தொலைவிலுணர்தல் மறைமலையடிகள்

5. உணவு

இனி, உறக்கத்திலும் உணர்வொடு கூடியிருந்து இளைப்பாறவும், அதனால் மனவுணர்வை நுட்பமாக்கவும், அவ்வுணர்வை வளர்த்தற்கு ஒப்பற்ற கருவியாய் வாய்த்த நமதுடம்பைப் பாதுகாக்கவும் ஒரு பெருங்கருவியாய் உள்ள உணவைத் தூயதாகத் தெரிந்தெடுத்து உட்கொள்ளுதல் பெரிதுங் கருத்திற் பதிக்கற் பாலதாகும். ஏனென்றால் உணவின் றன்மைக்கு இசையவே உடம்பின் முதற்பொருள்களும் உருவாக்கப்படுகின்றன. கொழும்புல்லுந் தெளிந்த மலையருவி நீரும் பருகிவாழும் மான் மரை குதிரை ஆ முதலான விலங்கினங் களின் உடம்பு எவ்வளவு தூயதாகவும் எவ்வளவு அழகியதாகவும் அமைந்திருக்கின்றன! அவ்விலங்குகள் எவ்வளவு அமைதியாகவுங் களங்கமற்றனவாகவும் இருக்கின்றன! அருவருப்பான வுணவைத் தின்னும் பன்றியும் நாயும் பூனையும் புலியும் முடைநாற்றம் வீசும் பொல்லா உடம்புடை யனவாயிருத்தலோடு அவை எவ்வளவு கொடுமையும் வெடுவெடுப்பும் மிகப்பெற்றனவாயு மிருக்கின்றன! இவற்றை நோக்குமிடத்து உணவினால் விளையும் நன்மை தீமைகள் தெளிவாகப் புலப்படுகின்றனவல்லவோ?

இனித், தூயவான உணவுப் பொருள்களை உட்கொள்ளப் புகுந்தாலும், மக்கள் ஏனையுயிர்களினுந் தமக்குள்ள அறிவின் மேன்மைக்கு ஏற்பச் சுவை மிகுந்தவைகளையே ஓர் அளவாக அருந்திவரல் வேண்டும். பல்வகைச் சுவைகளும் தெரிந்து உண்ணாதவரையில் நாவினுணர்வும் அதனோடு ஒற்றுமைப்பட்ட மனனுணுர்வும் நுட்பமாய்ப் பெருகி வளரா; ஓர் அளவாய் உண்ணாமல் மிகுத்துண்டாலுங் குறைத் துண்டாலும் உடம்பு நோய்க்கு இரையாய்விடும். மேலும், மிகுதியாய்த் தின்பவர்க்குத் தூக்கமுஞ் சோம்பலும் மேற்பட்டு அவர்களது அறிவினையும் மழுங்கச் செய்யும்; குறைத் துண்பவர்க்குக் களைப்புந் தளர்வும் மிகுதிப்பட்டு அவர்களது அறிவினையும் நிலைகலங்கச் செய்யும். ஆகையால், அவரவர் உடம்பிற்கு வேண்டும் அளவறிந்து உணவெடுப்பது எல்லார்க்கும் இன்றியமையாத கடமையாம். இந் நுட்பங்கள் உணராதார் பலர், பசியெடுத்த வேளைக்கு எது கிடைத்தாலும் நிறைய உண்ணுதலை விடுத்து, நாச்சுவை பார்ப்பதுங் குறையச் சாப்பிடுவதுங்கூடா, என எளிதாய்ப் பேசிவிடுகின்றனர். அறிவு விளக்கத்தை நாடாதவர்க்கு, அங்ஙனஞ் சுவை தெரிந்து அளவாய் உண்ணாமற் கண்டதைக் கண்டமட்டும் எருமைபோற்றின்பதும் எதனையும் எளிதாய்ப் பேசி ஏளனஞ் செய்வதும் பொருத்தந்தான். அறிவுவளர்ச்சியினை நாடு வார்க்கோ சுவையுணர்வும் அளவாய் உண்டலும் இன்றி யமையாது வேண்டப் படுவனவேயாம். அங்ஙனஞ் சுவை தெரிந்துண்ணல் வேண்டின் திறமான பண்டங்களை வாங்கு தற்கும் அவற்றை நலம் பெறச் சமைத்தற்கும் மிகுந்த பொருள் வேண்டுமேயெனின்; அப்படியன்று, விலைகுறையக் கொண்ட கீரை, கிழங்கு, வரகு, சோளம் முதலிய நயத்த பொருள்களே யாயினும், அவற்றையும் நுண்ணறிவால் எவ்வளவோ சுவைமுதிரச் சமைத்துக் கொள்ளலாம்; விலையுயர்ந்த பருப்பு, நெய், வாழைக்காய், உருளைக்கிழங்கு, தேங்காய்,கோதுமை, சீரகச்சம்பா முதலான சீர்த்த பொருள்களேயாயினும், நுண்ணறிவொடு சமைக்கப்படா விட்டால் அவை சிறிதுஞ் சுவைப்படமாட்டா. ஆகவே, சுவை கனியச் சமைக்கும் நுண்ணறிவு முயற்சி யுண்டானால் எத்தனை நயத்த பொருள் களையுஞ் செவ்வையாக ஆக்கிக் கொள்ளலாம்; ஆகையாற், சுவைமிக்க உணவு கூட்டுதற்கு விலையுயர்ந்த பண்டங்களும் பெரும்பொருளும் வேண்டுமெனக் கூறுதல் சிறிதும் பொருந்தா தென்க. சுவைமிக்க உணவு கூட்டுதற்கு நுட்ப அறிவு வேண்டு தலானுஞ், சுவை முதிர்ந்த உணவை யுண்பார்க்கு நுண்ணறிவும் மகிழ்ச்சியும் உண்டாதலானும் இனிய உணவின் மேன்மை யாங் கூறாமலே எவர்க்கும் விளங்குவதொன்றேயா மென்க.

இன்னும், இன்சுவை யுணவினால் உடம்பு நோயின்றித் தளிர்த்தலால் அதன் மேன்மை பின்னும் பின்னும் ஆராயற் பாலதேயாம். இக் காலத்து உடம்பு நூல் வல்ல ஆங்கிலப் புலவோர், உண்ட உணவு தீனிப்பையிற் சேர்ந்த அளவானே அங்கது நன்றாய் அரைக்கப்பட்டுக் குழம்புபோல் ஆதற்கு, வாயில்வைத்த கவளத்தொடு சேர்ந்து உள்ளிறங்கும் வாய்நீர் நிரம்பவும் உதவிசெய்கின்றதென்று உரைக்கின்றார்கள். தீனிப்பை மெல்லிய தன்மை யுடையதாகையால், அஃது உணவை ஏற்றுக்கொள்ளும் முன் அவ்வுணவை நன்றாய் அரைத்துப் பதப்படுத்திக் கொடுக்கும்படி வாயும் அதன் கண் அண்ணமும் பல்லும் நாவும் நீரும் அமைக்கப் பட்டிருக்கின்றன. பாருங்கள்! வாயில் ஓர் உணவுப்பொருளை வைத்தவுடனே நாவின்கீழ் நீர் சுரந்து அதனை நனைத்துக் கொண்டேயிருக்கின்றது; நாவோ அதனை இருபுறத்துமுள்ள பற்களிற் சேர்த்துச் சேர்த்து அரைப்பித்து மேலண்ணத்திற் பொருத்தி இனிமைகாட்டிப் பிறகதனைக் கீழ் இறக்கி விடுகின்றது; இவ்வாறு அரைபட்டுக் கீழ்ச் சென்ற அவ்வுணவு இரைப்பை நீரோடு எளிதிற் கூடிச் செரித்துப் போகின்றது. இங்ஙனம் வாயினுள் அரைக்கப்படாமல் தீனிப்பைக்குட் செல்லும் உணவோ அங்கே வலிதா யிருத்தலால் இரைக் குடலால் அரைக்கப்படாமல் நிற்கின்றது; அதனால் அது செரியாமற் போதலோடு மெல்லியல்பு வாய்ந்த தீனிக் குடலுக்குங் கடுந்தொழிலைக் கொடுத்து அதனையும் புண்ணாக்கித் தானும் பதனழிந்து நஞ்சாய் விடுகின்றது. இதனாலேதான் மாந்தரிற் பலருக்கு வயிற்றுளைச்சலென்னும் நோய் உண்டாகின்றது; வலிய பொருளை அரைக்க மாட்டாமற் புண்படுகின்ற தீனிக் குடலிலிருந்து ஒழுகுஞ் செந்நீர் வெளிப்படுங்கால் மிகுந்த உளைச்சலை உண்டாக்குகின்றது. இவ்வாறெல்லாம் உடம்பி னகத்தே நடைபெறும் நிகழ்ச்சிகளை நன்குணர்ந்த வர்களுக்கு, உணவை மெல்லாமல் அப்படியே விழுங்குவதால் நேரும் பொல்லாங்கின் கொடுமை எவ்வளவு பெரிதாய்க் காணப்படும்! இவற்றுள் ஒன்றும் உணர்ந்து பாராமல் உணவை மென்று தின்னல் ஆகாது என்றும், நெடுநேரம் மெல்லுதற்கு ஒழிவு காலம் இல்லை என்றும் எளிதாய்ப் பேசித் திரிபவர்கள், நுண்ணு ணர்வும் இன்பமும் பெறாமற் பலவகைநோய்களாற் பற்றப் பட்டுக் காலம் முற்றாமுன்னரே இறந்தொழிவர்! வாயிற் பெய்த ஒவ்வொரு கவளத்தையும் வாய்நீரிற் கூட்டி நன்றாய் அரைத்துக் குழைத்து உண்பவர்கள் சுவையால் இன்பமும் உணர்வும் மிகப்பெற்று, அதனை மென்பதப்படுத்தி யிறக்குதலால் தீனிப் பையையும் புண்படுத்தாமல் வைத்து, அவ்வுணவையும் எளிதிற் செரிப்பித்துத் தூயசெந்நீரை உண்டுபண்ணிக் கொள்வராகலின், அவர் நீண்டநாள் திண்ணியராய் உயிர்வாழ்ந்து அறிஞராய் விளங்குவர் என்க இன்னும், வாயிற் சுரக்கும் நீரின்கண் உடம்பை வளர்க்கும் முதற்பொருள்கள் அமைந்திருக்கின்றன வென்றும், அதனால் வாயிற் பெய்தபண்டம் அந்நீரில் நன்றாகக் கலந்து குழம்பாய் உள்ளிறங்குமாயின், தீனிப்பை அதனை எளிதாகச் செந்நீரிற் சேர்ப்பிப்பதோடு அவ் வாய் நீரிலுள்ள வலிய முதற் பொருள்களையும் அதன் வழியாக எங்கும் பரவச் செய்து உடம்பை வலுப்படுத்து மென்றும் இக்காலத்து உடம்பு நூல் வல்லாருங் கூறுதலின் உணவுப் பண்டத்தை நன்றாக வாய்நீரிற் கலப்பித்தற்கு அதனை அடுத்தடுத்துப் பல முறையும் மென்று தின்பது இன்றியமையாததாகின்றது; இதுவன்றியும், பலமுறை மெல்வதால் தாடையும் நன்றாய் அசைந்தசைந்து வலுப் படுகின்றது. இங்ஙனமெல்லாஞ், சுவையின்பமும், நுண்ணு ணர்வும், எளிதிற் செரித்தலும், உடம்பு வலுப்படுதலும் முதலான நன்மைகள் பலவும் விளைதற்கு வாயிலா யிருத்தலின் உணவை நன்றாய் மென்றுண்ணும் பழக்கம் அறிவுடையார்க்கு முதன்மை யாக வேண்டப்படுவதேயாகும். தமது நினைவைப் பிறர்க்குப் புலப்படுத்தவும் பிறர் நினைவைத் தாம் அறிந்து கொள்ளவும் பழகும் அறிஞர்க்கு உணவைச் சுவைப்பட மெல்லுதல் அவர் கருதிய பயனை விரைவிற் றருவதாகுமென்க.

இனி, இயல்புள்ளவர்கள் நெய் பால் தயிர் வெண்ணெய், உழுந்து துவரை கோதுமை அரிசி, வாழைக்காய் தேங்காய் உருளைக்கிழங்கு, நாரத்தம்பழம் சீமையிலந்தைப்பழம் வாதுமைப்பழம் முதலான தூய வலிவான உணவுப்பொருள்களைக் காலமும் இடமும் அளவும் அறிந்து உட்கொண்டு வருவார்களாயின், அவர்களுடம்பு அழகுமுதிர்ந்து மினுமினு வென்று மிளிர்வதோடு, அறிவும் மிக நுணுகி வளர்ந்து பிறராற் செயற்கரிய செயல்களை யெல்லாஞ் செய்ய வல்லதாகும். மற்று, இயல்பில்லாத வர்களோ தமது நிலைமைக்குத் தக்க அறைக்கீரை தூதுளங்கீரை, சிறுகீரை, பொன்னாங் காணிக்கீரை, மணித் தக்காளிக்கீரை, கலவங்கீரை முதலியவற்றைப் பல வகையாகப் பதப்படுத்தி மேற்சொன்னவாறு அருந்தி வருவார்களாயின், அவர்களும் மெல் இயல்புள்ளவர்கள் அடையும் பயன் களெல்லாம் அடைகுவர். விலையுயர்ந்த வலிவுப்பொருள்களை உண்பவர்களுங் கூட இங்கே கூறிய கீரைவகைகளைச் சமைத்துண்ணல் வேண்டும்; செந்நீர் துப்புரவாதற்கும், உடம்பிற்சேரும் நச்சுநீரை அகற்றுதற்கும், உடம்பினுறுப்புகளை உரப்படுத்துதற்கும் இக்கீரை யுணவு இன்றியமையாது வேண்டப்படுவதாகும். இயல்புடையவர்க்கே கட்டாயமாய் வேண்டப்பட்ட இவ்வுணவை, விலை சிறிதாயிருத்தல்பற்றித் தாழ்வாக நினையாது உயர்வாகவே நினைந்து ஏராளமாய் வாங்கி உண்ணுதற்கு ஏழை எளியவர்கள் முன்னிற்பாராக.

இனிச், சீமையிற் புகழ்பெற்ற ஆங்கில மருத்துவராய் விளங்கும் தீராநோய்கொண்டு வருவார் பலர்க்குங் கீரைகளையும் ஆவின்பாலையும் பலவகையாகப் பதப்படுத்திக் கொடுத்து அவர்க்குள்ள நோய்களை உலகம் வியக்கும்படி தீர்த்துவருகின்றார். தங்கண் நச்சுநீர் இன்றி, உடம்பிலுள்ள நச்சுநீரை அப்புறப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தவை கீரை பால் முதலிய சைவ வுணப் பொருள்களேயாம் என்று அவர் மிகவுந் திறம்பட நூல்கள் எழுதி விளக்குவதொடு, தாங் கூறியவற்றைப் பழக்கத்திலுஞ் செய்துகாட்டுகின்றார். அவர் கூறுவதிலுஞ் செய்வதிலும் இறைச்சி யுண்பது பெரிதுந் தீதாம் என்னும் உண்மை நன்கு விளங்கிவருகின்றது. இறைச்சியில் நச்சுநீர் இருததலால், அதனை உண்பவர் உடம்பிலும் நச்சுநீர் பெருகி உரைத்தற்குங் கேட்டதற்குங் கொடுமையான பல நோய்களை வருவிக்கின்றது. ஆதலால், இயல்புள்ளவர். இல்லாதவராகிய இருதிறத்தாரும் ஆடு மாடு பன்றி கோழி மீன் முதலான எவ்வகைப்பட்ட உயிரின் உடம்பையுஞ் சிதைத்து அவற்றின் ஊனை உண்ணாதிருக்கக் கடவராக. ஊனுண்ணல் இரக்கமற்ற கொடுஞ்செயலாய் இருப்பதோடு அதனைச் செய்கின்றவர்க்கும் அது நோய்களை விளைத்து அவர் உயிரைக் கொள்ளை கொண்டும் போதலால், தற்பாதுகாப்பின் பொருட்டாகவாவது ஒருவரும் ஊன்றின்றலாகாது. ஊனுக்குச் செலவழிக்கும் பணத்தில் எட்டிலொரு கூறிருந்தால் இனிய நல்ல சைவவுணவு உட்கொண்டு நன்கு வாழலாம் என்று ஊனுண்பாரே கூறுகின்றனராதலாற், செட்டாய்ச் செலவு செய்து எஞ்சிய பணத்தை நல்ல துறைகள் பலவற்றிற் பயன்படுத்துதற்குச் சைவவுணவே மிகவும் இசைந்த தென்று கடைப்பிடித்தல் வேண்டும். இன்னும், ஏழை எளியவர்கட்குச் சோளம், கேழ்வரகு, கம்பு, வரகு, தினை, சாமை முதலான உரமான சைவ வுணாப்பொருள்கள் நயமாய்க் கிடைக்குமாதலால், அவர்கள் இறைச்சியுண்டலை அறவே விட்டு இம்மணிகளைக் கைக்கொள்வாராக. நயமாய் விற்கும் இப்புன்செய்ப் பயிர் நன்செய்ப் பயிர் விளைவுகளைப் பெற்று நன்றாகச் சமைத்துப், பரபரப்பின்றி மெதுவாகச் சுவைத்துத் தின்னல்வேண்டும். மக்களினுந் தாழ்ந்த ஆடுமாடு குதிரை முதலான உயிர்கள் இத் தொழிலை எவ்வளவு திருத்தமாய்ச் செய்கின்றன! அவை தீனி எடுக்குங்கால் விரைவதேயில்லை, அதனை மெல்ல மெல்ல வாயுள் வைத்து அரைத்து மன நிறைவோடு உள்ளிறக்குகின்றன. மக்கள் விலங்குகளினும் மேலான அறிவைப் பெற்றும், இவ்வுயிர்களிடத்துக் காணப்படும் இயற்கையைப் பின்பற்றி ஒழுகாமல், அதற்குப் பெரிதும் மாறுபட்டு நடக்கின்றார்கள் இலையில் நிறையக்குவித்த சோற்றையுங் கறியையும் ஐந்து நொடிகளில் எடுத்துப் பரபரப்பொடு விழுங்கி எழுந்தவர்களையும் பார்த்திருக்கின்றோம். இத்தனை பரபரப்போடு உண்பவர்களுக்கு யாது சுவை தெரியப் போகின்றது! உண்ட வுணவை அறச்செய்வதற்கு முதன்மையாக வேண்டப்படும் வாய்நீர் பரப்பரப் போடுண்ணும் உணவிற் கலவாதாகையால், அங்ஙனம் விழுங்கப்படும் உணா தீனிப்பையிற் செரியாமல் அழுகிநின்று பல நோய்களை வருவிக்கும். அல்லும் பகலும் நெற்றித் தண்ணீர் நிலத்தில் விழக் கைவருந்த மெய்வருந்தப் பாடுபட்டுப் பணந்தேடுவது எதன்பொருட்டு? சாண் வயிற்றின் பொருட்டன்றோ? இவ்வாறெல்லாம் பாடுபட்டும், அப் பாட்டினால் வந்த அரிய உணவை அமைதியாயிருந்துண்டு மகிழாதவர் பெறும் பயன் என்னை!

இனி, மற்றொரு முதன்மையான செயலிலும் மாந்தர் உலக இயற்கை நன்னிகழ்ச்சிக்கு மாறாய் நடக்கின்றனர். மக்களினும் கீழ்ப்பட்ட மற்றை யெல்லா உயிர்களுங் காய் கனி கிழங்கு கீரை கடலை உழுந்து துவரை முதலிய எல்லா உணாப்பொருள் களையும் இயற்கையில் உள்ளபடியே யெடுத்து நன்றாய் மென்று தின்கின்றன. மாந்தரோ அவற்றை நெருப்பில் வேவுவித்து அவற்றின் இயற்கைத் தன்மையைக் கெடுத்து உண்கின்றனர். இங்ஙனஞ் செய்தலால் அவ்வுணாப் பொருள்களில் உள்ள வலுவான பாகம் அழிந்துபோகின்றது. இத் தின்பண்டங்களைப் பச்சையாக உண்ணுஞ் சிற்றுயிர்களுக்குள்ள வலிவும் நலமும், இவற்றை அவித்துத் தின்னும் மாந்தர்க்கு வருவதில்லை. இயற்கைக்குப் பொருந்த இவற்றைப் பச்சையாகவே உண்ணுஞ் சிற்றுயிர்கள் இவற்றையுண்ட பின் இவற்றின் பிழிவுகள் அவைதம் உடம்பில் நன்றாய்க் கலந்து போகச், சக்கையான பாகம் அவைகளால் வருத்தமின்றி வெளியே கழித்து விடப்படுகின்றது. மக்கள் உண்ணும் உணவிற் பிழிவான பாகம் சிறிதேயிருத்தலால், அஃது அவர்கள் உடம்பிற் கலக்கக் காலந்தாழ்ப்பதோடு, அதனிற் பிரிந்த சக்கையும் எளிதில் வெளிப்படுவதில்லை; இதனாலேதான் பலர் மலச்சிக்கலாற் பெரிதுந் துன்புறுகிறார்கள்! விலங்கினங்களில் எவையேனும் இங்ஙனம் மலச்சிக்கலாற் றுன்புறுவதுண்டோ? கூறுமின்! கடலை துவரை உழுந்து முதலியவற்றிலுள்ள தோலுந் தவிடும் மலச்சிக்கலைப் போக்குந் தன்மை வாய்ந்தன; அவற்றை மக்கள் கழித்துவிட்டு அவற்றின் உள்ளுள்ள பருப்பை மட்டும் நன்றாய் வேகவைத்துத் தின்கின்றனர். அதனால் அவர் மலச்சக்கையைக் கழிக்க இயலாமல் வருந்துகின்றனர்; ஆனால், இவர்களாற் கழித்துவிடப்பட்ட உமியையுந் தவிட்டையும் இரையாகக் கொள்ளும் அச்சிற்றுயிர்களோ அங்ஙனம் வருந்துவதில்லை, அவை நல்ல செம்மை வாய்ந்து திண்ணியவாய் இருக்கின்றன.

அவ்வாறாயின், மக்கள் இனி விலங்குகளைப் போல் எல்லாவற்றையும், பச்சையாகவே உண்ணல் இயலுமோ வெனின்; அமெரிக்கா இங்கிலாந்து முதலான அயல்நாடுகளில் இந் நுட்பங்களை நன்குணர்ந்த அறிவுடையோர் பலர் காய் கனி கிழங்கு முதலான எல்லா உணவுப் பொருள்களையும் பச்சையாகவே உண்ணப் பழகி வருகின்றார்கள்; அவர்களிற் பலர் அப் பழக்கத்திற் றேர்ச்சிபெற்றும் விளங்குகிறார்கள். இவ்வாறு இம் மேலோர்க்கு இப் பழக்கம் எளிதாய் இருப்ப, நம் தமிழ்நாட்டிலுள்ளவர்க்கு மட்டும் இது கடுமையாய்க் காணப்படுவானேன்? நம்மனோர்க்கு மனவுறுதியும் மேலான துறைகளிற் செல்லுதற்கு ஆவலும் இல்லாமையோடு, அறிவில்லாத பிறர்செய்யும் ஏளனத்திற்கும் பெரிதும் அஞ்சுவர்; தாம் பழகியதொன்று எவ்வளவு தீயதாய் இருப்பினும் அது வழக்கமானது, விட முடியாது என்று சொல்லிக்கொண்டே யிருப்பர். இத் தன்மையுடையார்க்கு எல்லா உணாப் பொருள்களையும் பச்சையாக உண்டலே நல்லது எனக் கூறுவமாயின், அவ்வுண்மை கூற வரும் நம்மையே ஏளனஞ் செய்து நகையாடு

தற்கு முந்துவர். மற்றை நாட்டிலுள்ளவர்கள் கல்வியிலுங் கைத்தொழிலிலும் உழவிலுங் கொண்டுவிற்றலிலும் நூலுணர்ச்சியிலும் புதிய புதிய பொறிகள் ஆக்குவதிலும் நாளுக்குநாள் வளர்பிறைபோற் பெருகிவர நம்மவரோ இவையொன்றிலுங் கருத்தில்லாதவர்களாய் நாளுக்குநாள் தேய்பிறைபோற்குறைந்து கொண்டே போகின்றனர்! ஐயகோ! இவர்கள் தமதறியாமையினையுந் தீயவழக்கங்களையுஞ் சோம்பலையும் நல்லோரைப் பழித்தலையுங் கைவிட்டு முன் ஏறும் நாள் எந்நாள்! அது நிற்க.

இனி, மக்கள் எல்லாருஞ் சமைத்துண்டலை அறவே விடுத்து, எல்லா உணவுப் பொருள்களையும் பச்சையாகத் தின்றல் இப்போது எளிதில் முடியாததாய்க் காணப்படுதலால், உள்ள நிலைமையை இயன்றவரையிற் சீர்திருத்துதற்கு முயறலே பயன்படுவதாமெனின்; எல்லாரும் அங்ஙனஞ் செய்தல் இயலாவிடினும் முக்கால நிகழ்ச்சிகளையும் உணர்தற்கு மிக விரும்புகின்றவர்களாயினும் எல்லா உணவுப் பொருள்களையும் பச்சையாகவே உட்கொள்ளுதற்குப் பழகிவரல் வேண்டும். தீயில் அவற்றை வேவுவித்து உண்ணும் மற்றையோர் தமது உடம்பைச் செவ்வையான நிலைமையில் வைத்தற்கு வேறு சில செயற்கை முறைகளைப் பின்பற்றல் வேண்டும். ஏனென்றால் இயற்கை முறைக்கு மாறான தொன்றைச் செய்து அதனால் உடம்புக்கு ஒரு பொல்லாங்கு வந்தாற் பின்னர் அதனை நீக்குதற்கு மற்றொரு செயற்கை முறையினைப் பின்பற்ற வேண்டுவது கட்டாயமாய் இருக்கின்றதன்றோ? பச்சையாய் உள்ள காய்கனி கிழங்கு கீரை விதைகளில் உடம்புக்கு வேண்டிய வலிவான பொருள்கள் அத்தனையும் அமைந்திருக்கின்றன. ஆனால், அவற்றை நெருப்பிலிட்டு வேவுவித்தாலும், வேவுவித்த நீரை இறுத்து விட்டாலும் அவற்றின்கண் இருந்த பசையும் ஆவியும் அகன்று அவை சாறற்ற வெறுஞ் சக்கையாய் விடுகின்றன. அதனால், அவை தீனிப்பையிற் செரித்துச் செந்நீராய் மாறுதற்குஞ், செந்நீரிற் சேராது கழிந்த சக்கையை வெளிப்படுத்துதற்கும் இன்றியமை யாத நெய்ப்பும் ஆவியுஞ் சாறும் இல்லாமற் போதலால், பெரும்பாலார்க்குச் செரியாமையும் மலச்சிக்கலுந் தோன்றி அவரை வருத்தி வருகின்றன உணாப் பொருள்களைப் பச்சையாக உண்ணாமல், இயற்கைக்கு மாறாய் அவற்றை வேவுவித்து உட்கொள்ளுதலால் இப் பொல்லாங்குகள் நேர்கின்றன. செயற்கையால் நேர்ந்த இப் பொல்லாங்குகளைத் தீர்க்க வேண்டுமாயின், அவற்றிற்கேற்ற செயற்கை முறைகளைக் கையாண்டே தீரவேண்டும். தீனிப்பைபிற் சென்ற உணவில் வேக்காட்டாற் பிரிந்துபோன நீர் திரும்பவும் அதிற் சேர்க்கப் பட்டாலன்றி அது செரியாது. ஆகையால், நாடோறும் ஒரு நாழிகைக்கு ஒருகால் இரண்டு மூன்று மிடறு தண்ணீர் அருந்திவரப் பழகுதல் வேண்டும். இங்ஙனம் பழகிவரவே, தீனிப்பை உணவைச் செரிப்பித்தற்கு வேண்டிய நீர் பெற்று அதனைப் பதப்படுத்தும். அதனொடு மலக்குடலிற் சென்ற சக்கை வேவுவித்த உணவின் கழிவாதலால் அது வெளிப்படுதற்கு வேண்டிய அளவு நெய்ப்பு அதனில் இல்லாமற் போக அது வறண்டு அக் குடலை இறுகப் பற்றிக் கொள்கின்றது; ஆதலால், அவ்வப்போது சேருஞ் சக்கையை அக்குடலினின்றும் அகற்றுதற்கு நீரேற்றி என்னுங் கருவிகொண்டு மாலைக் காலத்தில் கீழ்வாயிலின் வழியே, சிறிது விளக்கெண்ணெ யாவது பன்னீர்ச்சுவர்க் காரமாவது கலந்த ஒரு படி வெந்நீரை ஏற்றி அக்குடலைக் கழுவித் துப்புரவு செய்தலும் வேண்டும். இதனைக் கையாளும் முறைகளும் உடம்பின் நலம் பேணுதற்கு இன்றியமையாத ஏனைமுறைகளையும் யாம் எழுதிய ‘மக்கள் நூறாண்டு உயிர் வாழ்தல் எப்படி?’ என்னும் நூலுட் கண்டுகொள்க. அடுத்தடுத்துத் தண்ணீர் பருகுவதாலும் மலக்குடலைக் கழுவுவதாலுந் தீயிற் சமைத்த உணவை உட்கொள்ளுதலால் விளையும் பொல்லாங்குகளைக் கடக்கலாம் இவ்வாறெல்லாம் உணவையும் உணவால் வரும் பயன்களையும் ஓர் ஒழுங்காக் கியபின் உடம்பு மிகவும் நல்ல நிலைமையை எய்தித் தன்னிடத் துலவும் உயிரின உணர்வு மிகுதிப்படுதற்கு உதவி செய்யும் என்க. செவ்வையான வீடு கட்டவேண்டும் ஒருவன் அதற்குரிய கல்லுஞ் சுண்ணமும் மரமுந் தேடித் தொகுத்துக், கட்டுதற் றொழிலில் வல்ல கொற்றர்களையும் அமர்த்திக் கொள்வது இன்றியமையாததாய் இருத்தல் போல, இந்த உடம்பை ஒழுங்கான முறையில் வைத்தற்கு விரும்புவோரும் அதற்குரிய பண்டங்களைக் கருத்தாய்த் தேடித் தொகுத்து, உள்ளுள்ள தீனிப்பை மலக்குடல் நெஞ்சப்பை முதலியன நன்றாகத் தத்தந் தொழில்களைப் புரியும்படி செய்தல் வேண்டும். ஆனது பற்றித், தீனிப்பை மலக்குடலைத் துப்புரவாய் வைத்து அவற்றை நடைபெற விடுமாறு சொல்லி முடித்தமையின், இனி நெஞ்சப்பையை ஒழுங்காக நடைபெறுவித்தற்பொருட்டு மூச்சுவிடுமுறையைச் சிறிது எடுத்துப் பேசுவாம்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

எங்களது இணைப்பைப் பயன்படுத்தி அமேசானில் பொருட்கள் வாங்கி ஆதரவு அளியுங்கள்!