
தொலைவிலுணர்தல் மறைமலையடிகள்
9. இடம் உணர்தல்
இங்ஙனம் உணர்வோரும் உணர்த்துவோரும் இயைபுபட்டு நின்றபின் இவர்கள் இருக்கும் அறையின் ஏதேனும் ஒரு மூலையை அல்லது ஒரு சாளரத்தை உணர்த்துவோர் கருத்து ஊன்றி நினைக்க வேண்டும். அவ்வாறு நினைக்கும் போது தமது நினைவு உணர்வோர் உள்ளத்திற் சென்று தோன்ற வேண்டுமென்றும் விரும்புக. இங்ஙனம் உறுத்து நினைத்து விரும்பவே, அவர் நினைத்தது உணர்வோர் உள்ளத்தில் வந்து தோன்றும். தோன்றியவுடனே உணர்வோர் அம் மூலையை அல்லது சாளரத்தை மெல்லச் சென்று தொடக்கடவர். அதனைத் தொடுதற்குச் செல்லுகையில் உணர்த்துவோர் தாம் நினைக்கும் மூலையை அல்லது சாளரத்தை நோக்கித் தமது பார்வையையும் நினைவையும் திருப்புக. இப்படிச் செய்தால் உணர்வோர் குறி தவறாமல் அவர் நினைத்தவாறே சென்று அவ்விடத்தைத் தொடுவர். அவரது நினைவு இவருக்குச் செவ்வனே புலப்படாமற் போக, இவர் தவறான இடத்தை நோக்கிச் செல்வராயின் இது பிசகு என்று இவருக்குத் தோன்றும், அப்படித் தோன்றுகையில் அம் முகமாய்ச் செல்லாமற் சிறிதுநின்று குறிப்பிட்ட இடம் உள்ளத்திற் புலப்படுகிற தாவென்று அமைதியோடு பார்க்க வேண்டும். செவ்வனே அது புலப்படுமாயின் இது தான் குறிப்பிட்ட இடம் என்னும் உறுதியுண்டாம். இங்ஙனமே தொடர்பாகச் சில பல நாட்கள் அருகிலுள்ள இடங்களையும், அதன்பிற் சிறிது அகன்றுள்ள இடங்களையும் நினைத்து நினைத்து இருவரும் பழகிவருதல் வேண்டும். உணர்வோர் தாமே கண்ணை மூடிக்கொண்டு உணர்த்துவோர் நினைவுகளை அறிந்து காட்டலா மென்றாலுஞ், சில நேரங்களில் அவர் தம்மை மறந்து தற்செயலாய்க் கண்ணைத் திறந்துவிடுதலுங் கூடும். ஆதலால், இது நிகழாமைபொருட்டுக் கண்களைத் துணியால் நன்றாக மறைத்துக் கட்டிக்கொள்ளுதல் நலம் உடைத்து. கண்களை மூடுதலானுந் திறவாமல் மறைத்துக் கட்டுதலானும், மனங் கண்ணின்வழியே புறப்பொருள்களைப் பற்றி ஓடும் ஓட்டந் தவிர்ந்து அகத்தே ஓய்ந்துநிற்கும்; அப்போது அதனை ஓருமுகப்படுத்தித் தானே வந்து தோன்றும் நினைவினை உணருமாறு பயிற்றுதல் எளிது. அது நிற்க.



