அகிம்சா மூர்த்திகள்
கலைஞர் மு. கருணாநிதி

“யார் காட்டுமிராண்டிகள்?”

சென்னை நகர மக்களாகிய நீங்கள் சிறை சென்று மீண்ட எனக்கு அளித்திருக்கும் இந்த மகத்தான வரவேற்பைக் கண்டு – இங்குக் கூடியிருக்கும் இந்த மாபெரும் மக்கள் பெரு வெள்ளத்தைக் கண்டு நான் பெருமைப் படுகிறேன். உங்களுடைய இந்த உபசரிப்பும், பாராட்டும் என்னை “இன்னும் தொண்டு செய்யச் செல்வாய்” என்று கட்டளை யிடுவதாகவே நான் கருதுகிறேன்.

ஐந்து மாத கடுங்காவல் சிறை வாழ்வைக் கடந்து- சிறைக்கோட்டம் தந்த வேதனைகளை அனுபவித்து நான் இப்போது வெளிவந்திருக்கிறேன். நீங்கள் எல்லோரும் நினைப்பீர்கள், நான் இப்போது மன மகிழ்ச்சியோடு, எல்லையற்ற பூரிப்போடு நடமாடுவதாக. ஆனால்,நான் உண்மையைச் சொல்கிறேன்-செந்தமிழ் பூஞ்சோலை யிலே ‘டால்மியாபுரம்’ என்ற கள்ளிக்காடு இருப்பதை வெறுத்து, அதன் பெயரை ‘கல்லக்குடி’யாக மாற்ற “சென்றுவா தம்பி போர்க்களம்!” என்று யார் என்னை வாழ்த்து கூறி வழியனுப்பினாரோ-அக் கட்டளைப்படி களத்திலே குதித்து, நான் கண்டவெற்றியைக் குறித்து யார் பெருமைப் படவேண்டுமோ-“ தம்பி செப்பிய காரியத்தை செவ்வனே செய்து முடித்தான் என்று எண்ணி எந்த உத்தமன் உவகை எய்த வேண்டுமோ – அந்த உத்தமன்-அறிஞன்-நமது அண்ணா இல்லாத திராவிடத்திலே நான் ஒரு வார காலமாக நட மாடுவது, ஐந்து மாத காலம் நான் சிறையிலே அனுப வித்த வேதனையை விட பல மடங்கு சகிக்க முடியாத வேதனையைத் தருகிறது. ஆனாலும், காராக்கிரகத்திற்குள் சிக்கிக் கிடக்கும் அந்த அண்ணாவை, மற்ற தம்பி மார்களை, நாளைக் காலை காணப்போவதை நினைத்தால் என் உடல் பூரிக்கிறது; உள்ளம் புளகாங்கித மடைகிறது!

நான் கடைசியாக உங்களை சென்ற ஜூலை மாதம் 15-ம் தேதி காலை சந்தித்தேன். விடை பெற்றுச் சென்றேன். இன்று திரும்பி வருகிறேன். அன்று நான் உள்ளே சென்றபோது இருந்த அதே ஆட்சிதான் இன்றும் இருக்கிறது. ஆனால் இந்த ஐந்து மாத காலமாக இந்த ஆட்சியார் நடத்திய அலங்கோலங்களை, நாட்டிலே கிளப்பிவிட்ட கொந்தளிப்பை, உண்டாக்கிவிட்ட குமுறலை, திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களுக்கு இழைத்த சித்ரவதைக் கொடுமைகளை நினைத்தால் இந்த நாடும் ஒரு சிறைச்சாலையாக தோன்றுகிறது என் கண்முன்னே ! நான் ஐந்து மாத தண்டனை அனுபவித்த சிறைச்சாலையிலே கஷ்டங்கள் பல உண்டு- கவலை மிக அதிகம்! அதேபோல இந்த சிறைச்சாலையிலும் கஷ்டங்களுக்குப் பஞ்சமில்லை-அது துப்பாக்கிக் குண்டு, தடியடி, கண்ணீர்ப்புகை ரூபத்திலே வந்து கோர நர்த் தனம் ஆடியிருக்கிறது! அந்த சிறைச்சாலைக்கு ஓர் அதிகாரி – சூப்பரிண்டெண்டு—அவர் கொஞ்சம் நல்லவர். அதேபோல் இந்த சிறைச்சாலைக்கும் ஓர் ஆதிகாரி -ஆச்சாரியார்! ஆனால், இவரோ மேலே கண்டவரைப் போல நல்லவரல்ல; அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும்! ஆகவேதான் நான் சிறிய சிறைச்சாலையிலி ருந்து பெரிய சிறைச்சாலைக்கு வந்திருப்பதாகக் கூறுகிறேன்.

எனக்கு ஆறு மாதம் தண்டனை விதிக்கப்பட்டது. அதிலே அபராதத் தொகையை கட்டாயமாக வசூலித்த காரணத்தால் ஐந்து மாத தண்டனையோடு வெளியேற்றப்பட்டேன். இதற்கு நான் செய்த குற்றமென்ன ? ஐந்து மாத கடுங்காவல் தண்டனை அனுபவிக்கக் கூடிய அளவுக்கு நான் பயங்கரக் குற்றவாளியா? இப்படித் தான் கேட்டார்கள் நான் தண்டனை ஏற்று வழக்கு மன்றத்தைவிட்டு வெளியேறியபோது, சில பத்திரிகை நிருபர்கள். “என்ன ஆறுமாதமா?” என்று அவர்கள் ஆச்சரியத்துடன் கேட்டார்கள். ஆனால் நானோ மெளன மானேன். ஆறுமாதம் மிக அதிகம்தான் என்று தோன் றியிருக்கலாம் அவர்களுக்கு. ஆனால் நான் நினைத்தேன்- தண்டனை இன்னும் அதிகமாகக்கூட இருந்திருக்கும். ஆனால், அரியலுர் சப்-மாஜிஸ்டிரேட்டுக்கு அதற்கு மேல் அதிகாரமில்லை தண்டனை வழங்க. இந்த எண்ணம் தான் என் மனதிலே தோன்றியது அப்போது.

இந்த தண்டனைக்குத்தான் நாங்கள் செய்த குற்ற மென்ன? தண்டவாளத்தில் படுத்தோமாம்;தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தோமாம்- இப்படி விளக்கம் தருகிறது குற்றப் பத்திரிகை வழக்கு மன்றத்தில். நாம் டால்மியாபுரத்தில் நடத்திய போராட்டத்தை, தற்கொலை செய்துகொள்ள முயற்சித்ததாக திரித்தது வழ க்கு மன்றம் !

‘நாம் போராடினோம் !’ எப்படிப் போராடினோம்? கல்லக்குடி என்று கண்கவர அச்சிட்ட கன்னித் தமிழ் எழுத்துக்களை ஒட்டினோம், ‘டால்மியாபுர’த்தின் மீது! தண்டவாளத்திலே படுத்தோம்-தற்கொலைக்காக அல்ல; தன்மானத் தமிழர் கூட்டம் எழுது என்பதை அறியாத நேருவுக்கு உணர்த்த! “பொது மக்களுக்குத் தொல்லை தராதீர். எழுந்து செல்லுங்கள்” என்று போலீஸ் அதி காரிகள் சொன்னார்கள். நான் சொன்னேன், “இது எங்கள் திடீர் முடிவல்ல; பல கால யோசனைக்குப்பிறகு, பல திறப்பட்ட அறிவிப்புகளுக்குப் பிறகு, நடத்தப்படும் போராட்டம். மாற்ற முடியாத முடிவு.’ என்று!

அதைக் கேட்ட அதிகாரிகள் -கலெக்டர் உட்பட, எங்களுக்கு பத்தடி தூரத்திலே நின்றுகொண்டிருந்த என்ஜினிடம் சென்றனர். டிரைவரிடம் ஏதோ முண முணத்தனர். உடனே என்ஜின் ஊதியது. பத்தடி தூரத்திலே நின்றுகொண்டிருந்த ரயில் புறப்பட்டது. அதன் சக்கரங்கள் சுழன்றன. எங்களை நோக்கி நகர்ந்தன நானும், என்னுடன் படுத்திருந்த நான்கு தொண்டர்களும் கடைசியாக ஒரு முறை திராவிடத்தை எண்ணினோம்; அண்ணாவை நினைத்துக் கொண்டோம்; உலகத்தை ஒரு தடவை பார்த்தோம்; கண்களை மூடிக் கொண்டோம்; கடைசி மூச்சுக்காகக் காத்துக் கொண்டிருந்தோம்.

அந்தப் பயங்கரச் சூழ்நிலையை உண்டு பண்ணி விட்டு எங்களை நோக்கி வந்து கொண்டிருந்த ரயில் வண்டி மறுபடியும் நின்று விட்டது, எங்களுக்கு நான்கைந்து அடித்தொலைவிலேயே. நாங்கள் கைது செய்யப் பட்டோம்; அரியலூர் சிறைக்குக் கொண்டு செல்லப் பட்டோம்.

அங்கே நாங்கள் ஒரு நாள் முழுதும் பூட்டி வைக்கப் பட்டிருந்தோம். வெளியே கட்டளைக்குக் கீழ்ப் படிந்து காரியமாற்றத் துடிதுடித்துக் கிடக்கும் திராவிடக் காளைகள் -அடுத்தடுத்த படை வரிசைகள்- ஆனால், நாங்கள் உள்ளே, குகைக்குள்ளே, காராக் கிரகத்துக்குள்ளே! கொலைக்களம் என்று சொல்லுவார்களே, அதைவிடக் கொடூரமான அந்த இருட்டுக் குகையில்-அந்த அற்புதமான சிறையில் – இருபதே பேர் இருக்க வேண்டிய இடத்திலே அறுபத்து நான்கு பேர் அடைத்து வைக்கப் பட்டிருந்தோம். நண்பர்கள் உட்கார்ந்தபடியே தூங்கினார்கள்; நான் நின்றபடியே, சிறைக் கம்பிகளைப் பிடித்தபடியே தூங்கினேன். இன்னும் எங்களது சிறை வாழ்வைப் பற்றி விளக்கிக் கொண்டே போவதென்றால், அதற்கென ஒரு புத்தகமே எழுதி விடலாம்.

நாங்கள் தண்டவாளத்திலே படுத்தோம்-தற் கொலைக்காக என்றால், பட்டப் பகலிலே பலர் அறியவா படுப்போம்? எங்கள் இலட்சியத்தை எடுத்துச் சொல்ல- எத்தனையோ முறைகள் எடுத்துச் சொல்லியும், அநேக கூட்டங்கள் நடத்திய பிறகும், தீர்மானங்கள் பல தீட்டிய பிறகும், செவி மடுக்காத காரணத்தால்!

அதற்காகத் தண்டனை ?- இதைக் கேட்டு உலகம் கேள்விக் குறி போடுகிறது!

“பெயர் மாற்றத்திற்கென்று ஒரு போராட்டம் நடைபெற்றது சென்னையிலே” என்று எழுதுகிறது அமெரிக்காவின் ‘நியூயார்க் டைம்ஸ்’.

பெயர் மாற்றத்திற்கு ஒரு போராட்டமா?- இப்படி கேட்கின்றனர் காங்கிரசார் !

பெயர் மாற்றத்திற்கு ஒரு போராட்டமா?- இப்படி கேலி மொழி உதிர்க்கின்றனர் கம்யூனிஸ்டுகள் !

பெயர் மாற்றத்திற்கு ஒரு போராட்டமா? – இப்படி த்தான் கேட்கிறது செழித்திருக்கும் சிவப்பு சீனா இந்த செருக்கு படிந்த அரசாங்கத்தை!

பெயர் மாற்றத்திற்கு ஒரு போராட்டமா?-இப் படித்தான் கேட்கிறது தூய்மை கொழிக்கும் ரஷ்ய நாடு இந்த துப்பு கெட்ட துரோக ஆட்சியை !

நாங்களும் அப்படியேதான் கேட்கிறோம், பெயர் மாற்றத்திற்கு ஒரு போராட்டமா? சாதாரணமாக ஒரு ஊரின் பெயரை மாற்றுவதற்கு ஒரு போராட்டம் நடத்த வேண்டியது அவசியம்தானா? அந்த அவசியம் ஏன் வந்தது? ‘ பெயரை மாற்று’ என்று மக்கள் தெரிவித்தால் பெயரை மாற்றிவிட வேண்டியது ஆட்சியாளர் கடமை! ஆனால், இந்த ஆச்சாரியார் ஆட்சி அதைச் செய்ய மறுத்தது-ஆகவே போராட்டம் மலர்ந்தது– நம் தோழர்கள் சாவுக் கிடங்கிலே தள்ளப்பட்டனர்- இன்னும் ஆச்சாரியார் ‘ஜனநாயகம்’ பேசுகிறார்! விந்தை! விந்தை !! விந்தை !

இங்கு ஜனநாயகம் காணவில்லை. என்ன ஆயிற்று அந்த ஜனநாயகம் ? ஜனநாயகம் என்ற அந்தப் பச்சிளம் சிசு இங்கே துடிக்கத் துடிக்க வெட்டப்படுகிறது. ஆனா லும் ஆச்சாரியார் ஜனநாயகம் பேசத்தான் செய்கிறார். வெள்ளாடுகளைக் கொன்ற வேங்கை, ரத்த நாக்குடன். வேதாந்தம் பேசுவது போல. ஆச்சாரியார் கையிலே செங்கோல் இல்லை; ‘கொடுங்கோல்’ மின்னுகிறது! ஆகவே அவர் நம்மீது பாய்கிறார்.

இப்போது நாம் நடத்திய போராட்டம் இறுதியானப் போராட்டம் அல்ல ; வருங்கால சோதனை காலம் நம்மை எதிர்நோக்கி இருக்கும் பலப்பல பேராட்டங்களுக்கு இது ஒத்திகையே யாகும். என்றைக்கு திராவிட நாட்டை அடைந்தே தீருவோம் என்ற உறுதி எடுத்துக் கொண்டோமோ அன்றைக்கே நமது போராட்டம் துவங்கிவிட்டது. இன்று தியாகப் பட்டியல் தயாராகிக் கொண்டிருக்கிறது; கல்லறைகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன.

நான் சிறை செல்லுவதற்கு முன் பார்த்த உங்களை இன்றும் பார்க்கிறேன்; சிறை செல்லுவதற்கு முன் பார்த்த மலர்மாலைகளை இன்றும் பார்க்கிறேன்; ஆனால், என் நெஞ்சு வேகிறது- என் உடல் துடிக்கிறது-சிறை செல்லுவதற்கு முன் நான் பார்த்த ஆறு தோழர்களை இன்று காணமுடியாத காரணத்தால். அந்த திராவிட மாணிக்கங்களுக்கு-ஜுலை 15-ம் தேதியன்று கல்லக் குடியிலும், தூத்துக்குடியிலும் உயிர்கள் பறிக்கப்பட்டு, படு குழியிலே பிணங்களாகத் தள்ளப்பட்டு, கல்லறைகளாகக் காட்சியளிக்கும் தியாக ரத்தினங்களுக்கு என் வீர வணக்கத்தை செலுத்துகிறேன், வேதனையும் வாதனையும் நெஞ்சத்திலே போட்டியிட.

அந்தக் கல்லறைகள் கட்டிய கருப்புக் கண்ணாடி யார் களிக்கிறார் இன்று. அந்தக் களிப்பிலே மறைந்திருக்கும் கடுமை.. நம்மை நசுக்க எண்ணும் நப்பாசையே! அந்த நப்பாசையின், நல்ல பாம்பு விஷத்தின் பலனால்தான் நாம் செத்து மடிந்தோம். ஐயாயிரம் பேர் சிறை புகுந்தோம். லால்குடி நடராசன் என்ற வாலிபன்-கல்லக்குடி அறப்போரிலே கலந்து கொள்ள வந்த ஆர்வச் சிங்கம் செத்து மடிந்தான் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து. அவனுக்கு மண நாள் குறித்து வைத் திருந்த தாய் தன் மகனின் பிணக் கோலத்தைக் கண்டு “ஓ”வென்று அலறினாராம்! அந்தத் தாய் கதறி யழுத காட்சி மறைந்து போகுமா? அவர் விட்ட கண்ணீர் தான் வீண் போகுமா? மற்றொரு தோழர்-கேசவன் என்பார் மூளை சொட்டச் சொட்ட “ஆவ், ஆவ்” என்று அலறி அழுதபடியே ஆவி விட்டார். மற்றொரு அபாக்கியவான்- செபஸ்டின் ராஜு என்ற வாலிபன்தான் ரொம்பவும் பரிதாபத்திற்குள்ளாகி விட்டார். குண்டு குலைத்து விட்டது அவரது ஜீவிய பீடத்தை – ஆண் குறியை! அந்தத் திராவிட இளைஞனின் வாழ்வை— வாழ்விலே அவன் அனுபவித்து ஆனந்தப்பட வேண்டிய பேரின்ப சுகத்தை அழித்து விட்டனர். அந்த சோகக் குன்றை சிறையிலே விட்டுவிட்டுத்தான் நான் வெளியே வந்திருக்கிறேன். நாங்கள் உரிமை கேட்டோம்; ஆச்சாரியார் தோட்டாக்களினால் பதில் சொல்லி விட்டார், பயங்கரமான முறையிலே !

இந்தப் பயங்கரங்களுக்கு காரண பூதங்களாக இருந்த போலீசார், தைரியமாக செப்புகிறார்கள் உயிரைக் கொல்லுவதற்காகத்தான் சுட்டோம் என்று !

விரட்டுவதற்குச் சுட்டான் வெள்ளையன்-னால் இவர்கள் வேட்டையாடவே சுட்டோம் என்று வீராப்பு மொழிகிறார்கள். உயிரைக் கொல்லுவதற்காக 64 முறை சுட்டிருக்கிறார்கள். ஆனால் அந்த ’64’ வழக்கு மன்றத்திலே கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து ‘16’ ஆகிவிட்டது. போகட்டும். அந்த 16 தடவை சுட்ட தும் அவசியம் தானா? சமாளிக்க முடியாத கூட்டத்தைக் கலைக்கவேண்டிய அவசியத்திற்காக, உயிரைக் கொல்லச் சுட்டாய்-உன் எண்ணம் ஈடேறியதா? 16 முறை சுட்டதற்கு 16 உயிர்களா மாண்டது? இல்லையே, இரண்டுதானே! 14 தோட்டாக்கள் வீணாகத் தானே ஆகிவிட்டன, உன் எண்ணப்படி நடவாமல்? அந்த 14 முறைகளை கூட்டத்தை நோக்கிச் சுடுவதற்குப் பதிலாக, ஆகாயத்தை நோக்கிச் சுட்டு வீணாக்கியிருந்தால், மீதமுள்ள அந்த 2 தோட்டாக்களுக்கு அவசியம் இருந்திருக்காதல்லவா? திராவிடர்கள் உயிர் நீத்த கோரமும் நிகழ்ந்திருக்கா தல்லவா?

கல்லக்குடியிலே 2- தூத்துக்குடியிலே 4 என்ற கணக்கிலே ஆச்சாரியார் பிணக் குழிகளைத் தோண்டிய பிறகும் நம் மேலேயே பாய்கிறார்-‘எறும்பு’ என்று எகத்தாளம் பேசுகிறார்—’பலாத்காரவாதிகள்’ என்று பழி சுமத்துகிறார்!

ஆச்சாரியார் ஒரு லட்சம் இலட்சியக் காளைகளைக் கொண்டுள்ள கழகத்தை அழைக்கும் வீதம் அறிவுக்குப் பொறுத்தமற்ற முறையிலே இருக்கிறது. எறும்புகள் என்கிறார்- சிந்தனைக்குரிய சொல்தான்; இருந்தாலும் சிரித்தபடியேதான் செப்பியிருக்கிறார் சேலத்து சக்ரவர்த்தியார். ‘எறும்புகள்’ என்று துச்சமாகக் கூறியவர்தான் வேறொரு இடத்திலே “திராவிடமுன்னே ற்றக் கழகம்தான் எனது முதல் நம்பர் எதிரி !’ என்றும் கூறியிருக்கிறார். இதிலேயே புரிந்திருக்கலாம் தோழர்களுக்கு ஆச்சாரியாரின் தரம் எத்தகையது என்பது! எறும்பைப் போய் முதல் எதிரி என்று கூறுபவரை நாம் எப்படி எடைபோடுவது! எறும்பிலும் கேவலமான பலமுடையதுதானே எறும்பைப்போய் ‘முதல் விரோதி’ என்று சொல்லிக் கொள்ளும்! அதே சமயத்தில் ஆச்சாரியாருக்கு இன்னுமொன்றும் சொல்ல ஆசைப்படு கிறேன், எறும்பின் செயல்கள் எப்படி யிருக்கும் என்பதைக் குறித்து!

விளக்கைச் சுற்றிச் சுற்றி வட்டமிடும் விட்டில் பூச்சியை தெரிந்திருக்கலாம் எல்லோருக்கும். விளக் கோடு மோதுவதால் மோசமே விளையும் என்பதை அது உணராததல்ல; உணர்ந்தும் மோதுகிறது. உயிர் ஊசலாடும் சமயத்தில் தரையிலே விழுந்து துடிக்கவும் செய்கிறது. அந்த நேரத்திலே, உயிருக்கு மன்றாடும் அந்தப் பூச்சியை, இழுத்துச் செல்லும் எறும்புகள்! அப்படித்தான் பலமிழந்து, பதவி ஜன்னியால் துடி துடிக்கும் ஆச்சாரியாரை அப்புறப்படுத்தும் நல்ல காரி யத்தில் இறங்கக்கூடும் திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் எறும்புகள் என்பதை அவருக்கு உணர்த்து கிறேன்.

சமீபத்தில் ஆச்சாரியார் ஓரிடத்தில் குறிப்பிட்டிருக்கிறார், தன் நெஞ்சு கல் நெஞ்சு என்று! இது எல்லோரும் அறிந்த விஷயமே தவிர புதிது ஒன்றுமில்லை, அவரே அதை ஒப்புக்கொள்ளும் புதுமையைத் தவிர! அவர் கல் நெஞ்சர்தான்! அதைச் சொல்லிக் காட்டிய ஆச்சாரியாருக்கு, அந்த சமயத்திலே, அவருக்கு ரொம்பவும் பிடித்தமான பழமொழிகளில் ஒன்று நினைவுக்கு வந்திருக்காது. ஆனால்,நான் நினைவு படுத்த விரும்புகிறேன்-“எறும்பு ஊரக் கல்லும் தேயும்”- தெரிந்திருக்கலாம் அவருக்கு! ஆனால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஆச்சாரியாரின் நெஞ்சு என்ற கல், திராவிட முன்னேற்றக் கழகம் என்ற எறும்பு ஊரஊரத் தேயாது! உடைந்தே தீரும்!

ஆச்சாரியார் நம்மை பலாத்காரவாதிகள் என்று சொல்லுகிறார்! அதைக் கேட்டபோது, படித்தபோது நம் நெஞ்சு குமுற வில்லையா ?

நீதி வேண்டிய நேர்மையாளர்கள்மீது தடியடி பாணம் தொடுத்த பக்திமான்தான்-கண்ணீர்ப் புகை பாய்ச்சிய கண்ணிய புருஷர்தான்- துப்பாக்கியின் துணை கொண்டு காலை, கையை, ஆண் குறியை, ஏன்- உயிரையே உறிஞ்சிய ஆச்சாரியார்தான் நம்மை பலாத் காரவாதிகள் என்கிறார்! அந்த வார்த்தையை நம்மை நோக்கி உபயோகிக்க என்ன யோக்கிதையை அவர் பெற்றிருக்கிறார் என்றுதான் நான் வியக்கிறேன்.

இதைவிட என்னை மேலும் வியக்கச் செய்த செய்திகளையும் நான் சிறைக்குள் இருந்தபோது அறிந்தேன். நமது போராட்டங்களை கம்யூனிஸ்ட் நண்பர்கள் கேலி செய்தார்களாம்! அவர்களது அறியாமைக்காக நான் வருந்துகிறேன்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் இப்போதையப் போராட்டங்களினால் என்ன பலன்? அதனால் வாடும் ஏழைகளுக்கு ஏதாவது வகை தோன்றிற்றா?- இப்படி கேட்கிறது கம்யூனிஸ்ட் கட்சி.

ஆனால் நான் கேட்கிறேன் உரத்தக் குரலோடு, கழகத்தின் போராட்டங்களினால் ஏழைகளுக்கு ஏது பலன் என்று கேட்கிறாயே, கழகம் ஏழைகளுக்காக- நலிந்தோர்களுக்காக-நடைபாதை வாசிகளுக்காக- அவர்களது நலனுக்காக நடத்தப்பட்ட எந்த இயக்கங் களிலே இதுவரைக் கலந்து கொண்டதில்லை, கொடு அந்தக் கணக்கை முதலில் !

சமுதாயத்தின் ஓர் அங்கமாம் கைத்தறியாளர்களின் பட்டினிப்படை புறப்பட்ட நேரத்திலே-பிள்ளை வியாபாரம் நடத்திய நேரத்திலே -தற்கொலை செய்து கொள்ளத் தயங்காத நேரத்திலே-யாருடைய கண்கள் கலங்கின? யாருடைய நெஞ்சு துடித்தது? யார் வியாபாரியாக மாறினார்கள்? நினைத்துப்பார் நன்றாக, ஜனவரி 4-ந் தேதியை! கழகத்தின் முன்னணி வீரர்கள் அன்று வியாபாரிகளாக நடமாடியதை மறந்திருக்க மாட்டாய்! தேங்கிக் கிடந்த கைத்தறித் துணிகளிலே ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ளவை அன்றே விலையானதை மறந்திருக்க மாட்டாய்! ஆனால், அதனால் கைத்தறியாளர்களின் கண்ணீர் ஓரளவாவது துடைக் கப்பட்டதை மட்டும் மறந்து விட்டாயா?

போகட்டும்! தஞ்சையிலே, திருச்சியிலே புயல், பெரு மழை என்ற உருவிலே இயற்கை அன்னை வெறியாட்டம் ஆடி மறைந்தாளே, அப்போது யாருடைய கரங்கள் துடிதுடித்தன. ரூ. 25,000 சேர்க்க வேண்டுமென்று யாருடைய கரங்கள் புத்தம் புது கைத்தறித் துணி களைக் கட்டுக் கட்டாகத் தந்தன?

நன்றாக சிந்தித்துப் பார் சீற்றத் துணியும் மதியால். மாநாடு அந்த நேரங்களிலே நீங்களல்லவா சமாதானங்களுக்குப் பறந்து கொண்டும், காஷ்மீர்ப் பிரச்னையை அலசிக் கொண்டும், எங்கிருந்தோ வந்த அமெரிக்க மந்திரி டல்லஸ்ஸுக்குக் கருப்புக்கொடி பிடித்துக் கொண்டும் இருந்தீர்கள்! அம் மாதிரி நடவடிக்கை களினால் மட்டும் இங்கு வாழும் நலிந்தோர் மாளிகை வாசிகளாக ஆகிவிட்டார்களா?

கம்யூனிஸ்டுகள் நம்மைத் தூற்றுவதில் அர்த்தமே கிடையாது.

மதுரையிலே கருப்பையா பாரதி மாண்டு. போனாராம் – அதனால் நாம் பலாத்காரவாதிகளாம்- இப்படி அறிக்கை விடுகிறார்கள். இதுதானா நன்றி ! நாங்கள் என்ன தஞ்சையிலே நெற்போருக்குத் தீயிட் டோமோ? சப்-இன்ஸ்பெக்டரை சாக்காட்டுக்கு அனுப்பத் அணிந்தோமா? மிராசுதார் வீட்டின் மீது வீசினோமா? யார் பலாத்காரவாதிகள்?

22 பேர்களைச் சேலம் சிறையிலே உங்களில் சுட்டுக் கொன்றார்களே, அந்த அநியாயத்தை இந்த நாட்டிலே எடுத்துச் சொல்ல-உங்களுக்காக அனுதாபச் சொல் உதிர்க்க-எங்களைத் தவிர வேறு யார் நாதியிருந் தார்கள் உங்களுக்கு? ஒவ்வொரு மேடையிலும் நானல்லவா அந்த 32 பிணங்களையும் எழுப்பி எழுப்பிப் பேசவைத்தேன்! அதை எல்லாம் மறந்து எங்களைப் பற்றிக் கீழ்த்தரமாகவா பேசுவது?

கம்யூனிஸ்ட் நண்பர்கள் ஒரு புற மிருக்க, கண்ணிய மிக்க நமது டில்லிப் பிரதமரோ அவர்களை எல்லாம் ஒரு படி மிஞ்சிவிட்டார். அவர் நம்மைப் பார்த்து ‘காட்டு மிராண்டிகள், என்று கூறுகிறார்! யாரைப் பார்த்து? நாம் யார்? நமது வரலாறு என்ன? எதிரியை அழித்து வெற்றிச் சங்கு ஊதும்வரை வாளை உறையி லிடாத வீரப் பரம்பரையினர் நாம்! திரும்பிப் பார்க்கி றோம் – தமிழர்களை இகழ்ந்து விட்டனர் என்ற ஒரே காரணத்துக்காக, கனக விசயன் தலைகளிலே கல் ஏற்றிய சேரன் செங்குட்டுவனின் வாள் ஜொலிக்கிறது ! அத்தகைய நம்மைப் பார்த்துத்தான் “நான்சென்ஸ்” என்று ஒரு முறை சொன்னார் பண்டித நேரு. அண்ணா மறந்தார்-மன்னித்தார்.

ஆனால் நேருவோ மீண்டும் தி.மு. க. வினர் கலந்து கொண்ட திருத்தணி ரயில் நிறுத்தப் போராட்டத்தை “நான்சென்ஸ்” என்றார்.

நான்சென்ஸ் என்று கூறாதே! வாபஸ் வாங்கு’ என்பதற்காகத்தான் மீண்டும் ரயிலை நிறுத்தினோம்!

மீண்டும் நேரு வந்தார்- வந்தவர் நம்மை ‘காட்டு மிராண்டிகள்’ என்று பகர்ந்தார்.

பாவம், நேரு எப்போதுமே நிலைக் கண்ணாடியின் முன் நின்று சொல்ல வேண்டியதை நம்மைப் பார்த்துச் சொல்லி விடுகிறார் துடுக்குத் தனமாக!

அது ஒரு புறமிருக்க, திராவிட முன்னேற்றக் கழகம் ஜஸ்டிஸ் (நீதிக்) கட்சியின் வாரிசு என்று ஆச்சாரியார் ஓரிடத்தில் சொல்லியிருப்பது இப்போது எனக்கு நினைவுக்கு வந்தது.

ஜஸ்டிஸ் கட்சி வெள்ளையனுக்கு வால் பிடித்தது என்று சொன்னார்களே, அந்தக் குற்றச்சாட்டு ஒருபுற மிருக்கட்டும். இன்று கழகத்தின் தீவிர வாதிகளில் பலர் முன்பு நீதிக் கட்சியில் இருந்ததே இல்லை. ஏன், நானே, நீதிக் கட்சி திராவிடர் கழகமாக மாறும் நேரத்திலேதான் கட்சியில் சேர்ந்தேன்.

வெள்ளையன் திரு. வி. க. வை நாடுகடத்தினான்; அப்போது பதவி வகித்த நீதிக் கட்சியினர் “திரு.வி. க. வை நாடு கடத்தினால் ராஜினாமா செய்து விடுவோம்” என்றார்கள். நாடு கடத்துவதும் நிறுத்தப் பட்டது. திரு.வி.க. தேசீய வாதிதான்; இருந்தும் நீதிக்கட்சி யினர் அவரைப் பற்றி ஏன் கவலைப் பட்டார்கள் என் பதை குற்றம் சாட்டுவோர் உணர வேண்டும்!

1885-ம் ஆண்டில், பம்பாயில், “ஹ்யூம்” என்ற வெள்ளையரால் ஆரம்பிக்கப் பட்டு, சுரேந்திரநாத் பானர்ஜி தலைமையில் நடந்த முதல் காங்கிரஸ் மாநாட்டிலே என்ன தீர்மானம் தீட்டினார்கள்?-“வெள்ளை யனே, வெளியேறப்பா!” என்றா? இல்லையே ! “சலுகை தரவேண்டும்; ஜமீன்தார்களுக்கு உதவ வேண்டும்; இந்தியர்கட்கு வேலை தரவேண்டும்” என்று வெள்ளையனைக் கேட்கும் ‘குலாம்’களாகத்தானே இருந்தார்கள்? இதையும் நேரு எழுதி வைத்திருக்கிறார், நமக்கு உதவியாக!

ஜஸ்டிஸ் கட்சியில்சரிகைத் தலைப்பாக்களும்,பட்டுப் பட்டாடைகளும், மிட்டா மிராசுகளும் நிறைய இடம் வகித்ததால், வெள்ளையனின் தாசர்களாக இருந்திருக்கலாம். அதனால்தானே ‘சேலம்’ செய்தோம்! அதனால் தானே பி. டி. ராசன் போன்றவர்கள் வெளியேறவும் செய்தார்கள்.

அது எந்தக் காலம் ? இது எந்தக் காலம்? அதற்கிடையே என்ன சம்மந்தம்?

இக்காலத்திலே இந்நாட்டின் நிலை என்ன? ஆரியம் இதை அழுத்திக்கொண்டிருக்கிறது; ஆட்டிப் படைக்கிறது.

சிற்றோடை ஒன்றிலே நீர் குடித்துக் கொண்டிருந்த ஒரு ஓநாய், தனக்குச் சற்றுத் தூரம் தள்ளி நின்று நீர்குடிக்கும் ஆட்டுக் குட்டியைப் பார்த்து, “நீ என் தண்ணீரைக் கலக்குகிறாய்?” என்றதாம். “தண்ணீர் உன் பக்க மிருந்ததானே என் பக்கம் ஓடி வருகிறது. நான் எப்படித் தண்ணீரைக் கலக்க முடியும்?” என்று பதில் சொல்லியதாம் ஆட்டுக் குட்டி. உடனே ஒரு நாய், “நீ கலக்கா விட்டாலும் உன் முன்னோர் கலக்கியிருப்பார்கள்!” என்றதாம்!

எப்படியாவது ஆட்டுக்குட்டியைக்கொன்றுவிட வேண்டு மென்பது ஓநாயின் நோக்கம்! அதே போலத் தான் ஆச்சாரியர் என்னும் ஓநாய், திராவிட முன்னேற்றக் கழகம் என்ற ஆட்டுக்குட்டியைக் கொன்றுவிட எண்ணுகிறது! என்பதற்கிவர் அவரது பேச்சுக்கும் செயலுக்கும் வேறென்ன விளக்கம் தரமுடியும்?

நான் முடிவாகச் சொல்லுகிறேன் – திராவிட முன்னேற்றக் கழகத்தினரை ‘எறும்புகள்’ ‘காட்டுமிராண்டிகள்’ என்றெல்லாம் பேசினாலும், ‘ஒழித்துக்கட்டி விடுவேன்’ என்று விஷச் சகுனம் எடுத்துக் கொண்டாலும் அவை அல்லாற்பாதையை நோக்க முன்னேறுவதேயாகும்.

ஏனெனில் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மாவீரர் அமைத்த மாளிகை அசையாது! அழியாது! வளரும்!

★ ★ ★

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *