
தொலைவிலுணர்தல் மறைமலையடிகள்
12. தாமே தோன்றும் உணர்ச்சிகள்
இதுகாறும் இருவர் உணர்வோரும் உணர்த்துவோருமாய் அருகில் இருந்துந் தொலைவில் இருந்தும் ஒருவர் எண்ணங்களை மற்றவர் உணரும் முறைமைகளை விளக்கிப் போந்தாம். இனி, இங்ஙனம் பழகாதவர் சிலர் தமக்குள்ளுந் தொலைவில் நிகழும் நிகழ்ச்சிகள் தாமாகவே உள்ளத்தில் எழும் வகைகளையுஞ் சிறிது இங்கெடுத்துப் பேசுவாம். ஒருவரிடத்து ஒருவர் மிகுந்த அன்பு வைத்திருக்கும் காதலனுங் காதலியும் ஒருவரை ஒருவர் அகன்று தொலைவிலிருக்குங்கால் ஒருவரெண்ணங்களையும் அவர்க்கு நேர்வனவற்றையும் மற்றவர் தெரிந்துகொள்ள முயலா திருக்கையிலும் அவை அவருள்ளத்தில் தாமாகவே வந்து தோன்றுகின்றன. இதற்கு உண்மையாய் நிகழ்ந்த சில நிகழ்ச்சிகளை இங்கெடுத்துக் காட்டுவாம்.
தன் வாயின்மேல் கடுமையான ஓர் அடிபட்டதாக உணர்ந்து ஓர் அம்மை ஒருநாள் திடுக்கெனத் தூக்கத்தினின்றும் எழுந்து, தன் கீழ் உதடு அறுப்புண்டு இரத்தம் ஒழுகுவதாகவே தனக்குத் தெளிவாகப்பட்டதனால், தனது கைக்குட்டையை எடுத்துச் சுருட்டி அவ்விடத்தில் வைத்துக்கொண்டே தன் படுக்கைமேற் சிறிதுநேரம் உட்கார்ந்து கொண்டிருந்தாள். சிறிதுநேரஞ் சென்றபின் அவள் அத்துணியை வாயினின்றும் அகற்றிப் பார்க்க அதில் இரத்தக்கறை சிறிதும் இல்லாதிருக்கக் கண்டு பெரிதும் வியப்புற்றுத் தனக்கு அங்ஙனம் அடிபட்டிருக்க முடியாதென்றும், அடிபட்டதாகக் கண்டது கனவேயன்றிப் பிறிது அன்றென்றும் உணர்ந்தாள். உடனே அவள் தன் கைக்கடிகாரத்தை நோக்க அப்போது விடியற்காலையில் ஏழுமணியா யிருக்கக் கண்டாள். அப்போது தன் கணவன் அங்கு இல்லாமை தெரிந்து, அக் காலைப்பொழுது மிகவும் இனிதாயிருந்தமையால், அவன் அடுத்துள்ள ஏரியில் விளையாட்டுப் படகு விடப் போயிருக்க வேண்டுமென்று முடிவுகட்டினாள். அதன்பிற் சிறிதுநேரந் தூங்கியெழுந்து காலை ஒன்பதரை மணிக்குச் சிற்றுண்டி கொள்ளும் பொருட்டு அவள் ஒழுங்குசெய்கையில் அவள் கணவன் சிறிதுநேரங் கழித்து வீட்டுக்கு வந்தான். உணவெடுக்கும் கால் வழக்கம்போல் அவன் அவள் பக்கத்தில் அமராமற்சிறிது எட்ட இருந்துகொண்டு, இடைக்கிடையே தனது கைக்குட்டையை எடுத்துச் சுருட்டி அவளுக்குத் தெரியாமல் மறைவாய் அவன் தன்வாயில் ஒற்றிக்கொள்வதைக் குறிப்பாய்ப் பார்த்தாள். பார்த்ததும் பதறிப் பெருமானே, ஏன் அப்படிச் செய்கிறீர்கள்? என்று கவலையொடு கேட்டு, நீங்கள் காயப்படுத்திக் கொண்டீர்கள் என்பதை நான் அறிவேன், ஆனால் அதைப்பற்றிப் பிறகு சொல்லுகிறேன், என மொழிந்தாள். அதற்கு அவன், நல்லது, நான் படகிற் பாய்விரித்துச் செல்கையில் திடீரென ஒரு கடுங்காற்று வந்து சுக்கான் திருப்புஞ் சக்கரத்தைச் சுழற்றிவிடவே அஃது என்வாயின் கீழ் உதட்டில் நன்றாய் அடித்துவிட்டது. அதனால் அடிபட்ட காயத்தினின்றும் இரத்தம் ஓயாமல் ஒழுகுகிறது, என்று கூறினாள். அதன்பின் அவள், அது நேர்ந்தபோது மணி எவ்வளவு இருக்கலாம்? உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்க, அப்போது ஏறக்குறைய ஏழுமணி யிருக்க வேண்டும் என்று விடை கூறினாள். அதன்பின் அவள் தனக்கு உண்டான தோற்றத்தை விரித்துச்சொல்ல அவனுங்கூட இருந்தவர்களும் மிக வியப்புற்றனர்.
ஒரு நாள் ஒரு மருத்துவர் ஒரு வீட்டின் மெத்தைமேல் நோயாளி ஒருவரைப் பார்த்துவிட்டுக் கீழ் இறங்குகையில், நான்கு ஆண்டுள்ள அவர்தஞ் சிறுமகன் தமது வீட்டுக் கற்படிக் கட்டின் கீழ்விழுந்து நன்றாய்க் காயப்பட்டதாக அவர்க்குச் சடுதியில் ஒரு நினைவு உண்டாயிற்று. இங்ஙனம் முதலிற்றோன்றிய அந்நினைவுக்குப் பின், இடையில் இடப்பட்டிருந்த ஒரு திரைமறைப்பு அப்புறம் இழுக்கப் பட்டாற்போற் காணப்பட, அக் குழந்தை படிக்கட்டின் கீழே விழுந்து கிடக்கவும் அதன் மோவாயில் இரத்தம் ஒழுகவும் நேரே காண்பாராயினர். இந்தத் தோற்றமானது திடீரென மறைந்துபோயிற்று; ஆனால், அதனைப் பற்றிய நினைவு மட்டும் அவர்க்கிருந்தது. அத் தோற்றம் உண்டான நேரங் காலை பத்தரை மணியாதலால் அதனை மட்டும் அவர் குறித்துக் கொண்டார். பிறகு, தாம் பார்க்க வேண்டிய மற்றை நோயாளிகளையும் பார்த்துவிட்டு அவர் தமது வீட்டுக்குப்போக அங்கே அவர்தங் குடும்பத்தார் அவர் குழந்தைக்கு நேர்ந்ததையும் மணி நேரத்தையும் அவர் கண்டபடியே கூறக் கேட்டு மிக வியப்புற்றார்.
ஒரு பெண்பிள்ளையைக் கடுமையாக அடித்தமையாற் சிறைக் கோட்டத்தில் அடைக்கப்பட்டுப் பின்னர் மன்னித்து விடுதலை செய்யப்பட்ட ஒருவர்க்கு ஒரு மனைவியும் ஐந்து ஆண்டுள்ள ஒரு பையனும் இருந்தனர். அவர் சிறைக்கோட்டத்தில் இருந்தபோது ஒருநாள் அவரது மனைவியிடமிருந்து ஒரு செய்தி அக் கோட்டத்தலைவர்க்கு வந்தது. அறிவின்மிக்க அவ்வாண்பிள்ளை இறந்து போயிற் றெனவும் அதனைத் தன் கணவற்குத் தெரிவித்தல் வேண்டுமெனவும் அத் தலைவர் அதிற் கேட்டுக் கொள்ளப்பட்டனர். அதன்படியே தலைவர், அவரைத் தாம் இருந்த அறைக்கு வருவித்து அவரைப் பற்றிச் சில வினாவியபின் தாம் ஒரு துயரமான செய்தி தெரிவிக்கப் போவதாகச் சொன்னார். அதற்கு அவர், ஐயா, தாங்கள் சொல்லப்போவது இன்னதென்பதை அறிவேன்: என் பையன் இறந்துபோயினான் என்றார். உடனே தலைவர், அதனை நீர் எப்படி அறிந்தீர்? என்று கேட்டார். சென்ற ஞாயிற்றுக்கிழமை தாங்களுந் தங்கள் சிறு குழந்தையுங் கோயிலுக்கு வந்திருந்தபோது அந்தக் குழந்தை தூங்கிவிட்டது; அதனைத் தாங்கள் கையில் எடுத்துக்கொண்டு வருவதை யான் பார்த்தவுடனே, என் பையன் நீரில் அமிழ்ந்தி இறந்து போனதாகச் சடுதியில் எனக்கோர் எண்ணம் உண்டாயிற்று, அந் நினைவை என் மனத்தினின்றும் அகற்ற யான் எவ்வளவோ முயன்றும் என்னால் இயலவில்லை! என் கண்களில் நீர் ஒழுகிற்று; நீங்கள் என்னை அழைத்தபோது என்நெஞ்சங் கலங்கியது, நான் எண்ணியபடிதான் இருக்கப் போகிறது என்று உணர்ந்தேன், என அவர் மறுமொழி புகன்றார். இவர் தம் குழந்தைமேல் மிகுந்த அன்பு வைத்திருந்தமையால் அப் பிள்ளைக்கு நேர்ந்தது இவர்க்குடனே தோன்றலாயிற்று.
மேல்நாட்டில் நூல் ஆராய்ச்சியிற் றேர்ந்த ஓர் அறிஞர் ஒருநாள் ஓர் இளம்பெண்ணைத் தாமிருக்குங் கலைக் கழகத்தில் வைத்து அறிதுயிலிற் போகச் செய்தார். ஒரு கடித வுறைக்குள் வரைந்து வைக்கப்பட்ட ஒரு வரிவடிவினை இன்னதென்று அறியும்பொருட்டு அவ்வம்மை அவ்வறிதுயில் நிலையிலேயே முயன்று கொண்டிருக்கையில், அவ் வறிஞர் தம் நண்பர் ஒருவர் பெயரைச் சொல்லி அவர்க்கு இப்போது யாது நேர்ந்தது? என்று கேட்டார். அந் நண்பரை அந்த அம்மை இக் கலைக்கழகத்தில் இதற்கு முன் இரண்டு மூன்றுமுறை பார்த்திருக்கிறாள். அவர் தம் உடம்பிற் சுட்டுக்கொண்டார், என்று அந்தப் பெண் விடை கூறினாள். அதற்கு அவர், ஓ! அவர் எவ்விடத்தைச் சுட்டுக்கொண்டார்? என்று திரும்ப வினவினார். இடது கையின்மேல்; சுட்டது நெருப்பு அன்று; அஃது ஏதோ ஒன்று; அதன் பெயர் எனக்குத் தெரியவில்லை; அவர் அதனை ஊற்றினபோது என் கருத்தாய் இருக்கவில்லை? என்று அந்த இளமாது கூறினாள். அவர் ஊற்றின அந்தப் பொருள் எந்த நிறமானது? அது சிவப்பு நிறமன்று, பழுப்பு நிறம் உடையது; அவர் மிகுதியாய்ச் சுட்டுக்கொண்டார் – தோல் அவ்விடத்தில் அதைத்திருக்கின்றது என்றாள். இவள் கண்டு கூறியது அத்தனையும் வழுவாதிருந்தது. அன்றைப் பிற்பகல் நான்கு மணிக்கு அந்நண்பர் ஒரு புட்டிலிற் சிறிது முடைநீரை ஊற்றல் வேண்டினார். அதனை ஊற்றுகிறபோது அவர் நிரம்பக் கருத்தாய்ச் செய்யாமையால், அது பெய்குழலில் நிரம்பி வழிந்து அதனைப் பிடித்திருந்த அவரது இடது கைம்மேல் ஓடி அதுபட்ட இடமெல்லாஞ் சுட்டுவிட்டது. அவர் உடனே அக்கையைத் தண்நீரில் தோய்த்தாராயினும், அம் முடைநீர் பட்ட இடமெல்லாங் கொப்புளித்துப் போயிற்று.
இன்னும், ஓர் அம்மை தனக்குத் தோன்றிய தோற்றத்தைப் பின்வருமாறு குறிக்கின்றாள்; யான் குளிர் காய்ச்சலிற் கிடந்து நலம் அடைந்து வருகையில், யான் எனது அறையில் தனியே இருந்து சாளரத்தின் வெளியே பார்த்துக்கொண்டிருந்தேன். என் எண்ணமானது ஒன்றிலுங் கருத்தாய் நில்லாமற் பலவற்றிற் சென்று கொண்டிருந்தது; சிறிது நேரத்திற்குப் பின் என் உள்ளமானது ஏதொரு நினைவுமின்றி வெறுமையாகக் காணப்பட்டது; என் கண்கள் நிலைபெற்று நிற்பவாயின; இடைவெளியானது வெள்ளிய நிறம் அடைவதுபோற் காணப்பட்டது. என்னைச் சுற்றிலும் உள்ள பொருள்களை யான் பார்க்கக் கூடியதா யிருந்தாலும், எதனையும் பார்ப்பது மிக வருத்தமாகவே இருந்தது. எவரோ ஒருவர் – அவர் இன்னா ரென்பதும் இன்ன இடத்தின ரென்பதும் யான் அறியேன், துன்பப்படுவதாக என் மனத்திற் பட்டமையால் யான் அவர் பொருட்டுத் துன்பப்படுவதாக உணர்ந்தேன். சிறிது நேரத்திற்குப் பின் அவர் யார் என்பதைத் தெரிந்தேன்; அவரை எப்படித் தெரிந்தேன் என்பதை அறிந்திலேன். ஆள் இன்னார் என்பதை யான் தெரிந்த பிறகு, ஒரு விடுதியிற் சதுரமான ஓர் அறையினையும், யான் இன்னாரென்று தெரிந்த அவ்வாண்மகன் மிகவுந் துன்புற்ற உடம்போடும் உள்ளத்தோடும் அதில் ஒரு படுக்கைமேல் முகங் குப்புறப்படுத்திருப்பதையும் என்னுள்ளே தெளிவாய்க் கண்டேன். அவர் மிக்க துயரத்தால் தேம்பித் தேம்பி அழுதலையுஞ், செவியாற் கேட்டிலேனாயினும், உள்ளத்தால் உணர்ந்தேன். அத் துயரத்தின் தன்மையும் எனக்குப் புலனாயிற்று. ஆனால், புறத்தேயுள்ள அதன் ஏது எனக்குப் புலப்பட்டிலது. இத்தோற்றத்திற்குப் பின் எனக்கு மிகுந்த களைப்பு உண்டாயிற்று; அது நாற்பது நிமிடங்கள் வரையில் மிகுதியாய் இருந்தது; அதன்பின் அது மெல்ல மெல்லக் குறைந்து போயிற்று.
இவ்வாறு அந்தப் பெண்பிள்ளை தான்கண்ட தோற்றப்படி துன்புற்ற ஆண்மகனுக்கு அதனை ஒரு கடிதத்திற்குறித்து விடுக்க, அவர் பின்வருமாறு எழுதுகிறார்.
சில ஆண்டுகளுக்குமுன் யான் ஓர் அலுவலின் பொருட்டு ரோடுத்தீவின்கண் உள்ள ஒரு நகரத்தில் இருக்கையிற், பாடன் நகரத்தின்கண் உள்ள என் வீட்டிலிருந்து சடுதியில் வந்த செய்தியானது மிகவுந் துன்பத்தைத் தருவதாய் என்னை அறக்கலக்கிவிட்டமையால் யான் இறங்கியிருந்த விடுதியில் எனக்கென விடப்பட்ட நாற்சதுரமான பெரிய அறைக்குட் சென்று எனது படுக்கைமேல் நெடுநேரம் பெருந்துயரத்தொடு முகங்கவிழ்ந்து கிடந்தேன். இங்ஙனம் நெடுநேரஞ் சென்ற பிறகு அத் துன்பத்தின் கடுமை தணிந்தமையால் அவ்வறையைவிட்டு வந்தேன். அடுத்தநாள் யான் பாடன் நகரத்திற்குச் சென்றேன். அதற்கு அடுத்தநாள் எனது துயரத்தின் தோற்றத்தைக்கண்ட பெண்மணியாரின் கடிதம் எனக்கு வந்தது. அவ்வம்மை மேலை நியூயார்க்கில் உள்ள ஒரு நகரத்தினின்றும் நாட்குறித்து அக்கடிதத்தை எனக்கு அனுப்பினார். வெள்ளிக்கிழமை இரண்டு மணிக்கு எனக்கு யாது நேர்ந்தது என்பதைக் காலந்தாழாது தமக்குத் தெரிவிக்கும்படி அவ்வம்மையார் கெஞ்சிக் கேட்டார். அதேநாளில் அதே மணி நேரத்திற்றான் நான் முன்னே கூறியபடி தூயரப்பட்டுக் கிடந்தேன். இந்த மாதரார் எனக்கு அறிமுகமான நண்பரேயாயினும், இவர் அனுப்பிய இக் குறிப்புக்கு முன் பல திங்களாக இவரிடமிருந்து ஏதொரு செய்தியுமே எனக்கு வரவில்லை; நெடுங்காலமாக இந்த அம்மையைப் பற்றி யான் நினைக்கவுமில்லை. இன்னும், என்னை அவ்வளவு துன்புறுத்திய அச்செய்திக்கும் அந்த அம்மைக்கும் ஏதோர் இசைவுமில்லை. அவ்வம்மைகண்டது உண்மையேயென உடனே யான் அவர்க்கு எழுதி அறிவித்தேன். இந் நிகழ்சசியினால், ஒருவரை யொருவர் நினையாமல் வேறு வேறிடங்களில் இருந்த விடத்தும் ஒருவர்க்கு உண்டான துன்பம் மற்றவர்க்குத் தானே புலனாகத் தோன்றினமை நன்கு அறியப்படும்.
இனிப், பலருக்குத் தீதான ஒரு நிகழ்ச்சி எங்காயினும் நடந்தால் அது தொலைவிலுள்ள சிலர்க்குத் தானாகவே வந்து தோன்றுதலும் உண்டு. பெர்த் என்னும் ஊரின் கண் ஒருநாள் ஓர் அம்மை தன் உடன் பிறந்தாளுக்காக ஒரு கடிதம் எழுதிக் கொண்டிருக்கையில் ஒரு கொடும்புயற் காற்று அவளது வீட்டைச் சுற்றி அடித்தது. அப்போது திடீரென்று அவளுள்ளத்தில் ஒரு பெருந்திகில் உண்டாயிற்று. அவள் தான் எழுதுங் கடிதத்தில் தன் நினைவை நிறுத்தக் கூடாதவளானாள். சாவையுந் தீதான நிகழ்ச்சியையும் பற்றிய எண்ணங்கள் அவள் உள்ளத்தில் நிலை பெற்றுத் தோன்றின. மக்கள் பலர் அழிந்து போனதைப் பற்றிய திகிலான ஓர் உணர்ச்சியையன்றி, எங்கே எப்படி எப்பொழுது அழிந்தார்களென்று திட்டமாக அவளுக்கு வேறேதுந் தோன்றவில்லை. உடனே அவள் மேல்மாளிகைக்குப் பறந்து சென்று தன் தாயிடம் அடைந்தாள். அவள் அன்னை ‘குழந்தாய் இதென்ன மடத்தனம்!’ என்று கடிந்தாள். ஆனால், அப் பெண்மணி இல்லை, பெருந்திரளான மாந்தர்கள் எங்கோ மடிகின்றமை திண்ணம். என்றாள். அவளுக்குத் தோன்றியதை மறுநாள் வந்த செய்தி உறுதிப்படுத்தியது; அவளுக்குத் திகிலான உணர்வு தோன்றிய அதேநேரத்தில் தே என்னும் யாற்றின் பாலம் இடிந்துவிழப் பெருந்திரளான மக்கள் கீழ்விழுந்து மாய்ந்தார்கள். இத் தோற்றத்தைக் கண்ட பெண்ணின் அன்னைக்கு உயிர்நிலை ஆராய்ச்சிக்கழகத்தார் இதைப் பற்றி எழுதிக்கேட்டபோது அவள் பின்வருமாறு எழுதி யனுப்பினாள்: தே என்னும் யாற்றின் பாலம் இடிந்து விழுந்த இராப்பொழுதில் யான் தனியே என் அறையில் உட்கார்ந்திருந்தேன். அப்போது என் மகள் மேன்மெத்தைக்குச் சடுதியில் ஓடிவந்து பலர் கூச்சலிடும் ஒலி யிடைவெளியில் எனக்குக் கேட்கின்றது என்றாள். அக் கூச்சலினால் ஏதோ திகிலான நிகழ்ச்சி நேர்ந்திருக்க வேண்டுமென்றும். மக்கள் பலர் மாண்டிருக்கவேண்டு மென்றுங் கூறினாள். மறுநாட்காலையிற் பால் கொண்டு வந்த பையன் எங்கள் வேலைக்காரியிடம் தே யாற்றின் பாலம் இடிந்து விழுந்ததெனக் கூறினான். இதனால் அப் பெண்மணி கண்டது மெய்யென உறுதிப்பட்டது.



