
தொலைவிலுணர்தல் மறைமலையடிகள்
3. மனவெளி
இவ்வாறு நம் நினைவுகள் நடைபெறுதற்கு இடமாய் உள்ள நுண்ணிய இடைவெளியே மனவெளி எனப்படுவதாகும். மக்கள் உடம்புகளில் அமைந்த அமைவுகளும், அவ்வுடம்புகள் இருத்தற்கு இடமான இவ்வுலகத்தின் அமைவுகளும் தம்முள் ஒப்பனவாகும் என்பதும் நமதுடம்பாகிய இச் சிற்றுலகத்தினுள் ஒன்றினொன்று நுண்ணியவாயிருக்குங் கருவிகளுக்கு நேராகப் புறத்தே இப்பேருலகத்திலும் ஒன்றினொன்று நுண்ணியவான பொருள்கள் இயைந்து நிற்கும் என்பதும், இவ்வுடம்பின் அகத்தேயுள்ள மனம் நினைவு அறிவு முனைப்பு என்னும் நுண்கருவிகளோடு ஒத்த நுண்ணிய வெளிகள் புறத்தே உலகத்திலும் உண்டென்பதுஞ் சிவஞானபோத ஆராய்ச்சியில் நன்கு விளங்க விரித்துக் காட்டியிருக்கின்றேம். இவ்விடைவெளிகளெல்லாம் ஒன்றினொன்று நுண்ணியவாய் ஒன்றை ஒன்று ஊடுருவிக்கொண்டிருக்கும். மண் நீர் நெருப்பு காற்று வெளி முதலிய ஐம்பொருள்களுள் மிகவும் நுட்பமானது வான்வெளி என்று சொல்லப்படும். இவ்வான்வெளியினையும் ஊடுருவிக் கொண்டு இதனினும் நுட்பமானதாய் இருப்பதே மனவெளி என்று சொல்லப்படுவது. இவ்விடைவெளி மக்கள் உடம்பினுள் உள்ள மனத்தோடு இயைந்து எங்கும் நிறைந்து நிற்பது. இவ்விடைவெளியினுள் எல்லாருடைய மனமும் அம் மனத்திற் றோன்றும் எண்ணிறந்த நினைவுகளும் ஒருங்கு இயைந்து நிற்கின்றன. ஒவ்வொருவரும் நினைக்கும் நினைவுகளெல்லாம் – அவை பெரியனவேனும் சிறியனவேனும், உயர்ந்தனவேனுந் தாழ்ந்தனவேனும், நல்லனவேனும் தீயனவேனும் எல்லாங் கன்மேற் செதுக்கிய எழுத்துப்போல் அழியாமல் நிலைபெறுகின்றன. யான் எண்ணிய எண்ணம் பிறர் எவர்க்குந் தெரியாதென்று எண்ணி எவனும் மகிழா திருக்கக்கடவன். அவன் இப் பிறப்பு முழுதும் எண்ணிய எண்ணங்கள் மட்டும் அல்ல. மேற்சென்ற எண்ணிறந்த பிறவிகளில் எண்ணிய எண்ணங்களும், இனி வரும் பிறவிகளில் எண்ணும் எண்ணங்களும் எல்லாம் ஒரு தினையளவு கூடப் பிசகாமலுங் குறைந்து போகாமலும் அப்படியே இம்மனவெளியிற் பொறிக்கப்பட்டிருக்கின்றன. அருந்தவமுயற்சியால் தமது உள்ளத்தை ஒருவழி நிறுத்தி நுண்ணிய உள்பொருள்களின் இயல்புகளைக் காணும் ஆற்றல் வரும் போது, ஒவ்வொருவருந் தாந்தாம் எடுத்த பிறவிகளின் வரலாறுகளையும் அப் பிறவிகளிற் றாந்தாம் எண்ணிய எண்ணங்களையும் இம் மனவெளி என்னும் புத்தகத்தில் தெளிவாகக் கற்று அறிந்துகொள்வார்கள். இம் மனவெளியில் தமது நினைவைப் பொருத்திவைத்து உணரும் பழக்கம் வாய்ந்தவர்கள், வேண்டுமானால், தம்மிடத்து வரும் ஒவ்வொருவர் நினைவுகளின் இயற்கைகளையும் அவற்றின் நன்மை தீமைகளையும் எளிதிலே அறிந்து கொள்வார் களாகையால், ஒருவருக்குந் தெரியாமல் நாம் இச் செயல்களைச் செய்தோம், நாம் இந் நினைவுகளை நினைந்தோம் என்று எண்ணுவது மிக்கதோர் அறியாமையாகும். அது நிற்க.
இன்னும் இம் மனவெளியின் இயல்பை அறியாமை யினாலேதான், மக்களிற் பெரும்பாலார் தாம் எண்ணும் எண்ணங்கள் எல்லாந் தமக்கே உரியனவென்று பிழையாகக் கருதி மிகவுந் துன்பப்படுகிறார்கள். உண்மையாக நோக்குங்கால், நம்முள் ஒவ்வொருவரும் நினைக்கும் நினைவுகளிற் பெரும் பாலன பிறருடையனவே யாகும். மனவலிமை மிக்கவர்கள் நினைக்கும் நினைவுகள் இம் மனவெளியில் எங்கும் பரவி இதன்கட் டமது உள்ளத்தை வைத்தவர்கள் எல்லார் உள்ளத்திலும் பிறக்கும். கல்வியறிவாலாயினும், உயர்ந்த உள்பொருள்களை அறியும் அறிவாலாயினும் மிக்கவர்கள் தம் நினைவுகளை உலக முயற்சிகளினின்றும் பிரித்து ஆழ்ந்த நிலையில் உய்த்து இருத்தும்போது, அவர்கள் அறிவானது மனவெளியில் இயைந்திருக்கின்றது. இங்ஙனம் ஒரு தேயத் திலுள்ள அறிவுடையார் ஒருவர் தமது ஆழ்ந்த நினைவால் மனவெளியில் தொடர்பு உடையராயிருத்தல் போலவே, வேறொரு தேயத்திலுள்ள கற்றவரும் அதிற் றமது கருத்தை நாட்டியிருப்பர். அங்ஙனம் அவ்விருதிறத்தார் நினைவுகளும் அம் மனவெளியிற் பரவுதலால் ஒருவருடைய கருத்துகள் மற்றொருவர் உள்ளத்திலுந் திடீரெனத் தோன்றுகின்றன. இவ்வாறு நினைவுக் கலப்புகள் தோன்றுவது உயிரோடு இருப்பவர் தமக்குள் மட்டும் அன்று. நில வுலகத்தின்மேல் உலவும் இப் பருவுடம்பை விட்டு நுண்ணுடம்புகளில் நுண்ணிய உலகங்களில் உலவும் பேய்கள் தேவர்கள் முனிவர்கள் சித்தர்கள் முதலியோர் நினைக்கும் நினைவுகளும் இங்குள்ள மக்கள் உள்ளத்திற் றோன்றா நிற்கின்றன. இங்குள்ள மக்கள் நினைவுகளும் மேலுலகங் களிலுள்ள தேவர் முனிவர் முதலான உயிர்களின் உள்ளங்களில் எழுகின்றன. ஆகவே, இங்குள்ளவர்களான நாம் நினைக்கும் நினைவுகள் அவ்வளவும் நம்முடையனவே என்று எண்ணி அகம் மகிழ்தற்கு இடம் இல்லை. நம் நினைவுகளிற் பெரும்பாலான பிறருடையனவேயாம்; நமக்கே உரியனவென்று உரிமை பாராட்டுதற்கு இயைந்தன மிகச் சிலவேயாகும். அங்ஙனமாயின், நம் நினைவுகளிற் சில நல்லனவாயும் பல தீயனவாயும் இருத்தலால் இவற்றில் எவை நம்முடையன வென்று சொல்லுதற்கு ஏற்பன? எவை ஏலாதன? அல்லது, நன்மை தீமை எவற்றிற்குமே நாம் உரியவர்கள் அல்லமோ; அவற்றிற்கு நாம் உரிமையுடையர் அல்லராயின் அவற்றால் நாம் இன்புறுவதுந் துன்புறுவதும் என்னை? என்று பலவாறு வினாவுதற்கு ஏதுவான ஐயம் உண்டாகுமாதலால், அம் முறையை இங்கு ஒரு சிறிது விளக்குவாம்.
நல்லனவுந் தீயனவுமாய்க் கலந்து நம்முள்ளத்தில் உண்டாகும் நினைவுகளிற் பெரும்பாலான நமக்கே உரியன ஆகாவிட்டாலும், அந் நினைவுகளை ஏற்றுக்கொள்ளுதற்கு இயைந்த ஒரு தன்மையை நாம் நம்மிடத்திற் செய்து கொள்வதனால், அவற்றால் வரும் இன்ப துன்பங்களை அடைதல் நமக்கே உரியதாயிற்று, நம்முடைய மனம் நன்னினைவுகள் நினைப்பதிலேயே பழகி விடுமானால், தூய நல்லியல்பு உடையதான அம் மனம் மற்ற நல்லுயிர்களின் நன்னினைவு களையே ஏற்று அவற்றால் இன்புற்றிருக்கும்; அவ்வாறன்றித், தீய நினைவுகளை நினைப்பதிலேயே பழகி விடுமானால் தூய்தல்லா வியல்பு உடைய அது மற்றப் பொல்லாவுயிர்களின் பொல்லாத நினைவுகளையே ஏற்று அவற்றால் துன்புற்றுச் சுழலும். தூயது தூயதையே கவரும், அழுக்கோ அழுக்கினையே நாடும். ஒருவன் திருடுதல் கொல்லுதல் பொய் சொல்லுதல் முதலான தொழில்களைச் செய்தலிலேயே கருத்தூன்று வனாயின், அவன் மனம் அத்தகைய நினைவுகளால் மிகவும் அழுக்குப்பட்டுத் தனக்கு இயைந்த அழுக்கான நினைவுகளையே விரைவில் ஏற்றுக்கொள்ளும்; வேறு நன்னினைவுகளைச் சிறிதும் ஏற்றுக்கொள்ள மாட்டாதாகும். தன்னைப் போலவே நிலவுலகத்தில் உயிரோடிருக்குந் தீயவர் நினைவுகளையும், நிலவுலகத்தை விட்டு இருள் உலகத்திற் சென்ற தீய பேய்களின் பொல்லாத நினைவுகளையும் எளிதிலே ஏற்றுக்கொண்டு அவற்றால் அவன் அளவிறந்த துன்பத்தை அடைகுவன். தீய பேய்களினாற் பிடிக்கப்பட்டு வருந்துவோர்களை ஆராய்ந்து பாருங்கள்! அவர்கள் எவ்வளவு அழுக்கான செய்கையும் நினைவும் உணவு முதலியனவும் உடையவர்களாய் இருக்கின் றனர்! அவர்கள் இருக்கும் வீடுகளிற் சென்று பார்த்தால் அவை எவ்வளவு தீ நாற்றமும் அழுக்கும் மிகுந்து பார்ப்பவர்க்கு அருவருப்பை விளைவிக்கின்றன! அவர்கள் உணவாகக் கொள்ளும் இறைச்சி முதலியவற்றின் அருவருப்பை என்னென்று சொல்வேம்! நாம் ஆராய்ந்து பார்த்த வரையில் ஒரு வரை துறையின்றி ஊன் உணவுகொண்டு அருவருப்பு மிகுந்து திரிவோர்களையே தீய பேய்கள் பற்றிக்கொள்கின்றன. இந் நிலவுலகத்தில் இருந்த காலத்து மிகவும் பொல்லாங்கு டையவர் களாய், வேண்டு மட்டும் இறைச்சி தின்பதில் விருப்பம் மிகவைத்து நாளைக் கழித்து இறந்தொழிந்தவர்கள், நுண்ணுடம்பிற் சென்ற பிறகுந் தமது பொல்லா நினைவு தம்மைவிட்டு அகலாமையின் தமது அவாவினால் இழுக்கப் பட்டுப் புலால் நாற்றம் வீசும் இறைச்சிக்கடைகளைச் சுற்றித் திரிந்து கொண்டிருப்பர். அவ்வாறு திரிந்து கொண்டிருக்கும் அப்பேய்கள் தம்மைப்போலவே பொல்லாங்கு உடையவர்களாய் இறைச்சி வாங்க வருவோரைக் கண்டாற் பிடித்துக் கொள்ளும். இவ்வுண்மை, பேயாடு வோரிடத்திலேயே கேட்டுத் தெளியலாம். ஆவி வந்தேறி ஆடும்போது, நான் கள்ளுக்கடை முடுக்கிலே இவள் மீன் வாங்கி வரும்போது இவளைப் பின்றொடர்ந்து வந்தேன், என்றும், நான் இறைச்சிக் கடையிலே ஒரு மாலை வேளையில் இவளைப் பிடித்துக் கொண்டேன், என்றுஞ் சொல்லுஞ் சொற்கள் நாங் கூறுவதன் மெய்ம்மையைப் புலப்படுத்தும். இத்தகைய பேய்கள் நன்னினைவும் நற் செய்கையுந் தூய்மையும் உள்ள மாதர்களிடத்தும் ஆடவரி டத்தும் அணுகக் கேட்டதுமில்லை, பார்த்ததுமில்லை. சாக் காட்டு மந்திரஞ் செய்யும் மந்திரகாரர்கள் முன்னமே தெரிந்து கொள்ளாமல் நல்லவர்கள்மேற் கொடிய பேய்களை ஏவிவிட்ட போது. அவைகள் அந் நல்லவர்களிடம் வந்து அவர்கள் நன்னினைவுந் தூய்மையும் உள்ளவர்களாய் இருப்பதைப் பார்த்து அவர்களிடம் அணுகக் கூடாமல் திரும்பிப் போய்த் தம்மை ஏவின மந்திரகாரரையே கொன்ற வரலாறுகள் பலவற்றை நூல்களிற் கற்றறிந்திருக்கின்றேம். உலக வழக்கத்திலுங் கண்டிருக்கின்றேம். ஆகவே, தீயனவும் நல்லனவுந் தம்மை வந்து அணுகுதற்கு மக்கள் தாமே இடந் தருபராக இருக்கின் றனர். முதலிற் றீய எண்ணஞ் சிறிது கொள்வார்களானால் அதனைப் பெரிதாக்குதற்குத் தீயோர் பலர் அவரிடம் வந்து சேர்குவர்; முதன் முதல் நல்லெண்ணஞ் சிறிது கொள்வராயின் அதனையும் வலுப்படுத்து தற்கு நல்லோர் பலர் அவரிடம் வந்து சேர்ந்திடுவர். இவ்வுண்மை உலகம் எங்கும் பிறழாமல் நடைபெறுகின்றது. பாருங்கள், நிலத்தில் ஒரு சிறு எட்டி விதையை ஊன்றினால் அது தன்றன்மைக்கு இயைந்த பொருள்களையே உணவாகக் கொண்டு முளைத்து மரமாகி மிகக் கசக்கும் பல்லாயிரம் எட்டிப் பழங்களைத் தருகின்றது; அவ்வாறன்றி, ஒரு தேமாவின் விதையை ஊன்றினால் அது தன் றன்மைக்கியைந் தவற்றையே உணவாகக் கொண்டு முளை கிளம்பிப் பருமரமாகிப் பல்லாயிரந் தேமாம் பழங்களைப் பலர்க்கும் உதவித், தானும் பயன்பட்டுப் பிறரையும் மகிழ்வுறுத்து கின்றது. உயிர் வகைகளில் மிகத் தாழ்ந்த ஓரறிவுடைய மரம் முதலியவற்றிற் காணப்படும் இவ்வியற்கை ஆறறிவுடைய மக்கள் வரையிற் சிறிதும் பிறழ்ச்சியில்லாமற் காணப்படுகின்றது. இவ்வுண்மையை ஆழ்ந்து ஆராயுங்கால், உயிரோடிருப்பவர் நினைவுகளையும் உயிர் துறந்து நுண்ணுடம்புகளில் இருப்பவர் நினைவுகளையும் ஏற்றுக்கொள்ளும் இருவகைப்பட்ட தன்மை களையும் தம்மிடம் புலப்படக் காட்டும் மக்களே அந்நினைவு களால் தாம் அடையும் இன்ப துன்பங்களுக்கு உரியர் ஆதல் புலனாகாநிற்கும்.
இனி, இம் மனவெளியின் இயல்பையும் அதிற் றமது உள்ளத்தை நிறுத்தும் முறையையும் அறியா திருக்கையிலேயே பிறவுயிர்களின் எண்ணங்கள் நமது உள்ளத்திலும், நம்முடைய எண்ணங்கள் பிறவுயிர்களின் உள்ளத்திலுஞ் சேர்ந்து தோன்றுமாயின், அவ்விரண்டுந் தெரிந்து பழகுவார்க்கு அவற்றால் வரும் பயன்கள் இவ்வளவென்று நம்மால் எடுத்துச் சொல்லல் ஏலுமோ? இம் மனவெளியானது எங்குமுள்ள வான்வெளியினும் மிக நுட்பமான தாகையால் இதில் ஒருவர் தமது உள்ளத்தை எளிதிலே நிறுத்துவது அரிது. ஏனென்றால், மக்களுடைய மனமானது எந்நேரமும் பருப்பொருளை அறிவதிலே மட்டும் பழகி வந்திருக்கின்றது. பரும்படியான பொருள்களையே அறிந்துவரும் மனம் நுண்பொருள்களை எவ்வாறு அறியும்? பருத்த பொருளைக் காணுங் கண் மிக நுண்ணிய அணுக்களைக் காண்கின்றதா? உரத்த ஓசைகளையே கேட்டுப் பழக்கம் ஏறின நஞ் செவி மிக நுண்ணிய ஒலியைக் கேட்கின்றதா? அருகிலுள்ள நாற்றத்தையே கவரும் மூக்கானது தொலைவிலுள்ள மணத்தை அறிகின்றதா? இல்லையே. இவற்றைப் போலவே இவற்றின் வழியாகப் புறப்பொருள்களை அறிந்துவரும் மனமும் இப் புறப்பொருள் களினும் நுட்பமான மனவெளியினை அறிந்து அதிற்சேர்ந்து நில்லாமற் போகின்றது. அங்ஙனமாயிற் பரும்படியாய் நிற்கும் மனத்தை நுண்ணிதாக்கி, அது நுண்ணிய மனவெளியிற் பொருந்தி நிற்கும்படி செய்யும் வகை யாதெனின்; முதலில் ஐம்பொறிகளை நுட்ப இயல்பு உடையதாம்படி பழக்கினால், அவற்றோடு ஒற்றுமைப்பட்டு நடக்கும் மனமும் நுட்ப இயல்புடையதாகும். அங்ஙனம் அவற்றைப் பழக்குமிடத்தும் மிகவும் பரும்படியான பொறியினின்று துவங்கிச் சிறிது சிறிதாக நுண்ணிய பொறிப் பழக்கம் வரையில் ஏறல் வேண்டும்.



