
அகிம்சா மூர்த்திகள்
கலைஞர் மு. கருணாநிதி
பூம்புகார் மாநாடு
கம்பராமாயணம் மட்டும் கவிதைத் தேனாறு, கம்பன் ஒருவன்தான் கவிச் சக்கரவர்த்தி என்றெல்லாம் பேசப்பட்ட நிலைமை கரைய ஆரம்பித்திருக்கிறது, இப்போது. கம்பனுக்கு மட்டுமே மாலை அணிவித்து மகிழ்ந்தவர்கள், இளங்கோவடிகளுக்கும் மதிப்புத்தர முன்வந்திருக்கிறார்கள். கம்பன் மாநாடுதான் கவிதை மாநாடு என்று கருதிக் கிடந்தவர்கள் சிலப்பதிகார மாநாடு நடத்துகிற அளவுக்கு பெரு நோக்கம் பெற்றி ருக்கிறார்கள்.
திராவிடத்திலே அரசியலில் மட்டுமின்றி, சமுதாயத்தில் மட்டுமின்றி, இலக்கியத் துறையிலும் புரட்சி செய்தவர்கள் அறிவியக்கத்தாராகிய நாம் என்பதை யாரும் மறுக்க முடியாது. கம்பனுக்கு கோவில் கட்டி அவனைக் கடவுளாக வணங்குகிற அளவுக்கு முதிர்ந்து
கம்பராமாயண போன மூட நம்பிக்கையை எதிர்ப்புக் கருத்துகள் முறியடித்தன. கம்பனை நாம் குறை கூறிய நேரத்திலே நம்மீது வீசப்பட்ட கணைகள் கொஞ்சமல்ல. – கொடுஞ் சொற்களால் அர்ச்சிக்கப்பட்டோம். “செவிச் சுவை உணரா வாயுணர்வின் மாக்கள்” என்று சுடு சொல்லால் தாக்கப்பட்டோம். ஆயினும் வெற்றி நமக்குத்தான் கிடைத்தது. நம் நோக்கம் கம்பராமாயண நூலே நாட்டில் கிடைக்க முடியாது செய்யவேண்டும் என்பதல்ல. கம்பன் செய்த தவறை நாட்டிலே எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டுமென்பதுதான் நம் குறிக்கோள். கம்பராமாயணம் திராவிடரை அரக்கர்கள், குரங்குகள் என்று சித்தரிக்கும் சிலந்திக்கூடு. ஆகவே அதை வெறுக்க வேண்டு மென்கிறோம். அடிப்படையான வெறுப்பே அதுதான். ஆரிய ராமனை கம்பன் கடவுள் என்று கூறிவைத்தான்.
அந்தக் கயமைத் தனத்தைக் கண்டித்தோம். அப்படிப்பட்ட ஒரு நூல் திராவிடரின் பூஜைக்குரிய நூலாயிருப்பது தன்மானமற்ற செயல் என்று விளக்கினோம்.
காலத்துக் கேற்றவாறு கம்பராமாயணத்திலே உள்ள கருத்துக்களை அனுமதிக்கத்தான் வேண்டுமென்றார்கள், கம்பதாசர்கள் ! நாமோ அவைகளை ஆட்சேபிக்கவில்லை. ஒரு இனத்தையே இழிவுபடுத்தும் முறையில் கம்பன் திராவிடரைக் காட்டிக் கொடுத்து இருக்கிறான் என்பதே நமது தலையாயக் குற்றச்சாட்டு. அதைத்தான் எதிர்த்துப் போராடினர் புலவர் பலர். அந்த நேரத்திலே கூட நாம் கூறினோம்- நாங்கள் இலக்கிய விரோதிகள் அல்ல, சிலப்பதிகாரம் போன்ற நூல்கள் அக்காலக் கருத்துகள் பல கொண்டனவாயினும் திராவிடரை உயர்த்திக் காட் டியிருக்கின்றன, அவைகளை நாங்கள் வெறுப்பதில்லை என்று விளக்கியிருக்கிறோம். சிலப்பதிகாரம் போன்ற தமிழரின் செல்வங்கள் புதைபட்டுக்கிடக்கும்போது தமி ழனை அரக்கன் எனக்கூறும் கம்ப ராமாயணத்துக்கேன் விழா நடத்துகிறார்கள் வீணர்கள் என்று வினவிய துண்டு. நாம் அப்படி வினவியது சிலப்பதிகாரத்தின் மீது நமக்கேற்பட்ட பக்தியல்ல; பகவத் உணர்ச்சியுமல்ல; அல்லது அதிலே காணப்படும் அளவுக்கு மீறிய கற்பனைச் செய்திகளல்ல; தமிழர்களுடைய வாழ்க்கை முறை சிலப்பதிகார காலத்தில் எப்படி இருந்தது என் பதை விளக்கும் நூலாக சிலப்பதிகாரம் அமைந்திருக் கிறது என்பதற்காகவும், வடநாட்டாரின் முடி நெறித்த திராவிட வீரர்களின் சிறப்பு காணப்படுகிறது அதிலே என்கிற காரணத்தாலும், நீதிக்காக வாழ்ந்த திராவிட மன்னர்களின் பெருமை கூறப்படுகிறது அதிலே என்கிற ஆர்வத்தாலும், கண்ணகி என்கிற பாத்திரம் கற்பனைக்கு எட்டாத செயல்களை செய்தாள் என்பதை நம்பாவிட்டாலும், அக்காலப் பெண்களின் துணிவு சித்தரிக்கப்பட்டுள்ள தன்மையை அறிந்து கொள்ளுகிற வாய்ப்பு அதிலே இருப்பதாலும், சேர, சோழ, பாண்டி யன்- மூவருடைய ஆட்சி பற்றிய விவரங்களைத் தெரிவிக்கும் அரிய நூல் என்ற காரணத்தாலும் சிலப் பதிகாரத்தை நாம் ஆதரிக்கிறோமே தவிர வேறில்லை.
திருக்குறளை ஏன் போற்றுகிறோம்? தெய்வப் புலவர் திருவள்ளுவர் என்பதற்காகவா? இல்லை… அக்காலத் தமிழகத்தைப் பற்றிய நல்லதொரு படப் பிடிப்பு திருக்குறள் என்பதாலும், திராவிடர் நீதிமுறைகள் குறிக்கப்பட்டிருப்பதாலுமே குறளுக்கு விழா எடுக்கிறோம். குறைகளே இல்லாதது அல்ல குறள். அந்தக் குறைகள் அக்காலத்தில் எழுதப்பட்ட நூல் என்கிற ஒரே காரணத்தில் அடிப்பட்டுப் போகின்றன. வரப் போகும் காலங்களிலே இன்றைக்கு எழுதப்படுகிற புரட்சிக் கருத்துகள்கூட பழமை என்று கூறப் படலாம்.
பொதுவாக குறள், சிலப்பதிகாரம் போன்ற நூல்களிலே திராவிடரின் பெருமை ஒளிவிடுகிறது. ஆகவே பாராட்டுகிறோம்! கம்பன் திராவிடரை இழி மக்களாக்கி வைத்தான். ஆகவே எதிர்த்தோம்!
நம்முடைய பேச்சுகளுக்கு சக்தி உண்டு என்பதைத் தான் கம்பனையே கட்டியணைத்திருந்தவர்கள் சிலப்பதிகாரத்துக்கும் மாநாடு நடத்த முன்வந்திருப்பது காட்டுகிறது.
ஆனால் ஒன்று, கம்பனைப்போல ஆக்கிவிடக் கூடாது! காவிரிப்பூம்பட்டிணத்திலே கூடிய மகாநாட் டில் இந்திர விழா கொண்டாடும்படியாக உபதேசம் செய்தார் ஆர்.கே.சண்முகனார். அந்த மூட நம்பிக்கைகளை வளர்ப்பதற்காக இருக்கக்கூடாது சிலப்பதிகார மாகாநாடு.
“கொங்கணர் கலிங்கர் கொடுங்கருநாடர்
பங்களர் கங்கர் பல்வேற்கட்டியர்
வடவாரியரோடு வண்டமிழ் மயக்கத்துன்
கடமலை வேட்டமென் கட்புலம் பிரியாது
கங்கை பேரியாற்றுக் கடும் புனனீத்தம்
எங்கோ மகளை வாட்டிய வந்நாள்
ஆரியமன்ன ரீரைஞ் ஞூற்றுவர்க்கும்
ஒரு நீயாகிய செருவெங்கள் விழித்துக்
கண்டது ஒடுங்கட் கூற்றம்…”
என்பன போன்ற செய்யுட்களை விளக்கி திராவிடரின் பண்டைய வீரத்தை-நீதியை-நினைவு படுத்துவதற்கு பயன்பட வேண்டும். பூம்புகாரில் கூடி மாநாடு நடத்தியவர்கள் மட்டுமே சிலப்பதிகாரத்துக்கு உரியவர் களல்ல. சிலப்பதிகார மாநாட்டைப் பற்றி அவர்களை சிந்திக்கத் தூண்டியதே நாம்தான். பூம்புகார் மாநாடு பூரிப்பு தந்தது என்றாலும் சண்முகம் போன்றவர்கள் ‘இந்திரவிழா’ போன்ற புது மூடத்தனங்களை வளர்த்து விடக்கூடாதே என்று அஞ்சுகிறோம்.
“மாலை மணி” (20-6-’51)



