
தொலைவிலுணர்தல் மறைமலையடிகள்
14. நனவிற்றோன்றும் முன்னறிவிப்புகள்
இன்னும்,இவ்விந்திய நாட்டின் அரசியற்படைக்குத் தலைவராயிருந்த ராபர்ட் என்பார் ஒருநாற் காபூல் நகரை விட்டுக் கைபர் கணவாய்வரையில் மிகுவிரைவாய்க் குதிரையூர்ந்து வருகையில், திடுமென அவருள்ளத்தில் ஓர் உணர்வு தோன்றிப் பின்வரும் பேரிடரை அறிவித்து, அவர் அதற்குமேல் செல்லாமல் அவரைத் தடைசெய்தது, அவர் அதனால் அங்ஙனந் தடைப்பட்டு நின்ற சிறிது நேரத்தி லெல்லாந், தமக்குக்கீழ்த் தலைவராயுள்ளார் இருவர் அவர்பாற் கடுகிப் போந்து, காந்தாரத்திலுள்ள தம்மவர் படையானது பகைவர் தலைவனால் முறியடிக்கப்பட்டு முற்றுமை செய்யப்பட்டிருக்கும் மிக வியப்பான செய்தியைத் தெரிவித்தார். அதுகேட்டதும், அவர் காந்தாரத்திற்குத் திரும்பிச்சென்று, தமது படைக்கு வந்த அப் பேரிடரை நீக்கிப் பெருஞ்சிறப்புப் பெற்றார்.
இங்ஙனமே, போர் துவங்கும் போதும் போர்மேற் செல்லும்போது மெல்லாம் ராபர்ட் படைத்தலைவர்க்கு இத்தகைய முன்னறிவிப்புகள் அடுத்தடுத்து வருதலுண்டு. அவ்வறிவிப்புகளின்படி தாம் மேற்கொண்ட போர் வினைகள் நடாத்தியே அவர் வெற்றி பெற்று வந்தார். 1914 ஆம் ஆண்டு சூலைத் திங்களில் ஜெர்மன் அரசுக்கும் ஆங்கில அரசுக்கும் போர் மூண்டபோது, இப் படைத்தலைவர் கூறிய அறிவுரைகளைக் கேளாமையினாலேயே, ஆங்கிலர் பெருந்துன்பம் உழந்தனர். இவர்தம் அறிவு மொழிகளை மட்டும் அவர்கள் கேட்டு நடந்திருந்தால் அத்தகைய பெருந்துன்பத்திற்கு ஆளாகி இரார்கள்; இன்னோரன்ன முன்னறிவிப்புகள் விக்டோரியா பேர்அரசியார்க்கும் அடுத்தடுத்து வருதலுண்டு. அங்ஙனம் அவை வருங்காலங்களிலெல்லாம், அவர், தம் அமைச்சர் பின்வருவன அறியாமையாற் புகல்பவைகளையெல்லாம் ஒரு சிறிதும் ஏலாமல் ஒழித்துத், தாம் பெற்ற அவ்வறிவிப்புகளின் படி நடந்து தங்கீழ் வாழ்வார்க்கு வரற்பாலனவாயிருந்த பேரிடர்களை யெல்லாம் வராமற் றடைசெய்து, அவர்களைக் காத்து வந்தனர்.
இன்னும், உடல்வலிமையில் தமக்கு நிகரில்லாதவரென்று உலகம் எங்கணும் பெரும்புகழ் ஓங்கப்பெற்ற சாண்டோ (Sandoow) என்பவர் தாம் இயற்றிய வலிவு பெறுதல் யாங்ஙனம்? என்னும் அரிய நூலின்கட் பின்வருமாறு வரைந்திருக்கும் பெரிய உண்மை மனத்தின் கட் பதிக்கற்பாலதாகும்.
யாங்கள் ஏறிச்சென்ற கப்பல் (Elbe) விரைவில் அமிழ்ந்தி யழியப்போகிறது என்னும் உணர்ச்சி எப்படியோ என்னுளத்தில் அடுத்தடுத்துத் தோன்றலாயிற்று. பொதுவாக யான் இத்தகைய அறிவில் நம்பிக்கை கொள்வதில்லை; ஆனாலும், இவ்வுணர்ச்சி ஏன் தோன்றுகின்ற தென்பதும் அறியக்கூடவில்லை. இவ்வெண்ணத்தைத் தொலைக்க யான் எவ்வளவோ முயன்றும் அஃது என்னைவிட்டுச் சிறிதும் நீங்கியபாடில்லை. என்றோ ஒரு நாள் இம் மரக்கலம் அமிழ்ந்திவிடப் போகிறதென்னும் உணர்ச்சி வரவர உரம்பெற்றது. அம் மரக்கலத்துப் பொறியை இயக்கும் துரைமகனாரோடு யான் நேயங்கொண்டமையால், அவர் அமர்ந்திருக்கும் அவ்வேலையை விடுத்து இனிக் கடல்மேற் செல்லாதிருக்கும்படி அவர்க்கு அறிவுரை மொழிந்தேன், அவரும் என்சொற் கேட்டு அவ்வேலையை உடனே விட்டு நீங்கினமையால் உயிர் பிழைத்தார். ஏனென்றால், எனக்கு அம் முன் உணர்வு தோன்றிய சிறிதுகாலத்தி லெல்லாம் அக் கப்பல் கடலுள் அமிழ்ந்திப் போயிற்று.
இங்ஙனமே, ஒருமாது இருப்புச் சுரங்கத்தில் வேலை செய்துவந்த தன் கணவனை ஒருநாள் வேலைக்குச் செல்லாதபடி தடை செய்தாள். எதனாலெனின் அன்றைக்கு அவ்விருப்புச் சுரங்கத்தின் மேற்கூரையின் ஒரு கூறு இடிந்து விழுமென்பது அம்மாதின் உள்ளத்திற் பட்டது. மற்று, அவள் கணவனோ அவள் சொற் கேளாமல் வழக்கம்போல் அன்றைக்குத் தன் அலுவல்மேற் சென்றான். ஐயகோ! அன்றைக்கு அவன் மனைவி சொல்லிய படியே, அச்சுரங்கத்தின் ஒரு மேற்பகுதி இடிந்துவிழ, அதன்கீழ் வேலை செய்து கொண்டிருந்த அவன் அதன்கீழ் அகப்பட்டு உடல்நசுங்கி இறந்து போனான்!
இன்னும், மேல்நாட்டிற் பெரும்போர் நடந்த காலத்திற் காயம்பட்ட மறவர்க்குப் பேருதவி செய்தவரும், விரிவுரை நிகழ்த்துவதிற் பெரும்புகழ் படைத்தவருமான ஓர் ஐரோப்பிய மாதரார் ஒருகாற் புகைவண்டியிற் போய்க் கொண்டிருக்கையிற் சடுதியில் ஓர் ஒலி தோன்றி, அவர்தாம் அவ்வண்டியில் அமர்ந்திருந்த அப்பக்கத்தைவிட்டுக் குதித்து வேறுபக்கத்தில் விரைந்து சென்று அமருமாறு கற்பித்தது. அவ்வொலி எங்கிருந்து வந்த தென்பதை அவர் அறியக் கூடவில்லை. எனினும், அம்மாதரார் அவ்வொலி கட்டளையிட்டபடியே விரைந்துகுதித்து அவ் வண்டியின் மற்றொரு பக்கத்திற்போய் ஏறியமர்ந்தார். அவர் அங்ஙனம் அமர்ந்த இரண்டொரு நொடியில் எல்லாம், அவர் முன் ஏறியிருந்த அவ்வண்டியின் பக்கம் நொறுங்கி அழிந்தது. மற்று, அம்மாதரோ அத் தெய்வவொலி கற்பித்தவண்ணம் உடனே நடந்தமையால், உயிர் தப்பி நெடுநாள் நன்கு உயிர் வாழ்ந்தாரென்பது.
இன்னும், ஒன்பதாண்டுள்ள ஒரு சிறுமி தன் சிறிய தங்கையுடன் மாலை வேளையிற் பழைய ஓர் அரண்மனை யினுள்ளே உலாவித் திரிந்துகொண்டிருந்தனள். மாலை வெளிச்சம் வரவர மங்கிக்கொண்டு வருகையில் நீருஞ் சேறும் நிறைந்த ஒரு படுகுழி யோரமாய் அவ்விருவரும் வந்து விட்டனர். இருண்ட நேரமாய் இருந்தமையால், அப்படுகுழி அங்கிருப்பதை அவர்கள் அறியவில்லை; இன்னும் ஒரு நொடிப்பொழுது அவர்கள் நடந்திருந்தால் அப்பள்ளத்தின்கண் வீழ்ந்து மிழ்ந்திப் போயிருப்பர். ஆனால், நான்கு திங்கட்குமுன் காலஞ் சென்ற அவர்கள் அன்னையின் குரலொலியானது தோன்றி, அவ் விருவரையும் பெயர் சொல்லி யழைத்து அவர்கள் அப்பள்ளத் தண்டை செல்லாமல் தடைசெய்தது. அவ்வாறு தோன்றிய தந் தாயின் குரலொலியைக் கேட்டு, அவ்விருவரும் அப்பள்ளத்தின் அருகே செல்லாமல் விலகிச் சென்றமையால் உயிர்பிழைத்தன ரென்பது.
இன்னும், படைத்தலைவராயுள்ள ஒரு துரைமகனும், அவரோடு உடனிருந்து வேலைபார்க்கும் மற்றொருவருந், தாம் இருந்து எழுதும் ஒரு மேசையின் இருபக்கத்துமிருந்து பொருட்குறிப்புச் செய்து கொண்டிருக்கையில், வெளியே தாழ்வாரத்தின் கண் எவரோ நடக்கும் அரவந் தென்பட்டது. அப்போது அவ்விரு வரும், இறந்துபோன தம் மற்றொரு நண்பரை நினைந்து, அவர் காலமாகியிராவிட்டால், அவரே இப்போது உள் வந்தாரென்று நாஞ் சொல்லல் வேண்டியிருக்கும் என்று தமக்குட் பேசுகையில், இறந்து போன அவர்தம் நண்பர் உண்மையாகவே உள்ளே வந்தார்; வந்து, நான் சொல்ல வேண்டுவதுஞ் செய்ய வேண்டுவதும் ஒன்றிருத்தலால், நான் சொல்வதை நீங்கள் எழுதிக் கொள்வீர்களா? யான் இங்கிலாந்து தேயத்தைவிட்டுப் புறப்படும் முன், ஒரு கோயிலிற்சென்று என் மனைவியை மறைவாகவே மணந்துகொண்டேன். என்று சொல்லித், தான் மணந்துகொண்ட அம்மாதின் பெயரையும் மணந்த நாளையுஞ் சுட்டிக்கூறிப், பின்னும் என் மனைவி இப்போது அங்கேதான் இருக்கின்றனள்; எனக்கொரு மகனும் உண்டு. இவைகளை நீங்கள் தெரிந்து கொள்ளல் வேண்டும்; எனக்கு இங்கேயுள்ள சொத்தை விற்று அதற்கு வரும் பணத்தை என் மனைவிக்குச் சேர்ப்பித்தல் வேண்டும், யான் மணஞ்செய்து கொண்டதை எவரும் அறியாராதலால், இவ் வேற்பாடு செய்யப்படும் வரையில் யான் அமைதியுறுதல் இயலாது. என மொழிந்து மறைந்து போயினார். ஆவி வடிவில் வந்து அங்ஙனம் உரைத்த தம் நண்பர் உரைகளை அவ்விருவருந் தனித் தனியே குறித்துக் கொண்டார்கள். குறித்த அக் குறிப்புகளை ஒத்து நோக்க அவையிரண்டும் முழுமையும் ஒத்திருந்தன. அதன்பின் அவ் விருவரும் இங்கிலாந்து சென்று அங்கே ஆராய்ந்தவழி, ஆவிவடிவிற் போந்து மொழிந்த தம் நண்பருரைகள் அத்தனையும் உண்மையாகவே யிருந்தன. அவர் நுவன்ற வண்ணமே குறிப்பிட்ட நாளிற் குறிப்பிட்ட இடத்தில் அவர்க்கு மணம் நடந்தது மெய்தான். அவர் விரும்பியவாறே அவர்க்கிருந்த உரிமைகளை விற்றுப் பெற்ற பணத்தை அவர்தம் மனைவியார்க்குச் சேர்ப்பித்துவிட்டனர். இறந்து ஆவிவடிவில் நின்ற அவர் அங்ஙனம் வந்து தம் நண்பர் இருவர்க்கும் அச் செய்திகளை அறிவியாது போனால், அவையிற்றை எவருமே அறிதற்கு வழியில்லை யாய்ப் போம் என்பது.
இனி, இறந்துபோகும் நிலைமையிலிருந்த ஒருவர், தாம் இறந்து போகும் நாள் அண்மையில் வரத், தமக்கு அறிமுகமான மாதர் ஒருவரின் கண்ணுக்குப் புலனாக நனவிலேயே தாம் தோன்றிய வரலாற்றினை இங்கெடுத்துக் காட்டுதும்:
செல்வத்திற் சிறந்த ஒரு பெருமாட்டியும் அவர் தந்தங்கையுந் தாலதா என்னும் ஊரில் இருந்த ஞான்று, (1889 – ஆம் ஆண்டு), அவர்கட்கும் ஒரு துரைமகனார்க்கும் பழக்கம் உண்டாயிற்று. அப்போது அத் துரைமகன் எலும்புருக்கி நோய் உடையராய் அது முதிர்ந்து போன நிலைமையில் இருந்தனர். அம் மாதர்களும் அவரும் ஒரு நாட் பேசிக்கொண்டிருக்கையில், அவ் விருவரில் தமக்கையார்க்குமுன் தாங் காலமாவதா யிருந்தால், தாம் அங்ஙனங் காலமாவதை அவர்க்கு முன்னறிவிக்க முயல்வதாக அத்துரைமகன் மொழிந்தனர். இவ்வுரையாட்டு நடந்த பின் இடையிடையே அப்பெருமாட்டியாரும் அத்துரைமகனாரும் எதிர்ப்பாட்டுப் பலகாற் பேசியதுண்டு. அத்துரைமகன் கடுக்காயைப்போற் பழுப்பு நிறமான சட்டை யணிந்தவராகவே பலகாலும் உலாவிச் செல்வதை அம் மாதரார் கண்டு நகையாடுவது முண்டு. இங்ஙனம் அவர்கட்குட் பழக்கம் உண்டாகி மூன்று திங்கள் கழிந்த பின், அப்பெருமாட்டியார் இருவருந் தாலதா என்னும் அவ் வூரை விட்டுப் புறப்பட்டு, அதற்குத் தொலைவில் உளதாகிய தமதூர்க்கு வந்து சேர்ந்தனர். அங்ஙனம் வந்து சேர்ந்த சில திங்களுக்குப் பிறகு அவர்கள் அத்துரைமகனையும் அவர் தம் மனைவியையும் அறவே மறந்து போயினர். ஏனென்றால், அவர்கள் அவரை ஓர் அறிமுகமாகக் கருதினரே யல்லாமல், நெருங்கிய நண்பராகக் கருதிற்றிலர். அவ்வாறிருக்க 1890 ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 12 ஆம் நாள் அம்மாதரார் இருவரும் ஒரு நாடக சாலைக்குப் போய்த் திரும்பி இரவு பன்னிரண்டரை மணிக்குத் தம் இல்லத்திற்கு வரும் வழியில், தம் நண்பர் ஒருவரைப் புகைவண்டி நிலையத்தில் விடும்பொருட்டுத், தமது குதிரை வண்டியை அவ்விடத்திற்குச் செலுத்தினர். செலுத்தி அந் நண்பரை வழிப்போக்கி விட்டுத், திரும்பத் தமது வண்டியிலேற வந்த மூத்த பெருமாட்டி பின்வருமாறு வரைகின்றார்:
புகைவண்டி நிலையத்திலிருந்து யாங்கள் திரும்பி வருகையில், எங்கள் வேலைக்காரன் எங்கள் வண்டியைப் பார்த்துக் கொணர, முன்னதாகச் சென்றான். ஆகவே யாங்கள் படியண்டை வந்ததும், வண்டி எங்களுக்காக வந்து காத்துக் கொண்டிருத்தலைக் கண்டோம். என் தங்கை முற்பட்டு ஏறிவண்டியினுள்ளே அமர்ந்தனள். யான் மெதுவாகப் படி வழியே இறங்கி வந்தமையால் அவள் எனக்காகக் காக்க வேண்டியவளானாள்; வேலைக்காரனும் வண்டிக் கதவைத் திறந்து வைத்துக்கொண்டிருந்தனன். யான் அவ்வண்டிப் படிமேல் ஒரு காலைத் தூக்கிவைத்ததுந் திடுமெனத் திகைப்புற்று, வண்டியினுள்ளே நுழையாமல் தடைப்பட்டு நின்றேன். வண்டியினுள்ளே இருளாயிருந்தது. என்றாலும், அப்போது யான் நோக்கிய அவ்விடத்திற் காணப்பட்ட ஒரு புதுமையான வெள்ளிய ஒளி மங்கலாயிருப்பினுங் குறிப்பிட்ட இடத்தில் அது மிகவுந் தெளிவாய் ஒளிர, அதனிடையே ஒரு முகத்தின் வடிவம் என் தங்கையின் முகமாய் அவளை நோக்கிய படியாய் மெல்லிதாய்த் துலங்கித் தோன்றுதலைக் கண்டேன். இத் தோற்றம் நின்ற நேரம் ஒரு நொடிப்பொழுது தான் இருக்கும்; ஆயினும், எனக்கு அறிமுகமாகக் காணப்பட்ட அதன் ஒவ்வோர் அமைப்பும் யான் செவ்வையாகவே கண்டறியத் தக்கதாயிருந்தது. அம் முகத்தின் கூர்த்த சாயலும், ஒரு பக்கத்திற் சிறிது வகிர்ந்த குஞ்சியும், எடுப்பான மூக்குந், திருத்தமான மோவாயும், அதன்கட் கலகலப்பாய் முளைத்துள்ள சிறு பழுப்பு நிறமான தாடியும் நன்கு விளங்கித் தோன்றின. மற்றைக் காலங்களில் அத்துணைத் தெளிவாய் விளங்கக் காட்டுதற்குப் போதாத அம் மங்கல் ஒளியிற்றோன்றிய அப் புது வடிவத்தின் நிறங்களை அந்நேரத்தில் யான் நன்றாய்ப் பகுத்தறிய வல்லளானது தான், இப்போது யான் அதனைப்பற்றி நினைக்கையில் ஒரு புதுமையாக என்னுளத்திற் படுகின்றது. அவ் வடிவின் தலைமேல் தொப்பியில்லை; ஆனாலுந், தெற்கே யுள்ளார் அணியும் உச்சிச் சட்டையினை யொப்பதொன்றே அதன்மேல் இருந்தது; அதன் நிறங்கடுக்காய் நிறத்தைச் சிறிது ஒத்திருந்தது அவ்வடிவம் முழுதும் மிக்கதோர் இளைப்பு வாய்ந்து மெலிந்திருந்தது. எங்கள் வேலைக்காரன், யான் வண்டிக்குள் நுழையாமற் கற்சிலைபோற் படிமேல் நிற்றலைக் கண்டு, இறும்பூதுற்றவனாய் எனது பாவாடையின் கீழ் விளிம்பு என் அடிக்கீழ் அகப்பட்டதுபோலு மெனக்கருதி, என்னைக் கைகொடுத்தெடுத்து அவ் வண்டியினுள்ளே அமரவைத்தான். யான் என் தங்கையின் பக்கத்தே அமர்ந்ததும், ‘இஃது உண்மையிலே நமது வண்டிதானா? என அவளைக் கேட்டேன்; ஏனென்றால், ஒரு புதிய ஆடவன் என் தங்கையின் எதிரே உட்கார்ந்திருத்தல் கண்டு என் உள்ளம் அவ்வளவு கலங்கியுணர்வழிந்தது. மெய்யாகவே ஓர் ஆண்மகன் அங்கே உட்கார்ந்திருந்தனனாயின், என் தங்கையாவது வேலையாளாவது அங்ஙனம் அவர்க்கெதிரே வாய்பேசா திருத்தல் இயலாதே யென்பது அந் நேரத்தில் என் மனத்திற்குத் தென்படவில்லை. யான் உட்கார்ந்த பிறகு அங்கே ஏதொன்றுங் கண்டிலேன். ஆகவே, என் தங்கையை நோக்கி ‘உனக்கெதிரில் நீ ஏதொன்றுங் காணவில்லையா? என்று வினவினேன். அதற்கவள், ஏதொன்று மில்லை; நல்லது, நீ வண்டியில் ஏறுகையில், இது நமது வண்டிதானா? எனக் கேட்கும்படி செய்தது எது? வெனக்கேட்டு நகையாடினாள். அதன்மேல் யான் கண்ட அத்தோற்றத்தை மேலே மொழிந்தபடி அவட்கு விரிவாய் எடுத்துரைத்தேன். ஓ, அவ் அறிமுகமான முகமும், ஒரு பக்கத்தில் வகிர்ந்த குஞ்சியுங், கடுக்காய் நிறச் சட்டையும் நாம் எங்ஙனே பார்த்தோம்? நீ குறிப்பித்தபடி யுள்ளது இங்கொன்றும் இல்லையே என அவள் கூறினள். யாங்கள் எவ்வளவோ அதைப்பற்றி நினைவு கூர்தற்கு முயன்று பார்த்தோம், ஏதொன்றுங் கிடைக்கவில்லை. பின்னர் நாங்கள் வீடு போய்ச் சேர்ந்தவுடன் எங்கள் அன்னையார்பால் அத் தோற்றத்தைப் பற்றிச் சொன்னோம். யான் சொன்ன குறிப்புகளிலிருந்து எங்கள் அன்னையார் அத்தகையதொரு முகத்தை ஏதோ ஒரு வகையாய்ச் சிறிது நினைவு கூர்ந்தார். மறுநாள் மாலையில், எங்களுக்குப் பழக்கமான ஓரிளைஞர் எங்களைக் காணவந்தார். அவருக்கும் அந் நிகழ்ச்சியை அறிவித்தோம். அதைப்பற்றி யாங்கள் எல்லேமும் நெடுகப் பேசியும் ஏதும் உண்மை தெரிந்துகொள்ளல் கூடவில்லை. யான் கண்ட அம்முகத்தைப் போல்வதொரு முகம் எனக்குப் பழக்கமான முகங்கள் பலவற்றுள் ஒன்றுதான் என்பதை யான் நன்கு நினைவுகூர்ந்தேனாயினும், எப்போது எங்கே எனவும், யான் கண்ட அத்தோற்றத்திற்குரிய ஆண்மகனின் உண்மையான பெயர் எது வெனவும் யான் நினைந்தறியக் கூடவில்லை. இங்ஙனமே அடுத்தடுத்து மறந்துவிடும் எனது நினைவைக் கொண்டு அதனைத் தெரிந்து கொள்ளக்கூடாதவ ளானேன். பின்னர்ச் சில நாட் சென்று, நாங்கள், எம்மை முன்னே காணவந்த இளைஞரின் பாட்டியாரைப் பார்க்கப் போனோம். எம்மைக் கண்டதும் அந்த அம்மையார், தாலதா ஊரிலிருந்து எவ்வளவு துயரமான செய்தி எனக்கு வந்த தென்பதை நீங்கள் அறிவீர்களா? என்னும் பெயர் பூண்ட அத்துரைமகனார் இறந்துபோனார் ஆனால், அதன் வரலாறு முழுமையும் எனக்கு எட்டவில்லை. என்றனர். அச்செய்தி கேட்டதும் யானும் என் தங்கையும் ஒருவரை யொருவர் பார்த்தோம் அத்துரைமகன் பெயர் கேட்ட பின்னர்; அக் கூர்த்தமுகச் சாயலுங் கடுக்காய் நிறச் சட்டையும் உடையவர் இன்னா ரென்பது புலனாயிற்று. யான் அத் தோற்றத்தின் கூறுபாடுகளை விரித்துச் சொன்னது நல்லதாயிற்று; ஏனென்றால், என்னைப் போலவே என் தங்கையும் அப்பெயர் சொல்லக் கேட்டவளவில், யான் கூறியது இன்னா ரென்பதைத் தெரிந்துகொண்டாள். அவ் வம்மையாரின் பேரர் அப்போது வீட்டினுள்ளே வரக்கண்டு, அத்துரைமகன் இறந்துபட்ட நாளைப் புதினத்தாள்களிலிருந்து திட்டமாய்த் தெரிந்துரைக்கும்படி அவரை வேண்டிக் கேட்டேன். மார்ச்சுத் திங்கள் 14 ஆம் நாளே, அதாவது யான் கண்ட தோற்றத்திற்கு இரண்டு நாட் பிற்பட்டதே, அவர் செய்தியைச் செவ்வையாய்த் தெரிதல் வேண்டித் தாலதாவிலுள்ள நண்பர்கட்கு யான் எழுத, அத் துரைமகன் நவம்பர் 24 ஆம் நாளிலிருந்து படுக்கையிலேயே கிடந்தனரென்றும், அப்போதிலிருந்து அவர் மிகவும் வலி குறைந்த நிலைமையி லிருந்தனரென்றும், ஆனாலும் அவர் ஆழ்ந்த துயிலில் நீளக் கிடந்து வந்தமையால் அவர் காலமான கடைசி இரவு வரையில் அவர் பிழைத்துக் கொள்வரென்னும் நம்பிக்கையே யிருந்த தென்றும் விளக்கமான செய்தி எனக்குக் கிடைத்தது. அத் துரைமகன் என் தங்கைக்கு முன்னே தோன்றுவதாக உறுதிமொழி புகன்றிருந்தும் பிறகு அவர் என்னுடைய கண்களுக்கே தோன்றலானது எங்கட்கு மிக்கதோர் இறும்பூதினை விளைவித்தது. ஆனாலும், இப்போது மொழிந்த இத்தோற்றத்திற்கு முன்னரே பலகால்யான் பல வியத்தகு நிகழ்ச்சிகளைக் கண்டுள்ளேன் எனக்கூற வேண்டியவளா யிருக்கின்றேன். என்றாலும், இப்போது கண்ட உருவத்திலே தான் யான் ஒவ்வோர் உறுப்பினையும், முகத்தின் சாயலையும், உடையின் நிறத்தையுந் தெளிவுறக் கண்டேன் என்பது.
இவ்வாறு அம் மாதரார் கண்ட உருவெளித் தோற்றமானது, அதற்குக் காரணரான துரைமகனார் இறந்துபடுதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே தோன்றி, அவரது சாக்காட்டினை அவர்க்கு முன்னறி வித்தமை நினைவிற் பதிக்கற்பாற்று. தாம் இறந்து போதற்கு முற்பட்டே அவர் அவர்க்குத் தோன்றுவதாகக் கூறிய உறுதிமொழி அவரது நினைவின்கண் உருத்து நின்றமையால், அது பிழைபடாமல் அவரது உருவினை அவரது கண்முன்னே தோற்றுவிப்ப தாயிற்று. அத் துரைமகனார் தாங் கூறிய சொற்படியே அவ்வம்மையாரின் தங்கைக் கெதிரே தோன்றியுந், தங்கையார் தெளிவுக் காட்சி (Clairvoyant vision) உடையவரல்லாமையால் அவர்க்கது புலனாகாது நின்று தெளிவுக் காட்சியுடையரான அவர் தந் தமக்கையார்க்கே புலனாவதாயிற்றென்க.
இன்னுங், கல்லூரியிற் கலைபயின்றுகொண்டிருந்த மாணவர் ஒருவர்க்குத் தொலைவிலிருந்த அவர்தந் தந்தையார் தாஞ் சாகும் முன் தமது நிலைமையினை முன்னறிவித்த வரலாறு மிகவும் வியக்கற்பால தொன்றாயிருத்தலின், அதனையும் இங்கேயெடுத்துக் காட்டுதும்:
ஒரு கல்லூரி மாணவர் ஓர் இரவு சிறிது முன்னதாகப் படுக்கைக்குச் சென்றார்; சென்றவர் தாம் இருந்து கல்விப் பயிற்சி செய்யும் அறையின் வெளிக் கதவைப் பூட்டிக் கொண்டு, அதற்குந் தமது படுக்கை யறைக்கும் நடுவிலுள்ள கதவைமட்டுந் திறப்பாக விட்டு வைத்தார். அவர் கலைபயிலும் அறையின் நடுவேயிருந்த பெரிய கணப்புச் சட்டியின் தீ கொழுந்துவிட்டு எரிந்தமையால், அவ் வறையினுள்ளிருந்த எல்லாப் பொருள் களும் பட்டப்பகல் வெளிச்சத்திற்றோன்றுதல் போல் நன்கு விளங்கித் தோன்றின. அப்போது இரவு பத்தரை மணி; அம் மாணவரும் ஏதுந் தடையின்றி நெடுந்துயில் கொள்ளும் விருப்பத்துடன் படுக்கைமேற் சென்று படுத்தார்; அந்நேரத்தில் இரண்டறைகளின் நடுவேயுள்ள நிலையண்டை நிறைந்த அத் தீ வெளிச்சத்து மினுமினுப்பின்கண் தந் தந்தையாரின் உருவம் நிற்றலை அவர் கண்டார்;. கண்டதும் உண்டான இறும்பூதினால் அவர் சிறிது நேரம் வரையில் அசைவின்றிக் கிடந்தார்; துயரமும் ஆவலுங் கொண்ட அவ்வுருவத்து முகத்தின் மேல் அக் கணப்புத் தீ வெளிச்சம் படுதலை அவர் சிறிது நேரம் உற்றுப் பார்க்கையில், அவ்வுருவந் தன் கையை உயர எடுத்து, அவரைத் தன்பால் வருமாறு குறிசெய்து அழைத்தது. அதனைக் காண்டலும், அவரைத் தம்வயப்படுத்தி யிருந்த திகைப்புந் திகிலும் அகன்றன; உடனே அம் மாணவர் படுக்கையினின்றுங் கீழே குதித்து அந்நிலைக் கதவண்டை பாய்ந்தார்; ஆயினும், அவர் அங்கு நெருங்கும் முன்னரே அவ்வுருவம் மறைந்து போயிற்று.
அதனால் அவர் திடுக்கிட்டவராய்த், தாம் இருக்கும் அறையினையும் படுக்கும் அறையினையும் அக்கக்காய்த் தேடிப் பார்த்தார்; தம்மைத் தவிர வேறெவரும் அங்கில்லை யென்பது அவருள்ளத்திற்குத் தேற்றமாயிற்று; ஏனென்றாற், புறத்தியான் ஒருவன் அங்கே புகுந்து ஒளிந்திருப்பதற்கு இடமேயில்லை. வெளிக்கதவோ அவர் தாம் முன் விட்டபடியே செவ்வையாகப் பூட்டப்பட்டிருந்தது! அது வல்லாமலும், அங்குத் தோன்றிய உருவமோ தப்பாமல் தெளிவாக அவர் தந் தந்தையாரதேயாகும்; அவ்வுருவின் முகத்திற் புலனான ஓர் ஆவற் குறிப்பைத் தவிரச், சில கிழமைகளுக்கு முன் அம் மாணவர் தாம் கடைசியாகப் பார்த்து வந்தபடியே தான் அது தோன்றிற்று. தன்னுடன் பயிலும் மாணவர் எவரேனும் அங்ஙனங் கேலியாக வந்து ஏமாற்றினாரென்று கொள்வதற்கும் இடமில்லை. முடிவாக ஏதோ ஒரு பொய்யான தோற்றத்தில் தமது மனம் அகப்பட்டிருக்க வேண்டுமென அவர் எண்ணினார்; ஆனாலும், இயற்கையாய்த் தோன்றிய அவ்வுருவமும், அதன் முகத்தின் மேற்றுளங்கிய தீயின் ஒளியும் அவரது நினைவின்கட்பதிந்து தோன்றா நிற்கையில், அதனை அங்ஙனம் பொய்த்தோற்ற மென முடிவு செய்வதும் அவர்க்கு இடர்ப்பாடாய் இருந்தது; ஆகவே, அம் மாணவர் தமது மனத்தை மறுபடியும் அமைதிப் படுத்திக்கொண்டு துயில் கொள்ளச் சென்றார்.
ஆனால், அவர் கொண்ட மன அதிர்ச்சியானது அவர்க்கும் தூக்கம் பிடியாவாறு செய்தது; ஒரு மணி நேரத்திற்கு மேலாக அவர் சுவரின்மேல் ஆடிக்கொண்டிருந்த நிழல் களையே உற்று நோக்கிக் கொண்டிருக்க, அதன் பின் அவர் தமக்குத் தூக்கம் வருதலை யுணர்ந்தார். ஆனால், உள்ளபடியே அவர் தூக்கத்திற் சென்றனரோ, அல்லது தூங்கும் நிலைக்கு நெருங்கினரோ என்பது அவராற் சொல்லக் கூடவில்லை. எனினும், மறுபடியும் அவ்வுருவம் அந்நிலைக் கதவண்டை தோன்றவே, அவர் திடுக்கிட்டு முற்றிலும் விழித்துக் கொண்டார்; அவ் வுருவின் முகம் முன்போலவே ஆவல் நிரம்பிய குறிப்புடையதாகவும், அது முன்னையைவிட அவர் தம்மை மிக்க விருப்பத்துடன் கைகாட்டி யழைப்பதாகவுங் காணப்பட்டது. இம்முறை அது தம்மைத் தப்பிப் போய்விட விடுதல் ஆகாது என்னுந் தீர்மானம் உடையராய், அம் மாணவர் தமது படுக்கையிலிருந்து ஒரே குதியாய்க் குதித்து, அக் கதவண்டை சென்று அவ் ஆவி யுருவினை வலுவாய்ப் பிடித்தார். ஆனால், மறுபடியும் அவர் ஏமாற்றமே யடைந்தார். அதற்கு இரண்டு முழத்தொலைவில் அவர் சென்றபோதும், முதற்றோன்றிய உருவினையே யொத்திருந்த அஃது அவரது கையிற் பிடிபடாமற் போகவே, அவர் வெறு வெளியையே பிடித்து ஏமாந்தவரானார். திரும்பவும் அவ்வறைகளினிட மெல்லாம் அவரால் ஆராய்ந்து பார்க்கப்பட்டன. அது மெய்யாகவே மக்கள் யாக்கையிற் றோன்றிய தொன்றாயிற் பூட்டப்பட்டிருக்கும் அவ்வறைகளை விட்டு அது வெளியே செல்லுதலாவது அல்ல தவற்றுள்ளே ஒளிந்திருத்தலாவது இயலாது.
இளைஞர் பலரைப் போலவே, இம்மாணவரும் ஆவிவடிவங்களில் ஏறக்குறைய நம்பிக்கை யற்றவராயிருந்தனர்; ஆகவே, தாங் கண்ட தோற்றத்தால் மிகவுந் துணுக்குற்றனரேனுந், தமதுடம்பின்கட் புலப்படா துள்ள ஒரு நோய் காரணமாய் உண்டான ஒரு மனக் கற்பனையே அத்தோற்றத்திற்கு ஏதுவாகுமென்று தமக்குள் ஒரு முடிவு செய்து கொண்டார். அதன் பின் அவர் தமது நெற்றியைக் குளிர்ந்த தண்ணீர் கொண்டு கழுவிக் குளிரவைத்து, ஏதோ மூளையின் பிசகாற் காணப்பட்ட அப்பொய்த் தோற்றத்தைப் பற்றித் தாம் நினைத்தலாகா தென உறுதிசெய்து கொண்டு திரும்பவுந் துயில்கொளச் சென்றார், அவர் அங்ஙனந் துயிலச் சென்ற போது அவரது கல்லூரிக் கடிகாரங்கள் நள்ளிராப் பொழுதை மணியடித்து அறிவித்தன. தாம் பெறுதற்கு மிக விழைந்த துயிலையடைதற்கு அவர் எவ்வளவோ முயன்றனர்.
கடைசியாக அவர் தாம் வேண்டியபடியே துயிலிற் சென்றார்; ஆனால், தாம் உணர்விழந்து கிடந்த நேரம் மிகச் சிறிதாகத்தான் இருக்கவேண்டுமென்பது அவர்க்குப்பட்டது; ஏனென்றால், அவர் மறுப்படியுந் திகில் கொண்ட நெஞ்சினராய்ச் சடுதியில் விழித் தெழுந்தார். அவர் கலை பயிலும் அறையிற் கணப்புச்சட்டியில் எரிந்து கொண்டிருந்த நெருப்பு இப்போது குறைவாய் எரிந்தது; தாந் தூங்கச் சென்ற பொழுது கிளர்ந்து விளங்கிய ஒளி இப்பொழுதுமங்கலாகிச் சிவந்த வெளிச்சத்தைச் சுவர்களிலும் மச்சிலும் படுவித்தது. அதே நிலைக்கதவண்டை அவ்வெளிச்சத்தின் நடுவே அவர்தந் தந்தையின் உருவம் மறித்தும் வந்துநின்றது. இம்முறை அதன் முகக்குறிப்பிலுஞ் செயலிலும் ஒரு வேறுபாடு விளக்க மாய்த்தோன்றியது. முன்னே அத்துணைத் தெளிவாய்க் காணப்பட்ட ஆவற்குறிப்பு மாறிக், கைவிட்ட துயரக் குறிப்பே இப்போது மிகுந்து காணப்பட்டது. முன்னே உயர எடுத்து அம்மாணவரைத் தம்பால்வருமாறு அழைத்த கைகள் இப்போது அவரைப் பின்னே செல்லும்படி மெதுவாக அசைத்துக் குறிசெய்தன. முன் போல் அது சடுதியிலே மறைந்து போகாமல், அதன் உருவம் வரவர மங்கலாகிச் சுவரின் மேற்பட்ட செவ்வொளியிற் சிறிதுசிறிதாக மறைவதுபோற் றோன்றியது.
அவ்வாறது மறைந்துபோய பிறகுதான் அவ்விளைஞர் தம்முடைய கைகளை அசைக்க இடம்பெற்றார்; உடனே அவர்தமது கைக்கடிகாரத்தை இழுத்து, அப்போது நேரம் என்னென்று நோக்கினார். இரண்டு மணி அடிக்கப் பத்து நிமிடங்கள் இருந்தன. அவர் உடனே தமது வீட்டுக்குச் செல்லத் தீர்மானஞ்செய்தும், அந்நேரத்தில் அங்குள்ளாரெவரையுந் துயிலினின்று எழுப்புவதும், வீட்டுக்குப்போக வண்டிபிடிப்பதும் இயலாதிருந்தன. தொலைவிலுள்ள ஒரு நாட்டுப்புற ஊருக்கு இவ்விளைஞரின் தந்தையார் சமயகுருவா யிருந்தனர். இவர் சில கிழமைகளுக்கு முன் தம் தந்தையாரைப் பிரிந்து வருகையில் அவர் மிக்கதோர் உடம்பின் நலம் உடையராவே யிருந்தனர்; அதனாலும், அவரைப் பிரிந்து வந்த பிறரு கலவரங் கொள்ளத்தக்க செய்தியொன்றும் வந்திலாமையினாலும் இவர் தம் தந்தையைப்பற்றிப் பிறிதாக நினைக்க இடமேயில்லை. என்றாலும், அடுத்தடுத்துத் தோன்றிய அவ்வுருவத்திலும், இயற்கை நிகழ்ச்சிக்கு வேறாகத் தென்பட்ட அத் தோற்றத்திலும் ஏதேனும் ஓர் உண்மை யிருக்க வேண்டுமென்பது அவருளத்திற் பதிந்ததாயினுந், தம் கண்களால் தாமே நேரிற் சென்றுகண்டால் அல்லாமல், தம் தந்தையார் செம்மையாய் உயிரோடிருக்கின்றா ரென்பதைப் பற்றித் தமக்கு அமைதி உண்டாகாதென உணர்ந்தார். ஆகவே, அவ்விளைஞர் திரும்பவுந் தூங்க முயன்றிலர்; விடியற் காலத்தைக்கண்டதுந், தமது கல்லூரித் தலைமையாசிரியரிடஞ் சென்று, தாம் இரவிற்கண்ட நிகழ்ச்சி களைச் சொல்லி, அவற்றால் தம்முள்ளத்தெழுந்த அச்சம் அகலுமாறு தாம் தமது வீட்டுக்குக் காலந்தாழாது உடனேசெல்ல விடை தருகவெனவேண்டி விடைபெற்றனர்.
மிகவிரைந்து சென்ற பயணத்தால் அம்மாணவர் நேற்றிரவிற்கண்ட நிகழ்ச்சிகளைப்பற்றிய நினைவின்வலிவு சிறிது குறையலாயிற்று, மாலைக்காலத்து நிழல் தோன்றுகையில் தந் தந்தையார் இருக்குந் தெருவின் முனைக்கு அவர் வந்து சேர்ந்தார்; தம் இல்லத்தவர் திடீரெனப் போந்த தமது வருகையைக் கண்டு எவ்வளவு திகைப்புக் கொள்வரோவென எண்ணினார்; ஆனால் அவர் வீட்டண்டைசென்றதும், அதன் சாளரத்திரைகள் தொங்க விடப்பட்டிருத்தல் கண்டு உளந்திடுக்கிட்டார். மசங்கல் வேளையாயிருந்தாலும், அந்நேரத்து வெளிச்சத்தையுந் தந் தந்தையார் விரும்புவதுண்டாகையால், முற்றும் இருள் சூழ்ந்தாலல்லாமல் அவர் மெழுகுதிரி விளக்கேற்ற விடுவ தில்லையே என்று அவ்விளைஞர் நினைக்கவே அவருள்ளத் தெழுந்த நடுக்கமானது, அவர் சிறிது நேரம் வரையில் வாயிற் கதவைத் தட்டவொட்டாமல் தடை செய்தது. கடைசியாக அவர் மனத்தைத் தேற்றிக் கொண்டு கதவைத் தட்ட, வேலைக்காரன் ஒருவன் போந்து கதவைத் திறந்தனன். அவன் அவ்விளைஞர்க்குச் சிறுபருவந் தொட்டுத் தெரிந்தவன்; உடனே அவன் முகத்திற்றோன்றிய குறிப்பைக் கண்டதும் அம்மாணவர் கொண்ட அச்சம் மெய்யெனத்தோன்றியது.
அவ்வேவலன், ஐயோ! தம்பி, நீங்கள் மிகவும் பிந்திப் போனீர்கள்! நேற்றிரவே நீங்கள் வந்திருக்க லாகாதா! ஐயா போய்விட்டாரே! அவர் நோயாய்ப் படுத்ததுஞ் சொல்லிய சொல்லெல்லாம் உங்களைப் பார்க்க அவர் எவ்வளவு ஆவல் கொண்டாரென்பதே! நேற்றிரவு பத்துமணிக்குத்தான் அவர்க்கு இசிப்பு உண்டாயிற்று; அஃதுண்டாகி அரைமணிநேரங் கழித்து, அவர் சிறிது பேசக்கூடியவர் ஆனதும், அவர் முதலிற்சொன்னது; என் மகனை வருவியுங்கள்; இன்னும் ஒருகால் என் மகனை நான் பார்க்கவேண்டும் என்பதே. பொழுது விடிந்தும் ஒர் ஆளை விடுப்பதாக நாங்கள் சொல்லினோம்; ஆனால், நாங்கள் சொல்லியதை அவர் கேட்டதாகத் தெரியவில்லை; ஏனென்றால், அவர் உணர்விழந்து பின்னே சாய்ந்து விட்டார். மறுபடியும் பதினொன்றே முக்கால்மணிக்கு அவர் சிறிதுநேரம் உணர்வுற்றெழுந்தார்; எழுந்ததும் அவர் சொல்லியதெல்லாம், ‘என் மகன் இப்போது இங்கே இருக்க வேண்டுமென்று யான் எவ்வளவு ஆவல் கொள்கின்றேன்! என்பதேயாம். அதன்பிறகு அவர் இறந்து போகுந் தறுவாயில் – அப்போது இரண்டு மணியடிக்கப் பத்து நிமிடங்கள் இருந்தன. அவர் தம்முடைய கண்களைத் திறந்து மிகுதியாய்ப் பேசுதற்குத் கூடாதிருந்தாலும், எங்களை யெல்லாம் இன்னாரென்று தெரிந்து கொண்டவராய் மெல்லப் பேசியதாவது; நான் போகின்றேன்; இன்னும் ஒருகால் என் அருமை மகனைக் கண்டு பேச விழைந்தேன்; ஆனால் அவனைக் காணும் வரையில் நான் உயிர்த்திரேன். என்பதே யாகும். உடனே, அவர் தூக்கத்திற் செல்வார்போல் மிகவும் அமைதியாகவே உயிர்விட்டனர். என்று கண்ணீர் சிந்திய படியாய்ச் சொன்னான்.
பாருங்கள்! உண்மையாக நேர்ந்த இத்துயர நிகழ்ச்சியில், அக்கல்லூரி மாணவரின் தந்தையார் தாம் பிணிப்பட்டுத் படுத்த இரவிற் பத்துமணிக்குப்பிற் குறிப்பாய்ப் பத்தரை மணிக்கும், அதன்பிற் பன்னிரண்டு மணிக்கும், அதன்பின் இறக்குந்தறுவாயில் இரண்டுமணி யடிக்கப் பத்து நிமிடங்களுக்கு முன்னுந் தம் மகனைப் பார்த்தற்கு விழைவுற்று உணர்வு கூடிய மூன்று முறையிலுந், தொலைவிற் கல்லூரி விடுதியிலிருந்த அவர் தம் மகனார்க்கு அந்நேரங்கள் தவறாமல் அவர்தம் ஆவி வடிவங்கட் புலனாகி அவரை இருமுறை தம்மாட்டு வருமாறு அழைத்து, மூன்றாம் முறை அம் மகனார் அதனைத் தெரிந்து வராமை கண்டு, உளந் தளர்ந்து, அவரைப் பின்னே போகுமாறு கைக்குறி காட்டினமை வியக்கற்பாலதொன்றா யிருக்கின்றதன்றோ? அவர் அங்ஙனம் மூன்று முறை தம்மகனார்க்கு முன்னே தோன்றியது ஆவிவடிவா? அல்லது நினைவுவடிவா? என்று ஆராயற்பாற்று. அஃது அவரது ஆவிவடிவேயாயின், அவர் தமது பருவுடம்பை நீத்த பின்னன்றி அது தோன்றுதல் இயலாது. மற்றஃது அவரது நினைவுவடிவேயாயின், அஃதுஅவ்வாறு தோன்றுதல் இயலும். அவர் மூன்று முறையுந் தம்மகனைப் பார்க்க விழைந்து நினைத்தது உயிரோடிருக்கையிலே யாகையால், அவரது நினைவின் உறைப்பே அவரது உருவினை அவர்தம் மகனார் கட்புலனெதிரே காட்டுவதாயிற்று. உடம்பு நல்ல நிலைமையி லிருக்கும்போது மக்கள் நினைவு ஐம்புலன்களின் வழிச்சென்று சிதர்ந்து போகுதலாலும், அன்றி யங்ஙனம் புறத்தே சிதர்ந்து போகாவழியும் அது புலன் வழிப்புகுந்த உருவங்களிலும் அவற்றைப்பற்றிய எண்ணங்களிலும் ஈடுபட்டுச் சிதறி விரைந்து இயங்குதலாலும் அந்நிலையில் ஒருவரது நினைவு முனைத்து நின்று அவரது வடிவினைப் பிறரது கண்ணுக்குப் புலப்படுத்த மாட்டாது. உடம்பு நன்னிலையிலிருக்கும்போதுந் தம துருவினைப் பிறர்க்குப் புலப்படுத்துவார் சிலர் ஆங்காங்கு உளராலெனின்; அவர் ஆற்றாமையினாலாவது நிறைந்த அன்பினாலாவது ஒரோவொருகால் மன வொருமை கை கூடப் பெறுதலால், அச்சில நேரங்களில் மட்டுமே தம்மையறியாமலே தமதுருவினைப் பிறர்க்குப் புலப்படுத்தா நிற்பர். இன்னுந், தவத்தான் மனந்தூயராய் நினைவை யொருவழிப்படுத்தி அப்பழக்கத்திற் பெரிது முதிர்ந்தார்க்கு, அவர் வேண்டிய காலங்களிலெல்லாந் தமதுருவினைப் பிறர்க்குப் புலப்படுத்துந் திறந்தானே எளிதில் உளதாகா நிற்கும். இவரல்லாத ஏனைப் பிறரெல்லாம் இறக்குந்தறுவாயில் மட்டுமே தம்முடைய பொறி புலன் அடங்கப் பெற்று, அதனால் அவற்றினூடு செல்லுந் தமது மனத்தின் ஆட்டமும் அடங்கப்பெற்று ஒரு முகப்பட்ட நினைவுடையராவர். ஆதலால், மேற்காட்டியவாறு தமக்குரியார் பால் தமதுருவினைத் தோற்றுவிக்கும் நிலை பெரும்பாலும் இறந்து போகுந்தறுவாயில் உள்ளார்க்கே வாய்ப்பதாகின்றதென் றுணர்ந்து கொள்க. மேற்காட்டிய உண்மை நிகழ்ச்சியில், தந்தையாயினார். தம் மகன் மேற்கொண்ட பெருங்காதலே, அவர்க்கு நினைவொருமையினை மிகுவித்து, அவர்தாஞ்சாகும் தறுவாயிலிருத்தலை அவர்தம் மகனார்க்கு முன்னறிவித்தற் பொருட்டு அவரதுருவினை மகனாரெதிரே கனவிலன்றி நனவிலேயே தோற்றுவிப்பதாயிற்றென்க.
இனிச், சில நேரங்களில் ஒருவர் தாம் அறியாமையாற் செய்யப்போகும் ஒரு செயல் அவர்க்குப் பெரியதொரு கெடுதியினை விளைவிப்பதாயிருந்தால், அதனைத் தடை செய்தற்குரிய சில தோற்றங்கள் அவர்க்கு நனவிலேயே தோன்றி அவரதனைச் செய்யாவாறு தடை செய்து விடுகின்றன. கடவுள் உதவியிலேயே மிக்க நம்பிக்கை வைத்திருப்பவர்கள் அத்தகைய தடைகள் கடவுளினாலேயே விளைவிக்கப்படுகின்றன என்பார்கள். நுண்ணுடம்பில் நிற்கும் நல்லெண்ணம் மிக்க நல்லோருடைய ஆவிகளே பருவுடம்பில் நிற்கும் நல்லார் சிலர்க்கு வரும் தீங்குகளை அகற்றுதற்கு அங்ஙனந் தடை செய்த லுண்டென்பர் வேறு சிலர். பின்னுஞ் சிலர், மக்களின் மறைந்த நினைவுகளினாலேயே நடக்கக்கூடிய இன்னோரன்ன உதவிகட்கெல்லாம், இறைவனையும் நுண்ணுடம்பில் நிற்கும் ஆவி களையுந் கொணர்ந்து தொடர்புபடுத்தல் வேண்டா செய்தலே யாமென்பர். நுண்ணுடம்பில் நிற்கும் நமதுள்ளம் எந்த நிகழ்ச்சியினையும் மறவாத தொன்றாகலின், அது முன் நடந்தவைகளையும் இப்போது நடக்கின்றவைகளையும் இனி நடப்பவைகளையும் நன்கறிந்து, பருவுடம்பில் நினைவு முனைத்துநின்று நாம் அறியாமற் செய்பவைகளையும் மறந்து செய்பவைகளையும் எல்லாந் தடைசெய்ய வல்லதாமெனக் கூறுவாரே, இஞ்ஞான்று இத்துறையில் நிரம்பக் கருத்தாக ஆராய்ச்சி செய்வார் குழுவில் மிகுந்து காணப்படுகின்றனர். ஆனாலும், இத் தடைகள் நமக்குப் புறத்தோ அகத்தோ தொலைவிலோ அண்மையிலோ எங்கிருந்து வருகின்றனவென்று வரையறுத்துச் சொல்லுதல் மட்டும் இன்று வரையில் எவராலும் இயலவில்லை. அங்ஙனம் வருந்தடைகள் நம்மறிவுக்கு எட்டா ஒரு முதலிலிருந்தே வருகின்ற வென்பது மட்டும் எல்லார்க்கும் ஒப்ப முடிந்த தொன்றாய் இருத்தலின், அந் நிகழ்ச்சிகளுள் ஒன்றிரண்டு ஈண்டு எடுத்துக் காட்டுதல் இன்றியமையாதாய் இருக்கின்றது.
ஓர் ஆங்கில அம்மையார் தமக்கு நேர்ந்த இத்தகைய தொரு நிகழ்ச்சியைப்பற்றி யெழுதிய கடிதத்தின் உண்மைபலரால் ஆராய்ந்து தழுவப்பட்ட தொன்றாகலின், அக்கடிதத்தினை இங்கே மொழி பெயர்த்து வரைகின்றோம்.
இருபஃது ஆண்டுகளுக்குமுன் தாங்கலில் (தபாலில்) இருந்து ஒருநாள் எனக்குச் சில கடிதங்கள் வந்தன; வந்த அக் கடிதங்கள் ஒன்றிற் பதினைந்து பொன்னுக்கு நாணய முறிகள் (Bank notes) வைத்து அடக்கஞ் செய்யப்பட்டிருந்தன. அக் கடிதங்களைப் படித்துப் பார்த்தபிறகு யான் அவைகளைக் கையிலெடுத்துக்கொண்டு சமையலறைக்குட் சென்றேன். அப்போது யான்மட்டும் அங்கே தனியே யிருந்தேன். அக்கடிதங்களைத் திரும்பவும் படித்தபின், அவற்றை நெருப்பில் எறிதற்கு முனைந்தேன். அங்ஙனம் முனைகையில் எவரோ என் கையைப் பிடித்து அவ்வாறு செய்ய வொட்டாமல் தடுத்தலைத் தெற்றென வுணர்ந்தேன். ஏதோ வேறொரு கை மெதுவாக என் கையைப் பிடித்துப் பின்னேயிழுப்பதுபோற் றோன்றியது. அதனாற் பெரிதும் வியப்புற்று என் கையை உறுத்து நோக்கினேன்; அப்போது என் கையிலிருந்தவைகள் யான் அழிக்கக் கருதிய கடிதங்கள் அல்ல; மற்று அவை நாணய முறிகளேயாகும்; கடிதங்களோ எனது மற்றைக்கையில் இருந்தன. அங்ஙன மிருத்தல் கண்டு திகைப்புற்ற யான், ‘யார் இங்கே? என உரத்துக் கூவினேன், என்பது.
இம்மெய்ந்நிகழ்ச்சியில் நேர்ந்த தடையானது, அவ்வாங்கில மாதரார் நெருப்பில் எறியமுனைந்த கடிதங்களுடன், அவற்றுள் ஒன்றில் அடக்கஞ் செய்யப்பட்டிருந்த நூற்றைம்பது ரூபா நாணயமுறிகளும் எறியப்பட்டு வீணே அழிந்துபடாமற்காத்து. அவர்க்குப் பேருதவி செய்தமை காண்க.
இன்னும், ஒருசெல்வரது இல்லத்திற் குளியலறையில் ஒரு தண்ணீர்த்தொட்டி அமைக்கப்பட்டிருந்தது. அதில் நிரம்பியிருக்கும் நீர் ஒரு பெரிய ஆளுக்குக் கழுத்தளவேயுள்ள தாயினும், ஒரு சிறு பெண்ணுக்கு நிலையாத ஆழமுடையதாயிருந்தது. ஆதலால், அவ்வீட்டிலுள்ள பெரியவர்கள் தம் சிறுவர் சிறுமிகள் அவ்வறைக்குள் நுழையாதபடி அதனைப் பூட்டிட்டு வைப்பதுவழக்கம். மேலும், அவ்வறை வீட்டின் புறக்கடையில் தனியேயிருந்தமையால், அதனுள்ளிருப்பவர் வீட்டின் முன்பக்கத்தே யிருப்பவரைக் கூவியழைத்தாலும், அவ்வழைப்பொலி அவர்க்குக் கேளாது. ஆனது பற்றி, அக்குளியலறையில் அழைப்பு மணியொன்று கட்டப்பட்டிருந்தது. ஈதிங்ஙனமிருக்க, அங்குள்ள ஒரு சிறுபெண் ஒருநாட்புறக்கடையில் விளையாடச்சென்றவள், அங்கே அக்குளியலறை அன்றைக்குப் பூட்டப்படாமல் திறந்திருக்கக் கண்டு, அதனுட் சென்று தான் தனியாகவே அத்தண்ணீர்த் தொட்டியிற் படிவழியே இறங்கி நீராடவிரும்பித், தன்னை வீட்டிலுள்ள பெரியவர் எவரேனும் பார்த்தால் நீராடவிடார்களென நினைந்து, அவ்வறைக் கதவைச்சாத்தி உள்ளே தாழ்இடப் புகுந்தாள். அப்போது அவ்வறையினுள்ளே தன்னைத் தவிர வேறெவரும் இல்லாதிருந்தும், அதன் ஒரு மூலையிலிருந்து கதவைச் சாத்தாதே, திற! என்று ஓர்ஒலி நான்குமுறை தோன்றிற்று. அதனைக்கேட்ட அச்சிறுபெண் பெருந்திகில் கொண்டவளாய், அங்கே கட்டுண்டிருந்த மணியை உரமாக இழுத்தடித்துவிட்டுக், கீழே உணர்விழந்து விழுந்து விட்டனள். முன்பக்கத்தே யிருந்தவர்கள் அம்மணியோசை கேட்டுக் குளிய லறைக்கு ஓடிவந்துபார்க்க, அச்சிறுபெண் உணர்வின்றிக் கிடத்தல் கண்டு. அவளை வாரியெடுத்துக் கொண்டுபோய், மயக்கந்தெளிவித்து, நடந்த வரலாற்றை அவள் வாயாற் கேட்டுக், கடவுளுக்கு நன்றி செலுத்தினார்கள். பாருங்கள்! அக்குளிய லறையில் அத்தெய்வவொலி தோன்றி அச்சிறுபெண்ணைத் தடை செய்யாதிருந்தால், அவள் அங்கிருந்த தண்ணீர்த் தொட்டியில் இறங்கி நீரிலமிழ்ந்தி இறந்துபோயிருப்பளன்றோ?
இன்னும், அமெரிக்காவிற் பாஸ்டன் (Boston) என்னும் பெருநகரில் 1890 ஆம் ஆண்டு ஆவணித் திங்களில் ஒருநாள் ஒரு பெரிய உணவு விடுதியில் நேர்ந்த ஒரு நிகழ்ச்சி பெரிதும் வியக்கத்தக்கதொரு தெய்வத் தடையாய் இருத்தலின் அதனையும் இங்கே வரைகுதும்:
அமெரிக்கப் பெருநகரங்களிலுள்ள உணவுவிடுதிகள் பத்துப் பதினைந்து அடுக்குகள் உடையனவாய், அகல நிகள உயரங்களில் மலைகளையே ஒப்பனவாய், உள்ளேசென்று நோக்குவார்க்குத் தம்மகத்துள்ள அரிய பெரிய அழகிய பண்டங்களில் அமைப்பாலும் மின் விளக்குகளின் ஒளியாலும் வானுலகே கீழ் இழிந்து விளங்குதலை நிகர்த்துத் திகழ் வனவாகும். அம்மாளிகைகளிற் கீழேயிருந்து மேற்செல்லுதற்கும், மேலிருந்து கீழிறங்குதற்கும் படிகள் அமைக்கப்பட்டிருந்தாலும், அவற்றின் வழியே ஏறுதலும் இறங்குதலும் நேரம் பிடிப்பதுடன் மெய் வருத்தத்தையுந் தரும். ஆதலால், மேலடுக்குகளின் மேற்செல்வார் இறங்குவார்க்கு எளிதாக உதவி செய்யத்தக்க தூக்குக் கூடுகள் (lifts) ஒவ்வோர் உயர்ந்த அடுக்கு மாளிகைகளிலும் அமைக்கப்பட்டிருக்கும். கீழே ஓரடுக்கிலுள்ள ஓரறையில் ஒரு தூக்குக் கூட்டிற்சென்று ஒருவர் நின்று அதனை எந்த மேலடுக்குச் செலுத்த இயக்கினாரோ அந்த மேலடுக்குக்கு அஃது அவரை ஒரு நொடிப் பொழுதில் தூக்கிக்கொண்டு போய்விடும். அது நேரே கீழிருந்து மேற்செல்வதும், மேலிருந்து கீழ்ச்செல்வது மாதலால், அஃது ஏறியிறங்கும் நெடுக்கு ஓர் ஆழமான கிணறுபோல் மேலிருந்து நோக்குவார்க்குத் தோன்றாநிற்கும். மேற்குறிப்பிட்ட ஆண்டின் ஆவணித் திங்களில் ஒருநாள் அப்பாடன் நகரிலுள்ள ஒருசிறந்த உணவு விடுதியின் மேன்மாளிகையிற் றங்கியிருந்த ஒரு மாதரார், தாங் கீழ் இறங்க வேண்டியிருந்தமையால் உடனே அங்குள்ள தூக்குக்கூடு மேல்எழுமாறு மணியடித்துவிட்டு, அது வருமிடத்தின் ஓரத்திற்கு விரைந்தோடினார். ஆனால், அப்போது அங்குவந்து நின்றது போல் அம்மாதரார் கண்களுக்குத் தோன்றிய தூக்குக்கூட்டின் வாயிலின் எதிரே ஒர் ஆடவன் நிற்கக் கண்டு, அவர் அதன்கட் சென்று ஏறாமற் பின்தங்கினார். பின் தாங்கிய சிறிது நேரத்திலெல்லாம் ஒரு தூக்குக்கூடு விளக்கொளியுடன் மேலேறித் தான்நிற்கும் இடத்தின் ஓரத்தில் வந்து நிற்கவும், இப்போது அதன்கண் எவரும் இன்றி அது வெறுமையாய் இருக்கவுங் கண்டு அதன்கண் அவர் ஏறிக் கீழ் இறங்கினார் என்பது.
இந்நிகழ்ச்சியிற் போந்த மாதரார் கண்களுக்கு முதலில் ஓர் ஆடவனுடன் தோன்றிய தூக்குக்கூடு உண்மையான தன்று; அது, தான் விரைந்து கீழிறங்க வேண்டும் என்னுங் கலவரத்தால் ஓடிவந்த அவருடைய கண்களுக்குப் பொய்யாகத் தோன்றிய பொய்த்தோற்றமேயாகும். அதனை உண்மையென நம்பி அதனிற் கால் வைத்திருந்தால் அவ்வம்மையார் கீழ்விழுந்து மடிந்து போயிருப்பர். அவர் அப்பொய்த்தோற்றத்தை நம்பி உயிர் இழவாமைப் பொருட்டே அப்பொய்க் கூட்டின் வாயிலிற் பொய்யான ஓர் ஆண்மகனுருவமும் உடன்றோன்றி அவர் அதன்கண் ஏறாமற் றடைசெய்தது. இதுகொண்டு, நாம் விரைந்து கலவரப்படுங்கால் உண்மையல்லாத பொய்த்தோற்றங்கள் காணப்படுமென்றும், அவற்றை நம்பினாற் பேரிடர் உண்டாமென்றும், எவரோ உயர்ந்த இயற்கையுடையார் சிலர்மட்டும் அத்தகைய பொய்த்தோற்றங்கட்குத் தப்பி உய்யுமாறு சில தெய்வத்தடைகள் புகுந்து உதவி செய்யுமென்றும், அவரல்லாத பிறர்க்கு அத்தகைய தடையுதவிகள் வருதல் அரிதாகையால் அவரெல்லாம் மிகவும் விழிப்பாகவே யிருக்கவேண்டுமென்றும், நல்லார் சிலர்க்குத் தோன்றுந் தடையுதவிகள் ஆங்காங்கு உண்மையாகவே நிகழ்கின்றன வென்றும் நாங்கருத்திற் பதித்தல் வேண்டும்.
இனிக், கொடும் பிணியாற் பற்றப்பட்டு மிகவும் துன்புறுவோர், தமக்கு நெருங்கிய நேயராய் இருப்பவரை நினைந்து, அவர் தம்பால் வந்திருக்க வேண்டுமென்று விழைகுவராயின், அவர்கொண்ட நினைவு அவர் தம் நேயர்க்கு அதனை முன்னறிவித்து, அவரை அவர்பால் வரச்செய்தலும் ஆங்காங்கு நிகழா நிற்கின்றது. இதற்கு மெய்யாக நிகழ்ந்த தொன்றனை இங்கெடுத்துக் காட்டுவாம்.
சிறந்த தொழிலாளி ஒருவர் தாம் நடத்துந் தொழிலைச் சிறிது காலம் விட்டுவைத்து, இளைப்பாறி இன்புறுதற்காக, இளமரக்கா மிடைந்த ஒரு நாட்டுப் புறத்தூரிற்போய்ச் சிறிது காலந் தங்கினார். ஒருநாள் அவர் காலையுணவு கொள்ளுகையில் தம் மனைவியாரை நோக்கி, நமக்குச் சிறந்த நேயரான க… என்னும் அம்மையாரைப்பற்றி எனக்கு அடுத்தடுத்து நினைப்பும் ஒருவகையான மனக்கலக்கமும் உண்டாகின்றன. அவ்விரண் டையும் என் உள்ளத்தினின்றும் அகற்றமுடியவில்லை; நீ இன்று பிற்பகல் அந்த அம்மையாரைப் போய்க்கண்டு, அவரும் அவர் தங் குடும்பத்தாரும் எப்படியிருக்கின்றார்கள் என்று தெரிந்து கொள்வது நலம் என்று கூறினார். அதுகேட்ட அவர் தம் மனைவியார் வியப்புடன் இது புதுமையாய் இருக்கின்றது! நமக்கு நண்பரான அந்த அம்மையாரைப் பற்றியே யானும் மிகுதியாய் நினைத்துக்கொண்டிருந்தேன்; அதைப் பற்றி உங்களுக்குச் சொல்லயான் வாயெடுக்கையில் நீங்களும் அதனையே எனக்குச் சொன்னீர்கள், என்று மறுமொழி கூறினார். இவ்விருவரும் இங்ஙனம் பேசத் தொடங்குதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னேதான் இருவருள்ளத்திலும் அந்நினைவு அங்ஙனம் வலுப்பெற்றுத் தோன்றலாயிற்று. இருவரும் அங்ஙனங் கலவரப்பட்டு நினைத்த க.. என்னும் அம்மையார் அவர் இருந்த அவ்வூருக்கு அந்தப்பக்கத்துக் கடைசியில் இருந்தனர்; அவரை இவர்கள் மூன்று திங்கட்கு முன்னேதான் சென்று பார்த்தனர். அப்போது அவர் உடம்பின் நலத்தொடுதான் இருந்தார். ஆனால், இப்போதோ அவரைப்பற்றிக்கொண்ட கலவரத்தைத் தீர்த்துக்கொள்ளும் பொருட்டு, இவ்விருவரும் அன்றைப் பிற்பகலே வீட்டினின்றும் புறப்பட்டு அந்த அம்மையாரைப் பார்க்கச் சென்றார்கள். சென்று அவரது வீட்டண்டை சேர்ந்ததும், அவ்வம்மையின் தங்கையார் வீட்டுள்ளிருந்து வெளியே வாயிலில் வரக்கண்டார். வந்த தங்கையார் இவ்விருவரையுங் கண்டதும் இறும்பூதுற்று, யான் உங்களைத்தாம் பார்க்கப் புறப்பட்டேன்; நீங்கள் இன்றைக்கு இங்கேவந்து என் தமக்கையாருடன் தங்கியிருக்கக் கூடுமா என்று தெரிந்து கொள்ளுதற்கே புறப்படலானேன்; என் தமக்கையார் மிகவும் நோயாய் இருக்கின்றார்;அவருக்கு உண்டான ஒருகட்டியை இன்றைக்கு அறுக்க வேண்டி யிருக்கின்றது. ஆதலால், தமக்கையார் உங்களைப் பக்கத்தில் வைத்துக் கொள்ளப் பெரிதும் விழைகின்றார் என்று வந்த அம்மையாரை நோக்கி நுவன்றனர் என்பது.
இம்மெய்ந்நிகழ்ச்சியிற் கொடியதொரு கட்டியினால் துன்புற்றிருந்த அம்மையார் தமக்கு அன்பிற்சிறந்த நேயரான மற்றோரம்மையாரைத் தம்பால் வந்திருக்கவேண்டி உறுத்துநினைந்த நினைவானது, நினைக்கப்பட்ட அம்மையார்க்கும் அந்நினைவினைத் தோற்றுவிக்க, அவ்வம்மையார்க்குத் தோற்றுவிக்கப்பட்ட அந்நினைவே அவர்க்குச் சிறந்த அன்புடையரான அவர் தங் கணவருள்ளத்துந் தோன்றலாயிற்று.
இன்னும், வறுமையால் துன்புறும் அடியார் சிலர்க்கு, அவர் வேண்டும் உதவியினைச் செய்யும் எண்ணம் மற்றைப் பிறர்க்கு வலிவாகத் தோற்றுதலால், அவர் உடனே அவர்பாற் சென்று அவ்வுதவியினைச் செய்து அவரது மிடி தீர்த்த வரலாறுகளும் பல; அவற்றுள் ஒன்றனை இங்கெடுத்துக் காட்டுதும்:-
மறைபொருட்காட்சி என்னும் நூலின் ஆசிரியர் (Jaïes Coates) பின்வருமாறு எழுதுகின்றார். இத்தகைய நிகழ்ச்சிகளை ஆராய்ந்து பார்ப்பதில் யான் சிறிதுங் கருத்தின்றியிருந்த சில ஆண்டுகளுக்கு முன், யான் இலிவர்ப்பூல் என்னும் நகரிற் குடியிருந்தபோது, உவாக்கர் என்னுங் கோயிற்காவலாளர் ஒருவர் எனக்கு நண்பரானார். இவர் படைஞராய் இருந்தவர்; இப்போது ஆண்டில் முதிர்ந்தவர்; கடவுளிடத்தில் அன்பும் நம்பிக்கையும் மிக்கவர். இவ்வுலகத்துப் பொருளில் ஏழையா யிருப்பினும், இறைவன் நேயத்திலும் பெருந்தன்மையிலும் இயற்கை வாழ்விலுஞ்சிறந்த செல்வரென்றே இவரைச் சொல்லல் வேண்டும். யான் சில திங்களாக இவரைக் காணாதிருந்தும், இவரைப்பற்றி யான் ஏதுமே நினையாதிருந்தும், ஒருநாட் காலையில் யான் தெருவழியே விழைந்து போய்க் கொண்டிருக்கையில் இவரைப்பற்றி மிகுதியாக நினைக்க லானேன். அந்நினைவை மாற்ற எவ்வளவோ முயன்றும், அஃதென்னாற் கூடவில்லை. அவரைப்பற்றியே என்மனந் தொல்லைப்படுவதாயிற்று. அவர்க்கு உடம்புதான் நலமில்லை யோ? அல்லது அவர்க்கு ஏதேனுந்தான் வேண்டியிருக்குமோ? என உள்ளுக்குள் வினவி, நல்லது அவரை விரைந்து போய்க்காண்பேன் என்று சொல்லிக்கொண்டே விரைந்தேகி அவரது வீட்டுக்கதவைத் தட்டினேன். ஏன் என்று எவரும் வரவில்லை அதன்மேற், கதவை உற்றுநோக்க அது தாழிடப் படாமற் சந்து விட்டிருத்தல் கண்டேன். பிறகு யானே அதனைத் திறந்து, மெல்ல உள்ளேசென்று பார்க்க, ஆண்டில் முதிர்ந்த உவாக்கரும் அவர் தம் மனைவியாரும் அடுக்களையிலே முழந்தாளிட்டபடியாய்க் கடவுளைத் தொழுது கொண்டிருத்தல் கண்டேன். அவர் மிகவும் உருக்கமாய் இறைவனை வேண்டிக் கொண்டிருந்தார். சிறிது பின்றாங்கிப், பிறகு யான் அவரை வணங்கி, அந்நேரத்தில் யான்புகுந்து குறுக்கிட்டமைக்காக அவரை மன்னிப்புக் கேட்டேன். யான் பட்டினத்திற்குட் சென்று கொண்டிருக்கையில் தங்களைப் பற்றி இடைவிடாது நினைந்து என்மனந் துன்புற்றது. தங்களைப் பார்த்து உண்மை தெரிந்தா லல்லாமல் என்மனம் அமைதியுறாது எனத் தேர்ந்து தங்கள்பால் வந்தேன் எனக் கூறினேன். அதுகேட்ட அம் முதியவர், தம்மிடம் ஒரு காசும் இல்லாத நிலையில், உணவுப் பொருளும் விறகும் இன்றி மிடிப்பட்டமையால், அதனைத் தாம் இறைவனுக்குத் தெரிவித்துக் கொண்டிருந்ததாக மொழிந்தனர். அப்போது என்னிடத்தில் ஓர் அரைப் பொன்நாணயம் இருந்தது. அதனை யெடுத்து அவரது கையில் வைத்தேன். அம் முதியவர் தம் கண்களினின்று புறப்பட்ட கண்ணீரைத் துடைத்துக் கொண்டு தம்மனைவியாரை நோக்கி, மேரி, கடவுளின் அருளைப்பற்றி இனி நீ எக்காலும் ஐயங்கொள்ளாதே! நமக்கு அவர் உதவிசெய்வாரென்று நான் சொன்னேனே. eh‹ nf£lij mt® bfhL¤JŸshu‹nwh? என்று விளம்பினார். பின்னும், அவர்தாம் விறகு வாங்கக் கூடக் காசு இல்லாமல் வறுமைப் பட்டதையுங், தமக்கு ஐந்துரூபா தரும்படி இறைவனைத் தாம் வேண்டியதையுந், தாம் வேண்டியபடியே அவ்வைந்து ரூபாய்க்கு ஒரு பொன்நாணயம் பெற்றதையும் எடுத்துரைத்தார் என்பது.
வேண்டியார் வேண்டியதே ஈவான் கண்டாய் என்னும் அருட்சான்றோர் திருமொழிப்படி, இறைவன் தன்னையார் எது வேண்டினாலும் அது வழங்கும் பெருந்திருவாளன் என்பது, மேற்காட்டிய மெய்ந்நிகழ்ச்சியினால் நன்கு புலனாகின்றதன்றோ? அப்பருந் திருஞானசம்பந்தப் பெருமானுந் திருவீழிமி ழலையில் இருந்தஞான்று, மாரிபெய்யாது மறுப்ப எங்கும் வறங்கூர்ந்தது. அதனால் மன்னுயிர்களெல்லாம் நீரும் உணவும் பெறாது கொடுந்துயர் உழக்க, அப்பரையுந் திருஞான சம்பந்தரையுஞ் சார்ந்துவந்த அடியார்களும் உணவின்றிப் பசித்து வருந்தினார். அதுகண்டு உளம் வெதும்பிய அப் பெரியார் இருவரும், இறைவனை நோக்கி வழுத்திப்பாட, இறைவன் எங்ஙனமாகவோ அவ்விருவர்க்கும் பொற்காசுகள் வழங்கினனென்றும், வழங்கிய அப்பொற்காசுகள் கொண்டு அவர்கள் உணவுப் பொருள் தொகுத்து அடியார் தம் அழிபசி தீர்த்தனரென்றும் அவ்விருவரும் அந்நேரத்திற் பாடியருளிய திருப்பாட்டுகளாலும், அவ்விருவரையும் அடுத்துத் தோன்றிய சுந்தரமூர்த்தி நாயனார் தாம் அருளிச்செய்த திருவீழிமிழலைத் திருப்பதிகத்தில்,
இருந்து நீர் தமிழோடிசை கேட்கும்இச்சையாற்
காசு நீத்தல் நல்கினீர்
என அதனைக் குறிப்பிட்டமையாலும் நன்கறிகின்றனம் அல்லமோ?
இன்னும், இக்குமானி என்னும் மருத்துவமாதரார் ஒருவர் இருந்தாற்போலிருந்து திடீரெனக் காணாமற்போயினர். அவராற் பலர்க்குப் பேருதவி கிடைத்துப் பெரு நன்மை விளைந்து வந்தமையாற் சடுதியில் அவர் காணாமற் போனது குறித்துக் குடிமக்களும் பிறரும் பெருந்துயர் கூர்ந்து, அவரைக் கண்டுபிடிக்க எவ்வளவோ முயன்று பார்த்தனர். எவராலும் அதுமுடியவில்லை. கடைசியாக, உவில்வர்வேரர் என்னும் புகழோங்கிய சமயகுரு ஒரு நாள் தாம் புரிந்த அறிவுரை கேட்கவந்த குழுவினரை நோக்கி இன்றைக்கு நீவிர் எல்லீரும் ஒருமுகமாய் நின்று, மாயமாய் மறைந்துபோன இக்குமானி யம்மையைத் தரும்படி இறைவனை வேண்டித் தொழுமின்கள்! எனக் கட்டளையிட்டார். அவர் இட்ட கட்டளைப்படி அக்குழுவினர் அனைவரும் ஒருவழிப்பட்ட உள்ளம் உடையா ராகி, மறைந்து போன அம்மாதரைத் திரும்பத் தரும்படி வேண்டிக் கேட்டனர். அவர்கள் அங்ஙனம் வேண்டிய அதேநாளின் பிற்பகலில், அம்மாதரின் உடலம் ஒரு நீர்நிலையினின்றும் கண்டெடுக்கப்பட்டது.
இம்மெய்ந்நிகழ்ச்சியினாலுங் கடவுளை வேண்டிக் கேட்பது வீண்போகா தென்பது தெளியப்படுகின்றதன்றோ? நாம் வேண்டுவன வெல்லாங் கடவுளிடமிருந்து நேரே வருமென்று எதிர்நோக்குதல் ஆகாது. நேர்முகமாகவோ, அல்லது அவ்வுதவிகளைச் செய்யத்தக்கார் வாயிலாகவோ அவைகிடைத்தல் திண்ணம். ஆனால், கேட்டது கேட்டபடி பெறுதல் கேட்பாரின் மனத்திட்பத்தையுங், கேட்கப்பட்டதன் நன்மை தீமையையும் பொறுத்திருக்கின்றது. எது தக்கதோ அது கிடைப்பதுமட்டும் உறுதி.
எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்
(குறள் 666)
என்னுந் திருக்குறளும் இதனையே வற்புறுத்துதல் காண்க.
இன்னும், உயர்ந்த நூலாசிரியரும் ஆங்கில நல்லிசைப் புலவருமான அந்துரு லாங்கு (Andrew Lang) என்பவர் தம் நண்பர் ஒருவரின் தோற்றத்தைக் கண்ட நிகழ்ச்சி வியக்கற்பால தொன்றாயிருத்தலின், அதனையும் மற்றொன்றனையும் இங்கெடுத்துக் காட்டி அவ்வளவில் இப்பகுதியை முடித்து மேற்செல்வாம்;
இக்குறிப்பிட்ட ஆசிரியர் தமது இல்லத்தின் முன்புறத்தே ஒருபலகணி யண்டையிலிருந்து ஒருநாள் எழுதிக் கொண்டிருக் கையில், எவரோ தமது தோட்டக்கதவைத் திறந்து கொண்டு உள்வருதலைக் கண்டார். கண்டு, வந்தவர் யார் என உற்று நோக்க, அவர்…. எனப்பெயரிய தம் நண்பராயிருத்தலைத் தெரிந்தார். தெரிந்ததும், அந்நண்பர் தாம் இருக்கும் பலகணிக்கு நேராக வரும்வழியே வருதலும் பார்த்தார். அப்போது பட்டப்பகல்வேளை. உடனே தம் நண்பரை வரவேற்றற் பொருட்டாக அவ்வாசிரியர் தமது இருக்கையினின்றும் எழுந்து, தாம் இருந்த அவ்வறையின் கதவைத் திறந்து அவரை யுள்ளே அழைத்தற்காகக் கதவண்டை சென்றார். சென்று கதவைத் திறந்ததுந் தம் நண்பரை அங்கே காணாராகிப் பெரிதுந் திகைப்புற்றனர். பின்னர், அதேநாளின் நண்பகற் பொழுதில் தமது பகலுணா எடுப்பதற்காக அவ்வாசிரியர் அதே நண்பரது இல்லத்திற்கு ஏகி, அவர்தம் மனைவியாரை நோக்கித் தாம் அன்றைக்காலையில் அவரைக் கண்ட வரலாற்றினை எடுத்துரைத்தார். அதுகேட்ட அவ்வம்மையார் பெரிதும் இறும் பூதுற்றுத், தம் கணவனார் அன்றைப் பகல் முழுதும் வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை யென்றும், ஆனால் அவரை அவ்வாசிரியர் தமது தோட்டத்தினுள்ளே வரக்கண்ட அதே நேரத்தில் அவர்தமது படுக்கையில் நோயாய்க் கிடந்தன ரென்றும் நுவன்றனர்.
இம்மெய்ந்நிகழ்ச்சியில் தம் நண்பரின் நினைவுருவினைக் கண்ட ஆசிரியர் அந்துரு லாங்கு இதற்கு முன்னெல்லாம் இத்தகைய வியத்தகு தோற்றங்களைச் சிறிதும் நம்பாதவராய், இன்னோ ரன்ன மறைபொருள் நிகழ்ச்சிகளைப் பேருழைப்பும் பேரறிவுங் கொண்டு துரிதாராய்ந்து அவற்றின் உண்மைகளைக் கற்றாரெல்லாம் ஏற்று மகிழ்ந்து கொண்டாடும்படி நிலைநாட்டிய நல்லிசைப்புலவரான மையர்சு (Mysers) என்னும் பேராசிரியரையும் பகடி செய்தவராவர்; பின்னர்த் தாமே தங்கட்புலனால் இத்தன்மையான மறைபொருட்டோற்றங்களைக் கண்டு, அவற்றின் உண்மைகளைத் தேர்ந்து தெளிந்த காலந் தொட்டே இவரும் அவைகளை நம்பி அரிய நூல் சில இத்துறையில் இயற்றினவர் ஆவர். அதுநிற்க.
இனிப், பிற்கூறப்படும் வியத்தகு நிகழ்ச்சியானது சிறந்த ஓர் ஆங்கிலக்கிழமைத் தாளில் வெளிவந்த தொன்றாகும். அத்தாளின் ஆசிரியர் அந்நிகழ்ச்சியின் மெய்ம்மையினைச் சான்றுகளான் ஆராய்ந்து உறுதிப் படுத்தியிருக்கின்றாராகலின், அதனையும் ஈண்டெடுத்து வரைகின்றாம்.
“ ஓர் இளையமங்கை தனக்கு மணமகனாக உறுதிப் படுத்தப்பட்ட இளையானிடஞ் சென்று சேர்தற்காகப் புகைவண்டியிற் ‘கேம்பிரிச்சு’ மாநகரை நோக்கிப் போய்க் கொண்டிருந்தாள். இடையே வண்டியானது தங்கும் ஒவ்வொரு நிலையிலும் அவன் தன்னிருக்கையினின்றும் எழுந்து சாளரத்தின் வெளியே நோக்கித் திகில்கொண்ட முகக்குறி புடையனாய்த் துன்புற்றுக் கொண்டிருந்தான். அவளுக்கு அண்மையில் அமர்ந்திருந்த ஒரு முதியவர் அப்பெண் அங்ஙனம் ஒவ்வொரு நிலையிலும் எழுந்து சாளரத்தின் வெளியே நோக்கி வெருக்கொண்டு வெம்புதலைத் தொடர்பாக நோக்கி ‘அம்மே நீ ஏன் இங்ஙனம் எழுந்தெழுந்து வெளியே நோக்கி, வருந்துகின்றனை?’ என வினவினர். அதற்கு அப் பெண் ‘யான் கேம்பிரிச்சிற் காணப்போகும் என் காதலர், இடையே இவ்வண்டி தங்கும் ஒவ்வொரு நிலையின் மேடைமேலும் போந்து என்னை வண்டியைவிட்டுக் கீழே இறங்கும்படி பெருந்திகிலொடு கைக்குறி காட்டுகின்றார்; என்செய்வேன்!’ என மொழிந்து தன் கைகளை நெரித்தனள். அதன்மேல் அம்முதியவர், ‘அப்படியானால், யான் சொல்வதை எடுத்துக் கொள்! அடுத்த நிலையில் அவ் விளைஞர் மறுபடியும் போந்து உனக்குக் கைக்குறி காட்டினால், உடனே நீ வண்டியை விட்டுக்கீழே இறங்கிவிடு!’ என வலியுறுத்திச் சொன்னார். அடுத்த நிலையில் அவ் வண்டி வந்து நின்றதும், அவ்வளைஞர் அம் மேடைமேல் மறுபடியும் போந்து, முன்னையைவிட இப்போது கழிபெருந் திகில் கொண்டு கைக்குரிகாட்டக் கண்டாள். கண்டதும் அப்பெண் அம் முதியவர் கற்பித்த படியே வண்டியைவிட்டுக் கீழே இறங்கிவிட்டனள். அம்முதியவரும் அவளுடன் கூடவே வண்டியைவிட்டு இறங்கினர். இருவரும் பின்னர்ப் போந்த வண்டியிலேறிக் கேம்பிரிச்சு மாநகர் சேர்ந்தனர். அங்கே சேர்ந்ததும், அதற்கு முன் தாம் ஏறியிருந்த புகைவண்டியின் பெட்டி ஓரிடரில் அகப்பட்டு அழிந்தமையால் அதிலிருந்தவர்களிற் பெரும்பாலார் மாண்டுபோன செய்தி தெரிந்து வியப்புற்றுத், தாம் உயிர் தப்பினமைக்காக இறைவனுக்கு நன்றி செலுத்தினர். இங்கே நினைவிற் பதிக்கற்பால தொன்றுளது; அவ்விளம் பெண்ணின் காதலனது ஆவியுருவம் அவட்கு முன்னே ஒவ்வொரு வண்டிநிலையிலுந் தோன்றி, அவள் அவ் வண்டியை விட்டுக் கீழே இறங்குமாறு கைக்குறி செய்த நேரத்தில், அவ்விளைஞன் கேம்பிரிச்சு வண்டி நிலையின் ஓரறையில் இவளது வரவு காத்து அயர்ந்து நன்றாய் உறங்கிக் கொண்டிருந்தனன்; விழித்தபின் அவன் இச் செய்தியை அறியாதவனாகவே காணப்பட்டனன் என்பது.



