்காசை யேனும் அல்லதொரு குண்டூசியை யேனும் ஓரிடத்தில் மறைத்து வைத்து அவ்விடத்தையும் அதன்கணுள்ள அப்பொருளையும் உணர்த்துவோர் செவ்வையாக நினைத்தால், உணர்வோர் அதனைக் குறிபிழையாமல் உணர்ந்து அவ்விடத்திற் போய் அதனைக் கண்டெடுப்பர்.
இடத்தின்கண் உள்ள தட்டுமுட்டுகளையும் வேறு பல பண்டங்களையும் நினைக்குங்கால் அவற்றின் வடிவத்தையும் நிறத்தையுந் தெளிவாக உள்ளத்தே காண்க. ஏனெனில், ஒரு பொருள் மற்றொரு பொருளின் வேறென்று அறியப்படுவதெல்லாம் அப்பொருளின் வடிவத்தினாலும் நிறத்தினாலுமேயாம். தனித்தனி வடிவங்களும் நிறங்களும் இல்லாமல் எல்லாம் ஒரே வடிவாய் ஒரே நிறமாய்க் காணப்படுமாயின், நமக்குப் பகுத்துணர்ச்சியென்பதே இல்லாமற்போக, நாம் அறிவற்ற வெறுங் கட்டைபோற் கிடக்கநேரும். ஆனால், எல்லா இரக்கமும் எல்லா அருளும் உடைய இறைவனோ, நமக்குப் பகுத்துணர்ச்சியினை உண்டாக்கி நமதறியாமையினைத் தொலைப்பான் வேண்டிப் பொருள்களைப் பல வகுப்புகளாகவும், ஒரு வகுப்பினுள்ளும் ஒன்று மற்றொன்றின் வேறாகக் காணப்படுமாறும் பல வேறு வடிவும் பல்வேறு நிறமும் உடையவாம்படி அவற்றைப் படைத்தருளியிருக்கின்றான். இவ்வாறமைந்த பொருள்களின் வடிவையும் நிறத்தையும் நன்கு உற்று நோக்கி அவற்றின் அடையாளங்களை எவர்கள் நன்றாய் நினைவிற் பதித்துக் கொள்ளுகின்றார்களோ அவர்களுடைய அறிவு சொல்லுதற்கரிய விளக்கம் மிகுந்து துலங்குவதாகும். ஐம்பொறிகளிற் சிறந்த கண்ணுக்குப் புலனாகும் வடிவும் நிறமும் பொருள்கடோறும் வேறு வேறாய் இருத்தல் போலவே, செவி வாய் மூக்கு மெய் என்னும் ஏனைய பொறிகளுக்குப் புலனாம் ஓசை சுவை நாற்றம் ஊறென்னும் ஏனைய பண்புகளும் பொருள்கடோறும் வேறுவேறாய்க் காணப்படுகின்றன; இவற்றையும் உன்னித்துப் பார்த்து நினைவில் அமைத்துக் கொள்கின்றவர்களுக்கு அறியாமை தேய்ந்து அறிவு மேன்மேற் கிளருதல் திண்ணமேயாம். எனவே, கண்முதலான பொறிகளுக்கும் புலனாகும் வடிவம் நிறம் முதலான பண்புகளை ஊன்றி நினைக்கவே, அப்பண்பு களையுடைய பொருள்கள் நன்கு அறியப்பட்டனவாய் என்றும் அறியாமல் நினைவில் ஏறிநிற்கும். இவ்வுண்மை, தொலைவில் உணர்தல் என்னும் இவ்வரிய கல்வியை நன்கு ஆராய்ந்து கைகண்ட ஆங்கிலப் புலவர்களால் இனிது வலியுறுத்தப்பட் டிருக்கின்றது. ஆனதனாலே தான், கட்புலனாகாக் கடவுளைத் தொழுமிடத்தும், அழகியதோர் ஆண்மகன் வடிவாகவேனும் அல்லதொரு பெண்மகள் வடிவாக வேனும் ஓர் உருச் சமைத்து, அவ்வுருவிலே தங் கண்ணையுங் கருத்தையும் பதியவைத்துப், பின்னர்ப் புறத்தே காணும் அவ்வுருவை யொத்ததோர் அறிவுருவை உள்ளத்தின்கண் இடையறாது வருவித்து அதனையே தம் முழுமுதற் றாயுந் தந்தையுமாய்க் கரைந்து கரைந்து எண்ணி அன்பொடு வழிபட்டுவரின், அவர் நினைந்த அவ்வுருவாகவே இறைவன் வெளிப்பட்டு அவரைத் தனது திருவடிப்பேரின்பத்தில் இரும்புண்ட நீரிற் றிரும்பாவகை செய்து வைத்தருளுவன் என்று உண்மை அறிவுநூல்கள் கூறுவவாயின. இவ்வுண்மை உணராதார் தாம் இவ்வுண்மையினும் மேற்பட்ட தொன்றனை அறிந்தார்போல் மயக்கங் கொண்டு, கடவுளை ஏதொரு பண்புமில்லாத பொருளாக வைத்து வழிபடுதலே சிறந்ததெனச் செருக்கிக் கூறுவர். கடவுள் ஒரு பொருளானால் அதற்கும் பண்புகள் இருத்தல் வேண்டும்; பண்பில்லாத பொருள் எக்காலத்தும் யாண்டும் இல்லை. இவ்வாறாக, அதனைப் பண்பற்ற பொருளாக நினைத்தல் வேண்டுமெனக் கூறுதல் மலடி பெற்ற மைந்தன் முயற்கொம்பிலேறி வானிற் பூத்ததொரு தாமரையைப் பறித்தான் என்று கூறும் படுபொய்யேபோல் வெறும் பொய்யாய் ஒழிவதன்றி வேறில்லை. ஒருபொருள் ஒருவரால் அறியப்படுதலெல்லாம் அப்பொருளின் வடிவு நிறம் சுவை ஓசை நாற்றம் முதலான பண்புகளின் வாயிலாகவேயாம். இப்பண்புகள் இல்லையானால் இவற்றையுடைய பொருளும் இல்லையாம். அதனால் இப்பண்புகள் இல்லாததொரு பொருள் எஞ்ஞான்றும் எவரானும் அறியப்படுவதில்லை. ஆதலாற், கடவுளும் பண்பற்ற பொருள் எனின் அதுவும் ஒருவாற்றானும் மக்களால் அறியப்படுவதில்லை. மற்று, உலகங்களையும் உடம்புகளையும் ஓவாது படைக்கும் முதற் கடவுள் ஒன்று உண்டென்பது மெய்யறிவுடைய சான்றோர்க்கெல்லாம் ஒப்பமுடிந்தமையின், அஃது எல்லையற்ற அழகும் அறிவும் அன்பும் ஆற்றலும் வாய்ந்த அருள் உருவம் உடைய ஒரு மெய்ப்பொருளேயா மென்பதும், அஃது இப்பண்புகளின் வாயிலாகவே உணரப் படுமென்பதுங் கடைப்பிடிக்க. ஆகவே கடவுளை அருளுருவம் அல்லது அறிவுருவம் உடைய எல்லையற்ற அழகு வாய்ந்த ஒர் ஆணாகவாவது அல்லது ஒரு பெண்ணாகவாவது வைத்து வழிபடுதலே பெறற்கரும் பெரும்பயன் றருவதாமன்றி, இதனொடு மாறுபட்டுரைப்பன வெல்லாம் ஒரு சிறிதும் பயன்படாவென்பது ஆழ்ந்தாராய் வார்க்குத் தெற்றென விளங்காநிற்கும். அதுநிற்க.
இத்துணையுங் கூறியதுகொண்டு, தாம் நினைக்கும் ஒரு பொருளின் வடிவத்தையும் அதன் நிறத்தையும் எவ்வளவு தெளிவாக உணர்த்துவோர் தமதுள்ளத்திற் காண்கின்றனரோ அவ்வளவு தெளிவாக உணர்வோரும் தமதுள்ளத்தில் அவற்றைக் காண்குவர் என்று அறிதல் வேண்டும். நன்றாய்ப் பழுத்த குடகுநாரத்தம் பழம் ஒன்றை உணர்த்துவோர் நினைக்கப் புகுவராயின் அதன் உருட்சி வடிவத்தையுந் தோலின்கண் உள்ள பொருட்டுகளையும் மஞ்சள் கலந்த அதன் செந்நிறத்தையும் பிழைபடாமல் நினைவில் இருத்தக்கடவர். இங்ஙனம் நினைத்தால் உணர்வோரும் அதனை உடனே தமதுள்ளத்தின் கட் காணப்பெறுவர். இன்னும் இந்நினைவினை உரப்படுத்தல் வேண்டினால் அப்பழத்தின்கட் கட்புலனாய் நின்ற வடிவத் தையும் நிறத்தையுமேயன்றி, நாவிற்கும் மூக்கிற்கும் புலனாகும் அதன் தீஞ்சுவையையும் நறுமணத்தையுங் கூடச்சேர்த்து நினைவிற்குக் கொண்டுவருக. இவ்வாறு செய்தால் உணர்வோர் உள்ளத்திற் குடகுநாரத்தம் பழத்தைப்பற்றிய நினைவன்றி வேறெதுவும் அந்நேரத்திற் றோன்றாது. இங்ஙனமே எந்தப் பொருளை நினைந்தாலும், அது கட்புலனாம் வடிவும் நிறமும் உடையதாதலொடு, மற்றைப் பொறிகளுக்கும் புலனாகுஞ் சுவை ஊறு ஓசை நாற்றம் என்பவற்றில் எவ்வெவை வாய்க்கப் பெற்றிருக் கின்றனவோ அவ்வவற்றையுங் கூடச் சேர்த்து நினைந்தால், அப்பொருளின் பண்புகள் உணர்த்து வோருள்ளத்திற் றெளிவுபெறத்தோன்றி அவர்தம் அறிவைத் துலங்குவதோடு, உணர்வோ ருள்ளத்திலும் அந்நினைவு விளக்கமாய்த் தோன்றி அவர் தம் அறிவாற்றலையும் மிகுதிப்படுத்தும்.
இனி, ஐம்பொறிகளிற் கண் வாய் மூக்கு என்னும் மூன்றுக்கும் புலனாகும் உருவஞ் சுவை மணம் என்னும் பண்புகளையுடைய பொருள்களெல்லாம் பருப்பொருள்களாயிருத்தலின் அவை ஒரு காலத்தில் மூன்று பொறிகளுக்கும் எளிதிற் புலனாதல் கூடும். கூடவே, இம்முப்பொறிகளுக்கும் புலனாகும் பண்புகளை ஒருங்கே நினைத்தலும் எளிதிற் செய்தல் கூடும். ஏனென்றாற் பருப்பொருள்கள் எளிதில் நினைவிற்கு வருதல் இயற்கை யாயிருக்கின்றது. மற்றுச், செவிப்புலனாகும் ஓசையோ கண்வாய் மூக்குகட்குப் புலனாகும் பருப்பொருள் போலாகாமல் மிகவும் நுண்ணியதாய் இருத்தலின் அதனை நினைவுக்குக் கொண்டு வருதல் வருத்தமான செயலாம். இங்ஙனமே மெய்யின்மேற்படுங் காற்றும் ஏனைப் பொறிகளுக்குப் புலனாகாத நுண்மையுடைய தாகலின், அதன் ஊற்றுணர்வினை நினைவிற்குக் கொண்டு வருதலும் அருமையுடைத்தாம். ஆயினுங் காற்றினைத்தவிர உடம்பின் மேற்படும் ஏனைப்பருப் பொருள்களை நினைத்தல் அருமையுடைத்தன்று. இங்ஙனங் கண் வாய் மூக்கு என்னும் பொறிகளுக்குப் புலனாகும் பருப்பொருள்களைத் தெளிவாக நினைத்தல் எளிதிற் கைகூடுவதாயுஞ், செவி மெய் என்னும் மற்றை இருபொறிகளுக்கும் புலனாகும் நுண்பொருள்களை நினைத்தல் எளிதிற் கைகூடுவதல்லாததாயுங் காணப்படுதலால், இதிற் பழகித் தேர்ச்சிபெற விரும்புவோர் துவக்கத்திற் கண் வாய் மூக்கு கட்குப் புலனாகும் பருப்பொருள்களையும், பிறகு செவி மெய்கட்குப் புலனாகும் நுண்பொருள்களையும் முறையாக நினைதற்குத் தொடர்பாக முயன்று வரல் வேண்டும். இங்ஙனம் பழகிவரவே மனமானது நுண்ணிய நிலையினை அடையும். அது நுண்ணிய நிலையினை அடைந்தபின் நுண்ணிய பொருள் களைத் தெளிவாக நினைவுக்குக்கொண்டு வருதலும் எளிது.
பருப்பொருள்களைத் தெளிவுற நினைத்தல் எளிதாக இருந்தாலும் அவற்றுள் ஒன்றை நினைக்கப் புகுங்கால் உள்ளம் அஃது ஒன்றிலேமட்டும் நிலையாக நில்லாமல் ஒருநொடிப் பொழுதில் அதனை விட்டு மற்றொன்றிலும், அம் மற்றொன்றையும் விட்டு வேறொன்றிலும், அவ்வேறொன்றையும் விடுத்துப் பிறிதொன்றிலுமாக விட்டு விட்டோடும். கறங்கோலைபோல் இங்ஙனம் ஓயாது சுழலும் உள்ளம் ஒரு பருப்பொருளை நினைக்கும்போது அதனைவிட்டு வேறொன்றற்குப் போகாமல் தடைப்பட்டு நிற்பதற்கு ஓர் எளியமுறை இருக்கின்றது. அஃது யாதெனிற், காட்டுவாம். அகத்தே நினைக்கும் ஒரு பொருளின் நினைவைப் புறத்தே அதனோடு ஒப்பதான ஒன்றைச் செய்யும்படி ஏவினால் அஃது அப்பொருளைவிட்டு வேறொன்றனை நினைக்க மாட்டாது. அகத்தே நடைபெறும் ஓர் அறிவு முயற்சியைப் புறத்தே ஒரு செயலிற் கட்டுப்படுத்தும் முறை, புறப் பொருளிலேயே எந்நேரமும் நினைவைச் செல்ல விடுத்துக் கொண்டிருக்கும் நம்மனோர்க்கு மிகவும் பயன்றருவதொன்றாம். ஒருதெங்கின் இளநீரிலே தனது மனத்தைச் சிறிது நேரம் நிறுத்திவைக்க வேண்டுகின்றவன் அதன் வடிவத்தைப் போலக் களிமண்ணிலேனும் நெட்டியிலேனுங் கல்லிலேனுங் கட்டை யிலேனுஞ் செய்யப் புகுவனாயின் அவனது மனம் அப்பொருளி ளினைவிலேயே வருத்தமின்றி நெடுநேரம் நிலைபெற நிற்கும். ஒரு பருப்பொருளின் வடிவத்தை நினைக்கும் நினைவு நிலைபெற வேண்டி அதனை யொப்பதான வடிவை வேறொரு பருப் பொருளிற் செய்து கொண்டிருக்கும் முறை சிறந்ததேயானாலும், இதனை எல்லாருஞ் செய்தல் கூடாமையால், இதனினும் உயர்ந்ததான மற்றொரு முறை எவருஞ் செய்யத் தக்கதாக இருக்கின்றது. அஃது யாதோவெனின், ஒரு கடிதத்தில் எழுதுகோலால் அதன் உருவத்தைக் கூர்ந்து எழுதலேயாகும். கல் மண் முதலியவற்றில் திரட்டிச் செய்யும் உருக்களைக் காட்டினுங், கடிதத்தில் துகிலிகையால் அவற்றை எழுதிப் பார்க்கும் முறை எத்திறத்தவரும் எளிதிற் செய்தற்கு இசைந்ததாய் இருப்பதுடன் அஃது அறிவினையும் மிகக் கூர்மைப் படுத்துதலால் உயர்ச்சி வாய்ந்ததாகவும் இருக்கின்றது. எங்ஙனமென்றாற், பருப்பொருள்களெல்லாம் அகலம் நிகளம் பருமை என்னும் மூன்றளவு உடையனவாகும். ஆகையால், ஒரு பருப்பொருளின் வடிவத்தைக் கல் மண்போன்ற வேறொரு பருப்பொருளிற் செய்து அமைத்தல் அத்துணை வருத்தமான செயல் அன்று. ஆனால், அகலம் நிகளம் மட்டும் உடைய ஒரு கடிதத்தின் மேற்பரப்பின்மேல், அகலம் நிகளம் பருமை என்னும் மூன்றளவு உடைய ஒரு பருப்பொருளின் வடிவத்தைப் பிழைபடாமல் எழுதிக் காட்டுதல் பெரிதும் அருமையான செயலாம். அகலம் நிகளம் பருமை என்னும் மூன்றளவுடைய ஒரு குதிரையின் வடிவை, அங்ஙனமே மூன்றளவுடைய ஒரு முருக்கமரத்திற் றிரட்டி யமைத்தல்போல, இரண்டளவுடைய கடிதத்தின் மேற்பரப்பிலே அதன்வடிவை வரைந்து காட்டுதல் எளிதன்று. ஒருபருப்பொருளின் திரட்சி வடிவைக் கடிதத்தில் வரைந்து காட்டுதற்கு நுண்ணிய பார்வையுங் கூரிய அறிவும் முதன்மையாய் வேண்டும். அது வல்லாமலுந், தான் எழுதும் பருப்பொருளுக்கு இயற்கை நிறம் எதுவோ அதனை இசைவான சாயத்தால் விளக்கி எழுதவுங் கற்றுக்கொள்வனாயின், அவன் அறிவும் நினைவும் மிக மேம்பட்ட துலக்க முடையனவாய் உரம் பெற்றுத்திகழும். ஆதலால், ஒரு கடிதத்தின் மேல் ஒரு பருப் பொருளின் வடிவத்தை வரைந்து காட்டும் முறை அதனைப் பற்றிய நினைவை மிகவும் நிலைப்படுத்து மென்றும், அதனால் அவ் வழியிற் பழகி ஒரு நினைவைப் பிறர்க்கு உணர்த்துவோர் தொலைவில் உணர்தல் என்னும் இவ் வருங்கலைப் புலமையிற் சிறந்து நிற்பரென்றும் உணர்தல்வேண்டும்.
நினைத்த பொருளைக் கடிதத்தில் வரைந்து காட்டும் இம் முறையின் மேன்மையை உற்று நோக்குங்கால், தமது நினைவைப் பிறர் மனத்தில் எழுப்ப வேண்டும். எவரும் அந்நினைவைக் கடிதத்தில் எழுதலால் அதனை எளிதில் நிறை வேற்றலாமென்று தெரிந்து கொள்ளல் வேண்டும். உணர்த்துவோர் தாம் நினைத்த ஓர் இளநீரை ஒரு கடிதத்தில் வரைந்துகொண்டிருக்க, உணர்வோரும் அதனையே தமது கடிதத்திலும் வரைவர். உணர்த்துவோர் ஒரு குதிரையை எழுத உணர்வோரும் உடனே அதனைத் தமது கடிதத்தில் வரைவர். உணர்த்துவோர் நாரத்தை எலுமிச்சை முதலான பழங்களின் பெயரையேனுந், தென்னை மா பலா வாழை முதலான மரங்களின் பெயரையேனுந், தாம் நினைத்த ஒரு நண்பரின் பெயரையேனும், ஒன்று இரண்டு முதலான எண்களின் பெயரையேனும், ஞாயிறு திங்கள் முதலான நாட்பெயரை யேனும், மேசை நாற்காலி முதலான தட்டு முட்டுகளின் பெயரையேனும், வட்டம் சதுரம் கோணம் முதலான உருவங்களையேனும், வேறு விலங்கினங்களின் உருவங்கள் அல்லது பெயர்களையேனுந் தமது கடிதத்திற் குறிப்பிடுவராயின், உணர்வோரும் அவற்றைப் பெரும்பாலும் பிழைபடாமற் றமது கடிதத்திலுங் குறித்துக் காட்டுவர். இதனை நன்கு ஆராய்ந்து பார்த்த அறிஞர் ஒருவரின் ஆராய்ச்சிகள் பலவற்றுள் ஒன்றனை இங்கு எடுத்துக் காட்டுவாம்; உணர்த்துவோர் இருவரை ஒரு பக்கத்திலும், உணர்வோர் ஒருவரை மற்றொரு பக்கத்திலும் இருக்கவைத்து, உணர்வோர் எந்த வகையானும் உணர்த்துவோரையும் அவர் செய்வன வற்றையும் பாராதபடி அவர் கண்களை நன்றாய் மறைத்துக் கட்டிய பின்னர், உணர்த்துவோர் ஒருவர் கையிற் சதுரவடிவம் வரையப்பட்ட ஒரு கடிதத்தையும், மற்றொருவர் கையிற் சாய்ந்த சிலுவை வடிவம் வரையப் பட்ட மற்றொரு கடிதத்தையுங் கொடுத்து, அவ்விருவரும் அவ்வடிங்களை உன்னிப்பாய்ப் பார்க்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர். அவ்விருவரில் ஒருவர் மற்றவர் கையிலுள்ள உருவத்தினை அறியார். அவ்விருவருந் தத்தங்கடிதத்தில் உள்ளதை வாய்பேசாமல் உறுத்து உன்னிப் பாய்ப் பார்க்கும்படி கேட்டுக்கொள்ளப் பட்டனர். அந் நேரத்தில் தமது மனத்தில் எது தோன்று கின்றதோ அதைத் தெரிவிக்கும் படியாகவுங் கண் கட்டப் பட்டிருக்கும் உணர்வோர் கற்பிக்கப்பட்டார். சிறிது நேரத்தில் உணர்வோர், யான் இரண்டு உருவங்களைக் காண்கின்றேன் – முதலில் ஒன்றையும் பிறகு அதன்கீழ் மற்றொன்றையுங் காண்கின்றேன். நான் எதனை வரைவதென்று தெரியவில்லை. நான் இரண்டில் ஒன்றைத் தெளிவாய்க் காணக்கூடவில்லை. என்றனர். அதன்மேற், கண்டதைக் கண்டபடியே வரையும்படி கேட்டுக கொள்ளப்படவே, அவ்வுணர்வோர் ஒரு சதுரத்தை எழுதி அதனுட் சாய்ந்த ஒரு சிலுவையை எழுதிக் காட்டினர். இங்ஙனம் எழுதியது ஏன் என்று கேட்டபோது, ஒரு சதுரத்தினுட் சாய்ந்த ஒரு சிலுவையைத் தான் எழுதியதன் வகை தமக்கே தெரியாதென்று உரைத்தார். ஆயினும், அதன் உண்மை இது; உணர்த்துவோர் இருவரும் ஒரே காலத்திற் றனித்தனியே நினைத்த இருவேறு வடிவங்களும் ஒன்றோ டொன்று கலந்து உணர்வோர் உள்ளத்திற் றோன்றினமையால், அவர் தாங் கண்டவாறே அவை யிரண்டையும் ஒன்றினுள் ஒன்றாய் வரைந்து காட்டினர். இதனால் நாம் அறியற்பாலதும் ஒன்று உளது; உணர்வோர் ஒருவராய் இருக்க உணர்த்துவோர் பலராய் இருந்து பலவற்றை நினைப்பராயின், அவை யெல்லாம் ஒன்றோ
டொன்று கலந்து ஒரு கும்பலாய்த் தோன்றிக் குழப்பத்தை வருவிக்கும். ஆகையால் இக் கலைப் புலமையைப் பெறுதற்குப் பழகுகையில், உணர்த்துவோர் ஒருவரும் உணர்வோர் ஒருவருமாய் இருந்து பழகுதலே குழப்பமின்றி இதனைத் தெளிவாய் உணர்ந்து தேர்ச்சி பெறுதற்கு ஏதுவாம் என்க. எதனை நினைந்தாலும் அதனை ஒரு கடிதத்தில் வடிவமாகவோ அல்லது பெயரளவாகவோ உணர்த்துவோர் எழுதுவராயின், அதனைப் பற்றிய அவரது நினைவு அதனினின்றுங் கலையாமல் அதன்கட் சிறிது நேரமேனும் ஒன்றுபட்டு நிற்குமாதலால், அதனை உணர்வோர்க்கு அது செவ்வனே புலப் பட்டுத் தோன்றும். உணர்வோர் உணர்த்துவோராகிய இருதிறத்தினர்க்கும் நினைவு வலுப்பட்டு இக் கலைப்புலமைத் தேர்ச்சியை உண்டுபண்ணும் வரையில், தாம் நினைக்கும் எதனையுங் கடிதத்திலிட்டு எழுதும் முறையைக் கடைப்பிடித்தல் வேண்டும். தமது நினைவு வலுப்பட்டபின் கடிதத்தின் உதவி வேண்டாமலே ஒருவரது நினைவை மற்றவர் எளிதில் அறிந்துகொள்ளலாம்.
இனி, உணர்த்துவோர் பலராயிருப்பினும் அப்பலரும் பல நினைவுகளை உடையராகாமல் ஒரு பண்டத்தையே நினைக்கும் ஒரு நினைவே உடையரானால், அந்நேரத்தில் அதனை உணர்வோர் பிழைபடாமல் அதனை நன்குணர்ந்து உரைப்பர். ஓர் ஊரிலிருந்த ஒரு சமய குருவின்மக்கள் முற்பிறவியிற் செய்த நல்வினையால் பிறப்பிலேயே இக்கலைப்புலமையில் தேர்ச்சி பெற்று விளங்கினர். அச் சிறு பிள்ளைகட்கு வாய்த்த இவ்வருங் கலைப்புலமைத் திறத்தை ஆராய்ந்து பார்க்கும் பொருட்டுச் சென்ற ஓர் அறிஞர் அச் சிறுவரது திறத்தை ஆராய்ந்து பார்த்த ஆராய்ச்சிகள் பலவற்றுள் இதுவும் ஒன்று; அச் சிறுமகாரில் ஒருவர் ஓர் அறையிற் போய்க் கதவைச் சாத்திக் கொள்ளும்படி கற்பிக்கப்பட்டார். அதற்கு அடுத்த மற்றோர் அறையின் கண் அவ்வீட்டிலுள்ள குடும்பத்தாரை இருக்க வைத்து, அவ்வறிஞர் அந்நேரத்திற் றமக்குத் தோன்றிய ஒரு பொருளைச் சிறிது நினைத்துப் பின்னர் அதன் பெயரை ஒரு துண்டுக் கடிதத்தில் எழுதி, அதனை அங்கிருந்த குடும்பத் தார்க்குக் காட்டி, எவரும் வாய் பேசாமலே அதிலெழுதப் பட்ட பண்டத்தினை ஒருமித்து நினைக்கும்படி கேட்டுக் கொண்டார். அவர்கள் எல்லாரும் அவர் சொல்லியபடியே சிறிதும் வாய்பேசாதிருந்து அக்கடிதத்திற் குறிப்பிட்ட பண்டத்தை நினைந்த சில நேரத்திலெல்லாம், பக்கத்து அறையிலிருந்த சிறுபிள்ளை கதவைத் திறந்து கொண்டு வருவது கேட்டது; உடனே அடுத்த அறையிலிருந்த அனைவரும் இருக்கையினின்று அசையாமலும் வாய் பேசாமலும் அத் துண்டுக் கடிதத்தை மறைத்துக் கொள்ளவும், அக் குழந்தை இவர்களிருந்த அறைக்குள் வந்து அவர்க ளெல்லாரும் ஒன்றாய் நினைத்த அப் பண்டத்தின் பெயரைச் சொல்லிற்று. இதனை அடுத்துச் செய்த ஆராய்ச்சிகளுள், அடுத்த அறையிலிருந்த குடும்பத்தவர் எல்லாம் அவ் வீட்டிலுள்ள பண்டங்களில் ஏதேனும் ஒன்றை ஒரு காலத்தில் ஒருமித்து நினைக்கவும், நினைந்த அப் பண்டத்தை அச் சிறு பிள்ளை தானே அறிந்து எடுத்து வந்து கொடுக்கவும் கற்பிக்கப்பட்டனர். கற்பிக்கப் பட்டபடியே அவர் அடுத்தடுத்து நினைந்த பண்டங்கள் ஒவ்வொன்றையும் அப் பிள்ளை தவறாமல் எடுத்தெடுத்து வந்து கொடுத்தது. இங்ஙனமாக அவ்வறிஞர் ஆறு நாட்கள் வரையில் அவர்களோடிருந்து ஆராய்ந்து முந்நூற்றுப் பன்னிரண்டு ஆராய்ச்சிகளுஞ் சிறிதும் பிழைபடாமல் நிறைவேறின. இவற்றை எண்ணிப் பார்க்குங்கால் உணர்த்துவோர். பலராயிருப்பினும் அவர் ஒரு காலத்து ஒரு பண்டத்தினையே உன்னிப்பாய் ஒருமித்து நினைப்பராயின், அதனை உணர்வோரும் அதனை உள்ளவாறே பிழையாமல் உணர்வரென்னும் உண்மை நன்கு பெறப்படும். உணர்வோர் அறிவும் மேற் பிறவியிற் செய்த நல்வினைப் பயத்தாலும் இப் பிறவியிற் செய்து கொண்ட பழக்கத்தாலும் நன்கு தெளிவடைந்திருத்தல் வேண்டும்.
இனி, உணர்த்துவோர் யோகநித்திரை என்னும் அறிதுயில் வாயிலாக உணர்வோரது அறிவைத் தெளிவடையச் செய்து அவரை அருகில் இருத்தியும், அன்றித் தொலை விலிருக்கச் செய்துந் தாம் நினைப்பனவற்றை அவர் பிறழாமல் நினைக்கும்படி செய்யும் மற்றொரு நன்முறையும் உண்டு. உணர்த்துவோர் முதற்கண் நல்லதொரு முறையால், உணர் வோரை அறிதுயிலிற் போகச் செய்து, அதனால் அவரது நினைவு தமது நினைவின் வழிப்பட்டு நிற்கச் செய்துகொள்ளல் வேண்டும். அங்ஙனம் அவரை அறிதுயிலிற் செலுத்துதற்கு இசைவான நன்முறைதான் எதுவோவெனின்; அதனைக் காட்டுதும்.



