அகிம்சா மூர்த்திகள்
கலைஞர் மு. கருணாநிதி

கன்னையா-நம் கண்மணி


அன்றொரு நாள் மலேயா தூக்குமேடையிலே பெரியதொரு கொடுமையான ஏப்ப சப்தம் கேட்டது. ஆம், மலேயா சர்க்காரின் கோர வயிற்றுப் பசிக்கு இரையானான் தீரத் திராவிடன் கணபதி. தமிழகத்திலே- தஞ்சைத் தரணியிலே தவழ்ந்து விளையாடிய தங்கமணியை, மலேயா சுக்கல் சுக்கலாக உடைத்தெறிந்தது. திராவிடம் கதறியது. ‘தடுத்திடுக’ என்று தவித்தது. ஆளவந்தவர் கேளாக் காதினராயினர்.

கணபதி தீர்ந்தான். தீர்த்துக் கட்டியது மலேயா! சில வாரங்களுக்கு முன் லோகநாதன் என்ற திராவிடன் உலகத்தை விட்டு விரட்டப்பட்டான்.

இதோ இன்னொரு தீனி ! கன்னையா ! திராவிடத் திருவிளக்கு! அந்த ஜோதியை அணைத்துவிட தீர்மானித்து விட்டது மலேயா சர்க்கார்.

அந்த அடக்கு முறை தர்பாரின் முன்னே- ஆர்ப்பாட்ட அழிவு வேலைக்கு முன்னே- வெறியேறிய மரண மேடைக்கு முன்னே- இழுத்துச் செல்லப்பட்டிருக்கிறான் இந்நாட்டு இளைஞன் !

கன்னையா தமிழகத்திலிருந்து வறுமையால் விரட்டப்பட்ட பரம்பரை !

திருவரங்கத்தானுக்கு வெள்ளிப் படுக்கை- திருப் பதியானுக்கு வைர முடி- தில்லை நடராசனுக்கு தங்க வீடு- இப்படி கல் முதலாளிகள் வாழ்ந்திடும் நாட்டில், வாழ முடியாத மனிதர்கள் வாட்டத்தைத் தோழனாகவும், வருத்தத்தை உறவாகவும் கொண்டு வேறு நாட்டுக்குப் பிழைப்பு தேடி ஓட வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது;!

வடவர் இங்கு வந்து வளம் பெருக்கிக்கொள்கின்றனர்.

இங்கு வாடிடுபவர் பிறநாடு ஓடுகின்றனர். திராவிடம் பிரிந்திருந்தால், இந்தத் தேய்ந்த நிலை இருந்திடாது!

கன்னையாவுக்காக உரத்த குரல் எழுப்பியிருக்கும் தனியரசு!

ஏன், கன்னையாக்களை கதியற்றவர்களாக ஆக் கி யிருக்க தேவையில்லாத, திருப்தியான சூழ்நிலை அமைந்திருக்கும். ஆனால்……! அந்த ஆனால் தான் பெருமூச்சோடு கலந்து வருகிறது. அந்தப் பெருமூச்சைக் கவனிக்க வேண்டும், பிரியக் கூடாது என்போரின் பின்னிருந்து கலகம் மூட்டுபவர்கள் ! எல்லோருமே !

கன்னையா, தாயைக் காண சில தினங்களில் தமிழகம் வருவதாக எழுதியிருந்தாராம். அந்தக் கண்மணியின் கடிதத்தைக் கண்களிலே தாய் ஒத்திக் கொள்ளும் போதே, கன்னையா சாக வேண்டும் என்ற செய்தியும் தாயின் கரங்களில் குதித்து விட்டதாம்.

மாதாவின் மனோநிலை எப்படி இருக்கும் ! மைந்தன் ஒருவன்- தாயே என்பான்- தனலான நெஞ்சிலே குளிர் கொட்டுவான்- தங்க மொழி பேசுவான்- அங்க மெல்லாம் பூரிக்கும் என்றெல்லாம் ஆசைக் கனவுகள் எழுப்பிக் கொண்டிருந்த அன்னையின் கண்களிலே வழிவது வெறும் கண்ணீராக இருக்காதே! ரத்தக் கண்ணீராக அல்லவா இருக்கும் !

கன்னையாவின் தாய்- ஆம், நமது தாய்- அந்தத் தாயின் நெஞ்சத்திலே தீ ! தீ ! தீ !

அந்தத் தீயை அணைக்கப் படை திரள வேண்டும். இதைத் தீர்மானமாக்கி இருக்கிறோம் சென்னை மாநாட்டிலே!

அந்தத் தீர்மானம் திராவிடரின் ஆசையின் பிரதி பலிப்பு! திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆவலின் படப்பிடிப்பு!

மதிப்பிற்குரிய ‘ஜனசக்தி’ பத்திரிகையிலே கன்னை யாவை விடுவிக்கும் முயற்சியில் நம்மையும் ஈடுபட வேண்டுமென்று கம்யூனிஸ்டுகள் அழைத்திருக்கிறார்கள்.

இது போன்ற காரியங்களிலே அழைக்காமலேயே ஈடுபடக் கூடிய அக்கரை கொண்டவர்கள் நாம் !

கன்னையாவை விடுவிப்பதற்கான நியாயமான போராட்டம் எதிலும் இறங்கக் கூடிய இலட்சிய உணர்ச்சி கொண்டதுதான் திராவிட முன்னேற்றக் கழகம்.

இப்போது மட்டுமல்ல; கணபதி தூக்கிலேற்றப் பட்ட போது, கயிற்றில் தொங்கிய கணபதிக்காக கண்ணீர் விட்டுக் கதறினோம். அதற்கு உடந்தையானவர்களைக் கண்டித்தோம்!

சாம்பசிவம் உயிரை மீட்கும் போரிலே நம் உரத்த குரலும் கலந்திருந்தது!

லோகநாதன் அழிக்கப்பட்டது பற்றி தென்னாட்டில் நடைபெறும் நமது பவனிகளிலே கண்டனக் குரல் எழுப்பி வருகிறோம்.

தேர்தல் உறவு ஏற்படவில்லையே என்ற காரணம் காட்டி, தி. மு. கழகத்தார், இம்மாதிரி கூட்டு முயற்சிகளில் ஈடுபட மாட்டார்களோ என்ற சந்தேகம் தேவை இல்லை.

தேர்தல் உறவு – அடிப்படையற்ற உறவு – ஒப்பந்தமற்ற உறவு- திடீரென மறைந்து விடக்கூடிய, மாறி விடக் கூடிய உறவு !

இது போன்ற அறப் போராட்ட உறவுகள் அழுக்கில்லாதவை ! அசூசையின் பாற்படாதவை !

ஆகவேதான், ‘ஜனசக்தி’யின் குரலோடு, கம்யூனிஸ்டுகளின் குரலோடு, சேர்ந்து குரல் எழுப்புவதற்கு முன்பே, நமது மாநில மாநாட்டில், கன்னையாவின் விடுதலையை விரும்பி குரல் எழுப்பினோம்.

இப்போது ‘ஜனசக்தி’யும் கூப்பிடுகிறது குரல் எழுப்ப!

கம்யூனிஸ்டு நண்பர்களுடன் கலந்து கன்னையாவின் உயிரை மீட்பதற்காக நடத்திடும் நியாயப் போர் முனை களிலே தி. மு. கழகத்தின் அணி வகுப்பு முதலிடம் பெறும்.

அங்கே அண்ணாவின் பெரு முழக்கம் இருக்கும். கண்ணீர்த் துளிகளின் கர்ஜனை இருக்கும்.

“ கன்னையா— நம் கண்மணி ‘” என்ற உரிமை முரசத்தோடு” அறப்போர்ப் பிரகடனம் செய்ய திராவிட முன்னேற்றக் கழகம் தயங்காது! தயங்காது!!!” என்பதுதான் நமது குரல்!

மாலை மலர்” (4-1-’52)

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *