
தொலைவிலுணர்தல் மறைமலையடிகள்
13. கனவிற்றோன்றும் உணர்ச்சிகள்
இனி, மேற்சொன்னபடியாகவன்றி, உறங்குங்காற் கனவினிடத்துந் தொலைவு நிகழ்ச்சிகள் வந்து தோன்றுதல் உண்டு. இதற்கு உண்மையாக நிகழ்ந்ததொன்றை இங்கெடுத்துக் காட்டுவாம்; ஒரு கப்பற்றலைவர் தாம் கண்ட கனவு நிகழ்ச்சியைப் பின்வருமாறு எழுதுகிறார்.
1825 ஆம் ஆண்டு சூன் 7 ஆம் நாள் இரவு யான் ஒரு கனவு கண்டேன். இரண்டு பாய்மரம் உள்ள ஒரு கப்பல் உள்ளே தண்ணீர்கொண்டு மிதக்க அதில் ஆண்மக்கள் பலரும் அவரிடையே கரிய ஓர் ஆண்மகனும் இருக்கக் கண்டேன். மறுநாள் இரவிலும் யான் அதே கனவைக் கண்டு எழுந்து என் துணைவனை எழுப்பி எனது கப்பலின் மேற்றட்டின்மேற் போய்ப் பார்க்கச் செய்தேன். யானும் அன்றைப் பகல்முழுதும் மேற்றட்டிலேயே யிருந்தேன். திரும்பவும் 9 ஆம் நாள் இரவு அதே கனவு தோன்றிற்று. உடனே எழுந்து எனது கப்பலைத் திருப்பி வேறொரு முகமாய்ப் போகச்செய்தேன். அன்று மாலை எட்டு மணிக்குக் கடும்புயற் காற்றும் இடியும் மின்னலுந் தோன்றின; அதனாற் பாய்களைச் சுருக்கினேன். மறுநாட்பகல் வெளிச்சந் தோன்றிற்று. இனிய காற்று வீசியது. 10 ஆம் நாட் காலை 8 மணிக்குக் கப்பலை வேறொரு முகமாய்த் திருப்பினேன். இந்த நேரத்தில், என் கப்பலுக்கு ஏதோ இடர்வரப் போகிறதென்று எண்ணி என்மனங் கலவரம் அடைந்தது. என்னுடைய கனவைப்பற்றி என் கூட இருந்த துணைவனுக்கும், பயணக்காரர்களுக்குந் தெரிவித்தேன். அவர்கள் அதனை இலண்டனிலுள்ள தம் வீட்டார்க்கும் ஒரு கழகத்தார்க்கும் எழுதி அறிவித்தார்கள்.
ஒன்பதரை மணிக்கு யாங்கள் காலையுணவு எடுக்கையில், மேற்றட்டின்மேல் அலுவல் பார்ப்பவர் வானத்தில் வெளிச்சங் குறைந்து ஒரு புயற்காற்று வருகிறதென்று கூவினார். உடனே யான் மேற்றட்டிற்குப் போய்ச் சிறிய பாய்களைச் சுருக்கினேன். பின் அணியத்தின் பக்கமாய்க் காற்று வருவதனை யாங்கள் நோக்குகையில் ஒரு படகினையும் அதன் துடுப்பின்மேல் ஒரு பெருங்கொடியைப் பறக்கவிட்டுக் கொண்டு அதனைப் பிடித்தபடியாய் ஒருவன் அப் படகின் கோணத்தில் நிற்பதையுங் கண்டோம். உடனே யான் கப்பலை நிறுத்திப் பாய்களைச் சுருட்டிவிட்டேன். உயரப் பாய்மரத்தின்மேலிருந்து பெரும்பாய்களைச் சுருட்டிய என் ஆட்கள் தாம் பலரைப் பார்ப்பதாகவும், அவர்கள் கடற்கள்வர் கூட்டமா யிருக்கலாமென்று நினைப்பதாகவுங் கூறினார்கள். தான் அதே கடலிற், சென்ற ஆண்டு கடற்கள்வரிடம் அகப்பட்டுக்கொண்டது அவ்வழியே யென்று என் ஆட்களில் ஒருவன் கூறினான். பயணக்காரரும் என் கீழ் அலுவல் பார்ப்பவருங் கப்பலை வேறொருமுகமாய்த் திருப்பும்படி வற்புறுத்தியதோடு, அவர்கள் கடற் கள்வராயிருந்தால் அவர்களால் வருங்கேட்டுக்கு ஈடுவாங்குவதும் முடியாமற்போம் என்றும் எடுத்துரைத்தார்கள். ஆகவே, யான் கப்பற் பாய்களை மடித்துக் கட்டிக் கப்பலைத் திருப்பி விட்டுக் காலையுணவுகொள்ளக் கீழ் இறங்கினேன். யான் எனது சிற்றறைக்குச் சென்றதும், என் மனம் மிகவும் அமைதி இலதாயிற்று. அதனால், யான் பேரறைக்குத் திரும்பிவந்தேன். உடனே யான் கண்ட கனவின் நிகழ்ச்சி என் உள்ளத்தில் வலிய வந்து புகுந்தது. என் இரண்டு கைத் துப்பாக்கிகளையுங் கைவாளையும் இரண்டு பக்கத்தும் வைத்துக்கொண்டு, மேற்றட்டின்மேற் போய் என் ஆட்களையெல்லாம் அழைத்துக் கப்பலை நிறுத்திச் சுக்கானைப் பிடித்து அதனை நிறுத்தச் சொன்னேன். என்கீழ் முதற் கண்காணி படகைக் கீழ் இறக்கிக் கொண்டுபோய்த் தொலைவிற் றோன்றும் படகினையும் ஆட்களையும் பார்க்கும்படி கட்டளையிட்டேன். அதன்பின் என் பீரங்கிகளை மருந்திட்டு இடிக்கவுங், கப்பற் பாய்களை விரித்துக்கட்டி அப் படகுகளின் முகமாய்ச் செல்லவுங் கற்பித்தேன். அங்ஙனங் காணப்பட்ட அக் கூட்டத்தாரிடம் யாங்கள் வந்து சேருகையில், யான் அனுப்பிய என் துணைவன் அங்குள்ள படகினின்று அதன் தலைவனையும் ஆட்களையும் அகற்றித் தன் படகினுள் ஏற்றக் கண்டேன். அப் படகு குறுக்குத் தட்டு வரையில் நீர் நிறைந்து, ஒரு பெரிய சுறாமீனை இழுத்துக் கொண்டிருந்தது.
செல்லார்டு என்னும் பெயர் வாய்ந்த அக் கப்பற்றலைவனையும் அவன் ஆட்களையும் எங்கள் கப்பலின்மேல் ஏற்றிக்கொண்டோம். அவர் களெல்லாரும் மிக மெலிந்திருந்தமையாற் பேசுதற்கும் வலிவில்லா தவர்களாய் இருந்தார்கள். ஆனால், அவர்களிற் கரிய நிறமுடையனாயிருந்த ஓர் ஆள்மட்டுஞ் சிறிது நல்ல நிலையிலிருந்தமையால் அவனிடமிருந்து பின்வருஞ் செய்திகளை யெல்லாங் கேட்டுணர்ந்தோம். அமெரிக்காவிலிருந்து கிரெனெடா என்னும் இடத்திற்குச் செல்லும் இரண்டு பாய்மரக் கப்பல் ஒன்றுக்கு அவர்கள் உரியராய்க் காணப்பட்டனர். அவர்கள் செல்லும் வழியில் தாம் அருந்துவதற்குத் தண்ணீர் தமது கப்பலிற் செலவாய்விட்டமையாலும், நீண்டவழி செல்ல வேண்டியிருந்தமையாலும் இடையேயுள்ள ஒரு தீவில் தண்ணீர் எடுக்கும் பொருட்டுப் போனார்கள். அப்போது காற்றின்றி அமைதியா யிருந்ததனால், அத் தீவண்டை கப்பலை நங்கூரம் பாய்ச்சி நிறுத்திச் சிறு படகு ஒன்றில் இறங்கி அத் தீவின் கரையை நோக்கிப் போகலானார்கள். அப்போது இளங்காற்று ஒன்று வீசத் துவங்கியது; சிறிது நேரத்திலெல்லாம் அப்படகு தன் கப்பலிருந்த முகமாக இல்லாமல் வேறொரு முகமாய் இழுத்துக்கொண்டு போகலாயிற்று; அப்போது நீரோட்டமும் மிகவுந் கடுமையாய் அப்படகினை இழுத்துக்கொண்டு ஓடினமையால் அதனை வலித்துப் பார்த்துப் பார்த்துக் கடைசியாய் அதிலுள்ளவர்கள் முற்றும் இளைப்படைந்து போனார்கள். அவர்களது பார்வை எட்டக்கூடிய அளவு பார்க்கையில், தமது கப்பல் அத் தீவண்டை நங்கூரம் பாய்ச்சிய இடத்திலேயே நிற்கவும், தாம் ஏறியிருக்கும் படகுமட்டும் அக் கப்பலையுங் கரையையும் வர வர அகன்று கடைசியாய் அவை கண்ணுக்குப் புலப்படாத தொலைவிற் போய்விடவும் மனமடிவொடு கண்டார்கள். அடுத்தநாள் அவர்கட்கு மிகவும் பொல்லாத காலமாயிற்று. ஏனென்றால், அன்றைக்குக் கடுங்காற்றொன்று வீசியது; இடியும் மின்னலுங் கிளர்ந்தன; துடுப்பினையும், பாய்மரத்தினையும், பாய்களையும் அப் படகின் வடக்கயிற்றொடு சேர்த்துக் கட்டிவிட்டு ஓடுங்கடல் நீர் ஓட்டத்தின் அப்படகு ஊடறுத்துச் செல்லும்படி தன் போக்கிலே அதனை விட்டுவிட்டார்கள். இந்நேரமெல்லாம் அவர்கள் பருகுவதற்குத் தண்ணீரும் இல்லை, உண்பதற்கு உணவும் இல்லை. அதற்கு அடுத்த நாள் காற்று ஏறக்குறைய அமைதியுற்றது. சிறு காற்று அடித்தாலும், வெளியில் வெப்பமோ தீய்த்துவிடுங் கடுமை யுடையதாயிருந்தது. அன்றைப் பகலெல்லாம் அவர்கள் பட்டதுன்பம் அளவிடப்படாதது. அந்த மீகாமனும், அவன் ஆட்களுந் தாங்கள் உடுத்தியிருந்த துணிகளைக் கிழித்துக் குளிர்ந்திருக்கும் பொருட்டுத் தண்ணீரை மேலே ஊற்றிக் கொண்டார்கள். நான் அவர்களைப் போய்க் கண்ட அன்றைக் காலையில் அந்தக் கரிய ஆள் தன் கடவுளை நோக்கிக் கரிய மக்கள் முறையீட்டினையும் வெள்ளைமக்கள் முறை யீட்டினையுங் கடவுள் கேட்டது உண்டேல், யாங்கள் இறந்து போகாமைப் பொருட்டு எங்கள் உணவுக்காக ஒரு மீனை அல்லது சுறாவை அவர் அருள்கூர்ந்து! விடுக்க என்று வேண்டினான். எல்லா இரக்கமும் உடைய அப்பன் அவனது வேண்டுகோளைச் செவியேற்று, அவர்களிடம் ஒரு பெரிய சுறா மீனை விடுப்ப அஃது அப் படகின்மேற் கிடந்தது; அவர்கள் அதன் இரத்தத்தைக் குடித்து, அதன் தசையிலும் ஒரு பகுதியைத் தின்றார்கள். உடனே யான் ஒரு தண்ணீர்ப் பத்தலைத் திறப்பித்து அவர்களை அதில் முழுகும்படி செய்தேன். இன்னும் அவர்களைக் குளிரப் பண்ணுதற்கும், வெளியில் வெப்பத்தாலும் உப்புத் தண்ணீ ராலுங் கொப்புளித்துப்போன அவர்களுடம்பின் தோலை ஆற்றுதற்கும் அவர்கள் முதுகின் றோலின்மேல் ஒட்டிக் கொண்டிருந்த சட்டைத் துணிகளைப் பிரித்தெடுத்தற்கும், அவர்களைத் தனித்தனியே தண்ணீர்ப் பத்தலில் தலைமுழுகு வித்தேன். அதன்பின், அவர்கள் வாய்களில் ஈரம் உண்டாகும் பொருட்டுச் சிறிது நேரத்திற் கொருகால் தேத்தண்ணீர் பருகக்கொடுத்தேன். அவர்களிற் சிலர் உணவுஞ் சிலர் கோதுமை யப்பத்துண்டும் வேண்டிக் கேட்டார்கள். யான் அவர்கட்கு அரிசிக் கஞ்சியும் வாற்கோதுமைக் கஞ்சியும் இடைக்கிடையே கொடுத்தேன். நன்றாய்த் தூங்கியெழுந்த பிறகு, அந்தச் செல்லார்டு என்னும் மீகாமன் என்னொடு பேசல் வேண்டி என்னைக் கீழே வரும்படி அழைத்தார். அந்தக் கரிய ஆண்மகன் சொல்லியவை யெல்லாம் உண்மைதாமா என்று தெரிந்துகொள்ளும் பொருட்டு அவர்தம் சட்டைப்பைகளை ஆராய்ந்து பார்க்கவே, அவரது கப்பற்சரக்குகள் பதிந்த புத்தகமும் அட்டவணையும் அகப்பட்டன. அவையெல்லாம் உண்மையே எனவும், அவர்கள் கடற்கள்வ ரல்லரெனவுந் தெரிந்து மகிழ்ந்தேன். நாங்கள் இருவேமுங் கலந்து பேசியதிலிருந்து 1814 ஆம் ஆண்டு நியூபவுண்டிலாந்தில் யோவான் திருக்கோயிலில் அவரும் யானும் முன்னமே ஒருவரையொருவர் கண்டு பேசினமை நினைவுக்கு வந்தது. அப்போதே அவர் இரண்டு பாய்மரக் கப்பலொன்றிற்குத் தலைவரா யிருந்தார்.
உண்மையாக நிகழ்ந்த இக் கனவுநிகழ்ச்சியில், ஒரு கப்பற் றலைவற்கும் அவன்றன் ஆட்கட்குந் தொலைவில் நேர்ந்த இடரின் வகைகள் அவ்வளவும் மற்றொரு கப்பற்றலைவற்கு அடுத்தடுத்துத் தோன்றி, அவன் அவர் தமக்கு உதவி செய்யுமாறு ஏவிய தன்மை பெரிதும் நினைவு கூரற்பாற்று. நல்ல எண்ணம் வாய்ந்த அக் கப்பற்றலைவன் உள்ளமே தொலைவில் நேர்ந்த அவ்விடரினைக் கனவின்கட் கண்டுணர்ந்ததோ, அல்லது கடவுளே அத் தோற்றத்தினைக் கனவின்கண் அவனுக்கு எழுப்பி அவன் உதவி செய்யுமாறு அவனை ஏவினரோ நாம் அவ்வகையினை அறியேம். தொலைவில் நேர்ந்த இடர், அதனைச் சிறிதுமே யறியாத ஒரு மீகாமனுக்குக் கனவின்கட் டானே வந்து புலப் பட்டமைதான் இங்கே கருதற்பாற்று.
இனிப், பின்னே நிகழப்போகும் நிகழ்ச்சிகள் முன்னே கனவின்கண் வந்து தோன்றுதலும் உண்டு. அதனை மெய்ப் பித்தற்கு உண்மையா நிகழ்ந்த சில நிகழ்ச்சிகளை இங்கெடுத்துக் காட்டுவாம்;
சென்ற இரவு தம் நண்பர்கள் தம்மைப் பார்க்க வந்தபோது பிராட்டு என்பவர் தாம் முந்தின இரவிற் கண்ட கனாநிகழ்ச்சியை எடுத்துரைக்கலானார். தாம் இறந்துபோனதாகவுந், தாம் நல்ல தூக்கத்திலிருந்தாலுந் தம்மைச் சுற்றி நடப்பதவ்வளவுந் தாங் காணக் கூடியதாயிருந்ததாகவும், ஆனால் அப்போது தாம் பேசவாவது அப்புறம் இப்புறந் திரும்பவாவது மாட்டாமலிருந்ததாகவும் ஒரு கனவு கண்டார்; தம்மை அடக்கம் பண்ணுவதற்கு வேண்டும் ஏற்பாடுகள் செய்யப் பட்டதையுஞ், சவப்பெட்டியைத் தாங்கப் போகும் ஆறு நேசர்களின் பெயர் இன்னதென்பதையும் அவர் குறிப்பிட்டுச் சொன்னார். அவற்றொடு தம்மை அடக்கஞ் செய்யப் போகும் இடத்தையுந், தம்மை வைக்குங் கல்லறையினையும், அக் கல்லறைக்குள் தமது சவப்பெட்டியைத் தாழ்த்தி இறக்குமாற்றையும் எல்லாம் பிழைபடாமல் எடுத்துக் கூறினார். பிறகு தமது சவப்பெட்டிமேல் முதலில் வெட்டித் தள்ளிய மண் விழுந்ததுந் தாம் அத் தூக்கத்தினின்றும் விழித்துக்கொண்டதாகவுந் கூறினார். அவர் இங்ஙனங் கண்டு கூறிய கனவின்படியே மறுநாளில் இறந்துபோனார். தாம் இரவு பன்னிரண்டு மணிக்கு இறப்பதாகவும் உறுதி சொன்னார். எல்லாம் அவர் கண்டபடியே நிறைவேறின. அவர் கனவிற் கண்ட ஆறு நேசர்களே அவரது சவச்சடங்கை நிறைவேற்றினர்.
மற்றொருவர் பின்னே நடக்கப் போவதனை முன்னே கண்டதுங், கண்டபடியே நடந்ததும் உயிர்நிலை ஆராய்ச்சிக் கழகத்தார்க்கு எழுதித்தெரிவிக்க, அக் கழகத்தார் அவர் கூறியதை ஆராய்ந்து பார்த்து ஏற்றுக் கொண்டாராகலின், அதனையும் இங்கே எடுத்துக் காட்டுவாம்:
முதலாக என் உடம்பு செவ்வையான நிலைமையிலிருக்கிற தென்பதனைத் தெரிவிக்கின்றேன். மடத்தனமான நம்பிக்கை என்னிடஞ் சிறிதும் இல்லை. பொய்யான தோற்றங்களுக்கு நான் உட்பட்டதுமில்லை. அத்தகையவற்றை ஆராய்வதில் எனக்குக் கருத்துச் செல்வதுமில்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன், அப்போது பதினெட்டு ஆண்டுள்ள என் மகன் அடுத்துள்ள மாகாணத்தில் ஒரு மருந்துக் கடையில் அலுவலில் அமர்தற்குச் சென்றான். அவன் போவதற்கு யான் முழுதும் உடன்பட்டு விடைகொடுத்த தல்லாமல், அவனைப் பற்றியான் ஒரு சிறிதும் மனம் வருந்தவில்லை. சென்ற வேனிற் காலத்திற் கிழக்கே நீண்ட பயணம் போய்ச் சில காலம் அங்கிருந்தேன். யான் வீட்டில் இல்லாத பொழுது, என் மகனைப் பற்றியாவது என் குடும்பத்தார் எவரைப் பற்றியாவது யான் சிறிதும் கவலை யடையவில்லை. மனக் கிளர்ச்சியோடிருப்பதே எனது இயற்கை. ஆனாற், சென்ற இலையுதிர் காலத்தில், திட்டமாய் இன்னதென்று சொல்ல முடியா வகையாய் என் மகனைப்பற்றி மனக்குறை கொள்ள வானேன். மனத்துயரம் அடைந்தேனென்று சொல்லல் முடியாது; ஆனால், எதனால் என்றும் என்னாற் சொல்லல் முடியாது. மனக்குறை மட்டும் உற்றேன். அவன் வீட்டில் இல்லாத மூன்று ஆண்டுகளிலும் யான் எழுதிய கடிதங்களைக் காட்டிலும் பல கடிதங்கள் அவனுக்கு எழுதினேன். நவம்பர் முற்பகுதியில் அவன் எங்களைக் காண வீட்டிற்கு வந்தான். அவன் திரும்ப எங்களை விட்டுச் சென்ற பிறகு, அவனைப்பற்றி எனக்கு முன்னையிலும் மிக்க வருத்தமும் மனக் குறையும் உண்டாயின. ஆனால், அஃது ஏதோ இடர் வரப்போகிற தென்பதைக் குறித்த மனக்கலவரமும் அன்று, அச்சமும் அன்று. அவனைப்பற்றி எவையோ மனக்குறையும் வருத்தமுந்தாம். என் உள்ள நிகழ்ச்சியை யானே எடுத்துரைக்கக் கூடவில்லை. என்னால் நினைவுகூரக் கூடியவரையில், யான் அறச்சிறு பையனாயிருந்தபோது, என் தகப்பனார் இறந்ததன் பிறகு யான் எங்ஙனம் மனம் நெகிழ்ந்தேனோ அங்ஙனமே இப்போதும் மனம் நெகிழப்பெற்றேன். என்வாழ்க்கையின் ஒளி என்னை விட்டுச் சடுதியில் அகன்றுபோயதெனவும், இனி யான் உயிரோடிருப்ப தற்கு ஒன்றுமில்லையெனவும் ஓரெண்ணந் தோன்றியது. திரிகைக்கல்லை யொத்த ஒரு நிறை எனது உயிரை நசுக்குவது போற் காணப்பட்டது. உயிர் வாழ்க்கையில் எனக்குச் சிறிதும் விருப்பமில்லையென்று என் நண்பர்கட்குப் பலகாற் சொல்லிவந்தேன். டிசம்பர்த் திங்கள் செல்லச் செல்ல இவ்வுணர்ச்சி எனக்கு மிகுந்துவரலாயிற்று; எப்படியோ என் மகனே அதற்கு நடுக்குறியாகத் தோன்றினன். இரவிற் பலகால் அவனை நினைத்தபடியாய் எழுந்திருப்பேன். உயிர் வாழ்க்கையின் வெறுமையினையும் போலித் தன்மையினையும் ஆழ நினைத்தலால் யான் தூங்கமுடிவதில்லை. டிசம்பர்த் திங்கள் பத்தொன்பதாம் நாட்காலையிற் சிறிது முன்னே துயில் நீங்கி எழுந்தேன். ஏதோதத்தான நிலைமைக்கு யான் வருவதாகத் தோன்றிற்று. எவரையும் எழுப்பாமல் யானே சென்று நெருப்பு மூட்டினேன். என் வாழ்நாட் காலத்தில் இங்ஙனம் யானே இதற்குமுன் செய்ததில்லை. அந் நெருப்பண்டையில் உட்கார்ந்துகொண்டு நினைத்துப் பார்க்கப் புகுந்தேன். என்னை வருத்தும் அச்சமுள்ள துன்பம் இன்னதென்று என்னால் அறியக் கூடவில்லை. அஃதின்னதென்று தெரிந்திலது. எனக்குத்தான் யாதென்றுந் தெரியவில்லை, இன்னும் என்மகனுக்குத்தான் ஏதேனுந் துன்பமோ இடரோ வரப்போகிறதென்றும் யான் துணியக் கூடவில்லை. காலை ஏழுமணிக்கு என் மனைவி துயில் நீங்கி யெழுந்து படுக்கைமேல் உட்கார்ந்து, தன் உள்ளத்தை மிக உறுத்தியதொரு கனவு கண்டதாகக் கூறினாள்; அக் கனவுதான் அவளை விழிக்கச் செய்தது.
அவள் கூறியதாவது; யான் இதற்குமுன் பார்த்தறியாத மக்களிடையே ஒரு புதிய இடத்தில் நீங்கள் இருப்பதாக எனக்குப் பட்டது. பள்ளிக்கூடத்திற்குச் செல்லுஞ் சிறு பிள்ளைகள் பலரும் பருவம் வந்து வளர்ந்த ஒரு பெண்பிள்ளையும் உடைய ஒரு பெருங் குடும்பமாய் அது காணப்பட்டது. நான் அந்த இடத்திற்கு ஒரு சரக்கு வண்டியில் வந்தேன்; ஆனால், நீங்களோ எனக்கு முன்னமே அங்கு வந்திருந்தீர்கள். நீங்கள் அந்தக் குடும்பத் தாரொடு மிகவும் நெருக்கமான பழக்கமுடையீராய்க் காணப்பட்டீர்கள். அந்தப் பெரிய பெண்ணானவள் நுங்கள் மடிமேல் உட்கார்ந்து தன் கைகளால் உங்கள் கழுத்தைச் சுற்றிக்கொண்டு அடுத்தடுத்து உங்களை முத்தமிட்டது. அத்துணை நெருக்கமாய் உறவுகொள்ளும்படி நீங்கள் இந்த மக்களை எங்கே கண்டு பிடித்தீர்களென்று யான் வியந்து கொண்டிருக்கையில், நீங்கள் சடுதியிற் கீழ்விழுந்து இறந்து போனீர்கள். நானும் உடனே விழித்துக்கொண்டேன்; என்பதேயாம்.
இந்தக் கனவு உண்மையாகவே நடைபெறுமோவென்று மனக்கலக்கங் கொண்டேன். யான் அவ்வளவு துன்புற்ற நிலைமையிலிருக்கின்றேனென்றும் உவால்டரைப்பற்றி யான் மிகவும் வருந்துதலால் எனது உயிர் வாழக்கை எனக்கே ஒரு சுமையாய் இருக்கிறதென்றும் யான் அவளுக்கு மறுமொழி கூறினேன். காலையுணவு கொண்டபின், என் மகளைக் கூப்பிட்டு உவால்டருக்கு ஒரு கடிதம் எழுதி உடனே அவன் வீட்டுக்கு வரும்படி சொல் என்றேன். அக் கடிதங் கட்டாயம் போய்ச் சேரும்படி அதனை முதல் வண்டிக்கே அவள் விடுக்குமாறுஞ் செய்தேன். அதன்பின் மனக்கிளர்ச்சியின் பொருட்டு எனது வயல்நிலத்தைப் பார்க்கக் குதிரைமேற் சென்றேன். ஆனாற், பகல் 12 மணிக்கெல்லாம் வந்த செய்தியானது என் மகன் கடுங்காயம் அடைந்து உணர்வின்றிக் கிடக்கின்றானென அறிவித்தது. உடனே என் மனைவியையும் மகளையும் பின்வண்டியில் வருகவென்று சொல்லிவிட்டு, யான் சரக்குவண்டியில் ஏறி என் மகன் அந்நிலையிற் கிடக்கும் இடத்திற்குச் சென்றேன். இப்போது அப் புதுமையான நிகழ்ச்சியில் உன்னிக்கத் தக்கதொரு குறிப்புத் தோன்றலாயிற்று. ஏதோ ஒரு பிழைபாட்டால் என் மனைவியும் மகளும் புகைவண்டியைத் தவறவிட்டு, ஒரு நாட்டு வண்டியில் ஏறி நேரேவந்து சேர்ந்தார்கள். வழியில் இடையிடையே ஒவ்வொரு சிற்றூரிலுங் குதிரைகள் மாற்ற வேண்டி யிருந்தமையால், அவர்கள் என் மகனிடம் இரவு 11 மணிக்குத்தான் வந்து சேர்ந்தார்கள். இத் துயரநிகழ்ச்சி நேர்ந்த இடம் மிகச் சிறந்த ஒரு குடியானவரின் இல்லத்தின் அருகாமையிலாகும்; ஏனென்றால், இக் குடியானவரின் மகளை என் மகன் நெடுநாளாகப் போய்ப் பார்ப்பது வழக்கம். இவர் அவனுக்குச் சிறந்த நண்பராகையாலும், இவரது இல்லம் அருகே யிருந்தமையாலும் அவனை அவ்விடத்திற்கே கொண்டு சென்றார்கள். அவரது பெரிய அக் குடும்பத்தின் பிள்ளைகள் எல்லாரும் என் மகனிடத்தே மிக்கதோர் அன்பு வைத்திருந்தார்கள். என் மகன் இறந்ததைப்பற்றி அவர்கள் அடைந்த துயரத்தை விட நாங்கள் மிகுதியாய்த் துயருற்றோமென்று என்னால் உண்மையாகவே சொல்லல் முடியாது. என் மகன் உணர்வின்றிக் கிடந்த அவ்வறையினுள் என் மனையாள் நுழைந்த போது, யான் முன்னே குறிப்பிட்ட அக் குடியானவரின் மகள், என் மகனது படுக்கையின் தலைமாட்டில் அழுதபடியாய் நின்றுகொண்டிருந்தாள். என் மனவி அவ்விடத்தைச் சுற்றிலும் ஒருமுறை நோக்கியதும், இது தான் யான் கண்ட கனவு! நீங்கள் இருக்கக் கண்ட அறையும் இது தான் ! யான் கனவிற் கண்ட மக்களும் இவர்கள் தாம்! என்று என் காதிற் குசுகுசு வெனக் கூறினாள். அவள் நாட்டு வண்டியில் வந்த செய்தியும் அவள் கண்ட கனவினை மெய்ப்படுத்தியது. அக் குடும்பத்தினரும் அவள் சொல்லிய அடையாளப்படியே யிருந்தார்கள். அவர்கள் கள்ளம் இல்லாத மிகச் சிறந்த குடிமக்களாவர். மேலும், அவள் நெடுகப் பார்த்து வந்த நாட்டின் இயல்பும், இறுதியாக அவ்வில்லத்தைச் சூழ அவள் கண்ட இயற்கைத்தோற்றமுந் தான் கண்ட கனவில் தோன்றியபடியே முழுதும் ஒத்திருந்தன.
முடிவாக யான் சொல்லற்பாலது, என்னை அதுகாறும் பெரிதுந் துன்புறுத்திவந்த அத் துயரநினைவு என்னை விட்டு அகன்றதேயாகும். என் உயிரையே நசுக்கி விடுவதா யிருந்த சொல்லுதற்காகா அப் பெருந்துயர்ச் சுமையினை டிசம்பர் 17 ஆம் நாட் காலையிலிருந்து யான் உணரவில்லை. என் மகனை இழந்த துயரம் எனக்கு உளதென்றாலும். இஃது யான் முன்னடைந்த துயரத்தின் வேறாவதாகும்
எனப்போந்த கனவு நிகழ்ச்சியில் இறந்துபட்ட தன்மகனுக்கு வேறாகத் தன் கணவனையே அவ்வாறு அவ்வம்மையார் கண்ட ஒரு பிழையைத் தவிர, மற்றையவெல்லாம் அக் கனவிற் கண்டபடியே ஒருங்கொத்திருத்தல் பெரிதுங் கருத்திற் பதிக்கற் பாலதாகும்.
இன்னும், இழந்துபோன பொருள்களைத் திரும்பப் பெறுதற்கு எவ்வளவோ முயன்றும் அவற்றைக் கண்டு பிடிக்க மாட்டாமல் மிக வருந்திக் களைத்துப் படுத்து உறங்கினவர் சிலர் அவை இருக்குமிடங்களைக் கனவிற்கண்டு விழித்துப், பின்னர் அவ்விடங்களைப் போய்ப் பார்த்து, அவை தம்மைக் கண்டெடுத்த வரலாறுகளும் பல உள்ளன. அவை தம்முள், அறிஞர் சிலரால் ஆராய்ந்து உண்மையெனத் தெளியப்பட்ட சிலவற்றைமட்டும் இங்கு எடுத்துக் காட்டுவாம்:
ஒருகால் வழக்கறிஞர் ஒருவர் இரவு கடிதங்கள் எழுதத் துவங்கி, முடித்தபின் அவற்றைப் பன்னிரண்டரை மணிக்கு அஞ்சற் பெட்டியில் இட வெளியே சென்றார்; சென்று திரும்பியவுடன் தம் உடைகளைக் கழற்றுகையிற் கருவூலத்தில் (Bank) தாம் ஒரு பெருந்தொகை வாங்கிக் கொள்ளும்படி, முன் நாளிற் குறித்துக் கொடுக்கப்பட்ட ஒரு சீட்டை (Cheque) எவ்வாறோ தாம் இழந்து விட்டமைகண்டார். உடனே அதனை எவ்வளவோ ஒவ்வோரிடத்துந் தேடிப் பார்த்தும், அஃது அகப்பட்டிலது. அதன் மேல் அவர் மனத்துயரத் தோடும் படுக்கைக்குச் சென்று உறங்கினார்; அங்ஙனம் உறங்குகையில் தமது வீட்டு வாயிலுக்கு நெடுந்தொலைவில் அல்லாத வேலியடைப்புள்ளதோர் இடத்தில் அச்சீட்டுச் சுருளாய்க் கிடக்கக் கனவு கண்டார். கண்டு விழித்ததும், எழுந்து ஆடை யணிந்து புறத்தே தெரு வழியே ஏகித், தாம் கனவிற் கண்ட அவ்விடத்திலேயே அந்தச் சீட்டுச் சுருளாய்க் கிடத்தலைக் கண்டு, அதனை மகிழ்ந்து எடுத்துக்கொண்டார்.
மற்றொருகால் ஒரு பெருமாட்டி தனது வீட்டுக்கு அண்மையிலிருந்த ஒரு காட்டுக்குள் உலவப்போனாள்; போய்த் திரும்பி வந்ததும் அவள் தான் வைத்திருந்த ஒரு முதன்மையான சாவியைக் காணாமற் கலங்கினாள். திரும்பிப் போய்த் தேடலாமென்றால் மாலைப் பொழுதுபோய் இருண்டுவிட்டது. அதன்மேல் அவள் மனக் கவலையுடையளாய் உறங்கச் சென்றாள். அவ்வாறு அவள் உறங்குகையில் தான் உலவிவந்த அக் காட்டின்கண் உள்ள ஒரு மரத்தின் வேர் அண்டையில் அச்சாவி கிடப்பதாகக் கனவு கண்டாள். மறுநாட் காலையில் அவள் அக்காட்டினுட் போய்த், தான் கனவிற் கண்ட அடையாளப்படியிருந்த ஒரு மரத்தின் வேரண்டையிற் சென்று பார்க்க, அச் சாவி அங்கே கிடந்தது; உடனே மகிழ்ந்தெடுத்துக் கொண்டாள்.
இன்னுங், காணாமற்போன ஒரு பெண்ணின் சவத்தை மற்றொரு பெண் தான் கண்ட கனவின் வாயிலாகக் கண்டறிந்த வரலாற்றினையும் இங்கெடுத்துக் காட்டுவாம்:
ஷாங்கலின் என்னும் ஊரிற் படைத்தலைவரான லும்டன் (Lumsden) என்பவரின் மகளான மார்ஜொரி என்பவள் 1903 ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 10 ஆம் நாள் நடைபெற்ற நாடகம் ஒன்றில் தானுஞ் சேர்ந்து ஆடினவள், அன்றைக்கு எப்படியோ மாயமாய்க் காணாமற் போய்விட்டாள். அதுபற்றிப் பெருந்துயர்கொண்ட அவள் தந்தையார், தம் மகளைக் கண்டுபிடித்துத் தருபவர்க்கு 50 பவுன் பரிசு அளிப்பதாக விளம்பரப்படுத்தி யிருந்தார். அப்போது சிலகெம்பு என்னும் ஒரு செம்படமாது ஓரிரவு தான் உறங்குகையில் தனக்குத் தோன்றிய கனவில் ஓரிளம் பருவத்து மங்கை கடற்கரைத் துறைமுகப் பாலத்தில் உலாவிக் கொண்டிருந்த நேரத்திற் கால்தவறிக் கடலில் வீழ்ந்தமையும், வீழ்ந்த அப்பெண்ணின் சவம் ஓரிடத்தில் ஒதுங்கிக் கிடப்பதையுந் தெளிவாய்க் கண்டாள். கண்டு விழித்தவள் மறுநாட் காலையில் (அதாவது பிப்ரவரி 20 ஆம் நாள் விடியலில்) தான் கனவிற் கண்ட இடத்தைப் போய்ப் பார்க்க, மெய்யாகவே ஒரு பெண் பிணமாய்க் கிடப்பதை நோக்கித் திடுக்கிட்டு, ஊரவரெல் லார்க்கும் அச்செய்தியை ஓடிவந்து அறிவித்தாள். உடனே அப் பெண்ணின் தந்தையாரும் ஊர்காவற்றலைவரும் அப் பிணத்தண்டை வந்து சேர்ந்து, அவளது சாவின் உண்மையினை ஆராய்கையில், அக் கடற் காவலாளி யொருவர் அப்பத்தாம் நாள் இரவிற் பதினொரு மணிக்குச் சிறிது முன்னே ஒரு மங்கை பாலத்தின்மேல் நின்று கொண்டிருந்ததனைத் தாம் பார்த்து விட்டு அப்பாற்போய்ப், பத்துநிமிடங் கழிந்தபின் மீண்டும் அவ்விடத்தை வந்து நோக்க அம் மங்கையார் அங்கு இலராயினார் எனவும், அதன் மேல் அம் மங்கை எங்கே சென்றிருக்கக் கூடுமென்று தெரிதல் வேண்டி அப்பாலத்தே ஒதுங்குதற்கென்று அமைக்கப்பட்ட சிறு கொட்டகைகளைத் தாம் பார்த்தும் அவற்றுள்ளும் அவர் இல்லாமையால் இராச்சாப்பாடு கொண்டபின் அப்பாலத்தே உலாவவந்த அம் மங்கையார் திரும்பிப் போயிருக்கலா மென்றெண்ணித் தாம் ஏதுங் கலவரஞ் செய்யவில்லை எனவுஞ் சான்று மொழிந்தார். அதன்பின், அச் செம்படவமாது அப் பெண்ணின் பிணத்தைக் கண்டுபிடித்தது எவ்வாறு என்று அவர்கள் அவளை வினவ, அவள் அந்நிகழ்ச்சியைத் தான் தனது கனவிற் கண்டதும், அக் கனவிற் கண்ட இடத்தைப் போய்ப் பார்க்க அப் பெண் பிணமாய்க் கிடந்ததும் ஆகிய வரலாறுகளை யெடுத்துரைத் தாள். அவற்றைக் கேட்டு இறும்பூதுற்ற தந்தையார் அவட்கு ஐம்பதுபவுன் பரிசு கொடுத்தார் என்பது.
இனி, இறக்குந் தறுவாயில் உள்ளவர்கள், தமக்கு உறவினா ராயுள்ள எவர்மாட்டு அன்பு மிகுதியாய் வைத்திருக்கின்றார் களோ அவரை அந்நேரத்தில் நினைத்தலும் அவரைக் காண விரும்புதலும் உடையராய் இறந்துபடுவது வழக்கம். உயிர் உடம்பைவிட்டுப் பிரியும் அந்நேரத்தில் நினைத்த நினைவும் விரும்பிய விருப்பமும் வீணாய்ப் போவதில்லை. அந் நினைவின் உறைப்புக்கும் விருப்பத்தின் அழுத்தத்திற்கும் ஏற்றபடி, நினைக்கப் பட்டவர்க்கு இறந்துபடுவாரின் உருவமும் அவர் இறந்து படு நிகழ்ச்சியுங் கனவின்கண் வந்து தோன்றுகின்றன. இதற்கு உண்மையாக நிகழ்ந்த சில வரலாறுகளை ஈண்டெடுத்துக் காட்டுதும்:
ஓர் ஊரில் ஓர் அம்மையாருக்கு இரண்டு புதல்வியர் இருந்தனர். அவர் அவ்விருவரையும் அவ்வூரிலேயே மணஞ்செய்து கொடுத்திருந்தனர். அவ்வம்மையார் இடையிடையே சென்று கணவர் இல்லத்திலிருக்குந் தம் புதல்வியர் இருவரையும் பார்த்து அளவளாவ வருதல் வழக்கம். அங்ஙனமே ஒரு நாள் மாலைக் காலத்தில் அவ்வம்மையார் தம் புதல்வியருடன் அளவளாவியிருந்து விட்டுச், சிறிது தொலைவிலுள்ள தமது இல்லத்திற்குத் திரும்பிப் போயினார். அப் புதல்விமார் இருவரும் தத்தம் இல்லில் இரவுணா அருந்தி உறங்கச் சென்றனர். எல்லாரும் அயர்ந்துறங்கும் நள்ளிரவில் ஓர் இல்லில் இருந்த ஒருத்தி பேரச்சத்தொடு வெருண்டெழுந்து, தன் கணவனைக் கூவியெழுப்பி, உடனே யான் என் அன்னையிடஞ் செல்லல் வேண்டும்; ஆதலால் வண்டி கொண்டுவரச் சொல்லுங்கள் என் அன்னையார் மிகவும் நோய்ப்பட்டிருக்கின்றாரென்று உறுதியாய் நம்புகின்றேன் என்றாள். அதுகேட்ட அவள் கணவன் நீ கண்டது வெறுங்கனவே யாகையால் அதற்காக இவ்வளவு கலக்கம் வேண்டாம் என எவ்வளவோ வற்புறுத்திக் கூறியும், அவள் அமைதியடையாமையால், தனது வண்டியை வருவித்தான். அவளும் அதன்கண் அமர்ந்து தம் அன்னையின் வீட்டுக்கு அருகே செல்கையில் இரண்டு பாட்டைகள் ஒன்று சேருமிடத்தில் தன் தமக்கையின் வண்டியும் வரக் கண்டாள். கண்டு அந்நேரத்தில் ஏன் வரல்வேண்டும்? என ஒருவரை
யொருவர் வினவியபோது, யான் உறங்கக் கூடவில்லை, நம் அன்னையார் நோய்ப்பட்டிருக்கின்றார் என்னும் உறுதியினால், யான் அவரைப் பார்க்கவந்தேன் என்று இருவரும் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டனர். பின்னர் அவ்விரு வருந் தம் அன்னையின் வீட்டண்டை வந்ததுந், தம் அன்னைக்கு நம்பிக்கையுள்ள வேலைக்காரி அவ் வீட்டு வாயிலிலே நிற்கக் கண்டார்கள். கிட்டச் சென்றதும், அவள் அவ்விருவரையும் நோக்கி நுங்கள் அன்னையார் திடீரென்று நோய்ப்பட்டு இறந்துபோகும் நிலையில் இருக்கின்றார்; நுங்கள் இருவரையும் பார்க்கவேண்டு மெனத் தமது விருப்பத்தைத்தெரிவித்தார், என்று சொல்லினள். உடனே உள் நுழைந்து அவர்கள் தம் அன்னையின் அருகே செல்ல, அவ்வம்மை அவர்களைக் கண் திறந்து பார்த்து மன நிறைவோடு உயிர் துறந்தார்.
இன்னும், 1857 ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 21 ஆம் நாளுக்குமுன் நிகழ்ந்த ஒரு கனவு நிகழ்ச்சியும் இங்கே குறிக்கத்தக்கதா யிருக்கின்றது. இலந்தன்மா நகரத்திலிருந்த மென்னியர் என்னும் அம்மையார் தம் உடன் பிறந்தா னொருவனிடத்து நிரம்பிய அன்புடையராயிருந்தனர். என்றாலும், பல ஆண்டுகளாக அவன் இருக்குமிடமும் அவனைப்பற்றிய வரலாறும் ஏதுமே அவள் அறிந்து கொள்ளக் கூடவில்லை. இவ்வாறிருக்க, மார்ச்சுத் திங்களில் ஒருநாள், அவள், தன்னுடன்பிறந்தான் தன் படுக்கையண்டை தலையற்ற முண்டமாய் நிற்கவும், அவனது தலை அவன் அருகேயிருந்த சவப்பெட்டியினுள்ளே கிடக்கவும் ஒரு பொல்லாத கனவு கண்டு, பேரச்சமும் பெருந்துயரமும் ஒருங்கு கலந்த உள்ளத்தினளாய் விழித்துக்கொண்டாள். உடனே தான் கண்ட அக் கொடிய கனவின் செய்தியைப் பலர்க்குத் தெரிவித்ததொடு புதினத்தாள் களிலுந் தன் உடன் பிறந்தானாகிய உவில்லிங்டனைப்பற்றி எவரேனுந் தெரிந்தெழுதுமாறும் விளம்பரஞ் செய்திருந்தனள். அவ்வாறு செய்ததிலிருந்து, சாரவாக்கு என்னும் ஊரிலே அவன் சீனர்களால் தலை துணிக்கப்பட்டு இறந்தான் என்னுஞ் செய்தி வெளியாயிற்று. அவ்வாறு அவன் தலை வெட்டுண்ட அதேநாளிற்றான் அவன்றன் உடன்பிறந்தாளான அவ்வம்மை அக்கனவுங் கண்டமை பின்னர் அறிஞர் செய்த ஆராய்ச்சியாற் புலனாயிற்று.
இவ்விருவேறு உண்மை நிகழ்ச்சிகளி லிருந்து பெறப்படுவது யாது? அன்பு மிக்கார் இருவரோ பலரோ அண்மையில் அகன்றிருப்பினும் அல்லது சேய்மையில் அகன்றிருப்பினும் அவருள் ஒருவர் இறக்குங்கால், அவர் நினைத்த நினைவானது உடனே தமக்கு அன்பரான ஏனையோர்க்கும் அவரது இறப்பின் வரலாற்றினைப் பிழைபடாமற் கனவின்கண் அறிவிக்கு மென்பதேயன்றோ?
இனி, இறப்பவரே பன்றி நோயாய்க் கிடப்பவருந்தமக்கு உதவி செய்வாரை உறுத்து நினைக்க, அந் நினைவு அவர்க்கு அன்பராயினார் கனவின்கட் டோன்றி அதனை அறிவிக்க, அவ் அன்பரும் விழித்தெழுந்து அவர்பாற்சென்று அவர்க்கு நோய் நீக்கின வரலாறுகளும் மிகப்பல; அவற்றுள் ஒன்று இங்கே காட்டுவாம்; கட்புலனாகாதவற்றைக் காண்டல் என்னும் அரியநூலின் ஆசிரியரான ஜேம் கோட் என்பவர் பின்வருமாறு எழுதுகின்றார்:
யான் என் குடும்பத்தவருடன் கிளாகோ என்னும் நகரத்தில் தங்கியிருக்குங்கால், டோனால்ட்மாக்கின்னன் என்னுங் கிறித்துசமய குரு எமது வீட்டுக்கு அயலில் உள்ளதோர் இல்லத்திற் குடியிருந்தார். அவரும் நாங்களும் மிக்க நேயமுடையராய் ஒழுகினோம். அவர் தம் மனைவியார் காலமாகிச் சில ஆண்டுகள் கழிந்தன. அவர் தம்மால் இயன்ற மட்டும் வேலைக்காரரை வைத்துக் கொண்டு தமது குடித்தனத்தை நடத்தியவாறே தமக்குரிய சமயவிளக்கத் தொண்டையுஞ் செவ்வையாக ஆற்றிவந்தார்.
1891 ஆம் ஆண்டு முடிவின்கண் ஒருநாள் மாலைக் காலத்தில், வழக்கத்திற்கு மாறாகச் சிறிது நேரந்தப்பி வீட்டுக்கு வந்தேன். எம் பிள்ளைகள் படுத்து உறங்கினர். என் மனைவியும் யானும் ஏறக்குறைய பத்தரை மணிக்கு ஒருங்கமர்ந்து இராச்சாப்பாடு அயின்றோம். அங்ஙனம் அயில்கையில், என் மனைவி அன்று விடியற்காலத்தில் எங்கள் அடுத்தவீட்டு நண்பரான அச் சமய குருவைப்பற்றித் தாம் கண்ட கனவின் வரலாற்றை எடுத்துரைப்பாராயினர். தாமும் யானும் அதே அறையில் அமர்ந்திருந்து உரையாடுவதாகவும், அந் நேரத்தில் எவரோ ஒருவர் கூழாங்கற் பதித்த தமது தோட்ட வழியே வந்து மணியடிக்கக் கேட்டுத் தாம் கதவைத் திறந்து பார்க்க இதற்கு
முன் தாம் பாராத ஓர் இளைய மாது மிக்க மனத்துயரத்தொடு போந்து அச் சமய குரு மிகவும் நோயாய்க் கிடப்பதை வந்து பார்க்கும்படி தம்மைக் கேட்டுக் கொண்டதாகவும், அதற் கிசைந்து தாம் அம் மாதராருடன் சென்று அக் குருவினைப் பார்த்ததாகவுந் தாங் கண்ட கனவின் பகுதிகளை மொழிந்தார். அவற்றோடு அவர் இருந்த உடம்பின் நிலையினையும், அவர் படுத்திருந்த அறையின் அடையாளங்களையுந் தாங் கனவிற் கண்டவாறே விரித்துரைத்தார்.
அக் கனவில் ஏதேனும் உளதோவென்று யாங்கள் எண்ணிக் கொண்டிருக்கையிற் குறிப்பிட்ட அவ் வழியே எவரோ வரும் அரவந் தோன்றியது; வாயில் மணியும் அடிபட்டது. எங்கள் வேலைக்காரி உறங்கப்போய் விட்டமையால், என் மனைவியே வாயிலண்டை சென்றார்; மெய்யாகவே ஓர் இளம் பெண் வந்து நின்றாள்; இவள் அக் குருவினாற் புதிதாக ஏற்படுத்தப்பட்ட வேலைக்காரி யாகையால் என் மனைவி இவளை இதற்குமுற் பார்த்ததே யில்லை; அங்ஙனம் வந்து நின்ற அவ்விளமாது, மிகவும் நோயாய்க் கிடக்கும் முதியோரான அக் குருவினை வந்து பார்க்கும் படி என் மனைவியைக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டாள். என் மனைவியுடனே என்னைக் கூப்பிட்டார்; அவ்விள மங்கையின் றோற்றமும் உடையுங் கனவின் கட் போந்த மங்கையின் றோற்றத்தையும் உடையையும் ஒத்திருந்தன. அப்பொழுதே என் மனைவி அவரைப் பார்க்கபோனார்; யானும் டங்கன் என்னும் புகழ்பெற்ற மருத்துவர் ஒருவரை அழைக்கச் சென்றேன். அம் மருத்துவர் வருதற்குச் சிறிது நேரமாகுமெனக் கண்டமையால், யான் முன்னதாக அக் குருவின் இல்லத்திற்கு ஏகினேன்; மேன்மெத்தைமேல் அவரது அறைக்குள் நுழைந்ததும், என் மனைவியார் தாம் அதனைக் கனவிற் கண்டு பின் எனக்குக் கூறியபடியே அஃதிருந்தது. சிறிது நேரத்தில் அம் மருத்துவரும் வந்தார். அவர் சொன்னபடியே எல்லாஞ் செய்யப்படுகின்றனவா என்று பார்த்தற்காக என் மனைவியுங் கூடவே யிருந்தார். என் மனைவி கண்ட கனவின் செய்தியைக் கேட்ட அம்மருத்துவர் நகைத்து, அத்தகைய நிகழ்ச்சிகள் நடக்கக் கூடியவைதாம் என்று மொழிந்தார். அதன்பின் அக்குருவின் மகனுக்கும் மருமகளுக்குங் கம்பிச்செய்தி விடுக்க, அவர்களும் உடனே வந்து சேர்ந்தனர். அவர்கட்கும் என் மனைவி கண்ட கனவு சொல்லப்பட்டது. பின்னர் அக்குருவும் உடம்பு நலம் பெற்றார், என்பது.
சமயத்தொண்டு ஆற்றுவாரான அக்குரு தாம் நோயாய்க் கிடந்த பொழுது தமக்குதவி செய்வார் எவரும் அருகில் இல்லாது போகவே, தமக்கு அயலிலுள்ள தம்நேயர்களை அவ்வுதவியின் பொருட்டு உறுத்து நினைக்க, அந் நினை வானது, அந் நேயரில் ஒருவரான அவ்வம்மையாரது கனவின் கண் அவர்தம் புதிய வேலைக்காரியின் உருவினையும், அவர் நோயாய்க் கிடக்கும் நிலையினையும் நன்கு விளங்கப் புலப்படுத்தி, அவ்வாற்றால் அவ்விருவரும் உடனே போந்து அவர்க்கு உதவிபுரியுமாறு செய்தமை காண்க.
இங்ஙனமே, பேரிடரில் அகப்பட்டுக் கொண்டார் பலரின் தோற்றமானது அருள் உள்ளம் உடையார் சிலரின் கனவின்கட் டோன்றி, அவரது உதவியால் அவர்களை அவ்விடரினின்றும் மீள்வித்த உண்மை நிகழ்ச்சிகளும் பலவுண்டு; அவற்றுள் ஒன்று இங்கே காட்டுவாம்.
காலிபோர்னியா என்னும் ஊரிலிருந்த ஒரு படைத்தலைவர், அயல்நாடு குடியேறப் புகுந்த ஒரு கூட்டத்தார் குளிராலும் பசியாலுந் துன்புறுதலை ஒரு நாட் கனவின் கட் கண்டார். அவர் கண்ட அந்நிகழ்ச்சிக்குரிய இடத்தின் அமைப்பும் அவரால் தெளிவாக அறியப்பட்டது. அவ்விடத்தின் கட் செங்குத்தான பெரிய வெள்ளை மலைப்பாறை யொன்று அடையாளமாக நிற்றலையும், அவர் குறிப்பிட்டார்; அங்கே காணப்பட்ட மக்கள் ஆழமான பனிப்பாறைப் பிளவுகளினூடே வளர்ந்திருந்த மரங்களின் உச்சிகளைத் தறித்தலுங் கண்டார்; அம் மக்களின் உருவ அடையாளங்களையும் அவர்கள் அணிந்திருந்த உடைகளின் குறிகளையுங் கூடச் செவ்வனே தெரிந்து கொண்டார். இவ்வாறு கண்ட கனவினின்றும் அவர் விழித்தவுடனே, அக் கனவின் தெளிவும் உண்மையும் அவரதுள்ளத்தை உறுத்தின. திரும்பவும் அவர் அயர்ந்து உறங்கத், திரும்பவும் அக்கனா நிகழ்ச்சி முற்கண்டபடியே எள்ளளவும் பிசகாமல் அப்படியே தோன்றலாயிற்று.
விடியற் காலையில் அவர் படுக்கையினின்று எழுந்த பிறகும் அக் கனவின் தோற்றத்தைத் தம் நினைவினின்றும் அகற்றல் முடியவில்லை. பின்னர்ச் சிறிது நேரத்திலெல்லாந் தாம் எதிர்ப்பட்ட தமக்குப் பழைய தோழனான ஒரு வேட்டுவனிடந் தாங்கண்ட அக் கனா நிகழ்ச்சியை எடுத்துரைத்தார். அதுகேட்ட அவன் அவர் கனவிற் கண்ட இடந் தனக்குந் தெரியு மென்று சிறிதும் மலையாது விளம்பினான். விளம்பியபடியே அம்மலைப் பள்ளத்தாக்கின் கண்ணதான அவ்விடத்தையுந் தெரிந்து காட்டினான். உடனே அத் தலைவர் மக்கட் கூட்டம் ஒன்று சேர்த்துக், கோவேறு கழுதைகளுங் கம்பளிகளும் உணவுப் பண்டங்களுந் தொகுத்தார்.
கனவிற் கண்டதை நம்பி இவர் இவ்வளவு ஏற்பாடு செய்தல் கண்ட அண்டை அயலார் இவரை ஏளனஞ் செய்தனர். அதற்கவர் சிறிதும் வருந்தாது யான் இதுசெய்ய வல்லமையுடையேன்; ஆகையால், இது செய்வேன்; யான் கனவிற் கண்டதை உண்மை யென்றே நம்புகின்றேன் என மொழிந்து
விட்டு, அம் மலைகளின் இடையே நூற்றைம்பது மைல்களுக்கு அப்பால் உள்ள கார்சன் பள்ளத்தாக்குக் கணவாய்க்குத் தாம் சேர்த்த மக்கட் கூட்டத்தாரையும் பிறவற்றையும் போக்கினார். போன அக் கூட்டத்தார். அவர் கனவிற் கண்டபடியே ஒரு மக்கட்குழு அங்கே பெருந்துயர் உழத்தலைக் கண்டு, அவர்களுள் இறந்து போயினார் ஒழிய, எஞ்சியவர்களை உயிருடன் கொணர்ந்தனர்.
இன்னும், மூச்சு ஓட்டம் நின்று உணர்விழந்து கிடந்தார் சிலரை இறந்துபோனவராகக் கருதி அவர் தம் உறவினர் அவரைப் புதைப்பதோ எரிப்பதோ செய்து விடுகின்றனர். இத்தகைய நிகழ்ச்சிகள் எல்லா நாட்டவர்கள் இடையிலும் பிழையாக நேர்ந்து விடுகின்றன. இவ்வாறு ஒருகாற் சவப்பெட்டியில் அடக்கஞ் செய்யப்பட்ட ஒருவர் தமது நினைவின் வன்மையால் தொலைவிலிருந்த தம் நண்பர்க்குத் தமது இடர்ப்பாடான நிலைமையினைக் கனவிலும் நனவிலும் அறிவித்து அவ்விடரினின்றும் மீண்ட மெய்வரலாற்றினை இங்கெடுத்துக் காட்டுதும்:
மிக நெருங்கிய நட்புவாய்ந்த அறிஞர் இருவரில் ஒருவர் ஒரு கல்லூரியில் ஆசிரியராய் இருந்தனர். மற்றொருவர் அவர்க்குப் பதினெட்டுக் கல் தொலைவானதோரிடத்தில் ஓர்அலுவலில் அமர்ந்திருந்தனர். ஒருநாட் கல்லூரியாசிரியர் இரவில் அயர்ந்து உறங்குகையில், தம் நண்பர் தமது கனவின்கட் டோன்றித் தாம் உயிருடன் புதைக்கப்படப்போவதைப் பெருந்திகிலொடு கூறக் கண்டார். கண்டு, அதனால் நெஞ்சங் கலங்கி விழித்த அவர் தாம் கண்டது கனவாதலை யுணர்ந்து ஆறுதலுற்று மறுபடியுந் தூக்கத்திற் சென்றார். மறுபடியும் அக் கனவு அப்படியே தோன்றலாயிற்று. திரும்பவும் விழித்துப் பார்க்க, விடிந்துபோனமையாற் காலைக் கடன்களை முடித்துச் சிற்றுண்டி கொண்டு, அவர் ஒரு கைந்நாற்காலியில் அமர்ந்திருந்தார். அப்போது எவரோ ஒருவர் கதவைத் தட்டும் ஓசை கேட்டது. clnd mt®, ‘cŸns tUf! வென்று கூவினார். அடுத்துக் கதவு திறக்கும் ஒலியும் எவரோ உள் நுழையும் அரவமுந் தென்பட்டன. வருபவன் வேலைக்காரனா யிருக்கலாமெனக் கருதி அவர் நிமிர்ந்து நோக்கவில்லை, ஆனால், நண்பரே, அவர்கள் என்னைப் புதைக்கின்றார்களே! எனத் தம் நண்பரின் குரல் ஒலி அவர் காதண்டைக் குசுகுசு வென்று நுழைந்து அவரைத் திடுக்கிடச் செய்தது. உடனே அவர் எழுந்து பார்க்க அவ்வறையில் எவருந் தென்பட்டிலர்; வேலைக்காரரும் எவரும் வந்திலர். ஆகவே, அவர் காலந் தாழாது புறப்பட்டுத் தம் நண்பர் இருக்கும் ஊருக்குக் கடிதிற் போயினார். அவரது வீட்டண்டைச் செல்கையில், ஒரு சவப்பெட்டி அதன் வாயிலிலே அப்போது தான் கொணரப்படலாயிற்று. தம் நண்பரின் உடம்பை அதனுள் வைத்து ஆணியறைந்து விட்டுப், புதைக்கு மிடத்திற்கு எடுத்துப் போக அங்கிருந்தார் புறப்படுதலைக் கண்டார். கண்டதும், அங்குள்ளாரை நோக்கி அப் பெட்டியைத் திறக்க வேண்டுமென்றுஞ் சவச்சடங்கு செய்ய லாகாதென்றும் வற்புறுத்தினார். அங்ஙனமே பெட்டி திறக்கப்பட்டது; தம் நண்பரின் உடம்பை அதனின்றும் எடுப்பித்துப் படுக்கை மேற் கிடத்திச் சூடான ஒற்றடம் அதற்குக் கொடுப்பித்தார். அவ்வாறு செய்யவே பிணமாய்க் கிடந்த அவர் உயிர்பெற்றுச் சில நாட்களிலெல்லாம் முழுநல மெய்தினார். அதன்பின்னர் அவர் ஒன்பதாண்டுகள் உயிர் வாழ்ந்தார் என்பது.
இஃதொன்றோ! ஒரு பேரிடரில் அகப்பட்ட ஒருவரது நினைவு ஒரோவொருகால் அவரது கனவு நிலையிற் பேராற்றல் வாய்ந்ததாகித் தொலைவின்கண் உள்ள பிறர்சிலர்க்குத் தன்னை யுடையராது உருவத்தைத் தோற்றுவித்து, அவர் அகப் பட்டிருக்கும் இடர்ப்பாடான நிலையினையும் அறிவித்து, அவரை அந்நிலையினின்று மீட்ட வரலாறுகளும் பலப்பல; அவற்றுள் ஒன்றனை இங்கே வரைகுவம்:
இலிவர்ப்பூல் என்னுந் துறைமுகப் பட்டினத்திற்கும் மற்றொரு துறைமுகப் பட்டினத்திற்கும் இடையிலே ஓடிக் கொண்டிருந்த வாணிகக்கப்பல் ஒன்றின் தலைவனும் அவன் துணைவனும் ஒருநாட் கப்பலில் மேற்றட்டில் இருந்தவாறே பகலவன் இயக்கத்தை உற்று நோக்கிக் கணக்குச் செய்துகொண்டிருந்தனர்; அது செய்தபின் இருவரும் அற்றை நாள் வேலைக் கணக்குப் பார்த்தற்குக் கீழ்த்தட்டில் இறங்கினர். இறங்கிய படிக்கட்டுக்கு எதிரே யிருந்த சதுக்கமான ஒரு வெளியிடத்தின் ஒரு பக்கத்திற் கப்பற்றலைவன் இருக்கும் ஒரு சிற்றறையும், மற்றொரு பக்கத்தில் அத் தலைவனுக்குத் துணைவனிருக்கும் அறையும் இருந்தன. துணைவனிருக்கும் அறையின் சாய்வுமேசையின் அருகிருந்து ஒருவன் தன் றோள்வழியே சிறிது திரும்பி நோக்கினால், தலைவனிருக்கும் அறையின் உட்பகுதி அவனுக்கு நன்றாய்த் தெரியும்.
இனித், தன் அறையுளிருந்து கணக்குச் செய்தவனான துணைவன் அதனை முடித்தவுடன் திரும்பி, எதிர் அறையினுள் ளிருந்த தலைவனை விளித்து, ‘நுங்கள் கணக்கு எப்படி? என்று வினவினான். அதற்கு விடை வராது போகவே, திரும்பத்திரும்ப அதனையே வினவிக் கூவினான். அங்ஙனங் கூவுகின்றுழித் தன் தோட்பக்கமாய்ச் சிறிது திரும்பி நோக்க, அக் கப்பற்றலைவன் தனது கற்பலகையிலே விரைவாய் எழுதிக்கொண்டிருப்பது போல் அவற்குக் காணப்பட்டான். பலகாற் கூவியும் ஏதும் விடைவராமை கண்டு, அத்துணைவன் வெளியே போந்து தலைவனறையின் கதவண்டை நின்று உள்நோக்கத், தலைவன் என்று தான் பிழையாகக் கருதிய அவ்வுருவந் தலைநிமிர்ந்து இவனைப் பார்க்க, அஃதொரு புதிய ஆடவனின் உருவமாகத் தோன்றக் கண்டான். கண்ட அத் துணைவன் கோழை நெஞ்சம் உடையவன் அல்லன். என்றாலும், ஏதும் வாய்பேசாது அவ்வுருவம் இவனை உறுத்துப் பார்க்க, இதற்கு முன் தான் கண்டிராத அவ் வாடவனின் அவ் உருவநிலை அவற்கு அச்சத்தினை விளைவி யாது ஒழியுமோ? ஆகவே, அத் துணைவன் வெருக்கொண்ட நெஞ்சினனாய், அதன் மேல் ஏதும் வினவாது, மேற்றட்டின் மேல் விரைந்தோடிக் கப்பற் றலைவனை அணுகினான்.
அங்ஙனம் வெருண்டு வந்தானை நோக்கி, நண்பனே, யாது நினக்கு நேர்ந்தது? என்று தலைவன் வினவ நுங்கள் சாய்வுமேசையண்டை உட்கார்ந்திருப்பவர் யார்? என்று அவன் எதிர் வினாவினான். எவரும் இல்லையே! என்று அவன் உரைப்ப, மீண்டும் அத்துணைவன் யான் இதற்குமுற் பாராத ஓர் ஆள் அங்கே உட்கார்ந்திருக்கின்றார்! என்று வலியுறுத்திச் சொன்னான். அதன் மேல் இருவரும் இறும்பூதுற்றவராய் ஒருவரை யொருவர் மறுத்துப் பேசிச், சிறிது நேரத்திற்குப் பின், இருவருமே ஒன்றுசேர்ந்து கீழ்உள்ள அவ்வறையண்டை சென்றனர். அதனுள் நோக்க அங்கே எவரையுங் கண்டிலர். அதன்மேற் கப்பற்றலைவன் தன் துணைவனை நோக்கி, நீ கண்டது கனவேயன்றிப் பிறி தன்றென முன்னமே யான் சொல்ல வில்லையா? என்றனன். ஐய, சொல்வது எளிது; யான் கண்ட ஆள் மெய்யாகவே நுங்களது கற்பலகைமேல் எழுதியதை நான் பார்த்திராவிட்டால், மறுபடியும் யான் என் இல்லத்தையும் மனைவி மக்களையுங் காணா தொழிவேனாக! என்று துணைவன் மீண்டும் உறுத்திக் கூறினன். அது கேட்ட தலைவன் அங்ஙனமாயின் அக்கற்பலகைமேல் அவ் ஆள் எழுதிய எழுத்து இருக்க வேண்டுமன்றோ? என மொழிந்து, அதனை யெடுத்துக் காணக், கப்பலை வடமேற்கில் ஓட்டுக! என்னுஞ் சொற்றொடர் அதன்கண் எழுதப்பட்டிருந்தது.
அதன்மேல் அத்தலைவன் பெரிதுந் திகைப்புற்றவனாய் அதனை ஆராய்வான் புகுந்து தன் துணைவனையும், அம்மரக் கலத்திலுள்ளார் அனைவரையும் அழைத்து, அக் கற்பலகையில் வரையப்பட்டிருந்த அச்சொற் றொடரின் கீழ், அதனைப் போலவே வரையும்படி ஒவ்வொருவரையும் ஏவினான்; அங்ஙனமே வரைந்தவற்றில் ஒருவரது கை யெழுத்தாவது அதனோடு ஒத்ததாய் இருக்கவில்லை. அதன்மேல் அதில் ஏதாவது ஓர் உண்மையிருக்க வேண்டுமென்று எல்லாருமே ஒரு முடிவுக்கு வர, அக் கப்பற்றலைவன் தனது கற்பலகையில் வரையப்பட்ட அச்சொற்றொடரின் படியே தன் கப்பலை வடமேற்கு முகமாய் ஓட்டுவிப்பானாயினன்.
கப்பல் அம்முகமாய் ஓடுகையிற், பிற்பகல் மூன்று மணிக்குப், பெரும் பனிப்பாறை ஒன்றும் அதன் அண்டையில் ஒரு மரக்கலமுந் தென்படலாயின. உடனே, தலைவன் தன் மரக்கலத்தை அவ்விரண்டற்குஞ் சிறிது தொலைவிலேயே நிறுத்தித், தனது தொலைவு நோக்கிக் கண்ணாடியினால் நோக்க, ஒரு கப்பல் பனிப்பாறைகளின் நடுவே அகப்பட்டு உறைந்து போகவும், அதன்கண் மக்கள் பலர் துன்புற்றநிலையிலிருக்கவுங் கண்டு, உடனே தனது மரக்கலத்திலுள்ள படகுகள் சிலவற்றைக் கீழ் இறக்குவித்துப் போக்கப், பனிப்பாறையில் தாக்குண்ட மரக்கலத்தை அவையணுகி, அதிலிருந்த மக்கள் அனைவரையுங் கொணர்வித்தன.
மூன்றாவது, படகு கொணர்ந்த மக்கள் இம்மரக்கலத்தின் மேல் ஏறுகையில், அவர்களுள் ஒருவனது முகத்தை மேலிருந்து கண்ட துணைவன் பெருந்திகில் கொண்டான். ஏனெனில், அவன் தன் கப்பற்றலைவனது அறையில் மூன்றல்லது நான்குமணி நேரத்திற்குமுற் கண்டது அன்னவனது முகமேயாகும். முதலில், இவன் தான் கண்டது மனத்தின் பொய்யான தோற்ற மாயிருக்கலாமோ வென எண்ணினான். ஆனால், அவ் ஆளின் முகமே யன்றி உருவ அடையாளமும் அவன் அணிந்திருந்த உடையும் முன்னே தான் கண்ட உருவத்தின் அடையாளத்தையும் உடையையும் முழுதும் ஒத்திருந்தன. மீட்கப்பட்ட வழிப்போக்கர்களுங் கப்பல் வேலை யாட்களும் பட்டினியும் பசியுமாய்க் கிடந்து வந்தவர்களாத லால், அவர்கட்கு வேண்டும் வசதிகளெல்லாம் உடனே செய்யப்பட்டன. பின்னர்க், கப்பற்றலைவனுந் தனது கப்பலை ஓட்டுவானாயினான். அங்ஙனம் அஃது ஓடுகையில், அத் துணைவன் தலைவன்பாற் போந்து அவனை ஒருபுறந் தனியே யழைத்து, ஐய, யான் இற்றைப் பகலிற் கண்டது பேய் உருவம் அன்று. யான் கண்ட ஆள் அதோ! நம்மால் மீட்கப்பட்ட குழுவினருள் ஒருவராய் இருக்கின்றார்! யான் நுங்களது கற்பலகைமேல் எழுதக்கண்ட ஆள் அவரேயென ஆணை யிட்டுக் கூறுவேன்! என்றாள். அதுகேட்ட தலைவன், பனிப் பாறையின் நடுவே அகப்பட்டுக் கொண்ட மரக்கலத்திலிருந்த ஆள், வேறு தொலைவில் ஓடிக் கொண்டிருந்த நமது கப்பலுக்கு எவ்வாறு சடுதியில் வந்து சடுதியில் மறையக் கூடும்? இஃது ஏதோ ஒரு பெரும்மாயமா யிருக்கின்றது! இதனை ஆராய்ந்து பார்ப்போம், வா! என்று கூறி, அவனோடு அம் மீட்கப்பட்ட குழுவினரிடஞ் சென்றான்.
அப்போது அம் மாய ஆள் தான் ஏறியிருந்த கப்பலின் மீகாமனிடம் பேசிக் கொண்டிருந்தான். இவ்விருவருந் தம்பால் வரக்கண்ட அவ்விருவரும் உடனே எதிர்போந்து, தம்மை அக்கொடுந் துன்பத்தினின்று மீட்ட அத்தலைவற்குந் துணைவற்கும் நெஞ்சார நன்றிமொழி சொல்லி வாழ்த்தினர். தாம் அத்தகைய பெருந் துன்பத்தில் அகப்பட்டிருக்கக் காணின் அவர்களுந் தம்மை அங்ஙனமே மீட்பது உறுதியாதலால் தாஞ் செய்தது கடமையே யென மொழிந்து, அவ்விருரையும் தன் அறைக்கு அத் தலைவன் அழைத்துச் சென்றான்; சென்றதும் அம் மீகாமனுடன் வந்த வழிப்போக்கனை நோக்கி ஐய! யான், ஏதோ குறும்பு பண்ணுகின்றேன் என்று நினையாமல், இந்தக் கற்பலகை மேற் கப்பலை வட மேற்கில் ஒட்டுக! என்னுஞ் சொற்றொடரை எழுதுங்கள் என்று தலைவன் வேண்டினான். இத்துணைப் பேருதவிசெய்த தாங்கள் எது வேண்டுமாயினுஞ் செய்வேன் எனப் புகன்று, அக் கற்பலகைமேல் அவ்வாறே அவ் வழிப் போக்கனும் வரைந்தான். வரைந்த பின் தலைவன் அக் கற்பலகையை வாங்கி மறைவாய்ப் புறந்திருப்பி இது நுங்கள் கை யெழுத்துத்தானா? என்று பாருங்கள்! எனக் கேட்டான். அதற்கவன் இப்போது தான் அதனை எழுதினேனே அதைப்பற்றி ஐயம் ஏன்! எனக் கூறினான். பிறகு தலைவன் அவன் எதிரிலேயே அக் கற்பலகையைப் புறந்திருப்பிக் காட்ட, அதன்கண் முன்னும் பின்னும் அதே சொற்றொடர் அதே கையெழுத்தில் எழுதப்பட்டிருத்தலைப் பார்த்து, அவன் ஐய, யான் ஒருமுறை தானே இதன்கண் எழுதினேன். மற்றொரு முறையும் இதனை எழுதினவர் யாவர்? என வினாயினான். அதற்குத் தலைவன் யான் அறியேன். இற்றைப்பகல் நீர் தாம் இந்தச் சாய்வு மேசையண்டையிருந்து எழுதினீர் என என்துணைவன் கூறினான். என்றனன்; அதுகேட்ட அவ்வழிப் போக்கனும் அவன் ஏறிவந்த மரக்கல மீகாமனும் ஒருவரை யொருவர் நோக்கி இறும்பூதுற்றனர் பிறகு, அம்மரக்கலமீகாமன் அக்கப்பற்றலைவனை நோக்கி இற்றைக் காலையில் இவ் வழிப்போக்கர் களைப்பினால் அயர்ந்து உறங்கினார். விழித்தபின் இவர் என்னை நோக்கி நம்மை இப் பேரிடரினின்று மீட்பதற்கு ஒரு கப்பல் வருகின்றது; அக் கப்பலின் மேற்றட்டின்மேல் யான் போயிருந்ததாகவுங் கனவு கண்டேன். என்று கூறி, அக் கப்பலின் அடையாளத்தையும் விரித்துரைத் தார். அவ்வடையாளப்படியே இந்தக் கப்பலிற் போந்து நீங்களும் எங்களை மீட்டுக் காப்பாற்றினீர்கள்! என மொழிந்தனன் ஆனால், அக் கனவின்கண் தான் கற்பலகைமேல் ஏதும் எழுதி னதாகத் தனக்கு நினைப்பில்லை யென்றும், என்றாலும் இக்கப்பலின் மேற்றட்டின் மேலுள்ள ஒவ்வொன்றும் யான் அறிந்தவைகளாகவே காணப்படுகின்றன வென்றும், இக் கப்பலில் ஏறி யறியாத எனக்கு இங்குள்ளவைகள் எல்லாம் நன்கு தெரிந்தவைகளாகக் காணப்படுவது பெரியதொரு புதுமையாய் இருக்கின்றதென்றும் அவ் வழிப்போக்கன் வியப்புடன் மொழிந்தனன்.
உண்மையாக நிகழ்ந்த இந்நிகழ்ச்சியில் வழிப்போக்கன் கண்ட கனவின் நிலைதான் பெரிதும் வியக்கத் தக்கதாயிருக்கின்றது. பனிப் பாறைகளினூடே யகப்பட்டுக் கொண்ட மரக்கலத்திற் பட்டினியும் பசியுமாய்க் கிடந்த அவ் வழிப்போக்கனது நினைவு, அவனது கனவின்கண் மிக்க சுருசுருப்பு உடையதாய்த் தற்பாதுகாப்பின் பொருட்டு, வேறொரு மரக்கலத்தின்கண் அவனது நுண்ணுடம்பின் உருவினைத் தோற்றுவித்தல், தானிருக்கும் மரக்கலத்தின் முகமாய் அம்மரக்கலம் வருமாறுங் கற்பல கையில் எழுதுவித்துத் தன்னையுந் தன்னுடன் இருந்தா ரையும் ஒருங்கு உயிர்பிழைக்கச் செய்தது. கனவின் கட் கண்ட வைகளைப் பெரும்பாலும் நனவின்கண் மறந்து போதல் எல்லார் மாட்டுங் காணப்படுதலின், அவ் வழிப் போக்கன் தன் கனவின்கண் நுண்ணுடம்பிலிருந்து கற்பலகையில் எழுதியதை மறந்து போயின னாகலின், அது பற்றி ஈண்டைக் காவதோர் இழுக்கில்லை. இங்ஙனமாகச் சிற்சிலர்க்கு அவர்தம் நினைவு கனவின்கட் சிற்சில நேரங்களில் மிக்க ஆற்றலுடையதாய் இயங்கும் உண்மையும், அஃது அக்காலங்களில் நெடுந் தொலை விலுள்ளார்க்குந் தன்னையுடையானது நுண் உருவினைத் தோற்றுவித்துச் செயற்கரிய செய்யுந் தன்மையுங் கருத்திற் பதிக்கற்பாலன வாகுமென்க.
இங்ஙனமாகக் கனவிடைச் சுருசுருப்பாய் இயங்கும் ஒருவனது நினைவு அவனது நுண்ணுருவினைப் பிற னொருவனுக்கு நனவின்கட் டோற்றுவித்தல் போலவே, நனவின் கண் ஒருவன் உறுத்து நினைந்த நினைவும் அவனது நுண்ணுருவினைக் கனவின்கண் உள்ளார் சிலர்க்குத் தோற்றுவித்தலும் உண்டு. இவ்வுண்மையினை விளக்குஞ் சில உண்மை நிகழ்ச்சிகளை இங்ஙன் எடுத்துக் காட்டுவாம்:
சென்ற மழைகாலத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை யிரவு ஒரு மணிக்கு, எனது வீட்டுக்கு மூன்றுகல் தொலைவிலுள்ளதொரு வீட்டிலிருந்த என் நேயர் இருவரது கனவின் கண் எனது உருவினைத் தோற்றுவிக்க விரும்பி உறுத்து நினைந்தேன். பின்னர்ச் சில நாட்சென்று யான் அவர்களைப் பார்த்தபோது யான் செய்த அவ் வாராய்ச்சியினைப் பற்றி வேண்டுமென்றே ஏதுஞ் சொல்லாதிருந்தேன். ஆனால், அவர்கள் என்னோடு உரையாடிக்கொண்டு வருகையில் ஒருவர் என்னை நோக்கிச், சென்ற ஞாயிற்றுக்கிழமை எவ்வளவு புதுமையான ஓர் இரவினைக் கழித்தோம் என்று சொன்னால் நீர் நம்பமாட்டீர்! என்று முதலிற் சொல்லிப் பின்னர் எனது உருவந் தமது அறையில் நிற்கக் கண்ட காட்சியினை விரித்துரைத்தார். எனது உருவத்தோற்றம் மிகவும் தெளிவாய் இருந்தமையால், அவர்கள் விழித்தெழுந்து தமது நாழிகை வட்டிலை நோக்க அப்போது மணி ஒன்றாயிருக்கக் கண்டார்கள், என்பது. இந்நிகழ்ச்சிக் கண்நினைந்தவரது நினைவு ஒருமுகமாய் உறைத்து நின்றமையால், அந்நினைவின் உறைப்புக்குத்தக, அவரது நுண்ணுருவு அவர் தம் நேயரது கனவின்கண் மிகவுந் தெளிவுடைய தாய்த் தோன்ற லாயிற்று.
இன்னும், நாட்டுப்புறத்து மாதான பெர்த்தா என்பவள் பாரிசுமாநகரத்து மருத்துவ விடுதியிற் குழந்தை மருத்துவஞ் செய்யும் வேலையில் வந்து அமர்ந்தபோது, அவ்விடுதித் தலைமை மருத்துவர்க்கு அறிமுகம் ஆயினள். அம்மாது எளிதிலே அறிதுயிலிற் செலுத்தப்படும் இயற்கை வாய்ந்தவள் அவளது அவ்வியற்கை அறிந்த அவ் விடுதித் தலைவர் தாம் தொலைவி லிருந்தபடியே அவளைப் பலகால் அறிதுயிலிற் செலுத்தியிருக்கின்றார். இங்ஙனம் அம்மாது எளிதிலே அறிதுயிலிற் செல்வது மட்டும் அன்று, தொலைவிலுள்ளாரையுந் தான் நினைந்த படி நடத்த வல்ல நினைவாற்றலுந் தனக்குண்டென மொழிவள். இவ்வாற்றால் தனக்குத் தன் அன்னையிட மிருந்து பிறப்புரிமையாக வந்ததென்பதும் அவளது கருத்து. தான் எண்ணினால் நடப்பவர் தடுக்கிவிழவும் வழிபிசகிப்போகவுந், குறிப்பிட்ட இடத்திற்குப் போகாமல் தடைப்படவுஞ் செய்தல் கூடும் என்பள். இங்ஙனமெல்லாஞ் செய்யக்கூடிய தன் நினைவாற்றலை அவள் அவ்விடுதியின் மருத்துவத் தலைவர்க்குப் பலகாற் புலப்படுத்திக் காட்ட, அவரும் அதனை ஒப்புக் கொண்டிருக்கின்றார். அவள் அத்தலைவர்க்கே தான் எண்ணிய தொரு தோற்றத்தினை அவர் கட்புலனெதிரே விளைவிக்க அவர் அதனைப்பற்றி வரைந்தது வருமாறு:
யான் நன்றாக உறங்கும் இயல்பினேன். என் உறக்கத்தின் இடையே எப்போதாயினும் யான் விழித்ததாக எனக்கு நினைவில்லை ஆனால், ஒருநாளிரவு இரண்டு அல்லது மூன்று மணிக்குச் சடுதியில் யான் விழித்தெழுந்தேன். என் கண்களைத் திறவாமலே இது பெர்த்தாவின் சூழலாயிருக்கலாம் என நினைந்தேன் அதன்பிற் கண்களைத் திறந்து எனக்கெதிரேயிருந்த சுவரை நோக்க, அதன்கண் வட்டமான ஓர் ஒளிவடிவினைக் கண்டேன்; அஃது ஒரு கொம்மட்டிப்பழ அளவினதாய்க் காணப் பட்டது; சிறிது நேரம் யான் அதனை உற்றுநோக்கியபடியாய் இருந்தேன்; பின்னர் அது மறைந்துபோயிற்று. திரும்பவும் நான் நன்றாய்ப் படுத்துத் தூங்கிவிட்டேன். மறுநாட்கலையில் பெர்த்தா என்னைப் பார்த்தபோது, அவள் முதலில் என் படுக்கையைச் சூழச் சில சில நாய்கள் தோன்றுமாறும், இரண்டாவது சிலர் சண்டையிடுமாறும், மூன்றாவது ஒரு விளக்கு வெளிச்சங் காணப்படுமாறுந் தான் உறுத்து நினைந்ததாகப் புகன்றனள். முதல் இரண்டும் எனக்குத் தோன்றிலவாயினும், மூன்றாவது அவள் எண்ணியபடியே ஒரு விளக்கினொளி எனக்குத் தோன்றியது என்பது.
பின்னர் ஒருகால் அம்மருத்துவத்தலைவரும் அவர் தம் நண்பர் ஒருவருமாக ஒரு வண்டியில் ஓரிடத்திருந்து பிறி தோரிடத்திற்குப் போய்க்கொண்டிருக்கையில், அவர்கள் சென்ற நேரம் நள்ளிரவாதலால் தெரு வெங்கும் விளக்கேற்றப்பட்டு வெளிச்சமுடையதாயிருந்தும், அஞ்சத்தக்க காரணம் ஏதொன்றுமே இல்லாதிருந்தும், அம்மருத்துவருக்குத் திடீரென உள்ளத்தில் ஓர் அச்சந்தோன்றியது. ஓ! இது பெர்த்தாவின் சூழலாயிருக்கலா மென்று அவர் சொல்கையில், அவர்தம் நண்பரும் நகைத்துக் கொண்டு, ஆ! என்னை யறியாமலே எனக்கும் உள்ளத்தே ஒரு திகில் தோன்றுகின்ற தென்றார். இத் திகிலானது குறிப்பிட்ட இடத்திற்குப்போய்ச் சேரும் வரையில் அவ்விருவருக்கும் இருந்தது. பின்னர் அவர்கள் வண்டியை விட்டுக் கீழ் இறங்குகையில், அவர்தம் நண்பர் வானத்தில் எவையோ வெண்மையானவை தம் கண்ணெதிரே பறந்து செல்லக் கண்டார். ஆனால், அதனை அம்மருத்துவத் தலைவர் காணவில்லை.
அடுத்தநாள் அத்தலைவர் தமது மருத்துவ விடுதியிற் பெர்த்தாவைப் பார்த்தபோது நேற்று இரவு தாமுந் தம் நண்பரும் அடைந்த நிலைமைகளைச் சொல்லும்படி அவளை வேண்ட, அவளுஞ் சொல்வாளாயினள்; முதலில் நுங்கள் வண்டிக்காரன் வண்டியை வழிதப்பிப் பல முகமாய் ஓட்டிக்கொண்டு சென்றான்; ஆனால், வண்டிக்குள்ளிருந்த நீங்கள் அதனை உணரவில்லை என்றனள். இவள் இது சொல்லியபிறகுதான் தமது வண்டி வழிதப்பிப் பலமுகமாய் ஓட்டப்பட்டமை அவரது நினைவுக்கு வந்தது. அதன் பின் அவள், துவக்கத்தில் நீங்களும் அதன்பின் நுங்கள் நண்பரும் ஏதொரு காரணமும் இன்றியே பெருந்திகில் கொண்டீர்கள்! அதன் பின்னர் வெள்ளிய புறாக்கள் சில நுங்களைச் சுற்றி அருகிலே பறந்து செல்லக் கண்டீர்கள்! என மொழிந்தனள்.
பாருங்கள்! விழிப்பில் நினைவுடன் இயங்கும்போதே பெர்த்தா என்பவள் தான் உறுத்து நினைந்த நினைவுகள், விழிப்பில் இயங்கிய அம்மருத்துவத் தலைவர்க்கும் அவர்தம் நண்பர்க்கும் அவர் தம் வண்டிக்காரற்கும் அகத்தேயும் புறத்தேயும் தோன்றி அவர்தம் உள்ளங்களைத் தம்வழிப் படுத்திவிட்டன. யாம் மிக இளையமாயிருந்தபோதே எம்மைக் காணவந்த ஒருவர், எம் எதிரிலேயே ஒரு கற்பலகையை யெடுத்து அதில் ஏதோ ஒன்று வரைந்தபின் அதனை அப்பால் மறைத்துவைத்து, ஏதேனும் ஒரு பூவை நினைத்துச் சொல்லும்படி எம்மைக் கேட்டார்; அங்ஙனமே ஒரு பூவின் பெயரை யாம் சொல்ல (சொன்ன அப்பூவின் பெயர் இப்போது நினைவில் இல்லை), உடனே அவர் தாம்எழுதிய அக்கற்பலகையை யெடுத்துக்காட்ட, அதன்கண் முன்னமே அப்பூவின் பெயர் அவரால் வரைந்து வைக்கப்பட்டிருத்தல் கண்டு வியப்புற்றேம். இங்ஙனமே அவர் தொடர்பாகப் பல பொருட் பெயர்களை முன்னெழுதிப் பின் ஒவ்வொன்றாக எம்மை நினைத்துச் சொல்லும்படி கேட்க, யாம் சொன்னவையெல்லாம் பிசகாமல் முன்னமே அவரால் வரைந்து வைக்கப்பட்டிருந்தன.
இங்ஙனமாக நனவிலேயே ஒருவர் உறுத்து நினைத்த நினைவின்படியே நினைக்கப்பட்டவரும் நனவின்கண் நினைத்தலும், உறுத்து நினைந்த பொருள்களின் உருவங்கள் நினைக்கப்பட்டவரின் கட்புலனெதிரே நனவின்கண் விளங்கித் தோன்றுதலும் ஆங்காங்கு உண்மையாக நிகழ்ந்து வருதலை எண்ணிப்பார்க்குங்கால், மந்திரகாரரிற் சிலர் தமக்குப் பகைவராயினார் வேறு சிலர்க்கு ஏவல் பில்லி வைத்து அவரைத் துன்புறுத்துவதெல்லாம் பெரும்பாலும் அவர் தம் நினை வாற்றலினாலேயே விளைவிக்கப்படுகின்ற தென்னும் உண்மை நன்கு விளங்காநிற்கும். அம்மந்திரகாரர் பேய்களை ஏவி விட்டு அவ்வாறு செய்விக்கின்றனரென்பது முற்றுமே உண்மையன்று. அவர் கனவினும் நனவினும் உறுத்து நினைந்த தீய நினைவு களின் தீய வடிவங்களே, அவர்க்குப் பகையாயினார்க்குப் பேய் வடிவங்களாகக் காணப்படுகின்றன. மந்திரகாரர் தாம் துன்புறுத்துதற்கு முனைந்த பிறர் அம்மந்திரகாரரினும் ஆற்றல் மிக்க மனவொருமை யுடையராய், அவர் ஏவிய அவ்வடிவங் களைத் திரும்பிச்செல்லுமாறு தாமும் உறுத்து நினைப்பராயின், அத் தீய வடிவங்கள் அவரை வருத்தாவாய்த் திரும்பிச்செல்லும். இங்ஙனந் தமக்குப் பகையான மந்திரகாரர் சிலர் தமக்குத் தீங்கிழைத்தலை எம்மிடஞ்சொல்லி முறையிட்ட அன்பர் சிலர்க்கு, யாம் இவ்விவ்வாறு செய்க! என்று கற்பித்தே மாக, அவர் அவ்வாறே செய்ய, உடனே அத்தீயவடிவங்களின் தீய செயல் ஒழிந்து போயதென்று சொல்லக் கேட்டேம். இவ்வியல்புகளை மனிதவசியம் என்னும் எமது நூலின்கண் விரித்து விளக்கியிருக்கின் றேமாகலின், மீண்டும் அவைகளை இங்ஙனமாகப் பேரிடரில் அகப்பட்டாரது நினைவு அவரது கனவின்கண் மிக்க சுருசுருப்புடையதாய் இயங்கிக் கனவிலும் நனவிலும் உள்ளார்க்குத் தன்னை யுடையாரது நிலைமையினை அறிவித்தல் போலவே நனவிலே உறுத்து நினைப்பாரது நினைவுங்கனவிலும் நனவிலும் உள்ளார் பிறர்க்குந் தன்னைப் புலனாக்குதல் காண்க.
இன்னும், அன்புடையார் இருவரில் ஒருவர்க்கு நேரும் இடம் உடனே மற்றவர்க்குங் கனவின்கட் டோன்றுதலைக் காட்டும் இரண்டு உண்மை வரலாறுகளை ஈண்டெடுத்துக் காட்டுதும்:
என் தந்தையார்க்கும் எனக்கும் மிகுதியான அன்பு உண்டு. ஒரு நாட் பகல் கடுமையான வேலைகளைச் செய்து விட்டு இரவு எட்டு மணிக்கு வீட்டுக்குப் போய், உடனே உணவுகொண்டு, களைப்பினால் உடனே உறங்கச் சென்றேன். என்தலை தலையணைமேற்பட்டதும் மிக அயர்ந்த துயிலிற் சென்றேன்: என் மனைவி படுக்கை யண்டை வந்ததுகூட எனக்குத் தெரியாது. அவ்வாழ்ந்த துயிலின் கண் என் தந்தையார் ஒரு படிக்கட்டின் உயரத்திலிருந்து வழுக்கிக் கீழே விழக் கண்டேன். கண்டதும், அவரை விழாமற் பிடித்துக் கொள்வதற்காக என்படுக்கைக் காலண்டை பதைத்துக் குதித்தேன். அங்ஙனங் குதித்ததாற் பெரியதோர் ஓசை உண்டாயிற்று. என் மனைவி உடனே விழித்துக்கொண்டு யாது குறும்பு செய்கிறீர் என்று வினாவினாள். யான் விளக்கேற்றி எனது கைக் கடிகாரத்தை நோக்கினேன். மணி இரண்டேகால் ஆயிற்று. யான் கனவிற் கண்டதை அவட்கு எடுத்து மொழிந்தேன். அவள் அதனை நகையாடி விடும்படி என்னைத் தூண்டினாள்; ஆனால், அது கூடவில்லை. அதன்பின் அவ்விரவில் யான் தூங்கவேயில்லை. என் தந்தையார் கீழ்விழுந்து காயம் அடைந்திருக்க வேண்டுமென்னும் எண்ணம் அழுத்தமாக என்னுள்ளத்திற் பதிந்து விட்டமையால், யான் திரும்பப் படுக்கை யண்டை செல்லாமல், எப்போது விடியும், விடியும் என்று பதைப்புடன் காத்திருந்தேன். பகலவன் கிழக்கே எழக் கண்டதும், யான் பட்டினத்திற்குப் போய்க் கம்பிச் செய்தி விடுத்து, அவரது நலத்தைப்பற்றிக் கேட்டேன். அதற்கு யான் பெற்ற விடையில், என் தந்தையார் படிக்கட்டின் மேலிருந்து விழுந்து கடுங்காயம் அடைந்த நிகழ்ச்சி, யான் கனவிற் கண்டவாறே அதேநேரத்தில் நேர்ந்தமை குறிக்கப்பட்டிருத்தல் கண்டு உளந் துடித்தேன். எனக்கு நெடுந்தொலைவிலிருந்த என் தந்தையார் கீழ் விழுந்தமை எனக்குத் தோன்றலாயது எங்ஙனமென்று எண்ணிப்பார்த்தும் யான் அதனை யறியக்கூட வில்லை யென்று அக்கனவுகண்ட துரைமகன் வான நூலாசிரியர் ஒருவர்க்கு எழுதியிருக்கின்றார்.
இன்னும், ஒருகால் வேறொரு துரைமகன் தான் பார்த்து வந்த அலுவலை ஒருநொடி நேரத்தில் விட்டு விலக வேண்டுமென்று அறிக்கை வந்தது. அப்போது அவர் தம்மனைவியார் அவர் இருந்த இடத்திற்கு அறுபது கல்தொலைவிலுள்ளதொரு நாட்டுப் புறத்தில் தங்கியிருந்தார். அத்துரைமகனார் தாம் இங்கிலாந்திற்குப் போம் வழியிற் பேரூது என்னும் ஊர்க்கும் போக வேண்டியவரானார். ஆதலால் அவர் தாம் போகும் அவ்விடத்திற்கு உடனே தம் பின்னே வந்துசேரும்படி தம் மனைவியார்க்கு ஒரு கடிதம் வரைந்து போக்கிவிட்டுத், தாம் அவ்வூர்க்குச் சென்றார்.
ஈதிங்ஙனமிருக்க, நாட்டுப் புறத்திலிருந்த அவர்தம் மனைவியார் தம்கணவர் தமக்குக் கடிதம் எழுதிய அதே நாள் இரவில் வழக்கம் போற் படுக்கைக்குச் சென்றார். சென்று ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கையில், எவரோ தம்மைப் பிடித்திழுக்கக் கனவுகண்டு விழித்தெழுந்து படுக்கைமேல் உட்கார்ந்தனர். அப்போது அவ்வம்மையாரது செவியினுள் நீ ஏன் அங்கே படுத்திருக்கின்றாய்? நின் கணவன் நின்னை வரவேண்டு கின்றான்; எழுந்து அவன்பாற் செல்! என்னும் ஒலி குசுகுசு வென்று நுழைந்தது. ஆயினும், அந்த அம்மையார் மறுபடியும் படுத்து உறங்க முயன்றார்; ஆனால், திரும்பத்திரும்ப அதே ஒலி மூன்று முறை தமது காதினுள் வந்தொலிக்கக் கேட்டு, அவர் பெரிதும் அச்சங்கொள்ள, அதனால் அவரது நெற்றியில் வியர்வை பெருந்துளிகளாகத் தோன்றலாயின, அப்போது அவரது அண்டையிற் படுத்திருந்த ஏவற்காரி துயில் கலைந்து அம்மா! நீங்கள் நடந்து கொண்டும் பேசிக் கொண்டுமா இருக்கின்றீர்கள்? எனவினவினாள். அதற்கு இல்லை, வேறு யாரோ அப்படிச் செய்கிறார், நீயா? என்று அவ்வம்மையார் எதிர் வினவினார். இல்லையம்மா, யான் படுக்கையை விட்டு அசையவில்லை; ஆனால், நீங்கள் எவருடனோ பேசுகின்றீர் களே என்று ஏவற்காரி மொழிந்தாள். அச்சொற்கேட்டபின், இதில் ஏதோ உண்மையிருக்கவேண்டு மென்னும் நம்பிக்கை வரப்பெற்றவராகி அந்த அம்மை படுக்கையை விட்டுக் கீழே குதித்துத், தமது குதிரைக்குச் சேணம் இட்டுக் கொணரச் சொன்னார். அவ்வீட்டிலிருந்தவர் ஒவ்வொருவரும் அவ் வம்மைக்கு மூளை பிசகிப் போனதென்று கரைந்து, அவரை மறுபடியும் தூங்கவைக்க முயன்றனர். ஆனால், அவ்வம்மை அதற்கு அடங்காராய்க் குதிரை மீது இவர்ந்து, பாறைகளின் மீதுஞ் சதுப்பு நிலங்களின் ஊடும் அதனை விரைவாய் ஊர்ந்து வந்து வண்டிப்பேட்டையைச் சேர்ந்தார். அப்போதுதான் ஒரு நல்ல குதிரைவண்டி புறப்படத் தொடங்கியது. கடவுளும் அவர் பக்கமிருந்தார். வியர்க்க விறுவிறுக்கச் சேறும் புழுதியும் படிந்த உடையுடன் அவ்வம்மை வருதலைக் கண்ட அவ்வண்டிக் காரன், அவர் கைக்குறி காட்டியதைக் கண்டு வண்டியை நிறுத்தி அவ்வம்மையை அதனுள்ளே ஏற்றிக்கொண்டு அதனைக் கடுக ஓட்டிச்சென்றான். அதனால் அவ்வம்மையார் தம் கணவன் ஏறிச்செல்ல வேண்டிய கப்பல் பேரூது நகரை விட்டுப் புறப்படுதற்கு ஒரு நாள் முன்னாடியே அவர்பாற் போய்ச் சேர்ந்தனர். அங்ஙனஞ் சேர்ந்தமையினாலே தான், தங் கணவனுடைய ஏற்பாடுகளை, இங்கிலாந்துக்குப் புறப்படும் முன்னரே, கலந்துபேசி ஒழுங்குசெய்யக் கூடியவரானார்.
பார்மின்கள்! இந்நிகழ்ச்சியிற் போந்த துரைமகனார் தமக்குத் திடீரென வந்த கட்டளையால் தாம் இருக்குமிடத்தைச் சடுதியில் விட்டு நீங்குமாறு நேர்ந்த கட்டாயத்தையுந், தம்மனைவியார் தம்முடன் இன்றி நெடுந்தொலைவில் அப்போது இருந்தமையால் அவர் எப்படி உடனழைத்துச் செல்வதென்ப தையும் நினைந்து மனம் வருந்தித் தம் மனைவிக்குக் கடிதம் எழுதியக்கால், அந்நேரத்தில் ஒருமுகப்பட்டு நின்ற அவரது உணர்வானது தொலைவிலிருந்த அவர் தம் மனைவியார்க்குக் கனவிலும் நனவிலுந் தோன்றி அவ்வம்மையாரைத் தங் கணவன்பால் உடனே புறப்பட்டு வரும்படி செய்தது.
இனி, முன்னொருகால் அன்பினால் உருகி ஒன்றுபட்ட நேய உள்ளம் உடையரான நண்பர் இருவர், பின்னொரு கால் நேர்ந்த பிழையால் ஒருவரை யொருவர் வெறுத்துப் பிரிந்து போதலை ஆங்காங்குக் காண்கின்றோம். அங்ஙனம் அவர் பிரிந்து போயினும், அவரிருவருள்ளமுந் தூயவாயிருப்பின், அவரது பழைய நேய உணர்ச்சி அவ்விருவர்க்குங் கனவின்கட் டோன்றி, அவரை மீண்டும் ஒருங்குகூட்டி அளவளாவச் செய்தலும் ஒரோவழி நிகழா நிற்கின்றது. இதனை மெய்ப்படுத்தும் ஓர் உண்மை வரலாற்றினை ஈண்டு எடுத்துக் காட்டுதும். கிறித்துவருலகு என்னும் வெளியீட்டுக்கு ஒருவர் எழுதியது வருமாறு:
நாற்பது ஆண்டுகளாக எனக்கு நண்பராயிருக்கும் ஒருவர் அமெரிக்க தேயத்தில் இருக்கின்றார். பதினான்கு ஆண்டுகளுக்குமுன் நேர்ந்த ஒரு பிசகால் எமக்குள் மனவேற்றுமையுண்டாகக் கடிதப்போக்கு வரவு அடியொடு நின்று போயின. அங்ஙனமிருக்க 1898 ஆம் ஆண்டு நவம்பர்த்திங்களில் ஒரு நாளிரவு மிகவும் தெளிவான ஒரு கனாக் கண்டேன். எனக்கு ஐயாயிரமைல் தொலைவானதோர் இடத்திலிருந்த என் பழைய நேயரைப்பற்றி அப்போது யான் நினைவுகூர்தற்கு ஏதொரு காரணமும் இல்லாதிருந்தும், அவர் பழமைபோல் எனக்கெதிரே வந்துநின்று, ஏதோ முன்னுண்டான ஒரு பிசகால் தமக்குள் நேர்ந்த பிரிவினைக்காகத் தாம் பெருந்துயர் கூர்வதாற், போனது போக இனிமேல் நாம் முன்போல் அன்பாயிருத்தலே செயற்பாலதென ஆற்றாமையோடு மொழியக் கேட்டு, அவரும் யானும் மீண்டும் ஒருமித்து அளவளாவுவதாக எனது கனவிற் கண்டேன். கண்டு விழித்துப்பார்க்க அஃதொரு வெறுங்கனவாதல் தெரிந்து ஏமாந்தேன்.
ஆனால், இரண்டு கிழமைகள் கழித்து, அதே நண்பரிடமிருந்து எனக்கு வந்த கடிதம் பெரியதோர் இறும்பூதினை விளைவித்தது. அக்கடிதத்தில் அவர், யான் நும்மைப்பற்றி ஒரு வியப்பான கனவுகண்டேன். பதினான்கு ஆண்டுகளுக்குமுன் நீர் என்னிடம் எவ்வளவு அன்புடன் அளவளாவினீரோ அவ்வளவு அன்புடன் அளவளாவிப், போனதுபோக வென்று அதிற் கூறக்கண்டேன். அதன் கருத்து இன்னதென அறிந்திலேனாயினும், நும்மைக் காணும்பொருட்டே இங்கிலாந்திற்குப் புறப்படு
கின்றேன். யான் கனவிற் கண்டபடியே நிறைவேறுமென நம்புகின்றேன் எனவரைந்திருந்தனர். அதன்படியே அவர் என்பால் வர, அவரும் யானும் எமது கனவைப் பற்றி ஒருவர்க்கொருவர் சொல்லிக் கொண்டோம். யாங்கள் குறித்துவைத்திருந்த குறிப்புகளை ஒத்திட்டுப் பார்க்கையில், அக்கனாக்கள் இரண்டும் ஒரே தன்மையவாய்மட்டும் இன்றி ஒரே நேரத்தில் இருவருக்குந் தோன்றினவைகளாகவும் இருத்தல் அறிந்தேம் என்பது.
இனித், தீராக் கொடுநோய் கொண்டு வருந்துவார் சிலர்க்கு அது தீர்க்கும் மருந்து கனவின்கண் அறிவிக்கப் படுதலும், ஆங்காங்கு நிகழாநிற்கின்றது. இங்ஙனம் நிகழும் அறிவிப்பு, நோய் கொண்டாரின் அறிவு கனவுடம்பின்கண் ஒரோவழி மாசு நீங்கி விளங்குதலால் அது தன்னினின்றே புலனாகின்றதோ, அன்றி ஆவி வடிவின் கண் உலவும் நல்லோரே இரக்கம் மிகுதியால் அந்நோய் கொண்டாரது கனவிற்றோன்றி அது தீர்க்கும் மருந்தை அறிவித்துச் செல்கின்றனரோ, அன்றி நோயாளிக்கு உறவினராய் உள்ளார் அவர் படுந்துயரை நினைந்து அதனைத் தீர்த்தற்குரிய மருந்தினை ஆராயும் நல்லறிவே அந் நோயாளியின் கனவின்கட் டோன்றி அதனை யொழிக்கும் வழி காட்டுகின்றதோ, அம் மூன்றில் இது தான் உறுதியென்று தீர்மானித்தல் இயலாததா யிருக்கின்றது. என்றாலும் இத்தகையதோர் அறிவிப்பு நோயாளியின் கனவின்கட் டோன்றுதலும், அவ்வறிவிப்பின் படியே செய்ய அவர்க்கு அந்நோய் நீங்குதலும் மறுக்க ஏலாத உண்மை நிகழ்ச்சிகளாய் ஆங்காங்குக் காணப்படுகின்றன. உடல்நலத் தூதுவன் என்னும் வெளியீட்டின் ஆசிரியரும் புகழ்பெற்ற அமெரிக்க மருத்துவருமான ஹால்புரூக் என்பவர் தமக்கு வந்த கொடியதோர் இருமல் நோய் தீர்ந்த வரலாற்றினைப் பின்வருமாறு எழுதி அறிவித்திருக்கின்றார்:
1870 ஆம் ஆண்டு இளவேனிற் காலத்தில் யான் மிகக் கொடியதோர் இருமல்நோயாற் பற்றப்பட்டேன். ஒவ்வொரு கார்காலத்தும் இளவேனிற்காலத்தும் அந்நோய் என்னைத் தொடர்ந்து பற்றிப் பல்லாண்டுகள் துன்புறுத்திவந்தமையால் அது நாட்பட்ட நோயாய் வேரூன்றி விடுமோ வெனவும் அதுவே எனதுயிர்க்கு இறுதியாய் முடியுமோ வெனவும் பெரிதும் உளங் கலங்கினேன். அப்போது யான் இளைஞனாய் இருந்தமையாலும், நீண்ட காலங் கைக்கொண்டு ஓழுகத்தக்கதொரு தொழிலை அப்பொழுதுதான் யான் மேற்கொண்டமையாலும், எனது வருங்கால நிலையினைத் தெரிந்து மிகவுஞ் சோர்வடைந்தேன். இவ்வாறு சோர்வுகொண்ட நிலையில் ஒருகால் உறக்கங் கொண்டேன்; ஆனாலும், அஃது ஆழ்ந்த துயில் அன்று; அப்போது, பிற் சொல்லப்படும் மகிழ்ச்சியானது இன்னும் என் மனத்தைவிட்டுஅகலாத படியாய்த் தோன்றலாயிற்று. இருபஃது ஆண்டுகளுக்கு முன்னாக இறந்துபட்டமையால், ஏறக்குறைய எனது நினைவைவிட்டு நீங்கிப்போன என் உடன்பிறந்தாள், எனது படுக்கையண்டை வந்து நின்று, நின் உடல் நலத்தைப்பற்றி நீ கவலைப்படாதே; யாம் அந்நோயை நினக்குத் தீர்க்க வந்திருக்கின்றோம்; இன்னும் நீ உலகத்திற் செய்யவேண்டுவது மிகுதியாய் உள்ளது, எனக் கூறினள். அவ்வாறு கூறிய பின் அவள் மறைந்துபோயினள். ஒரு மின்னற் பொறி (Electric Battery) யிலிருந்து தோன்றிய மின்னாற்றல் எனது மூளையினூடுருவி நிறைந்தாலென எனக்கு ஓர் உணர்ச்சி தோன்றியது; ஆனாலும், அஃது எனக்குத் துன்பமாயில்லாமல் இன்பமாகவே காணப் பட்டது. அவ்வாறு திடுமெனத் தோன்றிய அம்மின்னாற்றல், மூளையிலிருந்து கீழ் இறங்கிப் பரவலாயிற்று; என்னுடைய நெஞ்சிலும் மூச்சுப்பையிலும் அது மிக்க வலிவுடன் நிரம்பி நிற்றலுணர்ந்தேன். பின்னர் அங்கிருந்து அது கைகால் முனைகள் வரையிற் பரவவும். அம்முனைகளில் அஃது இனிதாய்ச் சுடர்ந்து எரியவுங் கண்டேன். உடனே யான் அத்துயில் நீங்கி விழித்தேன்; விழித்ததும் யான் முழுநலம் பெற்றிருத்தல் அறிந்தேன். அதுமுதல் அந்நோய் எனக்குத் திரும்ப வந்ததேயில்லை. என் உடன் பிறந்தாளின் உருவம் அத்துணைத் தெளிவாக எனக்குத் தோன்றாவிட்டாலும், அவளது குரலொலி மட்டும் மிகவுந் தெளிவாய்க் கேட்டது. இதற்கு முன்னும் பின்னும் இத்தகைய தொரு நிகழ்ச்சி எனக்குத் தோன்றியதே யில்லை, என்பது.
இனி, இத்தகைய நிகழ்ச்சிகள் எமது வாழ்நாளிற் சில முறை எம்பால் நேர்ந்தனவேனும், அவற்றுள் இரண்டு இன்னும் எமது உளத்தை விட்டகலாமல் மிகவுந் தெளிவாகப் பதிந்திருத்தலால், அவையிற்றில் ஒன்றை இங்கே எடுத்துக்காட்டுகின்றனம்:
யாம் எழுதும் நூல் ஒவ்வொன்றும் பன்னாளும் பல முறையும் ஆய்ந்தாய்ந்து எழுதப்படுவது. யாம் எழுதுவன எமதுளத்திற்கு இனிமைதரும் வரையில், எமதறிவிற்குப் பொருத்தமாகக் காணப்படும்வரையில் அவற்றைப் பன்முறையும் நினைந்து நினைந்து வரையாமல் மெல்லென எழுதலே எமக்கு வேரூன்றிய இயற்கையாய் விட்டது. அதனால், யாம் எழுதும் நூல்களை யாமே எமது செலவிற் பதிப்பிட்டு வெளியிடுவ தன்றிப், பிறர் அவ்வாறு செய்தற்கு அவற்றைக் கொடுப்ப தில்லை. என்றாலும், எம்மை இருகாற் கொழும்புமா நகர்க்கு வருவித்து எமது தமிழ்த் தொண்டிற்கு உதவிபல ஆற்றிய அன்பர் சிலருள் ஒருவரின் அக்கால மனநிலையினை வியந்து, அவர்க்குக் கைம்மாறொன்று செய்ய விழைந்து, யாம் எழுதிய திருவாசக விரிவுரையினை அவர் வெளியிடக் கொடுத்தேம். அவர் அதற்காக எமக்குப் பொருளுதவியுஞ் செய்து வந்தாரெனினும், யாம் திருவாசகச் செய்யுட்களை ஆழ்ந்தாராய்ந் தெழுதிக் கொடுத்து வருகையில், உரையினை விரைந்தெழுதித் தருமாறு இடை யிடையே எம்மை அவர் வன்சொற்களால் நெருக்கி வந்தனர். இரவில் ஒன்பது மணிக்குமேற் கண்விழித்திருந்து ஏதும் எழுதுதல் செய்யாத யாம், அவர்தம் வன்சொற்களைப் பொறுக்க ஏலாமல், தொடர்பாகச் சிலநாட் பதினொருமணி வரையிற் கண்விழித்திருந்து அதனை எழுதி வரலாயினேம். அவ்வாறு செய்துவரவே, எமது மூளையிற் சூடேறி மயக்கம் மிகுந்தது; உண்ட சிறிதுணவுஞ் செரியாமற் கக்கலாயிற்று; உடம்பெங்குங் காய்ச்சலும் உண்டாயிற்று; இருப்பில் இருந்தால் தாங்க முடியாத மண்டைக் கிறுகிறுப்பு வந்தது; அதனாற் படுக்கையிலேயே கிடக்கலாயினேம்; இங்ஙனம் துன்புற்றுக் கொண்டு வந்த சில நாட்களிலெல்லாம் எமது கீழ்வயிற்றின் வலப்பக்கத்தினுள்ளே ஒரு குடகு நாரத்தம் பழ அளவினதான ஒரு கழலைக்கட்டி யுண்டாயிற்று. அக் கட்டியுண்டானபின், எமதுடம்பில் விடாக்காய்ச்சல் வீசியது; படுக்கையிற் பிறருதவியின்றி அப்புறம் இப்புறம் புரள்வதும் எழுந்திருப்பதும் இயலாவாயின. வரவர உடம்பும் மெலிந்தது. வந்தநோய் மிகுந்து வருதலன்றிச் சிறிதும் தணிந்திலாமையின், எமக்கு அந் நோய் தீர்க்க அன்பினால் வந்துதவிய வல்ல மருத்துவர்கள் உளங்கலங்கினர். எமக்கும் உயிர்வாழ்க்கையில் நம்பிக்கை யற்றது என்றாலும், எமதுளத்திற் கலக்கம்மட்டும் உண்டாக வில்லை. அஃது ஏதுகாரணத்தாலோ இப்போது அதனை அறிதல் இயலவில்லை. இத்துணையற்ற நிலைமையில், எமக்கு இந்த நில உலக வாழ்வு இன்று ஒழியுமோ! நாளை யொழியுமோ! என்று எதிர்பார்த்திருக்குங் காலத்தில், ஒரு நாள் இரவு விடிவதற்கு இரண்டு மணிநேரத்திற்கு முன்னே எமக்கு ஒரு தோற்றம் உண்டாயிற்று. அது கனவு நிலையோ, நனவு நிலையோ இன்னதென்று துணிந்து சொல்லல் கூடவில்லை. எம்மைச்சூழ ஒரு பேரிருள் தோன்றியது. அவ்விருளில் எவரோ சிலர் உலவும் அரவந்தென்பட்டது. அவ்விருளையும் அதன்கண் உலவுவாரது அரவத்தையுங் கண்டு கேட்ட எமதுள்ளம் பெரிது நடுங்கியது. அந்நடுக்கம் உண்டான சிறிது நேரத்திலெல்லாம், அப் பேர் இருளின்கண் எம்மைச் சூழப் பளபளப்பான ஒர் ஒளி தோன்றியது. உடனே, பார்ப்பதற்கு இனிய முனிவரையொத்த மிக வெண்மையான ஓர் ஆங்கிலத் துரைமகனாரது திருவுருவம் எமதருகே கையில் ஒரு கண்ணாடி விளக்கைப் பிடித்துக் கொண்டு வந்துது, அத் துரை மகனாரது திருவுருவத்தைக் காண்டலும் எமதுளத்தே யிருந்த நடுக்கம் முற்றும் ஒழிந்துபோக, யாம் முன்னறியாத ஒரு மகிழ்ச்சியும் இன்ப உணர்வும் வரப்பெற்றேம். அவரது உருவத்தினுயரஞ் சிறிது குள்ளமா யிருந்தது; அவரது யாக்கை திண்ணியது; தலைமேற் குறுகிய மயிரும் மோவாயில் நீண்ட தாடி மயிரும் நரைத்து வெண்மையாகத் தோன்றின; சிறிதேறக்குறைய எழுபத்தைந்து அல்லது எண்பது ஆண்டிற்கு மேற்பட்டவராகக் காணப்பட்டனர்; மிக வெண்மையான நிறமுடையராய் ஆங்கில மக்களைப் போலவே மேலுங் கீழும் வெள்ளிய சட்டை யணி திருந்தனர்; இருந்தவாற்றால், திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த போப்புத்துரை யவர்களின் வடிவத்தையே அவர் ஒத்திருந்தனர். இங்ஙனந் தோன்றிய அத் துரைமகனார் தமது கையிற் பிடித்திருந்த கண்ணாடி விளக்குடன் எம்மைச் சுற்றிச்சுற்றி நடந்து, @@எமக்குச் சிறிது தொலைவிற் சூழத்தோன்றிய அப் பேர் இருளில் இயங்கின சிலரைக் கடிந்து பேசினார்; இவரால் இவ்வுலகிற்கு எவ்வளவோ நன்மை விளையவேண்டி யிருக்கின்றது. ஆதலால் நீங்கள் இவரை அணுகாமல் ஓடிப்போங்கள் ! என்று தமிழிற்பேசி அவர்களைத் துரத்தினார். அவ்வளவில் யாம் திடுமென விழித்துக் கொண்டேம். விழித்த சிறிது நேரத்திலெல்லாம் பொழுது விடிந்தது. எமதுடம்பிற் காய்ச்சலும் இல்லை; அடிவயிற்றின் வலதுபுறத் திருந்தகழலைக் கட்டியையுங் காணாம். அன்று எம்மை வந்து கண்ட மருத்துவரும் பிறருமெல்லாம் அத்துணை விரைவில் அக்கொடு நோய் நீங்கியது கண்டு மிக்கதோர் இறும்பூ தெய்தினர்.
அவ்விரவில் எம்பால் அங்ஙனம் வந்து நோய் தீர்த்த அப்புனித உருவம் நமது அருமைத் திருவாசகத் தமிழ் மாமறையில் அளவிறந்த அன்புவைத்திருந்த போப்புத் துரையவர்களின் ஆவி வடிவாயிருக்கலாமோ, அல்லது மேலுலகத்தில் வைகும் அத்துரைமகனாரின் நல்லெண்ணமே அவரதுருவத்தினைத் தோற்றுவித்து எமக்கு வந்த அப் பேரிடரை நீக்கியதோ இன்னது தான் என்றுரைத்தல் இயலாது. யாம் அப்போது திருவாசக விரிவுரையெழுதி வந்தமையால், அதற்கு இடையூறு நேரலாகாதென்று நினைந்தே, திருவாசகத்தை யெண்ணி யெண்ணி யுருகிய போப்புத் துரையவர்களே அங்ஙனம் வந்து எமக்கு நோய் தீர்த்தாராகல் வேண்டு மென்பதே எமது முடிபு. வந்த அவ்வாங்கிலத் துரைமகனார் தமக்குரிய ஆங்கில மொழியிற் பேசாது, செந்தமிழிற் பேசி, எம்மைச் சூழ்ந்த இருளில் உலாய தீய ஆவிகளைத் துரத்தியதும் யாங்கொண்ட முடிபினையே வலுப்படுத்துகின்றது. இங்ஙனமே பின்னரொருகாலும் யாங் கடுங்காய்ச்சல் நோயால் துன்புற்ற வழிப் பருத்துயர்ந்த கருமேனியும் மழித்த தலையும் அருட்பார்வையும் உடைய ஒரு துறவியின் உருவம் எமது கனவின்கட்டோன்றி எமக்கு அந்நோய் தீர்த்தருளியது.
இத்தகைய கனா நிகழ்ச்சிகள் எமது வாழ்நாளில் மிக அரியவாய்ச் சில முறைகளே தோன்றின. ஏனைக்கனா நிகழ்ச்சிகள் பெரும்பாலும் எமது நினைவுக்கு வருவதில்லை. மேலெடுத்துக் காட்டியவைபோன்ற சிற்சிலவே இப்போது எம் மனக்கண்ணெதிரே தோன்றா நிற்கின்றன.
இன்னும், பிராலின் ஆகடு மூலர் எனப் பெயரிய ஒரு மாதரார் தமது நினைவின் ஒருமையால் வேறொருமாதர்க்குக் கனவின்கட் சென்று நோய்தீர்த்த வரலாற்றினையும் இங்கே எடுத்துக் காட்டுவாம்: இம்மாதரார் இருந்தாற் போலிருந்து திடுமென அறிதுயிலிற் செல்லும் இயற்கை வாய்ந்தவர். இவர் அங்ஙனம் அறிதுயிலிற் சென்றிருக்குங்கால் தம்முடம் பிலுள்ள நோய்களையும் பிறருடம்பிலுள்ள நோய்களையுந் தெளிவாய் எடுத்துக் கூறியதோடு அந்நோய் தீர்க்கும் எளிய இயற்கை முறைகளையும் நன்கு விளக்கிச் சொல்வர். அவை மட்டுமே யன்றிப், பிறருள்ளத்தில் உள்ள எண்ணங்களையும் அவர் தம் நடக்கைகளையுங்கூட வெளிப்படச் சொல்வர். தொலைவில் வியன்னா நகரத்திலுள்ள தம் உடன் பிறந்தானுக்குத் தம துருவத்தைத் தாம் தோற்றுவித்தல் கூடு மென்றும் உரைப்பர். தம்முடைய கண்களை இறுகக் கட்டிவிட்டாலும் அவர் நாடகசாலைச் சீட்டுகளையும் இசைநூலிலுள்ள பாட்டுகளையுந் கண்ணாற் பார்த்துப் படிப்பதுபோற் படித்துச் சொல்வர். இவர்க்கு நேயரான ஒரு மருத்துவ ஆசிரியர் ஒருகால் இம்மாதரை நோக்கித், தமது குடும்பத்திற் சில நாட்களுக்கு முன் நிகழ்ந்தது யாதென்று வினவ, உடனே அவ்வம்மையார், பதினைந்து கல்தொலைவிலுள்ள ஒரு பட்டினத்தில் உங்கள் மாமனார் இறந்துபட்டார் என நுவன்றார்; அஃதுண்மை யாகவே இருந்தது.
இத்தகைய ஆகடு மாதரார்க்கு நண்பரான மற்றொரு மங்கையார் தாம் அப்போது பல்வலியாற் பெரிதும் வருந்திக் கொண்டிருந்ததால், அடுத்த நாள் வழக்கம் போல் அவரை வந்து பார்த்தல் இயலாதெனக் கூறினார்; அப்படியாயின் யான் இன்றிரவு நுங்களைவந்து காண்பேன் எனப் புகன்றார். புகன்றபடியே, தம் நண்பரான மங்கையார் பல்வலியால் துன்புற்றுப் படுத்திருக்கும் அவ்வறைக்குள் அம்மாதரின் உருவம் இராப்பொழுதிற்குரிய உடையணிந்த வண்ணமாய்த் தோன்றி, அம்மங்கை யாருடன் பக்கத்திற் படுத்துக்கிடந்தது. காலையிற் கண்விழித்த அம்மங்கையார் தமக்கிருந்த பல்வலி முற்றுமே நீங்கிப்போகக்கண்டு பெரிதும் வியப்படைந்தார். ஆகடு அம்மையார் தமது இல்லத்தின்கண் தமது படுக்கையை விட்டு அகலாதிருந்தும், அவர் எங்ஙனந் தமது இல்லத்திற்புகுந்து தம்முடன் படுத்திருந்தார்? என்பதை நினைந்து அம்மங்கை யார் அடைந்த வியப்பினுக்கு ஓர் அளவே யில்லை.
இனி, நனவுணர்வினால் எவ்வாற்றானும் அறிந்து கொள்ளல் இயலாத கல்விப் பொருள்கள் சில கனவின் கண் இனிதுவிளங்கித் தோன்றிய வரலாறுகளும் பல; அவற்றுட் சிலவற்றை இங்கெடுத்துக் காட்டுதும்:
பாபிலோனிய தேயத்தில் நிப்பூர் என்னும் நகரத்தின் கட் பல்லாயிர ஆண்டுகட்கு முன் அழிந்துபட்ட அரண்மனைகளிலே பண்டைநாள் அரசர்களாற் செதுக்கி வைக்கப்பட்ட கல்வெட்டுகளைக் கண்டுபிடித்து, அவற்றிற் சொல்லப்பட்ட குறிப்புகளைக் கொண்டு, அஞ்ஞான்றை அரசர்கள் அவர் கீழ் உயிர் வாழ்ந்த மக்களுடைய நாகரிக வரலாறுகளை யெல்லாம் ஆராய்ந்தெழுதுதற் பொருட்டு, அந்நகர்க்குச் சென்ற ஜெர்மன் ஆசிரியரான ஹில்பிரச் (Professor Hilpecht) என்பார் ஆண்டெடுத்த இரண்டு சிறு மோதிரத் துண்டுகளிற் செதுக்கப்பட்டிருந்த சொற்றொடர்களைக் கண்டறிதற்கு எவ்வளவோ முயன்றும், அம்முயற்சி அவர்க்குச் சிறிதும் பயன் தந்திலது. ஏனென்றாற், கண்டெடுத்த அச் சிறுதுண்டுகள் இரண்டும் ஒரே மோதிரத்தின் துண்டுகளாகக் காணப்படவில்லை. ஆகையால், இவற்றை எவ்வளவுதான் இணைத்துப் பார்த்தாலும், அவற்றின்கட் செதுக்கப்பட்ட சொற்கள் இணைந்து ஒருபொருள் தந்தில. நிப்பூரிலிருந்த பகலவன் கோயில் அழிந்து கிடக்கும் இடத்தை அகழ்ந்து தேடியதில், அவ்விரண்டு சிறுமோதிரத்துண்டுகளை யொத்தவை பின்னும் பன்னிரண்டு கிடைத்தன. அவற்றின் மேலெல்லாஞ் செதுக்கப்பட்ட எழுத்துகள் ஆப்புவடிவம் வாய்ந்திருந்தன. அவை செதுக்கப்பட்ட காலம், இற்றைக்கு 3000 ஆண்டுகளுக்கு முன்னே துவங்கி 3600 ஆண்டுகள் வரையிலாகும். இத்துண்டுகளையெல்லாம் பன்னாளும் பன் முறையும் அவர் இணைத் திணைத்துப் பார்த்தும், அவற்றின் பொருளைக் கண்டறிதற்கு எவ்வளவோ பாடுபட்டும், அது சிறிதுங் கைகூடவில்லை. பின்னர் ஒருநாள் நள்ளிரவு மட்டும் அவர் இவ்வுழைப்பிற் கருத்தை ஓயாமற் செலுத்திப் பார்த்தும் பயன் ஏதும் உண்டாகாமையால் மிகவும் அயர்வடைந்தவராய்ப் படுக்கையிற் சென்று ஆழ்ந்து துயில்கொள்ளலானார். அங்ஙனம் அவர் ஆழ்ந்து துயில்கையில், அந்த நிப்பூர்ப் பகலவன் கோட்டத்திற் பண்டைக்காலத்திற் குருக்களாயிருந்த ஒருவரின் உருவம் அவரது அகக்கண்ணெதிரே தோன்றியது. அவ்வுருவம் நீண்டு ஒல்லியாய், நாற்பதாண்டு அகவையினதாய்ப், பொதுவான உடையணிந்திருந்தது. இவ்வாறு தோன்றிய அவ்வுருவம், அக்கோயிலின் தென்கிழக்கில் உள்ள தாகிய களஞ்சிய அறைக்கு அவ்வாசிரியரை அழைத்துச் செல்வதாகக் காணப்பட்டது. அங்கே சென்றதுந், தாழ்ந்த மச்சுடையதாய்ச் சாளரம் ஏதும் இல்லாததாய்ச் சிறியதாய் அதனுள்ளிருந்த மற்றோரறைக்குள் அவ்வாசிரியரை அது கூட்டிச்சென்றது; அச் சிற்றறைக்குள் ஒரு பெரிய மரப்பெட்டியிருந்தது; நிலத்திலே ஒருவகை மணிக்கல் (agate) லின் துண்டுகளும் வைடூரியங்களும் இறைந்து கிடந்தன. அவ்வறைக் குட் சென்றதும் அவ்வுருவம் அவ்வாசிரியரை நோக்கி, 22, 26 ஆம் பக்கங்களில் நீர் தனித்தனியே வெளிப்படுத்தி யிருக்கின்ற இரண்டு துண்டுகளும் விரலில் அணியும் மோதிரங்கள் அல்ல, அவற்றின் வரலாறு இது: – கி.மு. 1300 இல் இருந்த அரசன் குறிகழுவென்பான், ஒருகாற் பகலவன் கோயிலுக்குத் தான் சேர்ப்பித்த ஏனை மணிக்கற்கள் வைடூரியங்களுடன், எழுத்து வெட்டிய ஒரு மணிக் கற்குழாயினையும் நேர்த்திக்கடனாகச் செலுத்தியிருந்தான். அதன்பிற் சடுதியிலே, நினிப்பு என்னுங் கடவுளின் திருவுருவத்திற்காக மணிக்கல்லிற் சமைத்த ஒரு சோடு காதணிகள் செய்யும்படி அரசனிடமிருந்து குருக்களாகிய எங்களுக்கு ஒரு கட்டளை வந்தது. அந்த நேரத்தில் எங்கள் கையில் மணிக்கல் ஏதும் இல்லாமையால் யாங்கள் பெருந்திகில் கொண்டோம். அரசனிட்ட கட்டளைப் படி செய்தற்கு அவன் செலுத்திவைத்த அம்மணிக்கற் குழாயை மூன்று கூறாக அறுத்து, மூன்று வளையங்கள் செய்வதைத் தவிர எங்களுக்குவேறு வழியில்லை. அக்குழாயின்மேற் செதுக்கப்பட்டிருந்த எழுத்துத்தொடர் அதனால் மூன்று கூறாக அறுந்து ஒவ்வொரு கூறும் ஒவ்வொரு வளையத்தின் கண் இருப்பதாயிற்று. முதலிரண்டு வளையங்களும் அக்கடவுளின் திருவுருவத்திற்குக் காதணி களாயின; நுமக்கு அத்தனை வருத்தத்தை விளைவித்த அத்துண்டுகளிரண்டும் அக்காதணி களின் பகுதிகளாகும், அவ்விரண்டையும் ஒன்று சேர்த்துப் பார்ப்பீரானால் என் சொல்லினுறுதி புலனாகும். ஆனால், மூன்றாம் வளையத்தை நீர் இதுகாறும் அகழ்ந்து பார்த்துங் கண்டெடுக்கவில்லை. அஃது ஒருகாலும் நுமக்கு அகப்படாது. என்று கூறிய அளவில் மறைந்துபோயது. உடனே அவ்வாசிரியர் விழித்தெழுந்து தாங் கண்ட அக்கனாவினைத் தம் மனைவியார்க்கு எடுத்துரைத்தார். அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை காலையில் அவ்விரண்டு துண்டுகளையும், தமக்குக் கனவிற் றோன்றிய குருக்கள் உருவம் மொழிந்த வண்ணமே ஒன்று சேர்த்துப் பார்க்க, அவை பெரிதும் வியக்கத் தக்கவகையாய் ஒருங்கு பொருந்திப், பகலவன் புதல்வரான நினிப்புக் கடவுளாகிய தன் பெருமானுக்கும் பகலவனின் பெருங்குருக்களான குறிகழுவென்பான் காணிக்கையாக அளித்தது இது வெனப் பொருள் பயந்தது.
பார்மின்கள்! இற்றைக்கு 3200 ஆண்டுகளுக்கு முன் அழிந்துபட்ட நிப்பூர்ப் பகலவன் கோட்டத்திலிருந்து அகழ்ந்தெடுத்த வளையத் துண்டுகளிற் செதுக்கப்பட்ட சொற்றொடர், நனவின்கண் எவ்வளவோ ஆராய்ந்து பார்த்தும் ஒரு சிறிதும் புலப்படாதுபோக, மற்று அது கனவின்கட்டோன்றி அறிவித்து குருக்களின் வாய்மொழியால் நன்கு புலனாயிற்று. மிக அரிய இவ்வுண்மை நிகழ்ச்சியினை நுணுகி ஆராய்ந்த ஐரோப்பிய ஆசிரியர்கள், அத்துண்டுகளை அகழ்ந்தெடுத்த ஹில்பிரச்சென்பார் நாணாளும் நனவின்கண் ஆராய்ந்து கொண்டு இடர்ப்பட்ட வராதலாலும், அக்கோயிற் சிற்றறையின் வரலாற்றினை மற்றோராசிரியர்பாற் கேட்டிருந்து அதனை மறந்துபோயினும் அவரது அவ்வாராய்ச்சி யறிவு கனவுடன்பின் கட்டெளிவு மிக வுடையதாய் அதனை நினைவுகூர்ந்து இயங்கினமையாலும், அவரது நுண்ணறிவே கனவின்கண் அச்சொற்றொடரை இணைக்கும் வழிகாட்டி, அதற்கு அக் கோயிற் குருவினுருவத்தையுந் தோற்றுவித்ததெனக் கூறா நிற்கின்றனர். அவர் கூறும் அவ்விளக்கம் எவ்வளவில் ஏற்றுக்கொள்ளற் பாலதென்பது அறிஞர்களே முடிவுகட்டற் பாலார். மூவாயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன் அப்பகலவன் கோட்டத்திலிருந்த ஒரு குருக்களின் உருவத்தையும், அவ்வுருவம் எடுத்துரைத்த உண்மைகளையும் எல்லாம், நனவின்கண் இடர்ப்பட்ட ஹில்பிரச் ஆசிரியரது நுண்ணுணர்வே கனவின்கட் கற்பித்துவிட்டன என்னும் உரை எமதுள்ளத்திற்குப் பொருத்தமுடையதாகக் காணப்படவில்லை. எமதறிவுக்குட் பட்ட மட்டிற், பண்டிருந்த அக்குருக்களின் உருவமும் அது மொழிந்த உண்மைகளும் அவ்வாசிரியரது நினைவே கற்பித்தன ஆகா. உயர்ந்தோர். செய்யும் அரிய அறிவுமுயற்சிகள் பயன்படாவாய்ப்போக, அவர் படும் பாட்டினைத் தொலைவில் நுண்ணுடம்பிலிருந்து அறியும் ஆன்றோரின் ஆவியோ, அல்லது அவரது நினைவோ, அங்ஙனம் இடர்ப்பட்டு வருந்தும் அறிஞர்க்குக் கனவின்கட் டோன்றி உண்மையை அறிவித்து அவர்தம் இடர்ப்பாட்டினை நீக்கிச் சொல்லநிற்கின்ற தென்பதே எமக்குப் பொருத்த முடையதாகத் தோன்றுகின்றது. அது நிற்க.
இன்னுஞ், சமயப்பொருள் விரிவுரைசெய்வதில் மிகச் சிறந்தவரான சமயகுரு ஒருவர் (spurgeoj) ஒருகால், ஒரு சிறப்பு நாளிற் செய்யவேண்டிய விரிவுரையொன்றனை எழுதுவதற்காகத் தமது கருத்தினை ஒருமுகப்படுத்தி அமர்ந்து அதனைச் செய்யப் புகுந்தார். ஆனால், அன்றைக்கு அவரால் அஃது அழகிதாக எழுதி முடிக்கப்படுதற்கு இடந்தராமற் பேரிடர் பயப்பதாயிற்று, எவ்வளவோ முயன்றும், அஃது ஓர் உருப்படாமையால் மனத்தளர்ச்சி யுடையராய் அது செய்வதை விட்டெழுந்தார்; என்றாலும் அவ்விரிவுரை யடுத்த நாளிற் செய்யப்பட வேண்டுவதாதலால், அதுபற்றி அவர் பெரிதும் மனங்கவன்று அயர்ச்சியாற் படுக்கையிற்கிடந்து உறங்கினார். அங்ஙனம் உறங்குகையில் அவர் நள்ளிரவிற் றிடுமென எழுந்து நின்று அவ்விரிவுரையினை மிக்க கிளர்ச்சியுடனும் உருக்கத்துடனும் ஒரு தொடர்பாக ஒழுங்காகப் பேசுவாரானார். அவர் அங்ஙனம் விரிவுரை நிகழ்த்தும் அரவங் கேட்டுத் துயிலொழிந்த அவர்தம் மனைவியார் அதனை அருகிருந்து கேட்டுப் பெருவியப்படைந்தார். அவ்வாறு அவர் விரிவுரை நிகழ்த்தியபின் திரும்பவும் படுக்கையில் அமர்ந்து உறங்கிவிட்டார். மறுநாட் காலையில், அவர்தம் மனைவியார் அவர்க்கு அந்நள்ளிரவு நிகழ்ச்சியினைத் தெரிவித்த பிறகுதான், அவர் அவ்விரிவுரை தமது கனவின்கண் ஓர் உருவாகி ஒழுங்குபட்டதை நினைவு கூர்ந்தார்.
மேற்போந்த உண்மை நிகழ்ச்சிகளாகிய மெய்ச்சான்றுகள் கொண்டு, கல்வியாராய்ச்சியிற் கருத்தூன்றி நிற்பார்க்கு அவர்தம் ஆராய்ச்சித் துறையில் நேரும் இடர்ப்பாடுகளை, நுண்ணுடம்பிற் சென்ற அவரது நுண்ணுணவர்வோ, அன்றி மேலுலகங்களில் உறைவாரான கலைவல்லாரின் ஆவிகளோ, அன்றி அக்கலைவல்லாரின் நினைவுகளோ அவர்தங் கனவிற் றோன்றி நீக்கி, அவர் தமக்கு மெய்யறிவுச்சுடர் கொளுவும் உண்மை யினைத் தெற்றெனத் தெரிந்துகொள்க.
இனிப், பின் நிகழப்போகும் இடர்கள் கனவின் கண் முன் அறிவிக்கப்படுதலும் ஆங்காங்கு நடைபெறாநிற்கின்றது. இதற்கு மெய்யாக நிகழ்ந்த சிலவற்றை இங்கெடுத்துக் காட்டுதும்.
1890 ஆம் ஆண்டு சூலைத்திங்கள் 12 ஆம் நாள், ஒரு துரைமகனார் (William Tudor) தமக்கு வேண்டிய நிலங்களை வாங்குதற்கென்று, தாம் இருந்த ஊரைவிட்டு வெளியூர் ஒன்றிற் சென்றிருந்தவர், அன்றிரவு படுக்கைக்குச் சென்றார். சென்று நன்றாக அயர்ந்துறங்கினவர், நள்ளிரவில் தம் மனைவியார் தமது பெயரைச்சொல்லி அழைக்கக்கேட்டு விழித்தெழுந்து படுக்கைமேல் உட்கார்ந்தார். உட்கார்ந்து தாம் ஓர் ஊரிலுந் தம் மனைவியார் மற்றோர் ஊரிலும் இருத்தலை நினைவுகூர்ந்து, திரும்பவும் விழுந்து படுத்துக் கொண்டார். என்றாலும், மறுநாட் காலையில் எழுந்தது முதல், அவர் முன்னாள் இரவில் தம் மனைவியார் தம்மைப் பெயர்சொல்லி அழைத்த ஒலியினை நினைந்து பெரிதும் மனங் கலங்குவாரானார். நாடோறுந் தம் மனைவியாரிடமிருந்து கடிதம் வரும் வழக்கம் போற் சிலநாட்களாகக் கடிதம் வராமையினையும் நினைக்கவே அவர்க்கு அக் கலக்கம் பின்னும் மிகுவதாயிற்று. ஆகவே, அவர் தம் மனைவியார்க்கு உடனே ஒரு கம்பிச் செய்திவிடுத்தார். அதற்கு ஏதொரு விடையும் வராமையால், மறுபடியும் ஒரு கம்பிச் செய்தி விடுத்தார். அதற்கும் விடை வந்திலாமையால், தம் மனைவிக்குத்தான் உடம்பு நலமில்லையோ, அல்லது தம்பிள்ளைகளுள் எவரேனுந்தாம் நோய்வாய்ப்பட்டனரோ, அல்லது தம் நெருங்கிய உறவினரெவர்க்கேனுந் தாந் தீங்கு நேர்ந்ததோ, அல்லது அவரில் எவரேனுந்தாம் இறந்து பட்டனரோ என்று பலவாற்றா னெல்லாம் எண்ணியெண்ணி அவர் துன்புறலானார். பிறகு இரண்டொரு நாளில் அவர் தம் மனைவியாரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. வந்த அக் கடிதம், அத்துரைமகனாரின் மருமகன் சூலை 11 ஆம் நாள் நள்ளிரவில் ஒரு மின்வண்டியின் எதிரே விழுந்து படுகாயம் அடைந்தன னென்றும், ஒற்றைக்கால் போய்விட்டதேனும் அவன் உயிர்பிழைத்துக்கொண்டா னென்றும் அறிவிப்ப தாயிற்று. அவர் தம் மனைவியார் அத்துயரநிகழ்ச்சியைப் பின்னாட் பிற்பகல் அறிந்து, அன்றிரவெல்லாம் பெருந்துயர் கூர்ந்து தங்கணவரையும் நினைந்திருந்தாராதலால் அவரது அந்நினைவே தொலைவில் வேறோர் ஊரிலிருந்த அவர்தங் கணவரை அதே நாள் இரவில் அழைப்பதாயிற்று என்க.
இன்னுங், கொலம்பா என்னும் முனிவர் ஒருநாளிரவுதந் திருக் கூட்டத்துடன் துயில்கொண்டிருப்புழிச் சடுதியில் துயில் ஒழிந்து தந் திருக்கூட்டத்தவரை யெழுப்பித், தறியிற் கட்டியிருக்கும் படகை யவிழ்த்துத் தாம் இருக்கும் இடத்திற்கு அருகாமையில் அதனைக் கொணர்ந்து நிறுத்துகவென அவர்க்கு மொழிந்தார். ஏனென்றால், அவர்கள் அப் படகை முன்னே நிறுத்தியிருந்த கரைப்பக்கத்திலுள்ள சிற்றூர் நெருப்புக்கு இரையாகப்போதலை அவர் எங்ஙனமாகவோ முன்னரே தெரிந்து கொண்டார். அவர் கட்டளையிட்ட வண்ணமே அப் படகு அவர்கட்கு அண்மையிற் கொணர்ந்து நிறுத்தப்பட்ட சிறிது நேரத்திலெல்லாம், அவர் கூறிய அச் சிற்றூர் நெருப்புப்பற்றி யெரிதலை அவர்கள் எல்லாருங் கண்டு வியப்புற்றனர்.



