
தொலைவிலுணர்தல் மறைமலையடிகள்
16. தெளிவுக் காட்சி
ஒருவர் உறுத்து நிளைந்தநினைவும் உறுத்துக் கண்ட காட்சியும், அண்மையிலோ சேய்மையிலோ உள்ள பிறருடைய உள்ளத்தில் விலக்க முடியாமற் றோன்றுதலும், அல்லதவரது கட்புலனெதிரே உருவுகொண்டு தோன்றுதலுமாகிய நிகழ்ச்சிகளைப்பற்றியே இந்நூலில் இதுகாறும் நன்குவிளக்கிப் போந்தாம்.
இனி, அவ்வாறின்றி, எவரும் நினையாத நினைவுகளையுங், காணாத காட்சிகளையும், எவர்க்கும் புலனாகாதிருந்த மறைபொருள்களையும் அண்மையிலுஞ் சேய்மையிலுந் தெளிவாகக் காணுந் தெளிவுக் காட்சி மக்களிற் சிலர்க்கு உள்ளத்தே அமைந்திருக்கின்றது என்பதனையுஞ் சிறிது விளக்குவாம். இதற்கு அமெரிக்கா தேயத்தில் நிகழ்ந்த உண்மை வரலாறு ஒன்றனை இங்கே மொழி பெயர்த்து வரைகுதும்:
சிக்காகோ நகரமென்பது இந் நிலவுலகத்துள்ள எல்லா நகரங்களைப் பார்க்கிலும் முயற்சியிற் றலைசிறந்த தொன்றென்பது எவரும் அறிந்ததே யாம். யோனா முனிவரது சுரைக்காயைப்போல் அஃது ஓரிரவிலேயே முளைத்து விட்டதெனத் தோன்றியது. அதன் குடிமக்களது தொகை விரைந்து பெருகியது; அதனாற் புழக்கத்திற்கும் இன்ப நுகர்ச்சிக்குந் தண்ணீர் இன்றியமையாது வேண்டப் படுவதாயிற்று. நிலநூல்வல்லார் அத்தகைய நிலப்படையின் கீழ்த் தண்ணீர் இருத்தல் இயலாது என்றனர்; அதனாற் கலை நூலறிவு பிழைபட்டது. நிலத்தின் மேலுள்ள தண்ணீரையே எதிர்பார்க்க வேண்டினமையின், உடனே ஒரு கூட்டுறவுக் கழகத்தார் ஏற்பட்டு மேலுள்ள அழுக்குத் தண்ணீரையே எல்லார்க்குங் கொடுத்து வரலானார்.
அப்போது அச் சிக்காகோ நகரத்தில் ஆபிரகாம் ஜேம் எனப் பெயரிய ஒருவன் இருந்தனன்; அவன் கல்வியறிவில்லாத ஒரு பேதை; கள்ளமில்லாத வெள்ளையுள்ளத்தினன். ஆனாலும், இயற்கையாகவே தெளிவுக் காட்சி வாய்ந்தவன்; உண்மையான ஒரு குறிகாரனென்றும், அவன் வெளியுணர்வு சிறிதுமில்லா அறிதுயிலில் செலுத்தப்பட்ட போது அந் நகரத்துக்கு அருகாமையில் உள்ள ஒருநிலப்பகுதியின் கீழ்த் தண்ணீரும் மண் ணெண்ணெயும் ஏராளமாய்க் கிடைக்குமெனக் கூறினானென்றுங் காரலின் ஜார்டன் என்னும் அம்மையார் அறிந்து உரைத்தார். ஆனாலும் நீண்ட காலம் வரையில் அவன் கூறிய அவ்வுரைகளை எவருமே உன்னித்திலர். கடைசியாக மெயின் என்னும் ஊரிலிருந்து சிக்காகோ நகரத்திற்கு அலுவல் மேல்வந்த உவைஹெட் காட் என்னும் இருவர், ஆபிரகாம் ஜேம் என்னும் அக்குறிகாரன் கூறிய உரைகளைக் கேள்வியுற்றுத், துளைத்துச் சென்றால் தண்ணீர் ஏராளமாய்க் கிடைக்குமென்று அவன் குறிப்பிட்டுச் சொல்லிய இடத்திற்கு அவனை அழைத்துச் சென்றனர். அவன் உடனே அறிதுயிலிற் சென்றவனாகித் தண்ணீர் கிடைக்கக் கூடிய அவ்விடத்தைச் சுட்டிக் காட்டினான். பின்னும், அவன் தான் தண்ணீர் மட்டுமேயன்றி, இரண்டாயிரமைலுக்கப்பாலுள்ள பாறை மலைகளிலிருந்து அந்நீரோட்டந் தாம் நிற்கும்அவ்விடத்திற்கு வருதலையுங் கண்டதாகப் பகர்ந்தனன்; அந்நீரோட்டம் ஊடுருவிவரும் நிலப்படைகளையும் நிலவறைகளையுங் கூடத் தான் ஒரு கிழி (map) யில் எழுதிக் காட்டுதல் கூடுமெனவும் மொழிந்தனன். உடனே அந்நிலத்தை வாங்கிக் கொள்வதற்கு உடன்படிக்கை செய்யப்பட்டது; நிலத்தைத் தோண்டும் வினையுந் துவங்கியது. இங்ஙனந் துவங்கியது 1864 ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்களிலாகும். அவ்வினை நாடோறும் நடைபெற்று நவம்பர்த்திங்களுக்கு வந்ததுங் கீழே 711 அடி ஆழம் அகழப்பட்டது; அவ்வளவு ஆழந் தோண்டியதும் நீர்நிலைதட்டுப்பட, அப்பொழுதே நாளொன்றுக்கு அறுநூறாயிர நானாழி தீஞ்சுவைத் தண்ணீர் மேற்பொங்கி வழிந்தோடலாயிற்று. அக்குறிகாரன் பேச்சை முதலில் நம்பாதிருந்த மக்கட்கு நம்பிக்கை வருவித்தற் பொருட்டு அவன் அகக்கண்ணாற் கண்டு வரையறுத்துச் சொல்லியவாறே துளைக்கருவி துருவிச் சென்ற நிலப்படைகள் அமைந்திருந்தன. துவக்கத்தில் துருவுகருவி 100 அடிவரையிற் றுளைத்துச் சென்றநிலம் அடைமண் படையாயிருந்தது; அதன்பின் 35 அடிவரையில் எண்ணெய் கலந்த சுக்கான் கற்படையாதலால் அது நிலக்கரியைப்போல் நன்றாய் எரியத்தக்கதா யிருந்தது; அதன்பின் 100 அடிகாறும் ஒருவகையான சலவைக் கற்படை (Joliet marble) அதன்பின் 125 அடிவரையும் மணலுஞ் சக்கிமுக்கிக் கல்லும் ஒருங்குதிரண்டு இருப்புத் தீக்கல்லுஞ் சிறிது செம்புங் கலந்த படை; அதன்பின் 156 அடிகாறும் மண்ணெண்ணெய் ஊறியபாறைக் களிப்பு, இது தகரமும் ஈயப் பொடியுங் கலந்த பசைபோல் தடுப்பாய்க் கொழுவியவண்டலாய் மேற்கிளம்பியது; அதன் பின் 530 அடி ஆழத்திற் கந்தகக்கலப்புள்ள சுக்கான் கற்படை; அதன்பின் 639 அடி ஆழத்திற் கந்தகங் கலந்த இரும்புஞ் சக்கிமுக்கிக் கல்லும் உடைய ஒரு சுக்கான் கற்படை துளைக்கப்பட்டது; இச் சுக்கான் கற்படை மிகவுங் கெட்டியாய் இருந்தமையால் வேலை மெதுவாகவே நடந்தது; உள்ளடங்கி யிருந்த ஆவி இப்போது வெளிக்கிளம்புதற்கு இடங் கிடைத்தமையால் இந்நிலப் படையின் கண் ஒருவகையான கொந்தளிப்பு அடிக்கடி உண்டா யிற்று; அதனால் அங்கிருந்த தண்ணீர் 30 அடியிலிருந்து 60 அடிவரையிற் சடுதியிற் கீழிறங்கி மறுபடியும் மேன் மட்டத்திற்குச் சடுதியில் எழுவதா யிற்று; அப்போது, துருவு கருவியாற் பெயர்ந்த துண்டுகளும் மற்றைப் பொருள்களும் அத்தண்ணீரொடு கலந்து உடன்வரலாயின; மேலும் மேலும் அத்துருவு தொழில் நடந்து கொண்டே போயிற்று; பின்னர் 711 அடி ஆழத்திற்கு வந்தவுடன் கீழுள்ள பாறையின் வளைவு துளையிடப்பட்டது; நாலரை விரற்கடை அடியிற் றுருவப்பட்ட துளைவழியே 58 வரை வெதுவெதுப்புள்ள தொரு செழும்புனல் பளிங்குபோற் றெளிவாய், வைரம்போற் றூய்தாய், நிலையியற் பொருள் இயங்கியற் பொருள் ஏதுங் கலவாததாய்ப் பருகுதற்கும் உடம்புநலம் பேணுதற்கும் இதுவரையிற் கிடைத்த எல்லா வகையான நீரையும்விட மிகச் சிறந்த தொன்றாய், எக்காலத்தும் ஏழை மக்கட் குதவும் நட்புப் பொருளாய்ச் சடுதியில் வெடித்து மேல் வந்தது.
நம்பிக்கை யில்லாதவர்கட்கு இஃதோர் அரிய பெரிய நிகழ்ச்சியா யிருக்கின்றது; கட்புலனாகாத ஓர் அறிவுக் காட்சியால் வெளிப்படுத்தப்பட்ட இவ்வுண்மை நிகழ்ச்சியை மறுத்து உரைக்கத் தக்கது ஏதுமே இல்லை. இயற்பொருள் நூல் தண்ணீர் அகப்படாதென்று கட்டுரைத்துச் சொல்லியது; மன நூலோ அதனுரையைப் பொய்யென மொழிந்து, இந் நிலவுலகமானது தன்னுருவாணிமேற் சுழன்று செல்லுங்காறும் ஏராளமாய்ப் பெருகியோடும் நீரோட்டம் உள்ளதாகிய ஓரிடத்தை யான் சுட்டிக் காட்டுவேன் என்றது. 1864 ஆம் ஆண்டிலிருந்து சிக்காகோ நகரத்து இந்நீர் ஊற்றானது நாளொன்றுக்குப் பதினைந்து நூறாயிர நானாழி தண்ணீர் அளித்து வருகின்றது என்று கலைநூற் புலமையில்மிக்க சாமுவேல் ஏடன் என்னும் பேராசிரியர் வரைந்திருக் கின்றார்.
இம்மெய்ந்நிகழ்ச்சியினாற் போதரும் உண்மை யாது? பல கலை நூற் புலமையின் மிக்காராலும் அறியப்படாத மறைபொருள்கள், கல்வியறிவே சிறிதுமில்லாத பேதையர் சிலரின் அகக் கண் காட்சியால் நேரே கண்டு தினையத் தனையும் பிழைபடாமல் வெளிப்படுத்தப்படுகின்றன வென்ப தன்றோ? ஆபிரகாம் ஜேம் என்னும் அக் கல்லா ஆண்மகன், இந்நிலத்தின் மேற்பரப்புக்கு 711 அடி ஆழத்தின் கீழ் உள்ளதான அத் தீஞ்சுவைத் தண்ணீர் நிலையை எங்ஙனங் கண்டறிந்தான்? கல்வித்துறையில் ஆழ்ந்து போன துரை மக்களின் காட்சிக்கும் அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் எட்டாத இந்நிலத்தின் ஆழத்தையும், அவ்வாழத்திலுள்ள பெரியதொரு நீர் நிலையையுங் கண்டது அவனது புறக்கண்ணா அல்லது அகக் கண்ணா? புறக்கண்ணோ மேலுங் கீழும் முன்னும் பின்னும் மறைபட்டிருக்கும் பொருள் களையும் நிகழ்ச்சிகளையும் ஒரு சிறிதுங் காணவல்லதாயில்லை; அங்ஙனமிருக்க, அந்நாலிடங்களிலும் அண்மையிலுஞ் சேய்மையிலும் முற்றும் மறைபட்டிருக்கும் பொருள் நிகழ்ச்சிகளைப் பிழையாமற் காணவல்லது ஒன்று உளதாயின், அது நம்மக்களிற் சிலர்க்கு வாய்ந்துள்ள அகக்கண்ணே யாகவேண்டுமென்பது தெற்றெனப் புலனாகின்ற தன்றோ?
அற்றேலஃதாக, கல்வித் துறையிற் சிறந்தாராய்த் திகழும் அறிஞர்க்கும் புலனாகாத மறைபொருள் நிகழ்ச்சிகள், கல்வியறிவில்லாப் பேதையர் சிலர்க்கு நன்குவிளங்குதல் என்னை யெனின், இப்பிறவியிற் கல்லாதவராய்க் காணப்படும் அகக் கண்ணுடையார் சிலர் மேற்சென்ற பிறவிகளிற் பலதுறை களிலும் நன்கு கற்றுத் தம் அகக் கண்ணை மறைத்த அறியாமையிருள் விலகி அகவறிவு நன்கு விளங்கப் பெறுகின்றாராகலின், அவர் இப் பிறவியிற் கல்வியறிவின்றுணையில்லாமலே எல்லாவற்றையும் நன்கு நேரே கண்டறிய வல்ல அகக்காட்சி யுடைய ராகின்றாரென்க.
மேலே காட்டிய மெய்ந்நிகழ்ச்சியில் ஆபிரகாம் ஜேம் என்னுந் தெளிவுக் காட்சியினன் கண்ட நிலத்தின் கீழ் நீர் நிலையினை, அவன் காலத்திருந்தார் எவருமே அறியாராகலின், பிறரொருவர் அதனைக் கண்டறிந்து நினைந்த நினைவே அவனுளத்திற் றோன்றிய தென்று கூறுதலும் ஆகாமை உணர்ந்து கொள்க.
இனிக், கல்வித்துறையிற் றேர்ச்சி பெற்றார் சிலர்க்கும் மறைபொருள் நிகழ்ச்சிகளைக் காணும் அகக்கண் காட்சி யுளதென்பதனை விளக்குவாம். மறைபொருள்களைக் காணும் அக்காட்சிக்கு, அவர்கள் இப்பிறவியிற் பயின்ற நூல்களால் உளதாய அறிவு நேரே துணைசெய்யாவிடினும், இப்பிறவியின் நூலறிவும் மேற்பிறவிகளின் நூலறிவும் ஒருங்கு சேர்ந்து, அவரது அகக்கண்ணை மறைத்த வல்லிருளை அகற்றி அதனை நன்கு விளங்கச் செய்தலின், அவை அக்காட்சிக்கு நேரல் காரணமாதல் கருத்திற் பதிக்கற்பாற்று. இற்றைக்கு 163 ஆண்டுகளுக்குமுன் மேனாட்டிற் சுவீடன் தேயத்தில் டாக்கோம் என்னும் நகரில் 84 ஆண்டுகள் உயிர் வாழ்ந்தவரான சுவீடன்பர்க்கு (Swedenborg) என்னும் ஆசிரியர் கலைநூற்புலமையிற் றலைசிறந்து விளங்கினவர் ஆவர். இவர் தமக்கு அகவை 55 நடக்கையில், இவரது அகக்கண் திறக்கப்பெற்று, மேலுலகக் காட்சி களையுங், கடவுளின் இயல்புகளையும், பலதிறப்பட்ட உயிர்கள் உலகங்களின் காட்சிகளையுங் கண்டு நூல்கள் பல எழுதினார். அவர் எழுதிய அந்நூல்கள் ஒன்றில், தாம் மேலுலகக் காட்சிகளையுங் கடவுளியல்புகளையுங் கண்டு, அவை தம்மை நேரே காணமாட்டாத இந்நிலவுலகினர்க்கு அறிவிக்கும்படி யாகவே கடவுள் தமக்கு அகக்கண் திறப்பித்தருளினார் என்று நுவன்றிருக்கின்றார். அவரது காலத்திருந்த காண்டு (Kant) முதலான மெய்ந்நூலாசிரியரும் பிறரும், அவரது அகக்காட்சியின் மெய்ம்மையை வியந்து பேசிப் பாராட்டியிருக்கின்றனர். அத்தகைய அப்பெரியார் பலரறியக்கண்டு சொல்லிய இரண்டு மறைபொருள் நிகழ்ச்சிகளை ஈண்டெடுத்துக் காட்டுதும்:
டாக்கோம் நகரத்தில் உலாந்தா அரசன் தூதுவராய் அமர்ந்திருந்த துரைமகனாரின் மனைவியான ஆர்த்திவில்லி இறந்துபோன தம் கணவர் உணவு படைக்கும் வெள்ளிக் கலன்களைத் தன்னிடங் கடனாக வாங்கினமையின், அவற்றிற்குரிய பணத்தைச் செலுத்தும்படி ஒரு பொற் கொல்லனால் அடிக்கடி வேண்டப்பட்டார். ஆனால் அப்பணம் அவனுக்குத் தங் கணவராற் செலுத்தப்பட்ட தெனவே அவ்வம்மையார் நம்பினார்; என்றாலும் அதற்குப் பெற்ற பற்றுச்சீட்டை அவர் கண்டெடுக்கல் முடியவில்லை; ஆகவே, அச்சீட்டு எங்கே யுளதென்று தங் கணவரைக் கேட்டு அறிவிக்கும்படி அவ்வம்மையார் சுவீடன்பார்க்கு ஆசிரியரைக் கெஞ்சி வேண்டிக் கொண்டார். மூன்றுநாட்கழித்து அவ்வாசிரியர் அவ்வம்மை யாரது இல்லத்திற்குப் போந்து, அங்கே காணவந்திருந்தார் பலர் முன்னிலையில், தாம் அவர்தங் கணவனாரைக் கண்டு பேசியதையும், அவர் அக் கடனைச் செலுத்திப்பெற்ற பற்றுச்சீட்டு அவரது அவ்வில்லத்தின் மேன்மாளிகையின் கண்ணதான ஓர் அறையிலுள்ள நிலைப்பேழையில் வைக்கப்பட்டிருத்தலைத் தாம் அவர்வாய்க் கேட்டறிந்ததையும் எடுத்துரைத்தார். ஆனால், ஆர்த்திவில்லி என்னும் அவ்வம்மையார் தாம் அந்நிலைப்பேழையை முன்னமே தேடிப் பார்த்தும், அஃதங் கில்லாமையை அறிவித்தார். அதற்குச் சுவீடன் பர்க்கு சொல்லியதாவது; அவ்வம்மையாரின் கணவரது ஆவியுருவந் தமக்கு அறிவித்ததில் அந்நிலைப்பேழையின் இடது பக்கமாயுள்ள ஓர் இழுகையை இழுத்தால் அதில் ஒரு கள்ள அறை காணப்படும்; அக்கள்ளவறைக்குள் மறைபொருளாகத் தாம் உலாந்த அரசற் கெழுதிய கடிதங்களும் அப்பற்றுச் சீட்டும் இருக்கும் எனப் போந்த செய்தி குறிப்பிடத் தக்கதாகுமென்பதே. அச்செய்தி கேட்டு அங்கிருந்தா ரெல்லாரும் உடனே மேன் மாளிகைக்குச் சென்று. அவர் விளக்கிச் சொல்லியபடியே இதற்குமுன் எவரும் அறியாத அக் கள்ள வறையில் அப்பற்றுச் சீட்டும் அரசியற் கடிதங்களும் இருக்கக் கண்டார்கள்.
இந்நிகழ்ச்சியிற் சொல்லப்பட்ட பற்றுச்சீட்டை மறைத்து வைத்து இறந்துபோன துரைமகனாரன்றி வேறெவரும் அதனை அறியாதிருந்தும், அத்துரைமகனாரின் ஆவியுருவினைத் தமது அகக் கண்ணினாற் றெளிவாய்க் கண்டும், மறைபட்ட அச்சீட்டு இருந்த இடத்தை அவ்வாவியினாற் றெரிந் துரைத்தும், ஒருவரன்றிப் பலர் முன்னிலையில் அதனை மெய்ப்பித்த ஆசிரியர் சுவீடன் பர்க்கின் தெளிவுக்காட்சி எவரானும் ஐயுறுதற்கு இடந்தராத வியப்பினதாதல் கருத்திற் பதிக்கற்பாற்று.
இன்னும், இவ்வாசிரியர் 1759 ஆம் ஆண்டு செப்டம்பர்த்திங்களில் ஒரு சனிக்கிழமை பிற்பகல் நாலுமணிக்கு இங்கிலாந்திலிருந்து காட்டன்பர்க்கு என்னும் நகர்க்கு வந்து, அங்கே ஒரு நண்பரால் அவர்தம் வீட்டிற்கு அழைக்கப்பட்டார். இரண்டு மணி நேரத்திற்குப் பின் அவர் அவ் வீட்டை விட்டு வெளியேபோய்ப், பிறகு உள்ளே திரும்பிவந்து, அப்போதங்கிருந்த விருந்தினர் குழுவை நோக்கி இப்போது தான் டோக்கோம் நகரத்தில் ஒரு பொல்லாத தீப்பற்றி எரிகின்றது! அத் தீயானது விரைந்து பரவுகின்றது! என்று சொல்லிக் கொண்டே அடிக்கடி வீட்டைவிட்டு வெளியே போன வண்ணமாய்த் துடிதுடித்தார். அந்த டோக்காம் நகரமானது காட்டன் பர்க்கு நகரத்திற்கு ஐம்பது செர்மன் மைல் தொலைவிலுள்ளது. மேலும், அங்கே தம் நண்பர் ஒருவரின் வீடு இப்போதே சாம்பலாய்ப் போய்விட்ட தெனவுந், தமது இல்லமுங்கூட இடர்ப்பாடான நிலைமையி லிருக்கின்ற தெனவும் மொழிந்தார். ஆனால், மாலை எட்டு மணிக்கு மறுபடியும் அவர் வீட்டைவிட்டு வெளியே போய்த் திரும்பி வந்து, தமது வீட்டிற்கு மூன்றாவதான இல்லத்திலேயே அத்தீ அவிக்கப்பட்டு விட்டது என்று பெருமகிழ்ச்சியுடன் கூறினார். அவர் கூறிய அச்செய்தியானது அந்நகர மெங்கும் பெரியதொரு குழப்பத்தினை உண்டாக்கியது; அன்று அம்மாலைக் காலத்திலேயே அச்செய்தி அரசியற் றலைவர்க்கு அறிவிக்கப்பட்டது. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே அத்தலைவர் சுவீடன்பர்க் காசிரியரைத் தம்பால் வருவித்து அத்தீ நிகழ்ச்சியைப்பற்றி வினவினார். அதற்கு அவர் அந் நெருப்புண்டான வகையையும், அஃதெவ்வளவு நேரம் பற்றி எரிந்தது, பின் அஃதெவ்வாறு அணைக்கப்பட்டது என்பவை களையு மெல்லாஞ்சீராய் எடுத்துரைத்தார். அங்ஙனம் அந்நெருப்புப் பற்றி எரிந்த நேரத்தில், வாணிகக் கழகத்தினரால் விதிக்கப்பட்ட ஓர் ஒற்றன் திங்கட்கிழமை மாலையிற் காட்டன்பர்க்கு நகரத்திற்கு வந்து சேர்ந்தான். அவன் கொணர்ந்த கடிதங்களிற், சுவீடன் பர்க்கு மொழிந்த வண்ணமே அந்நெருப்புப்பற்றிய வரலாறு குறிக்கப் பட்டிருந்தது. அதற்கடுத்தநாட் காலையில் வந்த அரசியற் றூதுவனும் முன்வந்த செய்தியின் உண்மையை அரசியற்றலைவர்க்கு உறுதிப்படுத்தி விளம்பினன். சுவீடன்பர்க் காசிரியர் மொழிந்தவாறே அந் நெருப்பு அன்று மாலை எட்டு மணிக்குத்தான் அவிக்கப்பட்டது என்க.
இங்ஙனத், தாமிருந்த இடத்திற்கு நெடுந்தொலைவிலுள்ள தமதூரில் நெருப்புப் பற்றி எரிந்ததனையும், பின்னரது அணைக்கப்பட்டதனையும் புறக்கண்ணெதிரே கண்டாற்போல், அத்துணை விளக்கமாகத் தமது அகக் கண்ணாற் கண்டு அரசியற்றலைவர் உட்பட எல்லார்க்கும் எடுத்துக் கூறிய சுவீடன்பர்க் காசிரியரின் அகக்கண் காட்சியினுண்மையினை எவரேனும் மறுத்துச் சொல்லுதல் இயலுமோ? இயலாதன்றோ.
இனித், தெளிவுக்காட்சி யுடையார் சிலரால் நோயாளி கட்கு உண்டாகும் நன்மை சிறிதன்று. ஏனென்றாற், சில கொடிய நோய்களின்றன்மை அந்நோய்களாற் பற்றப்பட்டு வருந்து வார்க்குந் தெரிவதில்லை; அவர்க்கு நோய் தீர்க்க வரும் வல்ல மருத்துவர்க்குந் தெரிவதில்லை. சிறந்த மருத்துவர்களும் நோயின் றன்மையும் அதன் மூலமும் நன்குணரப் பெறாமற் பிழைபடுத லால், அவர் கொடுக்கும் மருந்து நோயாளிக்கு நோயினால் விளையுந் துன்பத்தைவிட மிகக் கொடிய துன்பத்தையும் உடலழிவையும் விளைத்துவிடுகின்றன. ஏனென்றால், உடம்பின்மேலே காணப்படும் நோய்களை மருத்துவர்கள் நேரே காண்பதனாற் பெரும்பாலும் பிழைபடாமல் அவை தீர்க்கு முறைகளைச் செய்து அவை தம்மைத் தீர்த்து விடுகின்றார்கள். ஆனால், உடம்பினுள்ளே நிகழும் நோய்க் காரணங்களையோ அங்ஙனம் அவர்கள் நேரே காண்டல் இயலாமையால், வெறும் உய்த்துணர்ச்சி ஒன்றே கொண்டு ஆராய்ந்து தாங்கருதிய மருந்துகளை ஊட்டுகின்றார்கள்; அல்லது உடலுறுப்புகளை அறுத்துப் பார்த்து அவையிற்றை நீக்க முயல்கின்றார்கள்; இம் முயற்சியிலே பலகாலும் பிழைபட்டு விடுதலால், நோயாளிகள் அவர்தரும் மருந்தாலும் அவர்செய்யும் முறையாலும் பெருந் துன்புழந்து இறந்துபோகின்றார்கள்! இவ்வாறு நேரும் இடர்கள் சிலவற்றை யாமே பார்த்திருக்கின்றேம். ஒருகால் ஒரு செல்வர் வீட்டு இளமாதரார் ஒருவர்க்கு மிகக்கொடியதொரு வயிற்று வலியுண்டாயிற்று. அதற்காக ஆங்கில மருத்துவர் சிலர்பாற் பெரும் பொருள் கொடுத்து மருந்துகள் வாங்கித் தொடர்பாக உட்கொண்டும், ஏதும் பயன் விளைந்திலது. அதனாற் சிறிது காலத்திற்குப் பின் அம்மாதரார் சென்னைக்கு வந்து, அங்கு அறுத்துத் தீர்க்கும் வல்லமருத்துவர் ஒருவர்க்குத் தாம் படும்பாட்டை எடுத்துரைப்ப, அவர் வயிற்றினுள்ளே ஏதோ ஒரு பிசகு நேர்ந்திருக்கின்றது; வயிற்றை அறுத்துப் பார்த்துத்தான் அந்தப் பிசகை நீக்க வேண்டுமென்றனர். அதற்கு அம்மாதரும் அவர் தஞ் சுற்றத்தாரும் இசையவே, அம் மருத்துவர் அவ்வம்மையார்க்கு மயக்க மருந்து கொடுத்து அவரது வயிற்றை அறுத்துப் பார்க்க அதனுள்ளே ஏதொரு பிசகும் இல்லாமை கண்டு ஏமாற்றம் அடைந்தனர். உடனே அவரது வயிற்றை மறுபடியும் மூடித் தைத்து, அவ்வம்மை யார்க்கு மயக்கந் தெளிவித்தார். அவ்வம்மையார் பின்னும் வயிற்று வலியால் துன்புற்றே வந்தனர். இங்ஙனமே மருத்துவர் செய்யும் பிழைபாடுகள் இன்னும் பலவற்றைப் பார்த்துங் கேட்டு மிருக்கின்றேம். ஆகையால், வெறும் உய்த்துணர்ச்சி ஒன்று கொண்டே உடம்பின் அகத்தே நேரும் பழுதுகளைத் திருத்தமாய் உணர்தல் செல்லாதென்பது உணர்ந்து கொள்ளல் வேண்டும்.
இங்ஙனமாக எத்துணைச் சிறந்த மருத்துவர்களும் உடம்பின் அகத்துள்ள நோயின் கூறுபாடுகளைச் செவ்வனே யறியப்பெறாமற் பிழைபடுதலாலும், அதனால் எத்தனையோ சிறந்த மக்கள் பெரிதுந் துன்புற்று உயிரிழத்தலாலும் அயல்நாடுகளிலுள்ள மருத்துவ அறிஞர் சிலர், தெளிவுக் காட்சியுடையார் சிலரைத் துணைகொண்டு நோயாளிகளின் உடம்பினுட் பகுதிகளின் நிலையினைத் தெளிவாகத் தெரிந்து, அவர்க்குள்ள நோய்களை எளிதிற் றீர்த்து வருகின்றார்கள். இதற்கு உண்மையாக நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியினை ஈண்டு எடுத்துக் காட்டுதும்:
உவில்டு எனப் பெயரிய ஒரு சிறந்த மருத்துவ ஆசிரியர் நல்ல காலமாய்த் தெளிவுக்காட்சி இயற்கையே வாய்ந்த ஒரு மாதராரது பழக்கத்தைப் பெற்றனர்; இம்மாதரார் நல்லதொரு குடும்பத்தில் அமைதியாய் வாழ்ந்து வரும் நல்லொழுக்கம் வாய்ந்தவர். ஒருநாள் இம்மருத்துவர் அவ்வம்மையாரை நோக்கித், தமக்கு நண்பராயுள்ளார் ஒருவர் பல ஆண்டுகளாக ஒவ்வொரு நாளின் இரவிலுந் தம்முடைய முதுகிலும் நெஞ்சிலுஞ் சொல்லற்கரிய நோய் கொண்டு நெடுநேரம் வருந்துகின் றாரென்றும், இப்போது சிலநாட்களாக ஒரு நாற்காலியில் அவர் இரவு முழுதும் உட்கார்ந்திருக்க வேண்டியவராய் விட்டமையால் அவருடைய கால்கள் வீங்கத்துவங்கியிருக்கின்றன வென்றும் புகன்றார். இந்த நண்பர் மூன்றாண்டுகளாக இலண்டன் மாநகரிற் புகழ்பெற்ற மருத்துவர் பலரால் முறையாகப் பார்க்கப்பட்டுவந்தவர். அவரிற் சிலர் அந்நோயாளியின் நெஞ்சப்பையில் ஏதோ கருகலான ஒரு நோய் இருக்க வேண்டுமெனக் கூறினர்; மற்றுஞ் சிலர் அஃதொரு நரம்பைப்பற்றிய வலியாய் இருக்கவேண்டும் என்றனர்; ஒருவர் அதனைப் பொருத்துப் பிடிப்பு என்றனர்; கடைசியாக உசாவப்பட்ட ஒருவர் அது முதுகெலும்பு அழுகிப் போனமையால் உண்டாயதெனப் பகர்ந்தனர்.
பிறகு அம்மருத்துவ ஆசிரியர் குறிப்பிட்ட ஒருநாளில் அவர்தம் நோயாளி நண்பர் அவ்வம்மையாரை வந்து கண்டனர். அவ்வம்மையார் சிறிதுநேரம் அவரைச் சும்மா உற்று நோக்கினர். அதன்பின் அந்நோயாளி அவ்வறையை விட்டுச் சென்றபின், அந்நங்கையார் அவர்க்குள்ள நோயின் நிலைமையைப் பற்றிப் பின்வருமாறு மொழிந்தனர்: அந்நோய் எத்தன்மைய தென்பதைக் கண்டேன்; அவரது உடம்பு ஊடுருவிக் காணத்தக்க துலக்கமுடையதாய்த் தோன்றினமையால் யான் அந்நோயின் றன்மையைத் தெளிவாய்க் கண்டேன். அவரது நெஞ்சப்பைக்குப் பின்னே ஒரு கட்டி கிளம்பியிருக்கின்றது; அஃதொரு கடுக்கொட்டையின் அளவுள்ளதாய்க் காணப்படுகின்றது; அஃது அழுக்கு நிறம் உடையதாயிருக்கின்றது; அஃது அசைவதைப் பார்த்தால் அது வெடித்து விடும்போற் றோன்றுகின்றது; முற்றும் ஓய்ந்திருப்பதைத் தவிர, வேறேதும் அவர்க்கு நன்மை செய்யாது என்பது.
உவில்ட் என்னும் அம்மருத்துவ ஆசிரியர், அம்மாதரார் சொல்லியதன் கருத்து இன்னதென அறிந்து, தம் நோயாளி நண்பர்க்கு மருத்துவஞ்செய்யும் அறிஞர்க்குப் பின்வருமாறு ஒரு கடிதம் எழுதினார்: நம் நண்பர்க்குள்ள நோயின் இயல்பு இன்னதெனக் கண்டுகொண்டேன். அவரது நெஞ்சப் பையினின்று கீழிறங்குஞ் செந்நீர்க் குழாயின்மேற் கடுக்கொட்டை யினளவுள்ள ஒருகட்டி கிளம்பியிருக்கக் காண்கின்றோம்; விலாவெலும்பு
களினிடையேயுள்ள நரம்புகளை இக்கட்டி நெருக்குவ தனாலேயே அவர்தம் முதுகிலும், மார்பின் புறத்தும் அத்துணைக் கொடியநோயும் வலியும் உண்டாயிருக்கின்றன. நாளை நீங்கள் காணும் மருத்துவ ஆசிரியர்க்கும் இந்நோயின் நிலையை எடுத்துரைத்து, அவர் யாது சொல்கின்றாரென்பதை எனக்குத் தெரிவியுங்கள் என்பது.
பிறகு, அந்நோயாளியானவர் மற்றைய மருத்துவர்களோடுஞ் சூழ்ந்து பார்த்ததில், தெளிவுக்காட்சியுடைய அம்மாதரார் தமது அகக்கண்ணாற் கண்டு சொல்லிய அந்நோயின் றன்மையே உண்மையென்று உறுதிப்பட லாயிற்று. இன்னும், அந்நோய் தீர்க்கத்தக்க முறை அந்நோயாளி முற்றும் ஓய்ந்திருத்தலே யாகுமென்பதூஉம் அம்மையார் சொல்லியவாறே அம்மருத்துவ ரெல்லாராலும் ஒப்புக் கொள்ளப்பட்டது. அம்மாதரார் அந்நோயினியல்பைக் கண்டுரைத்தமையினாலேயே அந்நோயாளி அந்நோய் தீர்ந்து உயிர்பிழைத்தார். அவ்வம்மை யாரைக் காண்பதற்குமுன் அவர் வேட்டமாடவுங், குதிரை ஊரவும், வண்டியோட்டவும், மேசைப்பந்தாடவும் மருத்துவர் களாற் கற்பிக்கப்பட்டிருந்தனர். ஆனால், அங்ஙனஞ் செய்திருந்தால் அவர் உயிரிழந்திருப்பர்! தெளிவுக்காட்சி வாய்ந்த அம்மாதரார் கூறிய அறிவுரை கேட்டு அவர் முழுதும் ஓய்ந்திருந்தமையினாலேயே மறைந்த இடத்திலுண்டான அக்கொடிய நோய் நீங்கி நலம் பெற்றார்.
பார்மின்கள்! ஆராய்ச்சி வல்ல மருத்துவர் பலரறிவுக்கும் எட்டாத அப்பொல்லாத உள்நோயின்றன்மை, மருத்துவப் பயிற்சியே யில்லாத அம்மாதராரது அகக் கண்ணுக்கு எவ்வளவு நன்றாய்ப் புலனாகியது! அது மட்டுமோ! அவர் கூறிய எளிய முறையைப் பின்பற்றி யொழுகியதனால் அது முற்றுமே தீர்ந்தும் ஒழிந்ததன்றோ? ஆகவே, இத் தமிழ்நாட்டவர்களும் இயற்கையிலேயே தெளிவுக்காட்சி வாய்ந்தவர்களா யிருப்பவர்களை ஆங்காங்குத் தெரிந்தெடுத்துவைத்து, அவரது உதவியினால் தமக்குள்ள நோயின் றன்மைகளை உள்ளவாறுணர்ந்து, அவர் கூறும் முறைப்படியே வழுவாது நடந்து, தமக்குள்ள நோய்கள் நீங்கி நலம் பெறுவார்களாக! இந்நாட்டில் தெளிவுக் காட்சியில்லாதார் பலர் அஃதுடை யார்போற் கள்ளமாய் நடந்து மக்களைப் பலவகையால் ஏமாற்றி, அவரது பொருளையுங் கொள்ளை கொண்டு அவரையும் உயிர் மாளச் செய்கின்றனர். ஆதலால், ஆராய்ச்சி வல்ல அறிஞரின் உதவியால், தெளிவுக் காட்சி யுண்மையாக வாய்ந்தார் இன்னாரெனத் தீர்மானமாய்த் தெரிந்து, அதன் பின் அவருதவியை நாடுதலே செயற்பால தென்பதனை ஒவ்வொருவருங் கருத்திற் பதித்தல் வேண்டும்.
இனித், தெளிவுக்காட்சியின் ஆற்றல் மிகுதியாயுள்ளவர்களுக்கு இப்பிறவியின் நிகழ்ச்சிகள் மட்டுமே யன்றிக் கடந்துபோன பிறவிகளின் நிகழ்ச்சிகளும், இனி வரும் பிறவிகளின் நிகழ்ச்சிகளுந் தெளிவாக விளங்கி விடுகின்றன. செர்மன்தேயத்து ஆசிரியரான சோக்கி (zschokke) என்பவர் தாமே எழுதிவைத்த தமது வாழ்க்கை வரலாற்றில் தமக்குள்ள தெளிவுக்காட்சியின் ஆற்றலை வியந்து கூறுவது வருமாறு:
எனக்கு முழுதுமே அறிமுகமில்லாத ஒருவரை யான் எதிர்ப்பட்டு அவர் உரையாடுவனவற்றை யான் உற்றுக் கேட்குங்கால், அக்காட்சி எனக்கு இடையிடையே தோன்றினமையால், அவரது முன்னைப் பிறவியிலிருந்து அவர் இப்போதிருக்கும் நேரம் வரையில் நிகழ்ந்த அவருடைய வாழ்க்கை வரலாறுகள் பல நுட்பமாகவுங் குறிப்பிடத்தக்க ஒன்றிரண்டு முதன்மையான செய்திகள் சிறப்பாகவும் என்முன்னே கனவெனக் குறுக்கிட்டுக் காணப்படலாயின; ஆயினும், அவை யான் வேண்டாமலே என் வயமின்றித் தெளிவாய்த் தோன்றிச் சிறிதுநேரத்தில் மறைந்துபோயின.
ஒருகால் ஒரு தையற்காரரின் இளம்பருவத்து வரலாற்றினை, அவள் எங்கள் அறையை விட்டுப் போன அப்பொழுதே என் குடும்பத்தார்க்கு எடுத்துச்சொன்னேன். யான் அதற்குமுன் அவளைப் பார்த்ததேயில்லை. அவ்வாறிருந்தும், யான் சொல்லியவை முழுதும் உண்மையாயிருந் தமையால், யான் அம்மாதின் இளம்பருவ வரலாற்றை முன்னமே தெரிந் திருக்கத்தான் வேண்டுமெனக் கூறி, அதனைக் கேட்ட என் குடும்பத்தினர் நகையாடினர்.
இன்னும் ஒருகால் யான் கானகப்பணியாள (forester) ராம் இளைஞர் இருவருடன் உவால்டுஷட்டு (Waldshut) என்னும் நகர்க்கு ஏகினேன். மாலைக்கால மாயினமையால் வழிநடந்த வருத்தந்தீர ஒரு விடுதிக்குச் சென்று, அங்குக் குழுமிய பலருடன் உண வருந்தாநிற்கையில், அவர்கள் அறிதுயிலைப் பற்றியும், உறுப்புக் குறியைப் பற்றியும் பகடிபண்ணினர். அவர்க்கு அறிவு தெருட்டும் பொருட்டு, அக்குழுவில் ஒர் இளைஞரை நோக்கிச் சிறிது காலத்திற்கு முன் நடந்த உமது வாழ்க்கை வரலாற்றை யான் எடுத்துரைத்தால் நீர் அதனை ஒப்புக் கொண்டு சொல்வீரா? என யான் வினவ, அவர் உண்மையாயின் ஒப்புக் கொண்டுரைப்பேன் என்றனர். அதன் மேல் அவ்விளைய வணிகருடைய பள்ளிக்கூட நடக்கைகளையும், புல்லிய குற்றங்களையும், அவர் தந் தலைவனது இருப்புப் பெட்டியிற் செய்த திருட்டையும், அவ்விருப்புப்பெட்டி வைக்கப்பட்டிருந்த அறையின் அடை யாளங்களையுமெல்லாம் நன்கெடுத்துக் கூறினேன். அவையெல்லாம் முழுதும் உண்மையாயிருக்கக் கண்ட அவ்விளைஞர் மிகவும் வியப்புற்ற வராகி, யான் எதிர் பார்த்ததற்குமேல் உண்மையை ஒப்புக்கொண்டு சொல்லினர்.1 என்பது.
இப்பெற்றித்தான தெளிவுக் காட்சியின் ஆற்றல் இன்னும் மிகுதியாய் வளரப்பெற்றார்க்கு முற்பிறவி, இப்பிறவிகளின் நிகழ்ச்சிகளேயன்றி இனிவரும் பிறவிகளின் நிகழ்ச்சியும் இனிது விளங்காநிற்கும். ஆகவே, இத்தெளிவுக் காட்சியினைத் தவப்பயிற்சியினால் விளங்கச் செய்து கொண்டு, நம்மனோர் தொலைவிலுணர்தலாகிய நிகரற்ற விழுமிய அறிவைப் பெறுவார்களாக! ஓம்.
தொலைவிலுணர்தல்
– முற்றும் –
★ ★ ★



