தொலைவிலுணர்தல் மறைமலையடிகள்

1. தொலைவிலுணர்தற் பெயர்ப்புதுமை

இத் தலைப்பெயர் பலருக்குப் புதுமையாகக் காணப்படலாம். அங்ஙனம் புதுமையாகத் தோன்றினாலும் இதனால் உணர்த்தப்படும் பொருளோ பெரும்பாலும் எல்லார்க்குந் தெரிந்ததொன்றேயாம். அன்பிற் சிறந்த மனைவி, நெடுநாளாக ஏதொரு செய்தியுந் தெரிவியாமல் தொலை விலிருந்த தன் காதலனைப் பற்றி ஆழ நினைந்து கொண்டிருக்கையில் திடுமென அவனிடமிருந்து கடிதம்வரப் பார்த்து வியப்படைகின்றாளன்றோ? ஒவ்வொருகால் நாம் நமக்கு இனிய நண்பரைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போது அவர் திடீரென்று எதிரே வர உடனே நாம் வியப்படைந்து உங்களுக்கு ஆண்டு நூறு, இப்போது தான் உங்களைக் குறித்துப் பேசிகொண்டிருந்தோம் என்று சொல்கின்றேம் அல்லமோ? இவ்வாறு தொலைவிலுள்ளவரை நினைப்பதும் நினைக்கப்பட்ட அவர் திடீரென வருதலும் அல்ல தவரிடமிருந்து செய்தி வருதலும் நமது உயிர் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் நிகழ்தல் வழக்கத்திற் கண்டு கொள்ளலாம். இங்ஙனம் நாங் காணவுங் கேட்கவும் ஏலாத தொலைதேயங்களில் நிகழும் நிகழ்ச்சிகளை நம் மனமானது எளிதில் உணர வல்லதாயிருக்கின்றது. தொலைநாட்டிலுள்ள ஒருவர் தம் நண்பரைப் பற்றி நினைந்த அப்பொழுதே வேற்றுநாட்டிலுள்ள அந் நண்பரும் அவரைப் பற்றி நினைந்ததைப் பின்னால் வந்த கடிதங்கள் செவ்வையாக விளக்கிக் காட்டியிருக்கின்றன. இதற்கு எடுத்துக்காட்டாக எமதறி வெல்லையில் உண்மையாக நடந்த ஒரு வரலாற்றினை இங்கெடுத்துக் காட்டுகின்றேம்.

எமக்குப் பதினைந்து பதினாறு ஆண்டிருக்கும். செந்தமிழ் இலக்கண இலக்கியங்களை மிக்க அருளோடும் எமக்கு எடுத்து அறிவுறுத்திய நல் ஆசிரியரான நாராயணசாமிப் பிள்ளை யவர்கள் நாகபட்டினத்திற் புத்தகக் கடை வைத்திருந்தார்கள். அப்போது யாம் ஆங்கிலக் கல்லூரியில் ஆங்கிலமும் பயின்றுகொண்டிருந்தேமாகலின், ஒவ்வொரு நாளும் மாலையிற் கல்லூரியினின்றும் வந்தவுடனே புத்தகக் கடைக்குச் சென்று அருமையிற் சிறந்த எம்மாசிரியரிடஞ் செந்தமிழ் நூல்களைப் பயில்வது எமக்கு வழக்கமாய் நடந்து வந்தது. இங்ஙனம் நடந்து வருகையில், யாங் கல்வி பயிலும் ஆங்கிலக் கல்லூரியில் மேல்வகுப்பிற் கலை பயின்று வந்த மாணவர் ஒருவர் எமக்குச் சிறந்த நண்பராகித் தாம் அப்போது கற்று வந்த மனோன்மணீயம் என்னும் ஒரு நாடகக் காப்பியத்தை எம்மிடங் காட்டினர். அதனை வாங்கி நோக்குதலும் அக் காப்பியத்தின் சொன்னயம் பொருள் நயங்களுள் கதைப்போக்கும் அதன் புதிய நடையும் எமதுள்ளத்தை மிகவுந் கவர்ந்தன; உடனே அதனை எடுத்துப் போய் எம் ஆசிரியரான நாராயணசாமிப் பிள்ளை யவர்களுக்குச் சொல்லிக் காட்டினேம்; அக் காப்பியத்தின் அருமையைக் கேட்டதும் இதனை இயற்றினவர் யார்? என்று ஆசிரியர் எம்மைக் கேட்டனர். அதற்குத் திருவனந்தபுர அரசர் கல்லூரியில் அறிவுநூற் புலவராய் அமர்ந்திருக்கும் ஆலப்புழை எம்.ஏ.சுந்தரம் பிள்ளை அவர்களே என்று விடை பகர்ந்தேம். அதுகேட்ட ஆசிரியர் சிறிதுநேரம் சும்மாவிருந்து, யாம் இருபது ஆண்டுகளுக்குமுன் மலையாளஞ் சென்றிருந்தேம்; அப்போது ஒருகால் ஆலப்புழையில் தங்கநேரிட்டது; அப்பொழுது தான் ஆங்கிலமொழியில் கற்றுத் தேறிய சுந்தரம் பிள்ளை என்பவர் ஒருவரைக் கண்டேம்; அவர் பெருமாள் பிள்ளை மகன்; அவரோடு யாம் தங்கியிருந்த சிலநாளும் அவர் எம்மிடம் யாப்பருங்கலக் காரிகையிற் பல ஐயப்பாடுகள் கேட்டுந் தெளிந்து எம்மிடம் பெரிதும் அன்பு பாராட்டி, எம்மைத் தம்முடனேயே இருக்கும்படி வற்புறுத்தினார். அதற்கு யாம் இசையாமல் வந்துவிட்டேம். அப்போது அவர்க்கு ஆண்டு இருபது இருக்கலாம். இப்போது நாற்பது இருக்கும். இந்நூல் இயற்றியவர் அவராகத்தாம் இருக்கவேண்டும் என்று மொழிந்தார்கள் . ‘அவ்வாறாயின் அவர்க்கு ஒரு கடிதம் எழுதலாமா என்று ஆசிரியரைக் கேட்டேம். அதற்கு ஆசிரியர் அவ்வாறே செய்க என்று சொல்லித் தாம் இருபது ஆண்டுகட்குமுன் ஆலப்புழை வந்திருந்ததும் அவரைத் தாங் கண்டதும் ஆகிய அடையாளங்களெல்லாம் நன்கு குறிப்பிக்கும் படி கட்டளையிட்டார்கள். அவ்வாறே அவ்வடையாளங்களைக் குறித்து அகவற் பாட்டில் ஒரு கடிதம் எழுதிச் சுந்தரம் பிள்ளையவர்கட்கு விடுத்தேம். அதற்கு மறுமொழிக் கடிதம் பத்துநாட் கழித்து வந்தது; அக் கடிதத்தொடுகூடவே தாம் இயற்றிய மனோன்மணீயம் முழுப் புத்தகம் ஒன்றும் எம் ஆசிரியரவர்கட்குப் பிள்ளையவர்கள் தம் வணக்கவுரைகளுடன் விடுத்தார்கள். அவர் எழுதிய கடிதத்தைப் பிரித்துப் பார்க்கையில் அதிற் பின்வருமாறு எழுதப் பட்டிருந்தது.

அன்பார்ந்த ஐயா,

யான் ஐந்தாறு நாட்களுக்கு முன் சுகத்திற்காகத் திருக்குற்றாலம் போயிருந்தேன். தங்களைப் பிரிந்து இருபது வருடங்களுக்குமேல் ஆனமையால், இதுகாறும் தங்களை நினையாமலிருந்த யான் திருக்குற்றாலத்தில் போயிருந்த போது, தங்களைப்பற்றி அடிக்கடி நினைக்கலானேன்; தங்கள் நினைவு எனக்கு மிகவும் பலமாகத் தோன்றியது. பிறகு நாலைந்து நாட்கள் கழிந்து திருவனந்தபுரம் திரும்பிவர, என் வீட்டில், தங்கள் மாணவர் வேதாசலம் பிள்ளையவர்கள் தங்களைப்பற்றி எழுதிய கடிதம் வந்திருந்தது. அதனைப் பார்த்ததும் எனக்குண்டான வியப்பு இவ்வளவென்று சொல்ல முடியாது- என்று பின்னுஞ் சிலவற்றைச் சேர்த்து எழுதி யிருந்தார்; ஈண்டெழுதும் பொருளுக்கு அக் கடிதத்திலுள்ள இவ்வளவு மட்டுமே வேண்டுமாகையால், எஞ்சியவற்றை இங்கே பதிப்பியாது விடுகின்றேம். இக்கடிதத்தால் அறியற்பாலது யாது? எம் ஆசிரியரும் யாமுஞ் சுந்தரம் பிள்ளை யவர்களைப்பற்றிக் கருத்தூன்றிப் பேசிக்கொண்டிருக்கையில், நாகப்பட்டினத்திற்கு நெடுந்தொலைவிலுள்ள திருக்குற்றாலத்தில் அப்போது தங்கியிருந்த சுந்தரம் பிள்ளை யவர்கட்கும் எம் ஆசிரியரைப் பற்றிய நினைவு சடுதியில் உண்டானதன்றோ? இருபது ஆண்டு காலமாக ஒருவரை யொருவர் நினைவு கூராமலிருந்த இவ்விருவரும் ஒரே காலத்தில் ஒருவரை ஒருவர் எமது முயற்சியால் நினைவு கூர்ந்தமை பெரிதும் உற்றுநோக்கற் பாலதாகும். எம் ஆசிரியர் பிள்ளையவர்களை மிகவும் ஆழ்ந்து நினைந்த நினைவானது அதே நேரத்தில் தொலைவிலிருந்த பிள்ளையவர்கள் உள்ளத்திலும் எம் ஆசிரியரைப் பற்றிய நினைவினை உடனே எழுப்பி விட்டது. இக்காலத்திற் கம்பி வழியாக விடுக்கப்படுஞ் செய்தியானது மிக விரைவாகச் சென்று நெடுங்தொலைவி லுள்ளார்க்கும் அறிவிக்கப்படுதலை எல்லாரும் அறிந்திருக் கின்றார்கள். ஆனால், அக் கம்பியினும் விரைவாகச் சென்று நமது நினை வானது ஓர் இமை கொட்டும்முன் பிறர்க்கு நாம் கருதியதை உணர்த்தும் புதுமையினை எவரும் நினைந்து பாராததும், எவ்வகை யுதவியும் வேண்டாமல் நமது நினைவு கடந்து செல்லவிடும் ஆற்றலைத் தம்மிடத்து மிகுதிப்படுத்திக் கொள்ளாததும் ஏனோ? மின்செய்தி விடுப்பதற்குக் கம்பி வேண்டும்; அம் மின்செய்தி விடுக்கத் தெரிந்தவர்கள் உதவி வேண்டும்; அவர்க்குப் பொருள் தரல்வேண்டும். ஆனால், நமது நினைவைச் செலுத்துதற்கோ எதனுதவியும் நமக்கு வேண்டு வதில்லை. நம்முதவியே நமக்கு வேண்டும், தவ முயற்சியில் முதிர்ந்த பெரியார்கள் தாம் இருந்தவிடத்திருந்தே உலகமெங்கும் உள்ள தம் மாணக்கர்க்குத் தம் நினைவுகளைத் தெரியப் படுத்துகின்றார்கள். வடநாட்டிற் பல ஆண்டுகளுக்கு முன் போர்வினைஞர் கலகம் நடந்தபோது, நம் அருந்தவத் தோரிற் சிலர் அதிற் றலையிட்டிருந்தார்கள் என்றும், அவர்கள் மலை முழைஞ்சுகளில் நெடுந்தொலைவில் இருக்கப், படைஞர் களொடு கலந்திருந்த அவர்களின் மாணாக்கர்கள் போர்க் களத்தில் நிகழ்வனவற்றை ஓர் இமைகொட்டுமுன் தங் குருமார்களுக்கு அறிவிப்பரென்றும், அது தெரிந்த குருமார்கள் தம் மாணாக்கர் நடக்க வேண்டு முறை இதுவென ஓர் இமைப் பொழுதில் திரும்ப அறிவிப் பார்களென்றும், இம் மறைவு களைத் தெரியாமல் வெள்ளைக்காரர் மிக வியந்து திகைப் படைவ ரென்றுங் கற்றறிந்தேம். இன்னும் எமது மலையகத்தில் எம் அன்பின்மிக்க மனையாளும் யாமும் ஒருவர் நினைப்ப தனையே மற்றவரும் நினைப்பதும் அடிக்கடி நிகழா நிற்கின்றது. எமதறிவு நிகழ்ச்சியில் நிகழும் இன்னோரன்ன நிகழ்ச்சிகள் பலவாயினும், அவற்றை இங்கெடுத்துக் குறித்தலினும், பிறர்தம் அறிவு நிகழ்ச்சிகளை மொழிதலே பொருத்தமாமென்று எண்ணி அவற்றையிங்கே மிக வெடுத்துக் கூறிற்றிலேம். அது நிற்க.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

எங்களது இணைப்பைப் பயன்படுத்தி அமேசானில் பொருட்கள் வாங்கி ஆதரவு அளியுங்கள்!