
தொலைவிலுணர்தல் மறைமலையடிகள்
11. அறிதுயில் வருவிக்கும் முறை
கொளுத்திய ஒரு மெழுகுத் திரியையேனும், பளபளப்பாகவுள்ள ஒரு வெள்ளிக் காசையேனுந், தெளிவான ஒரு பளிங்கு உருண்டையையேனும் உணர்த்துவோர் தாமே கையிற் பற்றிக் கொண்டாவது, உணர்வோர் சாய்ந்திருக்கும் நாற்காலியினெதிரே உள்ள ஒரு சிறு மேசைமேல் அவரது கட்பார்வை சிறிது மேல் நோக்கும் உயரத்தில் நன்றாய்த் தெரியும்படி வைத்தாவது அவர் அதனைக் கண்ணிமை கொட்டாமற் பார்க்கும்படி செய்தல் வேண்டும். கட்டாயமாக இமைக்க வேண்டி யிருந்தால் அல்லாமல், உணர்வோர் சிறிதுங் கண் இமைத்தல் ஆகாது. இங்ஙனமாக அவர் சிறிது நேரம் அதனை உற்று நோக்கியபின், உணர்த்துவோர் தமது இடதுகையின் விரல்களை ஒன்றோடொன்று சேராமல் விரித்து, உணர்வோரின் பின்றலைப் புறத்தே தொட்டாவது தொடாமலாவது மேலிருந்து கீழ்நோக்கிப் பலமுறை தடவல் வேண்டும். தடவுகையில் உள்ளங்கையைக் கவிழ்த்த படியாய்த் தடவி, இறக்கி, மறுபடியுங் கையை மேல் உயர்த்துகையில் இறக்கின வழியே நேராக மேல் உயர்த்தாமல் ஒரு பக்கச் சாய்வாய் உயர்த்துதல் வேண்டும். இவ்வாறு அடுத்தடுத்துப் பின்றலைப் புறத்தே தடவிய சிறிதுநேரத்திற்குப் பின், உணர்த்துவோர் உணர்வோரைப் பார்த்துக் கண்களை மூடிக்கொள்ளும் படி கற்பித்து, அதன் பிறகு தம் வலக்கை இடக்கை இரண்டின் விரல்களையும் ஒன்றன்மேல் ஒன்றுபடாமல் விரித்துக்கொண்டு, உள்ளங் கைகளைக் கவிழ்த்த படியாய் உணர்வோரின் நெற்றிக்கு நேரே தொட்டாவது தொடாமலாவது கீழ்நோக்கி அவரது முழங்கால் அளவுந்தடவல் வேண்டும்; அங்ஙனங் கீழ்நோக்கித் தடவிய கைகளை மறுபடியுந் தடவுதற்காக மேலுயர்த்துகையில் நேராக எதிராக உயர்த்தாமல், இரண்டு கைகளையும் பிரித்து அவர் தம் விலாப்பக்கங்களிற் பக்கச் சாய்வாய் உயர்த்தித், திரும்பவும் முன்சொன்னவாறே கீழ்நோக்கித் தடவுதல் வேண்டும். இங்ஙனந் தடவுகையில் தூக் – கம் – தூக்கம் – தூக்கம் – தூக்கம் – அயர்ந்த தூக்கம் – இனிய தூக்கம் என்று ஆழ்ந்து நீண்ட குரலில் திருப்பித் திருப்பி மெல்லச் சொல்லுக. இங்ஙனந் திருப்பிச் சொல்லச் சொல்ல, உணர்வோர் நெடுமூச் செறிந்து தூங்கத் தொடங்குவர். இவ்வாறு அவர் தூங்கத் துவங்குவதைப் பார்த்தவுடனே, மறுபடியும் அவரது தலையிலிருந்து முழங்கால் அளவும் முன்சொல்லியவாறே கீழ்நோக்கி ஏழெட்டுமுறை தடவி நல்ல தூக்கம், ஆழ்ந்த தூக்கம், இன்பமான தூக்கம் நன்றாய் ஆழ்ந்த தூக்கம் – ஆழ்ந்த – தூக்கம் என்று அடுத்தடுத்து மெல்ல நிறுத்திச் சொல்லுக. இங்ஙனஞ் சொல்லியபின், அவர் நன்றாய்த் தூங்கக் காணலாம். அதனைக் கண்டபின் அவரைநோக்கி; இப்போது நன்றாய்த் தூங்கும். நான் சொல்வதைத் தவிர வேறு எதுவும் உமக்குக் கேளாது; நான் சொல்வது மட்டும் உமக்குக் கேட்கும். நன்மையைக் கோரி நான் உமக்குச் சொல்லுகிறபடி செய்யக் கடவீர். நான் எழுப்புகிறபோது நீர் நன்றாய்த் தூங்கி எழுந்திருப்பீர், என்று சொல்லுக. பல பிறவிகளிற் சீர் திருந்தி வந்து இப் பிறவியிலும் ஒழுங்குபட்டிருக்கும் உயிராயின் அவ் வுணர்வோர் இரண்டொருகால் இங்ஙனம் அறிதுயிலிற் செலுத்தப்பட்ட அளவானே மிகச்சிறந்த நுண்ணிய உணர்வினைப் பெற்று, உணர்த்துவோர் நினைக்கும் நினைவுகளையும், உணர்த்துவோர் கோரியபடி பிறர் நினைக்கும் நினைவுகளையுந் தாம் அறிதுயிலில் இருக்கையிற் செவ்வனே உணர்ந்து கூறுவர். உணர்த்துவோர் இன்னும் அவரை நன்றாய்ப் பழக்குவராயின், அறிதுயிலிலிருந்து விழித்தெழுந்த பின்னும் உணர்த்துவோர் விரும்பியபடி யெல்லாம் பிறரெண்ணங்களை இனிதுணர்ந்து உரைப்பர். அவ்வாறு பல பிறவிகளிலும் இப் பிறவியிலுஞ் சீர்திருத்தம் அடைந்து வராத உயிராயின் அவருக்கு அறிதுயிலை எளிதிலே வருவித்தல் இயலாது. அதனை அவர்பால் வருவித்தற் பொருட்டுப் பலகாலும் பலநாளும் முயன்று வரல் வேண்டும். அடுத்தடுத்து முயன்று பழகினால் எத்தகையோரிடத்தும் அறிதுயிலை வருவிக்கலாம்.
இனி, உணர்வோர் அறிதுயிலிற் கிடக்கும்போது உணர்த்துவோர் பின்வருமாறு சொல்லுதல் வேண்டும். உமது உடம்பு எப்போதுஞ் செவ்வையான நிலைமையில் இருக்கும். உமது அறிவு தெளிவாகவும் நுட்பமாகவும் விளங்கும். நீர் என் அருகிலிருந்தாலும், என்னை அகன்று தொலைவி லிருந்தாலும், யான் நினைக்கும் நினைவுகளையும் யான் குறிப்பிடுவோர் நினைவுகளையுஞ் செவ்வனே அறிந்து சொல்வீர், நீர் எங்கிருந்தாலும் யான் வேண்டியபோது ஆழ்ந்த இனிய தூக்கத்திற்குச் செல்வீர். மறுபடியும் யான் வேண்டியபோது செவ்வையாக விழித்தெழுந்து உம்முடைய அலுவல்களைப் பார்ப்பீர் என்று ஏழெட்டுமுறை இவற்றைத் திருப்பித் திருப்பிச்சொல்லுக. உணர்த்துவோர் இவ்வாறு கூறிய சொற்கள் உணர்வோரது நினைவில் ஏறி அவரைப் பதப்படுத்தி யிருந்தால், அதனைத் தெரியும் பொருட்டு உணர்த்துவோர் ஒரு மோதிரத்தை அல்லது ஒரு சாவியை அல்லது ஓர் எழுதுகோலை அல்லது வேறேதேனும் ஒரு பொருளை நினைத்து அதிற் றமது நினைவினைச் சிறிதுநேரம் பதிய நிறுத்துக. உணர்வோர் உள்ளம் நுண்ணிய பதத்தை அடைந்திருக்குமாயின், உடனே அவர் உணர்த்துவோர் எண்ணிய பொருளைத் தவறாமல் எடுத்து உரைப்பர். இவ்வறிதுயிலில் நன்கு பழகியபின் உணர்வோரும் உணர்த்துவோரும் ஒருவரையொருவர் பிரிந்து எவ்வளவு தொலைவான ஊர்களில் இருந்தாலும் உணர்த்துவோர் வேண்டியபடி யெல்லாம் உணர்வோர் பிழைபடாமற் செய்வர். இம் முறையின் மேன்மையினை ஆராய்ந்து பார்த்த நுண்ணறிவின ரெல்லாரும் இதனை மிகப் பாராட்டிப் பேசுதலும் எழுதுதலுஞ் செய்து போதருகின்றார். அறிதுயிலில் நன்கு பழக்கப்படுத்தப்பட்ட ஒருவர் தாம் அயர்ந்த தூக்கத்திற் கிடக்கையில் உணர்த்துவோர் தமக்குக் கட்டளையிட்டபடியே அவர் தொலைவிலிருந்து செய்தவற்றைக் கூட இருந்து பார்த்த ஆங்கில மருத்துவ நூல் அறிஞர் ஒருவர் எழுதிய ஒரு பகுதியை இங்கெடுத்துக் காட்டுகின்றாம்:-
இருபத்திரண்டு ஆண்டுள்ள ஓர் அழகிய மாது இக்கலைப் புலமையில் தேர்ச்சிபெற்று உணர்த்துவோர் ஒருவரால் நாலைந்து முறை அறிதுயிலிற் செல்லும்படி பழக்கப் படுத்தப்பட்டிருந்தார். இம் முறையினை நன்காராய்ந்து பார்க்க விரும்பிய ஆங்கில மருத்துநூற் புலவர் ஒருவரின் வேண்டுகோளுக்கு இசைந்து இவ்வம்மையாரும் இவரை அறிதுயிலிற் பழக்கிய அறிஞரும் ஒருநாள் அவர் வீட்டுக்கு வந்து சேர்ந்தார். இந்த அரிய முறையினைக் கண்டறியும் ஆவலால் வேறு சிலரும் அங்கே வந்திருந்தார்கள். அம்மருத்துவர் வீட்டின்கண் உள்ள அகன்றதோர் அறையின் கண் அவ் விளையமாதர் அங்கு வந்த மற்றையோருடன் பேசிக் கொண்டிருக்கையில், அம் மருத்துவர் தம்மோடிருந்த அவ்வுணர்த்துவோரை அழைத்துக் கொண்டுபோய் அம்மாதர் அவரைப் பார்க்கக் கூடாத மற்றோர் அறையில் இருக்கச் செய்து, யான் அந்த அம்மையிடத்தும் மற்றவரிடத்தும் போய்ப் பேசிக்கொண் டிருக்கின்றேன். இடையே நான் சிறிது கனைப்பேன்; அந்த ஒலியைக் கேட்டதும் நீர் இந்த அறையிலிருக்கும் அம் மடந்தையை அறிதுயிலிற் போகச் செய்தல் வேண்டும், என்று அவர்க்குக் கற்பித்து விட்டு, அவ்வறையினின்றும் வெளியே வந்து கதவைத் தாழிட்டுக் கொண்டு, அந்த அம்மையாரும் மற்றையோரும் பேசிக்கொண் டிருக்கும் அறைக்குட் புகுந்து அவர்களொடு அளவளாவிப் பேசியிருக்கலானார். எல்லாரும் பேசுஞ் செய்தியில் கருத்து ஊன்றி ஈடுபட்டிருக்கையில், நடுவே அத் துரைமகன் சிறிது கனைத்தார். அக் கனைப்பொலி நிகழ்த்திய சிறிது நேரத்திலெல்லாம், அம் மாதரார் முகம், உணர்த்துவோர் முன்னே அமர்ந்திருந்த இருக்கையின் பக்கமாய்த் திரும்பியது. கூட இருந்த அம்மருத்துவர் அம் மாதரை நோக்கி யாது நேர்ந்தது என்று வினாவ, அவ்வம்மை ஒன்றுமில்லை என்று விடை கூறினார். அவ் வம்மையின் கண்கள் இமையாமல் நின்றன. மற்றை அறைக்குள் இருந்த உணர்த்துவோர் தமது கையை நீட்டிச் சிறிது அசைத்த அளவிலே, அம் மாதரார் தாமிருந்த நாற்காலியை விட்டெழுந்து, பின் தள்ளும் நடையொடு மெல்ல நடந்து உணர்த்துவோர் இருந்த மற்றை அறைக்குட் சென்றார். உணர்த்துவோரோ தாம் இருந்த இருக்கையினின்று அசையாமலும், ஏதோர் ஓசையும் புரியாமலும் இருந்தார். தாம் நினைத்தவாறே அறிதுயிலில் நடந்து தம் அருகில் வந்த அம் மாதரின் கண்களுக்கு நேரே இவர் இரண்டு விரல்களை நீட்ட, மறுபடியும் அப் பெண் முன்னிருந்த அறைக்குப் போகும்படி அவராற் செலுத்தப் பட்டு வந்து நாற்காலியில் அமர்ந்தார். இன்னும், அறிதுயிலி லிருக்கும் அம் மாது விழித் தெழுந்தவுடனே சிறிதுநேரங் கழித்து அடுத்துள்ள அறைக்குட் போய் அங்குள்ள இசைப்பெட்டியினை இயக்கி ஓர் இசை பாடு மாறும். அதன்பின் அங்குள்ள பல புத்தக வரிசைகளிலிருந்து தாம் எண்ணிய ஒரு புத்தகத்தைத்தெரிந்தெடுக்குமாறும், மண்டியிட்டு அதனை அம் மருத்துவர் கையிற் கொடுத்து அதில் உள்ள சில சொற்களை ஒரு வகையான குரலில் திருத்தமாகச் சொல்லுமாறுங் கட்டளை யிடப் பட்டனர். அதன்பின், விசிறியால் மெல்ல வீசி அவர் எழுப்பப்பட்டார். விழித்தபின், தூக்கத்தில் நடந்த தொன்றும் அவர் அறியாராய், மற்றவர்களோடு முன்போற் பேசிக் கொண்டிருந்தார். ஆனாற், சிறிதுநேரஞ் சென்றதும், அம்மாதரின் கண்கள் உறுத்த பார்வை உடையவாயின; நீக்க முடியாத ஒரு கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடப்பவர் போல் அப்பெண்மணியார் தம திருக்கையினின்றும் எழுந்து, தாம் உணர்த்துவோராற் கற்பிக்கப்பட்டபடியே இசைப் பெட்டியில் ஓர் இசை பாடிப், பின் புத்தக வரிசைகளிலிருந்து அவர் கருதியதொரு புத்தகத்தைப் பிழைபடாமல் எடுத்து, அதனை முழந்தாளிட்டபடியாய் அம் மருத்துவர் கையிற் கொடுத்து, ஒருவகையான குரலிற் சில சொற்களையுந் திருத்தமாகச் சொன்னார். அவர் மண்டியிட்ட நிலையிலிருந்தபோது அவ்வறிதுயிலினின்றும் எழுப்பப்படவே, தாம் அந்நிலையிலிருந்ததற்காகச் சிறிது சினமும் வருத்தமும் உடையவர் போற் காணப்பட்டார்.
அதன்பின் அம் மாதர்க்குச் சில சிற்றுண்டிகள் தரப்பட்டன; அவர் அவற்றுள் ஓர் அடையைத் தின்று கொண்டிருக்கையில், அவர்க்குப் பின் பக்கத்திற் சிறிது தொலைவில் இருந்த உணர்த்துவோர்க்கு அம்மருத்துவர் கண்ணால் ஒரு குறி செய்தார். அதனை அறிந்த அவ்வுணர்த்துவோர் தமது கையை ஓசைப்படாமல் அசைக்கவே, அம் மடந்தை உடனே தலையைத் திருப்பிக் கொண்டு தூங்கலாயினார். இங்ஙனந் தூங்குகையிலும், அவ்வுணர்த்துவோர் கோரியபடியெல்லாம் அவர் செய்வா ராயினார். தோட்டத்திற் சென்று மலர்கள் பறித்துச் செண்டு கட்டுவதுபோல் நினைக்க, அங்குத் தோட்டமில்லாதிருந்தும் அவர் அதனுள் நுழைந்து நறுமலர் கொய்து செண்டு கட்டுவதுபோற் செய்வாராயினார். பின்னர் அப்பூஞ்செண்டை முகந்து இன்புறல் வேண்டுமென்று நினைக்க, அவர் கையிற் பூஞ்செண்டு இல்லாதிருக்கவும் அஃது உடையவர் போல் முகந்து மகிழ்ந்தார். அதன் பிறகு அந் நறுமணம் மிக்க காரம் உடையதென்று கூற, அம் மாதர் பல காற்றும்மினார். உணர்த்துவோர் தமது கையால் அமர்த்திய பிறகு தான் அத் தும்மல் நின்றது. இங்ஙனமே, உணர்த்துவோர் நினைத்தபடியுஞ் சொல்லியபடியுமெல்லாம் அம் மங்கையர் அறிதுயிலிற் சென்று, வியப்பான பல செயல்களைப் புரிவாராயினார். இது நிற்க.
அறிதுயிலிற் சென்ற ஓர் உயர்ந்த உயிர் தன்னொடு தொடர்புடையவர்கள் நினைக்கும் நினைவுகளை நன்கு அறிந்துரைக்கும் உண்மை நிகழ்ச்சிகளைச் செவ்வையாக ஆராய்ந்து முடிவுகட்டிய உயிர்நிலை ஆராய்ச்சிக் கழகத்தார் செய்த ஆராய்ச்சிகளிற் சிலவும் ஈண்டு எடுத்துக் காட்டுதல் வேண்டும். ஏனெனில், உயர்ந்த கலை நூற் புலமையில் நிரம்பத் தேர்ச்சிபெற்று இவ்வுலகமெங்கும் பெரும்புகழ் பெற்று விளங்கும் புலவோர் பலர் அக்கழகத்தில் ஒருங்கு சேர்ந்திருந்து, எவரும் ஐயுறுதற்கில்லாதபடி இவ்வரிய பெரிய முறைகளைத் தீர ஆராய்ந்து தெளிவுபடுத்தி யிருக்கின்றனர்; ஆதலால், அவர் செய்து பார்த்த ஆராய்ச்சிகளிற் சில எடுத்துக் காட்டினும் அவை இவ்வுண்மையை நிலைநாட்டி எத்திறத்தவரையும் அறிவூட்டி மகிழ்விக்கும்.
ஒரு நாள் ஓர் அம்மையார் அறிதுயிலிற் செலுத்தப்பட்டு உணர்வோராய் இருக்க, அவருக்கு உணர்த்துவோரான ஒரு துரைமகன் அவரைத் தொடாமலும் அவரொடு பேசாமலும் அவர்க்குப் பின்னே இருத்தப்பட்டார். இம் முறையினை ஆராய்ந்து பார்ப்பதற்கென்று அங்கு வந்திருந்த கற்றறிவிற் சிறந்த மற்றொரு பெருமாட்டியார், ஒரு சிறு பையன் கையில் ஒரு பந்து ஏந்தி நிற்பதாக நினைக்கும்படி அவ்வுணர்த்துவோர்க்குக் கற்பித்திருந்தார். அங்ஙனமே அத்துரைமகன் அந் நினைவை உறுத்து நினைந்த சில இமைப்பொழுதிற்குள், அறிதுயிலில் அமர்ந்திருந்த அம்மையார்; ஓர் உருவம் வருகின்றது – ஒரு சிறு பையன், என்று கூறினார். உடனே அங்கிதனை ஆராயும் மற்றொரு பெருமாட்டியார்; அவன் தன் கையில் யாது வைத்திருக்கின்றான்? என்று வினவ, அவ்வம்மையார் ஓர் உருண்ட பொருள் – அஃது ஒரு பந்தென்று நினைக்கிறேன், என்று மறுமொழி தந்தார்.
இனி, மற்றோர் ஆராய்ச்சியில் உணர்வோராயிருக்கும் பொருட்டு அறிதுயிலிற் செலுத்தப்பட்டவர் ஓர் ஆண்மகன். அவர்க்கு உணர்த்துவோராய் அமர்த்தப்பட்டவர் முன் ஆராய்ச்சியில் உணர்த்துவோராய் இருந்த துரை மகனே யாவர். இந்த முறை ஒரு வண்டி நிறைய மீன் வைத்துக்கொண்டு ஓர் ஆள் நிற்பதாக நினைக்கும்படி அவர் கேட்டுக் கொள்ளப்பட்டார். அங்ஙனமே நினைந்த சிறிது நேரத்தில் அவ்வுணர்வோர் கூறுவர். அஃது ஓர் ஆண்மகன் உருவம், ஆம் அங்கே ஓர் ஆள் நிற்கின்றார். அவரை இன்னாரென்று நான் அறியேன். அவர் பழங்கள் விற்பவர் போற் காணப்படுகின்றார். அப்போது அங்கு வந்திருந்த ஒரு பெண்பாலார்; அவரிடத்திற் பழங்கள் இருக்கின்றனவா? என்று கேட்டார். அதற்கு அவர்: அங்கு இருப்பது அவரது வண்டிபோல் தோன்றுகின்றது. ஓ, அவர் என்ன விற்கிறார்? அவர் விற்று விட்டாரென்று நம்புகின்றேன். அவரது வண்டிமேல் யான் ஏதும் பார்க்கக் கூடவில்லை. ஒரு வேளை விற்றுவிட்டார்போலும்! ஆ! சில உருண்ட வடிவான பொருள்கள் இப்போது தென்படுகின்றன. அவைகள் பழங்கள் என்றே நம்புகின்றேன். அவைகள் சிறிது சிவப்பாய் இருக்கின்றன. ஓ, அவை மீன்கள் அல்லவோ, என்று மாறிமாறிக் கடைசியாக நினைந்த பொருளைத் தவறுதலின்றிச் சொல்லிவிட்டார். ஆனால் நினைந்த பொருளை நினைந்தபடியே உணர்வோர் கூறாமல் இடையிடையே மாறிக் கூறிய தென்னையெனின், உணர்த்துவோர் அப் பொருளை நினைக்கையில் அதன் வடிவையும் நிறத்தையுந் தெளிவாக நினையாமல், அதனோ டொத்த பழத்தின் வடிவையும் நிறத்தையும் இடையே நினைந்திருக்கவேண்டும். அஃது அல்லாவிட்டால் உணர்வோர் அறிதுயிலிற் செவ்வனே சென்று அமைதிபெறாமற் சிறிது கலங்கிய நிலையில் இருந்தாராகல் வேண்டும். இவ்விரண்டு குறையும், அல்லது இரண்டில் ஒரு குறையும் இல்லாதாயின் உணர்த்துவோர் நினைந்த பொருளை உணர்வோர் உடனே தெளிவாக உணர்ந்து கூறியிருப்பர்.
இனி, இவ்வாராய்ச்சியில் வல்ல மற்றொரு துரைமகனார் நுண்ணறிவு வாய்ந்த தம் மனைவியாரிடத்துச் செய்து பார்த்த மற்றோர் ஆராய்ச்சி வருமாறு; ஒருவானக் கப்பல் ஒரு நகரத்திற் குறிப்பிட்ட ஓரிடத்தில் மேலே செல்லுவதாகவும், அதனைப் பெருந்திரளான மக்கள் நின்று பார்ப்பதாகவும் நினைத்துக் கொள்ளும்படி உணர்த்துவோர் கேட்டுக் கொள்ளப்பட்டார். இதில் உணர்வோராயிருந்த பெருமாட்டியார் ஆழ்ந்த அறிதுயிலிற் செலுத்தப் படவில்லை; சிறுதுயிலிலேதான் இருந்தார். உணர்த்துவோர் மேற் சொல்லியதனை நினைந்த அளவிலே, உணர்வோர் கூறுவார். யான் தொகுதியாகப் பலர் நிற்பதைப் பார்க்கிறேன். கூட்டமாகச் சண்டைக்குப் போகிறார்கள். அவர்கள் மிகவும் கலவரமாய் இருக்கிறார்கள். அவர்கள் தண்ணீர் சொரிகிறார்களா? அல்லது கப்பலோட்டிகள் பாய்க் கயிறுகளை இழுக்கிறார்களா? இதற்குள் உணர்த்து வோர், அவர்கள் என்ன செய்கிறார்கள்? என்று கேட்க, அவ்வம்மையார் அவர்கள் எல்லாரும் மேலே பார்க்கிறார்கள். அஃதொரு வானக்கப்பல், யாரோ ஒருவர் அதில் துன்பப் படுகிறார், என்றனர். அதைக் கேட்ட உணர்த்துவோர் இனி நடக்கக் கூடிய ஒரு காட்சியை யன்றோ நினைந்தேன், என்ன, உணர்வோர் ஓ முதன் முதலாக ஒரு வான ஊர்தியை ஒருவர் பறக்க விடுகிறார். அவர் அங்கே மேலே செய்து கொண்டிருப்பது அதுதான். என்று உண்மையைக் கடைசியாகச் சொல்லி விட்டார். இந்நிகழ்ச்சியின் கண்ணும் உணர்வோர் நினைந்ததனை உடனே சொல்லமாட்டாமல் நடுவே தடுமாற்றம் அடைந்தது, உணர்த்துவோர் தாம் நினைத்ததன்கண் உள்ளத்தை ஒருக்கி நினையாமையினாலேதான் என்று அறிதல் வேண்டும்.
இனி, அகல இருந்து உணர்த்துவோர், உணர்வோரை அறிதுயிலிற் போகும்படி செய்தலை அக் கழகத்தார் ஆராய்ந்து பார்த்திருக்கின்றனர். அவற்றுள் ஒன்றனை இங்கெடுத்துக் காட்டுவாம்; பிராஞ்சு தேயத்திற் புகழ் பெற்று விளங்கிய மருத்துவர் ஒருவர் தம்மிடம் நோய் தீர்த்துக் கொள்ளவந்த ஒரு நாட்டுப்புறத்துப் பெண் பிள்ளைக்கு நோய் நீக்கி, அவளைத் தொலைவிலிருந்தே அறிதுயிலிற் செலுத்தப் பழக்கலானார். இவர் தாமிருந்த வீட்டுக்கு அரைக்கல் எட்டியிருந்த தம் உடன் பிறந்தாள் வீட்டில் இப் பெண்பிள்ளை இருக்கும்படி ஏற்பாடு செய்திருந்தார். அம்மருத்துவரோ டிருந்து இம் முறையினை ஆய்ந்தறியும்படி அங்கே சென்ற கற்றறிவிற் சிறந்த புலவர் மூவர், ஒருநாட் காலையில் திட்டமாய்ப் பதினொரு மணிக்கு அம் மருத்துவர் தமது மருத்துக் கழகத்தில் இருந்தபடியே தம் உடன்பிறந்தாள் வீட்டில் தங்கியிருக்கும் அப்பெண் பிள்ளையை அறிதுயிலிற் செலுத்தும்படி கேட்டுக் கொண்டனர். சில நேரங்களில் அப்பெண்மகள் தனக்குத் தூக்கம் வராதபடி தடை செய்வதில் முயற்சி யுடையவளாய் இருத்தலால், இவ்வாராய்ச்சி நிறைவேறுதற்குச் சிறிதுநேரங்கூடக் கொடுக்க வேண்டு மென்று அவர்கள் தமக்குள் ஏற்பாடு செய்துகொண்டனர். திட்டமாய்ப் பதினொன்றரை மணிக்கு அவர்கள் அமைதியாய் அவளிருந்த வீட்டிற்குட் போய், அவர் ஆழ்ந்த தூக்கத்தோடும் மேடை மேல் உள்ள தனது அறையிலிருந்து கீழே கூடத்திற்கு இறங்கிவரக் கண்டார்கள். முதனாள் இரவில் அம் மருத்துவர் அவளைத் தூக்கத்திற்குச் செலுத்தச் செய்த முயற்சியைப்பற்றி அவர்கள் ஏதுஞ் சொல்லவில்லை. ஆனால், அவள் அவ்விரவில் தான் மிகவும் நோயாயிருந்ததாகத் தூக்கத்திலிருந்தபடியே அவர்கட்குக் கூறினாள்.
பிறகு, அதே நாளின் மாலைக் காலத்தில் அம்மூவரும் அம் மருத்துவரோடிருந்து உணவு அருந்துகையில், அம்மருத்துவர் தமது வீட்டிலிருந்தபடியே தொலைவிலிருக்கும் அப் பெண்ணைத் தூக்கத்திற்குச் செலுத்தித், தமது விருப்பப்படி அவள் அங்கிருந்து தமது வீட்டிற்க்கு வருதற்பொருட்டு மீட்டும் ஒரு முயற்சி செய்தார். மாலை ஏறக்குறைய ஒன்பது மணிக்கு அவர் தாம் கற்கும் அறைக்குப் போனார். அவ் அறிஞர் மூவரும் இப்போது இவர்களொடு சேர்ந்த மற்றோர் அறிஞருமாக நால்வரும் அப்பெண்மகள் தங்கிய வீட்டண்டை போய், அவ் வீட்டிலுள்ளார் கண்களுக்குத் தெரியாதபடி வெளியே தெருவிற் காத்திருந்தனர். ஒன்பதரைமணி யாவதற்குமுன் அம்மாது தோட்டவாயிற் கதவிலிருந்து பாதிவழி வந்து மறுபடியும் பின்னுக்குப் போவதை அவர்களில் ஒருவர் கண்டார். மற்றை மூவரும் அவளை உன்னித்துப் பார்க்க, அவள் ஆழ்ந்த தூக்கத்தில் நடப்பவளாய் ஏதேதோ முணுமுணுத்துக் கொண்டு அங்குமிங்குமாய் அலைவதுபோற் காணப்பட்டாள். பின்னுஞ் சிறிது நேரத்தில் அவள் நன்றாய் மூடப் பட்ட கண்களோடும் வெளியே வந்து, அந் நால்வரையும் பாராமல் அவர்களை விரைவாய்த் தாண்டிச் சுற்றுவழியாகச் சென்று அம் மருத்துவர் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள். அவன் தெருவில் நடந்துவந்தபோது விளக்குத் தூண்கள் மேலும் வண்டிகள் மேலும் பிறவற்றின் மேலும் படாமற் குறுக்கு மறுக்குமாய் நடந்துவந்தாள். எவரும் அவள் எதிரிற் போகவும் இல்லை; அவளொடு பேசவும் இல்லை. எட்டு அல்லது பத்து நிமிடங்களுக்குப் பிறகு அவள் நடையில் தள்ளாடினாள்; விழுந்துவிடுவாள் போல எண்ணி நின்று விட்டாள். அப்போது ஒன்பதரை மணியும் ஐந்து நிமிடங்களும் ஆயின என்று அந்நால்வரில் ஒருவர் குறித்துக்கொண்டார். ஏறக்குறைய ஒன்பது மணி நாற்பது நிமிடத்திற்கு அவள் மனத்திட்பம் உடையவளாய் ஒன்பதே முக்காலுக்கும் அம் மருத்துவர் வீட்டின் எதிரே வந்தாள். வந்தவள் அவரை எதிர்ப்பட்டும் அவரை உன்னியாமலே, அவரது வீட்டினுள் நுழைந்து, கீழேயுள்ள அறைகளில் ஒன்றிலிருந்து மற்றொன் றிற்கு விரைந்து சென்றாள். அவள் அவரைத் தெரிந்து கொள்ளுதற்கு முன் அவள் கையை அவர் பிடித்தெடுக்க வேண்டுவதாயிற்று. அதன்பின் அவள் அமைதியுற்றாள்.
எட்டுமணி ஐம்பத்தைந்து நிமிடம் முதல் ஒன்பது இருபதுவரையில் அம்மருத்துவர் அவளைப்பற்றி நன்றாய்க் கருத்தூன்றி நினைத்ததாகக் கூறினார். ஆனால், ஒன்பது இருபதுமுதல் முப்பத்தைந்து வரையிற் சும்மா மேலாக நினைந்தார்; ஒன்பது முப்பத்தைந்திற்கு அவளை நினைப்பதை வீட்டு வேறொரு விளையாட்டிற் கருத்தைச் செலுத்தினார்; ஆனாற் சில நிமிடங்கள் கழிந்ததும் மறுபடியும் அவளைப் பற்றி எண்ணலானார். அவர் இடையே அவளை நினைப்பதை விட்டிருந்த நேரமும், அவள் தெருவிலே நடை தள்ளாடி நின்றுவிட்ட நேரமும் ஒன்றாய் இருந்தன.
பின்னர், மூன்றாம்நாளில் அம் மருத்துவரோடு உடனிருந்து இதனைப் பயிலுந் தோழர் ஒருவர் அம்மாதினை அறிதுயிலினின்றும் எழுப்பி ஏனை நால்வரோடும் இருந்து உணவுகொள்ளும்படி செய்துவிட்டுக் காலை நாலரை மணிக்குத் தமது இல்லத்திற்கு ஏகினார். அவர் தமது வீட்டிலிருந்தே மற்றை நால்வரொடு வேறோர் இடத்திலிருக்கும் அவளைத் தூங்கச் செய்தல் வேண்டுமென்று ஓர் ஏற்பாடு முன்னமே செய்துகொண்டார்கள். ஐந்துமணி ஐந்து நிமிடத்திற்கு அந் நால்வரும் அவ்வம்மையிருந்த இடத்தினுள் நுழைந்து பார்க்க, அவள் கண்கள் மூடப்பட்டு அயர்ந்த தூக்கத்தில் இருப்பது தெரிந்தார்கள். கண்கள் மூடியிருந்தும் அவள் தையல் வேலையை மிகவுஞ் சுறுசுறுப்பாய்ச் செய்து கொண்டிருந்தாள். அம் மருத்துவரினாலேயே தான் தூக்கத்திற்குச் செலுத்தப் பட்டதாக அவள் நம்பும்படி சொல்லிப்பார்த்தார்கள்; ஆனால் அம் மருத்துவரின் தோழராலேயே தான் தூக்கத்திற்குச் செலுத்தப்பட்டதாகத் துணிபுரை கூறினாள்.
பிறகு, நான்காம் நாள் மாலையில் மணிக்கு அம்மருத்துவரின் தோழர் வீட்டில் அந் நால்வரும் ஒருங்கு சேரலானார்கள். அவர்களில் ஒருவர் கோரியபடியே அவர் அந்த மாது தூக்கத்திற் செல்லுமாறு எண்ணுதற்காகத் தாம்கற்கும் அறைக்குட் போயினார். அந் நால்வரும் அவரது தோட்டத்திற் காத்திருந்து பிறகு மூன்று இருபதுக்கு அந்த அம்மையிருந்த வீட்டிற்குப் போனார்கள். போனதும் ஒருவர் அவளிருந்த அறையினுட் புகுந்து நோக்க, அவள் தன் கையிலிருந்த தையல்வேலையையும் விட்டு ஆழ்ந்த துயிலில் இருக்கக் கண்டார். தான் மூன்று மணி ஐந்து நிமிடத்திற்குத் தூங்கச்சென்றதாகவுந் கூறினாள்.
இங்ஙனம் அந்த அம்மையைத் தொலைவிலிருந்தே அறிதுயிலிற் செலுத்தித் தாம் எண்ணிய எண்ணங்களின் படி அவள் எண்ணவுஞ் செய்யவும் புரிந்து, அம் மருத்துவரும் அவர் தோழரும் அவள் பால் ஆராய்ந்து பார்த்த இருபத்தைந்து ஆராய்ச்சிகளிற் பதினெட்டு நிகழ்ச்சிகள் செவ்வையாகவே முடிந்தன; மற்ற நான்குமட்டுஞ் சிறிது வழுவின. இவைகளைக் கொண்டு தொலைவிலிருந்தே பிறர்க்கு அறிதுயில் வருவித்துத் தாம் எண்ணியபடியே அவரும் எண்ணுமாறும் நடக்குமாறுஞ் செய்தல் சிலர்க்கு இயலுமென்பது நன்கு பெறப்படுதல் காண்க.



