தொலைவிலுணர்தல் மறைமலையடிகள்

15. பலர்க்குத் தோன்றிய நினைவுருவங்கள்

கனவிலோ நனவிலோ ஒருவர்க்குத் தோன்றிய நினைவுருவங்களின் வியத்தகு தோற்றங்களைப் பற்றியே பெரும்பாலும் மேலே விளக்கிப் போந்தாம். இனி, ஒருவர்க்கு மேல் இருவர் மூவர்க்குக் கனவிலும் நனவிலும் ஒரேகாலத்திற் றோன்றிய வடிவங்களைப் பற்றி இங்கே சிறிது விளக்கிக் காட்டுவாம். உறுத்து நினைந்த ஒருவரது நினைவு அவரது வடிவத்தினை அவரொடு தொடர்புடையார் பலர்தங் கட்புலனெதிரே விளங்கக் காட்டுதல் பெரிதும் இறும்பூது பயப்பதாகலின், அவ்வியல்பினை நம்மனோர் தெரிந்து கொள்ளுதல் இன்றியமையாத தாகும். மேலும், ஒரே காலத்தில் ஒரு நினைவுருவினைப் பலர் காண வல்லராயின், அப் பலரும் ஏறக்குறைய ஒத்து மனவியற்கை வாய்ந்தவராயிருத்தலும் அதனாற் போதராநிற்கும். முதலிற் கனவின் கட் பலர்க்குத் தோன்றிய நினைவுருவங்களை எடுத்துரைப்பாம்.

1887 ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் 14, 15 ஆம் நாள் இரவிற் பாரிசுமாநகரி லிருந்த ஆசிரியர் இரிச் செத்து (Prof – Richet) என்பவர்க்குரிய உடலாராய்ச்சி நிலையம் நெருப்புப் பற்றி எரியலாயிற்று. அவ்வாசிரியர்க்கு மிக நெருங்கிய நண்பர் இருவர் அப்போது நன்றாய் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் தம் கனவினிடத்தே அது தீப்பற்றி யெரிதலைக் கண்டு அரண் டெழுந்து கூவினர். 15 ஆம் நாள் மாலைநேரத்தில் ஒரு மருத்துவ ஆசிரியர் அறிதுயிலிற் செல்லப் பழகிய ஓர் அம்மையாரை அறிதுயிலிற் செலுத்தினார். அவ்வம்மையார் அறிதுயிலிற் சென்றதும் அந்நிலையந் தீப்பற்றியெரிதலைத் தாமும் அந்நிலையிற் கண்டு அங்ஙனமே அரண்டெழுந்து கூவினார். உடனிருந்தவர்கள் அவரை அமைதிப்படுத்துவது சிறிது வருத்தமாயிருந்தது.

1808 ஆம் ஆண்டிலிருந்து 1814 ஆம் ஆண்டுவரையிற் பிரித்தானியர்க்கும் பிரஞ்சுக்காரர்க்கும் பெரும்போர் நடந்த காலையிற் சுவிதின்பாங்கர் என்பவர் 1883, மேத் திங்கள் 20 ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையிற் பின்வருஞ் செய்தி குறிக்கப்பட்டுள்ளது.

சுவிதின் பாங்கரின் தந்தையாரும் அவர் தம் உடன் பிறந்தார் இருவருந் தோவர் என்னும் ஊரிற் பாடி வீட்டிற்றங்கி யிருந்தனர். அவர்தங் குடும்பத்தவர் தொலைவி லுள்ள வேறோர் ஊரில் அப்போது தங்கியிருந்தனர். உடன் பிறந்தார் இருவரும் அப் பாசறை வீட்டின் இரு வேறு அறைகளில் துயில்கொள்வது வழக்கம். ஒருநாட் காலையிற் படைஞரின் கண்காணிப்பு நடந்தபின், அம்மூவரும் ஒரு வரையொருவர் எதிர்ப்பட்டனர். எதிர்ப்பட்டதும், அவர் தந் தந்தையார், பிள்ளைகாள், யான் சென்ற இரவு புதுமை யானதொரு கனவு கண்டேன் என்றனர். அவர் அது சொல்லிய வுடனே அவர்தம் புதல்வர் ஒருவர், அங்ஙனமே யானுங் கண்டேன் என்றனர்; அது கேட்டதும் மற்றைப் புதல்வர், அவ்விருவரும் இறும்பூது எய்த, யானும் அங்ஙனமே புதுமையான ஒரு கனவு கண்டேன். நம் அன்னையார் இறந்து கிடக்கக் கனவு கண்டேன் என்றனர். அம் மூவரும் அதே கனவினைக் கண்ட அவ்விரவே அவ்வம்மையார் இறந்து பட்டனர். அப் புதல்வரில் ஒருவரின் மகளார் அம் மூவர் வாயிலிருந்தும் அக் கனா நிகழ்ச்சியினை ஒரே நேரத்திற் கேட்டார் என்பது.

இன்னும், மேல்நாட்டு மாதரார் ஒருவர் ஒருநாள் மாலையில், தமக்கு அறிமுகமான ஓர் அயல்வீட்டு அம்மையாரைப் பற்றி, இதற்குமுன் தாம் அடைந்திராத ஒரு பெருங்கலக்கமுங் கவலையுங் கொள்ளலானார். அவ்வம்மையாரின் உடம்பு நல்ல நிலையில் இருந்தமையால் தாம் அவ்வாறு கலங்கிக் கவல்வது நன்றாகாது எனக்கருதி, அதனை நீக்கி விட மிக முயன்றார்; ஆனால், அஃது அவரால் இயலவில்லை. அன்றிரவு அவர்க்குத் தூக்கமும் பிடிக்கவில்லை. அந்த அம்மையார் இறந்து போவதாகவே நினைந்து நினைந்து துன்புற்றார். அதனால், மறுநாட் காலையில் அவர் அந்த அயல் வீட்டு அம்மையாரின் செய்தி இன்னதென அறிந்து வருமாறு தம் ஏவற்காரியை அவர்பாற் போக்கினர். போய்வந்த ஏவற்காரி, அந்த அம்மையார் நேற்றிரவே இறந்து போயினர் எனத் தெரிவித்தனள்.

மற்று, இறந்துபோன அவ்வம்மையாரோ தாம் இறக்குந் தறுவாயில் தம் மகனை அருகழைத்துத், தாம் இறந்து போவதைத் தமக்கு அறிமுகமாயுள்ள அம்மாதரார் அறிவர் எனப் புகன்று உயிர் துறந்தார்.

அதுவேயுமன்றி, அம் மாதரார் மறுநாட்காலையில தம் சமையற் காரியைப் பார்த்தபோது, அவளுந் தமக்கு அறிமுகமான அவ்வயல்வீட்டு அம்மையார் இறந்து படுதலைப் பற்றித் தான் ஒரு கொடிய கனவு கண்டதை எடுத்துரைத்தனள். அங்ஙனம் எடுத்துரைக்குங்கால், அவள் தனது கனவின்கண் எவரோ ஒருவர் போந்து அவ்வம்மையார் இறந்ததைத் தனக்கு அறிவித்ததாகவுங் கூறினாள் என்பது.

இம்மெய்ந் நிகழ்ச்சியில், இறந்துபடும் நிலையினரான அவ் வயல்வீட்டு அம்மையார் தமக்கு அறிமுகமான அம் மாதராரைப்பற்றி நினைந்த நினைவே, அவர்க்கு நீக்கலாகா மனக்கலக்கத்தினையுங் கவலையினையும் விளைவிப்பதாயிற்று. இனி, அம்மாதரார்க்கு உண்டான அக் கலக்கமே, அவர் தஞ் சமையற்காரிக்கு அவ்வம்மையாரின் சாவைப் பற்றிய கனவினை உண்டுபண்ணுவதாயிற்று. அற்றேல், அவ்வறிவிப்பு ஒருவர்க்கு நனவிலும், மற்றொருவர்க்குக் கனவிலும் உண்டாயது என்னையெனின்; இறந்துபோன அம்மையார்க்கும் அதனை முன்னறிந்து கலங்கிய மாதரார்க்கும் ஏதோ ஒருவகையான அன்பினால் மனநிலை ஒன்றாயினாற்போலப், பின்னவரின் சமையற்காரிக்கும் அந்த அம்மையார்க்கும் மனம் ஒருங்கொத்தல் இல்லையாகலின், மனமொத்த ஒருவர்க்கு நனவிலேயும், அஃது அத்துணையொவ்வாத மற்றவட்குக் கனவிலேயும் அந் நிகழ்ச்சி தோன்றாநின்ற தென்க. நினைவின் உறைப்பும் அந் நினைவினை ஏற்கும் மனநிலையும் ஒன்றுபடுதற்கேற்ற வாய்ப்பு உள்வழியெல்லாம், உறுத்து நினைந்த நினைவு நினைக்கப்பட்டார்க்கு நனவிலேயே தோன்றுமென்றும், அல்லாதார் சிலர்க்கு அது கனவின்கண் மட்டுமே தோன்றுமென்றும் பகுத்துணர்ந்து கொள்ளல் வேண்டும்.

இனி, அயர்ந்து துயிலுங்கால் அரண்டெழுந்து கனவோ நனவோவென்று உறுதி செய்யக்கூடாத நிலையில் இருப்பார் சிலர்க்கு, இறந்துபோயினாரது உருவந் தோன்றி மறைதலும் ஆங்காங்கு நிகழாநிற்கின்றது. இந் நிகழ்ச்சி, இறந்து மறுமை யுலகிற் சென்றவர் தம்மவரை உறுத்து நினைப்பதனால் நிகழ்கின்றதோ, அன்றி உயிரோடிருக்கும் அவர் தம் உறவினர் சிலர் அவரை நினைந்து உருகுதலால் உண்டாகின்றதோ இன்னது தான் மெய்யென்று முடிவு கட்டுதல் இயலாதா யிருக்கின்றது. பின்வரும் மெய்நிகழ்ச்சி அத்தகைய தேயாகும். ஒரு மங்கை பின்வருமாறு எழுதுகின்றாள்:

சில ஆண்டுகளுக்குமுன் என் கணவரும் யானுங் கண்டறிந்த நிகழ்ச்சி யிது: ஒருநாள் நள்ளிரவில் எவரோ ஒருவர் என் படுக்கையின் அருகே நிற்பதாக உணர்ந்து வெருண்டு விழித்தெழுந்தேன். எழ, ஓர் உருவம் என் படுக்கையின் பக்கத்தைவிட்டுப் பெயர்ந்து, யான் என்னுடைய நகைகளை வைத்திருக்கும் பேழையண்டை செல்லக் கண்டேன். யான் கண்ட அவ்வடிவம் ஒரு திருடனது வடிவமாய் இருக்க வேண்டு மெனவே எண்ணினேன். அவன் தன்கையிற் படைக்கலம் வைத்திருக்க வேண்டு மென யான் நினைந்தமையால் என் படுக்கைக்கு இரண்டடி விலகிய கட்டிலின் மேல் துயின்ற என் கணவனை யான் எழுப்பாது வாளா இருந்தேன். ஏனென்றால், என் கணவன் எழுப்பப்பட்டால் அவர் அத் திருடனைத் தாக்க நேரு மென்றும் அப்போது அவன் அவரைத் தன் கையிலுள்ள படைக்கலத்தால் ஊறு செய்யக் கூடுமென்றும் அஞ்சினேன்.

ஆனால், அவ்வுருவமோ என் கட்டிலின் கால்மாட்டை விட்டகன்று, என் கணவனின் கட்டிலுக்கெதிரே செல்லவும் உடனே என் கணவன் தனது படுக்கையில் எழுந்து உட்கார்ந்து அவ்வுருவத்தை உற்று நோக்கவுங் கண்டு திகைப்புற்றேன். ஆனால், இரண்டொரு நொடியிலெல்லாம் என் கணவன் மீண்டும் படுக்கையில் விழுந்து துயில்கொள்ளலானார். அந்த உருவமோ வாயிற் கதவண்டை போயது.

அன்றிரவு நாங்கள் ஒரு சொற்கூடப் பேசவில்லை.

மறுநாள் விடியற்காலையில், எங்கள் அறையிலிருந்த மூன்று வாயிற் கதவுகளும் பூட்டப்பட்டிருந்தனவாவென்று என் கணவனை வினவினேன். அவை மூன்றுஞ் செவ்வையாகத் தாழிடப்பட்டிருந்தனவென்றே அவர் விடை பகர்ந்தார். எங்கள் இரண்டு படுக்கைகளும் எவ்வகையாலேனும் ஒன்றையொன்று நெருங்கி யிருக்கக் கூடுமோ வென்றும், அதனால் என்னை யறியாமலே யான் என் கணவனை எழுப்பியிருக்கக் கூடுமோவென்றும் நினைந்து அவைகளின் இருப்பை ஆராய்ந்து பார்த்தேன்; ஆனால் அவையிரண்டுந் தனித்தனியாகவே அகன்றிருந்தன. பிறகு, யான் அவரை நோக்கிச், சென்று இரவில் நிகழ்ந்தது ஏதேனும் நுங்கட்கு நினைவில் இருக்கின்றதா?” என்று கேட்டேன்; அதற்கவர், ஆம், ஒரு புதுமை; என் தந்தையார் அந்த வாயிற்கதவின் வழியே செல்லக் கண்டேன் என்று நினைக்கின்றேன் என மொழிந்தார். அவர் அது சொன்ன பின்னர்த்தான், யான் கண்ட அவ்வுருவம் ஒரு திருடனாக இருக்க வேண்டுமெனவும், அவர் படைக்கலம் வைத்திருந்தால் அவனைப் பிடிப்பது பொல்லாங்காய் முடியுமெனவும் நினைந்தே யான் அவரை எழுப்பாமற் சும்மா இருந்து விட்டேனென்று நுவன்றேன், என்பது.

இம் மங்கை கண்ட உருவத்தைத் தானுங் கண்ட வகையினை அவடன் கணவனார் பின்வருமாறு வரைகின்றார்:

என் மனைவி கண்ட காட்சியின் வரலாற்றினை யான் படித்துப் பார்த்தேன்; அஃது உண்மையென்றே யானும் நுவல்கின்றேன். யான் எனது படுக்கைமேல் எழுந்து உட்காருவதற்கு முன், யான் கனவு காணவில்லையென்று எனது நினைவுக்கு எட்டியவரையிற் சொல்கின்றேன்; ஆனால், அதன்மேல் யான் எழுந்துட்கார்ந்தபோதோ என் தந்தையார் எமது அறைவாயிற் கதவண்டை செல்லக் கண்டேன். அப்போது யான் அவருடைய காரியங்களைப் பற்றி நினைக்கவேயில்லை. என்றாலும் வேறு சில அலுவல்களைப்பற்றி மட்டும் யான் அப்போது சிறிது கவலைப்பட்டதுண்டு.

யான் கண்ட அவ்வடிவம் என் தந்தையாரது வடிவமென்றே எண்ணினேன். அது வேறொருவரது வடிவமென்று யான் எண்ணவேயில்லை. அஃது அரவமின்றி அவ்வறையின் குறுக்கே போய் அதன் வாயிற் கதவுவழியே மறைந்தேகியது. என் மனையாள் மறுநாள் காலையில் என்னை நோக்கி ‘நேற்றிறவு நீங்கள் படுக்கையில் எழுந்து உட்கார்ந்தது பற்றி நினைவுண்டோ? என வினவி எனது கருத்தை அந் நிகழ்ச்சியின் முகமாய்த் திருப்பியிராவிட்டால், அதனை யொரு வெறுங் கனவாகவே நினைந்துவிட்டிருப்பேன்.

அவ்வுருவந் தோன்றியபோது என்னுடைய கண்கள் திறந்திருந்தனவென்றே யான் உறுதி சொல்வேனாயினும், யான் அதன் முகத்தைமட்டுங் காணவில்லை. யான் நினைவு கூரக் கூடியவரையில் என் தந்தையாரின் பொதுவான உடம்பின் றோற்றதை அறிந்திருந்ததிலிருந்தே அஃது அவரது வடிவமாகத் தான் இருக்க வேண்டுமெனக் கருதினேன். யான் விழித்திருக் கையில் அத்தகையதொரு நிகழ்ச்சி வேறு கண்டிலேன். ஆயினும், என் தந்தையார் இறந்துபோனவுடனே ஒரு கால் அவரது வடிவத்தினை யான் ஒரு கனவின்கட் டெளிவாய்க் கண்டதுண்டு என்பது.

இம்மெய்ந்நிகழ்ச்சியிற் போந்த உருவத்தைக் கண்டவர் அதனைக் கண்டபோதிருந்தநிலை வெறுங் கனவாகவாதல் அல்லது வெறுநனவாகவாதல் இருத்தல் வேண்டுமென்று உறுதிசொல்லக் கூடாமையால், அஃது அவ்விரண்டுக்கும் இடைப்பட்ட தொன்றாகவே யிருத்தல்வேண்டு மென்பது பெறப்படும் அற்றேல், நனவுங் கனவும் அல்லாத ஒரு நடுநிலையினை எமது பழக்க வழக்கத்திற் கண்டிலமாலெனின்; அறிதுயிலிற் செல்வாரையுந் தூக்கத்தில் நடப்பாரையுங் கண்டு அவரது நிலையினை ஆராய்ந்து பார்ப்பவர்க்கு, நனவுங் கனவும் அல்லாமல் அவையிரண்டற்கும் நடுப்பட்டதோர் உணர்வுநிலையும் மக்களிற் சிலர்க்கு உண்டென்னும் உண்மை நன்கு விளங்காநிற்கும். அறிதுயிலில் இருப்பவர்க்கு நனவு இருக்கின்றது; ஆனால், அது நம்மனோர்க்குள்ளதை ஒப்பதன்று; அவர் அத்துயிலினின்று விழித்தபின் அந் நனவினை மறந்து போகின்றார்; மற்று, அதனைக் கனவென்று நுவலுதற்கு மிடமில்லை; ஏனென்றால், திரும்பவும் அவ்வறிதுயிலிற் சென்றவுடனே தாம் அதில் முன்னிருந்த நனவினை நன்குணர்கின்றார். ஓர் இரவில் உறங்குகையிற் கண்ட கனவினை அடுத்து வரும் இரவிற் காணுங் கனவுடன் நாம் தொடர்புபடுத்தி உணர்தல் இல்லாமையால், அறிதுயிலிற் சென்றவர்க்கு உண்டாம் நனவினைக் கனவென்று கூறுதலுஞ் சிறிதும் பொருந்தாது. ஆகவே, மக்கள் சிலர் பலர்க்கு நனவு கனவு இரண்டினும் வேறாய் அவை யிரண்டற்கும் நடுப்பட்டதோ ருணர்வுநிலையும் உண்டென்பது தெளியப்படும். தூக்கத்தில் நடப்பார் நிலையுஞ் சிறிதேறக்குறைய அறிதுயிலில் இருப்பார் நிலையினையே ஒத்திருக்கின்றது. இத்தன்மையதாம் ஓர் உணர்வுநிலை மக்களிற் சிலர்பால் அரிதாய்க் காணப்படுதலை இதனைப் பயில்வார் நன்கு தெளிதல் வேண்டி, அதற்கு உண்மையாக நடந்த ஒரு நிகழ்ச்சியினை இங்கெடுத்துக் காட்டுதும்:

அன்செல்பூரன் என்னும் பெயர்வாய்ந்த கிறித்து சமய குரு அமெரிக்காவிலுள்ள நியூயார்க்கு என்னும் நகரில் 1826 ஆம் ஆண்டிற் பிறந்தவர் ஆவர். பிற்கூறும் நிகழ்ச்சி நடந்தஞான்று அவர்க்கு ஆண்டு அறுபத்தொன்று. அவர் தாம் வாங்கியதொரு நிலத்தின் விலையைச் செலுத்தும்பொருட்டுப் பொருள் திரட்டுதற்காக 1887 ஆம் ஆண்டு சனவரித்திங்கள்

17 ஆம் நாள் தமதில்லத்தை விட்டுப்புறப்பட்டு அயலிலுள்ள தோர் ஊர்க்குச் சென்றார். சென்று கருவூலத்தில் (Bank) தாம் வேண்டியவளவு தொகை பெற்றுவந்து, சில சில்லறைக் கடன்களைத் தீர்த்துவிட்டுத், தம் உடன்பிறந்தாளின் வீடுள்ள வேறொரு தெருவுக்குப் போயினார். அப்போது அவரைப் பற்றிக் கடைசியாகத் தெரிந்தது அதுதான். ஆனால், அவர் தம் உடன்பிறந்தாளின் இல்லுக்குப் போகவும் இல்லை. அவர் இருந்தாற் போல் இருந்து திடீரென மாயமாய் மறைந்து போயதைப் பற்றி நகர் காவலர்க்குத் தெரிவித்ததோடு புதினத்தாள்களிலும் விளம்பரஞ் செய்வித்தார்கள்.

இவ்வாறாகவெல்லாம் அவரது மாயமறைவினை அறிவித்தும், எட்டுக்கிழமைகள் வரையில் அவரைப் பற்றிய செய்தி ஒன்றுமே தெரியவில்லை. ஆனால், அவ்வெட்டுக் கிழமைகளுங் கழிந்தபின், திடீரென மார்ச்சு 14 ஆம் நாள் அவர் தமது இல்லத்தில் மீண்டுங் காணப்பட்டார். அவர் அங்ஙனந் திடீரென மறைந்துபோயதுந், திரும்பவுந் திடீரெனத் தமது இல்லம் வந்து சேர்ந்ததும் என்னை? யென்று உற்றாரும் மற்றாரும் அவரைப் பலவாறு வினாவியும், அவர் அவ்வினாக்களுக்கு ஏதொரு விடையுமே சொல்லத் தெரியாமல் திகைத்து விழித்தார். என்றாலும், ஆராய்ச்சி வல்ல ஆசிரியர்கள் அவரைப் பற்றிப் பலமுகமாய் ஆராய்ந்து பார்த்ததிற் பின்வருங் குறிப்புக்கள் புலனாயின:

அன்செல்பூரன் தமது இல்லத்தைவிட்டு மறைந்து இரண்டு கிழமைகள் ஆனபின் பிப்ரவரி முதல்நாளில் நாரிடன் என்னும் ஊரிற் போந்து தங்கினர். அங்கே அவர் பிரௌன் என்னும் பெயர் தாங்கி, அவ்வூரிலுள்ள தொரு தெருவில் ஓர் அறையைக் குடிக்கூலிக்குப் பிடித்து, அதன் நடுவே ஒரு திரையைவிட்டு அதனை இரண்டாய்த் தடுத்து, முற்பகுதியிற் சிறுவரின் விளையாட்டுக் கருவிகளுந் தித்திப்புப் பண்டங்களும் புதிது சமைத்தபொருள்களும் வைத்து விற்பனைசெய்துவந்தார்; பிற்பகுதியை உணவுசமைக்கவும் உறங்கவும் வைத்துக்கொண்டு அதில் தமக்கு வேண்டிய தட்டு முட்டுகளை இட்டுவைத்திருந்தார். விற்றுப்போன பண்டங்களைத் திரும்பக் கொணர்ந்து நிறைத்தற் பொருட்டுக் கிழமைக் கொருகால் பிலடல்பியா என்னும் ஊர்க்கு அவர் போய்வருவர். அவர் தாம் வைத்திருந்த அக் கடையின் முகப்பில் ஏ.ஜே.பிரௌன் என்னும் பெயரையும் பொறித்திருந்தார். அவர் வாடகைக்குப் பிடித்திருந்த அறை, ஏரல் குடும்பத்தார்க்குரிய வீட்டின் ஒரு பகுதியாகும். அக் குடும்பத்தவர் நாடோறும் பிரௌன் என்னும் அத் துரைமகனாரிடம் வந்து பேசுவதுண்டேனும், அவர்கள் அவருடைய குணத்திலாயினும் செய்கையிலாயினும் ஏதொரு மாறுபாடுங் கண்டிலர். அவரது நடத்தை நேர்மையும் ஒழுங்கும் அமைதியும் வாய்ந்ததாய் இருந்தது. தம்முடைய பற்றுச்சீட்டுகளுக்குச் செல்ல வேண்டியவைகளை விரைந்து செலுத்தி வந்தார். தமது கடையைச் சனிக்கிழமையில் மாலைப் பத்து மணிக்கும் மற்றை நாட்களில் ஒன்பது மணிக்கும் ஒழுங்காகச் சாத்திவந்தார். ஞாயிற்றுக் கிழமைகளில் திருக்கோயிலுக்குத் தவறாமற் போய்வந்தார். அவருடன் பழகியவர்களில் எவரும், அவர் அப்போதிருந்த உணர்வுநிலை எவ்வகையான மாற்றமும் உடையதா யிருந்ததென ஐயுறுதற்குச் சிறிதும் இடமில்லாதிருந்தது.

ஆனால், மார்ச்சு, 14 ஆம் நாள் விடியற்காலையில் 5 மணிக்கு அவர் தாம் ஒரு பீரங்கியின் அதிர்வெடி ஓசைகேட்டு விழித்துக்கொண்டதாகக் கூறினார். விழித்ததும், அவர் தாம் வழக்கமாய்த் துயில்கொளும் படுக்கையில் இல்லாமல், நடுவே ஆணையிட்டதொரு படுக்கையிலிருத்தலை உன்னிப்பாய்ப் பார்த்தார்; தம்முடைய அறையின் சாளரங்களுக்கு எதிரே மின்விளக்குகளையுங் கண்டார். உடனே அவர் எழுந்து திரைகளை விலக்கிக் கொண்டு சாளரத்தின் வழியே தெருவை எட்டிப் பார்த்தார். தாம் மெலிந்திருப்பதாகவுந் தமக்கு யாரோ மருந்திட்டதாகவும் எண்ணினார். பிறகு, தாம் இருத்தற்கு உரிமையில்லாத தோரிடத்தில் தாம் வந்திருப்பதாக நினைந்து அச்சமுற்றார். தம்மை ஒரு திருடனாகக் கருதிக் காவலாளர் பிடித்துக் கொள்ளக்கூடுமே அல்லதெவரேனுந் துன்புறுத்தக் கூடுமேயென நினைந்து அஞ்சினார். தமது வாழ்நாளில் இங்ஙனந் தாங் காவலாளர்க்கு அஞ்சியது ஒரேமுறைதான்.

அவ்வீட்டில் யாரேனும் நடமாடுகிறார்களாவென்று உற்றுக்கேட்டார். அவ்வாறு இரண்டு மனி நேரம் வரையில் அவர் பெரிதும் மனம் வருந்தினார். கடைசியாக அவர் கதவண்டை போய் அதனைத் தடவிப் பார்த்தார்; அஃதுள்ளே தாழ் இடப்பட்டிருத்தல் கண்டு அதனைத் திறந்தார். எதிர்ப்பக்கத்து அறையினுள்ளே எவரோ நடமாடும் அரவங் கேட்டு, அதன் கதவைத் தட்டினார். உடனே கதவைத் திறந்துகொண்டு வந்த ஏரல் என்பவர், ஐய பிரௌன், தங்கட்குக் காலை வணக்கம் என்றார். அதற்கவர் : இப்போது யான் எங்கே இருக்கின்றேன்? என வினவ, ஏரல், நீங்கள் செம்மையாகவே யிருக்கின்றீர்கள் என்றார். அதற்குப் பிரௌன், எனக்கு எல்லாம் பிசகாய்த் தோன்றுகின்றது. என் பெயர் பிரௌன் அன்று. யான் எங்கேயிருக்கின்றேன்? என மீண்டும் வினவ, ஏரல் நீங்கள் இருப்பது நாரிடன் என்றார். பிரௌன், அவ்வூர் எங்கேயுள்ளது? என, ஏரல், இது பென்சில் வானியாவில் உள்ளது என்றார். பிரௌன், அஃது எந்த நாட்டைச் சேர்ந்தது? என மீட்டும் வினவ, ஏரல் அது பிலடல்பியாவுக்கு மேற்கே பதினேழு கல் தொலைவில் உள்ளது என்றார். பிரௌன், இஃது இந்தத் திங்களில் எத்தனையாவது நாள்? எனக் கேட்ப, ஏரல், இது 14 ஆம் நாள் என்று மொழிந்தார். பிரௌன், அப்படியா? இந்த ஊரிற் காலவட்டம் பின் நோக்கிச் செல்கின்றதோ? யான் வீட்டைவிட்டுப் புறப்பட்டது 17 ஆம் நாள் ஆகும் என்றனர். அதற்கு ஏரல், எந்தத்திங்களில் 17 ஆம் நாள்? என வினவப் பிரௌன் சனவரித் திங்களில் 17 ஆம் நாள் என்றனர். அதற்கு ஏரல், இது மார்ச்சுத் திங்களின் 14 ஆம் நாள் அன்றோ எனக் கூறினர்.

பின்னர்ப், பிரௌன் என்னும் அத்துரைமகனார்க்கு ஏதோ மூளை பிசகியிருக்கின்றதென எண்ணி, ஏரல் ஒரு மருத்துவரை அவர்பால் உடனே வருவித்தனர். அன்செல்பூரன் அம் மருத்துவரைக் கண்டதுந் தமது வரலாற்றினை எடுத்துச் சொல்லி, சனவரி 17 ஆம் நாளிலிருந்து இன்றுவரையில் நிகழ்ந்ததொன்றுந் தமக்குத் தெரியாதென உறுதிமொழி புகன்றார். மேலும், இங்குள்ள இக் குடும்பத்தார், யான் பென்சில் வானியாவிலுள்ள நாரிடன் ஊரில் இருக்கின்றே னென்றும், இவ் வீட்டில் ஆறு கிழமைகளாகக் குடியிருக்கின்றேனென்றும்,இவ்வாறு கிழமைகளும் இவர்களொடு கூடவே யான் இருக்கின்றேனென்றும் நுவல்கின்றனர். ஆனால் இன்றைக் காலைக்கு முன் இவர்களில் எவரையேனும் யான் பார்த்ததாக நினைவுகூரக் கூடவில்லை என்று வற்புறுத்திக் கூறித், தமது ஊரிலுள்ள ஆரிசு என்னுந் தம் மருமகனார்க்கு ஒரு கம்பிச் செய்தி விடுக்கும்படி அம் மருத்துவரை வேண்டிக் கொண்டார். அங்ஙனமே அம்மருத்துவரும் அவர்தம் மருமகனார்க்கு ஒரு கம்பிச்செய்தி விடுப்ப, அவரிடமிருந்து போந்த விடையானது ஆம், அன்செல்பூரன் என் மாமனாரேயாவர். அவர் எங்கே யிருக்கிறாரென்பதும், நலமாக இருக்கிறாரா என்பதுந் தெரிவியுங்கள். மற்றைச் செய்திகளும் விளக்கமாக எழுதுங்கள் என அறிவித்தது.

அதன்பின் அன்செல்பூரன் மருகரான ஆரிசு என்பவர் நாரிடன் என்னும் ஊருக்குப்போய், அங்கே தன்மாமனார் பிரௌன் என்னும் பெயர்பூண்டு வைத்திருந்த கடையிலுள்ள சரக்குகளையெல்லாம் ஏலவிற்பனைசெய்து, அவருடைய அலுவல்களையெல்லாம் ஒழுங்குபடுத்திக் கொண்டு, அவரைத் தமதூர்க்கும் அழைத்துவந்தார்.

பிறகு, அன்செல்பூரனின் இருவேறுவகை வாழ்க்கை நிலைகளையுங் கேள்வியுற்ற மனநூல் ஆசிரியர்கள் மிகவும் வியப்புற்றவர்களாகி அவர்பாற் போந்து அவரது மனவியற்கையை நுணுக்கமாக ஆராய்ந்து பார்க்கலாயினர். அன்செல்பூரன் கள்ளங்கவடறியாத வாய்மையாளரென்பதும், அவர் பிறரை ஏமாற்றுதற்காக அங்ஙனம் வேற்றூர்க்குப் போய்த் தமது பெயரை மாற்றிக்கொண்டு கடை வைத்தில ரென்பதும் ஆராய்ச்சிவல்ல அவ்வாசிரியர்கள் திட்டமாய்த் தெரிந்துகொண்டனர். அற்றேல், ஒருவரையொருவர் அறியா இருவேறு ஆட்கள்போல் அன்செல்பூரன் ஒருவரே நடந்துகொண்டதென்னை? என்று ஆராய்வான்புகுந்து, புகழ்பெற்ற உளநூற் பேராசிரியராகிய உவில்லியம் ஜேம் என்பார், அவரை அறிதுயிலிற் செலுத்தி, அவரது வாய்ப்பிறப்பைக் கேட்டனர். அன்செல்பூரன் என்னுந் தமது பெயரையும் அப்பெயர் பூண்டு தாம் நடாத்திய வாழ்க்கையின் வகைகளையும் முற்றுமே மறந்து தாம் பிரௌன் என்னும் பெயருடையவரென்றும் அப்பெயரொடு தாம் நடாத்திய வாழ்க்கையின் வகைகள் இவ்விலையென்றுந் தாம் நாரிடன் என்னும் ஊரிற்றங்கி வாணிகஞ் செய்து வாழ்ந்த வரலாறுகளையெல்லாம் ஒழுங்காக எடுத்துக் கூறினார். அதன்பின் அவ்வறிதுயிலினின்றும் அவர் எழுப்பப்பட்ட பின்னர்த், தாம் அன்செல்பூரன் என்னும் பேரொடு வாழ்ந்த தமது பழையவரலாற்றைத் தவிரத், தாம் இடையே பிரௌன் என வேறுபெயர் பூண்டு வேறோர் ஊரிற் றங்கி வாழ்ந்த வரலாற்றைச் சிறிதுமே யறிந்திலர். இதனைக் கண்டு இறும்பூதுற்ற அவ்வுளநூற் பேராசிரியர், ஒருவரது உணர்வே இருவேறுவகையாய்ப் பிளவுபட்டு ஒன்றையொன் றறியாதாய் இயங்கி இயக்கத்தை மாற்றி, இரண்டனையும் இணைத்து ஒன்றையொன்றுணருமாறு செய்தற்கு, அறிதுயின் முறைகளினாலேயே எவ்வளவோ முயன்றுபார்த்தும், அது கைகூடாமலே போயிற்று.

இம்மெய்ந் நிகழ்ச்சியின் ஆராய்ச்சியிலிருந்து, நனவுங்கனவும் அல்லாமல் அவையிரண்டற்கும் வேறான ஓர் உணர்வு நிலையும் மக்கள் சிலர்க்கு உண்டென்னும் வாய்மை தெற்றென விளங்காநிற்கும். எனவே, அத்தகையதொரு புதுநிலையிலிருந்து தொடர்பாக நிகழும் உண்மை நிகழ்ச்சிகள் உண்மையே யாகுமல்லாற் பொய்யாகா வெனவுங் கடைப்பிடித்தல் வேண்டும். இங்ஙனங் கனவும் நனவும் அல்லா ஓர் உணர்வு நிலையிலிருக்கும் ஒரு சிலர்க்கு ஒரோவொருகால் நினைவுருவங்கள் தோன்றும் நிகழ்ச்சிக்கு இன்னும் இரண்டு மெய்ந்நிகழ்ச்சிகள் ஈண்டெடுத்துக் காட்டுவாம். சமய குருவாகிய ஜப் (C.H. Jupp) என்பவர் பின்வருமாறு எழுதுகின்றார்:

1875 ஆம் ஆண்டு ஓர் ஆடவன் தன் மனையாளையும் ஆறு பிள்ளைகளையும் விட்டு இறந்து போயினான். மூத்த பிள்ளைகள் மூவரும் எமது அகதிப்பிள்ளை நிலையத்திற் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். அதற்கு மூன்றாண்டுகள் கழித்து அப் பிள்ளைகளின் தாயும் இறந்து போயினாள்; அவர்கட்கு நேயராயுள்ளவர்கள் கையொப்பஞ் சேர்த்து மற்றைப் பிள்ளைகளையும் இந்நிலையத்திற்கே விடுத்தனர். அங்ஙனம் வந்த பிள்ளைகளுட் கடைசிப் பிள்ளைக்கு நான்காண்டுகள் இருக்கும். இப் பிள்ளைகள் வந்து சேர்ந்த ஆறு திங்களுக்குப் பின்னர், அவர்களைக் காணச்சிலர் திடுமென ஒரு மாலை நேரத்தில் வந்து சேர்ந்தனர். பிள்ளைகள் படுக்கும் அறையில் ஒன்பது படுக்கைகளிற் சிறார் படுத்திருந்தனர்; ஒன்று தான் வெறுமையாய் இருந்தது. வெறுமையாய் உள்ள அதில் இந்நிலையத்தின் காவலர் துயில்கொள்ள இசைந்தனர்.

மறுநாட்காலையிற் சிற்றுண்டி அருந்தா நிற்கையில், அக் காவலர் பின்வருஞ் செய்தியை எடுத்து மொழிந்தார்: யான் நினைவுகூர்ந்து சொல்லக்கூடியவரையில், யான் பதினொரு மணியளவில் துயில் கொண்டேன்; சிறிது நேரம் மிக அயர்ந்துறங்கினேன்; அதன்பின் ஏதொரு காரணமும் இன்றித் திடீரென விழித்தேன்; பிள்ளைகள் படுத்திருந்த முகமாயின்றிச் சுவரை நோக்கிய படியாய்ப் படுத்திருந்த யான் எனது முகத்தை அவர்களை நோக்கித் திருப்புதற்கு ஒரு நினைவு கொண்டேன். அங்ஙனந் திருப்புதற்கு முன்யான் நிமிர்ந்துபார்க்க, மென்மை யான ஒர் ஒளியை அவ்வறையினுட் கண்டேன். வெளியேயுள்ள நீள அறையில் ஆவி விளக்கு மங்கலாய் எரிந்தது; படுக்கையறையின் கதவுகள் திறந்திருந்தமையால், அவ்வொளி அவ்வெளியறையிலிருந்து வந்ததெனவே எண்ணினேன். ஆனால், உடனே விளங்கியபடி அஃது அங்கிருந்து வந்ததன்று. யான் அதனை நோக்கித் திரும்புதலுங், திகைப்புறத் தக்கதொரு தோற்றம் என் கண்ணெதிரே தோன்றிற்று. எனது படுக்கைக்கு இரண்டாவதாயுள்ள ஒரு கட்டிலின் மேல், அவ்வறையின் அதேபக்கத்தில், ஒரு சிறு மங்கலொளி மிதந்து நின்றது; அது நிலாக்காலத்திரவில் முழுமதியைச் சூழ்ந்து காணப்படும் ஒளிவட்டத்தின் துலக்கம் வாய்ந்ததாய் இருந்தது. புதுமையான அத்தோற்றத்தைப் பார்த்துக்கொண்டே யான் எழுந்து என் படுக்கையின்மேல் நேராக அமர்ந்தேன்: அதன்பின் என்கைக் கடிகாரத்தை எடுத்துநோக்க அப்போது ஒரு மணியாக ஐந்துநிமிடங்கள் இருந்தன. எல்லாம் அமைதியாய் இருந்தது; பிள்ளைகள் எல்லாரும் அயர்ந்து உறங்கினர். அவ்வொளி வட்டமானது மேன் மிதந்துகொண்டிருந்த கட்டிலின்மேல், முன்னே கூறிய ஆறு பிள்ளைகளிற் கடைசிப்பிள்ளை உறங்கிக் கொண்டிருந்தது. யான்கனவு தான்காண்கின்றேனோவென்று என்னுள்ளே வினாவினேன். இல்லை! நான் நன்றாக விழித்துத்தான் இருந்தேன். ஐந்தடி யுயரந் தோன்றிய அவ்வொளிப்பிழம்பை, அஃது எதுவாயிருந்தாலும், எழுந்து தொட்டுப் பார்ப்பதற்கு எனக்குள் ஓரெண்ணம் உண்டாயிற்று. அதன்படியே யான் எழ, ஏதோ ஒன்று என்னைப் பின்னுக்குப் பிடித்திழுப்பதுபோற் காணப்பட்டது. யான் என் காதினால் ஏதுங் கேட்கவில்லை யென்பது திண்ணமே; என்றாலும், எழாதே படுத்துக்கொள், அஃது உனக்கு ஏதும் ஊறு செய்யாது என்னுஞ் சொற்கள் மட்டும் என்னுள்ளத்திற் புலனாவதை உணர்ந்தேன். உணர்ந்து அதன்படியே உடனே செய்தேன். அதன்பிற் சிறிது நேரத்திலெல்லாம் யான் துயின்றுவிட்டேன். பிறகு யான் எப்போதும் விழித்துக்கொள்ளும் நேரப்படி காலை ஐந்துமணிக்கெல்லாம் உறக்கம் நீங்கி எழுந்தேன். அதன்பின் ஆறு மணிக்கு எனது கட்டிலுக்கு எதிர் கோடியிலிருந்த படுக்கை யிலிருந்து துவங்கி, ஒவ்வொரு பிள்ளைக்கும் யான் உடை உடுப்பித்துக் கொண்டு வருகையிற், சென்ற இரவு ஒளிவட்ட மொன்று மேன் மிதந்து கொண்டிருந்த படுக்கை யண்டை வந்து, அதிற் படுத்திருந்த சிறுவனையெடுத்து என்னுடைய முழந்தாள்களின்மேல் வைத்து, அவனுடைய உடைகளை அவன் மேல் அணிவித்தேன். அப்போது மற்றைச் சிறுவர்களுடன் பேசிக் கொண்டிருந்த அப்பொடியன், சடுதியிற்றன்பேச்சை நிறுத்தி, எனது முகத்தை ஒருபுதுமையான குறிப்புத் தோன்ற உறுத்துப் பார்த்து, ஓ! ஐயா, என் அம்மை நேற்றிரவு என்னிடம் வந்தாள் நீங்கள் அவளைக் கண்டீர்களா? என்று என்னை வினவினான். ஒரு நொடிப் பொழுது யான் அப் பொடியனுக்கு விடை சொல்லாதிருந்தேன். அதன்பின் யான் அதற்கு விடை சொல்லாது விடுதலே நன்றென நினைந்து, நாம் கடியப் போக வேண்டும்; இல்லாவிட்டாற் காலையுணவு தப்பிவிடும் எனப் பகர்ந்தேன் என்பது.

அச்சிறான் மறுபடியும் அந்நிகழ்ச்சியைக் குறித்துப் பேசியதேயில்லை. அதைப்பற்றி ஏனையோரும் அவனுக்கு அதைச் சொல்லவும் இல்லை. அவ்வகதிநிலையக் காவலர் அது தம் அறிவுக்கு எட்டாத மறைபொருளாயிருக்கின்றது எனப் புகன்றார். நிகழ்ந்த உண்மையை நிகழ்ந்த படி சொல்லி, அவ்வளவில் அதனை நிறுத்திவிட்டார்; ஆனாற், றாம் கூறியவற்றுள் ஒன்றிலுந் தாம் பிழைபட வில்லை யென்பதை முற்றுந் தம்மனமார நுவன்றனர்.

இம் மெய்ந் நிகழ்ச்சியிற் போந்த ஒளியுரு, அதனைக் கண்ட அப் பொடியன்றன் அன்னையின் உருவமேயாகும். தன் பிள்ளைகளை அகதியாய் விட்டிறந்த தாயானவள் தனது நுண்ணுடம்பில் நின்று நினைத்த நினைவானது, அவளையொத்ததொரு வடிவினை அவடன் கடைசிப் பிள்ளையின் கண்ணெதிரே தோற்றுவிப்பதாயிற்று. அவள் ஈன்ற ஏனைப் பிள்ளைகள் எல்லாம் அவள் இறந்தஞான்று சிறிது வினாத் தெரிந்தவர்களாதலால், அவர்களைப்பற்றி அவள் கவலை கொள்ளாது, வினாத்தெரியாப் பொடியனாகிய தன் கடைசிப் பிள்ளையைப்பற்றியே கவலை கொண்டி ருந்தமையால், நுண்ணுடம்பிற் சென்ற பின்னரும் அவள் அப்பிள்ளையையே மிகுதியும் நினைத்தாள் ஆகல் வேண்டும். அதனாலேயே அவளுருவு அப் பிள்ளையின் படுக்கைக்கு மேன் மிதந்து காணப்படுவதாயிற்று. அவ் வகதிநிலையக் காவலருஞ் சமயகுருவுமாகிய ஜப் என்பவர் தெளிவுக்காட்சி (Clairvoint vision) உடையராயிருந்தமையால், அவருந் தமது படுக்கையில் இருந்தபடியே அவ்வுருவினை ஒளிவடிவாய்க் கண்டார். தன் அன்னையின் அவ்வுருவினைக் கண்ட பொடியனுக்குள்ள அளவினும், அக் குருவுக்குள்ள தெளிவுக் காட்சியின் வலிவு சிறிது குறைந்த நிலையில் இருந்தமையால், அவர் அவ்வுருவின் வடிவினைக் காணமாட்டாமல், அதனை ஓர் ஒளிப்பிழம்பாகவே கண்டார். இவ்வாறு அந்நினைவுருவினைக் கண்ட அவ் விருவரில் அச்சிறுவன் மட்டுங் கனவு நிலையிலிருந்தே தன் அன்னையின் அவ்வுருவினைக் கண்டவன் ஆவன். மற்று, அந்நிலையக் காவலராகிய சமயகுருவோ கனவுக்கும் நனவுக்கும் இடைப்பட்ட தொரு நிலையில் இருந்தார் என்பதே புலனாகா நிற்கின்றது; எதனாலெனின், அவ் வொளிவட்டத்தைக் கண்டு தமது படுக்கையின்மேல் எழுந்து உட்கார்ந்தவர், பின்னர் அதனைத் தொட்டுப் பார்ப்பதற்கு விரும்பி எழுந்தபோது எழமாட்டாமற் பின்னே இழுக்கப்பட்டனர் எண்பதனால்; அவர் தாம் வேண்டியபடி இயங்கவல்ல நனவு நிலையில் இருந்தனராயின் அவ்வாறு அவரது முயற்சி தடைபடுதற்கு இடம் இராதன்றோ? மற்று, அவர் கனவுநிலையிலும் இருந்திலர்; ஏனெனில் அவ்வுருவினைக் கண்டெழுந்தவர், யான் கனவுதான் காண்கின்றேனோ? என்று தம்முள்ளே தாம் வினவினராகலின்; கனவுநிலையிலிருப்பவர் அதனை நனவாகவே கருதி யிருப்பரல்லது கனவாக நினைத்தல் இல்லையன்றே. இங்ஙனம் இரண்டும் அல்லாதாகவே, அவர் அப்போதிருந்த நிலை, அறிதுயிலில் இருப்பார் நிலையினையுந் தூக்கத்தில் நடப்பார் நிலையினையும் ஒத்ததொன்றாகல் வேண்டுமென்பதே துணிபு என்க.

இன்னும், மேலதனோடொத்த வேறொரு மெய்ந்நிகழ்ச்சி யினையும் ஈண்டு மொழிபெயர்த்து வரைகுதும். மார்த்தா என்னுந் துறவுமாதரார் ஓர் ஆசிரியருக்குப் பின் வருமாறு எழுதுகின்றார்:

1891 ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 6 ஆம் நாள் வெள்ளிக்கிழமை பாடியன் என்னும் நோயாளியைப் பேணும்படி யான் அழைக்கப்பட்டேன். அன்றிரவு யான் ஐந்து நிமிஷம் அரைத்தூக்கத்தில் இருந்தபிறகு, ஒரு கனவு கண்டேன் – யான் கண்டது கனவெனக் கூறுதல் பொருந்துமாயின், யான் தூக்கத்திலிருப்பதாகவே நினைந்தேன். ஓர் ஒளியும் ஒர் ஒலியும் அங்குள்ள அடுப்பண்டையிலிருந்து வந்தன. ஒரு மாது வெளியே போந்தனள்; ஆனால் அவளது உருவம் யான் இதற்குமுன் அறிந்ததாய் இல்லை; என்றாலும், அவளது குரலொலி மட்டும் பாடியன் அம்மையாரின் குரலொலியை யொத்திருந்தது. யான் உங்களைப் பார்ப்பதுபோலவே அவளை அத்துணைத் தெளிவாகக் கண்டேன். சிசிலி என்பவள் உறங்கிக் கொண்டிருந்த சுட்டிலண்டையில் அவள் சென்று அப்பெண்ணின் கையை யெடுத்துச், சிசிலி எவ்வளவு அழகாய் இருக்கின்றாள்! என நுவன்றனள். யானும், எனது கனவில், அவளைப் பின்பற்றிச் சென்றேன். பின்னர் அவள் கதவைத் திறந்து மறைந்து போயினாள்.

அது நேர்ந்தது இன்னநேரத்திற்றான் என்று என்னால் திட்டமாய்ச் சொல்லல் ஏலாது! ஆனாலும், அஃது அவ்விரவின் முற்பொழுதிற் பதினொருமணிக்கும் ஒரு மணிக்கும் இடையே தான் தோன்றியதாகல் வேண்டும்; என்னிடத்திற் கைக்கடிகாரம் இல்லாமையால் அந்நேரத்தைக் குறித்துச் சொல்லல் என்னால் முடியவில்லை. இக்கனவு கண்டவுடனே யான் விழித்துக் கொண்டேன். சிசிலியை யான் எழுப்பவில்லை; ஏனென்றால், அதைப்பற்றி ஏதும் அவளுக்குச்சொல்ல நான் விரும்பவில்லை; ஆயினும் அக் கனவு என்னுள்ளத்தில் மிகவும் உறுத்தினமையால், மறுநாட் காலையில் யான் விழித்தபிறகு அதனை அவட்குக் கூறினேன். அங்ஙனந் தோன்றிய அம்மங்கை தன்கையில் ஒரு மெழுகுதிரி ஏந்திச் சென்றமையும், அவளுடைய ஆடைகளின் மேற் பலநிறப் புள்ளிகள் இருந்தமையும் ஆகிய குறிப்புக்களைத் தவிர வேறேதும் யான் சொல்ல மாட்டாதவளா யிருக்கின்றேன்.

இதற்கு முன் ஒருகால் இறந்துபோன என் அன்னை என் கண்ணெதிரே, தோன்றி, நீ கடவுளைத் தொழுங்காலங்களில் என்னை நினைப்பதில்லையே என்று சொல்லக் கேட்டதை யன்றி, இத்தகையதொரு கனவு வேறு கண்டிலேன் என்பது.

மார்த்தா என்னுந் துறவுமாதரார் பாடியன் என்பவரைப் பேணியிருந்த அவ்விரவிற் கண்ட ஒரு பெண் மகள் உருவத்தை, அதேயிரவில் அவர்தம் மகளாருங் கண்டு தெரிவித்தெழுதிய கடிதம் வருமாறு:

என் தந்தையார் நோயாய்க் கிடந்தபோது துறவுமாது எங்கள் இல்லத்தின் மேன்மாளிகையில் அவரைப் பேணிக் கொண்டிருந்தனள். அப்போது யானும் என் தமையனுங் கீழேயிருந்தோம். இரவு பத்துமணிக்கு யான் என் தமையனைக் கீழேயே விட்டு, மேன்மாளிகையில் என் படுக்கைக்குச் சென்றேன், பின்னர் பதினொருமணிக்கும் நள்ளிரவுக்கும் இடையே – யான் விழித்திருந்தேனோ அல்லது உறங்கிக் கொண்டு தான் இருந்தேனோ அறிந்திலேன், பெரும்பாலும் அவ்விரண்டிற்கும் நடுவான நிலையில் யான் இருந்திருக்கலாம் – எனது கட்டிலின் அருகே ஓர் ஆவியுருவத்தையொத்த வெள்ளை நிழலொன்று நிற்றலைக் கண்டேன்; அதனை இன்னாரது வடிவமென்று தெரிந்துகொள்ள எனக்கு நேரமில்லை; உடனே யான் பெருந்திகில்கொண்டு இட்ட கூக்குரலானது என்தமையனைத் திடுக்கிடச் செய்யவே, அவனும் மேலே படுக்க வந்தவன், எனது அறைக்கு விரைந்து போந்து, யான் வெருக்கொண்டு சுற்றிலும் விழித்தலைப் பார்த்தான். அவ்விரவின் பிற்பகுதி அமைதியாய்க் கழிந்தது.

மறுநாட்காலையிற் சிசிலி யென்பவள் துறவுமாது கண்ட கனவினை எனக்கு எடுத்துரைத்தனள். ஆனாற், சிசிலி தான் ஏதொன்றுங் காணவாவது கேட்கவாவது இல்லை. நான் அவள் சொன்ன அக் கட்டுக் கதையைக் கேட்டு அவள் மேற் சிறிது சினங்கொண்டு, அதனை ஒரு புல்லிய கனவெனவே சொல்லிவிட்டேன்; அதே யிரவில் அதே நேரத்திற் றோன்றிய அவ்விரண்டு தோற்றங்களையும் பற்றி யான் பேரச்சம் அடைந்தமையால், அவைகளைக் குறித்து ஏதுங் கேட்பதும் எனக்குப் பெருந்திகிலாயிருந்தது. சிசிலியும் அத்துறவுமாதும் யான் கண்ட கனவைப்பற்றி ஏதுமே அறியார். இரண்டு நாட் கழியும் வரையில் நான் அதனை அம் மாதுக்குச் சொல்லவில்லை, என்பது.

இம் மெய்ந்நிகழ்ச்சியிற் போந்த உருவத்தை மாதரார் இருவர் ஒரேயிரவில் ஒரே நேரத்திற் கனவுக்கும் நனவுக்கும் இடைப்பட்டதொரு நிலையிலிருந்து கண்டமையும், அங்ஙனங் கண்ட அவ்வுருவினை ஒருவர் ஒரு பெண்மகள் வடிவமாகவும், மற்றவர் ஒரு வெள்ளிய நிழலாகவுங் கண்ட பான்மையும், இருவரும் அவ்வுருவினைத் தமக்குத் தெரிந்த ஒருவரது வடிவமாகத் தெரிந்துகொள்ள முடியாமை யுங்கருத்திற் பதிக்கற்பாலன வாகும். தாம் கண்டறியாத ஒருவரது உருவம் அம் மாதரார் இருவருமே நினையாதிருக்கையில் அவர்தங் கட்புலனெதிரே தோன்றியதனை உற்றாராயுங்கால், அவ்வுருவத் தோற்றம் உண்மையானதே யன்றி அம் மாதரார் எவரையேனும் நினைந்த நினைவின் தோற்றமாதல் செல்லாது. இனி, அத் தோற்றம் இறந்து போன ஒரு பெண்மகளின் நினைவின் தோற்றமோ அல்லதவளின் நுண்ணுடம்பின் தோற்றமோ, இன்னது தானென்று உறுதிப் படுத்துதற்குச் சான்றில்லை. அதுநிற்க.

இனி, நனவின்கட் பலர்க்குத் தோன்றிய சில நினைவுருவ மெய்ந் நிகழ்ச்சிகளை ஈண்டு எடுத்துக் காட்டுவாம்.

1850 ஆம் ஆண்டு, பிப்பிரவரி 16 நாள், பால்சன் எனப் பெயரிய ஓர் ஆங்கிலமாதரார் தமது இல்லத்தின் அடுக்களையிற் சாய்ங்கால் வேளையிற் றங்குடும்பத்தினருடன் தேநீர் பருகியபின், தன்னேவற்காரி, மேன்மாளிகை யிற் படிக்கும் அறையை ஒழுங்கு செய்து வைத்தனளாவென்று பார்க்கும் பொருட்டுப் படிமீது ஏறிச்சென்றார். படிகளின்மேல் உச்சியிற்சென்ற, சிறிது காலத்திற்குமுன் தம்மிடமிருந்து போன ஒரு மங்கை தம்மைக் கடந்து செல்லக் கண்டார். கண்ட அம் மங்கை கரியதொரு பட்டாடை உடுத்து, முகத்தின்மேல் வெள்ளிய மெல்லாடை கவித்திருந்தனள். அவள் அம்மாதரைக் கடந்து சென்றபோது அவள் பூண்டிருந்த அவ்வாடை சரசரவென அரவஞ்செய்தது. அவள் முகத்தை அம் மாதரார் ஒரு சிறிதுதான் பார்க்கக்கூடியவரானார். ஏனென்றால், அவள் அரவமின்றி மிக விரைவாகச் சென்று, அம் மாதரார் படுக்கும் அறையினுள்ளே நுழைந்துவிட்டனள். அவ்வுருவத்தைக் கண்டதும் அவர் ஐயோ காரின் எனக் கூவிக்கொண்டே கீழிறங்கித் தம் கணவன் பக்கத்தே போய் உணர்விழந்து கீழ் விழுந்து விட்டனர், பிறகு பெரும்பாடுபட்டு அவர் அக் களைப்புத் தீர்க்கப் பெற்று உணர்வுகூடி எழுந்தனர். அடுக்களையில் வேலைசெய்யும் பணிப்பெண், மறுநாட்காலையில் அடுப்பைத் துடைத்துத் துப்புரவு செய்கையில், அதே பெண்மகளுருவங் கறுப்புத்துணி யுடுத்து முகத்தின்மேல் வெள்ளாடை மூடி யணிந்தபடியாய் மார்பின் கட்குறுக்கிட்ட கையினதாய்த் தன் பக்கத்தே அமர்ந்திருக்கக் கண்டு அச்சிறுமி பெரிதும் வெருக்கொண்டாள். அதனால், அப் பணிப்பெண் அவ்வடுக்களை யறையினுட் போகச் செய்வது பெருவருத்தமாயிற்று. இங்ஙனம் அப் பணிப்பெண்ணும் அதே யுருவத்தைக் கண்ட அவ் வரலாற்றினைச் சொன்னால், அஃதம் மாதர்க்குப் பெரியதொரு நடுக்கத்தை உண்டுபண்ணுமென நினைந்து, அவ் வீட்டிலுள்ளார் எவரும் அதனை அவர்க்கு மறுநாளிரவிலுஞ் சொல்லிற்றிலர்; என்றாலும், அவ்வம்மையாரைக் காணவந்த அண்டை வீட்டவர்கள் அவர் கண்ட அவ்வுருவத் தோற்றத்தைப் பற்றிக் கேட்டு இறும்பூதுற்று, அவர்தம் மருகியாரான காரலின் நங்கை தன் உடன்நலத்தைக் குறித்து உடனே ஒரு கடிதம் எழுதிக் கேட்கும்படி வற்புறுத்தினர். அவ்வாறே அவ்வம்மையார், தொலைவாயதோர் ஊரிலிருந்த தம் மாமன் மாமியர்க்கு ஒரு கடிதம் அடுத்தநாள் இரவே எழுதிவிடுக்க, அதற்கு விடையாக வந்த கடிதத்தில், மருகிகாரலின் உருவத்தை அம் மாதரார் கண்ட அதே நாள் மாலைக்காலத்தில் அவள் இறந்துபட்டாளென்பது குறிக்கப் பட்டிருந்தது.

இம் மெய்வரலாற்றிலிருந்து, பால்சன் மாதரும் அவர்தம் இல்லப் பணிப்பெண்ணும் விழித்திருக்கையிலேயே கண்ட காரலின் மாதின் உருவம், அம் மாது இறக்குந் தறுவாயில் தான் மாமியாகிய பால்சன் அம்மையாரை அன்பினால் நினைந்தமையால் உண்டாயதாகும். இப்பெண் மகள் தான் இறந்துபோதற்குச் சிறிது காலத்தின் முன் பால்சன் அம்மையார் இல்லத்திற் போந்து சிலநாள் தங்கியிருந்து அவருடன் அன்பினால் அளவளாவி யிருந்தவள். அங்ஙனம் அளவளாவி யிருந்து பிரிந்த சின்னாட்களில் அவள் இறக்க நேர்ந்தமையின், அவள் அந் நேரத்தில் அன்பிற்சிறந்த தன் மாமியை உறுத்து நினைக்கலானது இயற்கையே யாம். உறுத்து நினைக்கும் நினைவு நினைந்தாரது வடிவினை நினைக்கப்பட்ட அன்புடையார் கண்முன்னே தோன்றச்செய்தலும் ஆங்காங்கு நிகழா நிற்றலின், பால்சன் அம்மையாரும் அவர்தம் பணிப் பெண்ணுங் கண்ட அவ்வுருவம் நினைவுருவமேயல்லாது ஆவியுருவம் அன்றென் பது தெளியப்படும். அற்றேல், அவ்வுருவம் அன்பின் றொடர்பு இல்லாத அப்பணிப் பெண்ணின் கண்கட்கும் புலனாய தென்னையெனின்; ஒருவர் தம்முறவினர் ஒருவரது இல்லத்திற் போந்து அளவளாவியிருக்குங்கால், அவ் வில்லத்து ஏவலாளரில் அறிவுவாய்ந்த ஒருவர் தமக்கு அன்பினாற் பணி செய்தன ராயின், அத்தகைய ஏவலரையும் அந்நேரத்தில் நினைப்பதூஉம் இயற்கையே யுண்டாமாகலின், அவ்வுருவம் அப்பணிப் பெண்ணுக்குந் தோன்றலானது பொருத்தமேயாமென்க.

இனித் தேகிரீன் என்னும் படைஞர் கண்ட நினைவின் தோற்றமும் விம்மிதம் பயப்பதொன்றாய் இருத்தலின் அதனையும் இங்கெடுத்துக் காட்டுதும்; அவர் பின் வருமாறு வரைகின்றார்:

யான் ஷாங்கையில் இருந்தபோது இம் முதல் நிகழ்ச்சி தோன்றுவதாயிற்று. அது 1854 ஆம் ஆண்டு மேத்திங்கள். இராப்பொழுதோ மிகவும் அழற்சி வாய்ந்ததாயிருந்தது. சீனர்கள் திடீரெனப் போந்து தாக்குவரென்னும் அச்சத்தால், யான் அப்போது எம்மைச் சூழவிருந்த இடர்களை நினைந்த வண்ணமாய் என் படுக்கை மேல் மல்லாந்து படுத்து விழித்துக்கொண்டிருந்தேன், வரவர ஏதோ ஒன்று என் படுக்கை யறையினுட்டோன்றுவதாக உணர்ந்தேன். என் கட்டிலுக்கு ஓரடிதொலைவில் மூடுபனிபோன்ற மெல்லிய ஒரு வெள்ளிய பொருள் இடைவெளியில் தொங்குவதுபோல் எனக்குத் தென்பட்டது. முதலில் அஃது ஒருநிலாக்கதிரின் றோற்றமா யிருக்கலாமென எண்ணி அதனை உன்னியாமலிருந்தேன்; பின்னர்ச் சிறிது நேரத்தில் அஃது என் தங்கை பானி என்பவளின் வடிவமென அறியலானேன். துவக்கத்தில் அவளது முகந்துயரக் குறிப்புடையதாகக் காணப்பட்டது; பிறகு அதன் கண் இனியதொரு புன்னகை தோன்றலாயிற்று; என்னை அவள் இன்னாரெனத் தெரிந்துகொண்டாற் போல் என் முகமாய்த் தன் தலையை வளைத்துநோக்கினாள். அத்தோற்றத்தைப் பார்த்து யான் மிகவும் மருண்டுபோனமையால், அதனொடு பேசுதற்கும் எனக்கு நா எழவில்லை; என்றாலும், அதைப்பற்றி எனக்குச் சிறியதோரச்சமும் உண்டாக வில்லை. அவ்வுருவம் முதலில் எவ்வாறு சிறிது சிறிதாய்க் கட்புலனாகியதோ அவ்வாறே அது சிறிது சிறிதாய் மறைந்தேகியது. பின்னர் யாம் அறிந்த செய்தியால், யான் என் தங்கையின் உருவத்தைக் கண்ட அதே நாளிலே தான் அவள் திடுமென இறந்துபட்டாளென்பது விளங்கலாயிற்று.

இந்நிகழ்ச்சிக் குறிப்புகளை யான் தங்கட்கு எழுதி விடுப்பதாக உறுதி சொன்ன அதேநாளில் என் மற்றொரு தங்கை எலிமிசிலிக்கும் அவற்றை எழுதியிருந்தேன். அவள் அதற்கு விடையாக வரைந்த கடிதத்திற், பானி எனக்குமுன்னே தோன்றிய நேரத்தில் யான் விழித்திருக்க வில்லை; ஆனாலும், யான் உடனே கண்விழித்து, நீங்கள் விளக்கியெழுதியவாறே அவளது உருவத்தோற்றம் இருக்கக்கண்டேன். யான் அப்பொழுதே என் கைகளை நீட்டிப் பானி! பானி! எனக் கூவினேன். அவள் என்னைப் பார்த்துப் புன்சிரிப்புக் கொண்டு, என்னைவிட்டுப் பிரிவதிற்றுயரமுற்றாள்போற் காணப்பட்டுப், பின்னர்த் திடீரென மறைந்து போயினாள் என்பது குறிக்கப்பட்டிருந்தது.

இது நேர்ந்தகாலத்தில் தேகிரீன் என்பவரும், அவர் தம் மற்றொருதங்கை எலிமிசிலி என்பவளும் ஒருவரை விட்டொருவர் ஆயிரமைலுக்கப்பால் விலகியிருந்தோராவர். அதனால், அவ்விருவருந், தம் தங்கை மிக நோயாய்க் கிடந்தனளென்றாவது இறந்துபோவளென்றாவது நினைத்தற்கு இடமே யில்லை. ஆனால், இறந்துபோன தங்கையோ தான் உயிர்விடுதற்குமுன், தனது கட்டிலைச் சூழ இருந்தாரிடத்தில் தன் தமையனையுந் தமக்கையை யும்பற்றிப் பேசியதுண்டு. அவள் உயிர்நீத்தது 1854 ஆம் ஆண்டு மே, 30 – இல் இரவு 10 மணிக்குமேல் 11 மணிக்குள்ளாகும்.

இன்னுங், கூட் எனப் பெயரிய ஓரம்மையார் 1872 ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் ஈற்றிலோ அல்லது டிசம்பர்த்திங்கள் முதலிலோ ஒருநாள் விடியற் காலையில் ஐந்து மணிக்குமேல் ஆறுமணிக் குள்ளாகப் பகலவன் வெளிச் சந்தோன்றுதற்குச் சிறிது முன்னே தோன்றிய ஓர் உருவத் தோற்றத்தால் துயிலொழிந்து விழித்துக் கொண்டார். அவ்வுருவமானது நீண்டவடிவினதாய் இரவிற் பூணும் ஆடையணிந்து அவ்வம்மையாரின் கட்டிலைக் குனிந்து நோக்கக்கண்டார். அதனை அவ்வம்மையார் உற்றுநோக்க, அது தம் நாத்துணாரின் வடிவமாய் இருக்கக்கண்டதுடன், அது தம்மைத் தன் கையாற் றொட்டதெனவுந் தெளிவாய் உணர்ந்தார்.

அவ்வுருவம் அங்ஙனம் அவ்வம்மையார்க்குத் தோன்றியது போலவே, நெடுந்தொலைவில் வேறோர் ஊரில் உயிர் வாழ்ந்த முதியோளான தன் அத்தையின் முன்னுந் தோன்றியது. அம் முதிய மாதை அணுகி அத் தோற்றத்தைப் பற்றிக் கூட் அம்மையாரின் கணவர் கேட்க, அவள், ஒரு நாள் விடியற்காலையில் தன் படுக்கையறையின் ஓர் இருண்ட மூலையிலிருந்து ஒருசுடரொளிவடிவாய் அத்தோற்றம் வந்த தென்றும், அஃது அத்துணையொளியொடு துலங்கினமையால் அதனைத் தன் மரு மகளெனவேதான் கண்டுணர்ந்தனளென்றும், அவ்வுருவத்தின்மேற் காணப்பட்ட ஆடையில் அதன் பூத்தையலைக் கூடத் தான் காணக் கூடியதாயிருந்ததென்றும் எடுத்துரைத்தாள்.

இனித், தன் அத்தையார்க்கேயன்றிக், கூட அம்மையாரின் கணவர்தம் தமக்கையார் முன்னிலையிலும் அத்தோற்றம் அதேநாளின் அதேபொழுதில் அவ்வொளி வடிவிலேயே தோன்றிற்றென்பதும் பின்னர்த் தெரியலாயிற்று.

இவ்வாறு வெவ்வேறாக வெவ்வேறூரிலிருந்த மூவர் முன்னிலையிலும் விடியற்காலையில் அவர் விழித்துக் கொண்ட நேரத்திற், கூட அம்மையின் நாத்துணார் வடிவந் தோன்றிய வியத்தகு நிகழ்ச்சியை, அம் மூவரும் பின்னர் ஒருங்காராய்ந்து பார்க்க, நெடுந்தொலைவில் அமெரிக்கா தேயத்திற்குத் தன் கணவருடனுந்தன் மூன்று பிள்ளை களுடனுஞ் சென்று பாடன்நகரிற் குடியேறிய அவ்விளமாது அம்மைநோயினால் இறந்துபோயினார் என்னுஞ்செய்தி அந்நகரில் வெளியான புதினத்தாளிற் குறிக்கப்பட்டிருந்த தறிந்து இறும்பூதுற்றனர். அங்ஙனம் அவள் இறந்த நேரத்திலோ அல்லததற்குச் சிறிதுகழிந்தோ அவளுருவத் தோற்றம் அம் மூவர்க்குந் தோன்றியதாதல் வேண்டுமென்பது, பிறகு அம் மூவரில் இருவர் அதனைக்

கண்ட நாளையும் பொழுதையும் ஒத்து நோக்கினமையாற் புலனாயிற்று. மூன்றாம் மாதர்க்கு அத் தோற்றங் காணப்பட்ட நாள் அவராற் குறித்துவைக்கப் படாமையால் அதைப்பற்றிமட்டும் உறுதிசொல்லல் இயலவில்லையென்று அதனை ஆராய்ந்த ஆசிரியர் நுவன்றனர். அதுநிற்க.

மேற்காட்டியவாறெல்லாம் உறவும் அன்பும் உடையாரில் ஒருவர் இறந்துபடுங்கால், அவர் அந் நேரத்திற்றமக்குரியாரை அன்பினால் நினைக்க, நினைத்த அந் நினைவு அந் நேரத்தில் அவரிருந்த உருவநிலையினை, நினைக்கப்பட்டார் ஒருவர் அல்லது இருவர் அல்லது மூவர் முன்னிலையிற் றோன்றச் செய்தல் மறுக்கப்படாத மெய்ந்நிகழ்ச்சிகளாய் ஆங்காங்கு உலகமெங்கணும் நிகழ்தலை விளக்கி வரைந்திட்டாம். இனி, அவ்வாறின்றித், தாம் இதற்குமுன் கண்டு கேட்டுப் பழகியறியாத பொருள்களின் றோற்றங்களையும் மக்களின் றோற்றங்களையுஞ் சிலர் பலர் விழித்திருக்கையிலேயே தம் கண்ணெதிரே காணப் பெறுதலாகிய நிகழ்ச்சிகளும் ஒரோவொருகால் ஆங்காங்கு மெய்யாகவே நிகழ்கின்றன. இத்தன்மையவாகிய தோற்றங்களை, நினைவின் றோற்றத்தின்கீழ் கொணர்ந்து வைத்து விளக்கிக் காட்டுதல் இயலாததாயிருக்கின்றது. தாம் முன் கண்டு கேட்டுப் பழகிய பொருள்களையே ஒவ்வொருகால் மக்கள் உறுத்து நினைக்கமாட்டுவாரன்றித், தாங் காணாத கேளாத பழகாத பொருள்களை அங்ஙனம் நினைக்கமாட்டுவா ரல்லர். ஆகையால் முன்னறியாத பொருள்களின் றோற்றங்கள் சிலகாற் சிலராற் காணப் படுமாயின், அவை தம்மை உயிரோடுலவும் மக்கள் நினைந்த நினைவின் றோற்றங்களாகக் கொள்ளுதல் இயலாததேயாம். அத்தகைய தோற்றங்கள் உயிரோடுலவுவார் நினைக்கும் நினைவின்றோற்றங்களை ஆகாவிடின், மற்று அவை இறந்துபோனவர்தம் நினைவின் றோற்றங்களாகவாதல், அல்லதவர்தம் ஆவி யுருவங்களின் றோற்றங்களாகவாதல் கொள்ளுதலே முறையாம். தாம் முன் கண்டு கேட்டுப் பழகி யறியாத சில பொருள்களின் றோற்றங்களைச் சிலர் காண்டலுக்குச் சில உண்மை நிகழ்ச்சிகளை இங்கெடுத்துக் காட்டுவாம்:

1851 ஆம் ஆண்டு மேத்திங்களில் உவார்டு எனப்பெயரிய ஓரம்மையார் தாமுந் தங்கணவருங் கண்ட ஒரு வியத்தகு காட்சியினைப்பற்றிப் பின்வருமா றெழுதுகின்றார்; மேத் திங்களில் யானும் என்கணவரும் அண்டையிலுள்ள எங்கள் நேசர்களின் விருந்தாட்டு ஒன்றிற்கு ஒருநாளிரவிற் போய் வந்தோம். நாங்கள் திரும்பிவந்த பொழுது மணி 12. எங்கள் வேலைக்காரர்க ளெல்லாரும் அந்நேரம் உறக்கத்திலிருந்த மையால், யாங்களே வீட்டினுள் நுழைந்து, நேரே எங்களது படுக்கையறைக்குச் சென்றோம். அன்று மாலையில் அமைதியான அவ்விருந்தாட்டிலிருந்து வந்தபின், யாங்கள் பேசவேண்டுவ தொன்றும் இல்லாமையால், என்கணவனார் உடனே கட்டிலிற் படுத்து உறங்கிவிட்டார். யானும் அவரைப் போலவே படுக்கச் செல்லும்பொருட்டுமெழுகுதிரிவிளக்கை அணைத்துவிட்டு, எங்களது அறையின் வாயிற் கதவை நோக்கிய படியாய்க் கட்டிலின்மேல் ஏறினேன். அப்போது அவ் வாயிற்கதவின் உச்சிக்கு அருகாமையில் ஒரு புதுமையான சுடரொளி அசைவொடு தொங்கிக் கொண்டிருக்கக் கண்டு மிகவும் இறும்பூதுற்றேன்; அஃது ஆறு விரற்கடை நீளமும் நாலு விரற்கடை அகலமும் உடையதாய் நீலநிறத்துடன் ஒளிர்ந்தது. அது கண்டு யான் மிகவுந் திடுக்கிட்டேன்; மேலும் மிகுதியாய்க் கலங்கியிருப்பேன்; ஆனால், எனது நெஞ்சத் துடிப்பின் அரவத்தால் என் கணவர் விழித்துக் கொண்டார். விழித்தவர் யாது நேர்ந்ததென என்னை வினவ, இன்னும் அவ் வாயிற்படியண்டை தொங்கிக் கொண்டிருந்த அச் சுடரொளியை நோக்கும்படி அவரைத் தூண்டினேன். அங்ஙனமே அவரும் அதனை நோக்க அஃது யாதாயிருக்க லாமென்று யாங்கள் எண்ணமிட்டுக் கொண்டிருக்கையில், மற்றொருசிறிய சுடர் அதனைப் போலவே அதன்பக்கத்தே வந்து சேர்தல் கண்டோம். வியப்பினைத் தரும் இவ்விரண்டு சிறு சுடரும் பின்னர் எங்களை நோக்கி மெல்லவருதல் கண்டு, எங்கட்குண்டான இறும்பூது இவ்வளவென அளவிடற்பால தாயில்லை. அவைகள் அங்ஙனம் எங்கள் கட்டிலண்டை வரவே, யாங்கள் அவற்றின் தன்மையை ஆராய்ந்து பார்க்கத் தீர்மானித்துப், படுக்கைமேல் எழுந்துட்கார்ந்தோம். என் கணவர் அவற்றைத் தம் கைகளாற் பிடித்தார்; பிடித்து அவற்றை எம்மிடமிருந்து தொலைப்பான் வேண்டி அவற்றைத் தம் மிரண்டு கைகளின் நடுவே வைத்துத் தேய்த்தார். ஆனால் யாங்கள் பெரிதும் வியக்க, அவை சிறு சிறு ஒளிமணிகளாய் உடைந்து எங்கள் மெத்தைத் துப்பட்டிமேலெல்லாம் பாதரசம்போல் ஓடின. அதுகண்டு, அவைகளை அவித்தற்கு யாங்கள் முயல்கையில் அவை கட்புலனாதலின்றி மறைந்துபோயின, என்பது.

மேற்சொல்லிய மெய்ந்நிகழ்ச்சியில் ஒரு மாதர்க்கும் அவர்தங் கணவர்க்கும் ஒரே காலத்திற் கட்புலனான நீலச்சுடரொளி, அதற்குமுன் அவர் கண்டறியாத தொன்றாகும். அவ்விருவரும் அதனைக் கண்டதூஉங், கனவிலன்றி நனவின்கண்ணதே யாகும். அத் தோற்றத்தை அவ் வொருநாளிலன்றி அதற்கு முன்னும் பின்னுந் தாங்கண்டதில்லையென்றும் அவர்கள் உறுதிமொழி புகன்றிருக்கின்றனர். ஆதலால், அப் புதிய சுடரொளித் தோற்றம் யாது? அஃது எங்கிருந்து வந்தது? அஃதேன் அவர்கள் முன்னிலையிற் றோன்றியது? அஃது அவ்வாறு தோன்றியதன் குறிப்பு என்னை? என்று அவ்விருவரும், ஆராய்ச்சி வல்ல ஆசிரியரும எவ்வளவோ ஆராய்ந்து பார்த்தும், அதைப்பற்றி அவர்கள் ஏதொரு முடிவுந் தெரிந்து கொள்ளல் இயலவில்லை. இங்ஙனமே தாம் முன்பின் காணாத ஒரு குதிரை வண்டியின் தோற்றத்தை ஒரு துரைமகனாரும் அவர்தங் குடும்பத்தாருங் கண்ட வரலாற்றினை அத் துரைமகனார் கூறியபடியே இங்கு மொழிபெயர்த்து வரைவாம்:

அஃது ஆகட்டுத் திங்கள்; இராப்பொழுது நிலவின்றி இருண்டு ஓவென்றிருந்தது. ஒரு நாள் நள்ளிரவில் யான் படுக்கைக்குச் செல்லும்முன், எனது வழக்கப்படி வானத்தின் நிலைமையைப் பார்க்கத் தலைவாயிலிற் சென்றேன். சென்று, அதன் படிமேல் ஒரு நொடிப்பொழுது தான் யான் நின்றிருப்பேன்; அப்போது சடுதியில் இரட்டைக் குதிரைகளால் இழுக்கப்பட்ட ஒரு சாரட்டு வண்டி பெட்டிமேலிருந்த இருவராற் செலுத்தப்பட்டு எங்கள் வீட்டுப்பக்கமாய்த் திரும்பிவரக் கண்டேன். அஃது எங்கள் வீட்டினெதிரே மிகுவிரைவாய்ச் சென்று, இரண்டு செங்குத்தான கரைகளுக்கு நடுவே ஓடும் ஒரு நீரோட்டத்திற்குப் போகும் ஒரு வழியிற் புகுவதாயிற்று. எங்கள் வீட்டின் அப்பக்கத்தில் ஏதொரு வண்டிப்பாட்டையும் இல்லாமையால், அவ்வழியே விரைந்து செல்லும் அவ்வண்டி வெள்ளத்திற்போய் விழுமேயென அஞ்சி, வண்டியை நிறுத்துமாறு வண்டியோட்டிகளை அழைத்துக் கூவினேன். ஆனாலும், அஃது அந்நீரோட்டத்தின் வரையிற் சென்று பின்னர்த் திடீரென நின்றுவிட்டது. அதன்பின் அஃது அங்கிருந்து திரும்பி அடுத்திருந்த மைதானத்திற் சென்றது. யான் உடனே வீட்டைவிட்டு அவ் வண்டியண்டை போயினேன்; அந்நேரத்தில் என் மகனுங் கையிற் பிடித்த ஒரு கண்ணாடி விளக்குடன் என்பால் வந்து சேர்ந்தனன். பெட்டிமேலிருந்த ஆட்களிருவரும் ஏதும் பேசிற்றிலர். அவ் வண்டியினுள்ளிருந்தும் ஏதொரு பேச்சுக் குரலுங் கேட்கவில்லை. என் மகன் வண்டியினுள்ளே நோக்கினான். அப்போது அவன் பார்வைக்குத் தென்பட்டதெல்லாம், அவ் வண்டியினுள்ளே ஒரு மூலையில் முறைப்பாக உட்கார்ந்திருந்த ஒரு பெண்பாலின் வடிவமேயாகும். அவ்வடிவம் முடியிலிருந்து அடிவரையில் வெளேலென்ற வெள்ளுடை மேற்கொண்டிருந்தது. வெளியே உட்கார்ந்திருந்த ஆண்பாலார் இருவரும், உயிர்ப்பொருளென்னுங் குறிகாட்டாமல் அரவமின்றி உள்ளேயிருந்த பெண்பாலெனத் தோன்றிய ஒரு வெள்ளிய உருவும் வாய்ப்பேச்சு ஏதுமில்லாதிருந்தமை ஒருபெரும் புதுமையாகக் காணப்பட்டது. யான் அவ்வூரின் வளப்பமெல்லாம் நன்கறிவேனாயினும், இப்போது தோன்றிய வண்டியையும் அதனை யோட்டும் ஆட்களையும் அதனையிழுக்குங் குதிரைகளையும் இதற்குமுற் சிறிதும் அறியேன். பின்னர் அவ்வண்டி அம் மைதான வெளி யினூடே சென்று, அங்குள்ள குதிரைவாடி (இலாயத்து)க்குப் போகும் பாட்டையிற் புகுந்து அதனையுங் கடந்துபோய் விட்டது. மறுநாட்காலையில் அவ் வண்டியுருளின் சுவடுங் குதிரைக் குளம்படிகளின் சுவடும் அதுசென்ற வெளி நிலத்திலாவது பாட்டையிலாவது பதிந்துளவா என்று நோக்க அஃதொன்றுமே அங்குக் காணப்படவில்லை. அவ்வூரிலுள் ளாரிடம் அவ் வண்டியைப் பற்றியும் அதிலுள்ளவர்களைப் பற்றியும் எவ்வளவோ கருத்தாய் உசாவியும், ஏதொரு வரலாறும் புலனாயிற்றில்லை. ஆனாலும், யான் உரத்துக் கூவியது கேட்டு என் மனைவியும் புதல்வியுங்கூடச் சாளரத்தண்டை ஓடிவந்து அவ் வண்டியைக் கண்டார்கள். இது நிகழ்ந்தது 1878, ஆகட், 23 ஆம் நாளிலாகும், என்பது.

இந் நிகழ்ச்சியின் உண்மையை ஆராய்ந்தறியச் சென்ற உயிர்நிலை ஆராய்ச்சிக் கழக ஆசிரியர் ஒருவர் (Podmore), அவர்கள் கண்டது பருப்பொருள் வண்டியன்று என்பதனை ஆராய்ந்து உறுதியாகத் தெரிந்து கொண்டார். பருப்பொருள் வண்டியாயிருந்தால்அது திரும்புதற்குப் போதுமான இடம் அப் பக்கத்தில் இல்லை. மேலும், அவ் வண்டிசென்ற மைதானவெளி பாசிபடர்ந்து புல் அடர்ந்த ஈரநிலமாயிருந்தது. அதன்கண் அவ்வண்டியுருள்களின் சுவடுஞ் சிறிதுதானுங் காணப்படவில்லை. அவர்களது வீட்டின்முன்னே அவ்வண்டி சில இமைப்பொழுதுதான் நின்றிருக்கலாம். அதனைக்கண்ட துரைமகனார் அதன்மேலிருந்த இருவரொடு பேசியும் அவர்களிடமிருந்து விடையேதும் வரவில்லை. மேலும், அத் துரைமகனாரைப் போலவே, அவர்தம் மனைவியும் புதல்வன்புதல்வியரும் அதனைக் கண்டுள்ளார். அதனால், அதனை வெறும் பொய்த் தோற்றமென்றுங் கூறுதல் பொருந்தாது. ஆகவே, அவ்வண்டியின் றோற்றம் முன்பின் அறியப்படாத ஒரு புதுமையாகவே கொள்ளற் பாலதாயிருக்கின்றது. இங்ஙனமே இன்னும் வண்டியின் றோற்றங்கள் பல பலர்க்குப் பலகாற் பலவிடங்களிற் றோன்றியிருக்கின்றன.

இனி, வண்டியின் தோற்றங்களேயன்றி, மெய்யான பருப்பொருள் வண்டிகள் செல்லுங்கால், அவற்றையடுத்து மக்களைப் போன்ற சில உருவங்கள் தொடர்ந்து செல்லு தலையும் அவ் வண்டிகளின் உள்ளேயும் வெளியேயும் இருந்தவர்கள் கண்டிருக்கின்றார்கள். அதற்கோருண்மை நிகழ்ச்சியினை ஈண்டெடுத்துக் காட்டுதும்; டோன் எனப் பெயரிய ஓர் அம்மையார் பின்வருமாறு வரைகின்றார்.

வேனிற்காலத் தொருநாள் இனிய மசங்கல் மாலையில் யானும் என் மருகியும், என் தோழியும் வேலைக்காரனும் ஒரு வண்டியிற் போய்க் கொண்டிருந்தோம். அப்போது எமது வண்டியின் வலதுகைப் பக்கத்தே ஓர் ஆடவன் எங்கள் குதிரையின் தலைமாட்டில் மிதந்து செல்வது போல் நடக்கக் கண்டேன். என் தோழி, மேரி என் அண்டையில் அமர்ந்திருந் தாள். எனது மெல்லிய குரலில் அவளுக்கு அவ்வாடவன் உருவினைச் சுட்டிக் காட்டினேன்; ஆனால், அவள் கண்களுக்கு அது தென்படவில்லை. என் மருகியும் வேலைக்காரனும் எனக்கெதிரேயுள்ள இருக்கைமேல் இருந்தார்கள். யான் சொல்லியதைக் கேட்டு என் மருகி தன்முகத்தைத் திருப்பிப் பார்த்து,நீங்கள் சுட்டிய ஆடவன் உருவினை யானுந் தெளிவாய்க் காண்கின்றேன் என்றனள். எங்கள் வேலைக் காரனோ திகில் கொண்ட குரலினனாய், அம்மா ஒன்றும் பேசாதீர்கள்! சும்மாயிருங்கள்! என்று மெல்லச் சொல்லினான். குதிரைகளும் மற்றை விலங்கினங்களும் ஆவியுருவங்களைக் கண்டு வெருள்கின்றன வென்று பலர் சொல்லக் கேட்டிருக் கின்றேன். ஆனால், எங்கள் வண்டியிற் சென்ற குதிரையோ சிறிதும் வெருண்டோடவில்லை; ஒரே வகையான ஓட்டத்தி லேயே ஏகியது; அஃது அங்ஙனஞ் சென்ற தன்மையினை எண்ணிப் பார்க்க அஃது அவ்வாடவனுருவினால் அடக்கப்பட்டே அவ்வாறு சென்ற தென அறியலானேன். அவன் முகம் எங்கள் பக்கமாயின்றி எதிரே திரும்பி யிருந்தமையால் அவனது முகம் என் கண்களுக்குத் தெரியாவிட்டாலுங், கரிய உடை பூண்ட அவ்வாண்மக னுருவம் எனக்கு நன்கு புலனாகிய

படியே தொடர்ந்து முற்சென்றது. என் மருகியும் ஏவலனும் அதனைத் தெளிவாய்க் கண்டனர். அவ்வுரு அம் மாலைக்கால வெளிச்சத்தில் தெற்றெனத் தோன்றியும், என் தோழி மட்டும் அதனைக் காணக்கூடவில்லை; அவள் என்பக்கத்தேயிருந்த மையால் எமக்கு எதிரே முன்னேறிச் சென்ற அவ்வாடவ னுருவினை, மற்றையிருவரையும்விட அவடான் எளிதிற் காணக் கூடியவளாய் இருந்தாளாகல் வேண்டும். இனி, நாங்கள் சார்மின்டர் என்னும் ஊருக்கு அணித்தாக வந்தவுடனே, அவ்வுருவம் மறைந்து போயது; அதனை மீண்டும் யாங்கள் பார்க்கவேயில்லை. அப்பாட்டையிற் பேய்கள் நடமாடுவ துண்டென்று இதற்கு முன் நாங்கள் கேட்டதுமில்லை, என்பது.

இம் மெய்ந்நிகழ்ச்சியிற் காணப்பட்ட ஓராண்மகனுருவின் றோற்றம், அதனைக் கண்ட மாதர் இருவராலும் ஏவலன் ஒருவனாலும் இதற்குமுன் சிறிதும் அறியப்படாததாகும். அப்பாட்டையிற் பேய்கள் இயங்கு வதுண் டென்று அவர்கள் யாருங் கேட்டதில்லாமையால், அவர்களது அச்சவுள்ளத்தி லிருந்து அத் தோற்றம் உண்டாகியதென்று கூறுதலும் ஆகாது. ஆதலால், ஆவியுலகில் நிற்கும் ஒரு குதிரைக்காரனது ஆவி யுருவமோ, அல்லதவன்றன் நினை வுருவமோ அந்நேரத்தில் அம் மூவர் கண்களுக்கும் புலனாகி அவர்தம் வண்டிக் குதிரையினை ஏவிக்கொண்டு சென்றதாகல் வேண்டுமெனக் கொள்ளுதலே பொருத்தமுடைத்தாம். அற்றேல், அவ்வண்டியுட் சென்ற நால்வரில் மூவர் கண்கட்குப் புலனாகிய அவ்வுருவம் ஏனையொரு மாதுக்குப் புலனாகாமை யென்னையெனிற்; பருப்பொருள் வடிவுகளை யன்றி நுண் பொரு ளுருவுகளைக் காண்டற் கியைந்த பதம் அம் மாதுக்கு உண்டாகவில்லை யென்று தெரிந்துகொள்க. இனி, மூவர் கண்ட ஒருபெண்மகளுருவின் தோற்றத்தை இங்கெடுத்துக் காட்டுதும். மந்து கோமாரி என்னும் மாதரார் ஒருவர் பின்வருமாறு வரை கின்றார்:

1875 ஆம் ஆண்டு வேனிற்காலத்து ஒருநாட்பிற்பகலில் 4 மணிக்கு யானும் என் தங்கையும் ஒரு வேலைக்காரப் பையனுடன் ஒரு குதிரைவண்டியிலேறி எங்கள் வீட்டைநோக்கிப் போய்க் கொண்டிருந்தோம். அப்போது திடீரென ஒருபெண்மகளுருவம் பாட்டையின் ஓரமாயுள்ள வேலிமேலிருநது அரவமின்றி மிதந்து கொண்டு வந்து அப் பாட்டையின் குறுக்கே சென்றது. அவ்வுருவம் முழுதும் வெள்ளாடை யுடுத்தியிருந்தது; அஃது ஒருபக்கஞ் சாய்ந்த உடம்பினதாய் நிலத்துக்கு மேற் பத்தடியுயரத்தில் ஏகியது. அதனைக் கண்டதும் எங்கள் குதிரை திடுமென நின்றுவிட்டது; அச்சத்தினாற் குதிரையின் உடலம் நடு நடுங்கியது; அதனால் அதனை ஏவிச் செலுத்துதலும் இயலவில்லை. உடனே யான் என் தங்கையை இழுத்து ‘நீ அதைக் கண்டாயா? என வினவ, அவளும் ஆம், அதனைப் பார்த்தேன் எனத் திகிலுடன் கூறினாள்; கூட இருந்த ஏவற்காரச் சிறுவனுந் தான் அதனைப் பார்த்ததை நடுக்கத்துடன் சொல்லினான். இதற்குள் அப் பெண்மகளுருவமானது அப் பாட்டையின் அப்பக்கத்துள்ள வேலியை மேற்கடந்து ஒரு வயல்வெளிமேற் சென்றது: அதனை நாங்கள் உற்றுப்பார்த்துக் கொண்டிருக்க, அது தொலைவிற் காணப்பட்ட ஒரு தோட்டத்தினூடே புகுந்து மறைந்து போயது. ஆக, நாங்கள் அதனைக் கண்டது இரண்டு நிமிஷநேரந்தான் இருக்கலாம். அவ்வுருவம் அங்ஙனம் ஏகியபேது அதன் காலடிகள் நிலத்தைத் தொடவேயில்லை; அஃது அமைதியாய் மிதந்து நீளச்சென்றது. பிறகு நாங்கள் இல்லம் போய்ச் சேர்ந்தவுடனே எங்கள் அன்னையார்க்கு யாங்கள் கண்ட அத் தோற்றத்தைப்பற்றிச் சொன்னோம். அஃது எங்கள் நினைவின்றோற்றமும் அன்று, வேறு எத்தகைய பொய்த் தோற்றமும் அன்று என்பதை நான் உறுதியாய்ச் சொல்வேன். இதற்கு முன்னாவது பின்னாவது யான் இத்தன்மைத்தாகிய உருவத் தோற்றத்தைக் கண்டதேயில்லை. அப்போது நாங்கள் உடல் நல மனநலத் தோடிருந்தோம். அதற்கு முன் வேறெவரும் அவ்வியல்பினதாகிய ஆவியின் றோற்றத்தைப்பற்றி எங்கட்குச் சொல்லி எங்கள் நினைவை அதிற் படிய வைத்ததுமில்லை. ஆனால், அப் பாட்டையிற் பேய்கள் உலவுவதுண்டென்றும், அப்பக்கத்துக் குடியானவர்கள் சிலர் ஓர் ஆவியின் உருவினை ஒரோவொருகாற் காண்பதுண்டென்றுஞ் சிறிது காலத்திற்குப் பின் சிலர் சொல்லக்கேட்டேன், என்பது.

இனி, ஆசிரியர் செடர் பீல்டு என்பாரும் அவர் மனைவியாருங் கண்டதோ ருருவின் றோற்றத்தைப்பற்றி அவ்வாசிரியர் எழுதிவைத்த கடிதத்தினை இங்கே மொழி பெயர்த்து வரைவாம்:

மிகப் புதுமையானதொரு நிகழ்ச்சி என் கண்முன்னே இவ்வாண்டில் (1625) நிகழ்ந்தது. யான் ஒரு வழக்கின்பொருட்டு இலந்தன்மாநகரில் வந்திருந்தேன். ஒருநாட் காலையில் 8 மணிக்கு யான் துயிலொழிந்து கண் விழித்ததும், என் கட்டிலுக்கு இரண்டு முழம் எட்டித், தலைமேல் ஒரு முடிச்சுடைய ஒரு வெள்ளிய ஆடையைத் தொங்கவிட்டா லென்ன, நான்கு அல்லது ஐந்தடியுயரம் வாய்ந்த ஏதோ ஒரு வெண்மையான உருவம் நிற்றலைத் தெளிவாய்க் கண்டேன். அதனைச் சிறிது நேரம் நோக்கியதும், இன்னும் நன்றாய் அதனைக் கண்டுதெளிதற்பொருட்டு என் படுக்கைமேல் எழுந்து உட்கார்ந்தேன். பின்னர் என்னிரண்டு கைகளையும் நீட்டி அதனைப் பிடிக்க முயன்றேன்; உடனே ஒரு நொடிப்பொழுதில் அஃதென்கைகளை விட்டு நிழல்போல் வழுவி என் கட்டிற் கால்மாட்டண்டை சென்றது. யானுங் கட்டிலை விட்டுக் குதித்து அதனைப் பின்றொடர்ந்தேன்; ஆனால், அது மறைந்து போயது. இத் தோற்றத்தைக் கண்டபின், என் மனைவிக்குத் தான் யாது நேர்ந்ததோ வென ஐயங்கொண்டேன். என் மனைவியைச் சசெக்ஸில் உள்ள பெட்வர்த் நகரில் அவடன் தந்தையார் இல்லத்தில் விட்டுவந்தேனாதலால், அவளைக் காண்டற்கு உடனே குதிரை யூர்ந்து சென்றேன். சென்று, அவ்வில்லத்தின் மேன் மாளிகைக்கு மேற்போகையில் என் ஏவலன் ஒருவன் எனக்கு வந்த கடிதங்களைக் கட்டியெடுத்துக்கொண்டு என்னிடம் வருதற்குப் படிமேல் இறங்கி வரக்கண்டேன். அவன் என்னிடந் தான் வருவதாகப் புகன்றமையால், அவன் கையிலிருந்த கடிதக் கட்டை யான் வாங்கிக் கொண்டு, மேலே என் மனைவிபால் ஏகினேன். என் மனைவி தன் தங்கையுடனும் மற்றொரு துரைமகளுடனும் உடல்நலத்தோடிருந்தனள். என்னைப் பார்த்ததும், அவர்களெல்லாரும் முன் எண்ணியதற்கு வேறாக இப்போது இவ்வளவு விரைந்து திரும்பியது ஏன்? என என்னைக் கேட்டனர். அதன்மேல், அன்றைக் காலையில் யான் கண்ட தோற்றத்தினைப்பற்றி அவர்கட்கு எடுத்துரைத்தேன். அது கேட்டு வியப்புற்ற அவர்கள், என் ஏவலனிடமிருந்து யான்பெற்ற கடிதக்கட்டைப் பிரித்து அதிலுள்ள கடிதங்களைப் படிக்கும்படி என்னைக் கேட்டுக் கொண்டார்கள். அங்ஙனமே யானும் அதனைப் பிரித்து முதலில் என் மனைவி எனக்கெழுதியிருந்த கடிதத்தை எடுத்து உரக்கப் படித்தேன். அக்கடிதத்தில் அவள், தான் அன்றைக் காலையில் முழுதும் வெண்மையானதோர் உருவங்கரியமுகத்தினதாய்த் தன் படுக்கையின் பக்கத்தே நிற்றலைக் கண்டமையால், எனக்கேதேனுந் தீது நேருமோ என அஞ்சி உடனே யான் திரும்பிவரும்படி வேண்டி வரைந் திருந்தனள். யாங்கள் கண்ட அவ்விருதோற்றங்களின் நிகழ்ச்சிக்குறிப்புகள் அத்தனையும் யாங்கள் ஒப்பிட்டு நோக்க, அதேநாளின் அதே பொழுதில் அதே மணிநேரத்தில் யான் கண்டபடியே நாற்பது கல் தொலைவிலிருந்த என் மனைவியும் அத் தோற்றத்தைக் கண்டமை புலனாயிற்று, என்பது.

இனிக், குவினி என்னும் ஒரு மருத்துவ ஆசிரியரும் அவர்தம் மனைவியாருந் தாங் குடியிருந்த ஒரு மாளிகையில் 1853 ஆம் ஆண்டு கண்டதோர் உருவின் தோற்றத்தை அவர் வரைந்த கடிதத்தினின்றே ஈண்டு மொழி பெயர்த்து எழுதுவாம்:

ஒரு நாளிரவில் (துயில்கொள்ளச்செல்லும்முன்) முழுதும் உடை பூண்டிருந்ததோர் உருவம் எனது கட்டிலின் கால்மாட்டிலிருந்து குறுக்கே போய் அடுப்பண்டை அணுகக் கண்டேன். அது தனது கையை உயரத் தூக்கி, அவ்வடுப்பின்மேலுள்ள பலகைமேல் எரிந்து கொண்டிருந்த விளக்கினைச் சுட்டியது. அந்நேரத்தில் என் மனைவி என் கையைப் பிடித்துக் கொண்டாள். அப்போது அடுப்பின் பலகைமேலிருந்த விளக்கு அணைக்கப் பட்டது. விளக்கு அவிந்துபோனாலும், அவ்வுருவங் கத வண்டை சென்றதைத் தெளிவாய்க் கண்டேன். எங்கள் வேலைக் காரிகளில் ஒருத்தி தான் அங்ஙனம் எங்கள் அறையினுள்ளே நுழைந்திருக்க வேண்டுமென யான் எண்ணி, என் படுக்கை யினின்றுங் குதித்து அவளை மறிக்க முயன்றேன்; ஆனால், அங்கொண்றும் இல்லை. அதன்மேல் அவ்வறையின் வாயிற் கதவண்டை பாய்ந்து, எங்கள் உடம்பாடின்றி இராவேளையிற் புகுந்த அவளைப் பின்றொடரவும் முயன்றேன். ஆனால், வழக்கப்படி அவ்வாயிற்கதவு பூட்டப்பட்டிருந்தது. என் மனைவியோ பெரிதுந் திகில்கொண்ட நிலையிலிருந்தாள். நான் கண்டது யாது? என்று அவள்வினவ, யான் அவ்வுருவின் றோற்றத்தை எடுத்துரைத்தேன். அதுகேட்டு, அவள் தானும் அதேயுருவினைக் கண்டதாகக் கூறியதோடு, அவ்வுரு தன் கையை அவ்விராவிளக்கின்மேல் வைத்து அதனை நிறுத்திவிட்ட தெனவும் மொழிந்தாள்.

அவிந்துபோன விளக்கைத் திரும்பவும் ஏற்றி முகங்கழுவும் ஏனத்தில் வைத்திட்டோம்; பின்னர் அஃது எப்போதும் போல் எரிந்தது. யான் அவ் விளக்கு நின்று போனதைப் புகைப்போக்கியின் வழியே கீழ் வீசிய காற்றின் செயலாக நினைந்து என் மனத்தைத் தேற்றிக் கொண்டேன்; என்றாலும், அவ்வுருவந் தோன்றிய காரணம் புலப்படவில்லை, என்பது.

உயிர்நிலை ஆராய்ச்சிக் கழகத்தார் குவினி என்னும் அம்மருத்துவ ஆசிரியர் கண்ட இத்தோற்றத்தைப்பற்றி அவர்தம் மனைவியாரை எழுதிக்கேட்க அவர் பின்வருமாறு விடையெழுதினார்:

என் கணவனார் கூறிய உறுதிமொழியைப் படித்துப் பார்த்தேன். தாம் கண்ட ஆவியுருவத்தைப்பற்றி அவர் மொழிந்தவைகள், யான் அதனைக் கண்டநினைவுடன் இணங்கியனவாகவே யிருக்கின்றன. அவ்வுருவந் தன் கையை இரா விளக்கின் மேல்வைத்து அதனை அணைத்ததை யான் தெளிவாய்க் கண்டேன். யான் அச்சத்தால் என் கணவர் கையைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொள்ள முயன்றேன்; ஆனால், அவர், பின்னர்த் தெரிவித்தபடி, யாரோ உள் நுழைந்தவரை மறிப்பதற்காக எமது படுக்கையினின்று கீழே குதித்து விட்டார். அவ்வறை வாயிற் கதவு என்றும்போற் பூட்டப்பட்டிருந்தது; அவர்போய் அதனைத் திறக்க முயன்றபோதும் அஃது அங்ஙனமேதான் இருந்தது. உடனே அவர் ஒரு மெழுகு திரியை ஏற்றினார். ஏற்றிக் கட்டிலின்கீழும் உள்ளறையும் நோக்கினார்; ஆனால், ஒன்றுங் காணவில்லை. இரா விளக்குந் திரும்பக் கொளுத்தப்பட்டு, முகங் கழுவும் பண்டந்தாங்கியின்மேல் வைக்கப்பட்டு, மெழுகுதிரி விளக்குடன் இரவு முழுதும் எரிந்தது. அவ் வீட்டிற்கு யாங்கள் குடிவந்து தங்கும் முன் நான் இரவில் விளக்கு வைப்பதேயில்லை; ஆனால் அதிற் குடிபுகுந்தபின் எவரோ பெருமூச்சுவிடும் ஓசையுங் குறட்டையும் அடிக்கடி என் படுக்கையின் அண்டையில் உண்டாகி என்னை மிரளச் செய்தமையால், யான் இரவில் விளக்கெரியவிட லானேன். என் கணவனார் அவ்வுருவத் தோற்றத்தைத் தாமும் யானுங் கண்டபின், திகில் கொண்ட என்னை அமைதிப் படுத்தும் பொருட்டு, நிலா வெளிச்சமும் மாசியின் நிழலுஞ் சாளரத்தூடே தோன்றினமையால் அத்தோற்றம் உண்டாயிருக்க வேண்டு மென்றும், விளக்கு அவிந்து போனது புகைப் போக்கியின் வழியே கீழிறங்கி வீசிய காற்றினால் நிகழ்ந்திருக்க வேண்டுமென்றும் வற்புறுத்திச் சொல்லி எனது அச்சத்தை மாற்ற முயன்றார். ஆனாலும், நாங்கள் இருவரும் ஒரே நேரத்திற் கண்விழித்து, நீண்ட ஒரு துறவு மாதைப்போல் உடையணிந் திருந்த அவ்வுருவத்தைக் கண்டு, அஃது அவ்வறையின் கண்ணுள்ள அடுப் பண்டையிற் சென்று அதன் மேற்பல கையில் எரிந்து கொண்டிருந்த விளக்கையுந் தனது வலக்கையால் அணைக்கப் பார்த்தபிறகு, அதைப்பற்றி வேறுவகையாக நினைப்பதற்கு இடமேயில்லை, என் கணவனர் தம்முடைய கைகளை நீட்டி அவ்வுருவினைப் பிடித்து நிறுத்த முயன்ற போது, அவ்வுருவந் திரும்பி அவ் வாயிற்கதவினூடே போகாநிற்கையில் அதனாடை சரசரவென ஒலித்ததையும் நான் தெளிவாய்க் கேட்டேன். நிலவொளி மிகவுந் தெளிவான துலக்கமுடையதாய்த் திகழ்ந்தது; சாளரத்தின் வெள்ளிய திரை அதனை ஒரு பக்கமேதான் மறைத்திருந்தது, என்பது.

குவினி என்னும் மருத்துவ ஆசிரியரும் அவர் தம் மனைவியாரும் அவ் வீட்டிற் குடிபுகும் முன்னரே அத்தகைய தோற்றங்கள் அங்கு நிகழ்ந்ததனை மற்றும் பலர் பலகாற் சொல்லி யிருக்கின்றனர். ஆனால், அம் மருத்துவ ஆசிரியர்க்கும் அவர் தம் மனைவியார்க்கும் அந் நிகழ்ச்சிகளைப் பற்றியது ஏதொன்றுமே முன்னரே தெரியாது. ஆதலால், அவர்கள் அந் நிகழ்ச்சிகளைப் பிறர் சொல்லக்கேட்டதிலிருந்து, அவர்களது உள்ளத்தின்கட் டோன்றிய உருவெளித் தோற்றமே அவர்களுடைய கண்களுக்கு அவ்வாறு காணப்படலாயிற்று என்று கூறுதற்குஞ் சிறிதும் இடமே இல்லை. இனி, மேற்சொல்லிய தோற்றத்தைக் கண்ட பிறகு அவ்விருவரும் அவ் வீட்டைவிட்டு வேறு ஒரு வீட்டுக்குக் குடிபோயினர்.

இனி, மூவர்க்குக் கட்புலனான ஓர் உருவத்தோற்றத்தைக் குறித்துப் பொத்தானி என்பார் 1884 ஆம்ஆண்டு நவம்பர்த் திங்களிற் பின்வருமா றெழுதினார்:

இவ்வாண்டின் துவக்கத்திலேயே ஒருநாளிரவில் என் படுக்கை யறையின்கண் ஓர் உருவம் இயங்குதலை உணர்ந்தேன். அது கூன் முதுகுடைய ஒரு பெண்பாலின் உருவாய்க், கரியதொரு போர்வையினால் முடிமுதல் அடிவரையிற் போர்த்துக் கொண்டிருந்தது. அது முதுமை மிக்க ஒரு பெண்பாலின் உருவமாகத்தான் இருக்கவேண்டுமென என் உள்ளத்திற் பட்டதாயினும் அதன் முகத்தை யான் காணக்கூடவில்லை. அது மெதுவாயுங் கள்ளத்தனமாயும் என் படுக்கையறையின் வாயில்வழியே சென்று, அவ்வறையின் அதே பக்கத்திலுள்ள ஆடைவைக்கும் அறையை அணுகக் கண்டேன். அதன்பின் அது சடுதியில் முற்றுமே மறைந்து போயிற்று. திடீரென உண்டான அதிர்ச்சியினால் யான் உரக்கக் கூவினேன். அத்தன்மையதான ஒரு தோற்றத்தை இதற்கு முன்னாயினும் பின்னாயினுங் கண்டிலேன். எனது இயற்கையும் ஆவியுருவங்களைக் காண்பதற்கு ஏற்றதன்று. அவ்வுருவமும் அது தோன்றிய நிகழ்ச்சியுங் கனவல்ல; எனக்கது மெய்ம்மையான தெளிவு நிகழ்ச்சியேயாகும், இனி, அது தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடைப்பட்ட தொரு நிகழ்ச்சியும் அன்று. நான் கண்டது நனவு நிகழ்ச்சியேயெனத் தெளிவாய் உணர்ந்தேன். யான் கண்ட அவ்வுரு எவருடையதென்பதை யான் அறிந்திலேன். மூன்றாண்டுகளாக யான் இவ் வீட்டிற் குடியிருந்து வருகிறேன்; எனக்கு முன் இதிற் குடியிருந்தவர்களைப் பற்றி யான் ஏதும் அறியேன். அந்த அறையில் விளக்குக் கொண்டுபோகவும் இல்லை: வேறொரு விளக்கு அதன்கண் எரியவுமில்லை. என்றாலும், அவ்வுருவம் நன்றாகவே கட்புலனாகியது; ஆடை யறையும் அங்ஙனமே கட்புலனாயது; ஆனால், அது மறைந்து போயதும் எல்லாம் இருளாகவே யிருந்தது; கதவும் பூட்டப் பட்டிருந்தது.

மேலதனை எழுதிய துரைமகனாரைப் போலவே அவர் தம் மனைவியாருந் தாம் அவ்வுருவத்தைக் கண்டதனையுந் தம் சிறுமியுஞ் சமையற்காரனும் அதனைக் கண்டதனையும் பின்வருமாறு தெரிவித் தெழுதுகின்றார்:

முன்னே குறிப்பிடப்பட்ட இரவில் யான் திடுமென விழித்தெழுந்தேன்; ஏது காரணத்தாலென்பதை அறிந்திலேன். என் கணவனார் தமது முழங்கைமேற் சாய்ந்து கொண்டுபுதியளான ஒரு கிழவியை உற்று நோக்கிக் கொண்டிருந்தனர்; அக் கிழவி ஆடையறையண்டை குனிந்து சென்றதை யானுங் கண்டேன். அதனை உண்மையான வடிவமென்றே நம்பினேன். ஆனால் அது திடீரென மறைந்துவிட்டது. அப்போது என்கணவனார் தாம் கூறிய படியே ஒருபெருங் கூச்சலிட்டனர்; அதன்பின் தாங் கண்டதிதுவென எனக்குச் சொல்லினர். யான் கதவைத் திறக்க முயன்றேன்; ஆனால், அது பூட்டப்பட்டிருந்தது. என் கணவனார்க் குண்டான நினைவே எமதுள்ளத்தின் ஒற்றுமை யால் எனக்கும் அங்ஙனந் தோன்றியது போலுமென முதலில் எண்ணினேன்; ஆனால், அவரைவிட யானே அத்தகையதொரு தோற்றத்தைக் காண்டற்கு ஏற்றவளென எண்ணினேன். அவ்வுருவத் தோற்றத்தைப்பற்றி யான் என் ஏவலாளர்க்கு உரையாதிருந்தும், மறுநாளில், மூன்றாண்டுள்ள மூரியல் என்னுஞ் சிறுமி அன்றிரவு தன்செவிலித்தாயை யெழுப்பி, அச்சம் இல்லாமலே கிளாரா, கிளாரா, அறையிலே ஒரு கிழவி வந்திருக்கிறாள் எனச் சொல்லியதென்று அச் செவிலித்தாயே என்னிடம் பகர்ந்தாள். எனினும், அச் செவிலித்தாய் அத்தகையதேதுங் கண்டிலள். இன்னும், என் சமையற்காரி இராக்காலங்களில் நீங்கள் என் அறையில் வந்த துண்டா? என என்னைப் பல்கால் வினவியதுண்டு; ஆனால், யான் அங்ஙனம் அவளறையில் சென்றதே யில்லை, இதனை யான் அவட்குச்சொல்லியபோது அவள் இறும்பூதுற்றுத் தியங்கினாள், என்பது.

இந்நிகழ்ச்சியிற் போந்த துரைமகனாரும் அவர் தம் மனைவியாரும் அவர்தஞ் சிறுமியுஞ் சமையற்காரியு மெல்லாங் கண்ட அக் கூனற் கிழவியின் உருவம் அதற்கு முன் அவர்களால் அறியப்படாத தொன்றாயிருத்தலால், அஃது அவ் வீட்டிலிருந்து முன்னொருகால் இறந்துபோன கூனற் கிழவியின் உருவமோ அல்லது மறுமையுலகத்தில் ஆவியுருவில் நிற்கும் அவளது பற்றுள்ளத்தில் எழுந்த நினைவின்றோற்றமோ இன்னது தானென்று உறுதிப் படுத்தல் இயலாததாயிருக்கின்றது. அதுவேயுமின்றி, நால்வர் கண்ணுக்குத் தோன்றிய அவ்வுருவம். அந்நால்வரில் எவர்க்கு உண்மையாய்த் தோன்றியது? மற்றெவர்க்கு அவரது நினைவின் எதிருருவாய்த் தோன்றியது? என்றாய்ந்து இது தான் முடிவெனக் காண்டலும் இயலாத தாயிருக்கின்றது. ஆனாலும், அத் துரைமகனாரின் மனைவியார் தாங்கண்ட அவ்வுருத் தங் கணவனார் நினைவின் றோற்றமாயிருக்க லாமோவென முதலில் ஐயுற்றுப், பின்னர் அத்துணை நினைவுவன்மை தமக்கன்றித் தங் கணவனார்க் கில்லாமையை யுணர்ந்து பார்த்துத், தாங் கண்ட காட்சியே உண்மையாக இருக்கவேண்டுமென்று முடிவுசெய்து கொண்டதிலிருந்து, ஒருகால், அவரது கண்முற் றோன்றிய தோற்றமே உண்மைத் தோற்றமாய், ஏனை அவர்தங் கணவர் சிறுமி சமையற்காரி முதலாயினார் கண்டது அத்துரை மகளாரின் நினைவின் றோற்றமா யிருக்கலாமோ என்று கருதுதற்கும் இடம் உண்டாகின்றது. அதுவல்லாமலும், அவர் தஞ் சமையற்காரி அவ்வுருவி னியக்கத்தைத் தன் அறையிற் பலகாற் கண்டு தன் தலைவியை வினவியதுபோல், அவடன் றலைவி அங்ஙனம் அதனைப் பலகாற் கண்டு பிறரிடங் கூறினாரென்பது மேற்போந்த பகுதியிற் புலனாகாமையின், அச் சமையற்காரிக்குத் தோன்றியதே உண்மையான தோற்றம், மற்றையோர் கண்டனவெல்லாம் அச் சமையற்காரி தன் நினைவின் றோற்றமாயிருக்கலாமெனக் கூறுதற்கும் இடனிருக்கின்றது. அஃதெங்ஙனமாயினும், முதலில் ஒருவர்க்குத் தோன்றிய அக்கிழவியுருவின் றோற்றம் மட்டும் உண்மையான தொன்றாகத்தான் இருக்க வேண்டு மென்பதிலோ ஐயங்கொள்ளுதற்கு இடனில்லை. என்றாலும், அக் கிழவியின் நினைவுருவமோ அல்லாதவளின் நுண்ணுடம் புருவோ அங்கே தோன்றியது என்பது மட்டுந் துணியப்படாத தொன்றாயிருக்கின்றது அது கிடக்க.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

எங்களது இணைப்பைப் பயன்படுத்தி அமேசானில் பொருட்கள் வாங்கி ஆதரவு அளியுங்கள்!